‘வரலாறு என்பது தரவுகளின் அடிப்படையில் தொடங்கி, தரவுகளுக்கு மத்தியில் வார்த்தைகளைப் பொறுத்திப் பார்க்கும் வேலை’ என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் ஜான் அர்னால்ட் குறிப்பிடுகிறார். அடிப்படையாகப் பார்த்தால், வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டுமே எழுதுவது அல்ல, மாறாக நிகழ்காலத்தையும் தன்னுள் இணைத்துக்கொள்வது.
இதனையொட்டி புதுவகையான அணுகுமுறை ஒன்று சமீபகாலமாக வரலாற்றுத் துறையில் வளர்ந்து வருகிறது. தெளிவான இறுதி முடிவை எட்டுவதைக் காட்டிலும் குறிப்பிட்ட விஷயம் சார்ந்த பன்முகத்தன்மை வாய்ந்த கருத்துகளுக்கு இடம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனடிப்படையில்தான் அம்பேத்கர் எனும் மாபெரும் படிப்பாளியின் படைப்புகளை நாம் உற்றுநோக்க வேண்டும். அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர் இல்லையென்றாலும், ‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ ஆரிய சமூகத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள்?’ என்றும் ‘தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்?’ என்றும் இரண்டு அதிமுக்கியமான வரலாற்றுப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
அடையாளத்தை நிலைநிறுத்தவும், அதிகாரத்தை கையிலெடுக்கவும் வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்த நவீன இந்தியர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர். அறிவின் தாக்கம் வரலாற்றை எப்படி கட்டுப்படுத்துகிறது என்றும் வரலாற்றின் தாக்கம் அறிவை எப்படி கட்டுப்படுத்துகிறது என்றும் விரிவாக ஆய்ந்தவர்.
அம்பேத்கரின் வரலாற்றாய்வு அணுகுமுறை
அம்பேத்கரின் வரலாற்றாய்வு அணுகுமுறையை சில படிநிலைகளில் புரிந்துகொள்ளலாம் என்று உர்வி தேசாய் குறிப்பிடுகிறார். அம்பேத்கரின் முதல் தேடல் அதிகாரத்தைக் கேள்வி எழுப்புவதாக அமைகிறது. கார்ல் மார்க்ஸ், அண்டோனியோ கிராம்ஷி போன்றோரின் தாக்கம் அம்பேத்கரின் வராலாற்றெழுதியல் கொள்கைகளில் அதிகம் தென்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை வரலாறு என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சிமுறை மற்றும் சட்டத் திட்டங்களின் காரண காரிய விளைவுகளை ஆராய்வது என்பது பொருள்.
இரண்டாவதாக, தன் சமகாலத்து அரசியல் நிலைப்பாட்டின் பிரதிபலிப்புப் பிரதியாக அம்பேத்கரின் எழுத்துக்கள் விளங்குகின்றன. அவர் எழுத்து நடையில் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையிலான ஓர் உரையாடல் இருக்கிறது.
தான் எத்தகைய வரலாற்றை எழுதுகிறோம் என்று அம்பேத்கர் நன்கு உணர்ந்திருந்தார். ‘தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் யார்?’ என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவரே அதைப் பதிவு செய்கிறார்:
‘தீண்டாமையின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் இப்போதைய முயற்சி திட்டவட்டமான விவரங்களைத் தரும் மூலாதாரங்களிலிருந்து வரலாற்றை எழுதுவது போன்றதல்ல. எத்தகைய மூலாதாரங்களும் இல்லாமலேயே வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி இது; அப்படியே மூலாதாரங்கள் கிடைத்தாலும்கூட அவற்றுக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்காது. இத்தகைய சந்தர்ப்ப சூழ் நிலைமைகளில் ஒரு வரலாற்றாசிரியர் என்ன செய்யவேண்டும்?
‘இந்த மூலாதாரங்கள் எதை மறைக்கின்றன அல்லது திட்டவட்டமான முறையில் உண்மையைக் கண்டறியாமலேயே அவை எவற்றை சூசகமாகக் கூறுகின்றன என்பதை அவர்கள் முன்னுணர வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் கடந்தகால மிச்ச சொச்சங்களை, மரபெச்சங்களைச் சேகரிக்கவேண்டும்; அவற்றை ஒன்றிணைத்து அவை பிறந்த கதையைச் சொல்லும்படிச் செய்யவேண்டும்.
‘இந்தப் பணி உடைந்த கற்களிலிருந்து அங்கிருந்த நகரை நிர்மாணிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்து போன ஒரு தொன்மைக்கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி தொடுவானத்தின் கோடுகளையும், குன்றுச்சரிவுகளின் சாயல்களையும் அப்படியே மனத்தில் படம்பிடித்துக் கொண்டு ஓர் அற்புதமான இயற்கைக் காட்சியை வரையும் ஓர் ஓவியரது பணியைப் போன்றது.’
வரலாற்று ஆய்வாளரின் சுதந்திரம்
‘வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி’ என்று அம்பேத்கர் குறிப்பிடுவது சிலருக்கு நெருடல் ஏற்படுத்தலாம். ஆனால் ‘மாறும் வரலாறு’ எனும் நூலில் ஹேடன் வைட் குறிப்பிடும் கருத்தாக்கத்தை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம். ‘வரலாற்றின் உண்மைத் தன்மையை திரித்து எழுதும் வாதங்களுக்கு நாம் வேறொரு வகையில் பதில் கொடுக்க வேண்டும். உண்மைத் தன்மைகளை மேலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்வதைக் காட்டிலும், கலைத்தன்மை கொண்ட கவிநயமான கதையாக எழுதவேண்டும்’ என்கிறார்.
அம்பேத்கர் இதை நன்கு உணர்ந்திருந்தாலும் அதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவருக்கு இல்லாமல் இல்லை.
‘என்மீது நம்பிக்கை வைத்து எனது ஆய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாசகர்களை நான் கோரவில்லை. நான் கூறியிருப்பது மிகப்பெருமளவுக்கு நம்பத் தகுந்தது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். மிகப்பெருமளவுக்கு நம்பத் தகுந்தது என்று கூறுவது ஒப்புக்கொள்ளத்தக்க முடிவுக்குப் போதிய ஆதாரமாகாது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால் இது கல்விச்செருக்கு மிக்க போலிவாதமே தவிர வேறன்று.
‘அடுத்து, இரண்டாவது பிரச்சினைக்கு வருவோம். எனது ஆய்வுதான் இதுவிஷயத்தில் இறுதியானது, முற்றமுடிவானது என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு நான் தற்பெருமைக்காரன் அல்ல என்பதை என்னையும் எனது ஆய்வையும் விமர்சிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை. அவர்களது கருத்தின்மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் தமது சொந்த முடிவுக்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதுதான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம், அந்த அடிப்படையில் எனது ஆய்வு நடைமுறைப்படுத்தத் தக்கதா, தாற்காலிகமாகவேனும் அங்கீகரிக்கத் தக்கதா என்பதைப் பரிசீலித்துப் பாருங்கள். ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீட்டைத் தவிர என் விமர்சகர்களிடமிருந்து வேறு எதையும் நான் எதிர் பார்க்கவில்லை.’
அம்பேத்கர் எனும் அறிவுஜீவியின் முற்போக்கான வரலாற்றுப் புத்தகத்தின் முன்னுரையைப் புரிந்துகொள்ளவே நாம் சிரத்தையெடுக்க வேண்டியிருக்கிறது.
கற்பனையும் கருத்தாக்கமும்
‘ஒவ்வொரு ஆய்வாளரும் தன்னை ஒரு நீதிபதியின் தராசில் நிறுத்திப் பார்க்க வேண்டும். தான் முன்வைக்கும் கருத்தின் பூர்ணத்துவத்தை அடி ஆழம் வரை சென்று மெய்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் தனக்கு முன் ஆய்வு செய்தவர்களின் கருத்தோடு அது ஒத்துப்போகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலையில்லாமல் நிறைவான ஒரு முடிவுக்கு வர முடியும்’ என்கிறார் ஜெர்மானிய மகாகவி கதே. இது ஆய்வு தொடர்பான பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
ஆனால் அம்பேத்கரின் வராலாற்றெழுதியல் அணுகுமுறையை இது துளியும் பாதிக்கவில்லை. தன் ஆய்வுப் புலத்திற்குத் தொடர்பான அத்தியாவசியத் தரவுகள் கிடைக்கும்வரை வரலாற்றாய்வாளர் காத்திருக்க வேண்டுமா? முக்கிய நிகழ்வுகளை ஒன்றிணைக்கும் தொடர்புப் புள்ளிகள் புலப்படும்வரை தன் ஆய்வை பரணில் ஏற்றி பெட்டியில் அடைக்க வேண்டுமா? என்று அவர் சிந்தித்தார்.
கல்வியாளர்களின் அறிவுச் செருக்கை உடைக்கும் வண்ணம் அம்பேத்கர் இதற்கு விடையளிக்கிறார்:
‘இதுபோல தொடர்புப் புள்ளிகள் கண்டுபிடிக்கப்படாத சந்தர்பங்களில் ஒருவர் தன் கற்பனை ஆற்றலையும் கருத்தாக்க உத்தியையும் பயன்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன். அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு இடையே பொருந்தக்கூடிய ஆய்வு இடைவெளியினை நம்மால் நிரப்ப முடியும்’ என்று நம்பிக்கை அளிக்கிறார்.
நியாயமற்ற சமூக அரசியல் கட்டுமானங்களைப் பெயர்த்தெடுக்கவே, இந்திய வரலாற்றை அவர் மீட்டெழுத விரும்பினார்.
‘புத்தமும் அவர் தம்மமும்’ என்ற நூல் அவர் வாழ்வின் மிகப் பிரம்மாண்டமான படைப்பு. புத்தரின் வாழ்க்கையை நவீன காலத்தின் அறிவுணர்ச்சியோடு பகுத்தறிவு பார்வையில் அணுகியிருப்பார். நூலின் முன்னுரையில் பௌத்தத்தைப் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சினைகளைப் பட்டியலிடுகிறார்.
அதில் புத்தரின் பரிவ்ராஜம் தொடர்பான முதல் சிக்கலை மாற்றுச் சமயத் தாக்கமில்லாமல் மிக நுண்ணிய ஆய்வில் கற்பனைக்கும் கருத்தாக்கத்திற்கும் இடையில் சமரசம் அடையாத ஆவணங்களோடு புதிய பரிமாணத்தில் நிலைநிறுத்த முயன்றிருப்பார்.
காலங்காலமாகச் சொல்லப்படும் பௌத்தத்தின் அசலான நான்கு உண்மைகளை, ஆரிய உண்மை என்று வரையறுக்கிறார். அத்தோடு பௌத்தர் அல்லாதோர் பௌத்தப் போதனைகளை ஏற்றுக் கெள்வதில் மிகப்பெரும் தடையாய் இருப்பது இந்த நான்கு உண்மைகள்தான் என்பது அவர் வாதம்.
பௌத்த சமயத்தின் பல அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கி அந்நூலின் முன்னுரையை தொடங்கும் அம்பேத்கர், ‘இந்த வினாக்களுக்கான தீர்வு காண்பதில் பௌத்த போதனையின் முரணற்ற தன்மையைச் சார்ந்திடுவதை விட பௌத்தத்தின் எதிர்காலத்தைப் பொறுத்திடுவதே சரியாகும்’ என்று முடிக்கிறார். பௌத்தத்தின்பால் தூசிகள் படிந்துள்ளன என்று சொல்லித்தான் சுத்தம் செய்ய தொடங்க முடியும் என்பது அவர் வாதம்.
பௌத்த மதம் இன்றைக்குப் பெற்றிருக்கும் செவ்வாக்கிற்கு அம்பேத்கர் தொடங்கிவைத்த பௌத்த ஆய்வுகளே இன்றியமையாத காரணியாக இருந்துள்ளன.
சாமானியருக்கான வரலாறு
இந்தியாவின் இன்றைய வன்முறைக்கும், சமத்துவமின்மைக்கும், அநீதிக்கும் வரலாற்றைத் திருத்தி எழுதுவதால் மட்டும் விடை காண முடியாது. மாறாக கடந்த காலத்தோடு நாம் உரையாட வேண்டும். அம்பேத்கர் அதை ஓயாமல் செய்தார்.
‘இந்து மதத்தில் புதிர்கள்’ எனும் நூலில் பக்கிள் எழுதிய நாகரிகத்தின் வரலாறு நூலில் உள்ள சில பகுதிகளை மேற்கொள் இடுகிறார்.
‘இருளை உணராதவர்கள் ஒளியைத் தேட மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலேனும் நாம் நிச்சயமான கருத்தை அடைந்துவிட்டால் அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய மாட்டோம். ஏனென்றால் அது பயனற்றது மட்டுமின்றி ஒரு வேளை ஆபத்தானதாகவும் இருக்கலாம். ஐயம் குறுக்கிட்டால் தான் ஆய்வு தொடங்கும். எனவே ஐயப்படும் செயல்தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது, அல்லது முன்னேற்றங்களுக்கு முதல் படியாக அமைகின்றது எனக் காண்கிறோம்.’
அம்பேத்கரின் எழுத்துலகம் இந்த விதியைப் பின்பற்றி எழுந்தது. சமூகம், பொருளாதாரம், தத்துவம், சமயம், சட்டம், அரசியல் போன்ற துறைகளில் பிரவேசித்தபோது ஏற்படாத பல அனுபவங்களை வரலாற்றுத் துறையில் அவர் எதிர்கொண்டார்.
‘சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ – ஆரிய சமுதாயத்தில் நான்காம் வருணத்தவர் ஆனார்கள்?’ எனும் நூலில் வரலாற்றுத் துறை பிரவேசம் பற்றிய எச்சரிக்கைத் துணுக்குகளைப் பகிர்கிறார்.
‘சூத்திரர்களின் தோற்றம் பற்றி ஆராய்வது வரவேற்கத்தக்கதே என்று ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்த விஷயத்தைக் கையாள்வதற்கு எனக்குள்ள தகுதி பற்றிச் சிலர் ஐயப்படக்கூடும். இந்திய அரசியல் பற்றிப் பேசுவதற்கு எனக்கு உரிமை இருந்தபோதிலும், சமயமும் இந்தியாவின் சமய வரலாறும் எனது துறையல்ல என்று ஏற்கெனவே நான் எச்சரிக்கப்பட்டுள்ளேன் என்னுடைய விமர்சகர்கள் எனக்கு இத்தகைய எச்சரிக்கையைத் தருவது அவசியமென்று ஏன் கருதினார்களோ தெரியவில்லை…
‘சம்பந்தப்பட்ட சமஸ்கிருத நூல்களை அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 15 வருடக்காலமாக ஆராய்ந்து வருவது என்னைப் போன்ற நடுத்தர அறிவுக்கூர்மை படைத்தவனுக்குக் கூட இத்தகைய பணியை மேற்கொள்வதற்குப் போதிய தகுதியை அளிக்குமென்பதை என்னால் துணித்து கூறமுடியும். இந்த விஷயம் குறித்துப் பேசுவதற்கு எனக்கு எத்தகைய தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே மிகச் சிறந்த சான்றாகும். தேவதைகள்கூடச் செல்லுவதற்கு அஞ்சும் இடத்திற்கு முட்டாள் துணிந்து செல்லுவானென்ற முதுமொழிக்கு எனது முயற்சியைச் சிலர் உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடும்; ஆனால் தேவதை தூங்கச் சென்றுவிடும்போது அல்லது உண்மையைக் கூறுவதற்குத் தயாராக இல்லாதபோது ஒரு முட்டாளுக்குக்கூட அவன் செய்யவேண்டிய கடமை இருக்கிறதென்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தடைசெய்யப்பட்ட துறையில் பிரவேசிப்பதற்கு இது நான் கூறும் சமாதானமாகும்.’
இவ்வளவு பாடுபட்டு வரலாற்றுத் துறையில் அம்பேத்கர் பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன? சாமனியர்களின் கடந்த காலத்தை உரையாடலுக்கு எடுத்து, அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை மேம்பட சமகாலத்தில் அதிர்வலை ஏற்படுத்த விரும்பினார். அந்த முயற்சியில் அம்பேத்கர் வெற்றியடைந்தார்.
‘பழைய விஷயங்களைப் புதிய கோணத்தில்’ பார்ப்பதன்மூலம் வரலாற்றுப் புலமைவாதத்தில் பிராமணர்களின் கற்பிதங்களை மறுதலித்தார். கதேவின் அணுகுமுறையை நெருக்கமாகப் பின்பற்றி, ‘பொய்யிலிருந்து உண்மையையும், நிச்சயமற்றதிலிருந்து நிச்சயமான செய்திகளையும், நம்ப முடியாதவற்றிலிருந்து சந்தேகத்திற்குரியதை நீக்குவதும்’ வரலாற்றாசிரியனின் பணி என்று உறுதிப்படுத்தினார்.
ஒரு வரலாற்றாசிரியன் கடந்த காலத்தின் சாட்சியாகவும், எதிர்காலத்தின் இயக்குநராகவும் இருக்கிறான் என்று சொல்லும் அம்பேத்கர் தன் வரலாற்றெழுதியல் மூலம் இன்றைக்கும் என்றைக்கும் சாமானியரின் குரலாக ஒலித்துக் கொண்டே இருப்பார்.
0
____________________________
உதவிய நூல்களும் கட்டுரைகளும்
1. History, A Very Short Introduction, John H. Arnold.
2. Metahistory : The Historical Imagination in 19th Century Europe, Hayden White.
3. Ambedkar and the Writing of History, Urvi Desai.
4. Dr. Ambedkar: The Unsentimental historian, Anirudh Desai.
5. Ambedkar – A Multi-faceted Personality, Sharat Poornima.
6. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 14, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்.
7. அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள், வாசுகி பாஸ்கர்
Excellent,