‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா
1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு வழியாகக் காபூலில் முடிவுக்கு வந்தது. கம்ரான் தவிர்த்து ஹூமாயூன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காபூலில் இருந்தனர்.
முன்பு ஷேர்கானுடன் நடந்த கன்னோஜ் போரில் தனக்கு உதவாமல் இருந்துவிட்டாலும் கம்ரானை மன்னித்து மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார் ஹூமாயூன். ஆனால் ஹூமாயூன் தன்னிடமிருந்து காபூலைப் பறித்துக் கொண்டதை கம்ரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே அண்ணனைப் பழி வாங்கச் சரியான நேரத்தை எதிர்பார்த்து ஆப்கானிய மலைப்பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
காபூல் கோட்டையில் ஹூமாயூன் குடும்பத்தினரின் செல்லப்பிள்ளை ஆகியிருந்தார் குழந்தை அக்பர். குழந்தையைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள மஹம் அங்கா, ஜிஜி அங்கா உட்பட ஏகப்பட்ட செவிலித் தாய்கள் இருந்தனர். இவர்களைவிடவும் அக்பரை நன்றாகக் கவனித்துக்கொண்ட மற்றொரு நபர் பெகா பேகம்.
பெகா பேகம், ஹூமாயூனின் முதல் மனைவி. சிந்து மாகாணத்தில் அமீதா பானுவைத் திருமணம் செய்ய ஹூமாயூன் முடிவெடுத்தபோது அதற்கு மறுப்புச் சொல்லாதவர். ராஜ்ஜியத்தை இழந்து கணவர் அலைந்து திரிந்த காலத்தில் பாரசீகம்வரைச் சென்று அவருக்குத் துணை நின்றவர். பட்டத்து ராணியாக அதிகாரத்துடன் வலம் வந்தாலும் யாரிடமும் அதிர்ந்துகூடப் பேசாத தன்மையுடையவர்.
இத்தனை கனிவுமிக்கவரான பெகா பேகத்துக்குப் பிறந்த இரு குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்துவிட்டன. ஆனால் விஷயம் தெரியாதவர்கள் பார்த்தால், இவர்தான் அக்பரின் தாயாக இருக்கக்கூடும் என நினைக்கும் அளவுக்கு அக்பரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார் பெகா பேகம்.
ஆக்ராவைவிடக் காபூலில் வசதிகள் குறைவுதான். ஆனால் பாபர் காலத்து மூத்த ஆட்கள் மத்திய ஆசியாவைப்போலவே தட்பவெப்பம் கொண்ட காபூலைத்தான் அதிகம் விரும்பினார்கள். மேலும் அவ்வப்போது ஹூமாயூன் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட விழாக்களால் அமர்க்களப்பட்டது காபூல்.
அரசு முறைப் பயணமாக ஹூமாயூன் வெளியே சென்றிருந்த சமயங்களில் காபூல் கோட்டையைக் கைப்பற்றத் திட்டமிட்டு ஓரிரு முறை தாக்குதல்கள் நடத்தினார் கம்ரான். அதில் ஒரு முறை சிக்கி கணப்பொழுதில் உயிர் தப்பினார் அக்பர்.
ஆனால் கம்ரானின் தாக்குதலில் மாட்டிக்கொண்டு ஹூமாயூனின் பாசத்துக்குரிய தம்பி ஹின்டால் இறந்துபோனார். ஒரு தம்பியால் மற்றொரு தம்பி இறந்து போனதை நினைத்து வேதனையுடன் வருத்தப்படுவதைத் தவிர ஹூமாயூனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
0
அக்பருக்கு ஐந்து வயதானதும் நாள், நட்சத்திரம், நேரம் என அனைத்தையும் பார்த்து 1547ஆம் வருடத்தின் இறுதியில் அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்தார் ஹூமாயூன். ஆனால் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் படிக்கும் செயல் அக்பருக்குப் பிடிக்கவில்லை.
அவருக்குப் பிடித்ததெல்லாம் புறாக்கள் பறப்பதை வேடிக்கை பார்ப்பது, வளர்ப்பு நாய்களுடன் விளையாடுவது, ஒட்டகங்களின் செயல்களைக் கூர்ந்து கவனிப்பது ஆகியவை மட்டும்தான்.
எனவே, பாடம் படிக்க ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே ஆசிரியர் வரும் நேரம் வந்துவிட்டால் சிட்டாகப் பறந்து எங்காவது விளையாடச் சென்றுவிடுவார் அக்பர். சில முறை சொல்லிப் பார்த்தும், ஓன்றிரெண்டு ஆசிரியர்களை மாற்றிப் பார்த்தும், எதுவுமே எடுபடாததால் அக்பரைப் படிக்கவைக்கும் முயற்சியைக் கைவிட்டார் ஹூமாயூன்.
இதனால் வாழ்க்கை முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்துவிட்டார் அக்பர். ஆனால் எந்தக் காலத்திலும் அதற்காக அவர் வருத்தப்பட்டது இல்லை. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாவிட்டாலும் ஓவியம் வரைய விரும்பிக் கற்றுக் கொண்டார் அக்பர்.
காபூலில் குடியேறியதும் ஓவியங்கள் வரைய ஒரு தனித் துறையை ஏற்படுத்தியிருந்தார் ஹூமாயூன். காபூலின் பனி மலைகளும், சினார் மரங்களும், மாதுளைத் தோட்டங்களும் முகலாய ஓவியங்களில் உயிர்பெற்றன. பாரசீகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களான மீர் சயீத் அலியும், அப்த் அல் சமதும் காபூலின் அழகை ஓவியங்கள் வழியாக மீள் உருவாக்கம் செய்தனர்.
சக வயது சிறுவர்களுடன் ஓடியாடி விளையாடித் திரிந்த அக்பரை அவருடைய ஒன்பதாம் வயதில் காபூலுக்குத் தெற்கே இருந்த கஜினி மாகாணத்தின் ஆளுநராக நியமித்தார் ஹூமாயூன். படிப்பில் நாட்டமில்லாவிட்டால் பரவாயில்லை, தேவைப்பட்ட விசயங்களை நேரடியாகக் கற்றுக்கொடுத்துவிடலாம் என அவர் முடிவெடுத்திருந்தார். அரசு நிர்வாகம் குறித்து சகல விசயங்களையும் அக்பருக்குக் கற்றுக்கொடுக்க கஜினியில் இருந்தவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதுஷாவின் உத்தரவையும் மீறக்கூடாது, அதே நேரம் சிறுவனான இளவரசரின் மகிழ்ச்சிக்கும் பாதிப்பு வரக்கூடாது, கொஞ்சம் திணறித்தான் போனார்கள் கஜினியில் இருந்த முகலாய அதிகாரிகள். ஆனால் அக்பரின் பொறுப்பாளராக கஜினிக்கு அனுப்பப்பட்டிருந்த முனிம் கான் நிலைமையைத் திறம்படச் சமாளித்தார்.
காபூலைச் சுற்றியிருந்த பகுதிகளில் அடிக்கடிச் சூறையாடலை நிகழ்த்திப் புதுப்புது பிரச்சனைகளை கம்ரான் ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் கஜினிக்குச் சென்ற ஆறு மாதங்களிலேயே காபூலுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார் அக்பர்.
0
1553ஆம் வருடம் காபூலுக்குத் தென்கிழக்கில் இருந்த உப்பு மலைத்தொடர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த கம்ரான் கைதுசெய்யப்பட்டு ஹூமாயூன் முன் நிறுத்தப்பட்டார். கம்ரானை என்ன செய்யலாம் என யோசித்தபோது தந்தைக்குக் கொடுத்த வாக்கு ஹூமாயூன் கண்முன் வந்து போனது.
ஆனால் இவ்வளவு நடந்தபிறகும் காம்ரானை மன்னித்து விட்டால் நிச்சயமாக அவர் அமைதியாக இருக்கமாட்டார். எனவே ஏதாவது ஒன்றைச் செய்து கம்ரானைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால் கொன்றுவிட மட்டும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஹூமாயூன்.
நீண்ட நேர யோசனைக்குப் பிறகு ‘நான் வெளியே சென்று திரும்புவதற்குள் கம்ரானைக் குருடாக்கிவிடுங்கள்’ என உத்தரவிட்டார் ஹூமாயூன். பாதுஷாவின் உத்தரவு முகலாய வீரர்களால் நிறைவேற்றப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு ஹஜ் யாத்திரைக்கு மக்கா சென்ற கம்ரானும், அஸ்காரியும் அங்கே நடந்த ஒரு விபத்தில் இறந்து போனார்கள்.
ஹூமாயூன் வரலாற்றை அவருடைய தம்பிகளைப் புறந்தள்ளிவிட்டு எழுதிவிட முடியாது. அதிலும் மிக முக்கியமாகக் கம்ரானை, ஏனென்றால் ஹூமாயூன் மீதான கம்ரானின் கோபத்தில் நியாயங்கள் இருந்தன.
பாபர் உயிருடன் இருந்தபோது அபினுக்கு அடிமையாக இருந்ததால் அவரது வெறுப்புக்கு ஆளானார் ஹூமாயூன். ஒரு கட்டத்தில் பாபருக்குப் பிறகு அரியணையேற கம்ரான்தான் சரியான ஆளாக இருக்கக்கூடும் எனக் குடும்பத்துக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன.
சுதாரித்துக்கொண்ட ஹூமாயூன், பாபரின் நன்மதிப்பை மீண்டும் பெற்று அவரின் இறப்புக்குப் பிறகு முகலாய அரியணையைக் கைப்பற்றினார். அதே நேரம் பாதுஷா கனவில் இருந்த கம்ரானைத் திருப்திப்படுத்த முகலாய சாம்ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
காக்ரா நதிக்கரையில் வைத்து ஆப்கானியர்களைத் தோற்கடித்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக பாபர் நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் நேரமின்மை. அடுத்தடுத்து இரண்டு போர்களைச் சந்தித்து ராஜ்ஜியத்தை நிர்வாகிக்கவும், அரசின் கட்டமைப்பை மேம்படுத்தவும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் பாபர். எனவே ஆப்கானியர்களைத் தோற்கடித்தாலும் தண்டிக்காமல் விட்டுவிட்டார். அதற்கடுத்த வருடமே அவர் இறந்தும் போனார். ஆனால் ஹூமாயூனுக்கோ நிறைய நேரமிருந்தது.
