ஒரு தேசம் நேர்மையாகவும் உண்மையாகவும் அறத்தோடும் இருக்கும் வரையே அதன் ஆன்மா பாதுகாப்பாக இருக்கும் – பிரெடெரிக் டக்ளஸ்.
எல்லா நாடுகளும் பொற்காலங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அமெரிக்காவுக்கும் அப்படியொன்று இருந்தது. Antebellum South என்று அதற்குப் பெயர். ‘போருக்கு முந்தைய தெற்கு’ என்பது இதன் பொருள். 1800-60 வரையிலான காலகட்டமே இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் பருத்தி, புகையிலை தோட்ட முதலாளிகள் எல்லாம் பெரிய மாளிகைகளில் பிரபுக்களைப் போல வாழ்ந்து வந்தனர். கறுப்பர்கள் அடிமைகளாகத் தோட்டத்திலும் மாளிகையிலும் வேலை பார்த்து வந்தனர். வெள்ளை கங்காணிகள் எந்தச் சிரமமும் இன்றி அவர்களை மேற்பார்வை செய்து வந்தனர். அமைதியான, முன்மாதிரியான சமூக அமைப்பாக இந்தக் காலகட்டம் கட்டமைக்கப்பட்டது.
1939இல் வெளிவந்த ‘Gone With The Wind’ என்ற படத்தில் இந்த அருமையான கனவையும் அதை அமெரிக்க உள்நாட்டுப் போர் தகர்த்ததையும் காட்டியிருப்பார்கள். ஆனால் இது எவ்வளவு தூரம் உண்மை? வரலாற்றில் கொண்டாடப்படும் பல பொற்காலங்களைப் போல இங்கும் பெரும்பாலும் மக்கள் தங்கள் விருப்பத்தை வரலாறாகப் புனைந்துகொண்டார்கள் என்பதே உண்மை. ஒரு பக்கம் வெள்ளை அமெரிக்கர்கள் நிறைவோடு வாழ்ந்து வந்தனர். மற்றொரு பக்கம் தெற்கிலுள்ள அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவின் அடிமை வர்த்தக வரலாறு நீண்டது. ரத்தம் தோய்ந்தது. மூன்று கண்டங்களில்அதிர்வை ஏற்படுத்தியது. அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதே பெரும் குழப்பம் என்றாலும், முதல் அடிமைகள் அமெரிக்காவிற்கு வந்ததில் இருந்து பார்ப்போம்.
1619இல் முதல் ஆப்பிரிக்க அடிமைகள் விர்ஜினியாவிற்கு வந்திறங்கியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்தே ஸ்பானிஷ் அமெரிக்கப் பகுதிகளில் அடிமைகள் இருந்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதலில் வந்திறங்கியது, இன்று நாம் மேற்கிந்தியத் தீவுகள் என்று அழைக்கும் பகுதிகளில். இந்தத் தீவுகளில் கரும்புத் தோட்டங்கள் மிகுதியாக இருந்தன. அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரைக்கு ஐரோப்பாவில் பெரிய சந்தை இருந்தது. இன்றைய கூபா, ஜமைக்கா, பிரேசில் முதலிய பகுதிகள் கரும்புத் தோட்டங்களுக்காக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளால் விரைவாகக் கைப்பற்றப்பட்டன. 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் இங்கே ஆயிரக்கணக்கான சர்க்கரை ஆலைகள் வந்துவிட்டன. ஆனால், கரும்பு பயிரிடுவதில் ஒரு சிக்கல் இருந்தது. மிகவும் கடுமையான வெயில் பிரதேசங்களில் ஐரோப்பியர்களால் உடலை வருத்தி உழைக்க முடியவில்லை. எனவே, வெயில் பிரதேசங்களுக்குப் பழகிப் போன ஆப்பிரிக்கக் கறுப்பர்களை இங்கே அடிமைகளாகக் கொண்டு வரத் தொடங்கினார்கள்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் அட்லாண்டிக் கரைகளில் இருந்த கறுப்பினத்தவர் அவர்களது தலைவர்களாலும் அரசர்களாலும் போர்ச்சுகீசியர்களுக்கும் ஸ்பெயின் நாட்டவருக்கும் விற்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கப்பல்களில் நெருக்கமாக அடைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டனர். அங்கிருந்து பிரேசில், பெரு போன்ற தென்னமெரிக்க நாடுகளுக்கோ வட அமெரிக்கப் பிரித்தானிய காலனிகளுக்கோ அனுப்பப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அடிமைகளை விற்கவும் வாங்கவுமான மிகப்பெரும் சந்தையாக மாறியது.
