Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

முட்புதரில் ஒரு புலி

புலியைத் தொடர்ந்து போகும் வழியில் கோரைப் புற்களும் ஆப்பிரிக்க முட் செடிகளும் மண்டியிருந்ததால் மிகவும் சிரமப்பட்டுக் கடந்தார் ஆண்டர்சன்.

அரை மைல் தூரம் சென்றதும் ஒரு காட்டுப்பருத்தி மரத்தின் உச்சியிலிருந்து காவல் புரிந்துகொண்டிருந்த லங்கூர் காவலாளிக் குரங்கு ஒன்றைப் பார்த்தார். காவலாளிக் குரங்கும் ஆண்டர்சனைப் பார்த்தது. காவலாளிக் குரங்கு இப்பொழுது இரண்டு எதிரிகளை கவனித்துக்கொள்ளவேண்டும். ஒன்று புலி, மற்றொன்று ஆண்டர்சன். லங்கூர் குரங்கு நோக்கும் திசையை நோக்கினால் புலியின் நகர்வைத் தெரிந்துகொள்ளலாம் என்று முடிவு செய்தார் ஆண்டர்சன்.

தன் கால்களை மடக்கி அப்படியே அமர்ந்து அசைவில்லாமல் மரத்தில் இருக்கும் காவலாளிக் குரங்கைக் கவனித்தார். காவலாளிக் குரங்கு ஆண்டர்சனைக் கீழே பார்த்தது. பிறகு சில நொடிகள் கழித்துத் தன் பார்வையை இடது புறமாகத் திருப்பியது. மறுபடியும் கீழே பார்த்தது. பின்னர் இடதுபுறமாகப் பார்த்துத் தொடர்ச்சியாகச் சத்தத்தை எழுப்பி எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

குரங்கின் பார்வையிலிருந்து புலி தனக்கு முன்னர் 100 கஜ தூரத்தில் சென்று கொண்டிருப்பதை யூகித்த ஆண்டர்சன் புலியை வேகமாகப் பின்தொடர்ந்தார். ஆண்டர்சனின் நடவடிக்கையைப் பார்த்த காவலாளிக் குரங்கிற்கு ஒரே குழப்பம். இந்த ஆள் நம் குரங்குக் கூட்டத்தைத் தாக்கப்போகிறானா அல்லது புலியைத் தாக்கப்போகிறானா என்று அதற்குப் புரியவில்லை.

குரங்கின் எச்சரிக்கை ஒலி வேகமானதுடன், இரண்டு மடங்காகவும் அதிகரித்தது. இது ஆண்டர்சனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. புலியும் குரங்கின் எச்சரிக்கை ஒலியை கேட்டுக்கொண்டே செல்கிறது. குரங்கின் அதிகப்படியான எச்சரிக்கை ஒலியைக் கேட்கும் புலி, குரங்குகளுக்கும் தனக்கும் ஆபத்து அருகாமையில் இருப்பதை உணர்ந்து உஷாராகிவிடலாம்.

ஆண்டர்சன் மேலும் 25 கஜ தூரத்தைக் கடந்தார். புலியை நெருங்கிவிட்டதை உணர்ந்தார். அதனால் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருந்தார். மேலே, மரத்திலிருந்த காவலாளிக் குரங்கைக் கவனித்தார். குரங்கு ஆண்டர்சன் இருந்த திசையைத் தீர்க்கமாகக் கவனித்தது. இதை வைத்து புலியும் தானும் அருகருகாமையில் இருப்பதைப் புரிந்து கொண்டார் ஆண்டர்சன்.

அசைவில்லாமல் நின்ற ஆண்டர்சன் சுற்றும் முற்றும் கவனமாகப் பார்வையிட்டார். சுற்றிலும் முட்புதர்கள் இருந்தன. அவற்றின் நடுவே நான்கு அடி உயரக் கோரைப் புற்கள் இருந்தன. ஆண்டர்சன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு இடது பக்கத்தில் சுமார் 30 கஜ தூரத்தில் புற்கள் லேசாக அசைந்தன. சரியான காட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆண்டர்சன் நிமிர்ந்து நின்றார். அதே சமயம் புலியும் ஆண்டர்சனைப் பார்த்தது. லேசாக உறுமியபடியே புலி இரண்டே தாவலில் அந்த இடத்தை விட்டு மறைந்தது.

அதன் பின்னர், அப்புலியைப் பின்தொடர்வது வீண் என்ற முடிவுக்கு வந்தார் ஆண்டர்சன். காரணம், அவர் இருப்பைப் புலியிடம் காட்டிவிட்டார். புலி, தான் பின்தொடரப்படுவதைத் தெரிந்துகொண்டது. எனவே புலி இனி எச்சரிக்கையாகிவிடும். தன் பின்பக்கமாகப் புலி வந்து தாக்காமல் பார்த்துக்கொண்டபடியே, அவர் சத்தமில்லாமல் கவனமாக மாட்டுச் சடலம் இருந்த இடத்திற்குச் சென்றார். அந்தச் சடலம் பாதி உண்ணப்பட்டிருந்த நிலையில் இருந்தது. மாட்டின் சடலம், அதன் இடது புறமாகக் கிடந்தது. கழுகுகளின் கண்களில் படாதபடி, சடலத்தைச் சுற்றிலும் புற்களும், முட் செடிகளும் மண்டியிருந்தன. அதிர்ஷ்டவசமாக சடலம் இருந்த இடத்தின் அருகே ஒரு மாமரம் இருந்தது.

இப்பொழுது ஆண்டர்சன் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். புலி ஆண்டர்சனைப் பார்த்திருந்தாலும், அது தன்னுடைய இரையை நோக்கி வர வாய்ப்பிருக்கிறது. புலிக்காகக் காத்திராமல் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டால், ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப் போகும். ஆனால் இரவில் கண் விழிப்பதற்கும் வேட்டையாடுவதற்கும் தேவையான டார்ச் லைட், போர்வை, உணவு போன்ற எதையும் அவர் எடுத்து வரவில்லை.

மரத்தில் ஏறி உட்கார்ந்தால் விடியற்காலைவரை அதிலேயேதான் உட்கார்ந்து இருக்க வேண்டும். இரவு மிகவும் கருமையானதாக இருக்கும். காரணம் அன்று அமாவாசை. இரவில் அதிகமாகக் குளிர் காற்று வீசும். குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள போர்வையும் இல்லை.

சரி, காருக்குச் சென்று தேவையானப் பொருட்களைக் கொண்டு வரலாம் என்றால், கார் அவர் இருக்கும் இடத்திலிருந்து 4 மைல் தொலைவில் இருந்தது. ஆட்கொல்லிப் புலி இருக்கும் அடர்த்தியான காட்டை வேகமாகக் கடந்து செல்வது என்பது கடினமான காரியம். அப்படியே அந்த இடத்தை விட்டு தான் செல்லும் சந்தர்ப்பத்தில், புலி திரும்பி வந்து தன் இரையைத் தூக்கிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. எனவே எவ்வளவு அசெளகரியங்கள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஆண்டர்சன் புலியைச் சுட்டு வீழ்த்துவதற்காகத் தயாரானார்.

மாமரத்தின் மீது ஏறி தன் காலணிகளைக் கழற்றிவிட்டு, வசதியாக இருந்த மரக்கிளையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார். துப்பாக்கியை அருகிலிருந்த கிளையில் கிடத்தினார். கீழே மாட்டின் சடலம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவரால் தனக்குப் பின்னால் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை. அவர் அமர்ந்திருந்த கிளை தரையிலிருந்து சுமார் 15 அடி உயரத்தில் இருந்தது, எனவே புலியால் அவ்வளவு தூரம் பாய்ந்து வந்து ஆண்டர்சனைத் தாக்க முடியாது. மரத்தின் மேலே வரவேண்டுமென்றால் புலி முதல் கிளையின் வழியாக ஏறித்தான் வரவேண்டும். அப்படி வரும் பட்சத்தில் புலியைத் துப்பாக்கி குண்டு இலக்காக்கிவிடும்.

ஆண்டர்சன் மாமரத்தில் ஏறி அமர்ந்தபோது மணி மதியம் 12:50. அப்படியே நொடிகள் நிமிடங்களாக நகர்ந்து, நிமிடங்கள் மணிக்கணக்காக நகர்ந்தது. கடிகார முள் மாலை 6:30 மணியைத் தொட்டது. காட்டுக் கோழிகள் கூவ ஆரம்பித்து விட்டன. பறவைகள் தங்கள் கூடுகளுக்குச் சென்றுவிட்டன. பக்கி பறவைகள் (nightjar) கீச்சிட்டுச் சுற்றி வந்தன. மாலை 6:45 மணிக்கு நன்கு இருட்டத் தொடங்கி விட்டது.

சில காடுகளில் புலிகள் ஆண் கடா மான்களைப் போன்று சப்தம் எழுப்பி பெண் கடா மான்களை ஏமாற்றி வரவழைக்கும். அன்றும் அப்படித்தான் நடந்தது. ஆண்டர்சன் மரத்தில் இருந்தபோது, அருகில் முட்புதர் ஒன்றின் அருகிலிருந்து ஓர் ஆண் கடா மான் சத்தம் போடுவதுபோல் கேட்டது. ஆனால் முட்புதரிலிருந்து வெளியே வந்தது என்னவோ ஒரு புலி.

புலி வந்த இடத்தில் கடா மான் இருந்திருக்க வாய்ப்பில்லை. புலி வந்த உடனே கடா மான் தலைதெறிக்க ஓடியிருக்கும். அப்படி எந்த ஒரு கடா மானும் ஓடிய குளம்படிச் சத்தமும் கேட்கவில்லை. எனவே புலிதான் கடா மானைப்போல் ஒலி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் புலி ஏன் அந்தச் சமயத்தில் கடா மானைப் போன்று ஒலி எழுப்பியது என்று தெரியவில்லை. காலையில் புலிக்கு நல்ல இரை கிடைத்த பிறகு அதற்குப் பசியெடுக்க வாய்ப்பில்லை. அதனால் புலி வேட்டையாடவும் இல்லை. மேலும் அந்த முட்புதரைச் சுற்றி கடா மான்கள் எதுவும் இல்லை. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் புலி கடா மான் போல் சத்தமிட்டது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

புலி இறந்து கிடந்த மாட்டின் சடலத்தின் அருகே வந்து கொண்டிருந்தது. புலி வரும்பொழுது மரக்கிளை அது வரும் காட்சியை மறைத்தது. ஆண்டர்சன் தன் துப்பாக்கியை எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டார். சடலத்தை அடைந்த புலி தன் பற்களால் இரையைத் தூக்கும் காட்சி ஆண்டர்சனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆண்டர்சன் விசையை அழுத்திய உடன் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டு புலியின் இடது தோள்பட்டையைத் தாக்கியது. குண்டடிப்பட்ட புலி திரும்ப முயன்றபோது, ஆண்டர்சனின் துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த மற்றொரு குண்டு புலியின் கழுத்தைத் துளைத்தது. புலி அப்படியே சுருண்டு விழுந்தது. புலி தன் கால்களை உதைத்தது. அதனைத் தொடர்ந்து அதன் கால்கள் வெட்டி இழுத்தன. பின்னர் அசைவற்றுப் போனது. ஆண்டர்சன் புலியைச் சென்று பார்க்கவில்லை.

புலிதான் இறந்து விட்டதே என்று ஆண்டர்சன் தைரியமாகத் தன் காரை நோக்கிப் பயணமானார். இருட்டில் காட்டில் நடந்து சென்று வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக, ஆண்டர்சன் கல்யாணி நதியின் வறண்ட படுகையின் வழியாகச் செல்லத் தீர்மானித்தார். வளைந்து நெளிந்து செல்லும் கல்யாணி நதிப்படுகையில் பயணிப்பது தூரமாக இருந்தாலும் நிச்சயம் தன் காரை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை ஆண்டர்சனுக்கு இருந்தது.

கல்யாணி நதியின் கற்கள் நிறைந்த படுகையைக் கடப்பது சிம்ம சொப்பனமாக இருந்தது. அங்கு கிடந்த கற்களில் ஆண்டர்சன் தட்டுத் தடுமாறி பலமுறை கீழே விழுந்தார். ஆற்றின் படுகையில் நீட்டிக்கொண்டிருந்த மர வேர்கள் அவரது உடம்பைப் பதம் பார்க்கத் தவறவில்லை.

ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்குத் தாவும்பொழுது அவருடைய கால்களோ அல்லது கணுக்கால்களோ முறிந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. துப்பாக்கி பாறைகளில் மோதிச் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக அதைத் தூக்கிக் கொண்டே நடந்தார். அப்பொழுது இருமுறை தடுமாறிக் கீழே விழுந்தார். அந்தப் பாதையில் நடந்து வருவதற்கு அதீதக் கவனம் தேவைப்பட்டது. நான்கு மணி நேரம் கழித்து ஒரு வழியாக சுமார் இரவு 11 மணி அளவிற்குத் தன் காரை வந்தடைந்தார் ஆண்டர்சன்.

காரில் நாகபட்லா திரும்பிக் கொண்டிருந்த ஆண்டர்சனுக்கு தான் ஆட்கொல்லிப் புலியைத்தான் கொன்றோமா என்ற சந்தேகம் எழுந்தது. காரணங்கள், 1) புலி, தூண்டிலாக வைக்கப்பட்ட மாட்டைக் கொன்றிருக்கிறது; 2) புலி, தான் இரையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், அது அந்த இடத்தை விட்டு உடனே செல்லவில்லை, மாறாக அது மெதுவாக சென்றது; 3) ஆண்டர்சனைப் பார்த்ததும் புலி பயந்து ஓடி மறைந்தது; 4) தன் இரையை நோக்கித் திரும்ப வந்தது; 5) கடா மானைப் போன்று ஒலியை எழுப்பியது.

இவை அனைத்தையும் ஒருசேரப் பார்க்கும்பொழுது சுடப்பட்டு இறந்த புலி ஓர் ஆட்கொல்லிப் புலியா என்ற சந்தேகம் ஆண்டர்சனுக்கு வந்தது. அப்படி ஆட்கொல்லிப் புலி கொல்லப்படாமல் உயிரோடு இருக்கும் பட்சத்தில், தான் கல்யாணி ஆற்றுப் படுகையில் சிரமப்பட்டு வரும்பொழுது ஆட்கொல்லிப் புலியால் தாக்கப்படாமல் இருந்தது அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொண்டார்.

(தொடரும்)

 

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *