Skip to content
Home » ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

கரடி மாமா ஒரு சோம்பேறி

கானகத்தில் ஒரு குணங்கெட்ட மிருகம் உண்டென்றால் அது கரடிதான். கரடிகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாது. கரடிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள். இயற்கை, கரடிகளுக்கு நிறைய குறைபாடுகளைத் தந்திருக்கிறது.

Sloth Bear (தேன் கரடி) என்று அழைக்கப்படும் இந்திய வகைக் கரடிகளுக்குக் கண்ணும் சரியாகத் தெரியாது, காதும் சரியாகக் கேட்காது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக கரடிகளின் மோப்பச் சக்தி அதிகமாக இருக்கும்.

வனத்தில் மனிதர்களைப் பார்த்துவிட்டால் கரடிகள் முண்டியடித்துக்கொண்டு ஓடிவிடும். தப்பிக்க முடியாதபடி நிலைமை ஏற்பட்டால் மட்டுமே முரட்டுத்தனமாகத் தாக்கும். இந்தத் தாக்குதலுக்குக் காரணம் கரடியின் தைரியமின்மையும் பதற்றமும்தான். தனக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும், தனக்குத் தீங்கு ஏற்படுவதற்கு முன்னர் எதிரியைத் துவம்சம் செய்யவேண்டும் என்ற எண்ணமும்தான் காரணம்.

கரடி தன் பின்னங்கால்களில் நின்றுகொண்டு எதிரிகளைத் தாக்கும். எதிரிகளின் முகம் மற்றும் கண்கள் பதம் பார்க்கப்படும். கரடி தன்னுடைய கூரிய நகங்களால் எதிரியின் முகத்தைப் பிளந்துவிடும். பின்னர் முகத்தைக் கடித்துக் குதறி விடும். கரடிகளால் தாக்குண்ட நபர்களின் முகங்கள் பார்ப்பதற்குக் கொடூரமாக இருக்கும்.

கரடியின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்குக் காட்டில் வாழ்பவர்கள் கூர்மையானக் கோடரிகளை எடுத்துச் செல்வார்கள். கரடி தங்களைத் தாக்க முற்படும்போது அதனுடைய தலையில் ஓங்கித் தாக்குவார்கள், கரடியின் மண்டையோடு இரண்டாகப் பிளந்துவிடும். இம்மாதிரி தாக்கினால்தான் கரடியிடமிருந்து தப்பிக்க முடியும்.

கரடிகள் பயந்தாங்கொள்ளிகள் என்பதற்கு ஓர் உதாரணம். ஒரு வனப்பகுதியில் தாய் கரடி, தந்தை கரடி, மற்றும் அவற்றின் குட்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களை ஒரு சிறுத்தை எதிர்கொண்டது. சிறுத்தை அந்த மூன்று கரடிகளையும் தாக்கியது. தாக்குதலிலிருந்து தப்பிக்க குட்டிக் கரடி முதலில் ஓட்டம் எடுத்தது. பெரிய கரடிகள் இரண்டும் சிறுத்தையின் மீது எதிர்த்தாக்குதல் புரிந்தன. கொஞ்ச நேரத்தில் சிறுத்தையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இரண்டு கரடிகளும் ஓட ஆரம்பித்துவிட்டன. ஓடிய வேகத்தில் கண் மண் தெரியாமல் தந்தைக் கரடி ஒரு பாறையில் தடுமாறி மலையில் உருண்டு 100 அடி ஆழத்தில் உள்ள சமவெளியில் போய் விழுந்தது. இதில் அந்தக் கரடியின் இரண்டு முன் கால்களும் உடைந்து விட்டன. அடுத்த நாள் இந்தக் கரடியை மக்கள் ஈட்டியை வைத்துத் தாக்கிக் கொன்றனர்.

கரடிகளுக்குக் கறையான்கள் மற்றும் பூமியின் அடியில் கிடைக்கும் கிழங்குகள் என்றால் அலாதிப் ப்ரியம். இந்த உணவுகளை எடுக்கக் கரடிகள் எடுக்கும் முயற்சியைப் பார்க்கும்பொழுது மிகவும் வேடிக்கையாக இருக்கும். கரடிகள் கழைக்கூத்தாடிகள் போல நடந்துகொள்ளும். அது தன் உடலை முறுக்கி பல கோணங்களில் வளைந்து மிகவும் மெனக்கெட்டு அந்த உணவுகளை எடுக்கும். கரடிகளின் நாக்கு மிக நீண்டதாக இருக்கும். கரடிகள் தங்கள் நீண்ட நாக்கை கறையான் புற்றுகளின் உள்ளே விட்டு, அங்கு இருக்கும் கறையான்களை அப்படியே நாக்கினால் உறிஞ்சிச் சாப்பிட்டுவிடும். தேனை எடுப்பதற்கும் கரடியின் நாக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இந்த வேலைகளில் கரடிகள் ஈடுபடும்போது பலவிதமான விசித்திர ஒலிகளை எழுப்பும். எழுப்பப்படும் ஒலிகள் ஒரு சமயம் பைங்குழல் (bagpipe) இசைக்கருவியிலிருந்து வரும் ஒலியை ஒத்திருக்கும், மற்றொரு சமயம் பறக்கும் விமானப்படை விமானத்தின் ஒலியைப்போல் இருக்கும், வேறொரு சமயத்தில் சினங்கொண்ட வண்டு பறக்கும்போது ஏற்படும் ஒலியாகவோ அல்லது பொற்கொல்லன் இரும்புப் பட்டறையில் ஏற்படுத்தும் சத்தத்தைப் போலவோ ஒத்திருக்கும்.

வனங்களில் காணப்படும் விலங்குகளில் மிகவும் சோம்பேறி எது என்று கேட்டால் கரடி என்று சொல்லிவிடலாம். பள்ளங்களிலோ, பாறைகளுக்கு நடுவிலோ, குகைகளிலோ அல்லது மரத்தின் நிழலிலோ படுத்துக் குறட்டை விட்டு நன்கு உறங்கும். கரடியின் குறட்டைச் சத்தத்தைத் தொலைவிலிருந்துகூடக் கேட்கமுடியும். குறட்டையிடாமல் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அந்த வழியாக யாரேனும் செல்பவர்கள் கரடியின் மீது மிதித்து விடக்கூடும். அப்படி மிதிபட்ட கரடி, தன்னை மிதித்தவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கும்.

கரடிகள் பொதுவாக சைவ உணவையே உண்பவை. ஆனால் சில சமயங்களில் பூச்சிகளையும், புலியோ அல்லது சிறுத்தையோ கொன்று தின்று போட்ட அழுகிய மாமிசத்தையும் உண்ணும்.

காட்டுப் பன்றி ஒரு போராளி!

காண்பதற்குச் சற்று அருவெறுப்பான தோற்றம் என்று கூட சிலர் நினைக்கலாம். சிறிய உடம்பு, தட்டையான பெரிய முகம். அதில் கூர்மையாக வளைந்து கொம்புபோல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள். கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தோல். இவைதான் காட்டுப் பன்றிக்கான அடையாளங்கள். இவை அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் காட்டுப் பன்றியைப் பற்றி பலருக்குத் தெரியாத விஷயம் அது ஒரு போராளி. விடாது சண்டை போடும் போர்க்குணம் கொண்டது. வெறும் காட்டுப் பன்றி தானே என்று அதை ஏளனத்துடன் நெருங்கினால் பின்னர் அமர்க்களம்தான்.

பெரிய காட்டு மிருகங்களான புலி, சிறுத்தை, யானை இவையெல்லாம் மனிதன் சந்தடிபட்டாலே கண்ணில் படாமல் ஓடிவிடும். இதில் ஆட்கொல்லி மிருகங்கள் மட்டும் விதிவிலக்கு. ஆட்கொல்லி மிருகங்கள்கூட மனிதன் எதிர்பாராத நேரத்தில் மறைந்து நின்று தாக்கும். நேருக்கு நேர் வந்து தாக்குதல் நடத்தாது. தாக்கப்பட்டவர் சுதாரித்து நின்று ஆட்கொல்லி விலங்குகளை எதிர்த்தால் அவை ஓடிவிடும்.

காட்டுப் பன்றி பார்ப்பதற்குச் சாதுவாக இருக்கும். அதைச் சீண்டிவிட்டால் அதோகதிதான். தொந்தரவு செய்யாத வரையில் காட்டுப் பன்றி அதன் வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாகப் போய்விடும். ஆனால் மனிதனோ அல்லது வேறு ஏதோ மிருகமோ காட்டுப் பன்றியை உணவுக்காக வேட்டையாட முற்பட்டால், அது பெரிய இழப்புகளுக்குப் பிறகே சாத்தியமாகும். காட்டுப் பன்றிகள் தங்களையும், தங்கள் குட்டிகளையும் பாதுகாக்கக் கடைசி மூச்சு வரை போராடும்.

காட்டுப் பன்றிகள் தங்களுக்கு எதிராகச் சண்டையிட்ட புலிகளையும், சிறுத்தைகளையும் பல சமயங்களில் கொன்றிருக்கின்றன. துப்பாக்கியால் சுட்டு குண்டடி பட்டாலும் விடாது, சுட்டவரை எதிர்கொண்டு தாக்கும். அனுபவமுள்ள வேட்டைக்காரர்கள் காட்டுப் பன்றிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க அதன் மூளைக்குள் குண்டு பாயும் வண்ணம் சுட்டு அதை முற்றிலும் செயலிழக்கச் செய்வார்கள். வேறெந்தப் பகுதியில் சுட்டுக் காட்டுப் பன்றிகளை காயப்படுத்தினாலும் சுட்டவருக்கு ஆபத்துதான்!

தன்னைத் தாக்கியவரைக் காட்டுப் பன்றி சிறிய பீரங்கி போல வீச் என்று கத்திக்கொண்டே நேரடியாகத் தாக்கும். தாக்கியவரை நிலை குலையச் செய்யும். பின்னர் தன் கூர்மையான கொம்பு போன்ற பற்களால் தாக்கப்பட்டவரைக் குத்திக் கிழித்துக் காயப்படுத்தும். தப்பி ஓடியவரை விடாமல் துரத்தும். மூர்க்கமாகத் தாக்கும். அதே வேளையில் காட்டுப் பன்றிகள் மிகவும் புத்திசாலித்தனமாக, சாதுர்யமாகச் செயல்படும்.

தாக்குதலிலிருந்து ஓடித் தப்பியவர்கள் அப்பாடா என்று நினைக்கும் தறுவாயில், காட்டுப் பன்றிகள் வேறு திசையிலிருந்து வெளிப்பட்டு மறுபடியும் தன்னுடைய தாக்குதலைத் தொடுக்கும்.

காட்டுப் பன்றியுடன் சண்டையிட்டால் இரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஒன்று அது சண்டையிட்டுப் போராடி மடிந்துவிடும் அல்லது அதனை எதிர்த்தவர்கள் மடிந்துவிடுவார்கள். இதனாலேயே பல காட்டு மிருகங்கள் காட்டுப் பன்றியிடம் சண்டையிடுவதை, அதை வேட்டையாடுவதைத் தவிர்த்துவிடும். குட்டிக் காட்டுப் பன்றிகள் இதில் விதிவிலக்கு. காட்டுப் பன்றியை லாகவமாகக் கையாளத் தெரிந்தால்தான் அதை எதிர்த்துச் சண்டையிட முடியும்.

காட்டுப் பன்றியின் குணத்தால் கவரப்பட்டதால்தானோ என்னவோ பண்டைய பாரதத்தில் சக்தி வாய்ந்த ராஜ்ஜியங்கள் காட்டுப் பன்றியின் (வராக) உருவத்தைத் தங்களது சின்னங்களாக வைத்திருந்தனர். சாளுக்கியர்கள் தங்களது கோட்டைக் கொத்தளங்களிலும், நாணயங்களிலும் வராக உருவத்தைப் பொறித்திருந்தனர். குர்ஜர – பிரதிகார அரசர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ‘ஆதி வராக’ என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர். சோழர்களும் நான்காம் நூற்றாண்டிலிருந்து – 13 ஆம் நூற்றாண்டு வரை வராகத்தைத்தான் தங்கள் ராஜ்ஜிய முத்திரைகளில் பயன்படுத்தினர். இஸ்லாமிய மதத்தைத் தென்னிந்தியாவில் பரவவிடாமல் தடுத்த விஜயநகரப் பேரரசின் சின்னமும் வராகம்தான்.

பகவான் விஷ்ணுவும் தன்னுடைய மூன்றாவது அவதாரத்திற்குப் புலியையோ, சிங்கத்தையோ தேர்ந்தெடுக்கவில்லை. வராகத்தைத்தான் தேர்ந்தெடுத்தார். இந்திய இதிகாசப் புராணங்களில் வராகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கோயில்களில் வராகச் சிற்பங்கள் மிகப் பிரசித்தம்.

இறுதியாக காட்டுப்பன்றியிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள். 1) உருவத்தை வைத்து தப்பாக எடைபோடாதே, 2) எதிரி எவ்வளவு பலமானவனாக இருந்தாலும் விடாதே, காட்டுப்பன்றியைப் போல் எதிர்த்து நின்று துவம்சம் செய்!

(தொடரும்)

பகிர:
nv-author-image

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *