காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின் மரணத்துக்குப் பிறகு ஹூமாயூனின் நம்பிக்கையைப் பெற்ற நபர்களில் ஒருவராக மாறி கஷ்ட காலத்திலும் அவருடனே இருந்தார்.
பைரம்கான் மீது ஹூமாயூன் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை காரணமாகவே அக்பரின் பொறுப்பாளராக அவர் பஞ்சாபுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இக்கட்டான சூழ்நிலையில் அக்பரைப் புதிய பாதுஷாவாக அறிவித்து, தன் மீது ஹூமாயூன் வைத்திருந்த நம்பிக்கையை அவரது இறப்புக்குப் பிறகும் காப்பாற்றினார் பைரம்கான்.
பஞ்சாபில் அக்பர் பாதுஷாவாகப் பொறுப்பேற்றதும் பைரம்கானைத் தனது பிரதம அமைச்சராக நியமித்தார். அக்பர் நியமித்தார் என்று சொல்வதைவிட பைரம்கான் தன்னையே நியமித்துக்கொண்டார் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
பதவிக்கு வந்ததும் அரசு சம்பந்தப்பட்ட விசயங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டார் பைரம்கான். ஒரு வகையில் பார்த்தால் இது சரிதான். அக்பருக்கு அனுபவம் இல்லாததால் தனக்கேற்ற முடிவுகளை எடுத்து முகலாய ராஜ்ஜியத்தை அவர் காப்பாற்றினார், ஆனால் அதே அதிகாரம் அவரைத் தவறுகள் செய்யவும் வைத்தது.
பிரதம அமைச்சர் என்ற முறையில் பைரம்கான் எடுக்கும் முடிவுகளுக்கு உடன்படாதவர்கள் சிறையிலடைக்கப்பட்டு அதில் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் உச்சகட்டமாக நடந்த சம்பவம் ஹூமாயூனின் நன்மதிப்பைப் பெற்றிருந்த தார்டி பெக் கானின் மர்ம மரணம். அதே நேரம் அவரை அனுசரித்துச் சென்றவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன.
அன்றைய முகலாய அரசில் பைரம்கானுக்குச் சமமான அதிகாரத்திலிருந்த அட்கா கானுக்கும், முனிம் கானுக்கும் அவரது நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தின. ஆனால் அப்போது அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதென்ற சூழல் இருந்ததால் இருவரும் அமைதியாக இருந்துவிட்டனர்.
முகலாய அரச குடும்பத்துப் பெண்கள் காபூலிலிருந்து டெல்லிக்கு வந்தபிறகு பைரம்கானின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் புகார்கள் செல்லவே, அவரைத் தட்டிவைக்கும் வேலைகள் திரைமறைவில் நடக்க ஆரம்பித்தன.
0
அக்பருக்கும் பைரம்கானுக்கும் இடையேயான உறவு அதுவரை சுமுகமாகவே இருந்தது, அதிலும் அக்பர் எப்போதுமே அவரை ‘கான் பாபா’ என்று மரியாதையுடன்தான் அழைப்பார். ஆனால் இந்த விசயத்தில் அக்பரை உள்ளே இழுக்காமல் பைரம்கானின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாதென்பதால் அமீதா பானுவும், மஹம் அங்காவும் பைரம்கானை எதிர்த்து நடக்குமாறு அக்பருக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களின் அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டாலும் சிக்கலான நேரத்தில் முகலாய அரியணையில் அமரவைத்து, தன்னையும் ராஜ்ஜியத்தையும் பாதுகாத்த பைரம்கானை நேரடியாக எதிர்க்க அக்பர் விரும்பவில்லை.
எனவே தன் எதிர்ப்பை மறைமுகமாகக் காட்டப் பிறரின் ஆலோசனைகளுடன் அரசு சம்பந்தப்பட்ட முடிவுகளைச் சுயமாக எடுக்க ஆரம்பித்தார் அக்பர். பைரம்கானின் தலையீடு இல்லாமல் அக்பர் இப்படித் தனித்து இயங்க ஆரம்பித்ததும், பைரம்கான் குறித்த புகார்கள் அக்பரிடம் குவிய ஆரம்பித்தன.
பைரம்கான் தன்னிச்சையாகச் செயல்படுகிறார், பிறரை அவமதிக்கிறார், பலரைத் தண்டிக்கிறார் என்பது அனைத்துமே உண்மைதான். ஆனால் அவரைக் குறிவைத்து அக்பரிடம் புகார்கள் குவிந்ததற்குப் பின்னால் ஒரு வகையில் ஷியா-சன்னி அரசியலும் இருந்தது.
ஷியாவான பைரம்கான் படக் ஷான் பகுதியில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவருடைய முன்னோர்கள் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள். சன்னி பெரும்பான்மைவாத அரசில் ஷியா ஒருவர் மன்னருக்கு அடுத்த இடத்தில் இருந்தது அதுவரை உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை. இதனால் சகலவித அதிகாரங்களுடன் வலம் வந்த பைரம்கான் மீது முகலாய அரசிலிருந்த சன்னிகளுக்கு இயல்பாகவே வெறுப்பு ஏற்பட்டது. அந்த வெறுப்பு அக்பரிடம் புகார்களாகச் சென்றது.
அக்பர் சுயமாக இயங்க ஆரம்பித்ததும், அவருக்கும் பைரம்கானுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி உருவாக ஆரம்பித்தது. இதனால் பைரம்கானின் செல்வாக்குக்காக அவரைச் சுற்றி வந்த பலரும் ஒவ்வொருவராக அவரை விட்டு விலக ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் அரசிலிருந்து தான் ஒதுக்கப்படுவதை உணர்ந்த பைரம்கான் தன் செல்வாக்கைப் பிறருக்கு உணர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் தகுதியற்ற சில நபர்களை உயர் பதவிகளில் அமர்த்தினார்.
பைரம்கானைக் கவிழ்க்கச் சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தவர்கள் அவர் இவ்வாறு செய்த தவறுகளை ஒன்றுக்கு இரண்டாக இட்டுக்கட்டி அக்பரிடம் பற்ற வைத்தனர். ஒவ்வொரு முறையும் இப்படிப் புகார்கள் வரும்போதெல்லாம் அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்வார் அக்பர். ஆனால் மேல் நடவடிக்கைகள் எதுவுமே இருக்காது.
இவ்வளவு ஏன், அக்பர் தனித்து இயங்க ஆரம்பித்ததும் ஒன்றிரெண்டு முறை அவருக்கும் பைரம்கானுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும் தனது மரியாதைக்குரிய ‘கான் பாபா’ மீது நடவடிக்கை எடுக்கவோ அவரின் அதிகாரங்களைக் குறைக்கவோ அக்பர் விரும்பவில்லை. ஆனால் கத்திரிக்காய் முற்றினால் ஒருநாள் கடைவீதிக்கு வந்தாக வேண்டும். அப்படித்தான் அந்த நாளும் இறுதியில் வந்தது.
0
ஒருநாள் பைரம்கான் நடந்து வரும்போது அரண்மனை யானைகள் சில தறிகெட்டு ஓடின. இதனால் ஆத்திரமடைந்த பைரம்கான், தனிப்பட்ட முறையில் அக்பருக்குத் தெரிந்திருந்த அந்த யானைகளின் பாகன்களைக் கொல்ல உத்தரவிட்டார். விசயத்தைக் கேள்விப்பட்டதும் அக்பர் துடிதுடித்துப்போனார். அதற்குமேலும் பைரம்கான் விவகாரத்தில் அவர் அமைதியாக இருக்க விரும்பவில்லை.
பாதுஷாவாகத் தன் ஆளுமையை பைரம்கானுக்கு உணர்த்த நினைத்த அக்பர், 1560ஆம் வருடத்தின் தொடக்கத்தில் ராஜ்ஜியம் முழுவதும் இருந்த முகலாய அரசு முக்கியஸ்தர்களைத் தனக்கு முன்பு வரும்படி உத்தரவிட்டார். அக்பரின் உத்தரவு வரப்பெற்ற அனைவரும் நேரடியாக டெல்லிக்கு வந்து பாதுஷா மீதான தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். விசயத்தைக் கேள்விப்பட்டதும் பதறிய பைரம்கான் தன் தரப்பு நியாயங்களை விளக்க அக்பரிடம் தூதுவர்களை அனுப்பினார்.
பதிலுக்கு அவர்கள் மூலமாகவே பைரம்கானுக்குக் கடிதம் அனுப்பிய அக்பர் ‘என்றைக்கும் என்னுடைய கான் பாபாவான உங்கள் மீது எனக்கு அன்பு இருக்கும், நீங்கள் மக்கா யாத்திரைக்குச் செல்லுங்கள்’ என அறிவுறுத்தியிருந்தார்.
மக்கா யாத்திரைக்குச் செல்லுங்கள் எனப் பாதுஷா ஒருவரிடம் கூறினால் அது பெருமை அல்ல அவமானம். இனி எப்போதும் என் கண் முன்னே வராமல் மக்காவுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுங்கள் என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம். மன்னிக்க முடியாத தவறுகள் செய்யும் அரச விசுவாசிகளுக்கு மரணத்துக்குப் பதிலாகக் கிடைக்கும் ஒரு வகையான தண்டனை இது.
அக்பரின் கடிதம் கிடைத்ததும் ஓரு சிறிய ஆதரவாளர் குழுவுடன் டெல்லியிலிருந்து கிளம்பி பஞ்சாபுக்குள் நுழைந்தார் பைரம்கான். அக்பருக்கு எதிராக அவர் கலகத்தில் ஈடுபடலாம் என உளவுச் செய்தி வந்ததால் அட்கா கான் தலைமையில் ஒரு படை பின்தொடர்ந்து சென்று, ஜலந்தருக்கு வடக்கே தல்வாரா எனும் இடத்தில் அவரைத் தடுத்து நிறுத்தியது.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அங்கே வந்த அக்பர், பைரம்கானைத் தனக்கு அருகே அமரவைத்து இறுதியாக ஒருமுறை அவருடன் பேசினார். ‘அனைத்தையும் கைவிட்டுவிட்டு மக்காவுக்குச் செல்லுங்கள்’ எனக் கனிவோடு ஆனால் உறுதியான குரலில் அறிவுறுத்தினார்.
அப்போது சில வருடங்களுக்கு முன்பு நடந்த காட்சி ஒன்று பைரம்கான் கண்முன் வந்துபோனது.
அன்று தந்தையின் மரணத்தைக் கேள்விப்பட்டு வருத்தத்தில் இருந்த சிறுவனை இதே பஞ்சாப்பில் வைத்து பாதுஷாவாக்கியிருந்தார் பைரம்கான். இன்று அதே சிறுவன் கம்பீரமாக அமர்ந்து தன்னிடம் கட்டளையிடும் குரலில் பேசியதைக் கேட்டதும் தடுமாறிவிட்டார். அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரத் தயங்கின. அக்பரின் பேச்சுக்குத் தலையசைப்பதைத் தவிர அப்போது வேறு எதுவும் அவருக்குத் தோன்றவில்லை.
வருத்தப்படும் சூழலாக இருந்தாலும் அவர் தன் மனதுக்குள் அக்பருக்காகப் பெருமைப்பட்டுக் கொண்டார். அதன்பிறகு ஜலால் என்றும் மகனே என்றும் இத்தனை நாட்களாகத் தான் அழைத்து வந்த முகலாய பாதுஷாவிடமிருந்து இறுதியாக விடைபெற்றுக்கொண்டார் பைரம்கான்.
ராஜ விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக நிச்சயமாக பைரம்கானைக் குறிப்பிடலாம். வழிகாட்டத் தலைவன் இல்லாத சூழ்நிலையில் ஆப்கானியப் படைகளை எதிர்த்துப் பானிபட்டில் போரிடும் முடிவை அவர் அளவுக்கு உறுதியாக வேறு யாராவது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை வீரர்களின் பேச்சைக் கேட்டுப் பானிபட்டில் போரிடாமல் காபூலுக்குத் திரும்பியிருந்தால் முகலாயர்களின் வரலாறு மாறியிருக்கலாம். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் போரில் பங்கேற்று ராஜ்ஜியத்தை மீட்ட பைரம்கானின் துணிவு பாராட்டுக்குரியது.
அதேநேரம் எவ்வளவு பெரிய விசுவாசியாக இருந்தாலும் அந்த விசுவாசத்துக்கும் ஒருநாள் சோதனை வரும். அதுதான் பைரம் கானுக்கும் நடந்தது. அக்பர் சுயமாக இயங்க ஆரம்பித்ததும் அதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் ராஜ்ஜியத்துக்கெனச் செய்த கடமைகளைத் தனது தனிப்பட்ட சாதனையாக எடுத்துக்கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்தது தவறு.
மேலும் விசுவாசத்தின் பலனாகக் கிடைத்த அதிகாரத்தைச் சொந்த விருப்பு வெறுப்புக்காக பைரம்கான் பயன்படுத்தியிருக்கக்கூடாது. ஆனால் அவர் பயன்படுத்தினார். விளைவு, அதிகார ஏணியிலிருந்து சறுக்கிக் கீழே விழுந்தார்.
அக்பரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மக்கா செல்ல குஜராத் வழியாகப் பயணப்பட்டுக் கொண்டிருந்த பைரம்கானை, அவரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிய எதிரிகள் சிலர் கொன்றனர். முகலாய ராஜ்ஜியத்துக்காக உழைத்த அவர் இறுதியில் அந்தக் காரணத்துக்காகவே இறந்தும்போனார்.
பைரம்கான் இறப்புக்குப் பிறகு அவரது மகன் அப்துல் ரஹீமை அரசுப்பணியில் சேர்த்துக் கொண்டார் அக்பர். பின்நாளில் ஒரு தேர்ந்த கவிஞராக மட்டுமல்லாமல் தன் திறமையால் ‘கான்-இ-கானன்’ (கானுக்கெல்லாம் கான்) என்ற பட்டத்துடன் அக்பர் அமைச்சரவையின் நவரத்தினங்களில் ஒருவராக அவர் உயர் பதவி வகித்தது தனிக்கதை.
(தொடரும்)