Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #14 – கண்ணெதிரே கழுதைப்புலி

ஆட்கொல்லி விலங்கு #14 – கண்ணெதிரே கழுதைப்புலி

கண்ணெதிரே கழுதைப்புலி

உம்பலமேரு குளம் அளவில் சிறியது. நீள் உருண்டை வடிவில் இருக்கும். சுமார் 60 அடிக்கு 30 அடி அளவே உடையது. குளத்தின் வட எல்லையில் பாறைகள் உள்ளன. அந்தப் பாறைகளைக் கடந்தால் நிலப்பகுதி; அதைத் தொடர்ந்து ஒரு செங்குத்தான சரிவு உள்ளது. அந்தச் செங்குத்தான சரிவு சுமார் 500 அடி உயரம் கொண்டது. வட திசையைத் தவிர மற்ற மூன்று திசைகளிலும் அடர்ந்த வனம் உள்ளது.

ஆண்டர்சன், தேவ், மூங்கில் வெட்டி மூவரும் குளத்தின் கிழக்குத் திசையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை இருட்டு சூழ்ந்திருந்தது. ஒன்றும் தெரியவில்லை. அவர்களுக்குப் பின்னால் இருந்த குளத்தில் பெரும் தவளைகள் கத்தியபடி இருந்தன. கொம்பு ஆந்தை (horned owl) உ…..உ…. என்று சப்தம் எழுப்பியபடியே இருந்தது.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் கல்பொறுக்கிப் பறவை (plover bird) – உப்புகொத்தி வகையைச் சார்ந்தது – திடீரென்று கீச்சிட்டது. கீச்சுச் சத்தத்தை கேட்டதும் தேவ்வும் மூங்கில் வெட்டியும் ஆண்டர்சனுடைய முதுகை உராசியபடியே நிமிர்ந்து எச்சரிக்கையானார்கள். கல்பொறுக்கிப் பறவையை பயமுறுத்திய விலங்கு அவர்களை நோக்கி வருவதற்கு 5 அல்லது 10 நிமிடங்களாவது ஆகும்.

அவர்கள் முன்பாக பரந்திருந்த வனத்தில் இலைகளை உரசியபடி ஏதோ ஒன்று ஓடியது. அது கீரியாகவோ வளைகரடியாகவோ (Ratel) இருக்கலாம். இலை உரசும் சப்தம் விட்டுவிட்டுக் கேட்டது. அந்தச் சிறிய பாலூட்டி விலங்கு தன் உணவைத் தேடிக்கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ள அவ்வப்போது நின்று கவனிக்கிறது. பின்னர் அது மண்ணைத் தோண்டியும், இலைகளை உரசியும் செல்கிறது. திடீரென்று அந்த விலங்கிடமிருந்து எந்தச் சப்தமும் சிறிது நேரத்திற்கு வரவில்லை. அந்த இடமே அமைதியாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் கடந்து விட்டது. அது வேறு ஏதேனும் விலங்கு வருவதைக் கவனித்துவிட்டதா என்று ஆண்டர்சன் நினைத்துக்கொண்டிருந்தபோது அவர் பின்னால் உட்கார்ந்திருந்த இருவரின் முழங்கை முட்டிகளும் அவர் முதுகை இடித்தன.

ஆண்டர்சன் மெதுவாகத் தன் தலையைத் திருப்பினார். முதலில் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. அதன் பின்னர் கருப்பு நிறத்தில் தெளிவில்லாத ஏதோ ஒரு நிழல் குளத்தின் மங்கலான விளிம்பில் நகர்ந்து அவர்களை நோக்கி வருவதுபோல் இருந்தது. அந்த நிழல் ஆலமரத்தின் நிழலுடன் கலந்து அவர்கள் கண்களிலிருந்து மறைந்தது. ஆனால் மறைவதற்கு முன்னர் அந்த நிழல் அவர்களை நோக்கித்தான் வந்திருக்கிறது. அங்கு திடீரென்று தோன்றிய அந்த நிழல் உருவம் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி கலக்கப்படுத்தியது. அந்த உருவம் புலி என்று ஆண்டர்சனுக்குத் தோன்றியது. வெளிச்சம் இல்லாத, ஒன்றும் செய்ய முடியாத அந்தச் சூழ்நிலையில் ஒரு புலி, அதுவும் ஆட்கொல்லிப் புலி அவர்கள் மூவரையும் அருகிலிருந்து தாக்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது ஆண்டர்சனுக்கு அவமானமான விஷயமாகத் தோன்றியது.

ஆண்டர்சன் தனது வலது கால் முட்டியைக் கொண்டு உடலைச் சமநிலைப்படுத்தியவாறே அப்படியே திரும்பினார். தன் துப்பாக்கியைத் தோள்பட்டையின் மீது வைத்து அதன் முகவாயை புலி எங்கு இருக்கும் என்று கணித்தாரோ அந்தத் திசையை நோக்கி வைத்தார். துப்பாக்கியில் மாட்டி வைத்திருந்த டார்ச் லைட்டின் பொத்தானை தன்னுடைய இடது கை கட்டைவிரலால் அமுத்தினார்.

டார்ச் லைட்டிலிருந்து பாய்ந்த வெளிச்சம் நேராக அந்தத் திகில் ஏற்படுத்திய உருவத்தின் மண்டையில் விழுந்தது. நீலப் பச்சை கண்கள் திடுக்கிட்டு ஆண்டர்சனை உற்றுப் பார்த்தது. அந்தக் கண்கள் டார்ச் லைட்டின் வெளிச்சத்தைப் பிரதிபலித்தது. அந்தப் பயந்தாங்கொள்ளிக் கண்கள், தந்திரமான கண்கள், சூழ்ச்சி செய்யும் கண்கள் – திடீரென்று புலப்பட்டு வியப்பிற்கு ஆளானதால் தன் அறிவிலித்தனத்தை வெளிப்படுத்தியதுபோல் தோன்றியது.

அந்த உருவம், ஒரு சாய்வான, உடலுக்குப் பொருத்தமே இல்லாத பெரிய தலையைக் கொண்டிருந்தது. அந்த உருவம் அவர்கள் மூவர் முன் நின்றது. நிமிர்ந்த காதுகள், கருமையான வாய், கழுத்திற்கு அடியில் ஒரு திட்டு ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தக் கழுதைப்புலி. அவர்களுக்கு எதிரே அந்தக் கழுதைப்புலி நின்றாலும், அதனுடைய சாம்பல் நிறமும் அதிலுள்ள கருப்புக் கோடுகளும் அவர்களுக்கு இரவில் புலப்படவில்லை.

ஆண்டர்சன் டார்ச் லைட்டை அடித்தபடியே இருந்தார். மூவரும் சப்தம் செய்யாமல் அப்படியே அசைவற்று இருந்தனர். அந்த இரவில் அந்த இடத்தில் மூவரையும் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான கழுதைப்புலி உறுமியது. திடீர் என்று எப்படிடா வெளிச்சம் வந்தது, யார் இந்த வெளிச்சத்திற்குக் காரணம் என்று ஒன்றும் புரியாமல் குழம்பியது. அங்கிருப்பது உகந்ததல்ல என்று உள்ளுணர்வு சொல்லியது போலும், கழுதைப்புலி தன் நடையைக் கட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.

அதனுடைய நீண்ட உறுதியான முன்னங்கால்களின் வேகத்திற்கு, அதனுடைய குட்டையான பலவீனமான பின்னங்கால்கள் ஈடு கொடுக்க முடியாமல் ஓடியது. கழுதைப்புலி தாவித் தாவி ஓடும் காட்சி அலங்கோலமாக இருந்தது. அப்படி ஓடும்பொழுது அதனுடைய பிடறியிலும், கழுத்திலும் இருந்த மயிர்கள் நிமிர்ந்தபடி இருந்தது. இதனால் கழுதைப்புலி ஓடும்பொழுது அதனுடைய உருவம் இரட்டிப்பாக வளர்ந்தது போன்று கண்களுக்கு தோன்றியது. கழுதைப்புலியின் முட்கள் போன்ற சாம்பல் நிற வால், இறகுகளால் செய்யப்பட்ட தூரிகை போல் காட்சியளித்தது.

கழுதைப்புலி புதருக்குள் ஊடே ஓடி மறைந்தாலும், அது அந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை. அது அந்த இடத்தையே பெரிய வட்டமாகச் சுற்றிச் சுற்றி வந்தது. வரும் வழியில் முட்செடிகளைச் சடசடவென உடைத்தபடியே வந்தது. சுற்றி வரும்போது பீதியை ஏற்படுத்தும் விதத்தில் பல வித அவலமான சப்தங்களை இடையிடையே எழுப்பியபடியே வந்தது.