பிரித்தானிய காலனிகளில் பருத்தியும் புகையிலையும் பயிரிட ஆரம்பித்த போது, முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டார்கள். ஆனால் சந்தையில் பருத்தியின் விலை மாறிக் கொண்டே இருந்ததாலும், பருத்தி, புகையிலை பயிரிடுவது மிகவும் உடல் உழைப்பைக் கோருவதாக இருந்ததாலும் தொழிலாளர்களால் ஒப்பந்த காலத்தை நிறைவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
மாற்று ஏற்பாடாக, ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள் உழைப்பைச் சுலபமாகச் சுரண்டமுடிந்தது. சிறிது உணவும் தங்க இடமும் கொடுத்தால் போதும், பயிர்களில் இருந்து அதிகபட்ச லாபத்தைப் பார்த்துவிடலாம். எனவே பிரித்தானிய அமெரிக்கக் காலனிகளிலிருந்த அடிமைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்க ஆரம்பித்தது.
அட்லாண்டிக் அடிமை வணிகம் என்றழைக்கப்பட்ட இந்த வணிகம் மிகவும் கொடூரமான முறையில் இயங்கியது. ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகள் மிகவும் குறைவான விலையில் பிடிக்கப்பட்டு (வன்முறையைக் கைக்கொண்டே இவர்கள் பிடிக்கப்பட்டார்கள்) கப்பலில் ஏற்றப்பட்டார்கள். கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, நெருக்கமாக உட்கார்ந்தபடியோ, படுத்தபடியோ அடைக்கப்பட்டு இவர்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடக்கவேண்டும். இதில் கப்பலில் இருக்கும் அடிமைகளில் 20 சதவிகித கறுப்பர்கள் கடலைக் கடப்பதற்கு முன்பே இறந்துவிடுவார்கள்.
மேற்கிந்திய சந்தைக்கு வந்து சேரும் அடிமைகள் ஏலத்தின் மூலமாகத் தரகர்களுக்கு விற்கப்படுவார்கள். அங்கிருந்து திரும்பவும் அவர்கள் வட அமெரிக்காவிற்கோ, தென் அமெரிக்காவிற்கோ கப்பலில் செல்வார்கள். அங்கே மீண்டும் தரகர்களால் அவர்கள் பல இடங்களில் தோட்டங்களுக்கு விற்கப்படுவார்கள். கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகள் நடந்த இந்தக் கொடூரமான வணிகத்தில், அட்லாண்டிக் சமுத்திரத்தில் மட்டும் இறந்தவர்கள் 20 லட்சமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
முதலில் அடிமைகள் அனைத்து காலனி மாநிலங்களிலும் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனால், அவர்களது தேவை பருத்தி விவசாயம் அதிகமாக நடைபெற்று வரும் தென் மாநிலங்களிலேயே இருந்தது. எனவே இங்கேயே கறுப்பர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது.
1800இல் மாநிலங்களின் நிலை:
அடிமை முறையை ஒழித்திருந்த வடக்கு மாநிலங்கள்: பென்சில்வேனியா, மாசச்சூசெட்ஸ், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், நியூ யார்க்.
அடிமை முறை தொடர்ந்த தென் மாநிலங்கள்: விர்ஜினியா, நியூ ஜெர்சி, டெலெவர், மேரிலாண்ட், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, கென்டக்கி, டென்னிசி.
அடிமை முறைக்கு எதிரான குரல் முதலில் வட மாநிலங்களிலேயே எழ ஆரம்பித்தது. வட கிழக்கு மாநிலங்களில் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தூய்மைவாதம் பேசும் சீர்திருத்த இயேசு சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். ஐரோப்பாவில் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் இருந்து விடுபட, கடல் கடந்து வட அமெரிக்காவிற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறியவர்கள்.
கிறிஸ்தவத்தை மிகுந்த பழமையான நோக்கோடு, அதே நேரத்தில் அதன் விழுமியங்களில் இருந்து எந்தச் சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கும் அவர்களுக்கு இடையில் இருந்தே ஒடுக்குமுறையின் இன்னொரு கொடூர முகமான அடிமை முறைக்கு எதிர்ப்பு கிளம்பியது (இதே நேரத்தில் பிரிட்டனிலும் கிறிஸ்தவச் சபைகளில் இருந்தே எதிர்ப்பு வந்தது என்பதையும் ஒப்பு நோக்கவேண்டும்).
1688இல் பென்சில்வேனியா குவேக்கர்கள், அடிமை முறைக்கு எதிரான தங்களது எதிர்ப்பை அறிக்கையாகத் தயாரித்து, அனைத்து குவேக்கர் தேவாலயங்களுக்கும் அனுப்பி வைத்தனர். 1700இல் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் தூய்மைவாத கிறிஸ்துவரான தாமஸ் சீவல், அடிமைமுறைக்கும், அதை நியாயப்படுத்தக் கூறப்படும் வாதங்களுக்கும் எதிராக, விவிலியத்தை மையமாகக் கொண்டு சிறு புத்தகம் ஒன்றைப் பதிப்பித்தார்.
கனெக்டிகட், ரோட் ஐலண்ட் போன்ற மாநிலங்களில் இருந்த கால்வினிஸ்ட் சீர்திருத்தச் சபையினர், பென்சில்வேனியா மாநிலத்தில் இருந்த குவேக்கர் மக்கள் போன்றோரும் தங்கள் பகுதிகளில் அடிமை முறையை எதிர்த்ததோடு, அதைச் சட்ட ரீதியாக எதிர்ப்பதற்கான வேலைகளையும் ஆரம்பித்தனர்.
அமெரிக்கப் புரட்சி ஆரம்பித்த காலங்களில் மீண்டும் அடிமைமுறைக்கு எதிரான குரல்கள் எழும்ப ஆரம்பித்தன. புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான தாமஸ் பைன் ஆப்பிரிக்க அடிமை முறைக்கு எதிரான தன்னுடைய முதல் அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்கப் புரட்சியின் காலத்தில் அமெரிக்காவிற்கு அடிமைகளை இறக்குமதி செய்வது புரட்சியாளர்களால் தடைசெய்யப்பட்டது. (விடுதலைக்குப் பின்னர், தென் மாநிலங்கள் இதை மறுபடியும் அனுமதித்தன.)
இதைத் தொடர்ந்து வட மாநிலங்களில் அடிமை முறை புரட்சியின் நோக்கங்களுக்கு எதிராக இருப்பதாகவும், அதை ஒழிக்கவேண்டும் என்றும் குரல்கள் எழ ஆரம்பித்தன. அப்போது இன்னமும் மாநிலமாக அங்கீகாரம் இல்லாமல் இருந்த வெர்மான்ட், 1777இல் முதலில் அடிமை முறையை ஒழித்துச் சட்டமியற்றியது. 1780இல் பென்சில்வேனியா அதைத் தொடர்ந்தது. மாசச்சூசெட்ஸ் 1780இல் தன்னுடைய மாநில சட்ட சாசனத்தில் அனைத்து மனிதர்களும் சரிசமம் என்று எழுதியது. இதை அடிப்படையாகக் கொண்டு அந்த மாநிலத்தில் அடிமை முறை சட்டபூர்வமானது அல்ல என்று பல வழக்குகள் மாநில தலைமை நீதி மன்றத்தில்பதியப்பட்டன. 1783இல்அங்கும் அடிமை முறை சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பு வந்துவிட்டது.
1803ம் ஆண்டிற்கு முன், மேரிலாண்ட் மாநிலத்திற்கு வடக்கில் இருந்த அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு விதத்தில் அடிமை முறையை ஒழித்து விட்டன. ஆனால் இந்தச் சட்டங்கள் அனைத்தும் அவை இயற்றப்பட்ட நாளுக்குப் பின்னர் பிறக்கப்போகும் அடிமைகளின் குழந்தைகளுக்கும், புதிய அடிமைகளுக்கும் மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே அடிமைகளாக இருப்பவர்கள், அவர்களது காலம் வரையோ அல்லது அவர்களது உரிமையாளர்களால் விடுதலை கொடுக்கப்படும் வரையோ அடிமைகளாவே இருக்கவேண்டும் என்பதே பொருள். நிச்சயம் இது ஒரு குறைபாடுதான். ஆனால் இந்த அளவுக்குத் துணிந்து சட்டங்கள் இயற்றியதே குறிப்பிடத்தக்கதுதான் என்பதால் அந்த மாநிலங்கள் ஒரு வகையில் முன்னோடிகளாக இருந்தன என்று சொல்லலாம்.
இதே மாநிலங்களில் அடிமைகளாக இருப்பவர்களை விடுதலை செய்வதற்கான இயக்கங்களும் ஆரம்பித்தன. 1783இல் பென்சில்வேனியாவில் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமையில், அடிமைகளின் சொந்தக்காரர்களிடம் இருந்து அடிமைகளை வாங்கி விடுதலை செய்யும் இயக்கம் ஆரம்பித்தது. வட மாநிலங்கள் பலவற்றிலும் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கங்கள், மிகுந்த முனைப்புடன் இயங்கின.
1787இல் அமெரிக்கச் சட்ட சாசனத்தை உருவாக்குவதற்கான குழு கூடியது. அப்போது அடிமைமுறை என்னும் மிகப்பெரிய பிரச்னை குறித்து யாரும் பேச விரும்பவில்லை. முழுவதுமாக அடிமைமுறையை ஒழிப்பதற்குத் தென் மாநிலங்கள் (ஜார்ஜியா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா, டெலெவர், மேரிலாண்ட்) எதிர்ப்புத் தெரிவித்தன. எனவே அது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட சாசனத்தில் அடிமை முறை பற்றிய எந்தக் குறிப்பும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரே விஷயம், அடிமைகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்யவேண்டும் என்பது மட்டுமே. அதையும் 20 வருடங்களுக்குப் பின்னரே அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
புரட்சியை முன்னின்று நடத்திய பெரும் தலைவர்களின் இந்த முடிவால், உள்நாட்டுப் போரைத் தவிர்த்திருக்கக்கூடிய முக்கியமான தருணம் கைநழுவி போனது.
அமெரிக்க ஒன்றிய நாடாளுமன்றங்கள் இரண்டு. முதலாவது, காங்கிரஸ் என்றழைக்கப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கொண்ட சபை. இரண்டாவது, செனட் எனப்படும் மாநிலத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் சபை. மாநிலங்களின் அளவும், மக்கள் தொகையும் வேறுபட்டாலும், அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநித்துவம் வழங்க உண்டாக்கப்பட்டதே செனட். ஆனால் காங்கிரஸ் பிரதிநிதிகள் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வேறுபடும்.
தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவென்பதால், தங்களது பிரதிநிதித்துவம் குறையும் என்று நினைத்த தென் மாநிலத் தலைவர்கள், பிரதிநிதிகள் எண்ணிக்கைக்கு மட்டும் கறுப்பு அடிமைகளின் எண்ணிக்கையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு வடக்கு மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், கறுப்பு அடிமைகளின் எண்ணிக்கை ஐந்தில் மூன்று பங்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சமரசம் பேசப்பட்டது. இது ‘ஐந்தில் மூன்று சமரசம்’ என்று சொல்லப்படுகிறது. இதுவே வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையில் நடந்த முதல் வெளிப்படையான கருத்து வேறுபாடாகும். இது அமெரிக்கச் சட்டசாசனத்திலும் எழுதப்பட்டது.
1807இல் தாமஸ் ஜெபர்சன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, முன்னரே ஒப்புக்கொண்டது போல, அமெரிக்காவில் அடிமைகள் இறக்குமதி முழுவதுமாகத் தடை செய்யப்பட்டது. ஆனாலும், ஸ்பெயின் நாட்டுப் பகுதிகளின் வழியே அடிமைகளைச் சட்டவிரோதமாகக் கொண்டு வருவது நிற்கவில்லை.
(தொடரும்)
__________
ஆதாரங்கள்
1. Many Thousands Gone: The First Two Centuries of Slavery in North America – Ira Berlin
2. 1493: Uncovering the New World Columbus Created – Charles Mann
3. Slavery and the Making of America (PBS Documentary) – Available in Youtube.
Dear Team,
It is really hard to find similar articles. For example, I come once in a while and read group of articles. I wanted to read all the articles related to American civil war. Unfortunately, I have to go through the list of article to find them. If you could create a category and group the articles than it would be easier to find.
Cheers,
Sakthi
கிழக்கு டுடேவில் இப்போது என்னென்ன தொடர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிய ‘தொடர்’ என்னும் பகுதியைச் சொடுக்கவும். புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்தத் தலைப்பின் கீழ் அனைத்துத் தொடர்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
Thanks