Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆட்கொல்லி விலங்கு #7 – நெற்றியைத் தாக்கிய தோட்டா

நெற்றியைத் தாக்கிய தோட்டா

ஆண்டர்சன் இரண்டு டிராக்கர்களையும் அழைத்து தான் சென்றமுறை புளியமரத்தில் எந்தக் கிளைகளில் இருந்து வேட்டையாடினாரோ அதே கிளைகளின் மேலே மச்சன் (மரக் கிளைகளின் மீது நடைமேடை அமைப்பது) அமைக்கச் சொன்னார். டிராக்கர்களும் ஆண்டர்சன் காரில் வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை மரக்கிளைகளின்மீது வைத்துக் கயிற்றால் இறுக்கமாகக் கட்டினர். கட்டில் வெளியே தெரியாதபடி இலைகளை வைத்து மறைத்தனர். முன் பக்கத்தில் உள்ள மறைவிலிருந்து புலிபோனு, உம்பலமேரு சாலைகளைப் பார்க்க ஏதுவாக வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதே போல் பின்பக்கத்திலும் நாகபட்லா சாலையைப் பார்ப்பதற்கும் ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். கயிற்றுக் கட்டிலை வைத்து மச்சன் அமைப்பது எளிது. கயிற்றுக் கட்டில் எடை குறைவாக இருக்கும், அதே சமயத்தில் உறுதியாகவும் இருக்கும். கயிற்றுக் கட்டிலைப் பயன்படுத்தும்போது சத்தம் எதுவும் ஏற்படாது. கயிற்றுக் கட்டிலை இலைகளை வைத்து மறைப்பதும் எளிது. தேவைப்படாதபோது மச்சனிலிருந்து கயிற்றுக் கட்டிலை எடுப்பதும் எளிது. கயிற்றுக் கட்டில் விலை மலிவான பொருள், மேலும் அதை எடுத்துச் செல்வதும் சுலபம்.

மச்சன் தயாரான பிறகு ஆண்டர்சன் இரு டிராக்கர்களையும் நாகபட்லாவிற்குக் கொண்டுபோய்விட்டார். மதிய உணவை முடித்து, சிறிய உறக்கத்துக்குப் பிறகு தனக்குத் தேவையான போர்வை, தண்ணீர் பாட்டில், டார்ச் லைட், சாண்ட்விச்சுகள், தேனீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு புலிபோனுவை நோக்கிப் புறப்பட்டார். தான் ஓட்டி வந்த காரை மறைவான ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொடி நடையாகப் புளியமரத்தை அடைந்தார்.

மாலை 6 மணிக்கு மச்சனில் அமர்ந்த ஆண்டர்சன் வழிகளின் மேல் விழி வைத்துக் காத்திருந்தார். இரவு 11 மணிக்கு, ஒரு சிறுத்தை ‘ரம்பம் கொண்டு அறுக்கும்’ சத்தத்தை வெளிப்படுத்தியவாறே உம்பலமேரு சாலையிலிருந்து வந்தது. ஆண்டர்சன் இருந்த புளியமரத்தின் அருகே வந்து, சாலையைக் கடந்து எதிர்பக்கத்தில் உள்ள காட்டிற்குள் மறைந்தது. அதன் பின்னர் ஒன்றும் நடக்கவில்லை. இப்படியே மறுநாளும் கழிந்தது. ஏமாற்றத்துடன் காட்டுப் பங்களா திரும்பினார் ஆண்டர்சன்.

மூன்றாவது நாள் ஆண்டர்சன் நாகபட்லா காட்டுப் பங்களாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காலை 10 மணி அளவில் எழுப்பப்பட்டார். அரைமணி நேரத்துக்கு முன்பாக கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவனைப் புலி அடித்துக் கொன்றது என்ற செய்தி அவருக்குச் சொல்லப்பட்டது.

ஆண்டர்சன் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பினார். செய்தியைக் கொண்டு வந்தவர்களில் மேய்ப்பாளனின் சகோதரனும் இருந்தான். வந்தவர்கள் ஆண்டர்சனை புலிபோனு சாலையில் முக்கால் மைலுக்குக் கூட்டிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து வலதுபுறத்தில் உள்ள கல்யாணி ஆற்றங்கரைக்குக் கூட்டிச் சென்றனர். அந்த இடத்தில்தான் மேய்ப்பாளனும் அவனது சகோதரனும் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஆற்றின் அருகிலிருந்த முட்புதரிலிருந்து புலி திடீரென்று பாய்ந்து மேய்ப்பாளனைத் தாக்கியது.

மேய்ப்பாளனது தோள்பட்டையைக் கவ்வியவாறே எந்த முட்புதர் வழியாக வந்ததோ, அதே வழியாகத் தூக்கிச் சென்றது. அவன் குரல்வளையைக் கவ்வாமல், தோள்பட்டையைக் கவ்வியதால் மேய்ப்பாளனால் தொடர்ந்து கத்த முடிந்திருக்கிறது. இவையனைத்தையும் பார்த்த அவன் சகோதரன் விரைவாக ஓடிச்சென்று கிராமத்தில் தெரிவித்தான், பின்னர் ஆண்டர்சனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

புலி சென்ற வழியே ஆண்டர்சனும் மற்றவர்களும் சென்றனர். வழியில் மேய்ப்பாளனின் தலைப்பாகை நாணல் செடிகளுக்கு நடுவே கிடந்தது. சிறிது தூரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையை அடைந்தனர். அந்த இடத்திலிருந்து புதிய ரத்தத் துளிகள் தென்பட்டன. மேய்ப்பாளனைத் தரதரவென இழுத்துச் சென்றதற்கு அடையாளமாக அவனது கால்கள் வறண்ட ஆற்று மணலில் தேய்ந்து கொண்டே சென்றிருப்பதைப் பார்த்தனர். மேய்ப்பாளன் புலியுடன் போராடியிருக்கிறான் அல்லது அவனது அலறல் புலியை சினமூட்டியிருக்க வேண்டும். எனவே புலி, தான் கவ்வியிருந்த தோள்பட்டையை விட்டுவிட்டு குரல்வளையைக் கவ்வியிருக்கவேண்டும் என்று ஆண்டர்சனுக்குப் புரிந்தது. ஆற்றைக் கடந்து அவனைக் காட்டிற்குள் புலி தூக்கிச் சென்றிருந்தது.

காட்டில் புதர்களுக்கு நடுவே ஆண்டர்சனும் மற்றவர்களும் கவனமாகச் சென்றனர். அடுத்து அவர்கள் முன்னர் திறந்த புல்வெளி காட்சியளித்தது. புலி தன் இரையுடன் அந்த வழியாகச் சென்றதற்கு அடையாளமாக புற்களெல்லாம் மடங்கியிருந்தன. புல்வெளியை அடுத்து ஒரு குன்று இருந்தது. ஆண்டர்சன் அந்தக் குன்றின் மீது ஏறிப் பார்த்தார். குன்றின் மறு பக்கம் மிகவும் சறுக்கலாக இருந்தது. குன்றின் கீழே சிறிய நீரோடை பயணித்துச் சிறிது தொலைவில் உள்ள கல்யாணி ஆற்றை அடைந்தது. அந்த நீரோடையின் பாதுகாப்பான பகுதியில்தான், புலி தான் வேட்டையாடிய இரையை உண்ணத் தகுதியான இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கும் என்று ஆண்டர்சன் கணித்தார்.

குன்றிலிருந்து புலி இருக்கும் நீரோடைக்கு நேராகச் செல்வது பயனளிக்காது என்று முடிவு செய்தார் ஆண்டர்சன். காரணம், தான் எவ்வளவுதான் கவனமாகச் சென்றாலும் முட்புதர்களினால் சத்தம் ஏற்பட்டு, தன்னை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று புலி உஷாராகிவிடும். ஓர் ஆட்கொல்லிப் புலி இம்மாதிரிச் சமயங்களில் அபாயகரமானதாக இருக்கும். புலி அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அதற்குச் சாதகமான, பாதுகாப்பான இடத்தில் இருந்தது.

அந்தச் சாதகமான நிலை ஆண்டர்சனுக்கு இல்லை. தன்னை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று புலிக்குத் தெரிந்தால், அது தன் இரையை விட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டே ஓடிவிடும் அல்லது இரையைத் தூக்கிக்கொண்டே சென்றுவிடும் அல்லது தன் இரையின் பக்கத்திலிருந்தபடியே வருவது வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சண்டைக்குத் தயாராகிவிடும் அல்லது தன்னைப் பின்தொடர்பவர்களைப் பதுங்கித் தாக்கிக் கொல்லும் அபாயமும் உண்டு.

எனவே ஆண்டர்சன் புலி இருந்த நீரோடைக்கு நேராகச் செல்லாமல், தனது வலது புறத்தில் குறுக்காகச் சென்றார். அவருடைய திட்டம் கால் மைல் தூரம் குறுக்காக நடந்து கீழே நீரோடையை நெருங்க வேண்டும். பின்னர் நீரோடையின் வழியே நடந்து கீழிருந்து மேலே செல்லவேண்டும். நீரோடையின் மென்மையான மணலில் நடந்து சென்றால் சத்தம் எதுவும் ஏற்படாது. இப்படி வருவதை புலி சற்றும் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

திட்டமிட்டபடி ஆண்டர்சன் ஆற்றுப் படுகையை அடைந்தார். துப்பாக்கியைச் சுடுவதற்குத் தயாராக தன் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஆற்று மணலில் கால்விரல்நுனியால் மெள்ள நடந்து முன்னேறினார். கூடுமானவரை முட்செடிகளையும், புதர்களையும் தவிர்த்து ஆற்றுப் படுகையின் நடுவே நடந்தார். சில இடங்களில் ஆற்றுப் படுகை மிகவும் குறுகலாக இருந்தது. ஆற்றின் இருமருங்கிலும் உள்ள ஒவ்வொரு முட்புதரையும் சோதனை செய்தவாறே எச்சரிக்கையுடன் கடந்தார். சிறிது நடந்த பிறகு, நின்று, ஏதேனும் செடியோ புதரோ அசையும் சத்தம் கேட்கிறதா என்று உன்னிப்பாகக் கவனித்தார்.

ஆனால் எந்தச் சப்தமும் கேட்கவில்லை. பறவைகளின் ஒலியோ, பூச்சிகளின் கீச்சொலியோ எதுவுமே கேட்கவில்லை. ஆண்டர்சனைச் சுற்றி நிசப்தம் நிலவியது. யாருமே இல்லாத அனாந்திரமான இடத்தில் இருக்கிறோமோ என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ஏதாவது சத்தம் ஏற்படாதா என்று நினைத்தவருக்கு அவர் எடுத்து வைக்கும் காலடி உராய்வுச் சத்தம் மட்டுமே மெலிதாகக் கேட்டது.

இப்படியாக ஆண்டர்சன் நூறு மீட்டர் கடந்திருப்பார். அப்பொழுது ஆற்றுப்படுகை சிறிது இடது புறமாக வளைந்தது. திரும்புவதற்கு முன்னர், அங்கே நின்று ஏதேனும் சத்தம் எழுகிறதா என்று உன்னிப்பாகக் கவனித்தார். நல்லவேளை, அடுத்த நொடியே சத்தமில்லாமல் எந்த அறிகுறியும் இல்லாமல் ஆட்கொல்லிப் புலி மேய்ப்பாளனின் உடலை முதுகில் சுமந்தபடியே தோன்றியது. ஆண்டர்சனுக்கும் புலிக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 60 அடி இருக்கும்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அதிர்ச்சி. புலிக்குத் தன்னை யாரோ தொடர்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. எனவே அது தன் இரையை உண்ணாமல் பாதுகாப்பான இடம் தேடி கீழ் நோக்கி வந்திருக்கிறது. ஆண்டர்சனும் புலியை இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்போம் என்று எதிர்பார்க்கவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தயாராயினர். புலி இரையைக் கீழே போட்டுவிட்டு, தன் தலையை முன்கால்களுக்குள் வைத்து, பின்னங்கால்களைச் சேர்த்து முன்னே கொண்டுவந்தது. அதனுடைய வால் விரைப்பாக நிமிர்ந்து இருந்தது. இது புலி பாய்வதற்கான அறிகுறி. அதே சமயம் ஆண்டர்சனின் துப்பாக்கியிலிருந்து தோட்டா புறப்பட்டது.

புறப்பட்ட தோட்டா புலியின் இரு கண்களுக்கும் மத்தியில் ஓர் அரை அங்குலத்திற்குக் கீழே சென்று நெற்றியில் தாக்கியது. குறி சற்றுத் தவறியதால் தோட்டா புலியின் மூளையைத் தாக்கி இறப்பை உடனே ஏற்படுத்தவில்லை. அடிபட்ட புலி சுதாரித்துக்கொண்டு கலங்கிய கர்ஜனையுடன் முன்னே வந்து தன் இரை மீது தடுமாறி ஆண்டர்சனைத் தாக்க முற்பட்டது.

ஆண்டர்சன் ஒரு பக்கமாகத் தாவியபடி துப்பாக்கியின் விசையைத் தொடர்ந்து அழுத்தி அனைத்துத் தோட்டாக்களையும் வெளியேற்றினார். தோட்டாக்கள் புலியைச் சரமாரியாகத் தாக்கி வீழ்த்தின. ஆட்கொல்லிப் புலி துடிதுடித்தபடியே ஆண்டர்சன் காலடியில் வீழ்ந்தது. புலியின் சிதிலமடைந்த மண்டையிலிருந்து ரத்தம் பீறிட்டது.

நடந்த சம்பவத்தின் எதிர்வினையாக ஆண்டர்சன் சட்டென்று தன்னுணர்வற்ற நிலைக்குச் சென்றார். சிறிது நேரம்தான். வலிமையான நபராக இருந்த காரணத்தினால் தன் சுயநினைவிற்கு உடனே திரும்பிவிட்டார். கல்யாணி ஆற்றின் அருகே தான் விட்டுவந்த நபர்களை நோக்கிச் சென்றார். அவர்களும் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கிய சத்ததைக் கேட்டு ஆட்கொல்லிப் புலி இறந்தது என்று முடிவுக்கு வந்தனர்.

ஆட்கொல்லிப் புலியைத் தோலுரிப்பதற்கு முன்னும், பின்னும் அதை நன்கு சோதனை செய்து பார்த்தார் ஆண்டர்சன். உடற்கூறு செய்து பார்த்தார். என்ன ஆச்சர்யம்! அந்தப் புலியிடம் உடல் ரீதியான எந்தக் குறைபாடுகளும் இல்லை. அது ஆட்கொல்லி புலியானதற்கு எந்தக் காரணமோ அல்லது முகாந்திரமோ இல்லை. அந்தப் புலியால் மற்ற விலங்குகளைச் சாதாரணமாக வேட்டையாடி வாழ்ந்திருக்கமுடியும்; தேவைப்பட்டால் கிராமத்தில் உள்ள கால்நடைகளை வேட்டையாடியும் உயிர் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இந்தப் புலி தன்னுடைய இயல்பான உணவை விட்டுவிட்டு, வழக்கத்திற்கு மாறாக மனித உணவில் நாட்டம் கொண்டு, கடைசியில் இப்படி குண்டடிப்பட்டு உயிர்விட்டது. சாமலா ஆட்கொல்லிப் புலி எங்கிருந்து வந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் இறந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

(தொடரும்)

பகிர:
nv-author-image

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *