ஆண்டர்சனின் நண்பர் தேவ்வுக்கு திடீரென்று கோயிலுக்குச் செல்லும் ஆசை எழுந்தது. அவர்கள் தங்கியிருந்த நாகபட்லாவிலிருந்து திருப்பதி நகர் சுமார் 15 மைல் தொலைவில் இருப்பதாகவும், அங்கு இருக்கும் கோயில்களைச் சென்று தரிசிக்க வேண்டும் என்றும் தேவ் தெரிவித்தார். எனவே இருவரும் திருப்பதிக்குப் பயணமாகினர்.
திருப்பதி இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்று. வருடா வருடம் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருப்பதிக்குச் சென்று கோவிந்த கடவுளைத் தரிசிப்பதில் உள்ளம் மகிழ்கிறார்கள். அங்கே கோவிந்தனின் நாமத்தை பக்தர்கள் உரக்கக் கோஷமிட்டுக் கொண்டிருப்பார்கள். திருப்பதிக்கு வரும் அனைத்து ஆண்களும் பெண்களும் தாங்கள் அங்கு சென்றதின் அடையாளமாகத் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொள்வார்கள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவதால் அங்கு பக்தர்களின் காணிக்கை முடி பிரமாண்ட அளவில் சேருகிறது.
திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு ஆண்டர்சனும், தேவ்வும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் ரயில் நிலையத்தில் உள்ள சிற்றுண்டி அறையில் தேநீர் அருந்தினர். அந்தச் சமயத்தில் எந்த ரயிலும் அந்தப் பக்கமாக கடந்து போகாமல் இருந்ததால் சிற்றுண்டி அறையின் மேலாளர் ஓய்வாக இருந்தார். ஆண்டர்சனையும், தேவ்வையும் பார்த்துவிட்டு அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்தார். இருவரிடமும் பேச்சுக் கொடுத்தார். இந்தியர்களுக்கே உரித்தான ஆர்வ மிகுதியுடன் இருவரைப் பற்றியும் விசாரிக்கலானார். ‘நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?’ என்று பல கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டார்.
தேவ்வும் மேலாளருக்கு தங்களைப் பற்றிக் கூறினார். அந்தச் சிற்றுண்டி விடுதியின் மேலாளருக்கு வேட்டையாடுவதில் பரிச்சயம் இருந்ததால் தேவ் கூறிய விவரங்களை வைத்து அவர்கள் தேடும் ஆட்கொல்லிப் புலி ஒரு அசாதாரணப் புலியாக இருப்பதாகவும், மற்ற ஆட்கொல்லிப் புலிகளைப் போல் அது நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதற்குப் பிறகு மேலாளர் வெளிப்படுத்திய விஷயம்தான் ஆண்டர்சனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘சில மாதங்களுக்கு முன்னர் திருப்பதி நகருக்கு வந்த சர்க்கஸ் கம்பெனியிலிருந்து தப்பி ஓடிய புலியாக அது இருக்குமோ?’ என்று யோசித்தவாறே மேலாளர் அவர்களிடம் தெரிவித்தார்.
ஆண்டர்சன் மேலாளரிடம், ‘சர்க்கஸா? என்ன சர்க்கஸ்? எவ்வளவு நாட்களுக்கு முன்னர் நடந்தது? எந்த இடத்தில் அந்தப் புலி தப்பிச் சென்றது? இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதா? அந்தப் புலி மீண்டும் பிடிபட்டதா?’ என்று மூச்சுவிடாமல் பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். மேலாளர் ஒரு முழுமையான தெளிவான பதிலைத் தெரிவிக்காமல், துண்டுத் துண்டாக பதிலளித்தார். மேலாளர் கூறியதை வைத்து ஆண்டர்சனும், தேவ்வும் சேகரித்த விவரங்கள் பின்வருமாறு:
சில நாட்களுக்கு முன்பு ஊர் ஊராகச் சென்று சர்க்கஸ் நடத்தும் ஒரு சிறிய சர்க்கஸ் கம்பெனி அங்கு திருப்பதிக்கு வந்தது. திருப்பதியின் அருகில் ஒரு மைல் தொலைவில் அந்த சர்க்கஸ் கம்பெனி தன்னுடைய கூடாரத்தை அமைத்திருந்தது. அந்த சர்க்கஸ் கம்பெனியில் பல மிருகங்கள் இருந்தன, அதில் பெண் புலியும் ஒன்று. அந்த சர்க்கஸ் கம்பெனியின் உரிமையாளர் சிற்றுண்டி அறையின் மேலாளரிடம் நண்பராகிவிட்டார். இருவரும் மது விரும்பிகள். மது விலக்கு அமலில் இருந்த மாவட்டங்களில் மதுவைத் தேடி அலையும் மதுப் பிரியர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் தேவை இருக்கும். அந்தத் தேவை வெகு விரைவில் நட்பாவது இயல்பு. அம்மாதிரிதான் சர்க்கஸ் உரிமையாளரும், ரயில்வே சிற்றுண்டி அறையின் மேலாளரும் நண்பர்களானர்.
ஒருநாள் மாலை வேளையில் மேலாளரும் உரிமையாளரும் மது அருந்திக்கொண்டு இருந்தபோது, சர்க்கஸ் உரிமையாளர் மனம் திறந்து பேசினார். நம்பிக்கையின் அடிப்படையில் அவர் ஒரு விஷயத்தை மேலாளரிடம் பகிர்ந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சர்க்கஸில் இருந்து புலியொன்று தப்பி ஓடிவிட்டதாக அவர் தெரிவித்தார். புலியைக் கவனித்து வந்த நபர் முட்டாள்தனமாகப் புலியின் கூண்டை சரியாக மூடவில்லை என்பதால் புலி தன் கூண்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டது என்றார்.
சர்க்கஸ் உரிமையாளர் இந்த விஷயத்தை போலீசில் சொல்ல பயந்தார். அதனால் புலி தப்பி ஓடிய விவகாரம் போலீசுக்குத் தெரிவிக்கப்படவில்லை. சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்த கலைஞர்களும், ஊழியர்களும் அந்தக் கம்பெனி உரிமையாளரிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். எனவே கூண்டிலிருந்து புலி தப்பி ஓடிய விஷயத்தை அவர்களும் வெளியில் சொல்லவில்லை. புலியைத் தேடும்விவகாரத்திலும் அவர்கள் தோல்வியடைந்தார்கள்.
அவர்களால் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்க்கஸ் கூடாரம் அமைந்திருந்த இடத்தின் அருகே அடர்ந்த காடு இருந்ததால் புலி அந்தக் காட்டிற்குள் சென்று புகுந்துவிட்டது என்று அவர்களுக்குத் தெரிந்துபோனது. இனி அதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அது தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும் என்ற முடிவிற்கு சர்க்கஸ் உரிமையாளர் வந்தார். அவர், புலி தப்பி ஓடிய இழப்பை சமாளித்துக் கொண்டு தன்னுடைய சர்க்கஸை வேறு ஓர் ஊருக்குக் கூட்டிச் சென்றுவிட்டார்.
இந்த விவரங்களை மேலாளர் கூறிக்கொண்டிருந்தபோது ஆண்டர்சனுக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியது. அவர் அந்த மேலாளரிடம் சர்க்கஸில் அந்தப் புலிக்கு தினமும் எப்பொழுது உணவு வைப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பினார். மேலாளர் ஆண்டர்சனை ஆச்சரியமாகப் பார்த்தார், உடனே பதிலையும் அளித்தார்: ‘மதிய வேளையில்தான், சர்க்கஸ் ஊழியர்கள் உணவருந்திய பிறகு.’
ஆஹா! புதிருக்கான விடை கிடைத்துவிட்டது. ஆட்கொல்லிப் புலியின் வித்தியாசமான நடவடிக்கைகளின் காரணம் ஆண்டர்சனுக்குப் தெளிவாகப் புரிந்துவிட்டது. காட்டில் மனிதர்களை வேட்டையாடி வரும் அந்த ஆட்கொல்லிப் புலி நிச்சயம் சர்க்கஸில் இருந்து தப்பி ஓடிய புலிதான்! அதில் சந்தேகமேயில்லை!
சர்க்கஸில் இருந்து தப்பித்து காட்டில் வாழ்ந்தாலும் அந்தப் புலி மதியத்தில் மட்டுமே சாப்பிட்டுப் பழகியதால் காட்டிலும் அதேபோல் உணவு அருந்தும் பழக்கத்தைத் தொடர்ந்தது. அந்தப் புலிக்கு மனிதர்களைப் பார்த்தால் பயம். எனவே மனிதர்கள் கவனிக்காதபோது அவர்கள் மீது பாய்ந்து அவர்களை விரைவாகக் கொல்கிறது.
அந்தப் புலியால் சராசரி புலியைப்போல் காட்டில் வேட்டையாட முடியவில்லை. எனவேதான் மற்ற ஆட்கொல்லிப் புலிகள் போல் காட்டில் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான பாதையை உருவாக்கி கொண்டு அதற்கேற்றார் போல் மனிதர்களை அது வேட்டையாடவில்லை. அந்தப் புலி அடிப்படையில் மனிதர்களைக் கண்டு பயந்ததால் அது மனிதர்களைத் தாக்கிக் கொன்ற பிறகு, அவர்களின் உடலை உடனடியாக அந்த இடத்தை விட்டு தூக்கிச் சென்றிருக்கிறது.
மனிதர்களின் கண்களில் பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தப் புலி தன் இரையைத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்திற்கு விரைவாகத் தூக்கிச் சென்று அங்கு வைத்துச் சாப்பிட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் தாக்குதல் நடந்த இடத்தில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அந்தப் புலி கூண்டில் அடைப்பட்டு வளர்ந்த பழக்கத்தின் காரணமாக, தற்பொழுதும் தங்குவதற்கு ஏதேனும் ஒரு குகையைத்தான் அது தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் மற்றப் புலிகள் மாதிரியோ அல்லது ஆட்கொல்லிப் புலிகள் மாதிரியோ அந்தப் புலி காட்டில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவில்லை.
இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் ஆண்டர்சன் யோசிக்க யோசிக்க அவருக்கு இப்பொழுது காட்டில் இருக்கும் ஆட்கொல்லிப் புலி சந்தேகமே இல்லாமல் சர்க்கஸ் புலிதான் என்று ஊர்ஜிதமானது. இந்த ஆட்கொல்லிப் புலியின் வசிப்பிடம் நிச்சயம் உம்பலமேருவின் சுற்று வட்டாரத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
குறிப்பாக உம்பலமேருவில் ஒரு குகையிலோ அல்லது உயர்ந்த செங்குத்தான சரிவில் உள்ள பாறைகளின் வெற்றிடத்திலோதான் அது இருக்க வேண்டும் என்று கணித்தார். திருப்பதியிலிருந்து உம்பலமேருவில் உள்ள உயர்ந்த செங்குத்தானச் சரிவிற்கு நேரடியாகச் செல்லும் தொலைவு சுமார் 20 மைல்கள் இருக்கும். அத்தகைய தூரத்தைப் புலி எளிதாகக் கடந்துவிடும்.
ஆண்டர்சன் யூகித்த மேற்குறிய விஷயங்களை அவர் தேவ்விடம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் மேலாளரைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடியே இருந்தார். மேலாளர் தனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் ஆண்டர்சன் மற்றும் தேவ்விடம் தெரிவித்துவிட்டார். மேற்கொண்டு அவர் இது குறித்துக் கூற எந்த விவரமும் இல்லை. ஆனால் அவர் கூடுதலாக ஒரு செய்தியை மட்டும் சொன்னார். திருப்பதியிலிருந்து கிளம்பிய அந்த சர்க்கஸ் கம்பெனி அடுத்து ரேணிகுண்டா சென்றது, பின்னர் அங்கிருந்து அது புத்தூருக்கும், அதன் பிறகு சென்னையிலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள ரயில்வே சந்திப்பான அரக்கோணத்திற்கும் சென்றது.
மேலாளர், சர்க்கஸ் உரிமையாளருடன் கடிதப் போக்குவரத்து வைத்திருப்பதனால் மேற்சொன்ன விவரங்கள் அவருக்குத் தெரிந்தது. சமீபத்தில் சர்க்கஸ் உரிமையாளரிடமிருந்து எந்தக் கடிதங்களும் வராததால் இப்பொழுது சர்க்கஸ் எங்கு நடக்கிறது என்று மேலாளருக்குத் தெரியவில்லை. மேலாளர், ஆண்டர்சனுக்கு கடைசியாக இன்னொரு தகவலையும் சொன்னார், அதாவது கூண்டிலிருந்து தப்பி ஓடிய புலியின் பெயர் ‘ராணி’.
ஆண்டர்சனும், தேவ்வும் இரவில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு நாகப்பட்லா பங்களாவிற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் திருப்பதி சென்றது ஒரு திருப்பத்திற்குரிய சந்தர்ப்பமாக அமைந்தது.
மறுநாள் காலை விடிவதற்குள் ஆண்டர்சனும், தேவ்வும் புலிபோனுவிற்குக் காரில் சென்றனர். அங்கு அவர்களது தூண்டில் மாடுகளைப் பார்வையிட்டனர். இரண்டு மாடுகளும் உயிருடன் நன்றாக இருந்தது. பின்னர் அவர்கள் இருவரும் நீரோடைகளையும், காட்டுப் பாதைகளையும் கவனமாக பார்வையிட்டபடியே நடந்து சென்றனர். புலியின் சுவடுகள் ஏதாவது தெரிகின்றதா என்று பார்த்தபடியே சென்றனர்.
புலியின் சுவடுகள் கண்டிப்பாகத் தென்படும் என்று எதிர்பார்ப்புடன் கவனித்தவாறே சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இருவரும் பங்களாவிற்குத் திரும்பி வந்தனர். இரவு உணவருந்திவிட்டு இருவரும் ரெங்கம்பட்டிற்குக் கிளம்பினர். அங்கு ராமையாவைத் தேடிச் சென்றனர்.
பல வருடங்களுக்கு முன்னர் சாமலா பள்ளத்தாக்கில் வேட்டையாடச் சென்ற ஆண்டர்சனுக்கு உதவியாக இருந்தவன் இந்த ராமையா. தற்பொழுதும் தனக்கு ராமையா உதவி செய்வான் என்று ஆண்டர்சன் நம்பினார்.
ரெங்கம்பட்டு கிராமவாசிகளின் கூற்றுப்படி அந்த ராமையா ஓர் அசாதாரணமான மனிதன்!
(தொடரும்)