ஹர்க்கா பாய் உடன் சம்பாரில் நடந்த திருமணத்துக்கு முன்பு திட்டமிட்டபடி அஜ்மீர் தர்காவுக்குச் சென்றார் அக்பர். முகலாய பாதுஷா முதல்முறையாக வந்ததும் அங்கே கற்பூரத் தீபங்கள் ஏற்றப்பட்டு சுஃபி பாடல்கள் பாடப்பட்டன. தர்காவில் இருந்த நேரம் முழுவதும் இனம் புரியாத அமைதி அக்பரை ஆட்கொண்டிருந்தது.
அஜ்மீருக்குச் செல்லத் திட்டமிட்டுத்தான் வேட்டையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆக்ராவிலிருந்து கிளம்பினார் அக்பர். ஆனால் அங்கே சென்றடையும் முன்பே ஆமீர் இளவரசியுடன் அவருக்குத் திருமணம் முடிவானது. இதனால் கச்வாஹா ராஜபுத்திரர்களுடனான இந்த முகலாயப் பந்தத்தை இறைக்கட்டளை என மனதார நம்பிய அக்பர், ஆஜ்மீரில் நிறைவாகத் தொழுதுவிட்டு முழுமனதுடன் ஹர்க்கா பாயைக் கரம்பிடித்தார்.
அக்பருக்கு முன்பு ஹூமாயூனும் அஜ்மீர் தர்க்காவுக்கு வந்துள்ளார். தான் உயிரோடிருந்தவரை டெல்லியிலிருந்த மற்றொரு புகழ்பெற்ற சுஃபி துறவியான ஹஸ்ரத் நிசாமுதீன் அவ்லியா அடக்கம் செய்யப்பட்ட தர்காவுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் ஹூமாயூன். அன்று அந்த நிஜாமுதீன் தர்காவுக்கு அருகிலேயே ஹூமாயூனுக்கான கல்லறை தயாராகிக்கொண்டிருந்தது.
ஹூமாயூன் இறந்த பிறகு ஆட்சிக்கும் அரசியலுக்கும் முழுக்குப் போட்ட பெகா பேகம் தன் அன்புக்குரிய கணவருக்கான கல்லறையை எழுப்பும் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இதற்காகப் பிரத்தியேகமாகக் கைதேர்ந்த கட்டடக் கலைஞர்களைப் பாரசீகத்திலிருந்து வரவழைத்திருந்தார். ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட சிவப்பு மணற்கற்களும், வெள்ளைப் பளிங்குக்கற்களும் உபயோகப்படுத்தப்பட்டு பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது ஹூமாயூனின் கல்லறை.
‘சார் பாக்’ என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்ட கல்லறையைச் சுற்றி நாலாப்பக்கமும் தோட்டங்களோடு இந்தியாவில் அமைந்த முதல் கல்லறை இதுதான். பிற்காலத்தில் முகலாய அரச குடும்பத்தினர் பலர் இங்கே புதைக்கப்பட்டனர். இதன் கட்டுமானத்தைப் பார்த்துக்கொண்டு டெல்லியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட பெகா பேகத்தை அவ்வப்போது அங்கே சென்று சந்தித்து வந்தார் அக்பர்.
ராஜ்ஜியத்தின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு திருமணம் முடித்த கையோடு ஆக்ரா திரும்பிய அக்பர், முக்கிய விருந்தாளி ஒருவரை வரவேற்கத் தடபுடலான ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். காபூலைக் கைப்பற்ற ஹூமாயூனுக்கு உதவிய பாரசீகத்தின் ஆட்சியாளர் ஷா டமஸ்பின் தூதர் சயீத் பெக்தான் அந்த முக்கிய விருந்தாளி.
அரசு முறைப்பயணமாக முதல்முறையாக இந்தியாவுக்கு வந்த சயீத் பெக் குழுவினரை ஆக்ரா கோட்டையில் வைத்து வரவேற்றார் அக்பர். அப்போது தன் அமைச்சர் ஒருவரின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு அவர்களுடன் வெகு சாதாரணமாக உரையாடிய அக்பரைப் பார்த்து அதிர்ந்துவிட்டனர் பாரசீகத்தினர்.
‘முகலாய பாதுஷா இளைஞர் என்று தெரியும். ஆனால் அவர் இவ்வளவு எளிமையாக ஒருவர் தோள்மீது கைபோட்டுக்கொண்டு நிற்பாரா என்ன? உண்மையிலேயே இவர்தான் முகலாய பாதுஷாவா?’ என அவர்கள் முகங்களில் குழப்பரேகைகள் படர ஆரம்பித்தன. அவர்களின் குழப்பத்துக்கான காரணத்தை அக்பர் அறியாமலில்லை. இருந்தாலும் அதைத் தனக்குரிய குறும்புத்தனத்துடன் ரசித்தார்.
அடுத்தடுத்த நாட்களில் கம்பீரமாக அரியணையில் அமர்ந்து அரசவையை நடத்திக்கொண்டும், பின்பொரு நாளில் ஆக்ரா கோட்டையின் மாடியில் நின்றுகொண்டு பட்டம் விட்டுக்கொண்டும், சூழ்நிலைக்கு ஏற்றபடித் தன்னை பொருத்திக்கொண்டு அந்த இளவயதில் முதிர்ச்சித் தன்மையுடன் செயல்பட்ட அக்பரைப் பார்த்து அவர்கள் வியப்பின் உச்சிக்குச் சென்றார்கள்.
0
அக்பரின் நேரடி மேற்பார்வையில் முகலாய அரசு நிர்வாகம் மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது. பிரதம அமைச்சர் அட்கா கானும், அவருக்குக் கீழ் பணியாற்றிய இதிமத் கானும் வருவாய்த்துறையில் பல சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றனர். ஒரு பக்கம் அரசாங்கம் இப்படிப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அதேவேளையில் அமைதியாகத் தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார் மஹம் அங்கா.
மால்வா சம்பவத்துக்குப் பிறகு மஹம் அங்காவுக்கும், ஆதம் கானுக்கும் முகலாய அரசில் இருந்த அதிகாரம் அடியோடு குறைந்துபோனது. இத்தனை வருடங்களாக அனுபவித்து வந்த அதிகாரம் திடீரெனத் தங்கள் கையைவிட்டுப்போனது எதனால் என்று ஆதம்கான் உணர்ந்து கொள்ளவில்லை.
ஆனால் மஹம் அங்கா அப்படியல்ல. பல விஷயங்கள் தெரிந்தவர் அவர். அக்பரின் ஒவ்வொரு நகர்வுக்குப் பின் இருக்கும் அர்த்தங்களை அறிந்தவர் அவர். எனவே தன் செல்வாக்குக் குறைந்தபிறகு அவர் கொஞ்சம் அடக்கி வாசித்தார். ஆனால் அவரால் இதைத் தன் மகனிடம் எடுத்துச் சொல்லிப்புரிய வைக்க முடியவில்லை. வயது முப்பதைக் கடந்திருந்தாலும் கொஞ்சம் கூடப் பக்குவமில்லாமல் மதிகெட்டுத் திரிந்தார் ஆதம்கான்.
பல நாட்களாக உள்ளுக்குள் அடக்க முடியாத ஆத்திரத்துடன் இருந்த ஆதம்கான், 1563ஆம் வருடத்தின் மே மாதத்தில் ஆக்ரா கோட்டையின் அலுவல் கூடத்தில் அமர்ந்து பிற அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்த அட்கா கானைத் தன் வாளால் குத்திக் கொலை செய்தார். கொலைக்குப்பின் படி ஏறி அவர் முதல் மாடிக்குச் சென்றார்.
திடீரென வெளியே கேட்ட கூச்சல் சத்தத்தை வைத்து வாளுடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தார் அக்பர். சத்தம் வந்த இடத்தை வைத்துக் கீழே எட்டிப் பார்க்க அங்கே ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார் அட்கா கான். அதே நேரம் அவருக்கு முன்பு ரத்தம் படிந்த வாளுடன் ஆதம் கான் வரவும் என்ன நடந்திருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
ஆத்திரம் தலைக்கேறிய அக்பர், ஆதம் கான் கையிலிருந்த வாளைத் தன் வாளால் தட்டிவிட்டுவிட்டு ‘எதற்காக அட்கா கானைக் கொன்றாய்?’ எனக் கேட்டுக்கொண்டே அவரின் முடியைப் பிடித்து முகத்திலேயே ஓங்கி ஒரு குத்துவிட்டார். அவரது குத்தில் தடுமாறி விழுந்த ஆதம் கானைத் தூக்கி முதல் மாடியிலிருந்து கீழே போடுமாறு அருகிலிருந்த காவலாளிகளுக்கு உத்தரவிட்டார் அக்பர்.
காவலாளிகள் கீழே தூக்கிப் போட்ட பிறகும் உயிரோடிருந்த ஆதம் கானைப் பார்த்த அக்பர், ‘மீண்டும் அவனை மேலே கொண்டு வந்து இந்தமுறை தலைகீழாகத் தூக்கிப் போடுங்கள்’ என நரம்பு புடைக்கக் கூறினார். இந்த முறை தலைகீழாக விழுந்த ஆதம் கான் உயிர்தப்பவில்லை.
ஆத்திரம் தணிந்ததும் நேராக மஹம் அங்காவின் அறைக்குச் சென்று ‘நமது அட்கா கானைப் படுகொலை செய்த ஆதமை நான் கொன்றுவிட்டேன்’ என அமைதியான குரலில் கூறினார் அக்பர். முதலில் அதிர்ச்சியடைந்தாலும் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு ‘நல்ல காரியம் செய்தாய்’ என அக்பரிடம் கூறினார் அங்கா. ஆனால் ஆதம் கானின் உடைந்து கிடந்த உடம்பைப் பார்க்க அங்காவை அக்பர் அனுமதிக்கவில்லை.
தன் வாழ்நாளில் அபாயகரமான சூழல்களைப் பலமுறை அசாத்தியத் துணிச்சலுடன் சந்தித்துக் கடந்து வந்த அங்காவை, அவரது மகனின் அகோர மரணம் உலுக்கிப்போட்டுவிட்டது. ஆதம்கான் இறந்துபோன பிறகு கவலையிலும் விரக்தியிலும் தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்த அங்கா அடுத்த நாற்பதாவது நாளில் இறந்துபோனார்.
அங்காவின் உடல் அருகே அமர்ந்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார் அக்பர். சுற்றியிருந்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவர் யோசிக்கவில்லை. மன்னருக்குண்டான தோரணை, அதிகார மிடுக்கு, கம்பீரம் என எதுவுமே அப்போது அவரிடம் இல்லை. தாயை இழந்த மகனாக அங்காவுக்கான அனைத்து இறுதிச்சடங்குகளையும் முன்னின்று செய்தார் அக்பர்.
தன் மீது பாசம் காட்டி, குழந்தையாக இருந்த காலம் தொட்டுத் தன்னை அன்போடு பார்த்துக்கொண்ட இருவர் அடுத்தடுத்து இறந்துபோனது அக்பரைக் கவலையில் தள்ளியது. முன்பு பைரம்கான் இப்போது மஹம் அங்கா குடும்பத்தினர் என அதிகாரத்தை முன்வைத்து முகலாய அரசுக்குள் நடந்த அரசியலை வெறுத்தார் அக்பர். இனி வருங்காலத்தில் ஒரு போதும் இப்படி நடக்காமலிருக்க என்ன செய்வதென்று அவர் ஆழமாக யோசித்தார்.
யோசனையின் முடிவில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தார். இனி இந்த முகலாய அரசு என்பது நான்தான், என் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தங்களின் கடமைகளைத் தவறாமல் நிறைவேற்றும் அனைவரும் சகலச் சம்பத்துகளுடன் இந்த ராஜ்ஜியத்தில் வாழலாம். கடமையைச் செய்யும்போது தெரியாமல் நடக்கும் தவறுகளுக்கு நிச்சயமாக மன்னிப்பு உண்டு. ஆனால் அதிகாரத்துக்காகத் தவறு செய்தது தெரிந்தால் அதன் முடிவு எப்படி இருக்கும் என ஒரே ஒரு செய்கையால் அனைவருக்கும் உணர்த்தினார் அக்பர்.
டெல்லியிலிருந்த நிசாமுதீன் அவ்லியா தர்காவுக்கு வெளியே அட்கா கான் புதைக்கப்பட்டார். ஆனால் அதற்கு ஏழு மைல் தெற்கிலிருந்த குதுப்மினாருக்கு அருகே மஹம் அங்காவும், ஆதம்கானும் புதைக்கப்பட்டனர். துரோகமோ கலகமோ தனக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மரணத்துக்குப் பின்பும் இதுதான் கதி என இதன்மூலம் தன் அரசில் பணியாற்றிய அனைவருக்கும் சொல்ல வேண்டியதை மறைமுகமாகச் சொன்னார் அக்பர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு அக்பரின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்பட்டன. நேரமின்மையால் பாபரும், கவனக்குறைவால் ஹூமாயூனும் செய்யத் தவறிய விஷயங்கள் ஒவ்வொன்றையும் தெளிவாகத் திட்டமிட்டுச் செய்யத் தொடங்கிய அக்பர், மாபெரும் சாம்ராஜ்ஜியத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியில் முதல் அடியை எடுத்து வைத்தார்.
(தொடரும்)