Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

கணநேர மரணம்

பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடந்த ரயில்வே ஊழியரின் உடலைக் கண்டதும் புலி அருகில்தான் இருக்கக்கூடும் என்பதை ஆண்டர்சன் உணர்ந்துவிட்டார். புலியைச் சுடுவதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்தார். அது ரயில்வே பாலத்தின்மீது உள்ள இருப்புப்பாதை.

இருப்புப்பாதையில் குறுக்கு நெடுக்காகப் படுத்துத் துப்பாக்கியுடன் காத்திருந்தார். அவர் அந்த இடத்தைத் தேர்வு செய்ததன் காரணம், ரயில்வே பாலம் 20 அடி நீளம் இருந்தது. மேலும் அது நிலத்திலிருந்து 15 அடி உயரத்திலிருந்தது. முன்பக்கமாகவோ பின் பக்கமாகவோ புலி வந்தால் கண்டுபிடித்துவிடலாம். பக்கவாட்டிலிருந்து தோன்றி தாக்க வேண்டுமென்றால், புலி 15 அடி உயர ரயில்வே பாலத்தைத் தாவிக் குதித்தாகவேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான்.

ஆண்டர்சன் தன்னுடைய டார்ச்சை துப்பாக்கியுடன் இணைத்துக்கொண்டார். தன்னுடன் கொண்டு வந்திருந்த கைப்பையை இருப்புப் பாதைக்கும் தன்னுடைய மார்புக்கும் நடுவே வைத்துக்கொண்டார். கால்கள் இரண்டையும் அகட்டிக்கொண்டு புலி வருவதற்காக வழி மீது விழி வைத்துக் காத்திருந்தார்.

ஆனால் புலி வருவதாக இல்லை. அவ்வப்போது மான்கள் சத்தம் எழுப்பின. மானின் சத்தத்தைக் கொண்டு விலங்குகளின் நடமாட்டத்தை உணர்ந்துவிடமுடியும். மான் சத்தம் போடுவதோடு நில்லாமல் தன் முன்னங்கால்களை உயர்த்தி நிலத்தை அடித்து இதர மான்களுக்குச் சமிக்ஞை செய்யும். அதேபோல் குரங்குகளும், புலி, சிறுத்தை போன்ற காட்டு மிருகங்கள் அருகில் நடமாடுவதை ஒலி எழுப்பிக் காட்டிக் கொடுத்துவிடும். மான்களுக்கு மோப்ப சக்தி அதிகம். வெகு தொலைவிலிருந்தே காற்றில் வீசும் வாசனையை வைத்து தன்னை நோக்கி வரும் விலங்கு என்னவென்று அது யூகித்துவிடும். மான்கள் அவ்வப்பொழுது சத்தம் எழுப்பியது புலி நடமாட்டத்தைக் குறிப்பதாக இருந்தது.

பொதுவாக செந்நாய்கள் பகலில்தான் வேட்டையாடும். புலி போன்ற பெரிய மிருகத்தைக் கூட்டமாகச் சுற்றி வளைக்கும். அன்று முழு நிலா வெளிச்சமாக இருந்ததால் இரவிலும் செந்நாய்கள் வேட்டைக்கு வந்திருந்தன. பாறையின் இடுக்கில் ரயில்வே ஊழியரின் உடல் இருந்ததால், செந்நாய்களுக்கு அவ்வுடல் புலப்படவில்லை. திரும்பிச் சென்றுவிட்டன. பின்னர் வெகு நேரம் அங்கு நிசப்தம் நிலவியது. நள்ளிரவில் நிலா வானத்தின் உச்சிக்கு முன்னேறியது. சில்லென்ற குளிர் காற்று எங்கும் வீசத் தொடங்கியது.

மணி சுமார் இரவு 1.40 இருக்கும். அப்பொழுது இருப்புப்பாதையில் அதிர்வுகள் ஏற்பட்டன. இரைச்சல் ஏற்பட்டது. அந்த இரைச்சல் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. பின்னர் காற்றைக் கிழித்துக்கொண்டு ’கூ…’ என்ற அலறல் ஓசையுடன் ரயில் முன்னோக்கி வர ஆரம்பித்தது. ரயில்வண்டியின் பிரகாசமான முன் வெளிச்சம் இருளைப் போக்கி ஒளி வெள்ளத்துடன் வேகமாக பிரவேசித்துக்கொண்டிருந்தது. வந்தது சென்னை – மும்பை மெயில். ரயில் வண்டி வருவதை அறிந்த ஆண்டர்சன் வேகமாக பாலத்தை விட்டு இறங்கினார். ஏதோ ஒரு உருவம் ரயில்வே இருப்புப்பாதையைக் கடப்பதை உணர்ந்த ரயில் இஞ்சின் ஓட்டுநர், யாரோ விரைந்து வரும் ரயில் முன்னர் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதாக நினைத்துக்கொண்டார். ரயில் பாலத்தைக் கடந்ததுடன் கிறீச் சத்தத்துடன் நின்றது.

எஞ்சினிலிருந்து ஆங்கிலோ-இந்தியன் ஓட்டுநர் வேகமாக இறங்கி பின்னோக்கி வந்தார். கூடவே அவருடைய இரு உதவியாளர்களும். மூவரும் சேர்ந்து ஆண்டர்சனை பிடித்துக்கொண்டனர். ரயில் பெட்டிகளிலிருந்து தலைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. ரயில் வண்டியின் பின்புறத்திலிருந்து ‘கார்ட்’ பச்சை விளக்கை ஏந்திக்கொண்டு ஓடிவந்தார். ஆண்டர்சன் நடந்த விவரங்களை ரயில் ஓட்டுநரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நம்பவில்லை. உடனே ஆண்டர்சன் தன் கையை நீட்டி தூரத்தில் பாறை நடுவே கிடந்த உடலைக் காண்பித்தார். ’அப்படியானால் நீ மாலை முதல் தனியாகவா இந்த இருட்டில் இருக்கிறாய்?’ என்று ரயில் ஓட்டுநர் கேட்டதற்கு, ஆண்டர்சன் ’ஆமாம்’ என்றார். ’நீ ஒரு பைத்தியம்’ என்று கூறிவிட்டு ஓட்டுநர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட்டார். சிறிது நேரத்தில் ரயிலும் கிளம்பியது. ஆண்டர்சன் மறுபடியும் தனித்து விடப்பட்டார். ஆண்டர்சனுக்குப் புலி அங்கு வரும் என்ற நம்பிக்கை போய்விட்டது. காரணம் அங்கு வந்த ரயிலினால் அமைதி குலைந்ததுதான்.

நள்ளிரவு சுமார் 2:30 மணிக்கு மறுபடியும் ஒரு ரயில் அந்த இருப்புப்பாதையைக் கடந்தது. இம்முறை ஓட்டுநர் கண்ணில் படுவதற்கு முன்னரே இருப்புப்பாதையை விட்டு அகன்றுவிட்டார் ஆண்டர்சன். வந்தது ஒரு கூட்ஸ் வண்டி. விடியற்காலை 4 மணிக்கு மறுபடியும் ஒரு ரயில் அந்தப் பாதையில் பயணித்தது. இம்முறை சென்னை – மும்பை மெயில் எதிர்திசையிலிருந்து பிரவேசித்தது. மெயில்கள் மாமண்டூரில் நிற்பதில்லை. எனவே அவை அப்பகுதியை வேகமாகக் கடந்து சென்றன.

எங்கும் வியாபித்திருந்த இருட்டு மெல்ல மெல்ல விலகக் தொடங்கி, கிழக்கே சூரியன் உதிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் மலைகளின் நடுவே சிவப்புப் பழமாக ஆதவன் எழும்பினான். ஆண்டர்சன் ஸ்டேஷன் நோக்கி நடந்தார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் நடந்த விவரங்களைக் கூறி, இறந்த ரயில் ஊழியரின் உடலைப் பாறையின் நடுவே இருந்து மீட்டுத் தகனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

காட்டு பங்களாவிற்குத் திரும்பிய ஆண்டர்சன் மாலை நான்கு மணிவரை நன்கு உறங்கினார். சிறிது உணவருந்திவிட்டு ஆரோக்கியசாமியிடம் எருமைகளைப்பற்றி விசாரித்தார். எருமைகள் அனைத்தும் இருந்த இடத்திலேயே உயிருடன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆண்டர்சனுக்கு ஒன்று தீர்மானமாகத் தெரிந்தது. அந்த ஆட்கொல்லி புலி எருமைகளைச் சீண்டப்போவதில்லை, மாறாக மனிதர்களைத்தான் வேட்டையாடப் போகிறது.

மாலையில் சூரியன் மலைகளுக்கு நடுவே அமைதியாக மறைந்துவிட்டான். ஆண்டர்சன் ஆரோக்கியசாமியின் குடிசைக்குச் சென்றார். அங்கு ஒரு சராசரி இந்தியன்போல் தோற்றமளிக்கும் உடைக்கு மாறினார். ஆரோக்கியசாமி ஆண்டர்சனுக்கு தலைப்பாகை அணிவித்து அவரைத் தயார்படுத்தினார். புலியை ஏமாற்றுவதற்கே இந்த ஆள்மாற்றம். புலி ஆண்டர்சனைப் பார்த்தால் எப்படி நினைக்குமோ தெரியவில்லை. ஆனால் கிராமவாசிகள் ஆண்டர்சனை மேலும், கீழும் வித்தியாசமாகப் பார்த்தனர்.

இரவு வேளையில் புதர்களுக்கு நடுவே துப்பாக்கி ஏந்தியபடி ஓசைப்படாமல் கவனத்துடன் நடந்தார் ஆண்டர்சன். என்னதான் நிலா வெளிச்சம் இருந்தாலும், மண்டிக்கிடந்த புதர்களின் நிலத்தில் படிந்த நிழல்கள் கண்களை ஏமாற்றின. பதுங்கி வரும் புலியை அடையாளம் காண்பது எளிதன்று. எனவே ஆண்டர்சன் தன் கண்களை மட்டும் நம்பாமல் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டார். அவ்வப்பொழுது விசில் போட்டு, மெல்லிய சத்தத்தை எழுப்பி ஆட்கொல்லி புலிக்கு தன்னுடைய இருப்பைத் தெரிவித்தார்.

மலைகள்மீது ஆண்டர்சன் கடந்தபோது காட்டு எலிகள் அங்குமிங்கும் ஓடின. கட்டுவிரியன் கனக்கச்சிதமாகப் புற்களின் நடுவே சுற்றிப் படுத்துக்கொண்டிருந்தது. தாவிக் குதித்து வந்த ஒரு முயலை மரத்திலிருந்து வேகமாகப் பறந்து வந்த ஆந்தை அப்படியே கவ்வியது. ஆனால் முயல் ஆந்தையிடம் சிக்கவில்லை. ஆந்தை இன்னொருமுறை முயன்று பார்க்க விரும்பியது. ஆனால் திடீரென்று தோன்றிய மனிதனைக் கண்டதும் தன்னுடைய இருப்பிடத்துக்கே சென்றுவிட்டது.

தொலைவில் எறும்புப் புற்று ஒன்று தென்பட்டது. அதனிடையே கருத்த உருவமொன்று தன் தலையை விட்டு உள்ளே எதையோ தேடிக்கொண்டிருந்தது. வேறு யாருமில்லை கரடிதான். மாமண்டூர் வனப்பகுதியில் யானைகள் கிடையாது. ஆனால் கரடிகள் அதிகம். கரடிக்கு அந்தப் பொந்தில் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அதனுடைய பாவனையில் தெரிந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் நீரோடையைக் கடந்து சென்ற ஆண்டர்சனை, அவர் கட்டி வைத்த எருமை ஒன்று பாவமாகப் பார்த்தது. குற்றவுணர்வோடு ஆண்டர்சன் எருமையின் கண்ணிலிருந்து விலகி 300 அடி சரிவுகொண்ட மலையின் இறுதிக்கு வந்துசேர்ந்தார். இங்கிருந்து மேலும் முன்னேறிச் செல்லமுடியாது. எனவே ஆண்டர்சன் தான் வந்த வழியே பின்னோக்கிச் சென்றார்.

திரும்பும் வழியில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒரு மூங்கில் எலியை சாவகாசமாக விழுங்கிக்கொண்டிருந்தது. உணவருந்தும் வேளையில் குறுக்கிட்ட மனிதனைக் கண்டதும் தன் தலையை நிமிர்த்தி படமெடுக்கத் துவங்கியது. பாம்பின் கந்தக விழிகள் கும்மிருட்டில் பளிச்சென்று ஜொலித்தன. ஆண்டர்சன் தன் கால்களைத் தடதடவென நிலத்தில் பதித்தார். கைகள் இரண்டையும் சேர்த்து ஒலி எழுப்பினார். திடீரென்று ஏற்பட்ட சத்தத்தையும் அதிர்வையும் சகிக்கமுடியாத பாம்பு, முக்கால்வாசி விழுங்கியிருந்த எலியைக் கக்கிவிட்டு, தரையோடு தலைவைத்து ஒட்டிய உடலுடன் அருகிலிருந்த புதருக்குள் மறைந்தது.

இரவு சுமார் 2:45 மணி இருக்கும். ஆண்டர்சன் அதுவரை 20 மைல்களைக் கடந்திருந்தார். ரயில் தண்டவாளத்தைக் கடந்து மேற்கு நோக்கி ஒரு மைல் தூரம் நடந்திருப்பார். அதுவரை அமைதியாக இருந்த காடு, புலியின் உருமல் சத்தம் கேட்டு அதிர்ந்தது. ஆண்டர்சன் நடந்து சென்ற பாதையிலிருந்து ஒரு கெஜ தூரத்தில் அந்த உருமல் சத்தம் கேட்டது.

ஆட்கொல்லி புலி

முன்னோக்கி வரும் புலியின் கண்களில் படுவதற்கு முன்னர், ஆண்டர்சன் விரைந்து சென்று ஒரு விளாமரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். துப்பாக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆண் புலியின் உருமல் சத்தத்தை எழுப்பினார் ஆண்டர்சன். ஆட்கொல்லி புலி பெண் புலி (புலிகளின் கால் தடங்களை வைத்தே அவை ஆண் புலியா அல்லது பெண் புலியா என்று கணித்துவிடலாம். இவ்வகையில் புலியின் வயதைக்கூட ஓரளவிற்குத் தீர்மானித்துவிடலாம்). இன விருத்தி சமயங்களில் புலிகள் தங்களது துணையை அழைக்க இம்மாதிரி உருமல்களை வெளிப்படுத்தும்.

ஆண்டர்சனின் உருமல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஆட்கொல்லி புலி மறுபடியும் உருமியது. அதன் உருமல் சத்தத்தை வைத்தே ஆட்கொல்லி புலி மிக அருகில் வந்துவிட்டதை உணர்ந்த ஆண்டர்சன், மேலும் சத்தம் எழுப்பாமல் அமைதியாக இருந்தார். அருகில் வந்துவிட்டால் அது போலியான ஒலி என்பதை புலி கண்டுபிடித்துவிடும் அல்லவா?

அரை வினாடியில் ஆட்கொல்லி புலி ஆண்டர்சனைக் கடந்து சென்றது. நிலா வெளிச்சம், புலியின் மீதிருந்த கருப்பு கோடுகளைப் பளபளக்கச் செய்தது. ஆண்டர்சனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டா, புலியின் காதருகே துளைத்துக்கொண்டு அதன் மண்டையில் உட்புகுந்தது. புலியின் வால் மட்டும் துடித்தது. வேறு எந்த எதிர்வினையும் இல்லை. தனக்கு என்ன நடந்தது என்றுகூட அந்தப் புலிக்குத் தெரியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அதற்குக் கிடைக்கவில்லை.

ஆட்கொல்லி புலி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு மாமண்டூர் சாதாரண நிலைமைக்குத் திரும்பியது. அன்றுமுதல் இன்றுவரை மாமண்டூரிலும், அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளிலும் புலியினால் எந்தப் பாதிப்பும் இல்லை (ஆட்கொல்லி புலி சுடப்பட்ட பிறகு, அந்த வனப்பகுதியில் எந்தப் புலியும் வசித்ததாகத் தகவல் இல்லை).

சுட்டு வீழ்த்தப்பட்ட புலி ஒரு பெண் புலி. அது ஏன் ஆட்கொல்லி புலியானது என்ற காரணம் தெரியவில்லை. பொதுவாக புலிகள் வயதாகிவிட்டாலோ அல்லது உடல் ஊனமுற்றாலோ (வேட்டையாடும்போது அல்லது மற்ற விலங்குகளிடம் சண்டை இடும்பொழுது) அதனால் சாதாரணமாக வேட்டையாடமுடியாது. இந்தச் சூழ்நிலையில் தன் பசியைப் போக்கிக்கொள்ளப் புலிகளுக்குச் சுலபமாகக் கிடைக்கும் இரை மனிதன். எதிர்பாராத சமயத்தில் அவனை வீழ்த்தி, கொன்று புசித்துவிடும். அடுத்த உணவிற்கு அடுத்த அப்பாவி மனிதனை வேட்டையாட வேண்டியதுதான். இப்படியே அது நாளடைவில் ஆட்கொல்லி புலியாகிவிடும்.

ஆண்டர்சனால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆட்கொல்லி புலியின் உடம்பில் எந்த ஊனமும் இல்லை. இருந்தும் அது ஆட்கொல்லியாக மாறியதன் காரணம், அதன் தாய் புலியான சாமலா காட்டுப் புலி. மாமண்டூர் புலியைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் ஆண்டர்சன் சாமலா புலியைக் கொன்றார். அந்த வேட்டையை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

 

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

6 thoughts on “ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்”

  1. என்ன ஆனாலும் புலியை கொல்வது மனதுக்கு மிகவும் வேதனையை தந்தது 😭

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *