சென்னையிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாமண்டூர் காட்டுப் பகுதியில் (தற்பொழுது இந்த வனப்பகுதி ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே உள்ளது) சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் புலி வேட்டையொன்று நடைபெற்றது. சாதாரண புலியல்ல அது. ஆட்கொல்லி புலி. முதலில் அதன் கதையைப் பார்த்துவிடுவோம்.
தன் பாட்டுக்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரைதான் முதல் முறையாக வேட்டையாடியது அந்தப் புலி. வழக்கம்போல், வனப்பகுதியில் தன்னுடைய கால்நடைகளைக் கூட்டிச் சென்று மேயவிட்டுக் காத்திருந்தார் அந்த மனிதர். புதரில் காத்திருந்த புலி முதலில் ஒரு பசு மாட்டைத் தாக்கியது. பசுவின் கழுத்தை உடைத்தது. அதிர்ந்து போன மேய்ப்பாளர் தன்னுடைய குச்சியை வைத்துப் புலியை விரட்ட முற்பட்டார். அதுதான் அவர் செய்த தவறு. பசுவிலிருந்து தன் கவனத்தைத் திருப்பியப் புலி, மேய்ப்பவரின் மீது சீறிப் பாய்ந்தது.
பொதுவாக மனிதர்களின் அச்சுறுத்தல்களுக்குப் புலிகள் பயந்தவை. இம்மாதிரி சமயங்களில் பயமுறுத்தியவுடன் புலிகள் வனத்துக்குள் ஓடிவிடும். ஆனால் இது ஆட்கொல்லி புலி என்பதால் ஒரே பாய்ச்சல்… அதிர்ந்து போன அந்த மனிதர், திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார். புலி பாய்ந்தது. தன்னுடைய கூரிய நகங்களால் அவருடைய பின் பக்கம் முழுவதும் முதுகு தொடங்கி புட்டம் வரை தோலை உரித்தது. தொங்கிய தோலோடு நிலத்தில் சுய நினைவின்றி அவர் சாய்ந்தார்.
அதன்பின் சாவகாசமாகக் கழுத்து முறிக்கப்பட்ட பசுவை நோக்கித் திரும்பியது புலி. பல நிமிடங்களுக்குப் பிறகு சுய நினைவு திரும்பிய மாடு மேய்ப்பாளர் தலையை அசைக்காமல் அருகில் இருந்து வரும் சத்தத்தை உற்றுக் கவனித்தார். கடக் முடக் என்று புலி, பசுமாட்டின் மாமிசத்தை மென்று சுவைத்துக் கொண்டிருந்தது. அவர் மூச்சு விடவில்லை. தலையைத் தூக்கினால் புலி மறுபடியும் வந்து அடித்துவிடும். மரண வேதனையுடன், மரண பயத்துடன் ஒரு மணி நேரம் அப்படியே கிடந்தார்.
அவ்வப்போது புலி மேய்ப்பாளரை நோக்கிப் பார்த்தது. சிறிது அடி அவர் முன் எடுத்து வைத்தது. பின்னர் திரும்பிச் சென்று தன் இரையைச் சுவைத்தது. வயிறு புடைக்க உண்ட பின் அங்கேயே அமர்ந்து தன் ரத்தம் பதிந்த முன்னங்கால்களையும், முகத்தையும் துடைத்துக்கொண்டது. அனைத்தையும் குப்புறப்படுத்தவாறே, அடுத்து என்ன நடக்கும் என்ற திக் திக் மனத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார் அந்த மனிதர். ஒரு வழியாக, போதும் என்ற மனத்துடன் புலி தாவிக் குதித்து வனத்தின் உட்புகுந்து மறைந்தது. புலி சென்றுவிட்டதை முடிவு செய்துகொண்ட பிறகு தன் குடிசையை நோக்கி அவர் ஓடினார். நாட்டு வைத்தியர் மூலிகை மருந்தைக் கொண்டு அவருக்குக் கட்டுப்போட்டார். காயம் குணமடைந்தது.
