Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

ஆட்கொல்லி விலங்கு #11 – புலிச் சுவடு

புலிச் சுவடு

ஏதோ மாயாஜாலப் படம் போல், ‘அந்தத் ‘தீயது’ வண்டு மாதிரி இருந்து அசுரனா மாறிடும். அப்பாவிகளைப் பிடிச்சு அடையாளம் இல்லாம தின்னுடும்’ என்றெல்லாம் கிழவன் சொல்லச் சொல்ல சுற்றியிருந்த கிராமவாசிகளும் ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தனர்.

கிராமவாசிகளின் மூட நம்பிக்கையைக் கண்டு ஆண்டர்சனும், தேவும் செய்வது அறியாது நின்றனர். ஆண்டர்சனுக்குக் கிழவனின் கூற்று அபத்தமாகப் பட்டது. ‘இது எல்லாம் மூடத்தனம். பத்தாம் பசலித்தனம். உங்கள் வயசுக்கும், அறிவுக்கும் நீங்கள் இப்படி குழந்தை மாதிரி பேசவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தேகமே இல்லை இது ஓர் ஆட்கொல்லி மிருகமாக மாறிய ஒரு புலி அல்லது சிறுத்தையின் வேலையாகத்தான் இருக்கும்’ என்று ஆண்டர்சன் தெரிவித்தார்.

அந்தக் கிழவன் புன்னகையுடன், ‘ஆட் கொல்லி மிருகமா! துரை, அப்படிப்பட்ட மிருகத்தை நான் முன்னமே பார்த்திருக்கேன். நான் இளைஞனா இருந்தப்போ உம்பலமேரு சரிவுல அது என்னைத் தாக்க வந்துச்சு. அதிர்ஷ்டவசமா அப்போ எங்கிட்ட கோடாரி இருந்துச்சு. எடுத்து வீசுனேன், அது அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியின் நடு மண்டையில விழுந்துச்சு, புலி சுழன்று ஓடிப்போச்சு..இப்போ நான் உயிரோடு இந்தக் கதையை உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்’ என்று தன் பொக்கை வாயால் சிரித்தவாறே பழைய விஷயங்களை நினைவு கூர்ந்தான்.

மேலும், அந்தக் கிழவன் ஆண்டர்சனைப் பார்த்து, ‘ஆனா இது வேற விஷயம் துரை. கவனிங்க: உங்களுக்குப் புலிகளைப் பற்றியும் சிறுத்தைகளைப் பற்றியும் தெரியும். நீங்க ஒரு வேட்டைக்காரர். இந்தக் காட்டுக்கு முன்பே வந்திருக்கீங்க. அது எங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா, கால் தடம் பதிக்காத புலியையோ, சிறுத்தையையோ இதுவரைக்கும் பார்த்திருக்கீங்களா? எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாத மிருகத்தைப் பார்த்திருக்கீங்களா? அஞ்சு பேரைத் தூக்கிட்டுப் போன இடத்தில, தரையில ஒரு சொட்டு ரத்தத்தையும் காணும்.

‘இறந்தவங்களோட உடம்பை இழுத்துட்டுப் போன அடையாளேமே அங்க இல்ல. இந்தப் பகுதியில ஆட்கொல்லிப் புலி இருந்திருந்தா அதோட சுவட்டைக் காட்டுலையோ, நடைபாதையிலேயோ, நீரோடையின் கரையிலேயோ அல்லது கல்யாணி நதிக் கரையின் ஈர மணலிலேயோ நாங்க பார்த்திருக்க மாட்டோமா. அந்த மிருகம் ராத்திரியில இரை தேடும்போது எழுப்பும் உறுமல் சத்தத்தை கேட்டிருக்க மாட்டோமா.

‘இப்ப நான் சொன்ன விஷயங்கள் சிறுத்தைக்கும் பொருந்தும். ஆனா இங்க சில தீங்கு செய்யாத சிறுத்தைங்க இருக்குது. உங்களுக்குத் தெரியாத விஷயம் இல்லை துரை, சிறுத்தை வேடையாடினா அதால ரொம்பத் தூரம் தன் இரைய எடுத்துச் செல்ல முடியாது. அதுக்கு அவ்ளோ பலம் இல்லை.

‘மேலும் ஆட்கொல்லி மிருகமா இருந்தா அது சாய்ந்தர வேளையில தாக்குதல் நடத்தும். ஆனா காணாம போன அஞ்சு பேரும் நல்ல பகல் பொழுதுல மதிய வேளையில அதுவும் கொளுத்தற வெயிலுல மத்த வேட்டையாடும் மிருகமெல்லாம் ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கும்போது தூக்கிச் செல்லப்பட்டிருக்காங்க. இதுக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா? முடியாது துரை. ஆனா என்னால பதில் சொல்ல முடியும்.

‘ஒரு ஆவி, தன் இஷ்டம்போலத் தோன்றி மறையிற ஆவி, பல உருவங்கள் எடுக்கிற ஆவி, பூச்சியாவும், ராக்ஷசனாகவும் மாறக்கூடிய ஆவிதான் இது எல்லாத்தையும் செய்யுது. உங்க துப்பாக்கி எல்லாம் அதுகிட்ட பலிக்காது. ஏன்னா நீங்க தேடறது ரத்தமும் சதையும் உள்ள ஒரு புலியோ அல்லது சிறுத்தையோ இல்ல. உங்களுக்கு யோசனை சொல்லுறேன் கேட்டுக்குங்க. நீங்க பேசாம வீட்டுக்குப் போய்டுங்க. அத நீங்க ரொம்பத் தொந்தரவு செஞ்சீங்கன்னா, உங்கள்ள ஒருத்தர அல்லது ரெண்டு பேரையும் அது தூக்கிடும்’ என்று சிரித்துக்கொண்டே அந்தக் கிழவன் தன் பேச்சை முடித்தான்.

தன் பேச்சை முடித்துக் கொண்டதற்கு அடையாளமாக தன் வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலை பாக்குக் கலவையை முன்சீப் வீட்டின் மண் சுவற்றில் புளிச்சென்று துப்பினான். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கிழவன் கூறியதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் விதமாகக் கூட்டாகச் சேர்ந்து ஆமாம் போட்டனர். கிராம முன்சீப்பும், பட்டேலும் கிழவன் கூறியதை ஆமோதித்தனர்.

தேவும் ஆண்டர்சனும் மௌனமாக நாகபட்லாவிற்குத் திரும்பிச் சென்றனர். கிழவன் கூறியது ஆண்டர்சன் காதில் ரீங்காரம் இட்டபடி இருந்தது. அந்தக் கிழவன் கூறியதிலும் உண்மை இருந்தது. புலியோ சிறுத்தையோ எதுவானாலும் அது வந்து போனதற்கான கால் சுவடுகள் இல்லை, ரத்தக்கறைகள் காணப்படவில்லை, உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளங்களும் இல்லை.

என்ன மாதிரியான ஜந்துவாக இது இருக்க முடியும்? அந்த ஜந்து வந்ததும் யாருக்கும் தெரியவில்லை, போனதும் யாருக்கும் தெரியவில்லை. பகல் பொழுதில் கொளுத்தும் வெயிலில் வந்துவிட்டுப் போகிறது. எந்த ஆட்கொல்லி விலங்கும் இம்மாதிரி நடந்து கொண்டதாக ஆண்டர்சன் தன் அனுபவத்தில் கண்டதில்லை. ஆனால் அவருக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது, இந்தத் தாக்குதல்களுக்கு எல்லாம் காரணம் பேயோ, பிசாசோ, ஆவியோ அல்ல. இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் அறிவார்ந்த காரணம் இருக்கிறது; அது மட்டும் உறுதி.

ஐந்து நபர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் சரியாக மதிய வேளைக்குப் பிறகு காணாமல் போயிருக்கிறார்கள். இரண்டாவதாக, இவர்கள் தூக்கிச் செல்லப்படுவதைப் பார்த்த சாட்சிகள் யாருமில்லை. கோதண்ட ரெட்டி காணாமல் போனது குறித்த விவரங்கள் யூகத்தின் அடிப்படையிலானது. ஆனால் வண்டிக்காரன், வியாபாரி, மூங்கில் வெட்டி, உணவு எடுத்துச் சென்ற பெண் அனைவரும் தனியாக இருந்திருக்கிறார்கள்.

வியாபாரி விஷயத்தில் அவனுடன் கழுதைகள் இருந்தன. ஆனால் கழுதைகளால் வாய் பேச முடியாது. குறிப்பாகக் கழுதைகள் தாக்கப்படவில்லை, கொல்லப்படவும் இல்லை. தங்கள் முதலாளி தூக்கிச் செல்லப்படும்பொழுது கழுதைகள் கனைத்து எச்சரிக்கை எதுவும் எழுப்பவில்லை. மாறாக, மறுநாள் அனைத்துக் கழுதைகளும் ஒன்றோடு ஒன்று அருகில் நின்றுகொண்டு புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. வேட்டையாடிய மிருகத்தைக் கழுதைகள் பார்த்திருந்தால் அவை பயத்தால் வெவ்வேறு திசையில் தலை தெறிக்க ஓடியிருக்கும்.

ஆண்டரசனும், தேவும் பங்களாவிற்குச் சென்றனர். அவர்களுக்கான மதிய உணவைத் தயார் செய்தனர். தேவ், ஆண்டர்சனைப் பார்த்து ‘ஜாக்’, – தேவ் ஆண்டர்சனை ‘ஜாக்’ என்றுதான் 28 வருஷமாக அழைத்து வருகிறார் – ‘நீ இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டார்.

‘இது புலி அல்லது சிறுத்தையின் வேலையாகத்தான் இருக்கமுடியும். விவகாரம் சற்று விசித்திரமாக இருக்கிறது. இந்த வனத்தில் யானைகளோ காட்டு எருமைகளோ கிடையாது. வனத்தில் தூண்டுதல் இல்லாமல் தாக்க முற்படும் விலங்கு உண்டென்றால் அது கரடிதான். கரடி முட்டாள்தனமான விலங்கு. பலசாலியான விலங்கும் கிடையாது. அது தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாகத் தடயத்தை விட்டுச் சென்றிருக்கும். மேலும் கரடியால் தான் தாக்கிய நபர்களை தூக்கிச் சென்று இருக்க முடியாது. கொன்ற இடத்திலேயே கரடி உடல்களை விட்டுச் சென்று இருக்கும்’ என்று ஆண்டர்சன் பதிலளித்தார்.

மதிய உணவிற்குப் பிறகு, ஆண்டர்சன் தேவிடம், ‘இந்த மர்மம் என் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. இதில் இருக்கும் புதிருக்கான விடையை நான் கண்டுபிடித்தாக வேண்டும். லீலா (தேவின் மனைவி) உன்னை மேலும் இங்கு பத்து நாட்கள் தங்க சம்மதிப்பாளா?’ என்று கேட்டார்.

தேவுக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. ‘தீயதை’ பற்றி கேள்விப்பட்டதிலிருந்து தேவ் தன்னுடைய கக்குவான் இருமலைப் பற்றி மறந்தே போய்விட்டார். தேவின் கக்குவான் இருமல் வெகுவாகக் குறைந்துவிட்டது. இருவரும் தத்தம் மனைவிமார்களுக்குத் தாங்கள் வீடு திரும்ப இன்னும் சிறிது நாட்கள் ஆகும் என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர். கடிதத்தில் உண்மையான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

மதியம் மூன்று மணிக்கு ஆண்டர்சனும் தேவும் புலியின் தடயத்தைத் தேடிக் காட்டிற்குள் சென்றனர். தடயம் எதுவும் கிடைக்கவில்லை. காட்டை விட்டு வெளியே வந்து சாலை வழியாகவே நடந்து சென்று, நான்காவது மைல் கல்லின் அருகே மறுபடியும் காட்டிற்குள் நுழைந்தனர். அரை மைல் கடந்த பிறகு நரசிம்ம செருவூ நீர்த் துளையை அடைந்தனர். துளையின் சேறு நிறைந்த பகுதியைப் பார்வையிட்டனர். புலியின் சுவடு எதுவும் தென்படவில்லை. மாறாக அங்கு சிறுத்தை வந்து நீர் பருகியதின் அடையாளம் தெரிந்தது. பல்வேறு வகையான மான்களும் அங்கு வந்ததற்கான அடையாளம் இருந்தது. இருவரும் நரசிம்ம செருவூலிருந்து கல்யாணி நதிக் கரையோரமாகச் சென்றனர். அங்கு மற்றொரு சிறுத்தையின் சுவடு தெரிந்தது. அது வேறு ஒரு பெரிய சிறுத்தையின் சுவடு. சென்ற இரவு சத்தம் எழுப்பிய சிறுத்தையின் சுவடாக இருக்கலாம் என்று நினைத்தபடியே இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

ஆண்டர்சனுக்கும் தேவுக்கும் ஒரு விஷயம் புலனானது. அவர்கள் சென்ற காட்டுப் பகுதியில் புலி இருந்ததற்கான அடையாளம் இல்லை, மாறாக இரண்டு சிறுத்தைகள் இருப்பது தெரியவந்தது. இந்தச் சிறுத்தைகளில் ஒன்று ஆட்கொல்லியாக இருக்குமோ? என்று சந்தேகம் தோன்றியது. சிறுத்தைதான் ஆட்கொல்லி என்றால் ஐந்து பேரைத் தாக்கியபோது அது ஏதேனும் தடயத்தை விட்டுச் சென்றிருக்க வேண்டும். சிறுத்தை, தான் வேட்டையாடிய மனிதர்களைப் புலி போல் தூக்கிச் சென்றிருக்க முடியாது.

பொதுவாகச் சிறுத்தை, தான் வேட்டையாடிய இரையைப் புதருக்குள் இழுத்துச் சென்று உண்ணும். அல்லது வெகு சில சமயங்களில் வேட்டையாடிய இடத்திலேயே தன் இரையைச் சாப்பிடும். உடலை வேட்டையாடிய இடத்தில் சாப்பிட்டாலோ அல்லது இழுத்துச் சென்று சாப்பிட்டாலோ அந்தத் தடயங்களை எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும். ஆனால் ஆண்டர்சனுக்கும், தேவிற்கும் அம்மாதிரி எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அது அவர்களை மிகவும் குழப்பியது.

மறு நாள் காலை இருவரும் ஏழு மைல் தொலைவில் உள்ள புலிபோனுவிற்குச் சென்றனர். அங்கு மூங்கில் வெட்டுபவர்களின் முகாமிற்குச் சென்று விசாரித்தனர். மூங்கில் வெட்டிகளால் காணாமல் போனவர்களைப் பற்றி எந்த விளக்கத்தையும் தரமுடியவில்லை. அவர்களுடைய ஒரே கருத்தும் தீங்கிழைக்கும் எண்ணத்துடன் சுற்றித் திரியும் ஆவிதான் ஐந்து பேரையும் தூக்கிச் சென்றிருக்கிறது என்பதாகும்.

ரெங்கம்பட்டிலிருந்து புலிபோனுவிற்கு ஒரு பாதை சென்றது. புலிபோனுவில் அந்தப் பாதை இரண்டு நடை பாதைகளாகப் பிரிந்து ஆங்கில எழுத்து ‘Y’ யைப் போல் இருந்தது. அந்த ‘Y’ வடிவின் வட மேற்கு நடை பாதையில்தான் வியாபாரி தன் கழுதைகளை விட்டபடியே காணாமல் போனான். அந்த ‘Y’ வடிவின் வட கிழக்கு நடை பாதையில் பாறைகளால் சூழப்பட்ட குண்டல்பெண்டா சுனை இருந்தது.

அதற்கு அடுத்தாற் போல் உம்பல்மேரூ குளம் இருந்தது. இந்தக் குளம் ஒரு மலைச் சரிவின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. இந்தச் சரிவை ஒட்டிய பகுதியில்தான் மந்திரவாதி கோதண்ட ரெட்டி மாயமாகியிருந்தான். ஆண்டர்சனும், தேவும் ‘Y’ வடிவப் பாதைகளை நன்றாகத் தேடினர். இரண்டு நடை பாதைகள் பிரியும் இடத்திலும், ரெங்கம்பட்டிற்கு நேராகச் செல்லும் பாதையிலும் சிறுத்தைகள் மற்றும் கழுதைப் புலியின் சுவடுகள் தென்பட்டன. ஆனால் புலியின் சுவடுகள் தென்படவில்லை. உம்பலமேரூவிற்குச் செல்லும் பாதையில் அவர்கள் புலியின் சுவடைக் கண்டுபிடித்தனர். அது பல நாட்களுக்கு முன்னர் பதிந்திருந்த சுவடு. சுவடு அங்கு புலி இருப்பதை உறுதிப்படுத்தியது.

(தொடரும்)5

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *