1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன் குஜராத்துக்குப் பயணித்தன.
சிறுத்தைகளின் வேகமும், வேட்டையாடும் துல்லியமும் அக்பரைக் கவர்ந்ததால் பொறிவைத்துப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் ஷிக்கர் கானாவில் வளர்க்கப்பட்டன. நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பிறகு அந்தச் சிறுத்தைகள் மான் வேட்டைக்கு அழைத்துச் செல்லப்படும். மான் வேட்டையில் அசாத்தியத் திறமையை வெளிப்படுத்தும் சிறுத்தைகளைத் தன் அரசவையில் வைத்துக்கொண்டார் அக்பர்.
சிக்ரியிலிருந்து கிளம்பி நேராக அஜ்மீர் தர்காவுக்குச் சென்று தொழுதார் அக்பர். பிறகு அங்கிருந்து கிளம்பி சங்கனேர் வழியாகப் பயணப்பட்டார். இந்தப் படையெடுப்பில் கலந்துகொள்ள பைரம்கானின் மகன் அப்துல் ரஹீமும் முகலாயப் படையுடன் சேர்ந்து குஜராத்துக்குப் பயணித்தார்.
குஜராத்! இந்தியாவின் மேற்கு நுழைவாயில். டெல்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மாகாணமாக இருந்தது குஜராத். தைமூரின் டெல்லி படையெடுப்புக்குப் பிறகு குஜராத்தின் ஆளுநராக இருந்த முசாஃபர் ஷா, 1394ஆம் வருடம் தன்னை குஜராத்தின் சுதந்திர ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார். அவருக்குப் பின் அரியணையேறிய சுல்தான்களும் குஜராத்தைச் சுதந்திரமாக ஆட்சி செய்துவந்தனர்.
அப்போது பருத்தி, மென் பட்டு, அலங்காரத் துணிகளுக்குப் பேர் போன பகுதியாக இருந்தது குஜராத். துணிகளைவிட அங்கே அவுரி செடியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட நீல நிறச் சாயம் உலகெங்கும் பிரபலம். இவை போக வாள், குத்து வாள், வில் அம்பு போன்ற உயர் தர ஆயுதத் தயாரிப்புக்கும் அது பேர்போன இடமாக இருந்தது. மேலும் அந்தச் சமயம் கப்பல் கட்டும் தொழிலிலும் கோலோச்சி வந்தது குஜராத்.
துருக்கி, ஈராக், எகிப்து போன்ற பல்வேறு நாடுகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி குஜராத் மாகாணத்தைச் செழிப்புடன் வைத்திருந்தன. இதுபோகப் போரிடத் தேவைப்பட்ட வலுவான அரேபியக் குதிரைகள் குஜராத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, பின் அங்கிருந்து இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்றன.
அக்பர் படையெடுத்துச் செல்லும்போது குஜராத் அரியணையில் (மூன்றாம்) முசாஃபர் ஷா என்ற பெயரில் ஒரு சுல்தான் இருந்தார். ஆனால் அரசின் அதிகாரம் முழுவதும் அவரது அமைச்சர்கள் இக்தியார் உல் முல்க், இதிமத் கான் ஆகியோரிடம் இருந்தது. அக்பர் படையெடுத்து வந்துவிட்ட செய்தியைக் கேட்டதும் இருவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நேரடியாக வந்து அவரிடம் சரணடைந்துவிட்டனர்.
மேலும், முன்பு ஜான்பூரில் உஸ்பெக்கியர்களுக்கு எதிராக அக்பர் நடவடிக்கை எடுத்தபோது அங்கிருந்து தப்பி குஜராத்தில் தஞ்சம் புகுந்திருந்தார் முகலாய அதிகாரி முகமது ஹூசைன். படையுடன் அக்பர் குஜராத்துக்கு வந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டதும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்துகொண்டார் ஹூசைன்.
இவ்வாறு எதிர்ப்பே இல்லாமல் குஜராத் பகுதி வெகு சுலபமாக அக்பர் வசமானது. குஜராத்தின் முகலாய ஆளுநராக மிர்சா அஜீஸ் கொக்காவை நியமித்தார் அக்பர். குஜராத்தைக் கைப்பற்றியதன் மூலம் கடல் பகுதியை அணுகுவதற்கான வாய்ப்பு முகலாய அரசுக்குக் கிடைத்தது. இதனால் செழிப்பான கடல் வணிகமும், அதன் மூலம் கிடைத்த லாபமும் அக்பரின் வசமாகின.
பிறகு காம்பே வளைகுடா பகுதிக்குச் சென்ற அக்பர், அங்கே முதல்முறையாகக் கடலைக் கண்டார். கடலில் ஆசைதீரப் படகுப்பயணம் மேற்கொண்டார். பிறகு காம்பே துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி, இறக்குமதி குறித்துப் பல விசயங்கள் அறிந்துகொண்டார்.
சில வாரங்கள் காம்பேவில் கழித்த அக்பர், 1573ஆம் வருடத்தின் தொடக்கத்தில் அங்கிருந்து கிளம்பி தபதி நதிக்கரையில் அமைந்திருந்த சூரத் நகரத்தை அடைந்தார். அங்கிருந்த போர்த்துகீஸிய அரசுத் தூதுவர் அன்டோனியோ காப்ரல் அக்பரைச் சந்தித்தார். காப்ரலிடம் இருந்து போர்ச்சுகல் நாட்டைப் பற்றியும், ஐரோப்பியப் பழக்கவழக்கங்கள் குறித்தும் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார் அக்பர். மேலும் அப்போது குஜராத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கியப் பிரச்சனை குறித்து காப்ரலிடம் பேசினார் அக்பர்.
குஜராத் பகுதியில் அச்சமயம் போர்த்துகீஸியர்கள் ஆழமாகக் கால் ஊன்றியிருந்தனர். கத்தியவார் தீபகற்பத்தின் தென் கோடியில் இருந்த டையூ தீவு அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் குஜராத்திலிருந்து அரேபியத் தீபகற்பம் வரை நீண்டிருந்த அரேபியக் கடலையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன்மூலம் குஜராத் துறைமுகங்களிலிருந்து கிளம்பும் கப்பல்களுக்கு வரி விதித்து அதன் மூலம் அவர்கள் லாபம் பார்த்து வந்தனர்.
அன்றைய காலகட்டத்தில் மக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரீகர்களைச் சுமந்துகொண்டு சூரத் துறைமுகத்தில் இருந்துதான் கப்பல்கள் கிளம்பும். அப்படிக் கிளம்பும் கப்பல்களுக்குப் போர்த்துகீஸிய அதிகாரிகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து காப்ரலிடம் குறிப்பிட்டார் அக்பர். வருங்காலத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளும்படி கூறினார். அதற்குக் கைமாறாகக் குஜராத்தில் இருந்து வணிகம் மேற்கொண்டுவந்த போர்த்துகீஸியர்களுக்கு வரிச் சலுகைகளை அறிவித்தார் அக்பர்.
காப்ரல் உடனான சந்திப்பு முடிந்ததும், வெள்ளை அங்கி அணிந்து நீளமான தாடி வைத்திருந்த பார்சி மதப் பாதிரியார் தஸ்தூர் மெஹர்ஜீ ராணாவைச் சந்தித்தார் அக்பர். பார்சி மதம் குறித்தும் அதன் மரபுகள் குறித்தும் பல தகவல்களை மெஹர்ஜீயிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு அங்கிருந்து கிளம்பி அஜ்மீர் வழியாக சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர்.
0
சிக்ரி திரும்பிய சில நாட்களில், ஜான்பூரிலிருந்து தப்பி குஜராத்தில் தஞ்சமடைந்திருந்த முகமது ஹூசைன், குஜராத் அமைச்சர் இக்தியார் உல் முல்குடன் இணைந்து அங்கிருந்த முகலாயப் படையை வீழ்த்தினார். இந்தச் செய்தி அக்பருக்குத் தெரியவந்தது. அந்தச் சதியைவிட அகமதாபாதில் இருந்த முகலாய ஆளுநர் மிர்சா அஜீஸ் கொக்காவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டதோ என்று பதறினார் அக்பர்.
அதற்குக் காரணம், மிர்சா அஜீஸ் கொக்கா அக்பரின் வளர்ப்புத் தந்தை அட்கா கானின் சொந்த மகன். அக்பரும் அஜீஸும் 1542ஆம் வருடம் பிறந்த ஒத்த வயதுடையவர்கள். காபூல் கோட்டையில் மிர்சா அஜீஸ்தான் அக்பரின் விளையாட்டுத் தோழன். பின்னாளில் முகலாய பாதுஷாவான அக்பருக்குச் சமமாக அவரது பட்டத்து யானையில் அமர்ந்து வரும் உரிமையைப் பெற்ற ஒரே நபர் மிர்சா அஜீஸ் மட்டுமே.
இதனால் நேரத்தை வீணடிக்காமல் செய்தி கிடைத்த அதே நாளில் களமிறங்கினார் அக்பர். பகவான் தாஸ், மான் சிங், சைஃப் கான், பீர்பால், அப்துல் ரஹீம் போன்ற திறமையான தளபதிகளைத் தயார்ப்படுத்தி, படை பரிவாரங்களுடன் முதலில் அஜ்மீருக்குச் சென்று தொழுதுவிட்டு அங்கிருந்து குஜராத்துக்குக் கிளம்பினார். இரவு, பகல், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் வெறும் ஒன்பதே நாட்களில் 800 கிலோமீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து அகமதாபாத்தை அடைந்தது முகலாயப்படை.
சபர்மதி நதிக்கு அக்கரையில் முகலாயப் படை வந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு அதைக் காண வந்தார் கலகக்காரர் முகமது ஹூசைன். அங்கே அவர் கண்ணால் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை. தயக்கத்துடன் தன் முகாமுக்குத் திரும்பிச் சென்று முகலாயப் படையுடன் போரிடத் தயாரானார் ஹூசைன். ஹூசைனின் இந்தத் தயக்கத்துக்கான காரணம் அக்பரின் வேகம்.
முன்பு சூரத்திலிருந்து சிக்ரிக்குக் கிளம்பிய அக்பருக்குப் பின்னால் ஒற்றர்களை அனுப்பினார் ஹூசைன். அதற்குச் சில நாட்கள் கழித்து முகலாயப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த குஜராத் பகுதிகளை அவர் ஆக்கிரமிக்கத் தொடங்கினார். அஜ்மீர் வழியாக சிக்ரியைச் சென்றடைந்த அக்பர், குஜராத் கலகத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாகப் படைதிரட்டி அகமதாபாத்துக்கு வருவது அவ்வளவு சுலபமல்ல என்று ஒற்றர்கள் ஹூசைனுக்குத் தகவல் அளித்தனர்.
ஆனால் அதற்கு நேரெதிராகக் குஜராத்தில் நடந்த கலகம் குறித்த தகவல் கிடைத்ததும் உடனே படையைத் தயார் செய்து, ஒன்பதே நாட்களில் குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு வந்திருந்தார் அக்பர். இதை முகமது ஹூசைன் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்கு எதிரான நடவடிக்கை அக்பருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவரது வேகம் ஹூசைனுக்கு உணர்த்தியது.
ஹூசைன் கானுக்கு நடந்து ஓர் உதாரணம். இதுபோலப் போர் தொடங்கும் முன்பு அக்பர் மேற்கொள்ளும் செயல்கள் உளவியல்ரீதியாக எதிரிப்படையை அசைத்துப் பார்த்துவிடும். அப்போதே பாதி வெற்றி அக்பர் வசமாகிவிடும். மீதி வெற்றியை அவரது படைகள் பெற்றுக் கொடுக்கும்.
அரை மனதோடு போரில் பங்கேற்ற ஹூசைன் கானுக்கும், இக்தியார் உல் முல்க்கும் தோல்வியே கிடைத்தது. இருவரின் தலைகளையும் துண்டித்து ஆக்ராவுக்கு அனுப்பிவைத்தார் அக்பர். தனக்கு எதிராகத் துரோகத்திலும் கலகத்திலும் ஈடுபவர்களுக்குக் கிடைக்கும் முடிவு எப்படி இருக்கும் என்பதை, இவ்வாறு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிறருக்கு உணர்த்திக் கொண்டே இருந்தார் அக்பர்.
ஒரு வழியாக மிர்சா அஜீஸ் கொக்காவுடன் இணைந்த பிறகு மூன்று வாரங்கள் கழித்து சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். அமீதா பானுவுடன் இணைந்து அக்பரின் ராணிகள் அனைவரும் அவருக்குப் பலமான வரவேற்பை அளித்தனர். சிக்ரி திரும்பியதும் முதல் வேலையாகக் குஜராத் மாகாணத்தின் நிதி நிலைமையைச் சீரமைக்க தோடர் மாலை அங்கே செல்ல உத்தரவிட்டார்.
குஜராத் படையெடுப்புக்கு முன்பு மாபெரும் கோட்டை நகரம் ஒன்றைக் கட்டத் தொடங்கியிருந்தார் அக்பர். சொல்லப்போனால் அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களில் இதுதான் மிகப் பெரியது. அக்பரின் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கானோர் உழைப்பில் பார்த்துப் பார்த்து உருவானது அந்தப் பிரம்மாண்டக் கோட்டை நகரம்.
(தொடரும்)