Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

‘இந்தக் காட்டுப்பகுதியில் இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் காணாமல் போனதற்குக் கழுதைப் புலி காரணமாக இருக்குமா?’ என்று தேவ் ஆண்டர்சனிடம் கேட்டார்.

‘வாய்ப்பே இல்லை. கழுதைப் புலிகள் மனிதர்களைத் தாக்காது. அது ஒரு பயந்தாங்கொள்ளி மிருகம். அது அழுகிய இறைச்சியை உண்ணும் விலங்கு. புலிகளும் சிறுத்தைகளும் வேட்டையாடிச் சாப்பிட்டுவிட்டுச் சென்ற மீதியையோ அல்லது இறந்த மிருகங்களையோ உண்ணும் விலங்கு. கிராமத்தின் அருகில் இருக்கும் சுடுகாடுகளில் நுழைந்து அங்கு புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்ததாக வதந்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மத்தியப் பிரதேசத்தில் வனத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் சில கிராமங்களிலிருந்து குழந்தைகளைக் காட்டுப் புலிகள் தூக்கிச் சென்றதாகவும் செய்தித் தாள்களில் படித்திருக்கிறேன்’ என்றவர் மேலும் தொடர்ந்து சொன்னார்.

‘ஆனால் என் அனுபவத்தில் தென் இந்தியாவில் இம்மாதிரி எந்தக் கழுதைப் புலியும் நடந்து கொண்டதாகக் கேள்விப்பட்டதில்லை. தென் இந்தியாவில் இருக்கும் கழுதைப் புலிகள் அழுகிய இறைச்சி, கரடி அல்லது பறவைகளின் மலம், அனைத்துவிதமான கழிவுகள், எலிகள், பல்லிகள், கூட்டில் வாழும் பறவைகள் போன்றவற்றை உண்ணக்கூடியவை. ஏதோ சிலசமயங்களில் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளையும் வேட்டை ஆடியிருக்கின்றன’ என்றார் ஆண்டர்சன்.

ஆண்டர்சனும் தேவும் முழுவதுமாக சோர்வடைந்த நிலையில் நாகபட்லா காட்டுப் பங்களாவை வந்தடைந்தனர். அவர்கள் அன்று மட்டும் சுமார் 18 மைல்கள் காட்டில் சுற்றித் திரிந்திருக்கின்றனர். பங்களா திரும்பிய அவர்கள் அசதியின் காரணமாக அயர்ந்துத் தூங்கிவிட்டனர். அவர்களுக்குத் தூங்கியதுதான் தெரியும், மறுநாள் காலை அவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்தபோது சூரியன் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

மூன்று நாட்கள் கழித்து மூங்கில் வெட்டிகள் தீயதைப் பற்றிய ஓர் அரிய செய்தியை ஆண்டரசனுக்குத் தெரிவித்தனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் மூங்கில்களை வெட்டி முடித்த பிறகு, அடுத்ததாக ஒப்பந்ததாரர் அவர்களை வேறொரு தொகுதிக்கு மூங்கில்களை வெட்ட கூட்டிச் சென்றார். இந்தத் தொகுதி, ஆங்கில எழுத்து ‘Y’ போன்ற அமைப்பைக் கொண்ட சாலையின் வலது கிளையின் முடிவில் இருந்தது. புலிபோனுவிற்குச் செல்லும் முக்கியச் சாலையைத் தாண்டி அமைந்திருந்தது. கற்களால் சூழப்பட்ட உம்பலமேரூ நீர் நிலையிலிருந்து அரை மைல் தூரத்தில் இருந்தது. பெரிய செங்குத்தான சரிவின் அடியில் அமைந்திருந்தது. இந்த இடம் சாமலா பள்ளத்தாக்கின் வட கிழக்கு எல்லையை ஒட்டியிருந்தது. இந்தப் பகுதியில்தான் ‘தீயது’ தான் யார் என்று உலகிற்கு முதன் முதலாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அந்தப் பகுதி முழுதும் அடர்ந்த மூங்கில் காடு. வனத் துறையினர் அந்த மூங்கில் காட்டை பல தொகுதிகளாகப் பிரித்து வைத்திருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மூங்கில்கள் ஓரளவிற்கு உயர்ந்து வளர்ந்த பிறகு அதை வெட்டி எடுத்துச் செல்ல ஏலம் விடுவர். அதிகத் தொகை கொடுத்து ஏலம் எடுப்பவர்களுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்படும். இப்படி ஏலத்தில் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், மூங்கில் வெட்டிகளைத் தங்களுக்கு கீழ் அமர்த்தி மூங்கில்களை வெட்டி எடுத்துச் சென்று விற்பனை செய்வர். மூங்கில்களை வெட்டி எடுத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டால் ஒப்பந்ததாரருக்கு நஷ்டம் ஏற்படும். எனவே அவர்கள் ஒரு தொகுதியில் மூங்கில்களை வெட்டி முடித்த பிறகு உடனேயே அடுத்த தொகுதியில் மூங்கில்களை வெட்ட தங்கள் வேலை ஆட்களை கூட்டிச் செல்வர்.

மூங்கில் வெட்டிகள் உம்பலமேரூ பகுதிக்கு வந்த முதல் நாள் மதியம், ஒரு மூங்கில் வெட்டி தன் வேலைக்கு நடுவே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தற்செயலாக மேலே பார்த்தான். அங்கு பாறையின் அடுக்கிலிருந்து ஒரு புலியின் தலையும் முகமும் தெரிந்தது. புலியைப் பார்த்த மாத்திரத்திலேயே மூங்கில் வெட்டி ஓட்டம் பிடித்தான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட மற்ற மூங்கில் வெட்டிகள் தாங்கள் இனி ஓர் இரவு கூட வனத்தில் உள்ள தங்களது கூடாரத்தில் தங்க மாட்டோம் என்று ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தனர். மாறாக, தினமும் மாலை வேலை முடிந்ததும் 12 மைல் தொலைவில் உள்ள ரெங்கம்பட்டிற்குச் சென்றுவிட்டு அடுத்த நாள் காலை மூங்கில் வெட்ட தங்கள் தொகுதிக்கு வருவதாகத் தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரருக்கு மூங்கில் வெட்டிகள் ரெங்கம்பட்டிற்குச் செல்வதில் உடன்பாடு இல்லை. ரெங்கம்பட்டிலிருந்து விரைவாக நடந்து வந்தாலும் கூட மூங்கில் வெட்டிகள் வேலை செய்யும் இடத்தை அடைய சுமார் 2 ½ மணி நேரமாகும். அதேபோல் ரெங்கம்பட்டிற்குத் திரும்பி செல்ல 2 ½ மணி நேரமாகும். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 5 மணி நேரம் விரையமாகும், இதனால் மூங்கில் வெட்டுவதில் மிகவும் சுணக்கம் ஏற்படும் என்று ஒப்பந்ததாரர் கணக்கிட்டார். அவர் மூங்கில் வெட்டிகளிடம் குறைவாக மூங்கில் வெட்டினால் குறைவான கூலிதான் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால் மூங்கில் வெட்டிகளோ ஒன்று நாங்கள் ரெங்கம்பட்டிலிருந்து தினமும் வருவோம். அல்லது மொத்தமாக வேலையை விட்டு நின்று விடுவோம் என்று பதிலளித்தனர். மூங்கில் வெட்டிகள் வேலையை விட்டு நின்று விட்டால் ஒப்பந்ததாரருக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லை. மூங்கில் வெட்டிகள் தங்களுக்கு உயிர்தான் முக்கியம் என்றும், மூங்கில் வெட்டுவதோ அல்லது ஒப்பந்ததாரர் பணம் சம்பாதிப்பதோ முக்கியம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரர் மூங்கில் வெட்டிகளிடம் சமாதானமாகப் பேசினார். மூங்கில் வெட்டிகள் தங்கள் தினக் கூலியை சற்றுக் குறைத்துக்கொண்டால் அவர்கள் தினமும் ரெங்கம்பட்டிலிருந்து வர ஒப்புக்குக் கொண்டார். மூங்கில் வெட்டிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தங்கள் கூலியைக் குறைத்தால் வேலையை விட்டு விடுவதாக அவர்கள் மிரட்டினர்.

‘என்னடா இது சோதனை’ என்று தனக்குத்தானே நொந்து கொண்டார் ஒப்பந்ததாரர். ‘நேரம் சரியில்லை. அதனால்தான் இந்தத் தொழிலாளிங்க ரொம்ப கெடுபிடி பண்றாங்க. மூங்கில் வெட்டிகள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் சென்று விடுவார்கள். அப்புறம் மூங்கில் வெட்ட யாரும் இருக்க மாட்டார்கள். என்னதான் செய்வது? எல்லாத்துக்கும் காரணம் அந்தப் புலிதான். அதற்கு நல்ல சாவே வராது. அது துடிதுடித்துச் சாகணும், அதுவும் சீக்கிரமா சாகணும்’ என்றெல்லாம் சபித்தவாரே மூங்கில் வெட்டிகளின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

அன்று மாலையே மூங்கில் வெட்டிகளும், ஒப்பந்ததாரரும் ரெங்கம்பட்டிற்குத் திரும்பிச் சென்றனர். செல்லும் வழியில் நாகபட்லா வன பங்களாவைக் கடந்து சென்றனர். அப்போது அனைவரும் பங்களாவிற்குள் நுழைந்து ஆண்டர்சனையும் தேவையும் சந்தித்தனர். புலியைப் பார்த்த மூங்கில் வெட்டி அதன் விவரத்தை ஆண்டர்சனிடம் தெரிவித்தான். ஒப்பந்ததாரரும் தன் பங்கிற்கு தன்னுடைய மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்தார். அனைத்தையும் கேட்ட ஆண்டர்சனுக்கும் தேவுக்கும் மகிழ்ச்சி. இறுதியாக, அவர்களுடைய புதிருக்கான விடை கிடைத்துவிட்டது. தீயது என்று மக்களால் பேசப்பட்டு நம்பப்பட்டு வந்தது பேயோ, பிசாசோ அல்லது ஆவியோ இல்லை. அது ரத்தமும் சதையும் உள்ள ஒரு புலி. அது புலியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆண்டர்சன் ஏறக்குறைய தீர்மானித்திருந்தார்.

மறுநாளே அந்தப் புலி தாக்குதலில் ஈடுபட்டது. மூங்கில் வெட்டிகள் அவர்களது தொகுதியில் மூங்கில்களை வெட்டிக் கொண்டிருந்தனர். சென்ற தினத்தில் புலியைப் பார்த்த இடத்தை விட்டுவிட்டு மற்ற இடத்தில் மூங்கில்களை வெட்டி வந்தனர். மதிய உணவு வேளை வந்ததும், மேஸ்திரி வாயால் விசில் அடித்து மூங்கில் வெட்டிகள் அனைவரையும் உணவருந்த வரச் சொன்னார். மூங்கில் வெட்டிகளும் தத்தம் வேலைகளை விட்டு விட்டு புளிய மரத்தின் நிழலில் உணவருந்த வந்தனர். மதிய உணவு சாப்பிட ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. மூங்கில் வெட்டிகள் கறி சோறு சாப்பிட்டு விட்டு, அருகில் உம்பலமேரூவிலிருந்த வழிந்தோடிய நீர் ஓடையில் நீரைப் பருகிவிட்டு, ஆற அமரப் புகை பிடித்தனர். சிலர் வெற்றிலை பாக்கு போட்டு மென்று கொண்டிருந்தனர். வேறு சிலர் சிறிய உறக்கத்தை மேற்கொண்டனர்.

ஒரு மணி நேரம் முடிந்த பிறகு மேஸ்திரி மறுபடியும் விசில் அடித்தார். எல்லோரும் மூங்கில் வெட்டச் சென்றனர். அமைதியான காட்டில் அரிவாள்கள் மூங்கில்களை வெட்டும் சப்தமும், அதைத் தொடர்ந்து, வெட்டுண்ட மூங்கில்கள் கீழே விழும் சப்தமும் கேட்டது. சென்ற தினம் தங்களில் ஒருவன் புலியைப் பார்த்திருந்ததால், மூங்கில் வெட்டிகள் மிகவும் நடுக்கத்துடன் காணப்பட்டனர். சற்று எச்சரிக்கையுடனும் இருந்தனர். நேற்று அப்படி ஒருவன் எச்சரிக்கையாக இருந்ததால்தான் இன்று அவன் உயிருடன் இருக்கிறான்.

ஒரு மூங்கில் வெட்டி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வேலையில் ஈடுபட்டான். அப்படி அவன் கவனித்த சமயத்தில் மூங்கில் கொத்திலிருந்து வளர்ந்திருந்த இளம் மூங்கிலின் இலைகள் அசைவதைக் கண்டான். இலைகள் அசைந்த பின்புலத்தில் பழுப்பு (russet brown) கருப்பு வெள்ளை உருவம் இருந்தது. அந்த உருவத்திலிருந்து பச்சை மஞ்சள் நிறம் கொண்ட கண்கள் அவனைப் பசியோடு பார்த்துக் கொண்டிருந்தன.

புலி பாய்வதற்குத் தயாரான அதே வேளையில் உஷரான மூங்கில் வெட்டி தன் அரிவாளை உயர்த்தினான். தன்னுடைய இரை சுதாரித்து கொண்டதைத் தெரிந்து கொண்ட புலி தன்னுடைய பாய்ச்சலை நடுவானில் குறைத்துக் கொண்டு மூங்கில் வெட்டிக்குச் சற்று முன் குதித்தது. அதே வேளையில் மூங்கில் வெட்டியின் கையில் இருந்த அரிவாளும் புலியைப் பதம் பார்க்கக் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. அரிவாள் புலியை மயிரிழையில் தாக்கத் தவறியது.

புலி இந்த எதிர்த் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனுடைய உத்தியே தன் இரை கவனிக்காத நேரத்தில் தாக்குவதுதான். தரையில் குதித்த புலி சீற்றத்துடன் உறுமியது. மறுபடியும் பாய்ந்து தாக்குவதற்குத் தயாராவது போல் பாவ்லா காட்டிவிட்டு, பயந்து, திரும்பி வந்த வழியே மூங்கில்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கண் பார்வையிலிருந்து மறைந்தது.

மூங்கில் வெட்டி ‘அய்யோ! அய்யோ! புலி! புலி! காப்பாத்துங்க புலி’ என்று அலறியபடியே புளிய மரத்தை நோக்கி ஓடினான். ஏனைய திசையில் இருந்த மற்ற மூங்கில் வெட்டிகளும் அவனுடைய அழுகுரலைக் கேட்டுக் கூச்சலுடனும், குழப்பத்துடனும் அனைவரும் புளிய மரத்தை நோக்கி ஓடினர். அப்பொழுதுதான் சற்று உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒப்பந்ததாரர் மூங்கில் வெட்டிகளின் சந்தடியில் அதிர்ந்து எழுந்தார். மூங்கில் வெட்டிகள் மூங்கில்களுக்கு இடையே கண்மூடித்தனமாக ஓடி வந்து ஒப்பந்ததாரரை அடைந்தனர்.

இனிமேல் வேலையாவது மண்ணாவது என்று அனைத்து மூங்கில் வெட்டிகளும் அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தனர். இதில் அவர்களுக்குத் தலைமை தாங்கி முன்னால் ஓடியது ஒப்பந்ததாரர்தான்.

ஆண்டர்சனும் தேவும் புலிபோனுவிலிருந்து மூன்றாவது மைல் கல் அருகே வந்து கொண்டிருந்தனர். தங்களுடைய கிராமத்திற்கு வேகமாக நடையைக் கட்டிக்கொண்டிருந்த மூங்கில் வெட்டிகளை வழியில் பார்த்தனர். அவர்கள் எல்லோரும் பதற்றத்தில் இருந்ததால் நிதானத்திற்கு வருவதற்கு ஒரு நிமிடமானது. அதன் பிறகே புலியின் தாக்குதலுக்கு உள்ளான நபரை அவர்களால் சரியாக அடையாளம் காட்டமுடிந்தது. தாக்குதலுக்கு உள்ளானவன், புலி அதன் நான்கு கால்களில் நிற்கும் பொழுது ‘இவ்வளவு உயரமா இருந்துச்சு’ என்று தன் கையை மார்பளவிற்கு உயர்த்தி காட்டினான். இதன் மூலம் அது ஒரு பெரிய புலி என்று தெரியவந்தது!

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *