Skip to content
Home » அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்

மால்வாவிலிருந்து ஆக்ரா திரும்பியதும் அரசு நிர்வாகத்தைக் கையிலெடுத்த அக்பருக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் முகலாய அரசு சிக்கிக்கொண்டிருந்த விஷயம் தெரியவர அது சார்ந்த விசாரணையில் இறங்கினார்.

அன்றைய காலகட்டத்தில் விவசாய உற்பத்தியை முன்வைத்துக் கிடைத்த வரி வருவாய்தான் முகலாய அரசுக்குப் பிரதானமான நிதி ஆதாரமாக இருந்தது. சொல்லப்போனால் இந்த வரிவசூல் கட்டமைப்பை முன்வைத்துத்தான் முகலாய அரசின் நிர்வாகக் கட்டமைப்பு அமைந்திருந்தது.

முகலாய ராஜ்ஜியமானது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணத்தையும் நிர்வகிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மாகாணங்களுக்குக் கீழே மாவட்டங்களும், அவற்றுக்கும் கீழே கிராம கூட்டமைப்புகளும் இருந்தன. ஒவ்வொரு கிராம கூட்டமைப்புக்கும் ஒரு ஜமீன்தார் இருந்தார். தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்களிடமிருந்து வரி வசூல் செய்வது இந்த ஜமீந்தார்களின் வேலை.

பல தலைமுறைகள் ஜமீன்தார்களாக இருந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். டெல்லி சுல்தான்கள் காலத்திலேயே அரசாங்கப் பிரதிநிதிகளாக மாறிய இந்த ஜமீன்தார்கள் விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்ய உள்ளூர் அளவில் ஆட்களை வேலைக்கு வைத்திருந்தனர்.

இப்படிக் கிராம அளவில் விவசாயிகளிடமிருந்து ஜமீன்தார்கள் வசூலிக்கும் வரி முதலில் மாவட்டங்களுக்குச் சென்று, பிறகு அங்கிருந்து மாகாணங்களை அடைந்து இறுதியில் முகலாய அரசின் கஜானாவைச் சென்றடைந்தது. ஹூமாயூன் இருந்தவரை இந்த வரிவசூல் கட்டமைப்பு ஒழுங்காகச் செயல்பட்டு வந்தது.

ஆனால் ஹூமாயூன் இறந்ததும் பிரதம அமைச்சரான பைரம்கான் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முகலாய அரசின் உயர்பொறுப்பிலிருந்த ஆளுநர்கள் போன்ற அதிகாரிகளுக்குப் பலவகையிலும் சுதந்திரமளித்தார். கட்டுப்பாடற்ற இந்தச் சுதந்திரத்தால் இவர்களின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது. சுணக்கத்தைச் சீரமைக்கும் இடத்திலிருந்த பைரம்கான் அது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

பைரம்கானுக்குப் பிறகு பிரதம அமைச்சர் பொறுப்பில் முனிம்கான் வந்தபிறகும்கூட இதே நிலை மாறாமல் தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் நிதிப்பற்றாக்குறை பிரச்சனை முகலாய அரசில் தலைதூக்கியது.

இப்படி அரசாங்கத்தில் போய்க்கொண்டிருந்த இந்தப் பிரச்சனையின் பின்னணியைத் தெரிந்து கொண்ட அக்பர் உயர்பொறுப்பிலிருந்த அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்து அரசு நிர்வாகத்தைச் சீரமைக்கத்தான் முதலில் நினைத்தார். ஆனால் ஹூமாயூன் காலத்து அனுபவசாலிகளான இவர்களைக் கூண்டோடு மாற்றினால் தேவையில்லாத பிரச்சனைகள் எழும் என்பதை உணர்ந்த அவர், இந்த இடமாற்ற வைபோகத்தைத் தற்காலிகமாக ஒத்திப்போட்டார்.

நிர்வாகச் சீரமைப்பு மட்டுமல்லாமல் முகலாய அரசின் வரிவிதிப்பு முறையிலும் மாற்றத்தைக் கொண்டுவர எண்ணினார் அக்பர். ஏனென்றால் அப்போது முகலாய அரசால் விதிக்கப்பட்ட வரிவிகிதங்கள் அனைத்தும் ஷேர்கான் காலத்தைச் சேர்ந்தவை. அவற்றை நிகழ்காலத்துக்கு ஏற்றபடி மாற்றினால்தான் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.

ஆனால் புதிய வரிவிகிதங்களைச் செயல்படுத்த அரசுக்குப் பல தரவுகள் தேவைப்பட்டன. எனவே அதற்குத் தோதாக, அன்றைய முகலாய மாகாணங்களில் விளைவிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சல் குறித்த தகவல்கள், விளைச்சலிலிருந்த நிலங்களின் எண்ணிக்கை, சந்தைகளில் கிடைக்கும் பொருள்களின் விலைப்பட்டியல் எனப் பல தரவுகளைத் திரட்ட உத்தரவிட்டார் அக்பர்.

மேலும் தொய்வில்லாமல் வரிவசூல் மேற்கொண்டு அவற்றைச் சரியான முறையில் அரசு கஜானாவில் சேர்க்கவேண்டுமென்று அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் உத்தரவு பறந்தது. நிலைமை சீராகும் வரை மால்வா படையெடுப்பிலிருந்து கிடைத்த பொக்கிஷங்கள் நிதிப்பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்த்தன.

வேட்டை, சேவல் சண்டை, குறும்புத்தனம் என இத்தனை நாட்களாக விளையாட்டுப் பிள்ளையாகத் திரிந்துகொண்டிருந்த அக்பர், ஆதம்கான் செய்த தவறால் திடீரென அரசு நிர்வாகத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தபோது அவருக்கு உற்ற வழிகாட்டியாக இருந்த நபர் அட்கா கான்.

ஷேர்கானுடனான கன்னோஜ் போரில் தோற்று அங்கிருந்து தப்பிக்க கங்கை நதிக்குள் குதித்த ஹூமாயூனை அப்போது முகலாய ராணுவத்தில் பணியாற்றிய அட்கா கான்தான் காப்பாற்றிக் கரைசேர்த்தார். இந்த விசுவாசத்துக்குப் பிரதிபலனாக அட்கா கானை அக்பரின் வளர்ப்புத் தந்தையாகவும், அவரது மனைவி ஜிஜி அங்காவை வளர்ப்புத் தாயாகவும் காபூலில் நியமித்தார் ஹூமாயூன்.

ஹூமாயூன் இறந்தபிறகு அட்கா கானைத் தன் தந்தைக்கு நிகரான ஸ்தானத்தில் வைத்தார் அக்பர், அவருக்கும் அக்பர் மீது அளவு கடந்த பாசம் இருந்தது. முகலாய அரசில் நடந்துகொண்டிருந்த தகிடுதத்தங்களும், நிர்வாகரீதியிலான பிரச்சனைகளும் அட்கா கானுக்குத் தெரியும். ஆனால் மஹம் அங்காவைத் தாண்டி இதையெல்லாம் அக்பரிடம் கொண்டு சேர்ப்பதற்கு வாய்ப்பில்லாததால் அவர் அமைதியாக இருந்தார்.

ஆதம் கானின் செயலுக்குப் பிறகு மஹம் அங்காவை மீறி அக்பர் நடக்க ஆரம்பித்ததும், அரசிலிருந்த பிரச்சனைகள் குறித்து அக்பரிடம் உடைத்துப் பேசிய அட்கா கான், அவற்றைத் தீர்ப்பதற்குண்டான யோசனைகளையும் வழங்கினார்.

இவ்வாறு அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்ததும் ஒரு பாதுஷாவாகத் தான் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்துத் தன் சொந்த அனுபவத்தில் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார் அக்பர்.

0

அப்படித்தான் 1562ஆம் வருடம் ஜனவரி மாதத்தின் ஒரு குளிரான இரவு நேரத்தில் ஆக்ராவிலிருந்து அஜ்மீர் செல்லும் பாதையில் மும்முரமாக வேட்டையாடிக் கொண்டிருந்தார் அக்பர். அப்போது அருகிலிருந்த ஒரு கிராமத்திலிருந்து பாட்டுச் சத்தம் வரவே அதைக் கூர்ந்து கேட்டார் அக்பர். அந்தப் பாடலின் வரிகளும் இசையும் அவரை மெய்மறக்கச் செய்ததால் உடனிருந்தவர்களிடம் அது பற்றி விசாரித்தார்.

அது க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் பெருமைகளை விளக்கும் ஒரு பாடல். சூஃபி துறவியான மொய்னுதீன் சிஷ்டி அடக்கம் செய்யப்பட்ட தர்கா அஜ்மீரில் இருந்தது. டெல்லி சுல்தான்கள் காலத்திலிருந்து, மன்னர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அந்தத் தர்காவுக்குப் புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அப்படி அஜ்மீர் யாத்திரைக்குச் சென்று வருபவர்களின் வாழ்வில் நடக்கும் அதிசயங்கள் குறித்தும் அங்கே அக்பரிடம் விளக்கப்பட்டது.

உடனடியாக வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு தர்காவைப் பார்க்கும் ஆவலில் அஜ்மீருக்குக் கிளம்பிய அக்பர், அந்தப் பயணத்தின் நடுவே வழியிலிருந்த ராஜபுத்திர ராஜ்ஜியமான ஆமீரின்* மன்னர் பார்மாலைச் சந்திக்க நேர்ந்தது.

கச்வாஹா, ரத்தோர், சிசோடியா, சவுஹான் எனப் பல ராஜபுத்திர வம்சங்கள் அன்றைய இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலிருந்த ராஜஸ்தான், குஜராத், சிந்து பகுதிகளை ஆண்டுகொண்டிருந்தன. டெல்லி சுல்தான்களின் ஆட்சி அமைவதற்கு முன்பு வரை டெல்லி, மத்திய கங்கைச் சமவெளி, மால்வா போன்ற பகுதிகளிலும்கூட இவர்களின் ஆதிக்கமே இருந்தது.

போர் என்று வந்துவிட்டால் உயிரைத் துச்சமாகக் கருதிப்போராடும் வீரர்களைக் கொண்ட இந்த ராஜ்ஜியங்களைச் சில டெல்லி சுல்தான்கள் வீழ்த்தியிருந்தாலும் நிரந்தரமாக எவராலும் இவர்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்ய முடிந்ததில்லை.

அந்த ராஜபுத்திர ராஜ்ஜியங்களில் ஒன்றான ஆமீரின் அரியணையை முன்வைத்து கச்வாஹா ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அதன் மன்னர் பார்மாலுக்கும், அவரது ஒன்றுவிட்ட அண்ணன் பூரன்மாலுக்கும் பங்காளிச் சண்டை நடந்துகொண்டிருந்தது. ஆஜ்மீர் பகுதியின் முகலாய ஆளுநர் ஷரிஃபுதீனின் ஆதரவு பூரன்மாலுக்கு இருந்ததால், நேரடியாக அக்பரைச் சந்தித்துத் தனக்கு ஆதரவு கேட்டு வந்திருந்தார் பார்மால்.

மன்னர் பார்மாலை முன்பு டெல்லியில் வைத்து சந்தித்திருக்கிறார் அக்பர். ஒரு நாள் மதம் பிடித்து ஓடிய யானையின் மீது அமர்ந்து அதை அடக்க அக்பர் முயற்சித்துக்கொண்டிருந்தபோது வழியில் இருந்த பலரும் பயந்து ஓடிவிட, அங்கு அக்பரைப் பார்த்து வாழ்த்து தெரிவிக்க வந்திருந்த பார்மால் குழுவினர் மட்டும் யானையின் சீற்றத்துக்குப் பயப்படாமல் அசையாமல் நின்றிருந்ததைக் கண்டு வியந்திருக்கிறார் அக்பர்.

பார்மாலின் வீரமும், நேரடியான அணுகுமுறையும் அக்பருக்குப் பிடித்திருந்ததால் தன் ஆதரவை அவருக்கு வழங்கச் சம்மதம் தெரிவித்தார். இதனால் மகிழ்ந்துபோன பார்மால் கச்வாஹா-முகலாய உறவுகளை மேலும் பலப்படுத்த அக்பரிடம் தன் மகள் ஹர்க்கா பாயைத் திருமணம் செய்யக் கோர, உடனடியாக அதற்கும் தன் சம்மதத்தைத் தெரிவித்தார் அக்பர்.

அஜ்மீருக்கும் ஆமீருக்கும் இடைப்பட்ட பகுதியான சம்பாரில் வைத்து ஹர்க்கா பாய்க்கும், அக்பருக்கும் இந்து சடங்குகளுடன் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின் மூலம் கச்வாஹா இளவரசி மட்டுமன்றி அந்த ராஜபுத்திர வம்சத்தின் ஒட்டுமொத்த விசுவாசத்தையும் தன் வசப்படுத்தினார் அக்பர்.

அரசியல் காரணங்களுக்காக ராஜ்ஜியங்களுக்கிடையே திருமண உறவுகள் ஏற்படுவது சாதாரணமான விசயம். ஆனால் கச்வாஹா ராஜபுத்திரர்களுடன் அக்பர் மேற்கொண்ட இந்தத் திருமண உறவு மிகவும் தனித்துவமானது.

ஆமீரிலிருந்து வந்த ஹர்க்கா பாயுடன் பணிப்பெண்கள், செவிலித் தாய்கள், சமையல் கலைஞர்கள், புரோகிதர்கள் என ஒரு பெரும் பட்டாளமே ஆக்ரா கோட்டைக்குக் குடிபெயர்ந்தது. இதனால் ராஜபுத்திர கலாச்சாரம், உணவு, இந்து மதச் சடங்குகள் ஆகியவை குறித்து நிறைய விசயங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார் அக்பர்.

அக்பருக்குக் கிடைத்த இந்தக் கண்ணோட்டமானது பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஆட்சிபுரிய அவருக்குப் பேருதவி செய்தது. அதைவிட முக்கியமாக ஹர்க்கா பாயின் அண்ணன் பகவான் தாஸும், அவரது மகன் மான் சிங்கும் பிற்காலத்தில் அக்பரின் அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பெற்ற நபர்களானார்கள்.

இருபது வயதில் திருமணத்தை முடித்த கையோடு ஆக்ரா திரும்பிவந்த அக்பர் வழக்கம்போல அரசு நிர்வாகத்தைக் கவனிக்கலானார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆக்ரா கோட்டையில் வைத்து கொலை ஒன்று அரங்கேறியது. அந்தக் கொலையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடந்த மரணங்களால் அக்பரைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்று முற்றிலுமாக அறுந்துபோனது.

(தொடரும்)

_____
* இந்த ஆமீர் பின்னாளில் ஜெய்ப்பூர் சமஸ்தானமானது.

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *