மதிய உணவுக்குப் பிறகு ஆண்டர்சன் காட்டுப்பாதையில் புலி விட்டுச் சென்ற சுவடுகளைப் பின் தொடர்ந்தார். புலியின் சுவடுகள் கல்யாணி ஆற்றை ஒட்டிய உயரமான மூங்கில் அடர்ந்த பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு சுவடுகள் புலப்படவில்லை. மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கும் வேளை ஆகிவிட்டது. எனவே ஆண்டர்சன் புலிபோனுவை நோக்கி நடந்தார்.
வரும் வழியில் மூங்கில்கள் அடர்ந்த வனப்பகுதியில் கரடி ஒன்று கரையான் புற்றில் தன் இரண்டு முன்னங்கால்களையும் வைத்து நின்றுகொண்டிருந்தது. புற்றில் ஒரு துளையிட்டுக் கரடி தன் தலையையும், மூக்கையும் அதன் வழியே உள்ளேவிட்டு புற்றிலிருந்து கரையான்களை உறிஞ்சி லாகவமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. கரடி உராய்வு சத்தத்துடன் மூக்கை உறிஞ்சிக் கரையான்களைச் சாப்பிடும் காட்சியைப் பார்த்த ஆண்டர்சனுக்கு வேடிக்கையாக இருந்தது. கருப்பு ரோமம் அடர்த்தியாகக் கொண்ட ஒரு மனிதன் ஆயிரக்கணக்கான வண்டுகள் ஒரு சேர ரீங்காரமிடும் சப்தத்தை எழுப்பிக்கொண்டு கரையான் புற்றிற்குள் தலையை விட்டிருப்பது போன்று தோன்றியது.
தன்னுடைய வேலையில் மிகவும் மும்முரமாக இருந்ததால் கரடி ஆண்டர்சனைக் கவனிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் கரடியின் அருகில் வந்திருந்தால், கரடி ஆண்டர்சனைத் தாக்கத் தொடங்கியிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டர்சனுக்கும் கரடியைத் துப்பாக்கியால் சுடுவதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. ஆனால் ஆண்டர்சன் தன் துப்பாக்கியைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவருக்கும் கரடிக்கும் எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. மற்றொன்று, துப்பாக்கிச் சூடு நடந்தால், அதில் எழும் சத்தத்தைக் கேட்டு ஆட்கொல்லிப் புலி அந்தப் பகுதியை விட்டுச் சென்றுவிடும். எனவே ஆண்டர்சன் கரடிக்கு முன்னர் சுமார் நாற்பது அடி தூரத்தில் நின்றுகொண்டு செருமினார்.
செருமலை கேட்டதும் கரடி உறிஞ்சுவதை நிறுத்திவிட்டு யாரடா இது கரடி ’பூஜையில்’ குறுக்கிட்டது என்பது மாதிரி ஆண்டர்சனைப் பார்த்தது. அதனுடைய மண் படிந்த முகத்தில் எரிச்சல், பயம், வருத்தம், கோபம் என அனைத்தும் ஒரு சேர வெளிப்பட்டது. தாக்குதலுக்குத் தயாராவதுபோல் தன் பின்னங்கால்களால் நின்று உடலை நிமிர்த்தியது. கரடிகளை யாரேனும் அருகில் நெருங்கினால், அவை இம்மாதிரி பின்னங்கால்களில் நின்று நிமிர்ந்து தனக்கு முன்னால் இருப்பவர்களை நீண்ட கை நகங்களைக் கொண்டும் பற்களைக் கொண்டும் மோசமாகத் தாக்கும். கரடிகளால் தாக்கப்பட்டவர்களின் முகங்கள் பார்க்கக் கொடூரமாக இருக்கும். ஆனால் ஆண்டர்சனைத் தாக்க நினைத்த கரடி பின்னர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு சத்தம் போட்டபடியே கரும் பந்து ஒன்று உருண்டு ஓடுவது போல் வனத்திற்குள் ஓடி மறைந்தது.
மறுநாள் காலை ஆண்டர்சன் புலிபோனுவிற்குச் சென்றார். அங்கு சாலையில் புலியின் சுவடுகள் தெரிகிறதா என்று பார்த்தார். இல்லை. புலி பள்ளத்தாக்கின் வட கிழக்குப் பகுதிக்குச் சென்று இருக்கலாம், அல்லது பள்ளத்தாக்கின் சரிவைத் தாண்டி வெளியேறி இருக்கலாம் என்று பல்வேறு யோசனைகள் அவருக்குத் தோன்றியது.
ஆண்டர்சன் குண்டல்பெண்டாவிற்குச் சென்றார். அங்கு அவர் வைத்திருந்த தூண்டில் மாடு சேதாரமில்லாமல் இந்த உலகில் எதுவும் தனக்குப் பொருட்டில்லை என்பதுபோல் வைக்கோலைச் சுவைத்துக் கொண்டிருந்தது. அடுத்து உம்பலமேருவிற்குச் சென்று பார்த்தால் அங்கு தூண்டிலாகக் கட்டப்பட்டிருந்த மாடு காணவில்லை. அந்த இடத்தைச் சோதனை செய்து பார்த்ததில் அந்த மாட்டைப் புலி கொன்று அதன் கட்டுகளை அறுத்துத் தூக்கிச் சென்று இருப்பது தெரியவந்தது.
புலி, மாட்டை தூக்கிச் சென்ற தடம் தரையில் நன்றாகத் தெரிந்தது. அந்தத் தடயத்தைத் தொடர்ந்து ஆண்டர்சன் 100 அடி தூரம் சென்றார். அப்பொழுது அவர் கண்ணில் ஒரு காகம் தனியாக மரக் கிளையில் உட்கார்ந்துகொண்டு கீழே எதையோ ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. இந்தக் காகத்தின் செயல் ஆண்டர்சனுக்கு ஒரு விஷயத்தைப் புலப்படுத்தியது. அதாவது காகம் அமர்ந்திருக்கும் மரத்தின் கீழேதான் புலி தன் இரையுடன் இருக்கிறது! புலி கீழே இல்லை என்றால் காகம் கீழே பறந்து சென்று மாட்டின் சடலத்தை சாப்பிடத் தொடங்கியிருக்கும். மாறாக மரத்தின்மீது உட்கார்ந்து இப்படி ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்காது.
காகம் உட்கார்ந்துகொண்டிருக்கும் மரத்தின் நேர் கீழே சறுக்கலான புற்களால் ஆன தரைப் பகுதி இருந்தது. அந்தப் புல் தரையின் அடியில் முட்புதர் நிறைந்த சிறிய பள்ளம் ஒன்று இருந்தது. அந்த முட்புதரின் ஊடே புலி தன்னுடைய இரையுடன் இருந்தது.
அந்த முட்புதரை நோக்கி நேரே கீழே இறங்கிச் செல்வது சரியாக இருக்காது என்று ஆண்டர்சனுக்குத் தோன்றியது. காரணம், ஆண்டர்சன் இறங்கி வரும் சத்தம் கேட்டதும் புலி அந்த இடத்தைவிட்டு ஓடிவிடும். அதுவே ஆட்கொல்லிப் புலியாக இருந்தால் ஆண்டர்சனைத் தாக்க முற்படும். அப்படி நேர்ந்தால் ஆண்டர்சனால் புலியிடமிருந்து தப்பிக்க அது தோதான இடமாக இல்லை. கோரைப் புற்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாக புதர்களும் இருந்த அந்த இடத்தில் புலி தாக்குதலில் இருந்து தப்பிப்பது எளிதன்று.
ஆண்டர்சன் வேறு வழியை யோசித்துக்கொண்டிருந்தபோது அவர் அங்கிருந்த ஆழமில்லாத நீரோடையைக் கவனித்தார். அந்த நீரோடை மேற்கிலிருந்து கிழக்காகக் கல்யாணி நதியை நோக்கிச் சென்றது. ஆண்டர்சன் சற்றும் சத்தமில்லாமல் மெள்ள நடந்து புலி இருந்த முட்புதரைக் கடந்தார். மேலும் 25 கஜ தூரம் சென்ற பிறகு நீரோடையின் வலது கரையை அடைந்தார். சத்தமில்லாமல் கரையின் மேல் ஏறினார். எதிர்பார்த்ததுபோல் இப்பொழுது ஆண்டர்சனுக்கும், புலி இருந்த முட்புதருக்குமான இடைவெளி குறைவாக இருந்தது. அருகில் ஒரு சிறிய புளியமரம் இருந்தது. ஆண்டர்சன் அந்தப் புளியமரத்தின் கிளையைப் பற்றி மரத்தின்மீது லாகவமாக ஏறினார்.
ஆண்டர்சன் மரத்தில் ஏறியதற்கான காரணமே தன்னைச் சுற்றியுள்ள காட்சிகளைச் சரியாகப் பார்க்கமுடியும் என்பதற்காகத்தான். துரதிர்ஷ்டம், ஆண்டர்சனுக்கு மரத்திலிருந்து பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. மாட்டின் சடலத்தை உண்பதற்காக எதிர் மரத்தில் காத்துக்கொண்டிருந்த காகத்தைக்கூட பார்க்க முடியவில்லை. நடுவில் இருந்த முட்புதர் ஆண்டர்சனின் பார்வையை மறைத்தது. அரை மணி நேரம் ஆண்டர்சன் மரத்தில் அமர்ந்திருந்தார். ஆண்டர்சனுக்கும் புலி ஏற்கெனவே பார்த்த இடத்தில்தான் இருக்கிறதா அல்லது அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதா என்று சந்தேகம் வந்தது.
வனத்தை நன்கு ஊன்றிக் கவனிக்கலானார். ஏதேனும் வன விலங்குகள் புலி இருப்பதை உணர்த்துகிறதா என்பதைக் கவனித்தபடி இருந்தார். புலி முட்புதரை விட்டு வெளியே வந்தால் அருகில் இருக்கும் விலங்குகளோ, பறவைகளோ அதைக் கண்டிப்பாகத் தெரிவிக்கும். சூரியன் வானத்தில் உச்சியைத் தொட்டது. புலிக்கு எப்படியும் தாகம் எடுக்கும், காலையில் இரையைப் புசித்திருக்கிறது. எனவே தன்னுடைய தாகத்தைத் தணித்துக்கொள்ள அது நிச்சயமாக தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லும். கண்டிப்பாக புலி உம்பலமேருவில் உள்ள தண்ணீர் துளைக்குச் செல்லும் என்று ஆண்டர்சன் கணித்தார்.
அந்தச் சமயத்தில் லங்கூர் குரங்கு ஒன்று ஆண்டர்சனின் இடதுபுறத்தில் 100 கஜ தூரத்திலிருந்து சத்தம் எழுப்பியது. லங்கூர் குரங்கு தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது. அதை வைத்து புலி தன் இடத்தை விட்டுச் சென்று விட்டதை உணர்ந்தார் ஆண்டர்சன். எப்படி?
லங்கூர் குரங்குகள் மரவகைப் பிராணிகள். சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும் இந்தக் குரங்களின் முகம் மட்டும் கருமையாக இருக்கும். இவற்றுக்கு நீண்ட வால் உண்டு. வனத்தில் கூட்டமாக வாழும். காடுகளில் கிடைக்கும் பழங்கள், இலைகள், பூச்சிகள் ஆகியவற்றை உட்கொள்ளும். புலி, சிறுத்தை மற்றும் காட்டுவாசிகளுக்கு மிகவும் இஷ்டமான உணவு லங்கூர் குரங்குகள்.
இந்தக் குரங்குகள் தங்களை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள தங்களுக்குள் ஒரு காவலாளியை நியமிக்கும். இந்தக் காவலாளி லங்கூர் குரங்கு, வனத்தில் உள்ள உயரமான மரத்தைத் தேர்வு செய்து அதன் உச்சியில் நின்றுகொண்டு தன்னைச் சுற்றியுள்ள வனம் முழுவதையும் நோட்டமிடும். கூர்மையான அதன் பார்வையிலிருந்து கீழே நடமாடும் எந்த வேட்டையாடும் மிருகங்களும் தப்ப முடியாது. குரங்குகளுக்கு ஆபத்து என்றால் காவலாளிக் குரங்கு கூக்குரல் எழுப்பி எச்சரிக்கை செய்யும். அந்த எச்சரிக்கையை வைத்து மற்றக் குரங்குகள் உஷாராகி மரத்தின் உச்சிகளுக்குச் சென்றுவிடும்.
காவல்காக்கும் பொழுது லங்கூர் குரங்கு எந்தவிதத்திலும் தன் கவனத்தைச் சிதறவிடாது. காவல் காக்கும் பணி முடிவடையும்வரை உணவருந்தாது. தன் இனத்தின் பெண் குரங்குள், குட்டிகள் மற்ற குரங்குகளின் உயிரே பிரதானம் என்று கருதி கண்ணும் கருத்துமாகச் செயல்படும். அடுத்த காவலாளிக் குரங்கு மாற்றாக வரும்வரை முதல் காவலாளிக் குரங்கு தன் பணியை அயராது தொடரும். அடுத்த காவலாளிக் குரங்கு காவலை மேற்கொண்ட பிறகு முதல் காவலாளிக் குரங்கு உணவருந்தும். லங்கூர் குரங்குள் விளையாடும்போது ஒரு மாதிரி சத்தத்தையும், ஆபத்து நேரங்களில் வேறோரு சத்தத்தையும் எழுப்பும்.
தங்களைக் காத்துக்கொள்ள் லங்கூர் குரங்குள் எப்படிச் சாமர்த்தியமாக செயல்படுகிறதோ, அதுபோலவே அவற்றை வேட்டையாடும் விலங்குகளும் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்படுகின்றன. எல்லாக் குரங்குகளும் மர உச்சியில் போய் நின்றுகொண்டால் புலிகளும், சிறுத்தைகளும் தங்கள் உணவுத் தேவைக்கு என்ன செய்யும்? எனவே, குரங்குகளை வேட்டையாடும் புலிகளும், சிறுத்தைகளும் தங்களது யுத்திகளை மாற்றிவிட்டன.
புலிகள்/ சிறுத்தைகள் லங்கூர் குரங்குகள் இருக்கும் மரத்தினைத் தேர்ந்தெடுக்கும். அந்த மரத்தின் அருகே சென்று ரத்தம் உறையும் அளவிற்குக் கர்ஜிக்கும் அல்லது இரைச்சல் போடும். பின்னர் தாவிக் குதித்து மரத்தின் அடிக்கிளையில் ஏறும். மரத்தின் உயரமான கிளையில் அமர்ந்திருக்கும்வரை லங்கூர் குரங்குகளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தக் குரங்குகள் புலி, சிறுத்தையின் உறுமலைக் கேட்டுப் பயந்துவிடும். மேலும் தங்களைத் தாக்க வரும் புலி, சிறுத்தையின் கூர்மையான பற்களைப் பார்த்து நிலைகுலைந்து போய், தப்பிப்பதற்காக வேறு மரத்திற்குத் தாவிச் செல்லும். அப்படிச் செல்லும்போது தொப்பென்று கீழே குதிக்கும். இப்படிக் குதிக்கும்பொழுது புலியிடமோ, சிறுத்தையிடமோ அகப்பட்டுக்கொள்ளும்.
சரி, நாம் சாமலா புலி கதைக்கு வருவோம். புலி முட்புதரை விட்டு வெளியேறியதை உணர்ந்த ஆண்டர்சன், தான் அமர்ந்திருந்த மரத்தைவிட்டுக் கீழே இறங்கினார். கையில் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்தார். லங்கூர் குரங்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் திசை நோக்கி நடந்தார். புலிக்குக் காலையில் இரை கிடைத்ததால் அது கண்டிப்பாக லங்கூர் குரங்குகளைத் தாக்காது என்று முடிவு செய்தார். லங்கூர் குரங்கு எழுப்பும் சத்தத்தை வைத்துப் பார்த்தால் புலி தண்ணீர் துளையை நோக்கிச் சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். புலியைத் தொடர்ந்து போகும் வழியில் கோரைப் புற்களும், ஆப்பிரிக்க முட் செடிகளும் மண்டியிருந்ததால் ஆண்டர்சன் அவற்றைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டார்.
(தொடரும்)