Skip to content
Home » அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில் அன்றைக்குப் பௌர்ணமி வேறு. முழுநிலவு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இத்துடன் கூடாரம் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே ஒரு குளம்.

கூடாரத்துக்கு வெளியே சாவகாசமாக அமர்ந்து, கண்முன்னே இருந்த இத்தனை விசயங்களையும் ரசிக்கலாம். ரசித்துக்கொண்டே கவிதைகள்கூட எழுதலாம். இல்லையா, குறைந்தபட்சம் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கலாம். ஆனால், நசீரால் இவை எதையுமே செய்ய முடியவில்லை. அவரது மனத்தின் ஆழத்தில், ஆழ்ந்த சிந்தனை கலந்த பதற்றம் தேங்கியிருந்தது. இந்தப் பதற்றத்துக்கு வலுவான காரணங்கள் இல்லாமலில்லை.

தந்தையின் மரணத்துக்குப் பிறகு 22 வயதில் சுலபமாக அரியணை ஏறியிருந்தாலும், முழுதாகப் பத்து வருடங்கள்கூட அவரால் ஆட்சி செய்ய முடியவில்லை. தன்னைவிடப் படை பலத்திலும் அந்தஸ்திலும், குறைவாக இருந்த ஒரு சுல்தானிடம் இரண்டு முறை தோற்று, உடன் பிறந்த தம்பிகளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காமல், ராஜ்ஜியத்தை விட்டே வெளியேற வேண்டியதாகிவிட்டது.

ராஜ்ஜியத்தைத் திரும்ப மீட்க வாய்விட்டுப் பலரிடம் உதவி கேட்டபோதும் எந்தத் திசையிலிருந்தும் ஆதரவுக்கரம் நீளவில்லை. நண்பர்கள் என நினைத்த பலரும் அவரைக் கைவிட்டனர். லாகூரை விட்டு வெளியேறிய பின், அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என யோசித்தபோது, சிந்து மாகாணத்தின் ஆட்சியாளரான அமீரின் முகம்தான் முதலில் நசீரின் நினைவுக்கு வந்தது.

அமீரை விட்டால் உதவி செய்ய இப்போது வேறு யாரும் இருப்பதாக நசீருக்குத் தெரியவில்லை. ஆனால், அவரைச் சந்திக்கச் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அமீரின் வசிப்பிடமான தட்டா, சிந்து மாகாணத்தின் தென் கோடியில் கடலோரத்தை ஒட்டிய பகுதியில் இருந்தது. நசீர் அப்போது இருந்ததோ, சிந்து மாகாணத்தின் வட கோடியைத் தொட்டுக்கொண்டிருந்த பஞ்சாப் மாகாணத்திற்குள்.

தட்டாவை அடைய, சிந்து மாகாணத்திற்குள் நுழைந்து, தார் பாலைவனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் பயணம் குறித்துத் திட்டமிட நசீருக்குத் துளியும் அவகாசமில்லை. ஏனென்றால், இரண்டு முறை தோற்கடித்து ராஜ்ஜியத்தைப் பறித்திருந்த சுல்தான், விடாப்பிடியாகப் பின்னால் துரத்திக் கொண்டு பஞ்சாப் வரை வந்துவிட்டிருந்தார்.

எனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல், எஞ்சியிருந்த ஆதரவாளர் படையுடன் தார் பாலைவனத்திற்குள் நுழைந்து, அங்கு நசீர் குழுவினர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயில், இரவிலோ கடும் குளிர். நம்பிக்கை அற்றுப்போய் பல வருடங்களாக உடனிருந்த சில ஆதரவாளர்கள் நசீரை விட்டு ஒரேடியாக விலகினார்கள். வேறு சிலரோ கடுமையான தட்பவெப்பம் காரணமாக வழியிலேயே மரணித்தார்கள்.

பயணத்தைத் திட்டமிட முடியவில்லை சரி, ஆனால் தட்டாவைச் சென்றடைய எத்தனை மாதங்கள் ஆகும் என்றுகூட நசீருக்குத் தெரியாது. ஆனால் இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதால், பல இழப்புகளுக்கு மத்தியில், பயணம் மட்டும் தொடர்ந்து நடைபெற்றது.

இத்தனை கொடிய நெடிய பயணத்துக்கு நடுவில், இதே சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அமீதா பானுவுடன் திருமணம் நடந்தது மட்டும்தான் கடந்த இரண்டு வருடங்களில் நசீருக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விசயம்.

அமீதாவின் தந்தை, நசீரின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். ஆனால் அமீதாவின் குடும்பம் அரச பின்னணியைக் கொண்டதல்ல. இதற்கும் அவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். அதற்கு நேரெதிராகச் சன்னி பிரிவைச் சேர்ந்த அரச குடும்பம் நசீருடையது.

இந்த வித்தியாசங்களை எல்லாம் நசீர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவருக்கு அமீதாவைப் பிடித்திருந்தது. அதைவிட, சிந்து மாகாணத்தில் இருந்து கிடைக்கப்போகும் அரசியல் உதவிகளை அவர் மலைபோல நம்பி இருந்தார். அமீதாவின் குடும்பம், சிந்து பகுதியில் கொஞ்சம் செல்வாக்குப் பெற்றவர்கள்.

எனவே மிகவும் கோலாகலமாக இல்லாவிட்டாலும், ஒரு நன்னாளில் இருவருக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்கள் ஓய்வுக்குப்பின், புதிய மனைவியையும் ஆதரவாளர்களையும் அழைத்துக்கொண்டு தட்டாவை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார் நசீர். அதே வெயில்-குளிர் எனப் பாலைவனம் மீண்டும் அவர்களை வாட்டியது.

ஒரு கட்டத்தில், நிறைமாதக் கர்ப்பிணியான அமீதாவை வைத்துக்கொண்டு நசீரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. எனவே அருகிலிருந்த அமர்கோட் ஆட்சியாளரான ராணாவிடம் தகவல் சொல்லியனுப்பப்பட்டது. இன்முகத்துடன் நசீர் குழுவினரை வரவேற்ற ராணா, அவர்களுக்குத் தஞ்சமளித்தார்.

எந்நேரமும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற நிலையில் இருந்த அமீதாவைத் தனது நம்பிக்கைக்குரிய சிலருடன் அமர்கோட்டில் விட்டுவிட்டு, ராணா அளித்த உதவிகளுடன், தட்டா நோக்கிப் புறப்பட்டார் நசீர்.

கிளம்பிய சில மணி நேரங்களிலேயே இருட்டிவிட்டதால் திட்டமிட்டபடி நசீரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. எனவே அமர்கோட்டிலிருந்து 20 மைல் தொலைவில், ஒரு குளக்கரையின் அருகே கூடாரங்கள் அமைத்து, தனது குழுவினருடன் தங்கினார் நசீர்.

குழந்தை நல்லபடியாகப் பிறக்க வேண்டுமென்ற பதற்றமும், கடந்த காலத்தோல்வியும், எதிர்காலம் குறித்த குழப்பங்களும், நசீரைத் தூங்கவிடாமல் செய்தன. பெளர்ணமி நிலவொளியில், இப்படி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நசீருக்கு, வெகு தொலைவில் இருந்து குதிரையில் யாரோ ஒருவர் கூடாரத்தை நோக்கி வரும் சத்தம் தெளிவாகக் கேட்டது. அருகே வந்ததும் பார்த்தால், அது தார்டி பெக் கான்.

இவ்வளவு நேரமும் பதற்றத்துடன் கலங்கிக்கொண்டிருந்த நசீரைத் தெளிவடையவைத்தது தார்டி கான் கொண்டு வந்த செய்தி. `இளவரசர் பிறந்துவிட்டார், தாயும் சேயும் நலம்’ என்பதே அது. மகன் பிறந்த செய்தியைக் கேட்டதும் ஆனந்தத்தில் மண்டியிட்ட நசீர், கடவுளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதுவே இந்நேரம் கோட்டையாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், பரிசு மழை என ராஜ்ஜியமே ஸ்தம்பித்திருக்கும். என்ன செய்வது, காலத்தின் கோலம். பாலைவனத்தில், எங்கோ ஓர் ஓரத்தில் மகனின் பிறப்பைக் கொண்டாட வேண்டிய நிலை.

நசீர் கலங்கவில்லை. மாறாகத் தன்னிடம் இருந்த பொருட்களைச் சுற்றியிருந்தவர்களுக்குப் பரிசாக அளித்து, மகன் பிறந்த நிகழ்வை மிக எளிமையாகக் கொண்டாடினார்.

மகன் பிறந்த செய்தி, நசீருக்குப் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. அடுத்த நாள் விடிந்தவுடன், அங்கிருந்து கிளம்பி, அருகிலிருந்த ஜுன் எனும் சிறு நகரத்தில், தனது கூடாரத்தை அமைத்து, அங்கே காத்திருக்க ஆரம்பித்தார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் அப்போது தொடங்கியது.

அமீதாவின் உடல்நிலை சீரானதும், தாயும் சேயும் பத்திரமாக ஜுன் நகருக்கு வந்து சேர்ந்தனர். பிஞ்சுக் குழந்தையைக் கண்டதும், அவனை ஆரத்தழுவிக்கொண்டார் நசீர்.

‘நசீர் அல்-தீன் முகம்மது’ எனும் இயற்பெயரைக் கொண்ட இந்த நசீர்தான், சுல்தான் ஷேர் கானிடம் தனது ராஜ்ஜியத்தைப் பறிகொடுத்த முகலாயப் பேரரசர் ஹூமாயூன்.

ஹூமாயூன் ஜுன் நகரில் ஆரத்தழுவிக்கொண்ட அவரது இந்த அன்பு மகன் தான், ‘அபு அல் ஃபத் ஜலாலுதீன் முகம்மது அக்பர்’ எனப் பெயரிடப்பட்டு, பின்னாளில் முகலாய சாம்ராஜ்ஜியத்தைப் பல உயரங்களுக்கு எடுத்துச் சென்று, அதன் முகவரியாக விளங்கிய பேரரசர் அக்பர்.

இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவர் அக்பர். முகலாயர்களின் ஆட்சி, இந்திய நிலத்தில் அமைவதற்கான முதற் காரணமாக பாபர் இருந்தாலும், அதற்கென ஓர் ஆழமான அடித்தளத்தை அமைத்த பெருமை அக்பரையே சாரும். அக்பர் அமைத்த வழியைப் பின்பற்றித்தான், அடுத்தடுத்து பதவிக்கு வந்த முகலாய மன்னர்கள் நிலையாக ஆட்சிபுரிந்தனர்.

படிப்பறிவு இல்லாவிட்டாலும், மன்னர் என்ற முறையில் முகலாய அரசு நிர்வாகத்தில் பலவிதப் புதுமைகளைப் புகுத்திய அக்பர், அதே நேரம், தீரம் மிக்க தளபதியாக முன்னின்று, முகலாயப் படையைப் பல போர்களில் திறமையாகவும் வழிநடத்தியுள்ளார். பல்வேறு விசயங்களில் வெற்றிக்கொடி நாட்டிய அக்பருக்குச் சொந்த அனுபவமே ஆகச் சிறந்த ஆசானாக இருந்து வழிநடத்தியது.

அக்பரின் ஆட்சியில், கலை, இலக்கியம், கட்டுமானம், நிர்வாகம் என வெவ்வேறு துறைகளில், இந்தியத் துணைக்கண்டம் பலவிதப் புதுமைகளைக் கண்டது. தனது அரசில், இனரீதியாகப் பாகுபாடு கண்டிராத அக்பர், திறமைகளுக்கு முதல் இடமளித்தார். கொஞ்சம் அசந்தாலும் பதம் பார்த்துவிடும் ‘மதம்’ என்ற கூரிய வாளை, அக்பர் கையாண்ட விதம் மிகவும் தனித்துவமானது.

அக்பரின் வாழ்க்கை வழியாக முகலாயப் பேரரசின் வளர்ச்சியையும், அன்றைய இந்தியத் துணைக் கண்டத்தின் நிலையையும் விவரிக்கும் முயற்சியே இந்நூல்.

(தொடரும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

4 thoughts on “அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!”

  1. Good start Ram.. 👍
    Every action is clearly visible to the reader as they read the story.. 👏
    Awaiting for the next chapter..

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *