Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

தோட்டா துளைத்தது

தேவ்வும் ராமையாவும் குகையின் முகப்பை நோக்கிச் சரமாரியாகக் கல் எறிந்தபோதும் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. கற்கள் குகையில் விழுந்து உருண்டோடும் சத்தம் நன்றாகவே கேட்டது. புலி அங்கு ஒளிந்திருந்தால் நிச்சயம் அது பயந்திருக்கும் அல்லது உறுமவாவது செய்திருக்கும். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. கற்கள் விழும் சத்தத்தைத் தவிர அங்கு வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ஒரே அமைதியாக இருந்தது. குகையில் புலி இருப்பதுபோல் தெரியவில்லை.

மேலும் சில கற்கள் குகையின் மீது வீசப்பட்டன. இப்பொழுதும் எந்த எதிர்வினையும் இல்லை. 10 நிமிடங்கள் காத்திருந்த பிறகு அந்தக் குகையில் புலி இல்லை என்ற முடிவிற்கு ஆண்டர்சன் வந்தார். ஆண்டர்சன் குகையை நோக்கிச் சென்றார். கோரைப் புற்களையும், துண்டுக் கற்களையும் கடந்து சென்ற பின் சமமான தரை கண்ணில் பட்டது. குகையின் இருண்ட உட்புறத்தை நன்கு கவனித்தபடியே, கீழே தரையில் ஏதேனும் சுவடுகள் தெரிகிறதா என்று பார்த்தார். புலியின் கால் சுவடுகள் தெரியவில்லை. மாறாக சிறிய கால் தடங்கள் தெரிந்தது. அது முள்ளம்பன்றியின் கால் தடங்கள். முள்ளம்பன்றிகள் அந்தக் குகையில் வசித்து வந்தன. எவ்வளவு கற்களை குகை மீது வீசினாலும் முள்ளம்பன்றியைக் குகையை விட்டு வெளியேற்றி அதைப் பிரகாசமான சூரிய ஒளியைப் பார்க்க வைக்க முடியாது. முள்ளம்பன்றி பொதுவாக இரவில் நடமாடக் கூடிய விலங்கு. அதை நிலத்தில் உள்ள வளையிலிருந்து வெளியே வர வைக்க வேண்டும் என்றால் நெருப்புப் புகையை வளையினுள் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தாலும் முள்ளம்பன்றியை அவ்வளவு எளிதாக வெளியே வர வைக்க முடியாது. நெருப்புப் புகையை உள்ளே செலுத்தினால் முள்ளம்பன்றி மேலும் வளையைத் தோண்டி உள்ளே செல்லும் அல்லது மூச்சு திணறல் ஏற்பட்டு திக்குமுக்காடும்.

மூவரும் அந்தக் குகையை விட்டு திரும்பும் முன்னர் ராமையா மேலே செங்குத்தான சரிவைக் காண்பித்து அதில் இன்னொரு குகை இருப்பதைச் சுட்டிக் காட்டினான்.

ராமையா காட்டிய அந்தக் குகையின் முகப்பு அங்கிருந்தே தெரிந்தது. அந்த முகப்பும் புற்களால் பாதி அளவிற்கு மூடப்பட்டிருந்ததால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அந்தக் குகை அவர்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் 200 அடி அல்லது அதற்கும் அதிகமான உயரத்தில் இருந்தது. மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அந்தக் குகை சுமார் இரண்டு ஃபர்லாங் தூரத்தில் இருந்தது.

ராமையா சொன்னது சரிதான் என்று ஆண்டர்சன் முடிவிற்கு வந்தார். அவ்வளவு செங்குத்தான சரிவில் புலி ஏறாது. மேலும் அந்தக் குகையில் புலி வசிக்கவில்லை என்பதற்கு அத்தாட்சியாக ஒரு லங்கூர் குரங்கு குகையின் முகப்பில் உட்கார்ந்து கொண்டு கீழே மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் குகையின் பக்கம் புலி சென்றாலோ அல்லது அந்தக் குகையில் புலி வசித்தாலோ நிச்சயமாக லங்கூர் குரங்கு அங்கு இருக்காது. லங்கூர் குரங்குகள் மிகவும் புத்திசாலியானவை. அது ஆபத்தை விலை கொடுத்து வாங்காது.

