“இரண்டில் ஒன்றுக்குதான் எனக்கு உரிமையிருக்கிறது: சுதந்திரம் அல்லது மரணம். ஒன்று கிடைக்கவில்லை என்றால், இன்னொன்றை எடுத்துக்கொள்வேன்; என்னை உயிருடன் யாரும் பிடிக்க முடியாது.”
– ஹாரியேட் டப்மன்.
1822இல் ஹாரியேட் டப்மன் மேரிலாண்ட் மாநிலத்தில் அடிமையாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அவரது மேற்பார்வையாளரால் கொடுமைப்படுத்தப்பட்டார். அதனால் ஏற்பட்ட தலைக்காயம் அவரது மரணம் வரை இருந்தது. மெத்தடிஸ்ட் கிறிஸ்துவராக இருந்த அவர், 1849இல் மேரிலாண்டில் இருந்து பென்சில்வேனியாவுக்குத் தப்பித்துச் சென்றார். அவரது தலைக்கு 100 டாலர் விலை வைக்கப்பட்டது. இருந்தாலும், அவர் மேரிலாண்டுக்குத் திரும்பி தன்னுடைய குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் எனப் பலரும் தப்பித்துச் செல்ல உதவி செய்தார். இப்படியாக அவர் 700 அடிமைகள் வரை தப்பித்துச் செல்ல உதவினார்.
1793இல் அமெரிக்க அரசாங்கம் ‘தப்பியோடும் அடிமைகள் சட்டம்’ (Fugitive Slaves Act) ஒன்றை இயற்றியது. இந்தச் சட்டம் அடிமைகள் வைத்திருப்பது சட்டபூர்வமானதாக இருக்கும் மாநிலங்களில் இருந்து, அடிமை முறை சட்ட விரோதமாக இருக்கும் மாநிலங்களுக்குத் தப்பித்துச் செல்லும் அடிமைகளைச் சுதந்தர மாநிலங்கள் பிடித்துத் தரவேண்டும் என்றும், மறைத்து வைக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் கூறியது.
தென் மாநிலங்களில் அடிமைமுறை என்பது ஒரு ‘தேவையான தீமை’ அல்லது ‘கறுப்பர்களுக்குக் கலாசாரம் கற்றுக்கொடுப்பது’ என்ற அளவில் பார்க்கப்பட்டது. அங்கும் அடிமை முறையை ஒழிக்கவேண்டும் என்று பேசப்பட்டாலும், அது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வந்தது. அங்கிருந்த கறுப்பின மக்களின் வாழ்வைச் சிறிது உயர்த்தும் முயற்சியைக் கூட அவர்கள் எதிர்த்து வந்தார்கள்.
கறுப்பின மக்களின் வாழ்வோ, அவர்கள் வசித்த தோட்டங்களில் இருந்த மிருகங்களை விட மோசமானதாக இருந்தது. அதிகாலை முதல் இரவு வரை முதுகு ஒடிக்கும் வேலை, சிறிது உணவு, ஓய்வில்லாத நாட்கள், சவுக்கைக் கொண்டு வேலை வாங்கும் மேற்பார்வையாளர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் என்று பூமியிலேயே நரகத்தை அனுபவித்து வந்தார்கள்.
அடிமைமுறை ஒழிக்கப்பட்டிருந்த வட மாநிலங்களுக்குத் தப்பித்துச் செல்வது என்பது பரவலாக இல்லை என்றாலும், வடக்கு-தெற்கு எல்லைக்கு அருகில் இருந்த மாநிலங்களில் அதிகமாகவே இருந்தது. தோட்ட முதலாளிகளால் தங்களது ‘சொத்து’ இப்படித் தப்பித்து ஓடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, தங்களது மாநிலங்களின் மூலமாக அழுத்தம் கொடுத்து, மேற்சொன்ன சட்டத்தை இயற்றச் செய்தார்கள். வட மாநிலங்களில் இருந்தவர்கள் இதைத் தங்கள் உரிமை மீறலாகப் பார்த்தார்கள். சிறிது காலத்திலேயே வட மாநிலங்கள் இந்தச் சட்டத்தைத் தங்கள் பகுதிகளில் அமல் படுத்துவதைக் குறைத்துக்கொண்டன.
குறிப்பாக, குவேக்கர்கள் அதிகமாக இருக்கும் பென்சில்வேனியாவிற்குத் தப்பித்துச் செல்வதே எளிதாக இருந்தது. அவர்கள் அங்கே தனியாகக் குழு அமைத்து, தப்பி வரும் அடிமைகளுக்கு உதவிக்கொண்டிருந்தனர். மேற்சொன்ன சட்டம் இயற்றப்பட்டவுடன், அவர்களை அங்கேயே வைத்திராமல், அங்கிருந்து கனடாவிற்குத் தப்பித்துச் செல்ல உதவி செய்தனர். இது காலப் போக்கில் வடக்கு மாநிலங்களில் மிகப்பெரும் குழுவாகப் பரிணமித்தது.
1807ஆம் ஆண்டிற்குப் பின்னர், வட மாநிலங்களில் அடிமை முறைக்கு எதிரான மனநிலை பொதுவானதாக மாறியது. அனைத்து மாநிலங்களிலும் அடிமை முறை ஒழிப்புச் சங்கங்கள் (Abolitionist Society) அமைக்கப்பட்டன. சட்டமியற்ற அழுத்தமும் தப்பித்து வரும் அடிமைகளுக்கு உதவியும் தருவதே இவர்களது முதன்மையான வேலையாக இருந்தது. வடக்கில் எதிர்ப்பு அதிகரிக்கவும், தென் மாநிலங்களில் அடிமை முறை இன்னமும் இறுக்கமாக ஆகிக்கொண்டிருந்தது. 1820இல் சட்ட விரோதமான அடிமைகள் இறக்குமதியை தடுக்க, அப்படி இறக்குமதி செய்பவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் அமெரிக்கா முழுவதிலும் இறையியல் கல்லூரிகளிலும், மற்ற கல்லூரிகளிலும் அடிமை முறைக்கான எதிர்ப்பு வலுவாக இருந்தது. ஆனால், இவை அனைத்தும் தனித்தனி குழுக்களாகச் சிதறி இருந்ததால், தங்களது கொள்கைகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.
இந்த நிலை 1830இல் மாறியது. அடிமைமுறை ஒழிப்புச் சங்கங்கள் ஒன்றாகத் தங்களை ஓர் அரசியல் சக்தியாக மாற்றிக்கொள்ள முயற்சித்தன. ஆனால் இன்னமும் பல குழுக்களாக இருந்ததால், அவர்களால் தங்களது முயற்சிகளை ஒன்றிணைத்து எடுத்துச் செல்ல முடியவில்லை. வில்லியம் காரிசன் இந்த முயற்சியை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்.
அமெரிக்காவின் அரசியல் சட்ட சாசனம் அடிமைகளைப் பற்றியோ, அடிமை முறையைப் பற்றியோ வெளிப்படையாகப் பேசாமல் இருந்தது, இந்த விவாதத்தில் யார் சரி என்பதைக் குழப்பத்திலேயே வைத்திருந்தது. வடக்கு மாநிலங்களில் சட்ட சாசனம் அடிமைமுறையை ஆதரிக்கிறது என்று சட்ட சாசனத்தை எரிக்கும் போராட்டமும் நடைபெற்றது.
அது போலவே, விடுவிக்கப்படும் கறுப்பர்களை என்ன செய்வது என்ற கேள்வியும் இந்த இயக்கத்தைத் தடுமாறச் செய்தது. அவர்களைத் திரும்பவும் ஆப்பிரிக்காவுக்கே அனுப்பிவிட வேண்டும் என்று ஒரு பக்கமும், அவர்கள் இங்கேயே தங்கள் வாழ்வைத் தொடரலாம் என்று இன்னொரு பக்கமும் விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த விவாதங்கள் தொடர்ந்த காலங்களில் எந்த விதத்திலும் அடிமைகளின் வாழ்வு மாறிவிடவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். இன்னமும் தென் மாநில அரசியல்வாதிகள் அதிகாரத்தில் உயரத்திலேயே இருந்தார்கள். போராட்டங்கள் நடந்தாலும், அரசியல் ரீதியாக எந்த மாறுதலும் கொண்டு வர முடியவில்லை.
தப்பி வந்த அடிமைகளில் சிலர் தங்களது அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். இது இன்னமும் தயக்கத்தில் இருந்த பல வட மாநிலத்தவர்களின் மனதை மாற்றியது. அப்படியானவர்களில் முதன்மையானவர், பிரெடெரிக் டக்ளஸ்.
பிரெடெரிக் டக்ளஸ் அடிமையாகப் பிறந்தார். அவர் அடிமையாக இருந்த தோட்டத்தின் சொந்தக்காரரின் மனைவி அவருக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்தாள். அருகில் இருந்தவர்களைப் பார்த்து அவரும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். கல்வி அவரை மாற்றுவதைக் கண்டு அஞ்சியவர்கள் அவரிடம் இருந்த புத்தகங்களைப் பறிமுதல் செய்து, பக்கத்துத் தோட்டத்தில் தோட்ட வேலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தப்பித்து நியூ யார்க் நகருக்கும், அங்கிருந்து மாசச்சூசெட்ஸ் மாநிலத்திற்கும் சென்றார். அங்கிருந்தவர்கள் மூலமாக உதவி பெற்று, தேவாலயம் ஒன்றில் பிரசங்கியாக வாழ்வைத் தொடங்கினர்.
அடிமையாகத் தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். பல இடங்களிலும் சென்று அடிமைமுறைக்கு எதிராகப் பேசினார். தன் வாழ்நாள் முழுவதும் அடிமைமுறைக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தார். கறுப்பினத்தவருக்கு அறிவு போதாது என்ற தென் மாநில அரசியல்வாதிகளின் வாதத்திற்கு நேரடியான பதிலாகவே தன்னுடைய வாழ்வை அமைத்துக்கொண்டார்.
மிகவும் தீவிரமாக அடிமை முறையை எதிர்த்த அவர், அரசியல் ரீதியாக மட்டுமே அதை ஒழிக்க முடியும் என்பதால், அரசியல் அழுத்தத்தைத் தேவாலயங்களின் மூலமாகக் கொடுக்க முயற்சி செய்து வந்தார். அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார் என்றே சொல்லவேண்டும். ஆனாலும், அவரால் தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை உடைக்க முடியவில்லை.
அமெரிக்காவின் நிலப்பரப்பு மேற்கே விரிந்தது என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வந்தது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். ஆனால் அந்த மோதலில் செய்யப்படும் சமரசமாக ‘தப்பியோடும் அடிமைகள் சட்டம் – 1850’ நிறைவேற்றப்பட்டதை மட்டும் இங்கே நினைவில் கொள்வோம்.
தப்பித்து ஓடி தங்கள் மாநிலங்களுக்கு வரும் அடிமைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களைப் பிடித்துத் திரும்ப ஒப்படைக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் வலியுறுத்தியது. தங்களது அரசியல் அதிகாரம் பெரிதாக எதையும் சாதிக்க உதவவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த வடக்கு அரசியல்வாதிகளுக்கு இது இன்னமும் எரிச்சல் தருவதாக இருந்தது.
1852இல் ஹாரியேட் பீச்சர் ஸ்டோவ், தன்னுடைய ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ புத்தகத்தை வெளியிட்டார். போரைத் தொடங்கி வைத்த புத்தகம் என்று லிங்கனால் குறிப்பிடப்பட்ட இந்நூல் அடிமைமுறையிலிருந்து தப்பித்துச் செல்லும் தாய்-மகனைப் பற்றியது. பல கொடுமைகளை அனுபவித்த பின்னர், டாம் அவருடைய தோட்ட முதலாளியால் கொலை செய்யப்படுகிறார். இந்தச் சிறிய கதை அன்றைய அரசியல் சூழலில் புயலை ஏற்படுத்தியது.
இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டவுடன் அமெரிக்கா மட்டுமல்லாது, ஐரோப்பாவிலும் பெரும் பரபரப்பு கிளம்பியது. அதுவரை கேள்விப்பட்டிருந்த கொடுமைகளை எழுத்தில் பார்த்தவுடன், வடக்கு மாநிலங்களில் கோபம் அதிகரித்தது. தங்களை மிகவும் கொடுமைக்காரர்களாகக் காட்டுவதாகத் தென் மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதே வருடத்தில் இந்தப் புத்தகத்திற்குப் பதிலாகத் தெற்கில் பல புத்தகங்கள் எழுதப்பட்டன. ஐரோப்பாவில் தெற்கு மாநிலங்களில் நிலவும் அடிமை முறைக்கு எதிரான மனநிலை அதிகமானது.
தங்களது நிலையை அரசியல்ரீதியாகப் பலப்படுத்தி, அடிமைமுறையை எதிர்க்க ஒரு புதிய கட்சி தேவை என்பது உணரப்பட்டது. 1854இல் ரிபப்ளிகன் கட்சி (குடியரசுக் கட்சி) உதயமானது இப்படித்தான். அடிமை முறையை எதிர்த்து, அதை அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஒழிப்பதையே தன்னுடைய கொள்கையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது இக்கட்சி.
ட்ரெட் ஸ்காட் என்ற அடிமையை அவரது தோட்ட முதலாளி, தன்னுடைய மாநிலத்திலிருந்து, வடக்கில் இருக்கும் ஒரு மாநிலத்திற்கு வேலை சம்பந்தமாக அழைத்துச் சென்றார். ஸ்காட் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, தன்னுடைய சுதந்தரத்தையும், தன் மனைவியுடைய சுதந்திரத்தையும் வாங்க முயற்சித்தார். அவரது சொந்தக்காரர் மறுத்துவிடவே, ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் வரை சென்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் கறுப்பர்களுக்கு – அடிமைகளோ, சுதந்திரமானவர்களோ – எந்த உரிமையும் இல்லை என்றும், அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு வெடி மருந்தில் நெருப்பு வைத்தது போல வடக்கில் பற்றிக்கொண்டது. அரசியல் துறையில் மட்டுமல்லாது, நீதித்துறையிலும் இருந்த தெற்கின் ஆதிக்கம், வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைத் தாங்கள் முதன்மையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பை கொண்டுவந்தது.
இலினொய் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஒருவர் இதை எல்லாம் கவனித்து, அடிமை முறையைத் தீவிரமாக எதிர்க்க முடிவு செய்தார். 1856இல் குடியரசுக் கட்சியில் சேர்ந்து, அந்த வருடத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்களது கட்சி வேட்பாளருக்காகத் தீவிரமாக வேலை செய்தார். தேர்தலில் தோல்வியடைந்தாலும், அவர் மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கவனிக்கப்பட்டார். அவரது பெயர் ஆபிரகாம் லிங்கன்.
(தொடரும்)
________
ஆதாரம் :
1. Narrative of the Life of Frederick Douglass, an American Slave – Frederick Douglass
2. Uncle Tom’s Cabin – Harriet Beecher Stowe
3. The Underground Railroad – Colson Whitehead