Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

காட்டுக்குள் காத்திருப்பு

அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நேரமாக ஆக பனிப்பொழிவு அதிகமானது. தலைக்கு மேல் வானம் தெரியவில்லை. காரணம் ஆலமரத்தின் கிளைகள் மறைத்திருந்தன. ஆனால் குளத்தின் மேல் வெட்டவெளியாக இருந்ததால் கொம்பு ஆந்தை சிறகைப் பலமாக அடித்தபடி குளத்தைக் கடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது. வானம் மேகங்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. ஆனால் வானில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓரிரு நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

இரவில் வானம் தெளிவாக இருந்ததால், பூமியிலிருந்த கொஞ்ச நஞ்ச வெப்பமும் வெளியேற ஏதுவாக இருந்தது. உஷ்ணம் வெளியேற வெளியேற அந்தப் பகுதி மேலும் குளிர்ச்சியாக ஆனது. அதன் காரணமாக அதிக அளவு பனிப் பொழிவு ஏற்பட்டது. பனிப் பொழிவினால் சுற்றியிருந்த மரங்களின் இலைகளெல்லாம் ஈரமாகி அந்த இலைகளிலிருந்து தண்ணீர் சொட்டியது. ஆண்டர்சன், தேவ் மற்றும் மூங்கில் வெட்டி மூவரும் ஆலமரத் தண்டுகளுக்கு நடுவே அமர்ந்திருந்தாலும், அவர்களது தலைகளுக்கு மேல் ஆலமரத்தின் கிளைகள் அடர்த்தியாக தொங்கிக்கொண்டு இருந்தாலும்கூட அவர்கள் குளிரின் தாக்கத்திலிருந்து ஓர் அளவிற்குத்தான் பாதுகாப்பாக இருந்தனர்.

மூவரிலும், மூங்கில் வெட்டிதான் மிகவும் குறைந்த அளவு ஆடையை உடுத்தியிருந்தான். குளிர் அதிகமாகவே அவனால் அதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் உடல், நடுங்கியவாறே தன்னிச்சையாக அருகில் இருந்த ஆண்டர்சனின் மீது உரசியது. அவன் பற்களெல்லாம் தந்தி அடித்தன. பனித் துளிகள் துப்பாக்கியின் குழலுக்குள் சென்றது. துப்பாக்கி ஈரம் ஆகிவிடாமல் இருப்பதற்காக ஆண்டர்சன் தன் துப்பாக்கியின் முகவாயை தலைகீழாக வைத்தார்.

குளிரினால் ஏற்பட்ட ஒரே ஆதாயம் கொசுக்கடிகள் குறைந்தன. குளிர் அதிகமாகவே எலி மற்றும் சிறு விலங்குகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த சிறு சிறு சப்தங்களும் நின்று போயின. பெரும் தவளைகள் கூட்டாக எழுப்பிக் கொண்டிருந்த ஒலிகளும் குறையத் தொடங்கின. அவ்வப்பொழுது அந்தத் தவளைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக மெல்லிய சப்தத்தை மட்டும் எழுப்பிக் கொண்டிருந்தன. அதிகாலை நேரம் மணி மூன்று. காட்டு உயிரினங்கள் எல்லாம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது, வட கிழக்குத் திசையில் செங்குத்தான சரிவிலிருந்து உருவான குளிர் காற்று கீழே பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்தது. பள்ளத்தாக்கில் நிலவிக்கொண்டிருந்த காற்றை விரட்டி விட்டு அதன் இடத்தை புதுக் காற்று நிரப்பியது. அந்தக் காற்று விசில் அடித்தவாறே இரைச்சலான சப்தத்துடன் புயலாக வீசியது. தாழ்வான உயரத்திலிருந்த மரக் கிளைகளை எல்லாம் உடைத்தது.

ஆண்டர்சன் ஆட்கொல்லிப் புலியைப்பற்றி மறந்தேவிட்டார். அவருக்குத் தூக்கம் கண்களைச் சொக்கியது. இருப்பினும் அதீதக் குளிரினால் அவரால் தூங்க முடியவில்லை.

தூரத்தில் காட்டுச் சேவல் கூவியதானது காலை மணி 4 என்பதை உணர்த்தியது. மூவரும் புலிக்காகக் கண் விழித்துக் காத்திருந்த வேலை முடிவிற்கு வந்தது. அதுவரை புலி வந்த பாடில்லை. காலை ஐந்து மணியளவில் false dawn (விடியலின் அஸ்தமனம்) தோன்றியது. விரைவாகச் சூரியன் உதிக்கப்போவதின் அடையாளம் அது. ஆனால் இந்த false dawn-க்கும் விடியலுக்கும் நடுவே ஒரு சிறிய அஸ்தமனம் ஏற்படும். அப்படிப்பட்ட அந்த அஸ்தமனத்தில், தீவிரமான இருள், வனத்தைச் சில நிமிடங்களுக்குச் சூழ்ந்தது. அதன் பின்னர், கிழக்கிலிருந்த செங்குத்தான சரிவின் விளிம்புகள் கண்களுக்குத் தெரிந்தன, இது இரவு முடிந்து கொண்டிருப்பதைப் புலப்படுத்தியது.

கீழே பள்ளத்தாக்கில் இன்னும் இருள் சூழ்ந்திருந்தது. பள்ளத்தாக்கில் ஆங்காங்கே வெளிப்பட்டப் பாறைகள் வெளிர் இளஞ்சிவப்பும், மங்கலான ஊதா நிறமும் கலந்த ஒரு நிறத்தில் காட்சியளித்தது. அதன் பின்னனியில் நீல நிறம் படர்ந்திருந்தது. மலைச் சரிவில் இருந்த மரங்களிலிருந்து எழுந்த மூடுபனி சிறு மயிர் கற்றைகளைப்போல் காட்சியளித்தது. இவை அனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும்போது செவ்விந்தியர்கள் கூட்டாகக் கொள்ளையடிக்கச் செல்வதுபோல் காட்சி இருந்தது.

சூரிய உதயம் வரப் போவதை அறிந்த லங்கூர் குரங்கள் சந்தோஷத்தின் வெளிப்பாடாக ஊ!ஊ!ஊ என்று கத்தியது. லங்கூர் குரங்கின் அலப்பல் சப்தம் பள்ளத்தாக்கு முழுதும் எதிரொலித்தது. ஒரு லங்கூர் குரங்கைத் தொடர்ந்து மற்ற லங்கூர் குரங்குகளும் அடுத்தடுத்து ஊ!ஊ!ஊ! என்று சப்தம் எழுப்பின. இந்தச் சப்தங்கள் பள்ளத்தாக்கில் இருந்த சிறு பாறைகள் தொட்டு பெரிய குன்றுகள் வரை எதிரொலித்தன. இந்தச் சப்தங்கள் எல்லாம் பள்ளத்தாக்கில் பரவி இருந்த கானகம் முழுதும் எதிரொலியின் எதிரொலியாகக் கேட்டு பின்னர் எங்கோ தொலைவில் மறைந்து போனது.

சூரியன் மேலே எழும்பி அதனுடைய ஒளிக் கீற்றுகள் கிழக்கில் இருந்த செங்குத்தான சரிவில் உள்ள கற்கள் மற்றும் பாறைகளின் விளிம்பில் பட்டுப் பிரதிபலிக்க இன்னும் சில நாழிகைகள் இருந்தன. ஆனால் ஆண்டர்சன், தேவ், மூங்கில் வெட்டி இவர்கள் மூவர் இருந்த இடம் நன்கு வெளிச்சமாக இருந்தது. மூவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்ப ஆயத்தமாகினர். இரவு முழுக்க உட்கார்ந்தே இருந்ததன் விளைவு அவர்களால் சட்டென்று எழுந்து நிற்க முடியவில்லை. மூவரும் கால்களை மடக்கி நீட்டி அழுத்தி எழுந்தனர். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்த காரணத்தால் கொட்டாவி விட்டு சோம்பல் முறித்து மூவரும் நாகப்பட்லா பங்களாவிற்கு நடையைக் கட்டினர். மிகவும் அலுப்பாக இருந்த காரணத்தினால் ஓருவரும் பேசிக் கொள்ளவில்லை. மூவரும் அமைதியாக 12 மைல்கள் நடந்து பங்களாவின் வாயிலை அடைந்தனர்.

அங்கு இவர்கள் மூவரையும் மற்ற மூங்கில் வெட்டிகள் வரவேற்றனர். அவர்களில் ஒருவன் ’என்ன ஆச்சு?’ என்று கேட்டான். ‘புலி வந்துச்சா?’ என்றான் மற்றொருவன். ‘அது உங்களை தாக்குச்சா?’ என்றான் இன்னொருவன். ‘புலியாவது…..’ என்று ஆண்டர்சன் சினத்தை வெளிப்படுத்தினார். பின்னர் தன் கோபத்தைத் தளர்த்திக்கொண்டு தன்னுடன் வந்த மூங்கில் வெட்டியைப் பார்த்து மற்ற மூங்கில் வெட்டிகளிடம் நேற்று இரவு என்ன நடந்தது என்பதை விளக்கச் சொன்னார். மூங்கில் வெட்டிகள் பேசிக் கொண்டிருக்கும்போது ஆண்டர்சன் தேநீர் தயாரிக்கத் தண்ணீரைச் சூடு செய்ய கொதிகெண்டியை (kettle) அடுப்பில் வைத்தார். அனைவருக்கும் டீ வழங்கினார். மூங்கில் வெட்டிகள் தங்களுக்குள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். தேவ்வும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஆண்டர்சன் மெத்தையில் விழுந்து அப்படியே உறங்கிப்போனார்.

அன்றைய நாள் முழுதும் ஆண்டர்சனும், தேவ்வும் நன்கு உறங்கினார்கள். அவர்கள் கண் விழித்த பொழுது மாலை மணி 4. பின்னர் அவர்கள் மதிய உணவையும் அதைத் தொடர்ந்து தேநீரையும் அருந்தினர். பின்னர் அந்த புலியை எப்படி தீர்த்து கட்டலாம் என்று யோசித்தனர்.

புலியைப் பற்றிய தங்களுக்குத் தெரிந்தத் தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டினர். அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் புலி மற்ற ஆட்கொல்லிப் புலிகளைப்போல் சாதாரணப் பழக்க வழக்கங்களைக் கொண்ட புலி அல்ல. முதலாவதாக, அந்தப் புலி இதுவரை மதிய வேளையில்தான் மனிதர்களைக் கொன்று இருக்கிறது. அதுவும் நன்கு வெயில் அடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் வேட்டையாடியிருக்கிறது. இரண்டாவதாக, புலி தன்னுடைய தாக்குதல்கள் அனைத்தையும் உம்பலமேரு குளம் மற்றும் உயர்ந்த செங்குத்தான சரிவு ஆகிய இந்த இரண்டு இடங்களிலிருந்து சில மைல் தூரத்தில்தான் நடத்தி இருக்கிறது. ஆட்கொல்லிப் புலி அந்தப் பகுதிகளில்தான் வசிக்கிறது. சாதாரணமாக ஆட்கொல்லிப் புலி பெரிய நிலப்பரப்பை தன்னகத்தே வைத்திருக்கும். அது தன்னுடைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தெளிவான ஒரு பாதையில் சுற்றி வரும். சில சமயங்களில், புலி சுற்றி வரும் பாதையானது ஒரு நூறு மைல்களைக்கூட கடந்து இருக்கும். மூன்றாவதாக அந்தப் புலி, தான் தாக்கிய நபர்கள் அனைவரையும் மர்மமாகத் தூக்கிச் சென்றிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவரின் உடல் கூட இதுவரைக் கிடைக்கவில்லை. நான்காவதாக அது கூச்சமுடைய புலியாக இருக்கிறது, பயந்தாங்கொள்ளிப் புலியாகவும் இருக்கிறது. புலி மூங்கில் வெட்டியைத் தாக்க முனைந்தபோது அவன் தன் கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து எதிர் தாக்குதல் புரிந்தான். எதிர் தாக்குதலைப் பார்த்த புலி ஓடியே விட்டது. மேலும் சென்ற இரவு கழுதைப் புலி அந்த இடத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று கூச்சலிட்டவாறே எச்சரிக்கை செய்தது. அப்பொழுது புலி அந்த இடத்திற்கு வந்து இவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கலாம், ஆனால் மாறாக அது பயந்துப் பதுங்கிவிட்டது. ஐந்தாவதாக ஏனைய புலிகள்போல் இந்தப் புலி காட்டில் தன்னுடைய எல்லைகளைப் பாதுகாக்கச் சுற்றி வருவது இல்லை. இந்த ஆட்கொல்லிப் புலியின் கால் சுவடுகளைக் காட்டுப் பாதைகளிலோ அல்லது ஆற்றுப் படுகையிலோ பார்க்கமுடியவில்லை. எவ்வளவு தேடியும் புலியின் சுவடுகள் தென்படவே இல்லை. ஆறாவதாக இந்தப் புலி சுற்று வட்டாரப் பகுதிகளில் இதுவரை ஆடு மாடுகளை தாக்கிக் கொன்றதாக எந்தத் தகவலும் இல்லை. இந்தத் தகவல்களை எல்லாம் வைத்து ஆண்டர்சனாலும், தேவ்வாலும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

இருவரும் உம்பலமேரு குளத்தருகே இரண்டு மாடுகளைத் தூண்டிலாகக் கட்ட முடிவு செய்தனர். தூண்டில் மாடுகளை ஆட்கொல்லிப் புலி தாக்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் இருவரும் அன்று இரவே மாடுகளை வாங்க ரெங்கம்பட்டு கிராமத்திற்குச் சென்றனர். கிராமவாசிகளும் அவர்களுக்கு இந்த விவகாரத்தில் ஒத்துழைத்தனர். ஆண்டர்சனும், தேவ்வும் ஆளுக்கு ஒரு நல்ல வளர்ந்த காளை மாட்டை நாற்பது ரூபாய்க்கு வாங்கினர். ஒரு மாடு பழுப்பு நிறத்திலும், மற்றொரு மாடு சாம்பல் நிறத்திலும் இருந்தது. வெள்ளை மற்றும் கருப்பு நிற மாடுகளை வாங்கவில்லை, காரணம் புலிகள் இந்த இரண்டு நிற மாடுகளையும் அணுகாது. குறிப்பாக வெள்ளை நிற மாடுகளை விரும்பவே விரும்பாது. ஆண்டர்சனும், தேவ்வும் தாங்கள் வாங்கிய மாடுகளை பங்களாவிற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு கார் நிறுத்தி வைத்திருந்த கொட்டிலில், காரை எடுத்து வெளியே விட்டுவிட்டு, இரண்டு மாடுகளையும் கட்டினர்.

மறுநாள் காலை இருவரும் இரண்டு மூங்கில் வெட்டிகளைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு மாட்டையும் கூட்டிக் கொண்டு உம்பலமேருவிற்குச் சென்றனர். ஒரு மாட்டை குளத்தின் அருகே இருந்த ஆலமரத்தில் கட்டினர். மற்றொரு மாட்டை இரண்டு மைல் தொலைவில் புலிபோனுவிற்குச் செல்லும் வழியில் ஒரு மரத்தைத் தேர்வு செய்து அதில் கட்டினர். இப்படி மரங்களாகப் பார்த்து கட்டியதின் காரணம், புலி மாடுகளை அடித்துக் கொன்றுவிட்ட பிறகு, தன் இரையைச் சாப்பிட அது அங்கு திரும்பி வரும், அப்பொழுது அதை மரத்திலிருந்தபடியே இலகுவாகச் சுட்டு வீழ்த்த முடியும்.

இடங்களைத் தேர்வு செய்து, மரங்களைத் தேர்வு செய்து, மாடுகளைக் கட்டி முடிப்பதற்குள் மதிய நேரமாகிவிட்டது. இதன் பிறகும் அவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு நால்வருமாக நாகப்பட்லா பங்களாவிற்குத் திரும்புவதற்குள் மாலை ஆகிவிட்டது.

அடுத்த நாள் காலை இருவரும் காரில் புலிபோனுவிற்குச் சென்றனர். சுமார் 7 மைல்கள் மட்டுமே காரில் சென்றனர். பின்னர் கார் போக முடியாத காரணத்தினால் இருவரும் பொடி நடையாக மாடுகள் கட்டப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்றனர். இரு மாடுகளும் எந்தச் சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இருந்தன. இரண்டு மாடுகளையும் அவிழ்த்து அவைகளுக்குத் தண்ணீர் காட்டி, பின்னர் மீண்டும் அவற்றைத் தத்தம் மரங்களில் கட்டி, போதுமானத் தீவனத்தை வைத்து விட்டுப் பங்களா திரும்பினர். அவர்களால் அப்பொழுது செய்ய முடிந்தது அவ்வளவுதான்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *