கன்னோஜ் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்து டெல்லியில் அரியணையேறிய ஷேர் கான், ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். 1545ஆம் வருடம் கலிஞ்சர் கோட்டையைக்* கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் அவர் இறந்துபோனார். ஷேர் கானுக்குப் பிறகு முடிசூடிக்கொண்டார் அவரது மகன் இஸ்லாம் ஷா.
ஷேர் கான் இறந்துபோன அதே வருடம்தான் கம்ரானிடமிருந்து காபூலைப் பறித்தார் ஹூமாயூன். எதிரி உயிருடன் இல்லாவிட்டாலும் டெல்லியைக் கைப்பற்றும் அளவுக்கு நிலைமை சாதகமாக இல்லாததால் காபூலில் இருந்தபடியே டெல்லியில் நடப்பதை நோட்டமிட்டுக்கொண்டிருந்தார் ஹூமாயூன்.
1554ஆம் வருடத்தின் இறுதியில் இஸ்லாம் ஷா இறந்த செய்தி ஹூமாயூனை எட்டியபோது கொஞ்சம்கூடத் தாமதிக்காமல் 3000 வீரர்களுடன் பன்னிரெண்டு வயதான அக்பரையும் அழைத்துக்கொண்டு டிசம்பர் மாதம் சிந்து நதியைக் கடந்தார் ஹூமாயூன்.
இஸ்லாம் ஷா இறந்த பிறகு வலுவான தலைமை இல்லாததால் ஆப்கானியப் படை சிதறி, சிறிய அளவிலான தன்னாட்சிப் பகுதிகள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்திருந்தன. பல பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு நிலைமை மோசமாக இருந்தது. இந்தக் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது ஹூமாயூனுக்கு எளிதான காரியமாகிப்போனது.
முதலில் லாகூரையும், பிறகு டெல்லியையும் கைப்பற்றிய ஹூமாயூன், ஏறத்தாழப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு முகலாய பாதுஷாவாக டெல்லி அரியணையில் அமர்ந்தார். ஒரு வழியாக இழந்ததை மீட்டுவிட்ட நிம்மதியுடன் ஹூமாயூன் இருந்தபோது, அவருடன் முதல்முறையாக டெல்லிக்கு வந்திருந்த அக்பர் பல மடங்கு ஆனந்தத்தில் திளைத்தார்.
காபூலில் இருந்த புறாக்களையும் ஒட்டகங்களையும் இத்தனை வருடங்களாகப் பார்த்து அலுத்துப்போயிருந்த அக்பருக்கு இந்தியாவிலிருந்த சிவிங்கிப் புலி, சிங்கம், யானை, கட மான் போன்ற புதுவகையான விலங்குகள் அனைத்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அடுத்த சில மாதங்கள் ஓவியங்கள் வரைவது, விலங்குகளுடன் விளையாடுவது எனப் பொழுதைக் கழித்துக்கொண்டு அவ்வப்போது பிறருடன் வேட்டைக்கும் சென்று வந்தார் அக்பர்.
0
முன்பு பாபர் இறந்த பிறகு ஆக்ராவில் அரியணையேறியிருந்தாலும் டெல்லியில் இருந்தபடி ஆட்சி செய்ய விருப்பப்பட்டார் ஹூமாயூன். அதற்குத் தோதாக டெல்லி சுல்தான்கள் காலத்தில் கட்டப்பட்ட லால் கோட், துக்ளகாபாத், பெரோஸ் ஷா கோட்லா எனப் பல கோட்டைகள் அன்றைய டெல்லியில் இருந்தன.
இத்தனை கோட்டைகள் இருந்தாலும் தனக்கென புதிதாக ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பது ஹூமாயூனின் ஆசை. அதன்படி யமுனை நதிக்கரையில் தீன் பனா** என்ற பெயரில் ஒரு கோட்டையை அவர் டெல்லியில் கட்ட ஆரம்பித்திருந்தார். ஆனால் தீன் பனாவின் கட்டுமானம் முடிவதற்குள் கன்னோஜ் போர் தொடங்கியதில் அதில் தோற்கடிக்கப்பட்ட அவர் இந்தியாவைவிட்டே வெளியேற வேண்டியதாகி இருந்தது.
அப்போது ஹூமாயூனை தோற்கடித்திருந்த ஷேர் கான், விட்ட குறை, தொட்ட குறையாக இருந்ததை முழுமையாகக் கட்டி முடித்து தீன் பனாவில் குடியேறினார். இப்போது ஆப்கானியர்களிடமிருந்து மீண்டும் டெல்லியைக் கைப்பற்றிய ஹூமாயூன், தன் கனவுக் கோட்டையான தீன் பனாவிற்குள் குடியேறி அங்கிருந்தபடி முகலாய ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
இத்தனை வருட கால இடைவெளியில் இழந்த ராஜ்ஜியத்தை மீட்கும் மன உறுதியை ஹூமாயூன் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அதை நிறைவேற்றுவதில் பலர் அவருக்குப் பக்கபலமாகத் துணை நின்றதையும் நாம் மறுக்க முடியாது. அப்படித் துணை நின்றவர்கள் பட்டியலில் முதன்மையானவர் பைரம் கான்.
இந்தியாவை விட்டு வெளியேறிய காலம் முதல் ஹூமாயூனுடன் இருந்த பைரம் கான் ஒரு தலைசிறந்த முகலாய விசுவாசி. இந்த டெல்லி படையெடுப்பை மேற்கொள்ளத் தன் சொந்த முயற்சியில் காந்தஹார் பகுதியிலிருந்து 5000 பேர் கொண்ட ஒரு பெரும் படையை அவர் திரட்டிக்கொண்டு வந்திருந்தார்.
ஆட்சிக்கும் அரசியலுக்கும் இப்படிப்பட்ட விசுவாசமான நபர்கள் உடனிருப்பது அவசியம். அதிலும் சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கத் தன்னலமின்றித் தன் குருதியைக் கொடுக்க நினைக்கும் ராஜ விசுவாசிகள் மிக மிக அவசியம். ஒரு மன்னர் எவ்வளவுதான் திறமைசாலியாக, வீரம் சொரிந்து, புஜபலப் பராக்கிரமத்துடன் இருந்தாலும், விசுவாசமான நபர் ஒருவர் அருகே இல்லையென்றால் அந்த மன்னரால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கக்கூட முடியாது.
அதிலும் ஒடிசலான தேகம், குறுகிய தாடியுடன் கூடிய மெலிந்த முகம், காபா அங்கியுடன் நீளமான தொப்பி ஒன்றை அணியும் ஹூமாயூனை முன்பின் தெரியாதவர்கள் யாராவது தன்னந்தனியாகப் பார்த்தால் முகலாய பாதுஷா என்று ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
இப்படிப்பட்ட ஹூமாயூன் ராஜ்ஜியத்தை இழந்து, நாடோடியாகத் திரிந்து, பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் மன உறுதியுடன் இழந்ததைத் திரும்ப மீட்டார் என்றால் அதற்குப் பின்னால் பைரம் கான் போன்ற விசுவாசிகளின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்ததை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படித் தன்னுடன் இருந்த விசுவாசிகள் பலருக்கும் முகலாய அரசில் பதவிகளை அளித்தார் ஹூமாயூன். அப்படிப் பதவி பெற்றவர்களில் பாரசீகத்திலிருந்து வந்திருந்த சில ஷியாக்களும் அடக்கம். இதனால் உலகிலேயே முதல் முறையாக ஷியா இஸ்லாமியர்களும், சன்னி இஸ்லாமியர்களும் இணைந்து பணியாற்றிய இடமானது முகலாய அரசு.
0
சில மாதங்கள் கழித்து பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநராக அக்பரை நியமித்தார் ஹூமாயூன். புதிய பொறுப்பாளராக பைரம் கானும், தேவைகளைக் கவனித்துக்கொள்ள மஹம் அங்காவும் அக்பருடன் பஞ்சாப்புக்குச் சென்றனர்.
டெல்லியில் அரசு நிர்வாகத்தைக் கவனித்ததுபோக மீதமிருந்த நேரத்தில் அவ்வப்போது வாசிப்பில் ஈடுபடுவார் ஹூமாயூன். இதற்காகவே தீன் பனாவுக்குள் இருந்த ஷேர் மண்டல் என்றழைக்கப்பட்ட எண்கோண வடிவிலான அழகிய இரண்டடுக்குக் கட்டிடத்தை ஒரு நூலகமாக அவர் மாற்றியிருந்தார்.
சோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ஹூமாயூன், இதே ஷேர் மண்டலின் மாடியில் நின்றுகொண்டு வானில் தோன்றும் நட்சத்திரங்களைப் பார்ப்பது வழக்கம். அப்படித்தான் 1556ஆம் வருடம் சனவரி மாதம் 24ஆம் தேதி இரவு ஷேர் மண்டலின் மாடியில் நின்றபடி வானில் தெரிந்த வெள்ளிக் கோள் குறித்து ஒரு சோதிடருடன் அவர் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது தொழுகைக்கான அழைப்பு வர, கீழே செல்ல வேண்டும் என்று நினைத்த ஹூமாயூன் படிகளில் வேகமாக இறங்கினார். அவர் சென்ற வேகத்தில் கால் இடறியதில், படிகளிலேயே விழுந்து உருண்டு கீழே இருந்த தரையில் அவரது தலை மோதியது. இதனால் சுயநினைவை இழந்த ஹூமாயூன் மூன்று நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார். அவர் இறப்பையடுத்து அம்ரித்சருக்கு வடக்கே கலாநவுர் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த அக்பருக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
அப்போது அக்பருடன் பஞ்சாபிலிருந்த பைரம் கானுக்கும் ஹூமாயூன் இறந்துவிட்ட செய்தி கிடைத்த நிலையில், முதல் வேலையாக கலாநவுர் தோட்டத்தில் செங்கற்களை வைத்து அரியணை மாதிரி இருக்கை ஒன்றை அமைத்து அதில் அக்பரை அமர வைத்து அப்போதே அவரை புதிய முகலாய பாதுஷாவாக அறிவித்தார் பைரம் கான். அவசரகதியில் பைரம் கான் இப்படிச் செய்ததற்கு வலுவான காரணம் இருந்தது.
தைமூரியர்கள் வழக்கப்படி ஒரு மன்னர் மரணமடைந்ததும் பங்காளிகள் பலர் அரியணைக்குப் போட்டியாளர்களாகக் கிளம்பி வருவது இயல்பான விசயம். ஆனால் அப்போது டெல்லி அரியணையை முகலாயர்களிடமிருந்து கைப்பற்ற ஆப்கானியப் பகையாளிகளான சிக்கந்தர் ஷா பஞ்சாபிலும், அடில் ஷா பீகாரிலும் காத்துக்கொண்டிருந்தனர்.
மேலும் அருகிலிருந்த குஜராத், மால்வா, ராஜஸ்தான் பகுதிகளின் ஆட்சியாளர்களுக்கும் ஏற்கெனவே டெல்லி மீது ஒரு கண் இருந்தது. இதில் ஹூமாயூன் உயிருடன் இல்லை என்ற செய்தி வெளியே பரவ ஆரம்பித்தால், எந்தப் பக்கமிருந்து வேண்டுமானலும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்.
எனவே பிரச்சனை யார் வடிவத்தில் வந்தாலும் அதைச் சமாளிக்கப் படை வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். அதிலும் தலைவன் இல்லாத படையை யாராலும் மிக எளிதாகச் சிதறடித்துவிட முடியும். அதனால்தான் அக்பரைப் புதிய தலைவராக (பாதுஷாவாக) அறிவித்து முகலாய வீரர்களின் விசுவாசத்தை அவரை நோக்கி மடைமாற்றினார் பைரம்கான். மேலும் பஞ்சாபில் இருந்தபடியே ராஜ்ஜியத்தைப் பாதுகாப்பதற்குத் தேவைப்பட்ட நடவடிக்கைகளை நாலாபக்கமும் முடுக்கிவிட்டார் பைரம்கான்.
தந்தை இறந்துபோன செய்தியைக் கேட்ட நாளிலிருந்து துக்கம் அக்பரைப் பீடித்திருந்தது. மகனின் வருங்காலம் நன்றாக அமைய வேண்டுமென்ற எண்ணத்தில் பல விசயங்களைப் பார்த்துப் பார்த்து அவர் செய்திருந்தாலும் என்றைக்குமே ஹூமாயூன் கண்டிப்பான தந்தையாக இருந்தது கிடையாது. அதிலும் அக்பருக்குப் பிடிக்காத விசயங்களை ஒரு நாளும் அவர் வற்புறுத்தியதில்லை. மஹம் அங்காவும், அட்கா கானும் எவ்வளவு முயற்சித்தும் சில நாட்களுக்கு அக்பரின் கவலையை மறக்கடிக்க முடியவில்லை.
ஒரு பக்கம் அக்பர் இப்படிக் கவலையில் இருக்க, மறுபக்கம் அவருடன் பஞ்சாபில் இருந்த பலரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் ஒவ்வொரு நாளையும் கடந்துகொண்டிருந்தனர். திடீரென ஒரு நாள் அவர்கள் தலையில் இடியாக இறங்கியது அந்தச் செய்தி.
ஆக்ராவும் டெல்லியும் ஆப்கானியர்கள் வசமானது!
(தொடரும்)
_______
*மத்திய இந்தியாவில் புலிகளுக்குப் பெயர்போன பன்னாவுக்கு அருகிலிருந்தது கலிஞ்சர் கோட்டை.
**தீன் பனாவின் மிச்சம்தான் இன்று டெல்லியில் இருக்கும் ‘புராணா கிலா’ (Purana Qila).