இந்தச் சம்பவம் சென்னை – மும்பை ரயில் தடத்தில் அமையப்பெற்ற மாமண்டூர் ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு கி.மீ தொலைவில் நடைபெற்றது. அந்த இடத்தில் மலை 300 அடி ஆழத்தில் சரிவடைந்து இருக்கும். சரிவடைந்த பள்ளத்தாக்கில் மரங்கள் அடர்த்தியாகக் காணப்படும். அருகாமையில் ஒரு சிறிய நீரோடையும் சென்றது (அந்த இடம் இன்றளவும் அப்படியே காட்சி தருகிறது).
புலியின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானவரும் ஒரு மேய்ப்பாளர்தான். முதியவர். ஆனால் இவருக்கு அதிர்ஷ்டம் போதவில்லை. சென்றமுறைபோல் இம்முறையும் மந்தைகளாகச் சென்ற மாடுகளில், ஒரு நல்ல செழிப்பான பசுமாட்டைத் தேர்ந்தெடுத்துத் தாக்கியது புலி.
புலியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாடுகள் சிதறி ஓடின. இதைச் சற்றும் எதிர்பார்க்காத முதியவர், மாடுகள் திரும்பி ஓடிவருவதன் காரணம் அறிய முன்னே சென்றார். புலி தன்னுடைய பசுமாட்டைத் தாக்கிக் கொன்றதைக் கண்டு உறைந்து போனார். அவரைக் கண்ட புலி கோபமுற்றது. சீறிப்பாய்ந்து அவரைக் கொடூரமாகத் தாக்கியது. முதியவர் அப்படியே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தான் வேட்டையாடிய பசுமாட்டைக் கவ்விக்கொண்டு புதருக்குள் சென்றது புலி.
வெகு நேரமாகியும் வீடு திரும்பாத முதியவரைத் தேடி அவருடைய தமையனார் புறப்பட்டார். மாமண்டூர் ரயில் நிலையம் அருகில் மாடுகள் சிதறி இருப்பதைக் கண்டார். அருகில் தன் தமையனைத் தேடி எந்தப் பலனும் இல்லாத நிலையில், உதவி வேண்டி தன் கிராமத்துக்குத் திரும்பினார். கிராமத்தில் முதியவரைத் தேடுவதற்காக ஆட்கள் புறப்பட்டனர். குதறப்பட்ட நிலையில் பெரியவரைக் கண்டனர்.
சுய நினைவை இழந்திருந்தவரை மாமண்டூர் ரயில் நிலையத்திற்குத் தூக்கிச் சென்றனர். அங்கு ஒரு சரக்கு ரயில் வண்டியில் வைத்து, 9 மைல் தொலைவில் உள்ள ரேணிகுண்டாவிற்கு அனுப்பி வைத்தனர். அங்குதான் வைத்தியம் பார்ப்பதற்கான மருத்துவமனை இருந்தது. ஆனால் பாவம், முதியவரால் ரேணிகுண்டாவிற்கு உயிருடன் போக முடியவில்லை. ரத்த வெளியேற்றம் அதிகமாக இருந்ததால் வழியிலேயே இறந்துவிட்டார்.
இரு சம்பவங்களிலும் தான் தாக்கிய நபர்களைப் புலி சாப்பிட்டுவிடவில்லை. ஆனால் தன்னுடைய மூன்றாவது மனித வேட்டையில், தான் கொன்ற நபரைப் புசித்தது. அதன் பிறகே, அந்தப் புலி ‘ஆட்கொல்லி புலி’ என்று ஊராரால் அறியப்பட்டது.
புலியின் மூன்றாவது மனித வேட்டைக்கு உள்ளானவரும் மேய்ப்பாளர்தான். இரண்டுபேர் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். காலை சுமார் 9 மணி இருக்கும். எங்கிருந்தோ திடீரென வந்த புலி, மந்தைகள்மீது பாயத்தொடங்கியது. ஒரு சிறு காளைமீது ஏறி அதைக் கவ்வியது. காளை திமிறிக்கொண்டு மேய்ப்பாளர்களை நோக்கி ஓடி வந்தது. புலியால் காளைகளைப் பிடிக்கமுடியவில்லை.
ஆனால் இந்தச் சம்பவத்தைக் கண்டு ஒருவர் பயத்தில் ஓடத் தொடங்கினார். மற்றொருவர் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார். புலி காளையை விடுத்து, அதிர்ந்து நின்ற மேய்ப்பாளரின் மீது பாய்ந்தது.
முதலாமவர் கிராமத்திற்கு ஓட்டமாக ஓடிச் சென்று நடந்த விவரங்களைக் கூறினார். கிராமத்தினர், புலியிடம் அகப்பட்ட இரண்டாவது நபரை மீட்பதற்காக ஒரு குழு அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். தங்கள் கைக்குக் கிடைத்த ஆயுதங்களை அவர்கள் எடுத்துச்சென்றிருந்தனர். நூறுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். மூன்று மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு மேய்ப்பாளரின் உடல் ஒரு கணவாயின் அருகே கிடைத்தது. புலி அந்த உடலைப் பாதி தின்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆட்கொல்லி புலி, மேலும் மூன்று நபர்களை அடித்துக் கொன்று சாப்பிட்டு விட்டது. இதில் ஒருவர் மேய்ப்பாளர். மற்றொருவர் வழிப்போக்கர். ரேணிகுண்டா செல்லும் சாலையில் இவர் புலியால் கொல்லப்பட்டார். மூன்றாம் நபர் லம்பானி இனத்தைச் சேர்ந்தவர். இவர் காட்டில் தேன் சேகரிக்கச் சென்றபோது புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஆட்கொல்லி புலியின் தாக்குதலுக்குப் பயந்த மக்கள், தங்கள் குடிசையை விட்டு வெளியே வரப் பயந்தனர். சாலை மார்க்கமாகச் செல்வதை அனைவரும் தவிர்த்தனர். ரயில் வண்டியிலேயே பயணங்களை மேற்கொண்டனர்.
0
பிரச்னை பெரிதாகவே, மாவட்ட வன அலுவலரான லிட்டில் உட், கென்னத் ஆண்டர்சன் என்ற மற்றொரு ஆங்கிலேயருக்குப் புலியை கொல்லும்படிக் கேட்டுக் கடிதம் அனுப்பினார் (இவர் ஸ்காட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆறு தலைமுறையாக இவருடைய குடும்பத்தினர் இந்தியாவில் தங்கி வந்திருக்கின்றனர்). ஆண்டர்சன் வன விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர். அந்நாளில் தென்னிந்திய வனப்பகுதிகளில் (குறிப்பாகக் கர்நாடக – தமிழக எல்லையில்) அட்டகாசம் செய்த ஆட்கொல்லி புலி, சிறுத்தை, யானை போன்ற பல விலங்குகளை வேட்டையாடிக்கொன்றவர்.
ஆண்டர்சன் தன்னுடைய இருப்பிடமான பெங்களூரை விட்டு மாமண்டூர் வந்தடைந்தார். அங்கு ஒரு குன்றின் மீது இருந்த அரசாங்க பங்களாவில் தங்கினார். மாமண்டூர் கிராம மக்களிடம் பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்டார். அப்பொழுதுதான் அவரால் புலியின் நடமாட்டங்களை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
புலி ஒருவரைக் கொன்றால் இறந்தவரின் உடலை முழுமையாக ஒரே நேரத்தில் சாப்பிட்டு விடுவதில்லை. அந்த உடலை ஏதேனும் புதருக்குள்ளோ அல்லது வேறொரு பாதுகாப்பான இடத்திலோ ஒளித்து வைத்திருக்கும். பின்னர் பல மணி நேரங்கள் கழித்து, மீண்டும் பசிக்கும்போது அவ்வுடலை ஒளித்து வைத்த இடத்திலிருந்து எடுத்து மறுபடியும் சாப்பிடத் தொடங்கும். புலி தாக்குதல் செய்த இடம் அல்லது பிணத்தை ஒளித்து வைத்த இடம் தெரிந்தால், அங்கே மறைந்து நின்று புலியை சுட்டுக் கொன்று விடலாம்.
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. புலிக்கு மோப்ப சக்தி கிடையாது. ஆனால் கண்களும் காதுகளும் கூர்மையானவை. ஒரு சிறு சத்தம் கேட்டாலே உஷாராகி விடும். மேலும் ஆட்கொல்லி புலியை தரையில் இருந்தவாறு கொல்லமுடியாது. புலி வேகமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படக்கூடிய மிருகம். புத்திசாலியும்கூட. தரையிலிருந்து தன்னைத் தாக்க வருபவர்களை முந்திக்கொண்டு புலி அவர்களைத் தாக்கிவிடும். எனவே புலியைக் கொல்லவேண்டுமென்றால் மரத்தின்மீது ஒரு மேடை அமைத்துச் சத்தம் செய்யாமல் பல மணி நேரம் காத்திருக்கவேண்டும்.
தவிரவும், புலி மறைத்து வைத்த இரையின் அருகாமையில் உயர்ந்த மரம் ஏதுமில்லை என்றால் மேடை அமைக்கமுடியாது. புலி, தான் மறைத்துவைத்த உணவை உண்ண வரும்பொழுது குறி பார்த்துச் சுடவேண்டும். மரத்தின்மீது யாரேனும் அமர்ந்திருப்பது தெரிந்தால் புலி அந்தப் பக்கமே வராது. சிறு சப்தம் கேட்டாலும் ஓடிவிடும்.
ஆட்கொல்லி புலியை வேட்டையாடுவது ஆபத்தில் முடியக்கூடியது. வெற்றிகரமாக வேட்டையாட வேண்டுமென்றால் வேட்டையாடுபவருக்குச் சாமர்த்தியம், சாதுர்யம், பொறுமை மூன்றும் அவசியம். சரியான திட்டமிடுதல் தேவை. ஆட்கொல்லி புலி யாரையும் கொல்லவில்லை என்றால், அதனைத் தேடி காட்டில் பல நாட்கள் அலைய வேண்டி வரும். பல நாட்கள் தேடினால் திடீரென்று தற்செயலாக அது தோன்றலாம். தோன்றும்போது சட்டென்று சுட்டுவிடமுடியாது. அதற்குத் தோதான இடம் வேண்டும். நேருக்கு நேராக நின்று தரையிலிருந்து சுடமுடியாது. புலியைக் கொல்லப்போய் புலியால் கொல்லப்படுவதும் நடந்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில்தான் ஆண்டர்சன் மாமண்டூருக்கு வந்தார். புலி சமீபத்தில் யாரையேனும் கொன்றதா என்று கிராம மக்களிடையே விசாரித்தார். மேலும் புலியைக் கொல்ல ஒருவர் வந்திருக்கிறார் என்று மக்களிடையே தெரியப்படுத்தினால், அவர்கள் வேட்டையாட வந்தவருக்கு உரிய தகவல்களை கொடுக்கக்கூடும்.
சமீபத்தில் ஆட்கொல்லி புலி யாரையும் கொல்லவில்லை என்ற தகவலை ஆண்டர்சன் தெரிந்துகொண்டார். அதனாலென்ன, கொல்ல வைத்தால் போயிற்று என்று முடிவெடுத்தார். கால்நடைகளைக் கொண்டு கண்ணி தயார் செய்வதென்று முடிவானது. ஆண்டர்சன் மூன்று எருமைகளை வாங்கினார். அவற்றைப் புலி நடமாடிய அல்லது நடமாடும் என்று யூகித்த வெவ்வேறு இடங்களில் எருமைகளைக் கட்டி வைத்தார். இதற்கு அவருக்கு உதவியாக இருந்தவர் ஆரோக்கியசாமி.
முதல் எருமை மாமண்டூருக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் ஒரு புளியமரத்தில் கட்டப்பட்டது. இங்குதான் புலி தன்னுடைய முதல் மனித வேட்டையைத் தொடங்கியது. இரண்டாவது எருமையை, அவர் தங்கியிருந்த வன பங்களாவிற்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் கட்டினார். மூன்றாவது எருமை, சென்னை – மும்பை ரயில் தடத்திற்கு அருகாமையில் கட்டப்பட்டது. மேடை அமைக்க மரங்கள் இருக்கும் இடமாகப் பார்த்து எருமைகள் கட்டப்பட்டன. புலி எருமையைக் கொன்றவுடன், இரையை எளிதாகத் தூக்கிச் செல்லமுடியாதபடி அதன் காலில் கயிறு கட்டப்பட்டு, கயிற்றின் மற்றொரு முனை மரத்துடனோ அல்லது உறுதியான பொருளுடனோ இணைக்கப்பட்டது.
மறுநாள் காலை, ஆண்டர்சன் தான் கட்டி வைத்திருந்த எருமைகளைக் காணச் சென்றார். அனைத்தும் சுகமாக இருந்தன. அடுத்த நாள் காலையும் ஆண்டர்சனுக்கு ஏமாற்றமே. ஆட்கொல்லி புலி எருமைகளைச் சீண்டவில்லை. ஆனால் ஐந்தாவது நாள் மாலை, ஆண்டர்சனை ஒரு துர்செய்தி எட்டியது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், இரண்டு முனைகளிலும் சிக்னல் போஸ்டுகள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருப்பது ஹோம் சிக்னல் என்று அழைக்கப்படும். ரயில் நிலையத்திற்குத் தொலைவில் இருப்பது அவுட்டர் சிக்னல். அந்நாட்களில் சிக்னல்களில் உள்ள அகல்களில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு திரிகளின் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தப்படும். சிக்னல் அகல்கள் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மண்ணெண்ணைய் நிரப்பப்பட்டு, புதிதாகத் திரி வைக்கப்பட்டு விளக்கேற்றப்பட வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் பாயின்ட்ஸ் மேன் என்ற நபரை வேலைக்கு அமர்த்தியிருந்தது.
மாமண்டூர் ரயில் நிலையத்தில் இரண்டு பாயின்ட்ஸ்மேன்கள் இருந்தனர். ஒருவர் மாமண்டூர் ரயில் நிலையத்திலிருந்து ரேணிகுண்டா செல்லும் பாதையில் அமைந்துள்ள சிக்னல்களுக்கு விளக்கேற்றி வருவார். மற்றொருவர் எதிர்திசையில் உள்ள சிக்னல்களுக்கு விளக்கேற்றுவார். இவர்கள் வேலை மாலை ஆறு மணிக்குத் துவங்கும்.
ஆட்கொல்லி புலி உலவுவதாலும் ரயில் நிலையத்தைக் காட்டுப் பகுதி சூழ்ந்ததன் காரணமாகவும், பாயிண்ட்ஸ் மேன்கள் தங்கள் வேலையை சூரியன் மறையும் முன்பே தொடங்கிவிட்டனர். அதாவது மாலை 4 மணிக்கே இருவரும் சிக்னல்களில் விளக்கேற்றச் சென்றுவிட்டனர். இதில் ரேணிகுண்டா திசை நோக்கிச் சென்றவர் ரயில் நிலையம் திரும்பிவிட்டார். எதிர் திசையில் சென்றவர் திரும்பவில்லை. இந்த விவரத்தை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தன் ஆட்களை அனுப்பி ஆண்டர்சனுக்குத் தெரியப்படுத்தினார்.
ஆண்டர்சன் தன்னுடன் துப்பாக்கி, டார்ச் லைட், இரவில் ரோந்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் சென்னை – மும்பை (அன்று மதராஸ் – பம்பாய்) ரயில் பாதையை அடைந்தார். மாமண்டூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் இந்த இருப்புப்பாதை வழியாகத்தான் மும்பை சென்றடையும்.
ஆண்டர்சன் அவுட்டர் சிக்னலை நோக்கி கவனமாக நடந்தார். நாலாப்பக்கமும் பார்த்துக்கொண்டு துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடி முன்னோக்கிச் சென்றார். அங்கே விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. ஆண்டர்சன் ஒரு முடிவுக்கு வந்தார். ஆக, புலி அந்த பாயின்ட்ஸ்மேனை விளக்கு ஏற்றிய பிறகே தாக்கியிருக்கவேண்டும்.
அடுத்து ஹோம் சிக்னலை நோக்கி நடந்தார். ஆச்சர்யம், அங்கும் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அப்படியென்றால், அந்த இடத்துக்கும் ஸ்டேஷன் யார்டுக்கும் நடுவில்தான் ஊழியர் தாக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்த ஆண்டர்சன் ஸ்டேஷன் யார்டு நோக்கி நடந்தார்.
இடையில் வயல்வெளிகள் இருந்தன. அப்பொழுது மாலை சுமார் ஏழு மணி. இருட்டத் தொடங்கிவிட்டது. ஆனால் நிலா வெளிச்சம் இருந்தது. சற்றுத் தொலைவில், சிறு ரயில்வே பாலம் தென்பட்டது. பாலத்தின் மீது இருந்த இருப்புப்பாதையின் நடுவே இருந்த ஸ்லீப்பர்களிடையே வெள்ளையாக ஏதோ காற்றில் வீசிக்கொண்டிருந்தது. உற்றுப்பார்த்த ஆண்டர்சனுக்கு அது ரயில்வே ஊழியரின் வேட்டி எனப் புரிந்தது.
அங்கிருந்து சுமார் 20 அடி தொலைவில், ஒரு பாறையின் இடுக்கில் கருப்பாக ஏதோ தெரிந்தது. நெருங்கினார். ரயில்வே ஊழியரின் உடல். பாதி உண்ணப்பட்ட நிலையில் அந்த உடல் பாறையின் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கழுத்துப் பகுதி முழுவதுமாகச் சாப்பிடப்பட்டிருந்தது. தலை உடலைவிட்டு தனியே கிடந்தது.
(தொடரும்)
ஆட்கொல்லி விலங்கு என்ற இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது அந்த சம்பவம் நடந்த இடத்தில் நாமே இருப்பதுபோல் ஒரு உணர்வையும் விறுவிறுப்பையும் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல அடுத்து என்ன நடக்கபோகிறது என்ற ஆர்வத்தையும் அது தூண்டிவிடுகிறதாக இருக்கிறது. மற்றும் ஆட்கொல்லி புலிகளைப்பற்றிய தகவல்களையும், அதை வேட்டையாட பயன்படுத்தப்படும் யுக்திகளையும் இந்த ஆக்கத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
கிழக்கு டுடே என்ற இந்த இணையதள இதழை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெளியீட்டாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
உங்கள் பக்கத்தில் இப்பொது தான் உலவிக்கொண்டிருக்கிறேன். சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
படிக்கப் படிக்கப் பகீர்! சிறுவயதில் ஜிம்கார்பட் படித்தது நினைவிற்கு வந்தது!
மிக்க நன்றி
ஜிம்கார்பெட் படிக்கவில்லை என்ற குறை தீர்ந்தது. நன்றி
மிக்க நன்றி
அருமையான கட்டுரை. நிஜத்தில் அருகில் இருந்து பார்த்தது போல் உணர்வு. புலி இறந்து போனது கடினமாய் இருந்தாலும் அது காலத்தின் தேவை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மிக்க நன்றி
இத்தொடர் ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை தருகிறது…வாழ்த்துக்கள் அய்யா…
மிக்க நன்றி
Could you please specify where this Mamandur is located. I got confused with the Mamandur near Chengalput. Please clarify sir.