காற்று வீசும் பக்கத்தில் வந்த பிறகு வாசனையை வைத்து கழுதைப்புலி அருகில் இருப்பது மனிதர்கள் என்று உணர்ந்தது. மனிதர்கள் அங்கு இருப்பதைப் பிடிக்காத கழுதைப்புலி தன்னுடைய எதிர்ப்பைக் குரலில் காட்டியது. இப்படிச் செய்வதால் ஆண்டர்சனும் மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டுப் போய் விடுவார்கள் என்று அது நினைத்தது. ஆனால் ஒருவரும் அவர்கள் இருந்த இடத்தை விட்டு விலகவில்லை. கழுதைப்புலிக்கும் இது சற்றும் பிடிக்கவில்லை. அது தன்னுடைய அதிருப்தியைச் சப்தத்தின் மூலம் மேலும் வெளிப்படுத்தியது. அவர்கள் இருந்த இடத்தை வட்டமாக சுற்றிச் சுற்றி வந்தது. எப்படியாவது தன்னுடைய சகிக்க முடியாத குரலால் மூவரையும் விரட்டி விடலாம் என்று அது நினைத்தது.

கழுதைப்புலியின் சப்தத்தை மூவராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. கழுதைப்புலியை அந்த இடத்தைவிட்டு விரட்ட முடியவில்லை என்றால் பங்களாவிற்குத் திரும்பிச் சென்று மீதி இரவை அங்கு நிம்மதியாகத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். மூவரும் கழுதைப்புலியை விரட்டும் வேலையில் இறங்கினர்.

’ஷூ! ஷூ!’ என்று ஆண்டர்சன் கழுதைப்புலியை விரட்டினார். தேவ்வும் அவர் பங்கிற்கு ’ஷூ! ஷூ!’ என்றார். மூங்கில் வெட்டியோ ‘சீ! போ பிசாசே’ என்று விரட்டினான். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. கழுதைப்புலி அந்த இடத்தை விட்டுப் போவானேன் என்று இருந்தது.

ஆண்டர்சன் இருட்டில் தடவித் தேடி ஒரு மண் கட்டியை எடுத்து கழுதைப்புலியின் மீது வீசினார். அதன் பிறகு அந்தக் கழுதைப்புலி மேலும் சப்தம் போட ஆரம்பித்தது. ‘சுட்டுத் தள்ளுங்கள் அந்த ……….’ என்று மூங்கில் வெட்டி ஆண்டர்சனைக் கேட்டுக்கொண்டார்.

கழுதைப்புலி சகிக்கமுடியாத சப்தத்தை ஏற்படுத்தி வந்தாலும் அதை சுடுவதற்கு ஆண்டர்சனுக்கு இஷ்டமில்லை. கழுதைப்புலி மறுபடியும் அவர்கள் கண்முன்னே தோன்றியது. அதனுடைய இருள் படிந்த நிழல் நட்சத்திரத்தில் ஒளிர்ந்த குளத்தில் பிரதிபலித்தது. அப்பொழுது குளத்திற்கு அந்தப் பக்கத்திலிருந்து ’ஆ-ஊ-ம்! ஆ-ஊ-ம்!’ என்று புலியின் உறுமல் சப்தம் கேட்டது.

அவ்வளவுதான், அந்தச் சப்தத்தை கேட்டதும் கழுதைப்புலி அப்படியே அசைவற்று நின்றது. உருமல் சப்தம் வந்த திசையை நோக்கி அதன் நிமிர்ந்த காதுகள் திரும்பின. அடுத்த நொடி கழுதைப்புலியைக் காணோம்.

கழுதைப்புலி அந்த இடத்தை விட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடியபோது இலைகளை உரசியபடியே சென்றதால் புதர்களில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வனமே மயான அமைதியில் மூழ்கியது. அந்த அதீத அமைதி ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.

புலியின் உறுமல் சப்தத்தை வைத்து அது அருகில்தான் இருக்கிறது என்றும், குளத்தைத் தாண்டி இருக்கிறது என்றும் ஆண்டர்சனால் யூகிக்க முடிந்தது. இப்பவும் அது அதே இடத்தில்தான் இருக்குமா? இருக்கலாம், அல்லது மூவர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குப் பின்னால் வந்திருக்கலாம். அல்லது மூவரின் பக்கவாட்டில் வந்திருக்கலாம். கழுதைப்புலி செய்ததுபோல், புலி தான் வருவதை விளம்பரம் செய்து கொள்ளாது.

கழுதைப்புலி தன்னுடைய சப்தத்தால் புலிக்கு எச்சரிக்கை செய்துவிட்டது. அதனால் புலிக்கு அருகில் ஏதோ சரியில்லை என்று தோன்றியிருக்கும். எனவே என்ன நடந்தது என்று சோதனை செய்ய ஆண்டர்சனும் மற்ற இருவரும் இருந்த இடத்திற்கு வரலாம். அல்லது கழுதைப்புலி செய்தது போல் சந்தடி சத்தமில்லாமல் அதன் இடத்தை விட்டுச் சென்றுமிருக்கலாம். இதற்கான விடை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும் என்ற ரீதியில் மூவரும் சத்தமில்லாமல் என்ன நடக்கிறது என்று கவனத்துடன் காத்திருந்தனர்.

நிமிடங்கள், நேரங்களாக ஆனது. சில்வண்டுப் பூச்சிகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டுமே கேட்டது. வனத்தில் வேறெந்தச் சப்தமும் கேட்கவில்லை. அந்தக் கழுதைப்புலி இப்பொழுது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஆண்டர்சனுக்குத் தோன்றியது. கழுத்தைப் புலி எழுப்பிய சப்தம் எரிச்சல் ஊட்டினாலும், அது ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தது. ஆனால் இந்த அமைதி ஒருவிதக் குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. மூன்று பேரும் படபடப்புடன் உடகார்ந்திருந்தனர்.

நள்ளிரவும் கடந்துவிட்டபடியால் குளிரத் தொடங்கிவிட்டது. புதர்களின் ஊடே இலைகள் உரசுதலுக்கு உள்ளான சப்தமும், காய்ந்த சருகுகள் மீது ஏதோ ஓடும் சப்தமும் மெலிதாகக் கேட்டது. எலிகளாக இருக்கலாம், அல்லது சிறிய விலங்குகளாக இருக்கலாம். அவை உணவைத் தேடி அல்லது நீர் அருந்த அந்தப் பக்கம் வந்திருக்கலாம் என்று ஆண்டர்சனுக்குத் தோன்றியது.

அவர்களது தலைக்கு மேலே நிழல் இறங்கியதுபோல் இருந்தது. இறக்கைகள் அடித்துக்கொள்ளும் சப்தம் பலமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து மறுபடியும் அமைதி. கொம்பு ஆந்தை மறுபடியும் சத்தம் போட ஆரம்பித்தது. அதற்குச் சிறு விலங்குகள் தண்ணீர் பருக எப்பொழுது நீர் நிலைக்கு வரும், வந்து சிறு வினாடிகள் எப்பொழுது தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் என்று தெரியும்.

கொம்பு ஆந்தை எப்பொழுது தாக்குதலில் ஈடுபட்டது என்றே தெரியவில்லை, ஆனால் அங்கு ஏற்பட்ட சப்தத்தை வைத்து அது தன் இறையைக் கவ்விக் கொண்டு சென்றுவிட்டது என்பதை உணர முடிந்தது. அதனுடைய தாக்குதலுக்கு ஆளானது ஒரு முயல். ஆந்தையின் கொடூரமான நகங்கள் முயலின் மிருதுவான முதுகைப் பதம்பார்த்தன. முயல் தன்னுடைய சோகமான அலறலை வெளிபடுத்தியது. அதன் பின்னர் மொத்தொலிகள் கேட்டன. ஆந்தையின் பலம் வாய்ந்த அலகு முயலின் மண்டை ஓட்டைத் தாக்கியது. அதன் பின்னர் முயலிடமிருந்து எந்த அலறலும் எழவில்லை, காரணம் முயல் இறந்து விட்டது!

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

2 thoughts on “ஆட்கொல்லி விலங்கு #14 – கண்ணெதிரே கழுதைப்புலி”

  1. புலிய எப்போது பிடிப்பாங்க சார், சீக்கிரம் பிடிச்சு சாவை குறைங்க….. பாவம்ல

  2. இன்னும் சில எபிசோடுகளில் …….. இறுதியில் ஒரு சுவாரஸ்யமான டிவிஸ்டு இருக்கிறது. என்ன மாதிரியான புலி என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அதற்கான ஆதாரங்கள் இதற்கு முன்னர் வந்த எபிசோடுகளில் இருக்கிறது. கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *