1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார்.
ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர் கோட்டை அக்பரின் புதிய வசிப்பிடமானது. அடுத்த சில வருடங்களில் நான்கு நுழைவாயில்கள், எழுபது அடியில் பிரம்மாண்ட மதில் சுவர் எனப் பல புதிய கட்டுமானங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட இந்தப் பதல்கர் கோட்டைதான் பின்னாளில் ஆக்ரா கோட்டை என்றழைக்கப்பட்டது.
ஆக்ராவுக்குக் குடிபெயர்ந்ததும் வேட்டையாடுவதைத் தன் முக்கியப் பணியாக்கிக்கொண்டார் அக்பர். ஆக்ராவைச் சுற்றியிருந்த காடுகள் அக்பரின் வேட்டைக்களமானது. அப்போது வேட்டையாடியது போக பொறிவைத்துப் பல மிருகங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டன. அப்படிப் பிடிக்கப்பட்ட மிருகங்களை வளர்க்க ‘ஷிக்கர் கானா’ என்றழைக்கப்பட்ட ஒரு பிரத்யேகமான இடம் ஆக்ராவில் உருவாக்கப்பட்டது.
மிருகங்களைப் பிடிக்கக் காட்டில் வைக்கப்படும் பொறிகளில் சிவிங்கிப்புலி சிக்கிவிட்டால் உடனடியாக அக்பருக்குத் தகவல் அனுப்பப்படும். தகவல் கிடைத்தவுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு உடனடியாக அங்கு வரும் அக்பர், பொறியில் மாட்டியிருக்கும் சிவிங்கிப்புலியைத் தனி ஆளாகப் பிடித்துக்கட்டி அதை ஷிக்கர் கானாவுக்குக் கொண்டுவந்து, பின் வாரக்கணக்கில் அதைப் பழக்கும் முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்.
வேட்டையாடுவதைத் தாண்டி அக்பருக்கு அப்போது மிகவும் பிடித்த மற்றொரு விஷயம் சேவல் சண்டை. இதனாலேயே பாதுஷாவுக்கு மரியாதை செலுத்தவரும் அரசு அதிகாரிகள் கையோடு ஒரு சேவலைக் கொண்டுவர வேண்டுமென்ற விசித்திரமான உத்தரவு சில காலம் அமலில் இருந்தது.
18 வயதைக் கடந்திருந்தாலும் சிறார்களிடம் இருக்கும் குறும்புத்தனம் அந்த வயதிலும் அக்பரிடம் குறைவில்லாமல் இருந்தது. வேட்டையாடச் செல்லும்போது தன் பாதுகாப்புக்காக வரும் வீரர்களை ஏமாற்றிவிட்டுத் தன்னந்தனியாகக் காட்டுக்குள் சுற்றித்திரிவது, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நினைத்தபோதெல்லாம் ஆக்ரா கோட்டைக்கு அருகிலிருந்த கிராமங்களுக்குத் தனியாகச் சென்று வருவது, அந்தக் கிராமங்களில் நடக்கும் விழாக்களில் சாதாரணக் குடிமகன்போலக் கலந்துகொண்டு ஆடிப்பாடுவது எனப் பல விஷயங்களை அப்போது விரும்பிச்செய்தார் அக்பர்.
யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய ராஜ்ஜியம் எப்படி இருக்கிறதென்று தெரிந்துகொள்ளவே அக்பர் அப்படியெல்லாம் நடந்துகொண்டார், ஆனால் அதில் அவரது குறும்புத்தனமும் கலந்திருந்தது. வேட்டை, விலங்குகள், விளையாட்டு என இவற்றின்மீது அக்பர் தன் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தபோது, முகலாய அரசு நிர்வாகம் மஹம் அங்காவின் கண் அசைவில் இயங்கியது.
மஹம் அங்காவின் கணவர் நதீம் கான் ஹூமாயூனின் நீண்டகால விசுவாசி. விசுவாசத்தின் பிரதிபலனாகக் காபூலில் குழந்தை அக்பரைப் பார்த்துக்கொள்ளும் தலைமை செவிலித் தாயானார் அங்கா.
காபூல் கோட்டையில் கம்ரான் தாக்குதல் நடத்தியபோது அக்பரைக் காப்பாற்றியது, ஹூமாயூனின் டெல்லி ஆக்கிரமிப்பின்போது அக்பருடன் இந்தியாவுக்கு வந்தது, தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அக்பருக்கு ஆறுதலாக இருந்தது, பைரம்கானை வீழ்த்த அக்பருக்கு ஆலோசனை கூறியது எனப் பல சிக்கலான நேரங்களில் அக்பருக்குத் துணைநின்றார் மஹம் அங்கா.
அக்பர் மீதான அங்காவின் இந்த அர்ப்பணிப்பு அவரை முகலாய அரசின் முக்கியஸ்தர்களில் ஒருவராக மாற்றியது. அதிலும் பைரம்கானின் வெளியேற்றத்துக்குப் பிறகு அக்பரின் தலைமை ஆலோசகரான அங்கா பிரதம அமைச்சர் முனிம்கானைவிட அதிகாரம் பெற்ற நபராக மாறினார். இதனால் ஒருகட்டத்தில் அங்காவின் குடும்பத்தினர் அரச குடும்பத்துக்கு நிகரான செல்வாக்குடன் வலம் வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு நபர் அங்காவின் மகன் ஆதம்கான்.
வளர்ப்புத் தாயான அங்காவைத் தன் தாய் அமீதாபானுவுக்கு நிகரான இடத்தில் வைத்திருந்த அக்பர், அவரின் வார்த்தைகளைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பினார். அக்பரின் இந்த நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அங்கா, தன் முடிவுகளைப் பாதுஷாவின் முடிவு எனச் சொல்லி அரசுப்பொறுப்பில் இருந்தவர்களிடம் வேலை வாங்கினார்.
ஹூமாயூன் இறந்தபிறகு அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்ட பெகா பேகம் டெல்லியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட, புனிதயாத்திரை சார்ந்த பயணங்களில் தீவிரமானார் அமீதா பானு. இப்படி அரச குடும்பத்தைச் சேர்ந்த அக்பருக்கு நெருக்கமான இரு பெண்களும் ஆக்ராவில் இல்லாமல்போனது ஒரு வகையில் அரசு அதிகாரத்தை வசப்படுத்த அங்காவுக்கு உதவியது.
0
அன்றைய மத்திய இந்தியாவின் மேற்குப்பகுதியில் இருந்தது மால்வா ராஜ்ஜியம். அடர்ந்த காடுகளில் யானைகள், புலிகள், மான்கள் எனக் குறைவில்லாத கானுயிர்களுடன் நர்மதை, தபதி, சம்பல் நதிகள் மூலமாக வற்றாத இயற்கை வளங்களும் கொட்டிக்கிடந்த ஓர் அழகுப் பிராந்தியம்தான் மால்வா. விந்திய மலைத்தொடர் மீது அமைந்திருந்த மால்வாவின் தலைநகரான மாண்டுவில் இருந்து கீழே தெரியும் நர்மதைப் பள்ளத்தாக்கை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
இப்படி இயற்கையின் செழிப்பு மிதமிஞ்சியிருந்த மால்வா ராஜ்ஜியத்தின் சுல்தானாக இருந்தார் பாஸ் பகதூர். தந்தைக்குப் பிறகு உடன்பிறந்த சகோதரர்களைக் கொன்றுவிட்டு அரியணையேறிய பாஸ் பகதூருக்கு இரண்டு விஷயங்கள்மீது பெருங்காதல் இருந்தது, ஓன்று இசை, மற்றொன்று மது.
ஆட்சிக்கு வந்த புதிதில் அரசு அலுவல்களை முடித்தபிறகு, ஒரு கையில் மதுக்கோப்பையையும் மறுகையில் நடனப்பெண்களையும் ஏந்திக்கொண்டு விடியவிடிய இசை மழையில் நனைந்துகொண்டே இருப்பார் பாஸ் பகதூர். அப்படிப்பட்ட ஒரு கலா ரசிகர்!
ஒரு கட்டத்தில் இரவு பகல் வித்தியாசங்களைத் தாண்டி இசையும் மதுவும் எல்லைமீறிச் சென்றன. அரசாங்கமாவது அலுவலாவது எனக்கு இசையும் மதுவும் போதும் என அவற்றிலேயே முழுநேரம் மூழ்கிப்போனார் பாஸ் பகதூர். இதனால் மால்வா அரசு நிர்வாகம் முழுவதுமாகச் சீர்கெட்டது.
ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுக்கொண்டிருந்த முகலாய அரசுக்கு இந்த உதவாக்கரை சுல்தானின் சீரற்ற ஆட்சி மால்வாவைக் கைப்பற்றப் போதுமான காரணமாக இருந்தது. அதற்குத் தோதாக ஒரு வருடத்துக்கு முன்புதான் மத்திய இந்தியாவின் நுழைவாயில் என்றறியப்படும் குவாலியர் கோட்டையைக் கைப்பற்றியிருந்தது முகலாயப்படை. குவாலியரிலிருந்து தென்மேற்காகச் சென்றால் மால்வாவின் தலைநகர் மாண்டு வந்துவிடும். எனவே ஒரு நன்னாளில் ஆதம்கான் தலைமையிலான முகலாயப்படை மால்வாவுக்குச் சென்றது.
மால்வா படைகளை வீழ்த்தி மிக எளிதாக மாண்டு கோட்டையைக் கைப்பற்றியது முகலாயப்படை. போரில் தோற்ற கையோடு நொடிப்பொழுதில் மாண்டுவிலிருந்துத் தப்பித்துச் சென்றார் பாஸ் பகதூர். கணக்கிடமுடியாத அளவுக்குப் பொக்கிஷங்களும், நூற்றுக்கணக்கான யானைகளும் முகலாயப்படை வசமானது.
நியாயமாகப் பார்த்தால் கைப்பற்றிய அனைத்தையும் ஆக்ராவுக்கு அனுப்பிவிட்டு நல்ல பிள்ளையாக ஆதம்கான் நடந்திருக்கவேண்டும். ஆனால் சொற்ப அளவிலான பொக்கிஷங்களுடன் சில யானைகளை மட்டும் ஆக்ராவுக்கு அனுப்பிவிட்டு மாண்டுவில் பாஸ் பகதூர் இல்லாத குறையைப் போக்க ஆரம்பித்தார் ஆதம்கான். அதாவது இசை, மது, மாது என முழுநேரமும் கேளிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
மால்வாவிலிருந்து வந்ததைப் பார்த்தவுடன் அது ஆதம்கான் செய்த மோசடி என்பதைப் புரிந்துகொண்டார் அக்பர். இதைத் தனிப்பட்ட முறையில் தனக்கு நடந்த அவமரியாதையாக எண்ணிக் கொதித்துப்போன அக்பர், உடனடியாக முனிம்கானை அழைத்து அக்ராவைப் பார்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுவிட்டு, நம்பிக்கைக்குரிய சிலருடன் குதிரையில் கிளம்பி மால்வாவுக்குப் புறப்பட்டார்.
கோபத்துடன் அக்பர் கிளம்பிச் சென்றதைக் கேள்விப்பட்ட அங்கா அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள நீண்டநேரம் எடுத்துக்கொள்ளவில்லை.
முன்பு பைரம்கான் விஷயத்தில் அமீதா பானு அறிவுரை கூறியபோது உடனடியாக எந்த எதிர்வினையும் ஆற்றாமல் பொறுமைகாத்த அக்பர், தன் கோபம் எல்லைமீறியதும் பைரம்கானை ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற்றினார். ஆனால் இன்று ஆதம்கான் விஷயத்தில் மட்டும் அக்பர் கோபத்துடன் உடனடியாகக் கிளம்பிச் சென்றது மஹம் அங்காவை உறுத்தியது. ஆதம்கான் செய்த தவறுக்காக அக்பர் அவனைக் கடுமையாகத் தண்டித்துவிடுவாரோ என்ற பதற்றத்தில் அங்காவும் மால்வாவுக்குக் கிளம்பினார்.
அக்பர் மாண்டுவைச் சென்றடைந்ததற்கு அடுத்த நாள் அங்கே சென்றிருந்தாலும், அவரைக் குளிர்விக்கத் தடாலடியாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார் அங்கா. ஒருபக்கம் விருந்தில் வைத்து மால்வாவில் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் அக்பரிடம் ஆதம்கான் சமர்ப்பிக்க, மறுபக்கம் பக்குவமாகப் பேசி அக்பரின் கோபத்தைத் தணிக்கச் செய்தார் அங்கா.
ஆதம்கான் விஷயத்தில் அமைதியாகச் சென்றிருந்தாலும் நடந்ததையெல்லாம் தன் மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தார் அக்பர். ஆக்ராவிலிருந்து தான் கிளம்பியதும் பின்னாடியே அங்காவும் கிளம்பி வந்து தன்னைச் சாந்தமடைய வைத்தது அவரின் சந்தேகத்தைத் தூண்டியது.
எனவே ஆக்ரா திரும்பியதும் அங்காவின் நடவடிக்கைகள் குறித்துப் பலரிடமும் மறைமுகமாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் எந்த அளவுக்கு அங்கா அரசாங்கத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார் என்பதையும், அங்காவின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் செய்த தகிடுதத்தங்களும் அவருக்குத் தெரியவந்தன.
அதன்பிறகு முதல் வேலையாக முனிம்கானை நீக்கிவிட்டு அட்கா கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார் அக்பர். தான் ஒரு பிரதம அமைச்சர் என்பதை மறந்து அங்காவின் அறிவிக்கப்படாத கைப்பாவையாக முனிம்கான் மாறியிருந்ததுதான் அவரின் பதவி பறிபோனதற்கான காரணம்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தார் அக்பர். அப்போது முகலாய அரசில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த நிதிப்பற்றாக்குறை பிரச்சனை பற்றி அவர் தெரிந்துகொண்டார். ஆனால் நிதிப்பிரச்சனைக்கான முழுக்காரணமும் முகலாய அரசின் நிர்வாகக் கட்டமைப்பு மட்டுமே என்பதை அறிந்தபோது அதிர்ந்துபோனார் அக்பர்.
(தொடரும்)