மூவரும் கீழே இறங்கி உம்பலமேருவை நோக்கிச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து கிழக்குப் பக்கத்தில் இருந்த செங்குத்தான சரிவின் அடிவாரத்தில் அமைந்துள்ள மூன்று குகைகளுக்கும் சென்றார்கள்.

ராமையா தூரத்தைச் சரியாகக் கணித்திருந்தான். கிழக்கிலிருந்த முதல் குகையை அடைய சுமார் 45 நிமிடங்கள் ஆனது. பயணித்த நேரத்தை வைத்து அவர்கள் உம்பலமேரு குளத்திலிருந்து சுமார் 2 மைல்கள் நடந்திருப்பது தெரியவந்தது. வடக்கில் இருந்த குகைக்குச் செல்லும் வழியைப் போலவே கிழக்கிலிருந்த குகைளின் வழியும் இருந்தது. ஆனால் கிழக்கிலிருந்த முதல் குகை சாதாரணக் குகை போலத் தோன்றவில்லை. அது ஒரு பாதாளம் போல் காட்சியளித்தது. மேல் பகுதி திறந்திருந்தது. நிலச்சரிவின்போது ஒரு பெரிய கல் உடைந்து அது அந்த மலைச் சரிவிலிருந்து 10 அடி தூரத்தில் விழுந்ததனால் ஏற்பட்ட பாதாளம். கீழே விழுந்த கல்லின் நீளம் 20 அடிக்கும் அதிகமாக இருக்கும். அந்த கல்லிற்கும் 10 அடி தூரத்தில் இருந்த சரிவிற்கும் இடைப்பட்ட பாதாளத்தைத்தான் ராமையா குகை என்று அடையாளம் காட்டினான். மேலே திறந்த வெளியாக இருந்ததனால் மழை நீரும், வெளிச்சமும் பட்டு அந்தப் பாதாளக் குகையில் உண்ணிச்செடிகளும், நீண்ட புற்களும் வளர்ந்து மண்டி இருந்தது.

அந்தப் பாதாளக் குகை தற்காலிமாக ஒரு புலி ஒளிந்துகொள்ள ஏதுவாக இருந்தாலும், புலி அந்தக் குகையில் நீண்ட நாட்களுக்கு வசிக்காது. காரணம் அங்குச் செடிகளும், புற்களும் மண்டி கிடப்பதால் புலிக்கு அந்த இடம் பாதுகாப்பாக இருக்காது. மறைவிலிருந்து திடீர் தாக்குதலுக்கு புலி ஆளாகலாம்.

ஆண்டர்சன் தேவ்வையும், ராமையாவையும் அந்தக் குகையின் மீதும் கற்களை வீசச் சொன்னார். அவர் குகையின் வெளியில் தன் துப்பாக்கியுடன் தயாராக நின்று கொண்டார். குகையின் தரை கரடு முரடாக இருந்ததால் எந்தத் தடங்களும் தெரியவில்லை. குகையின் மீது கற்கள் வீசப்பட்டும் அங்கிருந்து புலி வெளிவராததால் அந்தக் குகையில் புலி இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. பின்னர் மூவரும் அந்தக் குகையை விட்டுக் கிளம்பினர்.

செங்குத்தான சரிவைத் தாண்டி, பதினைந்து நிமிடங்கள் நடந்து, தெற்குத் திசையில் உள்ள அடுத்த குகைக்கு மூவரும் சென்றனர். அந்தக் குகையின் முகப்பைப் பார்த்தால், செங்குத்தானச் சரிவுக்கு செல்லும் பாதையின் நுழைவாயில் போல் தோன்றியது. அதன் முகப்பு சிறிதாக இருந்தது. சுமார் 2 அடிகள் மட்டுமே இருக்கும். மற்றக் குகைகளில் வீசப்பட்டதுபோல் இங்கும் கற்கள் சரமாரியாக வீசப்பட்டது. இந்த முறையும் மூவரும் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இங்கும் தரை காய்ந்து போயும், கடினமாகவும் இருந்ததனால் கால் தடங்கள் எதுவும் பதிந்திருக்கவில்லை. குகையின் முகப்பின் அருகே சென்று அங்குள்ள காய்ந்த புற்களுக்குத் தீ வைத்தனர். கற்களால் வெளியே வராத புலி நெருப்பினாலும், அதனால் உண்டான புகையினாலும் வேகமாகப் பாய்ந்து வெளியே வரலாம் என்று மூவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த பத்து நிமிடத்திற்குப் பிறகு அவர்கள் ஏற்படுத்திய தீ பரவாமல் இருக்க அதை அணைத்தனர். ஒரு துளியளவு தணலையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் கவனமாக அணைத்தனர். ஒரு சிறு தணலை அணைக்காமல் விட்டால் கூட அது காட்டுத் தீயாக மாறி பல நாள் எரிந்து காட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள மரங்களை அழித்துவிடும்.

தேடி வந்த குகைகளில் புலியைப் பார்க்கமுடியாமல் மூவரும் ஏமாற்றத்திற்கு உள்ளானர்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது. மூவரும் மனச் சோர்வு அடைந்தார்கள். ஆனால் இன்னும் ஒரு குகை பாக்கி இருந்தது. அவர்கள் பார்க்க வந்த குகைகளிலேயே மிகவும் பெரிய குகை அதுதான். ராமையா அந்தக் குகையின் பெயர் மாடபெண்டா என்று குறிப்பிட்டான். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் அந்தக் குகை இருந்தது.

பெரிய நம்பிக்கை எதுவும் இல்லாமல் மூவரும் மாடபெண்டா குகையை நோக்கிச் சென்றனர். குகைக்கு முன்னர் சிறிய குளம் இருந்தது. குளத்தின் காரணமாகத்தான் அந்தக் குகைக்கு மாடபெண்டா என்று பெயர் வந்தது. அந்த இடத்திற்கு வந்ததும் மூவரின் நம்பிக்கையும் வானத்தைத் தொட்டது. காரணம், அந்தச் சிறிய குளத்தின் விளிம்பில் நிறைய கால் சுவடுகள் பதிந்திருந்தன. அந்தக் கால் சுவடுகள் பெண் புலியினுடையது. சந்தேகமே இல்லாமல் அந்தப் புலியின் நீர் ஆதாரம் இந்தக் குளம்தான் என்று தெரியவந்தது.

மூவரும் சத்தம் எழுப்பாமல் கவனமாக 200 கஜ தூரம் குகையை நோக்கி முன்னேறிச் சென்றனர். குகையின் முகப்பு அவர்களது கண்களில் பட்டது. குகையின் முகப்பு பெரியதாக இருந்தது. முகப்பின் அகலம் ஐந்து அடி இருந்தது. உயரம் ஐந்து அடிக்குச் சற்று அதிகமாக இருந்தது. குறிப்பாக அந்தக் குகையின் முன்னால் செடிகளோ, புதர்களோ இல்லாமல் தெளிவாக இருந்தது. யாரேனும் குகையை நோக்கி வந்தால் குகையின் உள்ளே பதுங்கி இருக்கும் புலிக்கு அது தெளிவாகத் தெரியும். இது எவ்வளவு நிதர்சனம் என்று சில வினாடிகளில் புரிந்தது. ராமையாவும், தேவ்வும் கற்களை எடுத்து வீசுவதற்கு முன்னர் குகையிலிருந்து இடி போன்ற உறுமல் சத்தம் கேட்டது. அடுத்த நொடி குகையிலிருந்து ஒரு புலி வெளியே பாய்ந்தது.

பிரகாசமான சூரிய ஒளி புலியின் கண்களைச் சிறிது நேரத்திற்கு மங்கச் செய்தது. புலி தன் கண்களைச் சரி செய்து கொண்டு மூவரையும் பார்த்துச் சற்றுத் தயக்கமுற்றது. பின்னர் தன்னிடம் உள்ள இயற்கையான பயம் உந்தவே அந்தப் புலி அந்த இடத்திலிருந்து வலது பக்கமாகத் திரும்பித் தப்பி ஓட எத்தனித்தது.

சட்டென்று அக்கணத்தில் ஆண்டர்சன் ‘ராணி! ராணி!’ என்று சத்தமாகக் கூப்பிட்டார்.

புலி அப்படியே நின்றது. ஆண்டர்சனைத் திரும்பிப் பார்த்தது. புலியின் முகத்தில் இரக்கமற்ற மூர்க்கத்தனம் வெளிப்பட்டது. அதே சமயத்தில் அந்தப் புலியின் முகத்தில் ஆச்சர்யம், அங்கீகாரம் மற்றும் கீழ்படிதல் என அனைத்தும் வெளிப்பட்டது. அந்த இடத்தில் அந்த மூவருக்கும் என்ன வேலை என்ற கேள்வியுடன் நின்ற புலி, அதற்கான பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் ஆண்டர்சன் துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா அதன் நெஞ்சைத் துளைத்தது. அதைத் தொடர்ந்து புலி தடுமாறி எழுந்திருக்க முயலவே துப்பாக்கியிலிருந்து வெளியான அடுத்த தோட்டா அதனுடைய மூளையைத் தாக்கியது.

அது ஒரு சிறிய புலி. பல வருடங்களாக சிறை பிடிக்கப்பட்டிருந்ததால் அந்தப் புலியால் காட்டில் விலங்குகளைப் பின் தொடர்ந்து சென்று வேட்டையாட முடியவில்லை. மாறாக அந்தப் புலி மனிதர்களையும், அவர்களது குணாதிசயங்களையும் நன்கு அறிந்திருந்தது. ஆனால் கடைசிவரை அப்புலிக்கு மனிதர்கள் மேல் இருந்த உள்ளார்ந்த பயம் போகவில்லை. இந்தச் சூழ்நிலையில், புலி உயிர் வாழ தன்னால் முடிந்த ஒரே வேலையைச் செய்தது. பதுங்கியிருந்து மனிதர்கள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி, பின்னர் அவர்களது உடல்களை வெகு தூரத்திற்குத் தூக்கிச்சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்துத் தின்று உயிர் வாழ்ந்து வந்தது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இது ஆண்டர்சன் தெரிவித்த விஷயம். எச்சரிக்கையின் மிகுதியால் சொன்ன விஷயம். ஆனால் இந்த எச்சரிக்கை இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் சில நாடுகளில் விலங்குகளைக் குட்டியிலேயே பிடித்துச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கை. ஆண்டர்சனுக்குத் தெரிந்த ஒரு நங்கை ஒரு சிறுத்தையைக் குட்டியிலிருந்து வளர்த்து வந்தாள். அந்தச் சிறுத்தை நாளடைவில் பெரியதானது. பெரியதான அந்தச் சிறுத்தையை வீட்டில் வளர்ப்பதில் ஆபத்துகள் இருந்ததால் அதை வீட்டில் வைத்திருக்க முடியவில்லை. இருப்பினும் அப்பெண்மணி அந்தச் சிறுத்தையுடன் செல்லமாகப் பழகிவிட்டதால் அவளால் அதைவிட்டுப் பிரிய முடியவில்லை. அந்தச் சிறுத்தையும் அந்தப் பெண்ணின் மீது மிகுந்த பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்தியது. அவளால் அந்தச் சிறுத்தையை உயிரியல் பூங்காவிலோ அல்லது சர்க்கஸிலோ விட முடியவில்லை. காரணம், அங்கு அந்தச் சிறுத்தையை அடித்துத் துன்புறுத்தி விடுவார்கள் என்ற பயம்தான். அவளால் அந்தச் சிறுத்தையைக் கொல்லவும் முடியவில்லை. எனவே சிறுத்தையை தன் காரில் ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய காட்டிற்குச் சென்று அங்கு சிறுத்தையை விட்டுவிட்டாள். அந்தப் பெண் காரில் திரும்பிச் செல்லும்போது அச்சிறுத்தை காரைத் துரத்தியபடியே வந்திருக்கிறது.

அந்தப் பெண் நல்லெண்ணத்தில்தான் அந்தச் சிறுத்தையை காட்டில் விட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய முடிவு தவறானது. அவள் காட்டில் விட்டிருப்பது ஒரு அபாயகரமான விலங்கு, அதுவும் தன்னிடம் குட்டியிலிருந்து வளர்க்கப்பட்ட விலங்கு. வேக வைத்த மாமிசம், அரிசி, ரொட்டி, இனிப்பு, பாயசம், ஐஸ்கிரீம் எனச் சுவையான உணவுகளைத் தின்று வளர்ந்த விலங்கு. அந்த விலங்கினால் தனக்குத் தானே உணவை தேடிக்கொள்ள முடியாது. தன்னைத் தானே பார்த்துக்கொள்ள முடியாது. அதற்குக் காட்டில் வேட்டையாடத் தெரியாது. இச்சூழ்நிலையில் காட்டில் விடப்பட்ட அந்த விலங்கிற்கு மூன்று விஷயங்கள் மட்டுமே நடந்திருக்க முடியும். மூன்றும் விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். 1) சிறுத்தை, தான் பார்க்கும் முதல் மனிதரை நட்புடன் எதிர்கொள்ளும். விளைவு மனிதன் பயத்தால் அச்சிறுத்தையைத் தாக்க நேரிடலாம். சிறுத்தை இறக்க வாய்ப்புண்டு. 2) சிறுத்தை பட்டினி கிடந்து இறந்து விடலாம். இதற்கான சாத்தியம் குறைவுதான். காரணம், பொதுவாக விலங்கிற்குப் பசி வந்துவிட்டால், தான் வாழ வேண்டும் என்று உள்ளணர்வு மேலோங்கி காட்டில் எதையாவது வேட்டையாடித் தின்று பிழைத்துக்கொள்ளும். 3) இவை எல்லாவற்றையும் விடக் கொடுமையானது, அச்சிறுத்தை ஆட்கொல்லி விலங்காக மாறலாம்.

அந்தப் பெண் தன் சிறுத்தையைக் காட்டில் விட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு ஆண்டர்சனிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறாள். அவரும் அப்பெண்ணிடம் அடுத்த ஒரு மாதத்திற்குச் செய்தித்தாள்களை உன்னிப்பாகக் கவனித்து வரும்படிச் சொல்லியிருக்கிறார். அவரும் செய்தித்தாள்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். சில நாட்களிலேயே இருவர் கண்களிலும் ஒரு செய்தி பட்டது. அவள் சிறுத்தையை விட்டுச் சென்ற இடத்தின் அருகில் இருந்த கிராமத்தில் ஒரு சிறுத்தை நுழைந்து இருக்கிறது. அது, ஒரு குடிசைக்குள் தூங்கச் சென்றிருக்கிறது. கிராமவாசிகள் அந்தக் குடிசையின் கதவுகளை மூடிவிட்டு அதன் கூரை மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ பற்ற வைத்திருக்கிறார்கள். தீயில் கருகி அந்தச் சிறுத்தை இறந்துவிட்டது. தன் செல்லப்பிராணியின் இந்த முடிவைக் கேட்டு அந்தப் பெண் மனமொடிந்து போனாள். ‘அந்தச் சிறுத்தை இறக்காமல் ஓர் ஆட்கொல்லி விலங்காக மாறியிருந்தது என்ற செய்தியைப் படித்திருந்தால் அவள் என்ன நினைத்திருப்பாள்? தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத ஒரு விலங்கைக் காட்டில் விடுவது என்று அவள் எடுத்த முட்டாள்தனமான முடிவின் விபரீதத்தை எண்ணி அவள் என்ன நினைத்திருப்பாள்?’

ஆண்டர்சனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *