Skip to content
Home » அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

1564ஆம் வருடத்தின் மழைக்காலத்தில் படை பரிவாரங்களுடன் மத்திய இந்தியாவுக்குச் சென்றார் அக்பர். குவாலியரைச் சுற்றியிருந்த காடுகளில் சில வாரங்கள் முகாமிட்டு நன்கு பழக்கப்பட்ட கும்கி யானைகளை வைத்து நூற்றுக்கணக்கான காட்டு யானைகளைப் பிடித்தார்கள் முகலாய வீரர்கள். தேவைப்பட்ட எண்ணிக்கையில் யானைகள் கிடைத்ததும் மால்வா மாகாணத்தின் தலைநகர் மாண்டுவுக்குச் சென்ற அக்பர், நகரத்துக்கு வெளியே இருந்தவாறு அதன் முகலாய ஆளுநர் அப்துல்லா கானுக்குத் தான் வந்திருக்கும் செய்தியை அனுப்பினார்.

பாதுஷா வந்திருக்கும் செய்தி கிடைத்ததும் அப்துல்லா கான் வெளியே வந்து அவருக்கான மரியாதையைச் செலுத்தி கோட்டைக்குள் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. ஆனால் அப்படிச் செய்யாமல் குஜராத்துக்குத் தப்பிச் சென்றார் அப்துல்லா கான்.

டெல்லியைக் கைப்பற்றத் தன்னுடன் களத்தில் நின்று போரிட்ட துருக் இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு மாகாணங்களை நிர்வகிக்கும் ஆளுநர் பொறுப்பை அளித்திருந்தார் ஹூமாயூன். அப்படிப் பதவி பெற்றவர்களில் ஒருவர் உஸ்பெக்கியரான ஜான்பூர் ஆளுநர் அலி குலி கான். ஹூமாயூனிடம் பணியாற்றிய மற்றொரு உஸ்பெக்கியரான அப்துல்லா கானைச் சமீபத்தில்தான் மால்வாவின் ஆளுநராக்கியிருந்தார் அக்பர்.

எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ‘பீகார் பகுதியிலிருந்த ஆப்கானியர்களுடன் இந்த உஸ்பெக்கியர்கள் இருவரும் நல்லுறவைப் பேணி வருகிறார்கள். எனவே இவர்களின் விசுவாசம் சந்தேகத்துக்குரியது’ என்ற உளவுத்தகவல் அக்பருக்குக் கிடைத்தது.

இதனால் மால்வா ஆளுநர் அப்துல்லா கானின் விசுவாசத்தை முதலில் சோதிக்க விரும்பிய அக்பர், வேட்டையாடுவதைப்போல மத்திய இந்தியாவுக்குச் சென்று பின் அங்கிருந்து கிளம்பி மாண்டுவுக்குச் சென்றார். அக்பரின் இந்தத் திடீர் வருகையை எதிர்பார்க்காத அப்துல்லா கான், பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மால்வாவிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இப்போது அக்பருக்கு எல்லாம் புரிந்துபோனது.

அக்பரின் மால்வா வருகையையும், அதை ஒட்டி அப்துல்லா கான் தப்பித்த செய்தியையும் கேள்விப்பட்ட அலி குலி கான், அக்பரின் அடுத்த இலக்கு நிச்சயமாகத் தன் மீது தான் இருக்கும் என்பதை யூகித்து உஸ்பெக்கியர்கள், ஆப்கானியர்கள் என 30000 வீரர்கள் கொண்ட ஒரு படையைத் தயார்ப்படுத்தினார்.

மால்வா நிர்வாகத்தை நம்பிக்கைக்குரிய நபர்களிடம் ஒப்படைத்துவிட்டு 1556ஆம் வருடத்தின் இறுதியில் ஜான்பூருக்குச் சென்றார் அக்பர். ஜான்பூரில் அக்பருக்கும் அலி கானுக்கும் இடையே சண்டையைத் தவிர்க்க நினைத்த முனிம்கான், ‘அக்பரிடம் வந்து சரணடைந்தால் போதும் பிரச்சனையை முடித்துக்கொள்ளலாம்’ எனத் தன் முன்னாள் நண்பன் அலி கானிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பார்த்தார். ஆனால் அலி கான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

முதலில் அலி கானிடம் இப்படிச் சமாதானம் பேசுவதில் அக்பருக்கு உடன்பாடு இல்லை, ஆனால் முனிம்கானுக்காக ஒப்புக்கொண்டார். முனிம்கானின் வார்த்தைகளுக்கு அலி கான் மதிப்பு கொடுக்காததால் அவரைக் கடுமையாகத் தண்டிக்க நினைத்த அக்பர், ஆக்ராவிலிருந்த படைகளை ஜான்பூருக்கு வரச்சொல்லித் தகவல் அனுப்பிவிட்டு அங்கே காத்திருக்க ஆரம்பித்தார்.

0

ஆக்ராவிலிருந்து வரப்போகும் படைகளுக்காகக் காத்திருந்த அக்பருக்கு அவரது ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் லாகூரைக் கைப்பற்ற முயற்சி செய்த தகவல்தான் முதலில் கிடைத்தது.

1545ஆம் வருடம் காம்ரானிடமிருந்து காபூலைக் கைப்பற்றிய பிறகு ஹூமாயூன் திருமணம் செய்து கொண்ட மாஹ் பேகத்துக்குப் பிறந்தவர்தான் இந்த மிர்சா ஹக்கீம். அக்பர் பாதுஷாவானதும் அரச குடும்பத்துப் பெண்கள் அனைவரும் காபூலிலிருந்து டெல்லிக்குத் திரும்பிவிட, மாஹ் பேகமும், மிர்சா ஹக்கீமும் காபூலிலேயே நிரந்தரமாகத் தங்கியிருந்து அந்தப் பிராந்தியத்தை ஆட்சி செய்துவந்தனர்.

காபூலை அவர்களிடமிருந்து பறிக்க விரும்பாத அக்பர், ஹக்கீமை அந்தப் பகுதியை ஆட்சி செய்துகொள்ள அனுமதித்தார். ஆனால் இன்று நீண்ட நாட்களாக அக்பர் ஆக்ராவில் இல்லாததைத் தெரிந்துகொண்டு, தன்னுடைய அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பிய ஹக்கீம், முகலாய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த லாகூரைக் கைப்பற்ற முயற்சி செய்தார்.

தைமூரிய வம்சாவழியில் வந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் இப்படி எல்லாம் நடந்துகொள்வதில் ஆச்சரியம் இல்லை. ஒன்றுவிட்ட சகோதரர்களால் தன் தந்தைக்கு நடந்த பிரச்சனைகளை எல்லாம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார் அக்பர். ஆனால் இப்போது அக்பரிடம் இருந்த ஒரே யோசனை, முதலில் இங்கிருக்கும் அலி கானைத் தண்டிப்பதா, அல்லது லாகூருக்குச் சென்று ஹக்கீம் ஏற்படுத்திய பிரச்சனையைக் கவனிப்பதா என்பது மட்டும்தான்.

ஜான்பூரைச் சுற்றி மால்வா, அலகாபாத், ஆக்ரா என அனைத்துப் பகுதிகளிலும் முகலாயப் படைகள் அரண்போல இருந்ததால், இதை மீறி அலி கானால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று நினைத்த அக்பர், ஆக்ராவை முனிம்கான் பொறுப்பில் விட்டுவிட்டு நேரடியாக லாகூருக்குக் கிளம்பினார்.

1567ஆம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் 50000 பேர் கொண்ட ஒரு பெரும் படையுடன் லாகூரை அடைந்தார் அக்பர். ஆனால் அதற்கு முன்பே அங்கிருந்து பின்வாங்கி காபூலுக்குத் திரும்பியிருந்தார் ஹக்கீம். திரும்பிச் சென்ற ஹக்கீமைப் பின் தொடர்ந்து சென்று தண்டிக்க விரும்பாத அக்பர், அதற்குப் பதில் லாகூரில் ஓடிக்கொண்டிருந்த ராவி நதியைக் கடந்துசென்று தன் படைகளை வைத்து அந்தப் பிராந்தியமே அதிரும் அளவுக்கு ஒரு மிரட்டலான அணிவகுப்பை நடத்தினார்.

‘காபூலுக்கு வந்து உன்னைத் தண்டிப்பதற்கான படைபலம் என்னிடம் இருக்கிறது. ஆனால் உனக்கொரு வாய்ப்பளிக்கிறேன். அங்கேயே அமைதியாக இருந்துகொள்’ என இந்த அணிவகுப்பு மூலம் ஹக்கீமுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் அக்பர்.

அணிவகுப்பை முடித்துவிட்டுத் திரும்பி வரும்போது ராவி நதியில் தண்ணீரின் அளவு அதிகரித்து அது ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது. இந்த மாற்றத்தைக் கவனித்த அக்பர், அதிகம் யோசிக்காமல் சட்டெனத் தன் குதிரையுடன் அதில் இறங்கினார். பாதுஷா இறங்கியதும் அவரது படைகளும் அதில் இறங்கின. ஜான்பூரிலிருந்து கிளம்பிய நேரம் முதல் இப்படியான செயல்கள் மூலம் தன் படைகளின் உறுதித்தன்மையையும் தைரியத்தையும் சோதித்துக் கொண்டே வந்தார் அக்பர்.

முதலில் மால்வா, பிறகு ஜான்பூர், இப்போது லாகூர் என அசராமல் ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்த அக்பர், ஒரே நேரத்தில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அத்தனையையும் என்னால் சமாளிக்க முடியும் என்று தன்னைத் துச்சமாக நினைத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பதிலடி கொடுத்தார் அக்பர்.

லாகூரில் அம்ரித்சருக்கு அருகே பீயஸ் நதிக்கரையில் குடில் அமைத்துத் தங்கியிருந்த 90 வயது மதிக்கத்தக்க மூன்றாவது சீக்கிய குரு அமர் தாஸைச் சந்தித்தார் அக்பர். அந்தக் காலகட்டத்தில் சீக்கிய மதம் மிக வேகமாக அங்கே பரவிக் கொண்டிருந்தது. சகோதரத்துவம், அன்பு, கருணை ஆகியவற்றை முன்வைத்த சீக்கிய மதக்கோட்பாடுகள் அக்பரை ஈர்த்தன.

மேலும் அங்கே இன, சாதிய, அந்தஸ்து வேறுபாடின்றிச் சீக்கிய மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் முறை அக்பரை ஈர்த்தது. எனவே அவரும் மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். அரிசியைப் பாலில் வேகவைத்து அதில் நெய் ஊற்றிச் செய்த ஒரு வகையான இனிப்பு அங்கே பரிமாறப்பட்டது, அதை விரும்பி உண்டார் அக்பர். சில நாட்கள் அங்கு தங்கியிருந்து லாகூரின் பாதுகாப்பைப் பலப்படுத்திவிட்டு ஆக்ராவுக்குத் திரும்பினார்.

0

ஆக்ரா வந்த கையோடு மிர்சா ஹக்கீமைப் புதிய முகலாய பாதுஷாவாக அங்கீகரித்து அலி கான் வெளியிட்ட அறிவிப்பு பற்றி கேள்விப்பட்டார் அக்பர். இதற்கு மேலும் இந்தப் பிரச்சனையை ஒத்திப்போடுவது சரியாக இருக்காது என்று நினைத்த அவர், 2000 யானைகளைக் கொண்ட ஒரு பிரமாண்ட படையுடன் மே மாதம் 1567 அன்று கிளம்பி ஜான்பூருக்குப் பயணப்பட்டார்.

ஜான்பூரில் நடந்த போரின் இறுதியில் ஒரு யானையால் உடல் நசுக்கிக் கொல்லப்பட்டார் அலி கான். அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கிய முகலாய அதிகாரிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். வீரர்கள் மீது மட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார் அக்பர். தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால் அவர்கள் மன்னிக்கப்பட்டனர்.

போர் முடிந்து ஆக்ராவுக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அனைத்து மாகாண ஆளுநர்களின் பொறுப்புகளையும் மாற்றி உத்தரவிட்டார் அக்பர். இந்தப் பிரச்சனையின்போது அக்பருக்கு விசுவாசமாக இருந்த இந்திய இஸ்லாமியர்களுக்கும், பாரசீக ஷியாக்களுக்கும் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. இதனால் முகலாய அரசின் முக்கியப் பதவிகளில் நீண்ட காலமாகக் கோலோச்சிவந்த துருக் இனத்தவரின் தனிப்பெரும் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

அட்கா கானின் இறப்புக்குப் பிறகு மீண்டும் பிரதம அமைச்சர் ஆகியிருந்த முனிம்கான், ஜான்பூர் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபடி பிகாரிலிருந்த ஆப்கானியர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள முனிம்கானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜான்பூர் போரில் அக்பரை எதிர்த்து நின்ற சிலர் குஜராத்துக்குத் தப்பிச் சென்றனர். அங்கே ஆட்சியில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்கள் மீண்டும் தனக்கு எதிராகக் கலகம் செய்யும் முன்பு குஜராத்துக்குச் செல்ல நினைத்தார் அக்பர். ஆனால் ஆக்ராவுக்கும் குஜராத்துக்கும் நடுவே ராஜபுத்திர ராஜ்ஜியம் ஒன்று இருந்தது.

அந்தப் பகுதியிலிருந்த ஒரு மலை மீது அமைந்திருந்த பிரம்மாண்ட கோட்டையில் இருந்தபடி அந்த ராஜ்ஜியத்தை ஆட்சிசெய்து கொண்டிருந்தார் அதன் ராணா. ராணாவுக்கு முகலாயர்கள் என்றாலே ஆகாது என்பதால் முகலாயர்களின் எதிரிகளுக்குத் தஞ்சமும், உதவிகளையும் அவர் அளித்துக்கொண்டிருந்தார். ராணாவின் இந்தச் செயலுக்குப் பின்னால் பல வருடப் பகையின் எச்சங்கள் உயிர்ப்புடன் இருந்தன.

(தொடரும்)

பகிர:
ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *