போர் நரகத்தையே தோற்றுவிக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வரலாற்றின் தொடக்கத்திலிருந்து போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மதிகெட்ட மன்னர்கள், பேராசை கொண்ட சர்வாதிகாரிகள், அரசியல் ஆதாயம் தேடும் குடியரசுகள் என்று அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காகக் குவியும் மையம் போராகத்தான் இருக்கிறது.
எல்லாப் போர்களும் தீங்கானவை என்னும் கருத்தை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. மோசமான போர்கள் இருப்பதுபோல் நியாயமான போர்களும் இருக்கின்றன என்கிறார்கள் இவர்கள். வன்முறையின்றிப் போரில்லை என்றாலும் அதையும்மீறி சில போர்கள் சரியான காரணங்களுக்காக நடைபெற்றிருக்கின்றன என்பதைத்தான் வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இத்தகைய போர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவை. அவற்றுள் ஒன்று, அமெரிக்க உள்நாட்டுப் போர்.
இந்தப் போர் எதனால் நியாயமானது என்று அழைக்கப்படுகிறது? அமெரிக்க உள்நாட்டுப் போருக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றுள் பிரதானமான ஒன்று, அடிமை ஒழிப்பு. அடிமைகளாக இருந்த கறுப்பின மக்கள் விடுவிக்கப்படவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட போர் இது. அடிமைமுறையை அமெரிக்கா கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்ட போர் இது.
அமெரிக்கர்களின் உள்ளங்களை அடிமை முறைக்கு எதிராகத் திருப்பும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட போர். எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்ந்தவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட போர். இதைவிடச் சரியான காரணத்துக்காக நடத்தப்பட்ட போர் வேறெதுவும் இருக்கமுடியாது.
இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கம் திகழ்ந்தார். அடிமைமுறையை எதிர்த்தவர் என்பதால் ஆட்சியில் அமர்ந்த தினம் தொடங்கி எதிர்ப்புகளை அவர் எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவருடைய பெரும்பாலான ஆட்சிக்காலத்தை உள்நாட்டுப் போர் மொத்தமாக விழுங்கிவிட்டது.
0
அமெரிக்காவைப் பற்றி நம் எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தைப் பெரும்பாலும் இன்றைய நிகழ்வுகளே உருவாக்கி இருக்கும். அமெரிக்கா பற்றிய ஒரு நிலைப்பாட்டை நானும் இவ்வாறுதான் உருவாக்கிக்கொண்டேன். அதன்பிறகுதான் தேடத் தொடங்கினேன். ஏன் அமெரிக்கா, அமெரிக்காவைப் போல நடந்துகொள்கிறது என்ற கேள்வி என்னை அமெரிக்க வரலாற்றைப் படிக்கச் செய்தது.
அமெரிக்காவின் வரலாறு நமது நாட்டின் வரலாற்றைப் போலவே ரத்தம் தோய்ந்தது. அதன் கடந்த 250 வருட வரலாறே இன்றும் பலவிதங்களில் அந்த நாட்டின் போக்கை நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைவர்கள் இன்றும் தங்களை 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரும் தலைவர்களோடுதான் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். அமெரிக்காவின் சுதந்தரப் போராட்ட வரலாறு, அதன் உள்நாட்டுப் போர், செவ்விந்தியர்களுடனான போர்கள் என அந்நாட்டின் வரலாறு இன்றும் அவர்களது கொள்கைகளையும் போக்குகளையும் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது.
1861-65 வருடங்களில் நடந்த உள்நாட்டுப் போரில் முதல் முறையாக நவீன போர்க்கருவிகளும் போர்முறைகளும் கையாளப்பட்டன. அதே சமயம், பழங்காலப் போர்க்கருவிகளும் போர்முறைகளும் உள்ளவாறே தொடரப்பட்டன.
முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல்களும் கண்ணிவெடிகளும் பயன்படுத்தப்பட்டன. ரயில் வண்டிகளில் துருப்புகளை விரைவாகப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
தந்தி வழியே செய்திகள் துரிதமாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. கைவெடிகுண்டுகள் வீசப்பட்டன. மற்றொரு பக்கம், வாள்கள், துல்லியமாகக் குறிவைக்க முடியாத பழங்காலத்துத் துப்பாக்கிகள், ஈட்டிகள் போன்றவையும் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன.
அமெரிக்க உள்நாட்டுப் போர் பல கொலைக்களங்களைத் தொடர்ந்து உருவாக்கியது. எல்லாப் போர்களும் கொலைக்களங்கள்தானே என்று நினைக்கலாம். உண்மைதான் என்றாலும் ஒப்பீட்டின்படி அமெரிக்க உள்நாட்டுப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறையும் உயிர் பலியும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அசாத்தியமானது. முதல், இரண்டாம் உலகப் போர்கள் நிகழும்வரை அமெரிக்க உள்நாட்டுப் போரின் இறப்பு எண்ணிக்கைதான் உயர்வானதாக இருந்தது.
அமெரிக்க நிலப்பரப்பில் சிறிதும் பெரிதுமாக நிகழ்ந்த மோதல்களிலும் போர்களிலும் போர்வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இறந்து போனார்கள். கிட்டத்தட்ட 10,000 முறை படைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சம். காயமடைந்தவர்கள் 5 லட்சம் பேர். இரண்டு பக்கமுமாகச் சிறைபிடிக்கப்பட்டவர்கள் 7 லட்சம் பேர்.
இவை போக, பொருட்சேதம், பொது வாழ்க்கை பாதிப்பு, பொருளாதாரப் பாதிப்பு போன்றவற்றுக்குக் கணக்கே இல்லை. அப்போது அமெரிக்காவின் மக்கள் தொகை 3 கோடி மட்டுமே என்பதைக் கணக்கில் கொண்டால் இந்தப் போர் எப்படி ஒவ்வொருவரையும் பாதித்திருக்கும் என்பதை உணரலாம்.
0
வரலாற்றில் நெருக்கடியான காலம் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு தலைவரும் தோன்றிவிடுவார்.
இந்தக் காலகட்டத்திலும் அப்படியொரு தலைவர் தோன்றினார். இந்தத் தொடரை நான் ஆரம்பிக்க முக்கியக் காரணம் அவர்தான். அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் பலருக்கும் ஆபிரகாம் லிங்கன் இன்றளவும் ஆதர்சமாகத் திகழ்கிறார்.
லிங்கனின் தியாகத்திற்கு நன்றியாக அமெரிக்கா வாஷிங்டன் நகரில் எழுப்பியிருக்கும் லிங்கன் நினைவிடத்தை லிங்கன் கோயில் என்றே பலர் அழைக்கின்றனர். அங்கு சென்று லிங்கனின் பணிகளுக்கு இன்றும் மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்பதை இங்கே விரிவாகக் காணவிருக்கிறோம்.
லிங்கனின் மரணத்துக்குப் பிறகு அவர் தளபதி லிங்கனின் கனவுகளை நிறைவேற்ற முயன்றார். அவர் யுலிசிஸ் கிராண்ட். இந்தக் கதையின் இன்னொரு நாயகர் அவர். தன் மாமனாரின் விவசாய நிலங்களை நிர்வாகம் செய்துகொண்டிருந்தவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக உயர்ந்ததோடு பரவலாக மக்களின் மனதையும் கவர்ந்தார். அவருடைய கதை ஆச்சரியமூட்டக்கூடியது.
அமெரிக்க உள்நாட்டுப் போர், அடிமை முறை என்னும் அவலத்தை எதிர்த்து நடந்தது என்பதால் நாயகர்களையும் வில்லன்களையும் கண்டறிவது சுலபமானதாக இருக்கலாம். இந்தப் புரிதல் பெருமளவில் உண்மையும்கூட என்றாலும் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா? அடிமை முறையை எதிர்த்த வட மாநில மக்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் அடிமை முறையை நியாயப்படுத்திய தென் மாநில மக்கள் அனைவரும் கெட்டவர்கள் என்றும் தீர்ப்பெழுதிவிட முடியாது.
நான் அமெரிக்காவில் 10 வருடங்கள் வசித்திருக்கிறேன். அடிமை முறையை ஆதரித்துப் போர் புரிந்த தென் மாநிலங்களில் மிகவும் அன்பான, எந்த வேறுபாடும் பார்க்காத மக்களை நான் கண்டிருக்கிறேன். வாசிப்பின்மூலம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களுக்கும் நிஜ வாழ்வுக்குமான இடைவெளியை நான் உணர்ந்துகொண்டேன்.
உள்நாட்டுப் போரை தென் மாநில மக்கள் பார்க்கும் பார்வையே வேறு. அவர்களுடைய கூற்றின்படி, இந்தப் போர் அடிமைமுறைக்கு ஆதரவான போர் அல்ல, மத்திய அதிகாரத்துக்கு எதிரான போர். இது சற்று அதிகப்படியான வாதமாகத் தோன்றினாலும் ஓரளவுக்கு இதில் உண்மையில்லாமலும் இல்லை. அமெரிக்க வரலாற்றில் மாநிலங்களின் உரிமை என்ன, அவற்றைப் பாதுகாக்க அவை எவ்வாறு போராடின என்ற கதையும் இதில் பின்னிப் பிணைந்துள்ளது.
அமெரிக்க ஒன்றியம் என்ற பதத்தையே இங்கே நான் உபயோகித்திருக்கிறேன். அமெரிக்க நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. இதை ‘அமெரிக்காவின் ஒன்றிணைந்த மாநிலங்கள்’ என்றும் சொல்லலாம். அமெரிக்கா இன்றளவும் மாநிலங்களின் கூட்டமைப்பாக, ஒன்றியமாக இருக்கிறது என்பதே உண்மை. இதையும் விவாதிப்போம்.
நான் அமெரிக்க உள்நாட்டுப் போரை குறித்து அங்கிருந்த காலங்களிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாட்டை, அதன் மக்களைப் புரிந்துகொள்ள அந்த நாட்டின் வரலாற்றை வாசிக்க வேண்டும். வரலாறு திரும்ப, திரும்ப நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஏன் இந்த விநோதம் நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் கடந்த காலத்தை நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.
எல்லாப் போர்களைப் போல இந்தப் போரும் ஒருநாள் முடிவுக்குதான் வந்தது. ஆனால் இன்னமும் நிறவெறியும் இனவெறியும் அமெரிக்காவில் நிலவிக்கொண்டுதான் இருக்கின்றன. அடிமைமுறை இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆண்டை அடிமை மனோபாவம் அழிந்துவிடவில்லை. சுரண்டலும் முடிவுக்கு வந்துவிடவில்லை. நிறவெறியும் இனவெறியும் மதவெறியும் இன்னபிற தீங்குகளும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும்போது சமூகத்தில் என்ன நடக்கும் என்பதை உள்நாட்டுப் போரின் வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
(தொடரும்)