அரசு அதிகாரம் முழுவதையும் தன் வசப்படுத்த முடிவு செய்த அக்பர் முதல் வேலையாக அரசவை நடக்கும் முறையை மாற்றியமைத்தார். பாபரும் ஹூமாயூனும் ஆட்சி செய்தபோது எந்த ஒரு பரபரப்புமின்றி மிக இயல்பாக நடந்தது முகலாய அரசவை.
ஆனால் இப்போது அரசவை தொடங்கும் முன்பு அக்பர் வருவது முறையாக முரசுகொட்டி அறிவிக்கப்பட்டது. முரசு கொட்டும் சத்தம் கேட்டதும் அரசவையில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று வலது கையை உயர்த்தி, தலைகுனிந்து, அவைக்குள் வரப்போகும் அக்பருக்குத் தங்களின் மரியாதையைச் செலுத்துவார்கள்.
அக்பர் வந்து தன் அரியணையில் அமர்ந்ததும் தொடங்கும் அரசவை கட்டுக்கோப்பாக நடந்தது. அரசவையில் விவாதங்கள் நடக்கும்போது எவராக இருந்தாலும் அக்பர் கூறும் கருத்துகளைத் தாராளமாக மறுத்துப் பேசலாம். ஆனால் பேசும் வார்த்தைகளில் மிதமிஞ்சிய பணிவு கலந்திருக்க வேண்டும். அப்போது முகலாய அரசின் உயர் பொறுப்புகளிலிருந்த அனைவரும் அக்பரைவிட வயது மூத்தவர்கள். பாதுஷாவாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் மரியாதையோடு நடத்தினார் அக்பர்.
அதேநேரம், தன்னை இளைஞன்தானே என நினைத்து அலட்சியமாக நடந்து கொள்பவர்களையும், மது அருந்திவிட்டு வேலைக்கு வருவது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுபவர்களையும் கடுமையாகத் தண்டித்தார் அக்பர். அந்த இளவயதிலேயே ஒருவரின் கண்களைப் பார்த்து அவர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கும் திறமை அவரிடம் இருந்தது.
திடீரென அக்பர் இப்படிக் கெடுபிடியாக நடந்துகொண்டதற்குக் காரணம் ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால் இப்படிக் கண்டிப்புடன் நடந்துகொண்ட அதே அக்பர்தான் மனிதநேயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். மனிதநேயத்தை முன்வைத்து அவர் எடுத்த நடவடிக்கைகளில், அடிமை வியாபாரத்தை அடியோடு நிறுத்தியது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை.
அந்தக் காலகட்டத்தில் போரில் தோற்ற எதிரிப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு அடிமைகளாக வெளியே விற்கப்பட்டனர். சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருந்த இந்த அடிமை வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்த நினைத்த அக்பர், அதற்குண்டான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் முகலாய அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடுபவர்களையும், புரட்சி செய்பவர்களையும் தண்டிப்பதில் உடன்பட்ட அக்பர், அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்துத் தண்டிப்பதை விரும்பவில்லை. எனவே தனக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் போலில்லாமல் இதையும் நிறுத்தினார் அக்பர்.
ராஜபுத்திர இளவரசியை மணந்திருந்தாலும் தினமும் ஐந்து வேளைகளும் நேரந்தவறாமல் தொழும் நபராக இருந்தார். தன் மத நம்பிக்கையைத் தனிப்பட்ட வகையில் வைத்துக்கொண்ட அவர், எந்த விதத்திலும் ஹர்க்கா பாயின் மத நம்பிக்கையை மாற்றவோ அதில் தலையிடவோ விரும்பவில்லை. அந்த வகையில் அக்பரிடம் மதச் சகிப்புத்தன்மை நிறையவே இருந்தது.
1563ஆம் வருடத்தில் ஒருநாள் ஆக்ராவுக்கு வடமேற்கே இருந்த மதுரா பகுதியில் சிங்க வேட்டையை முடித்துவிட்டு அருகிலிருந்த கோவிலைப் பார்க்கச் சென்றார் அக்பர். புனித யாத்திரை மேற்கொண்டு சாரை சாரையாக மதுராவுக்கு வந்த இந்துக்கள், அங்கே மொட்டை அடித்த கையோடு யமுனை நதியில் முங்கிக் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வதைப் பார்த்தார்.
மதுராவில் இருந்த சமயம் முகலாய ராஜ்ஜியத்தில் இருக்கும் இந்துக்கள் செலுத்தும் ஜிசியா வரி குறித்துக் கேள்விப்பட்டார் அக்பர். இஸ்லாமிய ஆட்சியாளரின் கீழ் வாழும் இஸ்லாமியரல்லாத மக்கள் தங்களுக்கு அந்த ஆட்சியாளர் அளிக்கும் பாதுகாப்புக்குக் கைமாறாக ஜிசியா வரியைச் செலுத்தினார்கள்.
குரானை மேற்கோள்காட்டி முதன்முதலில் அரேபியாவில் விதிக்கப்பட்ட இந்த வரியானது இஸ்லாம் பரவிய காலத்துக்குப் பிறகு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த எல்லாப் பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. டெல்லி சுல்தான்கள் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜிசியா வரியால் அதுவரை பல லட்ச ரூபாய் வருமானம் முகலாய அரசுக்குக் கிடைத்து வந்தது.
ஆக்ரா திரும்பியதும் ஜிசியா வரியைப் பற்றி மேலும் விசாரித்த அக்பர் ’பிறரது இறை நம்பிக்கைக்கு நாம் உடன்படாவிட்டாலும், அதைக் காரணமாக வைத்து அவர்களிடம் பணம் வசூலிப்பது நிச்சயமாகப் புத்திசாலித்தனமான முடிவு இல்லை’ எனக்கூறி முகலாய ராஜ்ஜியம் முழுக்க ஜிசியா வரி விதிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். இப்படிப் பரந்த மனதுடன் அறிவிப்பு வெளியிட்டபோது அக்பரின் வயது வெறும் 21 மட்டுமே.
அக்பரின் இந்த முடிவை உலேமாக்கள் என்றழைக்கப்பட்ட இஸ்லாமிய மத குருமார்கள் கடுமையாக எதிர்த்து, இது குர்ரானை அவமதிக்கும் செயல் எனக் கூக்குரல் இட்டார்கள். ஆனால் இந்த விசயத்தில் அக்பரின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. அல்லாவின் தூதுவனாகத்தான் தன்னுடைய ஆட்சி நடந்துகொண்டிருந்ததால், தன் ராஜ்ஜியத்திலுள்ள மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு தான் எடுக்கும் முடிவுகள் அனைத்துக்கும் அந்த இறைவனின் ஆதரவு இருப்பதாகப் பரிபூரணமாக அவர் நம்பினார். எனவே மத குருமார்களின் எதிர்ப்பை அக்பர் தன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
மேலும் அதிக வருமானம் கிடைக்கும் அளவுக்கான விவசாய நிலங்களைப் பிற்காலத்தில் மதுரா கோவிலுக்குத் தானமாக அளித்தார் அக்பர்.
0
அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாதுதான். ஆனால் அதற்காக அவர் கலைகளிலிருந்தும் கதைகளிலிருந்தும் ஒதுங்கியிருக்கவில்லை. அதிலும் கதைகள் கேட்பது அக்பரின் விருப்பத்துக்குரிய செயல்களில் ஒன்று. இதற்காகவே தனது அரசில் தர்பார் கான் என்றொரு தொழில்முறைக் கதைச்சொல்லியைப் பணியமர்த்திருந்தார் அக்பர். அரசவையில் மட்டுமல்லாமல் அக்பர் வேட்டைக்குச் செல்லும்போதுகூட தர்பார் கான் உடன் சென்று கதை சொல்லுவார்.
நாள் முழுவதும் வேட்டையாடிவிட்டு அந்திசாயும் நேரத்தில் கூடாரத்துக்குத் திரும்புவார் அக்பர். இரவு உணவு முடிந்ததும் கூடாரத்துக்கு வெளியே விறகுகளைக் கொண்டு தீ மூட்டப்படும். அதற்கு அருகில் நடுநாயகமாக தர்பார் கானும் அவரைச் சுற்றி அக்பரும் அவரது சகாக்களும் அமர்ந்து கொள்வார்கள்.
அந்த இரவு நேர நிலவொளியில் பாரசீக மொழியில் தர்பார் கான் கதை சொல்ல ஆரம்பிப்பார். முகத்தில் நவரசத்தோடும், கண்களில் ஒளியோடும், கதைக்கு ஏற்பக் கைகளை அசைத்து அசைத்து தர்பார் கான் சொல்லும் கதைகளை ஆவலோடு கேட்கும் அக்பர், அதில் முழுவதுமாக முழ்கிப்போவார்.
இப்படிக் கதைகள் மட்டுமல்லாமல் சூஃபி பாடல்களையும் மெய்மறந்து கேட்கும் அக்பர், ஒரு கட்டத்தில் ஹிந்துஸ்தானி இசைக்கும் தீவிர ரசிகராகிப்போனார். குவாலியருக்குத் தென்கிழக்கிலிருந்த ரேவா ராஜ்ஜியத்தின் அரசவைப் பாடகரான ராம்தானு பாண்டேவின் திறமையைக் கேள்விப்பட்ட அக்பர், அந்த மன்னருக்குத் தூதனுப்பி ராம்தானுவை ஆக்ராவுக்கு வரவழைத்து முகலாய அரசின் அரசவைப் பாடகராக்கினார்.
புதிய ராகங்களை உருவாக்கி ஹிந்துஸ்தானி இசையைப் பல உயரங்களுக்கு எடுத்துச் சென்று, அதில் துருபத் பாணி பாடல்களுக்குக் குறிப்பிடும் வகையில் பேர்போன இந்த ராம்தானு பாண்டேதான் அக்பரின் அமைச்சரவை அலங்கரித்த மியான் தான்சேன்.
இதேசமயத்தில் அக்பரின் நம்பிக்கையைப் பெற்று முகலாய அரசின் முக்கியப் பதவியில் தலையெடுத்த வேறொரு நபர், கன்னோஜுக்குத் தெற்கிலிருந்த கல்பி பகுதியைச் சேர்ந்த மகேஷ் தாஸ். இவர்தான் பின்னாளில் அக்பரின் உற்ற நண்பரும், நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும் விளங்கிய ராஜா பீர்பால்.
முதலில் ஷேர்கானிடம் பணியாற்றி, பின் 30 வருடங்கள் முகலாய அரசில் நிதி அமைச்சராக இருந்து அரசின் நிதிநிலைமையை வலுப்படுத்திய தோடர் மால், அக்பரின் சுயசரிதையை எழுதியது மட்டுமல்லாமல் பிரதம அமைச்சராகவும் பதவி வகித்த அபுல் ஃபாசல், அவரது அண்ணனும் கவிஞருமான ஃபைசி, ஆமீரின் ராஜபுத்திர இளவரசர் மான் சிங், பைரம்கானின் மகன் அப்துல் ரஹீம் என அக்பரின் நம்பிக்கையைப் பெற்ற திறமைசாலிகள் அனைவருமே இந்தக் காலகட்டத்தில்தான் ஒவ்வொருவராக முகலாய அரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள்.
அக்பரின் அமைச்சரவையில் மட்டுமல்லாமல் அவரது மனதிலும் நெருங்கிய இடத்தைப் பிடித்த இவர்களில் பாதிப்பேர் இந்துக்கள். இனமும், மதமும் அக்பருக்குப் பொருட்டே அல்ல. ஒருவருக்குத் திறமை இருந்தால் மட்டும் போதும், அக்பரே அவரைத் தூக்கி உச்சாணிக்கொம்பில் வைத்துவிடுவார்.
‘ஒருவர் குறித்து மதிப்பிடவேண்டுமென்றால் அதை அவரின் திறமையை வைத்துச் செய்யவேண்டுமே ஒழிய, அவரது மூதாதையர்களை வைத்தோ அல்லது பின்னணியை வைத்தோ செய்யக்கூடாது’ என்பது அக்பர் அடிக்கடி உதிக்கும் வார்த்தைகள்.
மேலும் அக்பர் தலைமையிலான முகலாய அரசில் எழுதப்படாத ஒரு விதி பின்பற்றப்பட்டது. கவிஞரோ, நிதி அமைச்சரோ, ஒருவரின் பிரதானமான பணி எதுவாக இருந்தாலும் அவர் அவ்வப்போது வாள்பிடித்துப் போர்க்களத்துக்கும் முற்றுகைக்கும் செல்ல வேண்டும். இந்த விதியைக் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அக்பர் தளர்த்தினார். மற்றபடி தோடர் மால், பீர்பால் என உயர் நிர்வாகப் பொறுப்பிலிருந்த பலருமே வாள் பிடித்துள்ளார்.
அவ்வாறு முகலாய ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்கு வாள் பிடித்த கூட்டம் ஒன்று கிழக்குப் பகுதியில் அக்பருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தது. ஒரு பக்கம் அரசுக்குள் இப்படிக் கலகம் நடக்க ஆரம்பித்த அதே நேரத்தில் வடமேற்குப் பகுதியிலிருந்த அக்பரின் ஒன்றுவிட்டத் தம்பி ஒருவன் தன் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கக் களம் இறங்கினான்.
இவ்வாறு இரண்டு பக்கமும் முகலாய ராஜ்ஜியத்தைப் பிரச்சனை மேகங்கள் சூழ்ந்துகொள்ள, தன் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் முதல் முறையாக நேரடியாகக் களம் இறங்கினார் அக்பர்.
(தொடரும்)
தாங்களின் வரலாற்று ஆய்வு நூல்களை படித்தேன் வாழும் வரலாற்று பிழைகளுக்கு நடுவே வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு அதனை சரியாக மக்களுக்கு எடுத்துரைக்கும் பங்கு சமகாலத்தில் அரிதானது தங்களின் சீரான பாதை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்