ஹூமாயூன், ஷேர் கான் தலைமையில் ஆப்கானியர்கள் தலையெடுத்த பிறகு சுனார் கோட்டைக்குப் படையெடுத்துப்போனவரை சரி. ஆனால் அங்கே அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எதையாவது எடுத்திருக்க வேண்டும். குறைந்தது தான் படையெடுத்து வந்ததும் உடனே பணிந்து போன ஷேர் கானைச் சந்தேகப்பட்டு அவரது நடவடிக்கைகளை ஆக்ராவிலிருந்தபடியே கண்காணித்திருக்கவாவது வேண்டும்.
ஆனால் இதில் எதையுமே செய்யாமல் சில வருடங்களுக்குப் பிறகு எந்தத் திட்டமுமின்றி ஆப்கானியர்களுக்கு எதிராக ஹூமாயூன் வங்காளத்துக்குப் படையெடுத்துச் சென்றது தவறு. ஷேர் கானை விடப் பலம் மிக்க படை இருந்தும் அவரிடம் மீண்டும் மீண்டும் தோற்றது பெருந்தவறு. இப்படித் தவறு மேல் தவறு செய்த ஹூமாயூனை நம்பித் தனது படைகளைக் கம்ரான் கொண்டு வராமல் இருந்தது நியாயமான விசயம்தான்.
ராஜ்ஜியத்தை இழந்து நாடோடியாகத் திரிந்த சமயத்தில் தன் தவறுகளை உணர்ந்தார் ஹூமாயூன். தவறுகளைத் திருத்திக்கொள்ள அப்போது அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு வாய்ப்பு மட்டுமே. வாய்ப்புடன் சேர்த்து உதவியும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உதவியை வைத்து மட்டும் டெல்லியை மீட்டுவிட முடியாது என்பது ஹூமாயூனுக்குத் தெரியும்.
எனவே தனது நிலையை மேலும் உறுதியாக்கிக்கொள்ள முன்பு கம்ரானுக்கு வழங்கப்பட்ட காபூல்-காந்தஹார் பகுதிகளைக் கைப்பற்றுவதைத் தவிர ஹூமாயூனுக்கு அப்போது வேறு வழியிருக்கவில்லை. ஆனால் இதைக் கம்ரானிடம் சொல்லிப் புரிய வைக்க முடியாத நிலையில் அவர் இருந்தார். ஏனென்றால் இனி எப்போதுமே ஒட்ட வைக்க முடியாத அளவுக்கு இருவருக்குமிடையே மிகப் பெரிய விரிசல் ஏற்கெனவே உண்டாகிவிட்டது.
அண்ணன்-தம்பியாகவே இருந்தாலும் அரியணை என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முன்னுரிமை என்ற வழக்கத்தைக் காலங்காலமாக தைமூரியர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதிலும் அரியணையைக் கைப்பற்றப் பல ரத்த ஆறுகள் சர்வ சாதாரணமாக ஓடிய நிகழ்வெல்லாம் வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துள்ளன.
ஆனால் அப்படியெல்லாம் நடந்துகொள்ளாமல் தந்தைக்குக் கொடுத்த வாக்கு ஒரு பக்கம், தம்பி மீதான பாசம் மறுபக்கம் என இரண்டுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவித்த ஹூமாயூனை ஹின்டாலின் மரணமும், அக்பரின் பாதுகாப்பின்மையும் மாற்றியிருந்தது.
அப்போதும்கூட கம்ரானின் உயிரைப் பறிக்காமல் அவரின் கண்களை மட்டும் குருடாக்க உத்தரவிட்டு, தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் கடைசி வரை காப்பாற்றினார் ஹூமாயூன். ஆனால் தம்பியைக் குருடாக்கியதற்காகப் பல நாட்கள் வருந்தியிருக்கிறார்.
தான் எடுத்த முடிவுகளும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் சேர்த்தே பாதித்ததை உணர்ந்ததாலோ என்னவோ, தன்னைப்போல மகனும் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் அக்பரைத் தயார்ப்படுத்துவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டார் ஹூமாயூன்.
தந்தையை மட்டுமல்லாமல் தாத்தாவையும் மிஞ்சிய மன்னராகப் பிற்காலத்தில் புகழ்பெற்றார் அக்பர். ஆனால் மகனின் திறமைகளைப் பற்றி ஓரிரு விசயங்கள் அறிந்திடும் முன்பே மரணம் ஹூமாயூனை வெகு சீக்கிரமாக அழைத்துக்கொண்டது.
(தொடரும்)
Thanks for writing.