Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #19 – பாம்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

ஆட்கொல்லி விலங்கு #19 – பாம்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

பாம்புகள்

வனத்தைவிட கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் தான் பாம்புகள் அதிகம். காரணம் பாம்புகளின் பிரத்யேக உணவான எலிகள் அதிகமாக இங்கு கிடைக்கின்றன.

இந்தியாவில் ஐந்துவிதமான விஷப் பாம்புகள் இருக்கின்றன. இவை தீண்டினால் சிகிச்சை அளிக்காத பட்சத்தில் கண்டிப்பாகப் பரலோகப் பிரவேசம்தான். ஏனைய பாம்புகள் தீண்டினால், தீண்டப்பட்ட இடத்தில் வீக்கமும், வலியும் ஏற்படும்.

ஐந்து விஷப் பாம்புகள் பின்வருமாறு

· ராஜநாகம் – King Cobra (Hamadryad)
· நாகப் பாம்பு (நல்ல பாம்பு) – Cobra
· கண்ணாடி விரியன் – Russel’s Viper
· புல் விரியன் – Saw Scaled Viper
· கட்டுவிரியன் – Krait

இவை தவிர பவளப் பாம்பு என்று ஒன்று இருக்கிறது. இதுவும் அதீத விஷத்தன்மைக் கொண்டது. ஆனால் இதன் வாய் சிறியதாக இருப்பதாலும், வீரியமற்றதாக இருப்பதாலும் இதனால் பெரிய உயிர் இழப்புகள் ஏற்படுவதில்லை. ‘குழி வைப்பர்’ என்ற பாம்பும் விஷமுடையது. இது கடித்தால் பொதுவாக உயிரிழப்பு ஏற்படாது. கடி வாங்கியவர் பலவீனமானவராக இருந்தால், இந்தப் பாம்பு கடித்த அதிர்ச்சியினாலேயே மாண்டுவிடுவார்.

நிலத்தில் வாழும் பாம்புகளை விட கடலில் வாழும் பாம்புகள் மிகவும் கொடியவை. இவைகளுக்கு நாகப் பாம்பை விட 12 மடங்கு விஷத்தன்மை அதிகமாக இருக்கும். இவைகள் கடலில் இருப்பதால் தப்பித்தோம்.

பொதுவாக ஒரு பாம்பு எவ்வளவு கொடியது என்று அதன் விஷத் தன்மையை வைத்தும், அது எவ்வளவு விரைவாக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதையும் வைத்தே அறியப்படுகிறது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் புல் விரியனின் விஷத்தை விட இரண்டு மடங்கு அதிகம். நாகப் பாம்பின் விஷம் கண்ணாடி விரியனைவிட மூன்று மடங்கு அதிக வீரியமுடையது. கட்டு விரியனின் விஷம் நாகப் பாம்பை விட இரண்டு மடங்கு அதிக விஷமுடையது. இவைகளை ஒப்பிடும்போது ராஜநாகம் அவ்வளவு விஷத் தன்மை உடையது அல்ல. இருப்பினும் அது பெரிய உருவத்தையும், நீளத்தையும் (15 அடிக்கு மேல் வளர்ந்திருக்கும்) கொண்டிருப்பதால் அதிக அளவில் விஷத்தை உடம்பினுள் பாய்ச்சும் (நாகப் பாம்பை விட நான்கு மடங்கு அதிகமாக). இதன் விளைவாக நாகப் பாம்பு தீண்டி ஏற்படும் உயிரிழப்பை விட ராஜநாகம் தீண்டினால் மூன்று மடங்கு அதி விரைவாக உயிரிழப்பு ஏற்படும்.

ராஜநாகங்கள் மலைகளிலும், பசுமைக் காடுகளிலும் வசிப்பவை. மனித நடமாட்டத்தை விரும்பாதவை. முழுக்க முழுக்க வனங்களில் இருப்பவை. இதன் இரை மற்ற பாம்புகள்தான். இவற்றைக் கூண்டுகளில் வைத்து வளர்க்க முடியாது. காரணம், இவற்றுக்கான உணவைக் கொடுப்பதில் உள்ள சிரமம். கூண்டில் அடைத்த சில நாட்களிலேயே இவை பட்டினி கிடந்து இறந்துவிடும். ராஜநாகங்கள் ஆலிவ் பச்சை நிறத்தில் வெள்ளை நிறப் பட்டைகளுடன் காணப்படும். மலேசியா, பர்மா வனப்பகுதிகளில் இவை கன்னங்கரேல் என்ற நிறத்துடன் காணப்படும். உடம்பின் அளவிற்கு ஏற்றவாறு இதன் தலை வளர்ந்திருக்காது. இதன் தலையில் ஆங்கில எழுத்து ‘V’ யை ஒத்த வடிவம் காணப்படாது. பெண் ராஜநாகங்கள், குறிப்பாக தங்கள் முட்டைகளை அடைகாக்கும்போது அதிக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும். கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கும்.

ஒரு ஜெர்மன் விலங்கியலாளர் தன் நாட்டு விலங்குப் பூங்காவிற்காக ஒரு ஜோடி ராஜநாகத்தைப் பிடிக்க கர்நாடக மாநில வனப்பகுதிக்கு வந்தார். ஆண் ராஜநாகத்தைச் சிரமமின்றிப் பிடித்துவிட்டார். ஆனால் பெண் ராஜநாகத்தைப் பிடிக்க முயன்றபோது அது அவரைத் தீண்டிப் பரிதாபமாக உயிரிழந்தார். ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு, ‘ஓர் இனத்தில் ஆண்களைவிடப் பெண்களே ஆபத்தானவர்கள்’ என்று. அது இந்த ஜெர்மன் விலங்கியலாளர் விவகாரத்தில் உண்மையாயிற்று.

நாகப் பாம்புகளைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. இவைகளை நிறைய நாம் பார்த்திருப்போம். இவை ஆறடிகளுக்கு மேல் வளராது. நல்ல பாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆங்கில எழுத்து ‘V’ யை தலையில் அடையாளமாகக் கொண்டது. மற்றொன்றுக்கு தலையில் ஒரு வெள்ளைப் புள்ளி மட்டும் இருக்கும். இந்த அங்க அடையாளங்கள் இல்லாத நாகப் பாம்புகளும் உண்டு. நாகங்கள் பல வர்ணங்களில் காணப்படுகின்றன. எனவே வர்ணத்தை வைத்து இவற்றை அடையாளம் காண்பது கடினம். முட்டையிலிருந்து வெளிவந்தக் குட்டி நாகங்களுக்கும் விஷம் அதிகம். பிறந்த இரண்டாண்டுகளில் இவை அதிக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும். வயதாக ஆக அவை அடங்கிவிடும். பெண் நாகங்கள் ஒரே சமயத்தில் 15 முட்டைகள் வரை இடும். பொந்துகளிலும், மக்கிப்போன இலை தழைகளுக்கு மத்தியிலும் பெண் நாகங்கள் முட்டையிடும். புறா முட்டை அளவிலிருக்கும் நாகப் பாம்பின் முட்டைகள் மிகவும் மிருதுவானவை. இந்த முட்டைகள் பொறிக்க இளஞ் சூரிய வெப்பமும், ஈரப்பதமும் அவசியம். இந்த சூழ்நிலைகள் இல்லை என்றால் முட்டைகள் அழிந்துவிடும்.

கட்டு விரியன் சுமார் 3 அடி நீளம்வரை வளரும். மெலிதாக இருக்கும். கருப்பு நிறத்தில் சிறிய வெள்ளை வட்டங்கள் காணப்படும். கட்டு விரியன் மிக விரைவாக ஓடக்கூடியது. அதே சமயத்தில் இவைகள் கூச்ச சுபாவம் உடையவை. அதிகமாகப் பதற்றமடையும். கட்டுவிரியன்களைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்தால் அவைகள் ஓரிரு நாட்களில் இறந்து விடும்.

‘Colubrine’ பாம்புகள்
‘Colubrine’ பாம்புகள்

ராஜநாகம், நல்ல பாம்பு மற்றும் கட்டு விரியன் பாம்புகளை ஆங்கிலத்தில் ‘Colubrine’ பாம்புகள் என்று அழைப்பார்கள். இவைகளுடைய விஷம், கடிபட்டவரின் முழு நரம்பு மண்டலத்தையும் செயலிழக்கச் செய்துவிடும். மேல் குறிப்பிட்ட பாம்புகளுக்கு இரண்டு பற்கள் இருக்கும். நல்ல பாம்பின் பற்கள் கால் அங்குலமிருக்கும். ராஜநாகத்தின் பற்கள் அரை அங்குலமுடையது. கட்டு விரியனின் பற்கள் எட்டில் ஒரு பங்கு அங்குலமுடையது.

புல் விரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை ஆங்கிலத்தில் ‘Viperine’ பாம்புகள் என்று அழைப்பர். இவைகளுக்கு வாயின் இரு பகுதியிலும் ஒரு பல் இருக்கும். இந்தப் பற்கள் வாயின் உட்புறம் மடங்கிக் காணப்படும். தேவையானபோது இவ்வகைப் பாம்புகள் தங்களது பற்களை நேராக்கிக் கொள்ளும். கூடுதலாக இவ்வகைப் பாம்புகளால் தங்கள் பற்களை ஓர் அச்சில் சுழற்றவும் முடியும். கண்ணாடி விரியனின் பற்கள் ஓர் அங்குலமிருக்கும். இவைகளால் தோல் காலணிகள், காலுறைகள் ஆகியவற்றைத் துளைத்துக்கொண்டு உடம்பில் விஷத்தைப் பாய்ச்ச முடியும். கண்ணாடி விரியன் ஒரு தடிமனான பாம்பு. ஐந்து அடி நீளம் வரை வளரக்கூடியது. பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் உடம்பில் வைரம் போன்ற வடிவங்கள் மூன்று அடுக்குகளாகக் காணப்படும். இந்த வைர வடிவங்கள் ஒரு சங்கிலித் தொடர்புபோலக் காணப்படுவதால் கண்ணாடி விரியன்களுக்குச் சங்கிலி விரியன் என்ற பெயரும் உண்டு.

‘Viperine’ பாம்புகள்
‘Viperine’ பாம்புகள்

புல் விரியன்கள் சுமார் 2 அடி நீளம்வரை வளரக்கூடியது. பழுப்பு நிறத்திலிருக்கும். வெட்டு போன்ற வெள்ளை நிற வடிவங்கள் உடம்பில் காணப்படும். உடம்பில் கடினமான செதில்கள் இருக்கும். புல் விரியன்களை யாரேனும் தொந்தரவு செய்தால் அவை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும். இதனால் அதன் உடலிலிருக்கும் செதில்கள் கரடு முரடான ஒலிகளை ஏற்படுத்தும்.

Colubrine வகை பாம்புகளின் பற்களில் பள்ளங்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் வழியாக நஞ்சுப் பையிலிருந்து நஞ்சு வெளிப்படும். Viperine பாம்புகளின் பற்களின் நடுவே ஊசி போன்ற மெல்லிய வழித்தடத்தின் வழியாக நஞ்சு வெளியேறும். இதன் காரணமாகக் கடிபட்டவர் காலணிகள், காலுறைகள் அணிந்திருந்தாலும் Viperine பாம்புகளின் பற்களின் விஷம் கடிபட்டவரின் உடம்பில் நேரே சென்று ரத்தத்தில் கலந்துவிடும். இதுவே Colubrine வகைப் பாம்புகளின் விஷம் கடிபட்டவரின் உபகரணங்களில் பட்டு முழு விஷமும் அவரின் உடம்பில் ஏறாமல் தடைபட்டு விடும். Viperine பாம்புகளால் தீண்டப்பட்டத் துரதிஷ்டசாலிகள் உடனடி சிகிச்சையின்றிப் பிழைப்பது கடினம். Viperine பாம்புகள் தீண்டினால் ரத்தப்போக்கு ஏற்படும். அதிக வலியைக் கொடுக்கும்.

விஷப் பாம்புகள் தீண்டி எவ்வளவு நேரத்தில் ஒருவர் மாண்டுபோவார் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. கடிபட்டவரின் வயது, உடல் ஆரோக்கியம், வலிமை, பாம்பின் நீளம், அது ஏற்கெனவே ஏதேனும் மிருகங்களைத் தீண்டியிருக்கிறதா (அப்படியிருக்கும் பட்சத்தில் பாம்பின் விஷம் குறைந்து போயிருக்கும்), எவ்வளவு விஷம் ரத்தத்தில் கலந்திருக்கிறது போன்ற பல காரணிகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும்.

ஆனால் சராசரியாக ராஜநாகம் கடித்து 90 நிமிடத்தில் உயிர் போகும். கட்டு விரியன் தீண்டினால் இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்தில், நல்ல பாம்பு நான்கிலிருந்து ஆறு மணி நேரம் வரை, கண்ணாடி விரியன் தீண்டினால் பன்னிரண்டிலிருந்து முப்பத்தியாறு மணி நேரத்திற்குள், புல் விரியன் தீண்டினால் மூன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் உயிர் இழப்பு ஏற்படும்.

பாம்பின் விஷத்திற்கு மருத்துவ குணம் உண்டு. பல தீர்க்க முடியாத கொடிய வியாதிகளுக்கெல்லாம் அது மருந்தாக அமையலாம் என்று நம்பப்படுகிறது. இது இன்னும் ஆராய்ச்சிக்கு உட்பட்ட விஷயம். மனிதர்களின் மூலம் இந்த விஷப் பரீட்சை செய்வது ஆபத்தாக முடியும் என்பதால் இந்த ஆராய்ச்சிகளில் தயக்கம் காட்டப்படுகிறது. Viperine பாம்புகளால் ஏற்பட்ட ரத்தக்கசிவை கட்டுப்படுத்த அந்தப் பாம்புகளின் விஷத்தைச் சிறிய அளவில் பிரயோகப்படுத்தினால் பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பற்களைப் பிடுங்கும்போது ஏற்படும் ரத்தக் கசிவைத் தடுக்கப் பல் மருத்துவர்கள் Viperine பாம்புகளின் விஷத்தைச் சிறிய அளவில் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல் Colubrine பாம்புகளிலிருந்து எடுக்கப்படும் விஷம் காக்கா வலிப்பு மற்றும் இதர நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களுக்குச் சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.

பாம்புக் கடிக்கு மருந்து பாம்பின் விஷம்தான். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பாம்பின் விஷத்தைக் குதிரையினுள் கொஞ்சம் கொஞ்சமாக ஊசியின் மூலம் செலுத்துவர். ஆரம்பத்தில் சிறிதளவில் செலுத்தப்படும் விஷம் நாட்கள் ஆக ஆக அதிகப்படுத்தப்படும். இப்படியாகப் பாம்பின் விஷத்திற்கு எதிர்ப்புச்சக்தி பெற்ற குதிரைகளின் தொடையிலிருந்து ரத்தம் எடுக்கப்படும். அந்த ரத்தத்திலிருந்து விஷத்திற்கான மருந்து தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு பாம்புக் கடிக்கும் ஒரு மருந்து உண்டு. கடித்தது எந்தப் பாம்பு என்று தெரியவில்லை என்றால் அனைத்துவிதப் பாம்பின் விஷத்திலிருந்தும் தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்து ஊசியின் மூலம் கடிபட்டவருக்கு வழங்கப்படும்.

பாம்பின் விஷத்தை எடுப்பது சுலபம் (பழக்கப்பட்டவர்களுக்கு). மெல்லிய தோலால் மூடப்பட்ட ஒரு கண்ணாடி குடுவை மீது பாம்பின் கழுத்தைப் பிடித்து அழுத்தம் கொடுத்தால் அது விஷத்தைக் கக்கும். இப்படிக் கக்கப்படும் விஷம் குடுவையில் சொட்டுச் சொட்டாக விழும். கண்ணாடியின் குடுவையில் பாம்பை அழுத்தும்போது அதற்கு வெட்டுக்காயம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாகப் பாம்புகளிலிருந்து நஞ்சு எடுப்பது சுலபம். அவற்றைப் பிடிக்கப்போனால் தலையைத் தூக்கிக்கொண்டு படம் எடுக்கும். எனவே அவைகளைப் பிடிப்பது எளிது. கட்டுவிரியன்கள் அப்படி இல்லை. தன்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் உடம்பைச் சுற்றித் தலையை உள்ளே வைத்துக்கொள்ளும். தலையைப் பிடிப்பது கடினம். மேலும் விரியன்கள் மிக வேகமாகச் செயல்படுபவை.

நல்ல பாம்புகளைப் பக்குவப்படுத்துவது எளிது. பாம்பாட்டிகள் இந்தப் பாம்புகளின் பற்களையும், நஞ்சுப் பையையும் பிடுங்கி எடுத்து விடுவர். பிடுங்கப்பட்ட பற்கள் மீண்டும் வளரும். ஆனால் இதன் நஞ்சுப் பைகள் நீக்கப்பட்டதால் ஆபத்து ஏதுமில்லை. நஞ்சு, பற்களின் வழியாக வெளியேறாது.

ஆனால் விரியன்களின் நஞ்சுப் பையை நீக்க முடியாது. அவை மூளை மற்றும் வாயை ஒட்டி உள்ள பெரிய ரத்தக் குழாய்க்கு அருகாமையில் உள்ளது. இதன் பொருட்டு விரியன்களின் நஞ்சுப் பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினால் ரத்த இழப்பு ஏற்படுவதனாலும், மூளை பாதிப்படைவதனாலும் உடனே இறந்துவிடும். அதனால் பாம்பாட்டிகள் விரியன்களின் வாயின் மேல் மற்றும் கீழ் தாடைகளைத் தைத்துவிடுவர். உணவு கொடுப்பதற்காக வாரம் ஒருமுறை வாயிலிருந்து நேராக தொண்டை வரை ஒரு புனலைச் சொருகி அதன் மூலம் முட்டை கலவை ஊற்றப்படும்.

பாம்புகள் அதிகமாகச் சாப்பிடாது. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ அவைகள் ஓர் எலியையோ, தவளையையோ, பல்லியையோ அல்லது சிறு பறவைகளையோ உண்ணும்.

இந்தியாவில் விஷமற்றப் பாம்புகளின் வகைகள் அதிகம். அதில் குறிப்பிடும் படியானது மலைப் பாம்பு. பைத்தன் (Python) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். மலைப் பாம்புகள் 18 அடி வரை வளரும். மலேசியக் காடுகளில் மலைப் பாம்புகள் 35 அடி வரை வளரும். இவ்வகைப் பாம்புகள் ரெட்டிக்குலேட்டட் பைத்தன் (Reticulated Python) என்று அழைக்கப்படுகின்றன.

மலைப் பாம்பு (Python)
மலைப் பாம்பு (Python)

மலைப் பாம்புகளின் உணவு – சிறிய உருவங்களைக் கொண்ட எலி, முயல் தொடங்கி பெரிய மிருகங்களான பன்றி, மான் என்று அனைத்தும் அடங்கும். இரண்டாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, பர்மா காட்டில் 40 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று ஒரு ஜப்பானியச் சிப்பாயை ஹெல்மெட்டுடன் முழுங்கிவிட்டு பின்னர் கக்கி விட்டதாக செய்திகள் பிரசுரமாகியிருக்கின்றன.

மலைப் பாம்புகள் தங்களுடைய இரையை தன்னுடைய நீண்ட உடம்பினால் சுற்றி வளைக்கும். பின்னர் இரையை நெருக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இரையின் இதய ஓட்டம், ரத்த ஓட்டம் நின்ற பிறகு அதை முழுமையாக விழுங்கிவிடும். மலைப் பாம்புகளின் இரை செரிக்க பல நாட்கள் அல்லது சில வாரங்கள் பிடிக்கும்.

மலைப் பாம்பின் வாயின் மேல் பகுதியும், கீழ்ப் பகுதியும் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்காது. அது விரியும் தன்மை கொண்டது. அதனால்தான் தன் தலையின் அளவை விடப் பெரிய உருவத்தைக் கொண்ட விலங்குகளை மலைப் பாம்புகளால் விழுங்க முடிகிறது. பெரிய பிராணியை முழுங்கிய பிறகு மலைப் பாம்புகளால் நகர முடியாது. அப்படி நகர்ந்தால் இரை பாம்பின் உடலைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடும். நகர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், தான் விழுங்கிய உடம்பை அப்படியே கக்கிவிடும். மலைப்பாம்பு உணவை உட்கொண்டு நகரமுடியாமல் இருப்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மலைப்பாம்பு அதீத உறக்கத்தில் இருப்பது போன்று தோற்றமளிக்கும். அதனால்தான் நீண்ட உறக்கம் கொண்டிருப்பவரை மலைப் பாம்பு போல் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நய்யாண்டி செய்வார்கள். மலைப்பாம்புகள் தண்ணீரில் நன்றாக நீந்தக் கூடியவை.

மலைப்பாம்பு ஒருமுறை உணவு உட்கொண்டால் வெகு நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த உணவை உட்கொள்ளும். மலைப்பாம்பு ஒன்று சுமார் 2 வருடங்கள் உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மலைப்பாம்புகள் நூறு முட்டைகள் வரை இடும். தான் இட்ட முட்டைகளை அடைகாக்கும். முட்டைகளுக்குத் தேவையான சீதோஷணத்தை தன் உடம்பின் மூலமாக வழங்கும். குறிப்பிட்ட சீதோஷணம் இல்லையென்றால் முட்டை அழிந்து விடும். அதனால் முட்டை பொரிந்து குட்டிகள் வரும்வரை தாய்ப் பாம்பு அந்த இடத்தை விட்டு வராது. அந்த நாள் வரும் வரை அப்பாம்பு எந்த உணவும் உட்கொள்ளாது.

மலைப்பாம்பின் தோலிலிருந்து காலணிகள், பெல்ட்டுகள், கைப்பைகள் எனப் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தோலுக்காக மலைப்பாம்புகள் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன.

வெளிநாடுகளில் மலைப்பாம்புகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

மலைப் பாம்புகளைத் தவிர வேறு நிறைய விஷமற்ற பாம்புகளும் இருக்கின்றன. சில நிலத்தில் வாழ்வன. சில நன்னீரிலும் (freshwater) வாழ்கின்றன. இவற்றுள் மலைப் பாம்பு போல் தடினமான பாம்புகளும் உண்டு. சாட்டையை ஒத்த மெல்லிய மரப் பாம்புகளும் உண்டு. புழு போன்ற மண்ணுளிப் பாம்புகளும் இருக்கின்றன.

ஒரு வகையான மண்ணுளிப் பாம்பின் வால் தடித்துப் பெரிதாகத் தலைபோல் காட்சியளிக்கும். இதைப் பார்க்கும் மக்கள் இரட்டை தலைப் பாம்பு என்று ஆச்சரியம் அடைவர்.

பாம்புகளுக்கு ஒரு பொதுவான குணமுண்டு. அது விஷமுள்ள பாம்பாகட்டும் (ராஜநாகத்தைத் தவிர்த்து) அல்லது விஷமற்ற பாம்பாகட்டும். இவைகளுக்கு மனிதர்களைக் கண்டால் பயம். மனிதர்களிடமிருந்து விலகிச் செல்லவே பாம்புகள் விரும்பும். இவைகள் தானாக முன்வந்து மனிதர்களைத் தாக்காது. மனித நடமாட்டத்தை உணர்ந்தால் விலகி ஓடிச் சென்று விடும். கால் தவறி பாம்புகளை மிதித்து விட்டால் கொத்தப்படுவது உறுதி. பாம்புகள் கொத்துவது என்பது தங்களை தற்காத்துக்கொள்ள மற்றும் பயத்தினால் மட்டுமே. பாம்புகளுக்கு காதுகள் இல்லை. அவைகளால் சத்தங்களைக் கேட்கமுடியாது. ஆனால் உடலினால் அதிர்வுகளை உணரமுடியும்.

பாம்பாட்டியின் மகுடிக்கு பாம்பு ஆடுகிறதே என்றால், மகுடியில் வரும் சப்தம் கேட்டு பாம்புகள் ஆடுவதில்லை. பாம்பாட்டியின் உடல் அசைவுக்கும், அவர் கையில் வைத்து வாசிக்கும் மகுடியின் அசைவிற்கும் ஏற்றவாறே பாம்புகள் அசையும். இது மகுடிக்குப் பாம்பு ஆடுவது போன்ற தோற்றத்தை நமக்குக் கொடுக்கும். வீட்டில் பாம்பு நுழைந்து விட்டால் ‘பாம்பு’ என்று கத்தினால் பிரயோஜனமில்லை. காரணம், அந்த சப்தத்தை அதனால் கேட்க முடியாது. அதிர்வாக நடந்தாலோ அல்லது குச்சியால் தரையில் தட்டினாலோ பாம்புகள் அதிலிருந்து வரும் அதிர்வுகளை உணர்ந்து ஓடிவிடும்.

பாம்புகள் சட்டையை உரிப்பது என்பது அதனுடைய வெளித்தோலை உரிப்பதாகும். ஒவ்வொரு பாம்பும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தங்களது சட்டைகளை உரித்துக்கொள்ளும். நாம் காலுறைகளை எப்படிக் கழட்டுகிறோமோ அவ்வாறே பாம்புகளும் தங்கள் சட்டையை உள்ளிருந்து வெளிப்பக்கமாக உரித்துக்கொள்ளும். இது எப்படிச் சாத்தியமென்றால், பாம்புகள் கடினமான உள்ள பொருளின் மீதோ அல்லது கடினமான மேற்பரப்பிலோ தங்களுடைய உடலை உராயச் செய்யும். அப்படிச் செய்யும்பொழுது சட்டைக் கழன்று விடும்.

பாம்புகளில் குட்டி போடுபவையும் இனப்பெருக்கம் செய்யும் வகையும் (Viviparous) உள்ளது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் வகையும் (Oviparous) உள்ளது. விஷமுள்ளப் பாம்புகளிலும், விஷமற்றப் பாம்புகளிலும் இந்த இரண்டு வகைகள் காணப்படுகின்றன. உதாரணமாக, நாகப் பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால் கட்டு விரியன்கள் குட்டி போடுபவை. அதேபோல் விஷமற்றவையில் மலைப்பாம்புகள் முட்டையிடுபவை. போவாக்கள் (Boa) குட்டி போடுபவை.

ஐந்து வகை விஷப்பாம்புகளில் மனித நடமாட்டத்திற்கு அருகாமையில் வசிப்பவை நல்ல பாம்புகள்தான். ராஜநாகங்கள் முழுக்க முழுக்க வனங்களில் மட்டுமே காணப்படும். கண்ணாடி விரியன்கள் வனப்பகுதிகளிலும், புல் வெளிகளிலும் அதிகமாகக் காணப்படும். புல் விரியன்கள் பாலைவனப் பகுதிகளிலும், வறண்ட நிலங்களிலும் காணப்படும். கட்டு விரியனை அவ்வளவாக எளிதில் பார்த்துவிடமுடியாது.

பாம்பு கடித்துவிட்டால் கடிபட்ட இடத்தை துணியாலோ கயிற்றாலோ நன்கு கட்ட வேண்டும். விஷம் பரவாமல் இருக்க இது உதவும். பின்னர் கூர்மையான கத்தியால் அந்தப் பகுதியை கீறி அந்த இடத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுக்கவேண்டும். அந்த ரத்தத்துடன் விஷமும் வெளியே வந்துவிடும். இப்படி விஷத்தை உறிஞ்சும்போது, அது உறிஞ்சுபவருக்கு ஆபத்தைக் கொடுக்காது. காரணம் வாய் வழியாக உட்கொள்ளப்படும் விஷத்தால் எந்த பாதிப்பும் வராது.

உடற்பகுதியில் பாம்பு தீண்டியிருந்தால் மேற்சொன்ன முறையில் விஷத்தை நீக்க முடியாது. விஷத்தை உறிஞ்சி எடுப்பதில் திறமை வேண்டும். நேரமும் போதுமானதாக இருத்தல் வேண்டும். கைவசம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் இருந்தால் பாம்பு கடித்த இடத்தில் தடவினால் அது விஷத்தை முறியடிக்கும். கடிபட்ட இடத்தைக் கீறிவிட்டு மேற்சொன்ன முறையைச் செய்தால் உடலில் ஏறிய விஷத்தை விரைவில் முறியடிக்கலாம்.

சண்டைக் கோழிகளை வீரியப்படுத்துவதற்கு நல்ல பாம்பின் விஷம் அவற்றுக்குக் கொடுக்கப்படும். இது போன்று பாம்பின் விஷம் கொடுக்கப்பட்ட சண்டைக்கோழிகள் அசாத்தியமாக சண்டையிட்டு அதன் உரிமையாளருக்கு வெற்றியைத் தேடித் தரும்.

(தொடரும்)

பகிர:
SP. சொக்கலிங்கம்

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *