Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

நரபலி பீதி

ஆரம்பத்தில், ‘தீயதின்’ நடவடிக்கைகளுக்கு அவ்வளவாகக் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆனால் போகப்போக அதனுடைய நடவடிக்கைகள் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. அதன் அடுத்த நடவடிக்கை பற்றிய பதிவு இவ்வாறு அமைகிறது.

மறுபடியும் மதிய வேளை. சுமார் 3 மணி இருக்கும். 7 மாட்டு வண்டிகள் வரிசைகட்டி காட்டுவழிச் சாலையில் சென்றன. இலக்கு ரெங்கம்பட்டு. ரெங்கம்பட்டை அடைய 7 மைல் தூரம் உள்ள நிலையில், புலிபோனு என்ற கிராமத்திற்கு அருகே நரசிம்ம செருவூ என்ற நீர்த்துளை உள்ளது. மாட்டு வண்டிக்காரர்கள் ஏழு பேரும் தங்கள் வண்டியிலிருந்து இறங்கி, நீர்த் துளையை நோக்கிப் பேசியபடியே நடந்து சென்றனர். நரசிம்ம செருவூவில் உள்ள தெள்ளிய நீரைக் கொண்டு தங்களது கை, கால், முகங்களை அலம்பிவிட்டு பக்கத்தில் இருந்த கருவேலம் மரத்தின் அடியில் அமர்ந்தபடியே பீடி புகைத்தனர்.

சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைவரும் தத்தம் மாட்டு வண்டியை நோக்கி வரிசையாகச் சென்றனர். மாட்டு வண்டிகளை அடைந்தது ஆறு பேர்தான். ’எங்க போனான் அவன்? ஏன் அவனை இன்னும் காணும்?’ என்று பேசியபடியே மற்றவர்கள் சாலையின் மருங்கில் அமர்ந்து ஏழாவது நபருக்காக காத்திருந்தபடியே பீடி புகைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘புட்டா ரெட்டிதான் கடைசியா வந்தான், அவன் பீடியைப் பற்ற வைக்க வழியில் நின்றான். ஆனா அவன ஏன் இன்னும் காணும்?’ என்று ஒரு மாட்டுக்காரன் வினாவியபடியே இருந்தான்.

வெகு நேரமாகியும் புட்டா ரெட்டி வரவில்லை. பகல் பொழுதாக இருந்தால் காத்திருக்கலாம். இன்னும் சில நாழிகையில் இருட்டத் தொடங்கிடும். இருளில் காட்டுப் பாதையில் பயணிப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்த ஆறு மாட்டுக்காரர்களும் புட்டா ரெட்டியைக் கூக்குரலிட்டு அழைத்தனர். ‘புட்டா ரெட்டி நீ எங்கிருக்க? நேரம் ஆயிடுச்சு, சீக்கிரம் வாப்பா’ என்று கத்தினர்.

ஆனால் புட்டா ரெட்டி வரவில்லை. நேரம் ஆக ஆக ஆறு பேருக்கும் பயம் தொற்றிக்கொண்டது. நீர்த் துளை அருகே சென்று புட்டா ரெட்டியைத் தேடப் பயந்தனர். புட்டா ரெட்டியைப் பேயோ, பிசாசோ தூக்கிச் சென்றிருக்கலாமோ? அல்லது பாம்பு தீண்டியிருக்குமோ? அல்லது புலியோ, சிறுத்தையோ, கரடியோ அவனைத் தூக்கிச் சென்றிருக்குமோ என்றெல்லாம் பலவாறு யோசித்தனர். இந்தச் சூழ்நிலையில் பெரும்பான்மையான மாட்டுக்காரர்கள் புட்டா ரெட்டியைக் கண்டிப்பாக பேயோ பிசாசோதான் தூக்கிச் சென்று இருக்கவேண்டும் என்று எண்ணினர்.

இனி மேலும் இங்கு இருந்தால் ஆபத்து என்று கருதிய ஆறு மாட்டுக்காரர்களும் வண்டியேறி மாடுகளை விரட்டியபடியே அந்த இடத்தை விட்டு விரைந்தனர். பாவம் புட்டா ரெட்டியின் வண்டியுடன் பூட்டப்பட்ட அம்மாடுகள் மட்டும் தேமே என்று அதே இடத்தில் நின்று கொண்டிருந்தன.

இரவு பனி பொழிய ஆரம்பித்துவிட்டது. மாடுகள் இரண்டும் புட்டா ரெட்டியை மறந்து, ஊர் செல்லும் பாதையை நினைவில் கொண்டு, இரவு முழுக்க நடந்து விடியற்காலை 4 மணிக்கு ரெங்கம்பட்டை அடைந்து, தங்களது மாட்டுக் கொட்டகையில் வண்டியுடன் தஞ்சம் புகுந்தன.

புட்டா ரெட்டியும், கோதண்ட ரெட்டியைப் போல் திடீரென மாயமாக மறைந்ததில் அனைவருக்கும் ஆச்சரியம். இவர்களைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேர் அடுத்த இரண்டு மாதங்களில் மாயமாக மறைந்தனர். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாமலா பள்ளத்தாக்கில் எதோ ஒரு ’தீயது’ இருக்கிறது, அது வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் யாரையாவது தூக்கிச் செல்கிறது என்று அங்கலாய்த்தார்கள்.

மூன்றாவதாக மாயமானவன் ஒரு வியாபாரி. பயறு வகைகளைப் பொதிகளாகக் கட்டி 12 கழுதைகள் மீது வைத்து ஏற்றிக்கொண்டு ரெங்கம்பட்டிலிருந்து 13 மைல் தொலைவில் வட மேற்கில் உள்ள சிறு கிராமத்திற்குப் பயணமானான். செல்லும் வழியில் புலிபோனுவில் தன் பயணத்தை நிறுத்தி மதிய உணவை உண்டான். தாகம் எடுக்கவே, தன்னிடம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கக் கயிறு இல்லாத காரணத்தினால், அங்கு மூங்கில் வெட்டுபவர்களிடம் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து தரச் சொல்லி குடித்தான். பிறகு பொதி மூட்டைகளைத் தன் கழுதைகள் மீது ஏற்றி முன்னே ஓட்டியபடி சென்றான்.

மறுநாள் அதே வழியில் எதிர் திசையில் வந்த பயணிகள், கழுதைகள் தங்கள் முதுகில் பொதிகளைச் சுமந்தவாறே அங்கும் இங்கும் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர். ஆனால் அவ்விடத்தில் கழுதைகளின் உரிமையாளனான வியாபாரியைக் காணவில்லை.

அடுத்து நான்காவதாக ஒருவனும் புலிபோனுவில் மாயமானான். இதில் விந்தை என்னவென்றால் அந்த நான்காவது நபர் வேறு யாரும் அல்ல, முன்னர் பயறு வியாபாரிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்த மூங்கில் வெட்டிதான்.

ஒப்பந்த அடிப்படையில், வனத்தில் ஒரு மாத காலமாகப் பலர் மூங்கில்களை வெட்டி வந்தனர். வியாபாரி காணாமல் போன சிறிது நாட்களுக்குப் பிறகு, மூங்கில் வெட்டுபவர்கள், மதிய வேளையில், ஒன்றாக அமர்ந்து உணவருந்திவிட்டு, புலிபோனுக் கிணற்றில் நீர் அருந்தினர். பின்னர் மூங்கில் வெட்டும் வேலையில் ஈடுபட்டனர். மாலை வேளை, வேலை முடிந்து, மூங்கில் வெட்டிகள் அனைவரும் சாலையோரம் அமைத்திருந்த தங்களது தாற்காலிகக் குடிசைக்குத் திரும்பினர். ஆனால் ஒரு மூங்கில் வெட்டி மட்டும் அவனது குடிசைக்குத் திரும்பவில்லை.

மறுநாள் மற்ற மூங்கில் வெட்டிகளெல்லாம் காணாமல் போன தங்களது கூட்டாளியைத் தேட ஆரம்பித்தனர். தங்களது கூட்டாளி முதல் நாள் மூங்கில் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். சற்றுத் தொலைவில் மூங்கில் வெட்டப் பயன்படுத்தப்படும் அரிவாள் அவர்களது கண்ணில் பட்டது. அதன் அருகில் தலைப்பாகையும் கிடந்தது. அது கீழே விழுந்த மாதிரி தெரியவில்லை. அப்படியே தலையிலிருந்து எடுத்து வைத்த மாதிரி இருந்தது.

மூங்கில் வெட்டிகள் சுற்றுவட்டாரப் பகுதியில் அங்குலம் அங்குலமாகச் சல்லடைப் போட்டு தேடினர். இலை, செடி, கொடி என எதையும் விட்டு வைக்கவில்லை. காணாமல் போனவனைப் பற்றி ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தனர். காணாமல் போனவன் ஏதேனும் விலங்கால் தாக்கப்பட்டு இருந்தால் தரையில் ரத்தக் கறைகள் தென்படும். அல்லது அந்த விலங்கின் கால் தடமாவது தரையில் பதிந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் தென்படவில்லை. புதர்களுக்கு நடுவில் யாரும் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் இல்லை. ஒரே விசித்திரமாகவும், மர்மமாகவும் இருந்தது. காணாமல் போனவன் தன் தலைப்பாகையை எடுத்து வைத்துவிட்டு மாயமானதாகவே தேடியவர்களுக்குத் தோன்றியது.

எந்தத் தடயமும் இல்லாமல் ஒருவனால் எப்படி மறைய முடியும்? இது நிச்சயம் அந்த ‘தீயதின்’ வேலைதான் என்று மூங்கில் வெட்டிகள் முடிவு செய்தனர். எப்படி மாட்டுக்காரனையும், பின்னர் வியாபாரியையும் தூக்கிச் சென்றதோ அதே போல் இப்பொழுது தங்களது கூட்டாளிகளில் ஒருவனை அந்தத் தீய சக்தி தூக்கிச் சென்றதாக நம்பினர். அந்தப் பகுதியிலேயே பெரிய மந்திரவாதியாக அறியப்பட்ட கோதண்ட ரெட்டியையே ‘தீயது’ தூக்கிச் சென்றிருக்கிறது என்றால் மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம் என்று தங்களுக்குள்ளே யோசிக்க ஆரம்பித்தார்கள்.

‘தீயது’ பற்றிய பயம் ரெங்கம்பட்டில் அனைவரையும் தொற்றிக் கொண்டது. தீயதைப்பற்றிய எச்சரிக்கை கலந்த பயம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காட்டுத் தீ போல் பரவியது. காவல்துறை உஷார்படுத்தப்பட்டது. வனத்துறையும்தான். சித்தூர் மாவட்ட ஆட்சியாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரெங்கம்பட்டு மக்களுக்கு எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. காவல் துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் இந்தத் தீயதை எதிர்த்துப் பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று மக்கள் அவநம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

அதனால் தாங்களாகவே இதற்கு ஒரு வழியைத் தீர்மானித்தனர். அதுதான் பலியிடுவது. ரத்த பலி கொடுத்து தீயதைச் சமாதானம் செய்வது. காவல் துறைக்கு இப்பொழுது புதிய சிக்கல் உருவானது. பொதுவாக ஊர் மக்கள் ஆடு, கோழி இவற்றைத்தான் பலியிடுவார்கள். ஆனால் வெகுவாக பீதி அடைந்திருக்கும் மக்கள் இம்முறை ஆடு, கோழிக்குப் பதிலாக குழந்தையை நரபலி கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று காவல் துறை யோசித்தது. காரணம் இம்மாதிரிச் சம்பவங்கள் முன்னர் நடந்திருக்கிறது.

எனவே ரங்கம்பட்டில் உள்ள சிறிய புறக்காவல் நிலையத்தின் தலைமை ஏட்டு, கிராமத்தில் இருந்த கிருஷ்ணப்ப ரெட்டியை அழைத்து அவனை எச்சரித்தார். கிருஷ்ணப்ப ரெட்டியை ஏன் எச்சரிக்கை செய்யவேண்டும்? அவன்தான் காணாமல் போன கோதண்ட ரெட்டியின் பதவிக்கு வந்த அடுத்த ஊர் மந்திரவாதி. அவனுக்கு பில்லி, சூனியம் எல்லாம் தெரியும். தலைமை ஏட்டு, கிருஷ்ணப்ப ரெட்டியிடம், ‘ஊர்ல ஏதாச்சும் குழந்தைங்க காணாம போச்சு, உன்ன லாக்கப்ல போட்டு பின்னாடி தூக்குல தொங்கவிட்ருவேன். ஜாக்கிரதை!’ என்று எச்சரித்தார்.

ஆனால் கிருஷ்ணப்ப ரெட்டி ஏட்டின் எச்சரிக்கைக்குப் பயந்தவனாகத் தெரியவில்லை. சில நாட்களில் ரெங்கம்பட்டிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள சந்திரகிரியில் துப்புரவு வேலை பார்த்து வந்த அரிஜனப் பெண்ணான அடிமாவின் ஒன்பது வயது மகன் ஆதிராஜ் என்கிற சிறுவனைக் காணவில்லை.

சந்திரகிரிதான் சித்தூர் ஜில்லாவின் தலைமையிடம். சந்திரகிரியில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வாரச் சந்தை நடைபெறும். சுற்று வட்டார கிராம மக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருள்களை வாங்க சந்திரகிரி சந்தைக்கு வருவது வழக்கம். சந்திரகிரி சந்தையில் கிருஷ்ண ரெட்டியைப் பலர் காலை வேளையில் பார்த்தார்கள். ஆதிராஜ் தன் அம்மாவிடம் தான் சந்தையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சந்தைக்குச் சென்றான். அதன் பிறகு அவனை யாரும் பார்க்கவில்லை.

தன் மகனைக் காணவில்லையே என்ற பரிதவித்த அடிமா, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை அன்று சந்திரகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். புகாரைப் பெற்றுக்கொண்ட துணை ஆய்வாளர் துரிதமாகச் செயல்பட்டார். ஒற்றைக் குதிரை பூட்டப்பட்ட ஜட்கா வண்டியில் புறப்பட்டார். வண்டிக்காரனிடம் வண்டியை ரெங்கம்பட்டை நோக்கி விரைவாக ஓட்டச் சொன்னார்.

ரெங்கம்பட்டில் கிருஷ்ணப்ப ரெட்டியின் குடிசையைச் சோதனை செய்தார். காணாமல் போன ஆதிராஜைப் பற்றி ஏதேனும் தடையம் கிடைக்கிறதா என்று பார்வையிட்டார். ரத்தம் படிந்த ஆடை அல்லது கத்தி, கல்லீரல், இதயம் போன்ற உடற் உறுப்புகள் ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தார். உடற்பாகங்கள் பலியீடு சடங்குகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. கிருஷ்ண ரெட்டியின் குடிசையில் எதுவும் கிடைக்கவில்லை.

ஏமாற்றம் அடைந்த துணை ஆய்வாளர் கிருஷ்ண ரெட்டியைக் கைது செய்து சந்திரகிரிக்கு அழைத்துச் சென்றார். கிருஷ்ண ரெட்டி காவல் நிலையத்தில் ஒருவாரம் வைக்கப்பட்டான். ஆனால் ஒருவரும் கிருஷ்ண ரெட்டி ஆதிராஜிடம் பேசியதாகச் சாட்சியம் தர முன்வரவில்லை. காரணம், கிருஷ்ண ரெட்டி ஒரு மந்திரவாதி என்று மக்களுக்குத் தெரியும். அவன் தனக்கெதிராகச் சாட்சியம் அளிப்பவர்களுக்கு சாபம் அளித்துவிடுவான் என்ற பயந்தார்கள்.

துணை ஆய்வாளருக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒன்பது நாட்களுக்குப் பிறகு கிருஷ்ண ரெட்டியை விடுதலை செய்தார். மேலும் கிருஷ்ண ரெட்டி தன் கிராமத்தை விட்டு காவல் துறையின் அனுமதியில்லாமல் வெளியேறக் கூடாது என்று கட்டளை போட்டார். அதற்கு அவன் ‘நரி தந்திரமானதுதான், ஆனால் அதனால் குள்ள நரியை விஞ்ச முடியுமா?’ என்று புதிர் போட்டுச் சென்றான்.

கிருஷ்ண ரெட்டி யாரை நரி என்றும், யாரைக் குள்ள நரி என்றும் குறிப்பிடுகிறான் என்று துணை ஆய்வாளருக்குக் குழப்பம். அந்தக் குழப்பம் மட்டுமல்ல, ஆதிராஜ் என்ன ஆனான் என்ற குழப்பமும் தீரவில்லை. அவன் நரபலி கொடுக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பயன் ஒன்றும் இல்லை. காரணம், அடுத்த ஒரு வாரத்திற்குள் ஐந்தாவது நபரும் காணாமல் போனார்!

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *