கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த இந்த முதல் நான்கு வம்சங்களைச் சேர்ந்த சுல்தான்கள் அனைவருமே துருக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சுல்தான்கள் துருக்கியர்களாக இருந்தாலும் ஆப்கானியர்கள், ஈரானியர்கள், அரேபியர்கள், இந்திய இஸ்லாமியர்கள் என வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் டெல்லி அரசில் பணியாற்றினார்கள். அதேநேரம் பிற இனத்தவர்களைவிடத் துருக்கியர்களுக்கு மட்டும் டெல்லி அரசில் செல்வாக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
கிட்டத்தட்ட 250 வருடங்களாக இருந்த இந்தத் துருக்கியர்களின் ஆதிக்கம் 1451ஆம் வருடம் முடிவுக்கு வந்து, டெல்லி அரியணை ஆப்கானியர்களான லோதி வம்சத்திடம் சென்றது. இதனால் டெல்லி அரசின் முக்கியப் பதவிகளில் முதல் முறையாக ஆப்கானியர்கள் அமர்ந்தனர்.
அதிகாரம் முழுவதையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு இதற்குமேல் நம் காலம்தான் என ஆப்கானியர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது தவுலத்தின் அழைப்பின் பேரில் படையெடுத்து வந்தார் பாபர்.
பானிபட் போர்க்களத்தில் பாபரின் வெற்றி உறுதியானதும் அதுவரை லோதி அரசில் கோலோச்சிக்கொண்டிருந்த ஆப்கானியர்கள் பலரும் டெல்லியிலிருந்து பின்வாங்கி பீகார் பகுதியில் குடியேறினார்கள்.
பிறகு நடந்த கான்வா போரில் ராஜபுத்திரர்களையும் வென்று முகலாய அரசைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பாபரை பீகாரிலிருந்த ஆப்கானியர்கள் சீண்டிப்பார்த்தார்கள். இதனால் காக்ரா நதிக்கரையில் வைத்து ஆப்கானியர்களுக்கும் பாபருக்கும் இடையே மீண்டும் ஒரு போர் நடந்தது. போரில் பாபர்தான் வெற்றிபெற்றார். ஆனால் ஆப்கானியர்களுக்கு எதிராக எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார்.
அடுத்த வருடமே பாபர் மரணமடைய, முகலாய அரியணையில் அமர்ந்தார் ஹூமாயூன். அரியணை சுலபமாகக் கிடைத்திருந்தாலும் முகலாய ஆட்சி அமைந்து நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்ததால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் அவருக்கு முன்னால் இருந்தன.
கம்ரான், அஸ்காரி, ஹின்டால் என ஹூமாயூனுக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள். மூவருமே மாற்றாந்தாயின் மகன்கள். இவர்களில் ஹின்டாலுக்கு மட்டுமே ஹூமாயூன் மீது சகோதரப் பாசம் இருந்தது, மற்ற இருவருக்கும் அவரின் பெயரைக் கேட்டாலே ஆகாது.
ஹூமாயூன் பாதுஷாவாகப் பொறுப்பேற்றிருந்தாலும் காபூல்-காந்தஹார் பகுதி கம்ரானுக்குக் கொடுக்கப்பட்டது. இது போதாதென்று ஹூமாயூனிடமிருந்து பஞ்சாப்பைக் கைப்பற்றிக்கொண்டார் கம்ரான். நியாயமாகப் பார்த்தால் கம்ரானின் செயலுக்காக ஹூமாயூன் வெகுண்டெழுந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ இந்த விசயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
முன்பு மரணப்படுக்கையில் இருந்த பாபரிடம் எதற்காகவும் தம்பிகளின் உயிரைப் பறிக்க மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருந்தாலும், ஒன்றுவிட்ட தம்பிகளாகவே இருந்தாலும் அவர்கள் மீது பாசம் வைத்திருந்த காரணத்தினாலும், தன்னை ஆத்திரப்படுத்தும் வகையிலான தம்பிகளின் செயல்களைப் பொறுத்துக்கொண்டார் ஹூமாயூன்.
தம்பிகளிடம் பொறுமையாக இருந்தாலும் வேறு இருவரிடம் பொறுமையாக இருக்க ஹூமாயூன் விரும்பவில்லை. புதிதாக பீகார் சுல்தானாகியிருந்த ஷேர் கானும், குஜராத் சுல்தான் பகதூர் ஷாவும்தான் அந்த இருவர்.
பாபர் காலத்தில் ஒரு குறுநிலப் பகுதியின் ஆட்சியாளராக இருந்து, தன் சமோயோசித புத்தியுடன், நிர்வாகத் திறமையை வைத்து ஒரிரு வருடங்களிலேயே பீகார் சுல்தானாக உயர்ந்திருந்தார் ஷேர் கான். மிகக் குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி பெற்றிருந்த ஆப்கானியரான ஷேர் கான் குறித்து வந்த தகவல்கள் ஹூமாயூனை யோசிக்க வைத்தன.
எனவே 1532ஆம் வருடம் படையெடுத்துச் சென்று காசிக்குத் தெற்கில் அமைந்திருந்த சுனார் கோட்டையில் வைத்து ஷேர் கானைச் சிறைபிடித்தார் ஹூமாயூன். ஆனால் முகலாய அரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக ஷேர் கான் கொடுத்த வாக்கை நம்பி, ஆப்கானியர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிவிட்டார் ஹூமாயூன்.
பிறகு அதே வருடத்தின் இறுதியில் பாபரின் மகள் வழிப் பேரன் ஜமன் மிர்சா ஹூமாயூனுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டுவிட்டு, குஜராத் சுல்தான் பகதூர் ஷாவிடம் தஞ்சமடைந்தார். ஹூமாயூன் இந்த விசயத்தைக் கேள்விப்பட்டபோது சித்தூரில் இருந்தார் பகதூர் ஷா. இதனால் ஜமனுக்கு அடைக்கலம் அளித்த பகதூர் ஷாவைத் தண்டிக்க ஒரு பெரும் படையுடன் நேராக சித்தூருக்குக் கிளம்பினார் ஹூமாயூன்.
ஹூமாயூன் சித்தூருக்கு வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே அங்கிருந்து கிளம்பி மாண்டு, சம்பானீர் என ஒவ்வொரு இடமாகத் தனது ஜாகையை மாற்றிக்கொண்டே இருந்தார் பகதூர் ஷா. அவரை விடாமல் பின்தொடர்ந்து ஹூமாயூனும் இந்தப் பகுதிகளுக்கெல்லாம் சென்றார். கடைசியில் வேறு வழியில்லாமல் அப்போது போர்த்துகீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த டையூ பகுதிக்குள் புகுந்து தப்பித்தார் பகதூர் ஷா.
கடைசியில் சுல்தான் இல்லாத குஜராத் ராஜ்ஜியத்தைத் தனது தம்பி அஸ்காரியின் பொறுப்பில் விட்டுவிட்டு ஆக்ராவுக்குப் புறப்பட்டார் ஹூமாயூன். ஆனால் கிடைத்த வேகத்திலேயே குஜராத்தை இழந்துவிட்டு பின்னாலேயே ஆக்ரா வந்து சேர்ந்தார் அஸ்காரி. தந்தைக்குக் கொடுத்த வாக்கு ஒருபுறம், தம்பி மீதான பாசம் மறுபுறம் என இதையும் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார் ஹூமாயூன்.
0
சில படையெடுப்புகளுடன் அரசு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு அடுத்த சில வருடங்கள் ஆக்ராவில் இருந்தார் ஹூமாயுன். இதே காலகட்டத்தில் தனது படைபலத்தைப் பன்மடங்கு அதிகரித்துக்கொண்டார் ஷேர் கான்.
இதுமட்டுமல்லாமல் 1536ஆம் வருடத்திலிருந்து அடிக்கடி வங்காளப் பகுதிக்குள் நுழைந்து சூறையாடி, அங்கிருந்த பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பீகார் ராஜ்ஜியத்துடன் இணைக்கவும் ஆரம்பித்தார். இப்படி வங்காளத்தில் ஷேர் கான் செய்த அட்டூழியங்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போய் விசயம் ஹூமாயூனிடம் சென்றது. எனவே ஷேர் கானைக் கட்டுக்குள் வைக்க வங்காளத்துக்குச் சென்றார் ஹூமாயூன்.
ஹூமாயூன் வந்துகொண்டிருக்கும் செய்தி கிடைத்ததும் வங்காளத்திலிருந்த ஆப்கானியப் படை அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றது. ஆனால் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வங்காளத்துக்குள் நுழைந்த முகலாயப் படை, திடீரெனத் தொடங்கிய அடைமழையில் மாட்டிக்கொண்டது.
இதனால் வேறு வழியில்லாமல் ஓரிரு மாதங்கள் வங்காளத்திலேயே இருந்துவிட்டார் ஹூமாயூன். மழை விட்டதும் பலவிதமான இழப்புகளுடன் திரும்பி வந்துகொண்டிருந்த ஹூமாயூனை காசிக்கு வடகிழக்கே இருந்த சவுசாவில் வைத்து வீழ்த்தினார் ஷேர் கான்.
கங்கை ஆற்றுக்குள் குதித்து நூலிலையில் உயிர் தப்பிய ஹூமாயூன், ஆக்ரா சென்று படை திரட்டி வந்து கன்னோஜ் எனும் இடத்தில் வைத்து மீண்டும் ஷேர் கானைச் சந்தித்தார். ஆனால் மறுபடியும் ஷேர் கானிடம் தோற்றுப்போனார். போர் நடந்துகொண்டிருப்பது தெரிந்தாலும் பஞ்சாப்-காபூலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்ரான் ஹூமாயூனுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை.
வங்காளப் படையெடுப்பை மேற்கொள்வதற்கு முன்பு தகுந்த முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் எதையும் ஹூமாயூன் வகுக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை இது அதே பழைய ஷேர் கானை எதிர்த்து மேற்கொள்ளப்படும் படையெடுப்பு.
ஆனால் வங்காளத்தைத் தான் அபகரித்தால் ஹூமாயூன் வருவார் என்பது ஷேர் கானுக்கு முன்பே தெரியும். எனவே ஹூமாயூனைச் சாதுர்யமாக வீழ்த்த அனைத்துக் கணக்குகளையும் தெளிவாகப் போட்டுவிட்டுத்தான் ஆட்டத்தையே தொடங்கியிருந்தார் ஷேர் கான். அதனால் ஆட்டத்தின் முடிவில் முகலாய ராஜ்ஜியம் ஷேர் கான் வசமானது.
கன்னோஜில் தோற்றதும் அங்கிருந்து தப்பி லாகூருக்குச் சென்ற ஹூமாயூனைப் பின் தொடர்ந்து சென்றார் ஷேர் கான். அவ்வளவுதான், உடனடியாக அங்கிருந்து வெளியேறி சிந்து மாகாணத்துக்குள் நுழைந்து, பாலைவனத்தில் பயணப்பட்டு, அமீதா பானுவுடன் திருமணம் நடந்து, 1542ஆம் வருடம் அமர்கோட்டில் அக்பரும் பிறந்தார்.
ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்த ஹூமாயூன், மகன் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு இழந்த தனது ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்குமென உறுதியாக நம்பினார். ஆனால் ராஜ்ஜியத்தை மீட்கச் சிந்து மாகாணத்தில் அவர் எதிர்பார்த்த உதவிதான் கிடைக்கவில்லை.
எனவே சிந்து நதியைக் கடந்து மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு 1544ஆம் வருடம் பாரசீகத்தை அடைந்தார் ஹூமாயூன். அன்றைய பாரசீகத்தின் ஆட்சியாளர் ஷா டமஸ்ப், ஹூமாயூன் குழுவினரை வரவேற்று நன்றாக உபசரித்து, அவருக்கு உதவி செய்யவும் ஒப்புக்கொண்டார். ஆனால் உதவிக்குக் கைமாறாக ஹூமாயூன் ஷியா பிரிவைத் தழுவ வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
சஃபாவிட் வம்சத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்த அன்றைய பாரசீகத்தில் ‘ஷியா இஸ்லாம்’ ஆட்சி மதமாக இருந்தது. ஆனால் சஃபாவிட்களைப் போலில்லாமல் சமகாலத்தில் உருவாகியிருந்த ஓட்டோமன்களும் முகலாயர்களும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஷியாவோ, சன்னியோ அனைத்தும் இஸ்லாமுக்குள்தான் வருகிறது. இப்போது அவற்றைவிட உதவிதான் மிக முக்கியம் என நினைத்த ஹூமாயூன் ஷாவின் நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்தார்.
அகமகிழ்ந்து போன ஷா டமஸ்ப், கேட்டதை விடவும் அதிக பலத்தைக் கொண்ட ஒரு படையை ஹூமாயூனுடன் அனுப்பினார். அதை வைத்து 1545ஆம் வருடம் கம்ரானிடமிருந்து காபூல்-காந்தஹாரைப் பறித்துக்கொண்டார் ஹூமாயூன். (தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி தம்பிகளின் உயிரை மட்டும்தான் பறிக்கக்கூடாது என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்க!)
அடுத்த சில வருடங்கள் தன் குடும்பத்தினருடன் காபூலில் வசித்தார் ஹூமாயூன். இதுபோலத்தான் 40 வருடங்களுக்கு முன்பு அரியணையை இழந்து இதே காபூலுக்கு வந்து தன் குடும்பத்தினருடன் வசித்தார் பாபர். எனவே மீண்டுமொருமுறை வரலாறு திரும்பியிருந்தது.
நடந்ததையெல்லாம் எண்ணிப் பார்த்து, செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்பதற்கான தகுந்த அவகாசத்தைக் காலம் ஹூமாயூனுக்குத் கொடுத்தது.
இதுமட்டுமல்லாமல் ஹூமாயூன் தனது பால்ய காலத்தைத் தந்தை பாபருடன் காபூலில் கழித்ததைப் போலவே, அக்பரும் தனது பால்ய காலத்தைத் தந்தை ஹூமாயூனுடன் காபூலில் கழித்தார்.
காலம் சில நேரங்களில் விந்தையானதுதான் போல!
(தொடரும்)
Nice ending.