Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!

ஆட்கொல்லி விலங்கு #6 – உறைந்து போன துப்பாக்கி!

உறைந்து போன துப்பாக்கி

மறுநாள் காலை ஆண்டர்சன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் சென்று, முன் தினம் தான் சுட்டுக்கொன்ற புலியைக் காரில் வைத்து நாகபட்லாவிற்கு எடுத்து வந்தார். நாகபட்லாவில் மக்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவந்த ஆட்கொல்லி புலி இறந்துவிட்டதாக ஆர்ப்பரித்தனர். புலியைத் தோலுரிக்கும் முன்பு அதை நன்கு சோதனை செய்தார் ஆண்டர்சன். அது ஓர் ஆண் புலி. அதன் உடலில் எந்தக் குறைபாடோ ஊனமோ இல்லை. அதன் தோல் மிகவும் அழகாகவும் குறைபாடற்ற நிலையிலும் இருந்தது. இதை வைத்துப் பார்க்கும்போது ஆண்டர்சனுக்கு தான் ஆட்கொல்லி புலியைத்தான் கொன்றோமா என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.

அன்று மாலை ஆண்டர்சன் தன்னுடைய இருப்பிடமான பெங்களூருக்குச் சென்றார். செல்லும் வழியில் சித்தூரில் தங்கினார். அங்கு சித்தூர் கலெக்டரிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்து, அவரிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றார். அதாவது புலியால் யாரேனும் கொல்லப்பட்டார்கள் என்றால் உடனே சித்தூர் கலெக்டர் ஆண்டர்சனுக்கு அந்தச் செய்தியைத் தந்தி மூலம் தெரிவிக்க வேண்டும்.

11 நாட்களுக்குப் பிறகு சித்தூர் கலெக்டரிடமிருந்து ஆண்டர்சனுக்கு ஒரு தந்தி வந்தது. ‘சாமலா பள்ளத்தாக்கில் புல் அறுக்கச் சென்ற ஒரு பெண்ணை ஆட்கொல்லி புலியானது தூக்கிச் சென்றிருக்கிறது; இந்தச் சம்பவம் நாகபட்லாவிலிருந்து ஒரு மைல் தூரத்திற்குள் நடந்தேறியிருக்கிறது.’ ஆண்டர்சன் தன்னுடைய ஆட்கொல்லிப் புலி வேட்டையில் தோற்றதாக உணர்ந்தார். அவர் அஞ்சியது போலவே அவர் தப்பான புலியைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

தந்தி கிடைத்த மறுநாளே ஆண்டர்சன் நாகபட்லா விரைந்தார். அவருக்கு புலி தாக்கிய இடம் காட்டப்பட்டது. புற்களை அறுத்து மரத்தின் அடியில் சேர்த்து வைத்து அதை மூட்டையாகக் கட்டும் தருவாயில், காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த புலி அந்தப் பெண் மீது பாய்ந்தது; அப்பெண்ணுடன் புல் அறுக்க வந்த மற்றொரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கும்பொழுது, தாக்குதலுக்கு உள்ளான பெண்ணைப் புலி தன் வாயில் கவ்வியவாறே காட்டிற்குள் சென்று மறைந்தது.

சம்பவத்தைப் பார்த்த பெண் நாகபட்லா விரைந்து நடந்த விவரத்தை அனைவரிடத்திலும் தெரிவித்தாள். புலி பெண்ணைத் தாக்கிய செய்தி நாகபட்லாவிலிருந்து ரெங்கம்பட்டிற்குத் தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து சந்திரகிரிக்குத் தெரியப்படுத்தப்பட்டது. சந்திரகிரி தாசில்தார் தனக்குக் கிடைத்த செய்தியை சித்தூர் கலெக்டருக்குத் தெரிவிக்க, அவரும் ஆண்டர்சனுக்குத் தந்தி கொடுத்திருக்கிறார்.

புலி, பெண்ணைத் தூக்கிச் சென்று மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அந்தப் பெண்ணைத் தேடி யாரும் காட்டிற்குள் போகவில்லை. நிலமும் காய்ந்திருந்தபடியால் புலியின் சுவடுகளையும் பார்க்க முடியவில்லை. காட்டுக்குள் சென்று பார்த்தபோது அந்தப் பெண்ணின் புடைவை கிடைத்தது. ரத்தத் துளிகளை நிலத்தில் பார்க்க முடியவில்லை. புலி அந்தப் பெண்ணை எப்படிக் கழுத்தில் கவ்வியதோ, அதே நிலையிலேயே தன் பிடியைத் தளர்த்தாமல் தூக்கிச் சென்றிருக்கிறது. அதனால்தான் நிலத்தில் எந்த ரத்தத் துளியும் தென்படவில்லை. புலி தாக்கியபோது உதவிக்காகக் கூக்குரல் எழுப்பிய பெண் பிறகு அமைதியாகிவிட்டார். பிரேதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிராமத்திற்குச் சென்ற ஆண்டர்சன், தான் ஏற்கெனவே வாங்கித் தூண்டிலாகப் பயன்படுத்திய மூன்று மாடுகளையும் தருவித்து, மறுபடியும் அவற்றைத் தூண்டிலாகப் பயன்படுத்தினார். ஒரு மாட்டைச் சாலையோரத்தில் நான்காவது மைல் கல்லில் கட்டினார். இரண்டாவது மாட்டை புலிபோனுவிலும், மூன்றாவது மாட்டை நாகபட்லாவிலிருந்து இரண்டு மைல் தொலைவில் கல்யாணி ஆற்றுப் படுகையிலும் கட்டினார்.

மறுநாள் காலை சென்று பார்த்தபோது மூன்று மாடுகளும் உயிருடன் இருந்தன. புலிபோனு வனச் சாலையில் புலி சென்றதற்கான சுவடுகளும் தென்பட்டன. புலி வனச் சாலையினுள் மூன்றாவது மைலுக்கு முன்னர் நுழைந்திருக்கிறது. சாலையின் நான்காவது மைலைக் கடந்திருக்கிறது. நான்காவது மைலில் தூண்டிலாகக் கட்டப்பட்ட மாட்டையும் பார்த்திருக்கிறது. ஆனால் மாட்டை ஒன்றும் செய்யவில்லை. வனச் சாலையின் ஆறாவது மைலைக் கடந்த பிறகு புலிபோனுவிற்கு அருகே கிழக்குப் பக்கமாகச் சென்றிருக்கிறது. அந்தத் திசையில் திருப்பதி தொகுதியைச் சார்ந்த உயரமான கற்பாறைகள் நிறைந்த ‘மங்கி ஹில்’ என்ற மலை இருக்கிறது.

புலியின் கால் சுவடுகளைப் பார்க்கும்பொழுது புலிக்கு எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தூண்டிலாக வைக்கப்பட்டிருந்த மாட்டின்மீது அது எந்த நாட்டமும் கொள்ளவில்லை. தூண்டில் மாட்டின் அருகேகூட புலி செல்லவில்லை என்பதை அதன் சுவடுகளின் தடயங்களைப் பார்த்தாலே புலனானது. இந்தப் புலி சாதாரணதாக இருக்க முடியாது. நிச்சயம் ஆட்கொல்லி புலிதான் என்ற முடிவுக்கு வந்தார் ஆண்டர்சன். கடைசியில் சரியான புலியைத்தான் நாம் பின் தொடர்கிறோம் என்று மகிழ்ச்சியும் அடைந்தார்.

ஆட்கொல்லி புலி காடு படர்ந்த மங்கி ஹில் மலைச் சரிவில் தஞ்சம் புகுந்திருக்க வேண்டும் அல்லது மலை அடிவாரத்தை விட்டுவிட்டு குண்டல்பெண்டா – உம்பலமேரு தடத்தில் மீண்டும் இணைந்து அந்த வழியாக சாமலா பள்ளத்தாக்கின் செங்குத்தான சரிவுக்குச் சென்றிருக்க வேண்டும். இப்படிச் சென்ற புலி, அதே வழியில் திரும்பி வருவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக ஆண்டர்சனுக்குத் தோன்றியது. எனவே அந்தப் புலியை அது திரும்பி வரும் பாதையிலேயே எதிர்கொள்வது என்று முடிவு செய்தார். அதிர்ஷ்டவசமாக அன்று பெளர்ணமி சமயம் என்பதால் நிலா வெளிச்சம் தனக்குத் துணை கொடுக்கும் என்று தீர்மானித்தார்.

சாலையோரமாக ஒரு பெரிய தேக்கு மரம் இருந்தது. அந்த மரம் அவர் தூண்டிலாகக் கட்டிவைத்திருந்த மாட்டிலிருந்து சுமார் 150 கஜ தூரத்தில் இருந்தது. தேக்கு மரம் செங்குத்தான தண்டுப் பகுதியைக் கொண்டது. தேக்கு மரத்தில் ஏற முடியாது என்பதால் ஆண்டர்சன் தன் முதுகைச் சாய்த்தவண்ணம் மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் அமர்ந்த இடத்திலிருந்து தூண்டில் மாடு நன்றாகத் தெரிந்தது; மேலும் சாலையின் இரு திசைகளும் தெரிந்தன; தன்னைச் சுற்றிலும் நூறு கஜ தூரத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் அவரால் பார்க்க முடிந்தது. காரணம், சென்ற வருடம் அந்தக் குறிப்பிட்டப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் புதர்கள் ஏதும் இல்லாமல் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன.

மாலை ஐந்து மணிக்கு ஆண்டர்சன் துப்பாக்கியைக் கையில் ஏந்தித் தயாராக இருந்தார். இருள் வனத்தைக் கவ்வியது. நிலவொளி அந்த அமைதியான வனத்தின்மீது வெள்ளி நிறத்தைப் பரவச் செய்தது. புலி தன்னைப் பின்னால் இருந்து தாக்கினால் என்ன செய்வது என்று ஆண்டர்சன் யோசித்தார். பின்னர் அவருடைய அறிவு அதற்கான விடையைக் கொடுத்தது. புலி பின்னாலிருந்து தாக்கவேண்டும் என்றால், அது முதலில் ஆண்டர்சனைப் பார்த்திருக்க வேண்டும். அல்லது சத்தத்தை வைத்து அவர் அங்கு இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆண்டர்சன் அசையாமல் சத்தம் செய்யாமல் இருந்தால், புலியால் அவர் இருப்பதைப் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியாது.

மேலும் புலிக்கு நுகரும் தன்மை கிடையாது. எனவே ஆண்டர்சன் அசையாமல் இருக்கும் பொருட்டு, அன்று புகை பிடிப்பதையும், உணவருந்துவதையும் தியாகம் செய்துவிட்டார். குளிரிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக ஆடை உடுத்தியிருந்தார். அன்று இரவு காடு மிகவும் அமைதியாக இருந்தது. இதை வைத்து புலி அந்தப் பகுதியில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார். நள்ளிரவு கடந்ததும் குளிர் அதிகமாகிவிட்டது. விடியலுக்கு முன்னர் பனிப் பொழிவு அதிகமாக இருந்தது. ஆண்டர்சன் அணிந்திருந்த உடைகளெல்லாம் பனியால் நனைந்துவிட்டன. துப்பாக்கி பனிக்கட்டிபோல் தொடமுடியாத அளவுக்கு ஜில்லென்று இருந்தது. துப்பாக்கியின் குழாயிலிருந்து பனிப்புகை வெளியேறியது.

இந்தக் கடுங்குளிரில் தான் கட்டியிருந்த மாட்டின் நிலை என்னவென்று ஆண்டர்சன் பார்த்தார். நள்ளிரவு வரை தன் முன் கொட்டப்பட்ட புற்களை மென்று கொண்டிருந்த மாடு, நள்ளிவுக்குப் பின்னர் குளிர் தாங்க முடியாமல் தரையை அணைத்தவாறு படுத்துக்கொண்டது. அதன் மூலம் அதற்கு பூமியின் வெப்பம் கிடைத்து குளிரைச் சமாளிக்க ஏதுவாக இருந்தது.

பொழுது புலர்ந்தது. ஆண்டர்சன் நாகபட்லாவை நோக்கி நடையைக் கட்டினார். நான்கு மைல் நடந்த பிறகு காட்டுப் பங்களாவை அடைந்தார். குளித்துவிட்டுச் சுடச்சுடத் தேநீர் அருந்தினார். பிறகு பன்றியின் உப்புக்கண்டத்தையும் முட்டையையும் உண்ட பின், இரண்டு மணி நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார். இந்த ஓய்வு, அவருக்குப் புத்துணர்ச்சியை அளித்ததோடு அடுத்த நிகழ்விற்குத் தயார்படுத்தியது.

ஆண்டர்சன் புலிபோனுவிற்கு தன்னுடைய காரில் பயணமானார். அவருடைய காரின் இரண்டு மட்கார்டிலும் இரண்டு டிராக்கர்களை (காட்டில் விலங்குகளின் சுவடுகளையும், வாசனையையும் மோப்பம் பிடித்து பின் தொடர்பவர்கள்) உட்கார வைத்து, காரை மெதுவாக ஓட்டிச் சென்றார். கார் சாலையில் கடந்து சென்றபோது இந்த இரு டிராக்கர்களும் புலியின் சுவடுகள் தென்படுகின்றனவா என்று சாலையை நுட்பமாக கவனித்துக்கொண்டு வந்தனர். புலி சென்றதற்கான தடயம் எதுவும் இல்லை. புலிபோனுவிற்குச் சென்ற அவர்கள் கல்யாணி ஆற்றின் அருகில் இரு திசைகளிலும் புலியின் சுவடுகளைத் தேடினர். ஆனால் புலி அந்தப் பக்கம் வந்தததற்கான எந்த அடையாளமும் இல்லை. ஆண்டர்சனும் டிராக்கர்களும் புலிபோனுவிற்குத் திரும்பிவிட்டனர்.

ஆண்டர்சன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். கல்யாணி ஆற்றைத் தாண்டி ஒரு புளியமரம் இருந்தது. அந்தப் புளியமரத்திற்கு எதிராகச் சாலை இரண்டாகப் பிரிந்து ஒன்று புலிபோனுவுக்கும் மற்றொன்று உம்பலமேருவிற்கும் சென்றது. வேட்டையர்கள் அந்தப் புளியமரத்திலிருந்து பல புலிகளை வேட்டையாடியிருக்கிறார்கள் என்று ஆண்டர்சன் கேள்விப்பட்டார். அவரேகூட, சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் இந்தப் புளியமரத்திலிருந்து ஒரு சின்னச் சிறுத்தையை வேட்டையாடி இருக்கிறார். எனவே அந்தப் புளியமரத்திலிருந்து ஆட்கொல்லிப் புலியை சுட்டு வீழ்த்துவது என்ற முடிவுக்கு வந்தார். தரையிலிருந்து ஆட்கொல்லி புலியை வேட்டையாடுவதைவிட மரத்திலிருந்து வேட்டையாடுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதினார்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *