இன்று இந்தியா முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பற்றிய ஒவ்வொரு நிகழ்வின்போதும் பாஜக அவருக்குக் காவி உடை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை எல்லாம் அணிவித்து அவரை இந்து மத ஆன்மீகவாதியாக உருமாற்ற முயல்கிறது. நமது பிரதமர், அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் தூவிவிட்டு ‘அம்பேத்கரால்தான் பிரதமரானேன்’ எனக் கண் கலங்குகிறார்.
இவை ஏன் தொடர்ந்து நடக்கிறது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அவரை ஏன் இந்துவாக மாற்றி சுவீகரிக்க முயல்கிறது? இந்து மதத்தைக் காத்திரமாக விமர்சித்த அவர் இன்று அவர்களாலேயே எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இது இன்றைக்கு நேற்றைக்குத் தொடங்கியதில்லை, 1980களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அம்பேத்கரின் குறியீடுகளைக் கொண்டு இந்து மதம் தொடர்பான கதையாடல்களை மறுகட்டமைப்பு செய்தபோதே தொடங்கிவிட்டது. அம்பேத்கர் முன்வைத்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மத விமர்சனங்களை மட்டும் முன்னிலைப்படுத்தி, அந்த மதங்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களை தொடங்கி, ஓர் இந்து சீர்த்திருத்தவாதியாக அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ் காட்டத் தொடங்கியது. அம்பேத்கர் இந்து மதத்தை எதிர்த்து, பெளத்தத்தை ஏற்றாரே என கேள்வி எழுப்பினால், இந்திய மண்ணில் தோன்றிய அனைத்து மதங்களும் இந்து மதத்தின் வழித்தோன்றல்கள்தான். பெளத்தமும் இந்து மதத்தின் பிரிவுதானே எனக் கம்பி கட்டுகிறது.
இது சாதாரண ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் இதன் பலனைத்தான் பாஜக இன்றும் அறுவடை செய்துகொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு 40ஆக இருந்த பாஜகவின் தலித் எம்பிக்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 46ஆக உயர்ந்தது. இந்திய தலித்துக்களின் கைகளில் 84 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. உத்தரப்பிரதேசம் அதிக தலித்துக்களைக் கொண்ட மாநிலமாக இருக்கிறது. இவர்களைக் குறிவைப்பதுதான் பாஜகவின் வேலை. அம்பேத்கரைத் தங்களுடையவராக மாற்றுவதன் நோக்கமும் அந்தத் தொகுதிகளைப் கைப்பற்றுவதற்காகத்தான்.
ஆனால் இதைவிடக் கொடிய விஷயம், பாஜகவின் இந்து மத தேசியம் வெறுப்பை மூலதனமாகக் கொண்டது. மக்கள் விரோதமானது. இன்று சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அந்தத் தேசியம், நாளை நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பலிகொள்ள தயங்காது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு அம்பேத்கரின் அடையாளங்கள் களவாடப்படுகின்றன என்பதுதான் சோகம்.
இந்த நிலையில், பாஜகவினரிடமிருந்து அம்பேத்கரின் அடையாளங்களை மீட்டெடுக்க, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக அவரது கருத்துகளை முன்னிறுத்த மதம் குறித்தும், தேசியம் குறித்தும் அவர் என்ன நிலைபாடுகளை வைத்திருந்தார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக சாதிய அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் இந்து மதத்தை அவர் என்னென்ன வகையில் கேள்விக்கு உட்படுத்தினார். அதற்கு மாற்றாக அவர் பெளத்த மதத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை அம்பேத்கரின் தேசியம், சமூகம் சார்ந்த பார்வையை, மத நிலைப்பாட்டை எளிமையாக விவரிக்க முயற்சி செய்கிறது.
அது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக் காலக்கட்டம். இந்திய மேட்டுக்குடிகள் அறிவுத்துறையின் ஒரு பகுதியினர் ‘இந்து’ என்ற பேரடையாளம் ஒன்றினை உருவாக்கத் தொடங்கி இருந்தனர். அதற்கான பண்பாட்டு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. அதே காலக்கட்டத்தில் இந்திய-ஐரோப்பிய தொடர்புகளின் காரணமாக சமத்துவம், சுதந்திரம், மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் இந்திய மக்களில் ஒரு பகுதியினரிடையில் ஏற்படத் தொடங்கியது. அப்போது இந்து பேரடையாளத்திற்குள் வர முடியாத சமூகத்தினர் மாற்று அடையாளங்களைத் தேடத் தொடங்கினர். இவற்றில் அன்றைய தாழ்த்தப்பட்ட மக்களும் அடங்குவர்.
இந்தியத் தத்துவங்களை ஆய்வு செய்ய தொடங்கிய ஐரோப்பிய அறிஞர்கள் வைதிகம், அவைதிகம் என்ற இரு வகை மரபுகளைப் பழமையான இந்திய வரலாற்றில் கண்டெடுத்தனர். இந்து மத அடையாளம் உடையவர்கள் வைதிக மரபுகளை முன்னிலைப்படுத்தினர். அடித்தள மக்கள் அவைதிக மரபுகளைச் சார்ந்து நின்றனர். அவை சார்ந்த அடையாளங்களையும் மீட்டுருவாக்கம் செய்யத் தொடங்கினர்.
அடுத்த நூற்றாண்டிலேயே இந்தியாவில் சுதந்திர கனல் தீவிரமாகப் பற்றி எரியத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷாரை வெளியேற்றுதல் என்ற ஒன்றைப் நோக்கத்துடன் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், அம்பேத்கரின் சிந்தனைகளோ சாதிகளுக்கிடையான உறவுகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உருவாகும் இந்து பெரும்பான்மையின் அச்சுறுத்தல், அவற்றை எதிர்கொள்வதற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றை நோக்கி இருந்தன.
பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து அதிகாரம் காங்கிரஸ் ஆட்சிக்கு மாறும்போது அது இந்து பெரும்பான்மையின் ஆட்சியாக இருக்கும் என அம்பேத்கர் கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதைத் தனது அரசியலாக முன்னிறுத்தினார்.
ஆனால் அவர் முன்னெடுத்த சமூகம் சார்ந்த பிரச்சனைகளை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. 1923ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் ஒன்றில், ‘தீண்டப்படாதவர்களின் பிரச்சனை இந்து சமுதாயம் சம்மந்தப்பட்டதாக இருப்பதால் இந்த விஷயத்தை தன் பொறுப்பில் ஏற்றுக்கொள் இந்து மகா சபையை காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதிலேயே காங்கிரஸின் சாதியப் பிரச்சனைகள் சார்ந்த அணுகுமுறையைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் அம்பேத்கரின் செயல்பாடுகளோ தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துபவையாக இருந்தன. இந்தியாவின் உள்ளார்ந்த சமூகப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காதவரை, வெளியில் இருந்து கிடைக்கும் சுதந்திரத்தால் எல்லா மக்களும் பயன்பெற மாட்டார்கள் என அவர் உறுதியாக நம்பினர். அவர் முன்வைத்த இந்தியத் தேசியம் சமூகக் காரணிகளை நோக்கியதாகவும், சமூக மாற்றங்களை வேண்டியதாகவும் இருந்தது. சாதியப் பிளவுகளைக் கொண்ட இந்தியச் சமூகம் ஒரு சமூகமாக இருக்க முடியுமா என்ற அடிப்படைக் கேள்வியோடு அவரது தேசியம் குறித்த கருத்தாக்கம் தொடங்கியது.
காங்கிரஸ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் போல் தாழ்த்தப்பட்டோரையும் சிறுபான்மையராகக் கருதி சட்டப் பாதுகாப்புகள் வழங்க வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் அதனை காங்கிரஸ் பிடிவாதமாக மறுக்கவே, தாழ்த்தப்பட்டோரைப் பெளத்தத்துக்கு மதம் மாற அறைகூவல் விடுத்தார். இவ்வாறு மதம் மாறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மத அடிப்படையில் அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கிடைத்து, அதன்மூலம் சட்டபாதுகாப்பு கிடைக்கும் என நினைத்தார்.
அம்பேத்கர், 1935ஆம் ஆண்டு தலித்துகள் இந்து மதத்தை விட்டு வெளியேறி, சுயமரியாதை தரக்கூடிய வேறு எந்த ஒரு மதத்திற்கும் இடம்பெயரலாம் என்று அறிவித்தார். குறிப்பிட்ட இந்த அறிவிப்பில் இருந்து 1956 வரை தொடர்ந்து இந்தப் பிரச்சனையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட சுமார் 21 ஆண்டுகளில் அவர் வெவ்வேறு மதங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறார். இந்து மதம், சாதியத்தின் தோற்றம், கிறிஸ்தவம், இஸ்மாம், சீக்கியம் குறித்த ஆய்வுகள், பௌத்தம் பற்றிய ஆய்வுகள் ஆகியவற்றை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு பிறகுதான் அவர் பெளத்தத்தை தேர்ந்தெடுத்தார்.
சரி, அவர் ஏன் பெளத்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? பெளத்தத்தை இந்து மதத்திற்கு மாற்றாக முன்வைக்க அவர் முன்னெடுக்கும் விவாதங்கள்தான் அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என நமக்கு உணர்த்துகிறது.
முதலில் அவர் ஏன் பெளத்தம் தவிர பிற மதங்களை ஏற்கவில்லை என்கிற விமர்சனங்களைப் பார்க்கலாம். அம்பேத்கர், இஸ்லாம் இறுக்கமான மதம் என்று நினைத்தார். அதிலும் சாதி, பெண்ணடிமைத்தனங்கள் நிறைந்துள்ளன எனக் கருதினார். அதேபோல கிறிஸ்தவம், பிரிட்டிஷ் ஆட்சி நீட்டிப்புக்கு உதவும் மதம் என்றும், அது தன்னுடைய மதத்தைப் பின்பற்றுபவரையே சமூக ஈடுபாடு அற்றவராக செய்துவிடுகிறது என்றார். அம்பேத்கரின் இந்தக் கருத்துக்களைதான் இந்துத்துவ கும்பல் இன்று தங்களுடைய விஷமப் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவத்துக்கு ஆதரவு தரும் தலித் இயக்கங்களை, பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என இந்து மதவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலை தலித்துகளைத் தேசியமற்றவற்களாகச் செய்துவிடுகிறது என அம்பேத்கர் அஞ்சினார். தனது மக்களை இந்து மதவாதிகள் அந்நியப்படுத்தக்கூடாது என எச்சரிக்கையாக இருந்த அவர், இன்னொரு மதத்திற்குச் செல்வதைவிட நாம் ஏன் பூர்வீக வாழ்க்கை முறைக்கே செல்லக்கூடாது என முடிவு செய்தார்.
அம்பேத்கரைப் பொறுத்தவரை, பெளத்தம் என்பது வாழ்க்கைமுறை. பிராமணியம்/பெளத்தம் என்ற மோதலில்தான் இந்திய வரலாறு தொடங்குகிறது என்பது அவர் கருத்து. தலித்துகள் இந்தியாவில் மிகப்பழைய மதத்தின் மக்களாக இருந்திருக்க முடியும் என்றார்.
பெளத்தம் குறித்த கண்ணோட்டத்துக்கு அவர் எப்படி வந்தடைந்தார் என்பது சுவாரஸ்யமான ஒரு பகுதி. ஏற்கனவே உலகளாவிய கருத்துகளைக் கொண்டிருந்த பெளத்த மதத்தை அவர் மேலும் சீர்த்திருத்தி சமூக விடுதலைக்கான மதமாக மாற்றினார். அதற்குமுன் இந்து மதம் குறித்து அம்பேத்கர் என்ன கண்டடைந்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.
அம்பேத்கர் தலித்துகளுக்கு முன்மொழியும் மதமாற்றம் அவரது இந்து மதம் குறித்த விமர்சனங்களோடு தொடர்புடையது. இந்து மதம் குறித்த அடிப்படையான, விரிவான விமர்சனங்களை அவர் முன்வைக்கின்றார். இந்து மதத்தைச் சமூக நிதி, சமூக பண்பாடு என்ற இரண்டு அளவுகோல்களால் மதிப்பிடுகிறார். இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி இந்து மதத்தின் அடிப்படையான முதன்மையான பண்பு சமத்துவமின்மை என்பதை நிறுவுகிறார். இதற்காக மனுஸ்மிருதி, பகவத் கீதை, வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் சமூக தகவல்கள் ஆகியவற்றை கொண்டு அம்பேத்கர் முன்வைக்கும் வாதங்கள் முக்கியமானவை.
இந்துமதம் குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் கேள்விகள் இவைதான்:
இந்து சட்டத்துக்கு முன் அனைவரும் சமமா? சமத்துவமின்மையே மனுவின் சட்டமாக இருக்கிறது. இந்து திருமணம் என்பது சாதி திருமணங்கள்தான். சாதி மீறிய திருமணங்களை முறை தவறியவை என இந்து மதம் வரையறுக்கிறது. தண்டனை முறைகளில் கூட இந்து மதத்தில் சமத்துவமின்மை உள்ளது. பிராமணருக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு, ஆனால் சூத்திரருக்கு தவறென கருதமுடியாத விஷயங்களுக்குக்கூடக் கடும் தண்டனையை இந்து மதம் விதிக்கிறது. இந்து மதம் தொழில் உரிமையை மறுக்கிறது. சூத்திரனுக்கு பொருளாதார சுதந்திரம் கிடையாது. கல்வி உரிமை கிடையாது.
இந்து மதம் மொத்த சமூகத்தையும் படிநிலை வரிசையில் அடுக்கப்பட்ட பல ஆயிரம் கணக்கான துண்டுகளாக உடைக்கிறது. இந்து மதம் உண்டாக்கும் சமூக உளவியல் மேலிருந்து கீழாக வெறுப்புணர்வை ஏற்படுத்துபவை. சந்தோஷங்களையும் துக்கங்களையும் இந்துக்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்துக் கொள்ளுதல் கிடையாது. திருமணங்கள், சாவுகள், தான தர்மங்கள் சாதியமயப்பட்டவை. சிலர், வர்ண சாதி அமைப்பை வேலை பகிர்வு என்று விளக்க முற்பட்டாலும், அது வேலைப் பகிர்வு மட்டுமல்ல, பணியாளர்கள் பிரிவும்கூட (Division of labourers). இந்தப் பிரிவும் வேலைத் திறன்களால் பகுக்கப்படவில்லை, பிறப்பு அடிப்படையில் நடக்கிறது. தொழில் மாற்றம், தகவமைப்பு எதுவும் இல்லாத, உடலுழைப்பும், உடலுழைப்பாளரும் கேவலமாகப் பார்க்கப்படும் மதமாக இந்து மதம் இருக்கிறது.
அதன் அடிப்படையான சாதி மனிதரை ஆற்றல் இழக்கச் செய்கிறது. இந்து மதம் தனிமனிதருக்கு நீதி வழங்கவில்லை. அதற்கு சமூகப் பயன்பாடும் இல்லை. இந்து மதத்தில் எது நியாயம்? எது நல்லது? என்ற கேள்விகளுக்கு பிராமணர்களின் நலன்களே என்று பதில் சொல்லுகிறது. இந்து மதம் பிராமணர்கள் என்னும் உன்னத மனிதர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட மதம். ஒரே ஒரு வர்க்கத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட மதம். சமத்துவமின்மையே இந்து மதத்தின் புனிதக் கோட்பாடு. சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்மா. இதனைப் பின்பற்றுவதில் யாரும் வெட்கப்படுவதில்லை என்கிறார்.
ஒரு சமூகம் என்பது பெருமளவில் தங்குத் தடையற்ற பொருள் பரிமாற்றமும், தகவல் பரிமாற்றமும், திருமண உறவுகளும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அம்பேத்கர், ஆனால் இந்திய சாதிய சமூகம் தனக்குள் கடக்க முடியாத தடைச் சுவர்களை கொண்டிருக்கும்போது அவற்றை சமூகம் என்று எப்படிக் கூறமுடியும் என்று வாதிடுகிறார்.
அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பில் நாம் முக்கியக் கோணம் ஒன்றைப் பார்க்க வேண்டும். அம்பேத்கர் சாதியம் என்ற நோக்கில் இருந்து அணுகும்பொழுது பிராமணியத்தை மட்டும் சாதிக்கு பொறுப்பாக்குவதில் அர்த்தம் இல்லை எனக் கருதுகிறார். பிராமணர், பிராமணியம், பிராமணிய நூல்கள் ஆகியவற்றில் இருந்து சாதியம் தொடங்கியிருக்கலாம். ஆனால் எல்லா இந்துக்களும்தான் சாதியில் பிறக்கிறார்கள், சாதியாக வாழ்ந்து, சாதியிலே இறக்கிறார்கள். எனவே பிராமணர்களை மட்டும் தனிமைப்படுத்தி விமர்சிப்பதில் என்ன உள்ளது? என அம்பேதர்கர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த அணுகுமுறையை தமிழகத்தின் பிராமண எதிர்ப்புடன் பொருத்திப் பார்க்கலாம். தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்கிற பிராமணர் அல்லாத மேட்டுக்குடிகளின் போராட்ட முறை தன்னைச் சாதிய குற்றச்சாட்டுகளில் இருந்து மெளனமாக தவிர்த்துக்கொள்கிறது என்பதை நாம் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தந்திரத்தைத்தான் அம்பேத்கர் கேள்விக் கேட்கிறார்.
மேலே பார்த்த கருத்துக்கள் மூலம், இந்து மதத்தின் ஆன்மிகப் பண்பு என்ற கருத்தாக்கத்துக்குள் சிக்கிக் கொள்ளாதவராக அம்பேத்கரைப் பார்க்கலாம். இந்து மதத்தின் சமூகவியல் யாது? என்ற கேள்வியோடு அம்பேத்கரின் தலையீடு நிகழ்கிறது. இந்து மதத்திற்கு ஜனநாயகப் பண்பு உண்டா? அறவியல் நியாயம் உண்டா ஆகியவை அம்பேத்கர் எழுப்பும் கேள்விகள். இந்தக் கேள்விகளுடன்தான் அம்பேத்கர் பெளத்த மீட்டுருவாக்கத்தில் ஈடுபடுகிறார். இப்போது பிரச்னை இந்து மதத்தோட நிற்காமல், இந்து மதம்/பெளத்த மதம் என்ற விவாதக் களமாக உருவாகிறது. மதங்களின் சமூகவியல், ஜனநாயகப் பண்பு, சமூக நீதி உள்ளடக்கம், அறவியல் என்ற பல திசைகளில் அம்பேத்கர் விவாதத்தை வளர்த்தெடுத்து செல்கிறார்.
அம்பேத்கர் ஏன் பெளத்தத்தைத் தேர்வு செய்தார்?
முதலில், கடவுள், மதங்கள் ஆகியவற்றில் அம்பேத்கருக்கு விருப்பமில்லை. அம்பேத்கர் பயன்பாட்டு மதிப்புக் கொண்ட கருத்துகளுக்கே முன்னுரிமை வழங்கினார். அவரது கருத்துக்களுக்கு ஏற்புடையதாக கடவுள் இன்மை, மறு உலக மறுப்பு, சடங்கு மறுப்பு ஆகியவற்றைக் கொண்ட நேர்காட்சி உலகு சார்ந்த மதமாக பெளத்தம் இருந்தது. நாம் பார்த்து உணரும் பிரச்சனைகளையே உண்மையான பிரச்சனைகளாகக் கருதியது. மனிதர், அவரது மனம் ஆகியவற்றை அது முன்னிலைப்படுத்தியது. நுட்பமான உளவியல் பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை வழங்கியது.
புத்தர், கடவுள் கொள்கை, உலகின் தோற்றம், மறு உலகம், முக்தி போன்ற கருத்துகளை நிராகரித்து, நடைமுறை வாழ்வில் துக்கம் உள்ளது. அதனை எவ்வாறு நீக்குவது என்ற நோக்கிலேயே சிந்தித்தார். அம்பேத்கர் பெளத்த தர்மத்தை முன்மொழிந்து பேசும் இடங்களில் எல்லாம் இதுபோன்ற நடைமுறை பண்புகளைதான் முன்னிறுத்தி பேசுவார். துக்கம் என்ற பெளத்த கருத்தை அம்பேத்கர் சமூகமயப்படுத்துகிறார். துக்கத்துக்கு காரணம் வர்க்க மோதல்கள் எனக் கூறும் அவர், சமூக முரண்பாட்டை மனித மனம் துன்பமாகக் கருதுகிறது என்கிறார். துன்பத்தை விலக்குவதற்கு புத்தர் உளவியல் ரீதியான வழிகளை முன்வைக்கிறார். அவையே பெளதத்தத்தின் அறவியலாக விரிகின்றன. ஆனால், அம்பேத்கரோ துன்பத்தை நீக்க, சமூக மோதல்களை நீக்க சமூக மாற்றக் கொள்கையை பெளத்தம் முன்மொழிகிறது என்று விளக்கமளிக்கிறார்.
இதன் நீட்சியில்தான் அம்பேத்கர் புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலை எழுதுகிறார். புத்தரின் தனிப்பட்ட, சமூக வாழ்க்கையை இந்த நூல் எடுத்துரைக்கிறது. நவயான பெளதத்தின் முதல் நூலாக கருதப்படும் இந்நூல், தலித்துகள் மத மாறுதலையும், நவயான பெளத்தம் அவர்களது புதிய மதமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடனும் அம்பேத்கர் இருந்தார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. மதத்தின் வழி சமூகப் பண்பாடு திரட்சி என்ற வடிவத்தை அம்பேத்கர் அங்கீகரித்தார். இந்தியா முழுவதும் சிதறிக்கிடங்கும் தனது மக்களை நவயான பெளத்தம் என்ற ஒன்றை பேரடையாளத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்.
நவயான பெளத்தின் வடிவம் பகுத்தறிவு, சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. ‘புத்தரும் அவரது தம்மமும்’ நூலில் அம்பேத்கர் புத்தரின் வாழ்வையும் அவரின் தத்துவங்களையும் புதிய வடிவில் வழங்குகிறார். அம்பேத்கர் கட்டமைக்கப்படும் பெளத்த ஒழுங்கு சார்பு நிலை உள்ளது.
புத்தரும் அவரது தம்மமும் நூலின் தொடக்கத்திலேயே பெளத்தத்தின் நான்கு நிலைப்பாடுகளில் தனக்கு ஒப்புதல் இல்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். புத்தர் இளமையில் முதுமை, நோய், மரணம் மூன்றையும் சந்தித்து அதனால் அதிர்ச்சியடைந்து துறவு மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் புத்தரின் இளமைக் காட்சிகள் ஒவ்வொருவருமே வாழ்வில் அடிக்கடி பார்க்கக்கூடிய சம்பவங்கள்தான். அவற்றால் சித்தார்த்தர் துறவு மேற்கொள்கிறார் என்பது ஏற்கக்கூடியதாக அல்ல என வாதாடுகிறார்.
மாறாக, சித்தார்த்தருக்கு 28 வயதானபோது அவருடைய தந்தை வழி சாக்கிய குலத்திற்கும், தாய் வழி கோலிய குலத்திற்கும் நதி நீர் பங்கீடு தொடர்பாக போர் மூளும் நிலை ஏற்படுகிறது. அந்தப் போரை எதிர்த்து சித்தார்த்தர் நாட்டை விட்டு வெளியேறுகிறார். இந்தப் போர் குறித்து தொடர்ந்து சிந்திக்கும் சித்தார்த்தர், போர் என்பது நாடுகளுக்கிடையேயான மோதல். ஒரு நாட்டுக்குள்ளேயே சமூக வர்க்கங்களுக்கிடையேயான மோதல். சமூக வர்கங்களுக்கிடையேயான மோதலே துயரத்தின் காரணி எனக் கண்டறிகிறார். இந்தச் சமூக மோதலை எப்படி அகற்றுவது என்று தொடர்ந்து யோசிக்க முடிவு செய்து சித்தார்த்தர் துறவு மேற்கொள்கிறார் என்கிறார் அம்பேத்கர். புத்தர் துறவு மேற்கொண்டது கூட பூமியில் மனித வாழ்க்கையின் பிரச்சனைகளை கண்டறிவதற்காகவும், தீர்வுகளை தேடுவதற்காகவும்தான் எனத் தெளிவாகிறது.
இரண்டாவதாக துக்கம் தொடர்பான நான்கு அரிய உண்மைகள் புத்தரின் முதற்கோட்பாடாக சொல்லப்படுகின்றன. துக்கமே வாழ்வின் பண்பு என கூறும் பெளத்தம், நம்பிக்கை வறட்சி தத்துவம் என்ற குற்றச்சாட்டிற்கு ஆட்படுகிறது. அம்பேத்கர் இதனையும் கேள்விக்குள்ளாக்கிறார்.
துக்கமே உலக யதார்த்தம் என்றால் உலகை மறுத்து துறவு மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. புத்தர் குறிப்பிட்ட காலம்வரை சாங்கியத்தின் செல்வாக்கில் இருந்ததால் அக்காலத்தில்தான் அவர் துக்கமே உலகின் எதார்த்தம் என்று கருதுகிறார் என அம்பேத்கர் சொல்கிறார். ஆனால் சித்தார்த்தர் புத்தராகும் போது துறவையும் மறுத்துவிடுகிறார். மத்திம மார்க்கம் எனும் புதிய பாதையை உருவாக்குகிறார். இது துன்பத்தை நீக்க முடியும் என கருதும் பாதை. இதன்மூலம் நம்பிக்கை வறட்சி பெளத்தத்தின் நிலைபாடு அல்ல என அம்பேத்கர் நிறுவுகிறார்.
துறவு பயனற்றது, அது ஒரு தப்பித்தல், துறந்தவனும்கூடத் தப்பிக்க முடியாது. உலகை துறப்பதல்ல, உலகை மாற்றுவதே பெளத்த தர்மம் என்று அம்பேத்கர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். கிட்டதட்ட இதை நாம் மார்க்சின் தத்துவத்துடன் பொருத்திப்பார்க்கலாம். இதுவரை உள்ள தத்துவங்கள் எல்லாம் உலகைத் விளக்குவதாகவே இருந்தன, ஆனால் உலகை விளக்குவது நம் வேலை அல்ல, அதை மாற்றுவதே நம் வேலை என மார்க்சியத் தத்துவம் கூறுகிறது.
அதேபோல பெளத்தத்தின் நிர்வாணம் குறித்து விளக்கும் அம்பேத்கர், நிர்வாணம் என்பது உணர்வுகளை அடக்கி சரியான வழியில் வாழ்வது. இது வாழ்க்கை நெறிதானே தவிர துறவு நெறி அல்ல என்று சொல்கிறார்.
மூன்றாவதாக, கர்மம், மறுபிறப்பு கோட்பாடு புத்தரால் மொன்மொழியப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆன்மாவை மறுத்த பெளத்தம் கருமக் கோட்பாட்டை ஆதரிக்க வாய்ப்பில்லை என்று அம்பேத்கர் மறுப்பு தெரிவிக்கிறார். இயற்கையில் ஓர் ஒழங்கு உள்ளது. சமூகத்தில் அப்படிப்பட்ட ஒழுங்கு உள்ளதா? மனிதர்களின் செயல்கள்தான் நல்லது, கெட்டது எனப் குறிப்பிடப்பட்டு சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
செயல்கள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றினால்தான் சமூக ஒழுங்கு நிர்ணயமாகிறது. இவ்வாறு சமூக ஒழுங்கு முழுக்க மனிதர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. மனிதரைத் தவிர வேறு எவராலும், எதனாலும் சமூக ஒழுங்கு நிர்ணயமாவதில்லை. இதனால் கருமக் கோட்பாடு உலகம் பற்றிய ஒட்டுமொத்த கோட்பாடே தவிர தனித்தனி மனிதர்கள் பிறப்பு, வாய்ப்புகள், வாய்ப்பின்மைகள் குறித்தது அல்ல என்கிறார். கர்மக் கோட்பாட்டை சமூகம் குறித்த பொதுக் கோட்பாடு என விளக்குவதன்மூலம் பெளத்தத்தை இன்றைய சமூகவியல் கொள்கைகளுக்கு அருகில் கொண்டு வருகிறார்.
நான்காவதாக, பெளத்தத்தின் உன்னத லட்சியம் உலகைவிட்டு விலகிய பிக்குவே என்ற கருத்து சொல்லப்படுகிறது. அம்பேத்கர் இதனையும் ஏற்கவில்லை. பெளத்தத்தின் இலட்சியம் சமூகமே அன்றி பிக்குகள் அல்ல என விளக்கும் அவர், கடவுள் கருத்து மதத்தின் மையம் அல்ல, ஆன்ம விடுதலை மதத்தின் மையம் அல்ல, மனிதரும் அவரது அறவியல் வாழ்வுமே மதத்தின் மையம் என வரையறுக்கின்றார்.
கடவுள் கொள்கை, இறைக்காட்சி, மறு உலகம், முக்திக் கோட்பாடு, சடங்குகள் ஆகியவற்றை ஏற்கவில்லை என்பதால் ஏற்கனவே பெளத்தம் ஓர் உளவியல் சார்ந்த மதமாக கருதப்படுகிறது. இப்பொழுது பெளத்தத்தின் மேற்கூறிய சிக்கல்களையும் சீர்த்திருத்தியது மூலம் பெளத்தத்தை அதன் பலவீனமான புள்ளிகளில் இருந்து மீட்டு சமூக விடுதலை சார்ந்த உலகை மாற்றக்கூடிய மதமாக முன்னிறுத்துகிறார் அம்பேத்கர். இதேபோல தம்மம் என்பது கடவுள், ஆன்மா சம்மந்தப்பட்டது அல்ல. சாவுக்குப் பிறகான வாழ்க்கையை குறிப்பதும் அல்ல. அது மனிதர்கள், உலகில் மனிதர்களுக்கிடையேயான உறவுகள் ஆகியவை குறித்தது என்கிறார். தம்மம் என்பது மனிதர், மனித உறவுகள் பற்றியது இங்கு கடவுளில் இடத்தில் அறம் அமைந்துள்ளது. எனவே அறமே தம்மம் என்கிறார்.
இதே வரையறையைத்தான் தேசியம் குறித்த தனது பார்வையில், பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை என்கிற புத்தகத்திலும் முன்வைக்கிறார். ‘மனிதர்களுடையான அன்பு பற்றிய உணர்வு, அந்த உறவுமுறையின் இருப்பு பற்றிய விழிப்புணர்வு’ என்பதுதான் தேசியம் என்கிறார். இது பாஜக முன்னிறுத்தும் தேசியத்தில் இருந்து எவ்வளவு மாறுபட்டது என்பதை நாம் உணர முடியும்.
இங்கே ஒரு கேள்வி வரலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்குப் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு ஆகிய கொள்கைப் பாதைகளை தேர்ந்தெடுக்கும் அவர் ஏன் மதத்தின் வழி அவற்றை நிறுவ வேண்டும்?
இதற்கான பதிலையும் அவர் எழுதிய நூலின் முன்னுரையிலேயே விளக்குகிறார். ‘மனிதர்களின் அறவியல் செயல்பாடுகள் எப்போதெல்லாம் கேள்விக்குள்ளாகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றோடு மதங்களும் சம்மந்தப்படுகின்றன. ஆழமான மனித அனுபவங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதக் கருத்துக்களோடு சம்மந்தப்படுகின்றன. அவை நீதி, மனித வாழ்வு, கடவுள், உலகம் ஆகியவை குறித்த மறுபரிசீலனைகளாகவும் விரிகின்றன’ என்கிறார்.
அம்பேத்கரின் முன்னுரை மதங்கள் எந்த விதத்தில் தேவை என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது. மதங்கள் முன்பு போன்று உலகைக் கடந்த விஷயங்களோடு முடிந்து போய்விடவில்லை. அவை இன்றைய விஞ்ஞானங்கள், சமூகத் தேவைகள் ஆகியவற்றின் அழுத்ததால் சமூகம் சார்ந்த சீர் திருத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றன எனச் சொல்கிறார் அம்பேத்கர். இதனால்தான் அவரும் மதத்தின் வழி சீர்த்திருத்தக் கருத்துக்களை முன்னெடுக்கிறார்.
பெளத்தம் இந்து மதத்திற்கு எதிராக நிலைநிற்கிறதா?
அம்பேத்கரின் அணுகுமுறையில் மதத்தின் மீமெய்யியல் (Metaphysics) முழுவதும் மறுதலிக்கப்பட்டு அதன் சமூகப் பண்பாட்டு தளமே முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்து மதம்/பெளத்தம் என்ற எதிர்வில் அறிவுக்குப் புலப்படாத பேருண்மை குறித்த தேடல் என்ற பழைய ஆன்மிகக் கற்பிதம் அடியோடு விட்டொழிக்கப்பட்டு சாதி, சமூக முரண்பாடுகள் குறித்த எதிர்வு என்ற விஷயம் வலுவாக நிறுவப்படுகிறது.
அம்பேத்கரின் பிராமணிய / இந்து மதம் குறித்த விமர்சனங்கள், மதத்தின், சமூக அரசியல் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. நிலவுடைமைத் தத்துவங்களின் சிந்தனைச் சட்டகத்தை உடைத்தெறிந்துவிட்டு வெளியேறும் முயற்சி இது. இந்திய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை பிரச்சனை நோக்கிய நகர்வு இது.
இந்து மதம்/பெளத்தம் எனும் முரண்களை சமூக முரணாகவும், சமய முரணாகவும் கட்டமைப்பதின் மூலம் சாதி, சமூக முரண்கள் இந்தியச் சூழல்களில் வெறும் பொருளாதாரம் எனும் ஒற்றை தளத்தை மட்டுமின்றி, சமூகப் பண்பாட்டு தளம் முழுவதையும் பீடித்துள்ளது எனச் சுட்டி காட்டப்படுகிறது.
இறுதியாக, 20ஆம் நூற்றாண்டில் பெளத்ததின் மீள் வருகை அடித்தள மக்களின் கருத்தியல் மீள் வருகையாக அமைகிறது. இது இந்து ஆன்மிகத்தைக் கட்டுடைத்து சமூக, பண்பாடு தளத்திற்கு கொண்டு வரும் செயலாகும். இங்கு இந்து மதம் தத்துவம், சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாற்றுக் கொள்கை, மதம் என்ற ஆறு அணுகுமுறையில் விமர்சனங்களைச் சந்திருக்கிறது. இத்தகைய பிரச்சனைகளை கொண்ட இந்து மதத்திற்கு மாற்றாக மனித விடுதலையை உறுதி செய்வதாக பெளத்தமே அம்பேத்கரால் முன்மொழியப்படுகிறது.
இத்தனை தெளிவான விவாதங்களை முன்னெடுத்த அம்பேத்கரை நாம் மீண்டும் இந்து பெரும்பான்மைக்கு எதிராக முன்னிலைப்படுத்துவதன்மூலம், அவரது சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்வதுமூலம், இந்து மத அரசியலின் ஆதிக்கப் பிடியிலிருந்து அனைவரையும் விடுவிக்கமுடியும்.
0