Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

ஆட்கொல்லி விலங்கு #17 – முதல் குகை

முதல் குகை

ஆண்டர்சனுக்கு ராமையாவை சுமார் 8 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். அவனை முதன்முறை பார்த்தபொழுதே அவனுடைய திறமையைக் கண்டு அசந்து போனார் ஆண்டர்சன். மற்ற கிராமவாசிகள் அக்கறை செலுத்தாத விஷயங்களில் ராமையாவுக்கு ஆர்வம் இருந்தது. சாமலா பள்ளத்தாக்கில் ஓர் இரகசிய மூலிகையைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறான் ராமையா. அந்த மூலிகையை உட்கொண்டால் எத்தகைய விஷப் பாம்பின் கடியிலிருந்தும் உயிர் பிழைத்துகொள்ளலாம். ராமையா தன் குடிசையில் அந்த மூலிகைச் செடியைக் காயவைத்து, பொடியாக்கி வைத்துக்கொள்வான். நாகப் பாம்பு, கண்ணாடி விரியன் போன்ற விஷப் பாம்பு கடித்தவர்களை ராமையா தன் மூலிகைப் பொடியால் உயிர் பிழைக்க வைத்திருக்கிறான். ராமையா மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளையும் விஷப் பாம்புகளின் கடியிலிருந்து தனது மூலிகை கொண்டு காப்பாற்றி இருக்கிறான். ஆண்டர்சன், கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராமையா இந்த விசேஷ மூலிகைச் செடியை ஆண்டர்சனிடம் கொடுத்தான். ஆண்டர்சன் அந்த செடியைக் கொண்டுசென்று பெங்களூரில் வளர்க்க முயற்சித்தார். ஆனால் அது விரைவிலேயே பட்டுப்போய்விட்டது.

ராமையா வேறொரு மூலிகைச் செடியையும் கண்டுபிடித்து வைத்திருந்தான். அந்தச் செடியின் சிறிதளவு சாற்றை தேநீர் தயாரிக்கும் போது கலந்தால் அது தேநீரின் மணத்தை அதிகப்படுத்தியது. ஆண்டர்சனும் அந்த மூலிகையைப் பயன்படுத்தி ராமையாவின் கூற்று உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். ராமையா ஆண்டர்சனுக்கு ஒரு வழுவழுப்பான முட்டை வடிவிலான, டென்னிஸ் பந்து அளவுள்ள கல் ஒன்றைக் கொடுத்து, அது காலை வேளையில் ஈரத்தை வெளிப்படுத்தும் என்று தெரிவித்தான். ஆண்டர்சன் அந்தக் கல்லை பெங்களூருக்கு எடுத்துச் சென்று சோதித்துப் பார்த்தார். ஆம் உண்மைதான், அந்த கல் காலைப் பொழுதில் ஈரத்தைக் கசிந்தது. ஆண்டர்சன் அந்தக் கல்லை பெங்களூரில் உள்ள ஒரு புவியியல் வல்லுனரிடம் காண்பித்து அதன் விசேஷத் தன்மையை விளக்கும்படிக் கேட்டார். வல்லுனர் அந்தக் கல்லைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாரே தவிர அவரால் அந்தக் கல்லின் விசேஷத் தன்மையைக் குறித்து எந்த விளக்கமும் தரமுடியவில்லை.

ஆண்டர்சன் ஒருமுறை தனது வேட்டையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ராமையாவின் உதவிக்கு கைமாறாகப் பணம் கொடுத்தார். அவன் அதை வாங்க மறுத்து, பணத்திற்குப் பதிலாக சாமலா பள்ளத்தாக்கில், காடு தொடங்கும் இடத்தில், குறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு வருவதாகவும், அந்த நிலத்தை ஆண்டர்சன் வாங்கி அதைத் தனக்கு வாடகை இல்லாமல் இலவசமாக விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அப்படிச் செய்தால் பிரதி உபகாரமாக, ஆண்டர்சன் எப்பொழுதெல்லாம் நாகப்பட்லாவிற்கு வேட்டையாட வருவாரோ அப்பொழுதெல்லாம் அவருக்கு உதவி செய்வதாக ராமையா தெரிவித்தான். ஆண்டரசனும், ராமையா கேட்டுக் கொண்டதற்கு இணங்க 2¾ ஏக்கர் நிலத்தை ரூபாய் 50/-க்கு வாங்கினார். அந்த நிலத்தில் ராமையா இலவசமாக விவசாயம் செய்ய அனுமதித்தார். பிரதிபலனாக ஆண்டர்சன் நாகப்பட்லாவிற்கு வேட்டையாட வரும் போது எல்லாம் ராமையா அவருக்கு உதவி புரிந்து வந்தான்.

ஆண்டர்சனும், தேவ்வும் ராமையா வீட்டிற்குச் சென்றனர். அவனைச் சந்தித்து திருப்பதி ரயில் நிலைய சிற்றுண்டி அறை மேலாளர் கூறிய தகவல்களைத் தெரிவித்தனர். ஏற்கெனவே காட்டில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஆண்டர்சன் ராமையாவிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவன் நடந்த தாக்குதல்களுக்கு எல்லாம் மற்றவர்களைப் போல ‘தீயதுதான்’ காரணம் என்று தெரிவித்தான், அதனால் ராமையாவிடம் எந்த உதவியும் ஆண்டர்சன் அதுவரை நாடவில்லை.

ஆண்டர்சன் ராமையாவிடம், ‘சாமலா பள்ளத்தாக்கில் இண்டு இடுக்கு என அனைத்து இடங்களையும் அறிந்தவன் ஒருவன் உண்டென்றால் அது நீதான். நீ இப்போது நன்றாக யோசித்துச் சொல், உம்பலமேரு குளத்தருகே உள்ள உயர்ந்த செங்குத்தான சரிவின் அருகாமையில் அல்லது அங்கிருந்து இரண்டு அல்லது மூன்று மைல்கள் சுற்றளவில் ஏதேனும் குகைகள் இருக்கின்றனவா?’ என்று கேட்டார்.

ராமையாவிடமிருந்து சட்டென்று பதில் வந்தது. ‘நிச்சயமாக இருக்கு துரை, அங்க – இருங்க துரை – ஒண்ணு, ரண்டு, மூணு, நாலு அப்புறம் இன்னொன்னு, மொத்தம் அஞ்சு குகைங்க நீங்க சொன்ன தூரத்தில இருக்கு. உத்தேசமா சொல்லனும்னா, இரண்டு குகைங்க வடக்குல இருக்கு, மத்த மூணு குகைங்க கிழக்குல இருக்கு. வடக்குல இருக்கிற ஒரு குகை அந்த உயரமான செங்குத்தான சரிவின் உச்சீல இருக்கு. எனக்கு என்னமோ புலி அந்த இடத்துல தங்கும்னு தோணல. அந்தக் குகைக்கு போற ஏற்றம் மிக செங்குத்தா இருக்கும். லங்கூர் குரங்குகள் அந்தக் குகையைச் சுத்தி விளையாடிக்கிட்டு இருக்கும். ஆனா அதில தங்காதுங்க. ஆன மத்த நாலு குகைங்களும் புலி இருப்பதற்கு வசதியா இருக்கும்’ என்றான்.

ராமையா சொன்னதைக் கேட்டு ஆண்டர்சன் மகிழ்ந்து போனார். ‘நல்லது ராமையா’ என்று வியந்தபடியே, ‘நீ என்னை அந்த ஒவ்வொரு குகைக்கும் கூட்டிட்டு போவியா?’ என்று கேட்டார். ‘நிச்சயமா துரை’ என்றான் ராமையா. ‘நான்தான் உங்களுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கேன்ல, உங்க நிலத்தில் வாடகை இல்லாம நீங்க இத்தன வருஷமா என்ன விவசாயம் செய்ய விடரதுனால, நீங்க எப்ப கூப்டாலும், உங்க கூட நான் காட்டுக்கு எந்த நேரமானாலும் வருவேன்’ என்றான்.

ராமையாவிடம் பேச்சுக் கொடுத்ததில் ஆண்டர்சனுக்கும் அந்தக் குகைகளைப் பற்றி மேலும் பல விவரங்கள் தெரிய வந்தது. நான்கு குகைகளில், மூன்று சிறியது. கிழக்கில், செங்குத்தான சரிவின் அருகே இருந்த அந்த நான்காவது குகை சற்றுப் பெரியது. அந்தக் குகையின் பெயர் ‘மாடபெண்டா’. செங்குத்தான சரிவிலிருந்து நீர் கசிந்து உருவான குளத்தின் அருகில் அந்தக் குகை இருந்ததால் அதற்கு அப்பெயர் காரணம். பெண்டா என்றால் குளம் என்று அர்த்தம்.

‘நம்மால் இந்த நான்கு குகைகளையும் ஒரே நாளில் பார்த்துவிட முடியுமா?’ என்று ஆண்டர்சன் கேட்டார். ‘நிச்சயமாக முடியும் துரை’ என்றான் ராமையா. ‘வடக்கில் இருக்கும் குகை உம்பலமேருவிலிருந்து ஒரு மைல் தூரம்தான் இருக்கும்; கிழக்கில் இருக்கும் மூன்று குகைகளும் உம்பலமேரு குளத்திலிருந்து சுமார் 2 அல்லது 3 மைல்கள் தூரத்தில் இருக்கும். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் இடையேயான தூரம் ஒரு மைல்லுக்குள் இருக்கும்’ என்றான் ராமையா.

‘நாளை காலை சேவல் கூவும் சமயத்தில் உன்னைக் காரில் வந்து அழைத்துச் செல்வேன், தயாராக இரு’ என்றார் ஆண்டர்சன். ‘சீக்கிரமாகப் புறப்பட்டால் நாம் விடியற்காலையில் புலிபோனுவிற்குச் சென்றுவிடலாம். அங்கிருந்து நாம் உம்பலமேருவிற்கு நடந்து செல்லலாம். பின்னர் அங்கிருந்து குகைகளுக்குச் செல்லலாம். முதலில் வடக்கில் இருக்கும் குகைகளுக்குச் செல்லலாம்’ என்று தெரிவித்தார் ஆண்டர்சன். ‘நீங்க சொன்னபடியே நான் தயாரா இருக்கேன் துரை’ என்றான் ராமையா.

தேவ்வும், ஆண்டர்சனும் சிறு குழந்தைகள்போல் சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் காட்டு பங்களாவிற்குத் திரும்பினர். தேவ் நள்ளிரவுவரை தன்னுடைய பாயிண்ட் 12 வேட்டைத் துப்பாக்கியைச் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்தார். கூடவே ஆண்டர்சனின் துப்பாக்கியையும் சுத்தம் செய்து வைத்தார்.

தேவ்வும், ஆண்டர்சனும் ‘மாடல் டி’ காரில் நாகப்பட்லாவிலிருந்து கிளம்பினர். பங்களாவின் வாயிற் கதவுகளைத் தாண்டிய பொழுது காட்டுச் சேவல்கள் கூவின. காட்டுச் சேவல்களைத் தொடர்ந்து அவைகளின் உறவினர்களான வீட்டுச் சேவல்களும் ரங்கம்பட்டு கிராமத்திலிருந்து கூவத் தொடங்கின. ஆண்டர்சனும், தேவ்வும் ராமையாவின் குடிசைக்கு காரில் வந்து இறங்கினர். காலை மணி 5 இருக்கும், கார் வரும் சத்தம் கேட்டு ராமையா தன் குடிசையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

மூவரும் காரில் பயணமானர். 7 மைல்கள் பயணித்த பிறகு புலிபோனுவை அடைந்தனர். அப்பொழுது காலை மணி 6:05. காரை ஒரு கிணற்றின் அருகே நிறுத்திவிட்டு, மூவரும் Y வடிவப் பாதையின் வலது கிளையில் நடந்து சென்றார்கள். வடகிழக்குத் திசையில் சென்ற அந்தப் பாதை நேராக உம்பலமேரு குளத்தைப் போய் அடைந்தது. சுமார் 8 மணி அளவில் உம்பலமேரு குளத்தை அடைந்தனர். மேகங்கள் இல்லாத தெளிவான வானத்தில் சூரியன் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

உம்பலமேருவிலிருந்து குகைகளுக்குச் செல்ல எந்த ஒரு தெளிவான பாதையும் கிடையாது என்றும் தன்னுடைய திசை உணர்வை வைத்தே செல்ல வேண்டும் என்றும் ராமையா தெரிவித்தான்.

இதுவரை ராமையாவின் திசை உணர்வு அவனை ஏமாற்றியதே இல்லை. ராமையா அரிவாளுடன் முன்னால் சென்றான். தன் அரிவாளால் புதர்களை வெட்டி, பாதை ஏற்படுத்தியபடியே சென்றான்.

அவர்கள் சென்ற பாதையில் விலங்குகள் பயன்படுத்தும் பாதைகள் (game trail) அடிக்கடிக் குறுக்கிட்டன. அந்தப் பாதைகளில் கடா மான், காட்டுப் பன்றி, கரடிகள் வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன. கரடிகள் கிழங்குகளைத் தேடி அங்கும் இங்கும் நிலத்தைத் தோண்டியிருப்பதைப் பார்க்க முடிந்தது. மேலும் அவை எறும்புப் புற்றுகள் ஒவ்வொன்றையும் தகர்த்துவிட்டு அதில் கரையான் இருக்கிறதா என்று ஆவலாகத் தேடியிருக்கின்றன என்பதும் தெரிந்தது. ஆனால் இம்மாதிரி விவரங்கள் ராமையாவின் திசை உணர்வை திசை திருப்பவில்லை. ராமையா வடக்கு நோக்கி முன் சென்றான். அவன் பின் ஆண்டர்சன் சென்றார். அவர் கைகளில் புலியின் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக பாயிண்ட் 405 துப்பாக்கி இருந்தது. ஆண்டர்சனுக்குப் பின்னால் தேவ் தன் கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் சென்றார்.

அவர்கள் நடந்து சென்ற பாதை சமதளத்திலிருந்து செங்குத்தான சரிவை நோக்கிச் சென்றது. மேலே செல்லச் செல்ல மரங்களின் அடர்த்தி குறைந்து புதர்கள் அதிகமாகக் காட்சி அளித்தன. அவர்களைச் சுற்றி எங்கும் பெரிய பெரிய கற்பாறைகள் காணப்பட்டன. மேலே நடந்து உயரே செல்லும்போது கற்களின் அளவும் எண்ணிக்கையும் பெரிதாகிக் கொண்டே போனது. பல ஆண்டுகளாகப் பெய்த மழையினாலும், ஏற்பட்ட நிலச்சரிவினாலும் இம்மாதிரி கற்கள் மேலே இருந்து உருண்டு கீழே வந்திருக்கிறது.

அரை மணி நேரம் நடந்து சென்ற பிறகு ராமையா நின்றான். முதலாம் குகையை நெருங்கி விட்டோம் என்று ரகசியமாகக் கூறினான். ஆண்டர்சனும், தேவ்வும் அவர்களது எச்சரிக்கையை இரட்டிப்பாக்கி மேற்கொண்டு நடந்து சென்றனர். உம்பலமேரு குளத்திலிருந்தே அவர்கள் கவனமாக நடந்து வந்தார்கள். இப்பொழுது மேலும் கவனத்துடன் சென்றார்கள். ஆட்கொல்லிப் புலி எங்கு வேண்டுமானாலும் பதுங்கி இருக்கும். மற்றவர்கள் கண்களில் படாதவாறு அது பதுங்கி இருக்கும்.

மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த ராமையா மறுபடியும் நின்றான். இப்பொழுது அவன் வாய் திறந்து பேசவில்லை. மாறாக தன் தலையை அசைத்து குகை இருக்கும் இடத்தைக் காண்பித்தான். ஆண்டர்சன் அந்தக் குகையை பார்த்தார். பெரிய கருங்கற்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுந்து ஒரு குகை உருவாகி இருந்தது. குகையின் முகப்பைப் பார்க்கமுடிந்தது. பெரிய குகை என்று சொல்ல முடியாது. குகை முகப்பின் விட்டம் ஒரு கஜம் இருக்கும். ஒரு புலி தங்குவதற்குப் போதுமான இடமாக இருந்தது.

ஆண்டர்சன் தன்னுடைய இடது கையை நீட்டி ராமையாவின் தோள்பட்டையைத் தொட்டார். ராமையாவை பின்னுக்கு வரச் சொல்லிவிட்டு, ஆண்டர்சன் முன்னேறிச் சென்றார். ராமையாவிற்குப் பின்னால் தேவ் சென்றார். ஆண்டர்சன் தன்னுடைய கால் விரல்களின் நுனியால் எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாகக் குகையை நோக்கிச் சென்றார். செல்லும்போது துளியும் சப்தம் வராமல் பார்த்துக் கொண்டார். காய்ந்த மரத் துண்டு, இலைச் சருகுகளின் மீது கால் வைத்து விடாமல் கவனமாக நடந்து சென்றார். குகையின் முகப்பிலிருந்து 15 அடி முன்னர் போய் நின்றார். குகைக்கு முன்னால் தரை மிகவும் கரடு முரடாக இருந்தது. மேலும் கோரைப் புற்கள் சுற்றிலும் வளர்ந்திருந்தது. அதனால் புலியின் கால் சுவடுகளைத் தரையில் பார்க்க முடியவில்லை.

ஆண்டர்சன், தேவ்வையும் ராமையாவையும் பார்த்து கற்களைப் பொறுக்கி குகை மீது வீசும்படி செய்கை செய்தார். ஆண்டர்சனின் செய்கையை இருவரும் புரிந்து கொண்டார்கள். சற்று நேரத்தில் குகையின் முகப்பில் சடசடவென கற்கள் பெரியதும், சிறியதுமாக சரமாரியாக விழுந்தன.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *