Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #5 – எல்லைகளும் உரிமைகளும்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #5 – எல்லைகளும் உரிமைகளும்

எல்லைகளும், உரிமைகளும்

“ஆரம்ப காலம் தொட்டு நமது நாடு சமரசம் செய்து கொண்டே வந்திருக்கிறது. அப்படிச் சமரசம் செய்தேதான் நாம் மனித உரிமைகளைக் கைவிட்டுவிட்டோம்.” – சார்லஸ் சம்னர்

தாமஸ் ஜெபர்சன் அரசியல்வாதி மட்டுமல்ல, தேர்ந்த வழக்கறிஞர், எழுத்தாளர் என்று பார்த்தோம். அவர் அறிவியலிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். 1803இல் லூசியானா பிரதேசத்தை பிரான்சிடமிருந்து வாங்கியவுடன், அந்த மிகப்பெரும் பிரதேசத்தை உடனடியாக ஆராய்ந்து, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய முயற்சியில் அவர் இறங்கினார்.

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த மெரிவெதேர் லூயிஸ், வில்லியம் கிளார்க் ஆகிய இருவரின் தலைமையில் 30 வீரர்களுடன் ஒரு குழு அனுப்பப்பட்டது. அவர்கள் மிசோரி நதியைத் (மிஸ்ஸிஸிப்பி நதியின் கிளை நதி) தொடர்ந்து சென்று அதன் ஆரம்பத்தைக் கண்டறிய வேண்டும். அங்கிருந்து அவர்கள் மறுபுறம் உள்ள பசிபிக் சமுத்திரத்தை அடைவதற்கு வழி கண்டறிய வேண்டும் என்பதே அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவு.

1804இல் கிளம்பிய இருவரும் மிசோரி நதியின் வழியே படகில் சென்று, அது ராக்கி மலைகளில் உருவாகும் இடத்தை அடைந்தனர். அங்கிருந்து படகுகளுடன் மலையைக் கடந்து, மறுபுறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கொலம்பியா நதியைக் கண்டறிந்து, அதன் வழியே பசிபிக் சமுத்திரத்தைச் சென்றடைந்தனர்.
பல செவ்விந்தியக் குழுக்களை வழியில் கண்டு, அவர்களுடன் நட்புறவு கொண்டு, அதுவரை வெளியில் தெரிந்திராத பல மிருகங்கள், தாவரங்கள் முதலியவற்றையும் சேகரித்துக்கொண்டு 1806இல் திரும்பவும் வாஷிங்டன் நகருக்குத் திரும்பினார்கள். இந்தப் பயணம் அமெரிக்கா மேற்கு நோக்கி விரிவடைவதற்கு முதல் படியாக இருந்தது.

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ‘Manifest Destiny’ என்ற சொல்லாடல் பரவலாகப் பழக்கத்தில் இருந்தது. அதாவது, அமெரிக்க ஒன்றியத்தின் விதியானது மேற்கில் விரிந்து சென்று, இரண்டு சமுத்திரங்களையும் ஒன்றிணைப்பதே இதன் சாரம். இதற்கான பல நியாயங்களும் கற்பிதங்களும் உருவாக்கப்பட்டன. மேற்கு நிலப் பகுதிக்கு வெளிச்சத்தையும், கலாசாரத்தையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு செல்ல வேண்டியது அமெரிக்காவின் வெளிப்படையான விதி என்பதாகவே இது புரிந்துகொள்ளப்பட்டது.

இத்தகைய கருத்தாக்கத்தை ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் எதிர்த்தாலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பிரபலமாகவே இருந்தது. இதுவே மேலும் மேலும் மேற்கை நோக்கி நாட்டை நகற்ற நடந்த முயற்சிகளின் ஆதாரக் காரணம்.

1787இல் முதலாவதாக ஐம்பெரும் ஏரிகளுக்குத் தெற்கான பெரும் நிலப்பரப்பு, வடமேற்கு பிரதேசங்கள் என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. 1803இல் லூசியானா அமெரிக்காவின் எல்லையை பசிபிக் சமுத்திரத்திற்கு அருகில் எடுத்துச் சென்றது. அதற்கு அடுத்த ஐம்பது வருடங்களில் அமெரிக்க ஒன்றியம் இன்று நாம் அறிந்திருக்கும் எல்லைகளுக்கு விரிந்துவிட்டது.

அமெரிக்கா முதன்மையாக ஒரு குடியேற்ற நாடு என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். ஐரோப்பாவில் இருந்த ஏழைகள் அனைவரும் அமெரிக்காவின் பெரும் நிலப்பரப்பை எண்ணியே குடியேறிக்கொண்டிருந்தார்கள். இவர்களை மேற்கு நோக்கி நகற்றுவதே அரசின் எண்ணமாக இருந்தது. செவ்விந்தியர்கள் நிலத்தைத் தங்களுக்குச் சொந்தமானதாகக் கருதாதது இத்தகைய நில அபகரிப்பிற்கு வசதியாக இருந்துவிட்டது. இதனாலேயே அவர்கள் தங்கள் மண்ணிலேயே அகதிகளாக ஆனார்கள்.

வடமேற்குப் பிரதேசங்களை எடுத்துக் கொள்வோம். 1787இல் அமெரிக்க நிலப்பரப்பாக மாற்றப்பட்ட இந்த இடங்களில், 1800ஆம் வருடத்திற்குள் 50,000 அமெரிக்க வெள்ளை இனத்தவர் குடியேறிவிட்டனர். அதற்கடுத்த முப்பது வருடங்களில், டெட்ராய்ட், கிளீவ்லன்ட், சிகாகோ, கொலம்பஸ் போன்ற பெருநகரங்கள் இங்கே தோன்றிவிட்டன. இங்கிருந்த செவ்விந்தியர்கள், அச்சுறுத்தப்பட்டோ அல்லது தாங்களாகவோ மேற்கை நோக்கி தள்ளப்பட்டனர்.

இப்படியாகக் குடியேறபடும் பகுதிகளை, ஒரு நிலைக்கு மேல், அமெரிக்க நாடாளுமன்றங்கள் மாநிலம் எனும் தகுதி கொடுத்து உயர்த்திவிடும். வடமேற்கு பிரதேசங்களில், ஓஹியோ நதியைச் சுற்றிய பிரதேசம் ஓஹியோ மாநிலமாகவும், அதற்கு அருகில் இண்டியானா மாநிலம் மிச்சிகன் ஏரியின் தெற்கில் இலினொய் மாநிலமாகவும் இப்படித்தான் அங்கீகாரம் பெறற்றன. இந்தப் பகுதிகளில் முதலில் குடியேறியவர்கள் பெரும்பாலும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், இவை முதலிலேயே அடிமை முறையைத் தடை செய்துவிட்டன.

தென் மாநிலங்களுக்கு இது ஒரு புதிய சவாலை முன்னிறுத்தியது. புதிதாக உருவாகும் மாநிலங்கள் அடிமைமுறையைக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது அதைத் தடை செய்திருக்க வேண்டுமா என்பதுதான் அது. அவர்களைப் பொறுத்த வரை, அடிமை முறையைத் தடை செய்யும் மாநிலங்கள் அதிகரிக்கும்போது, அது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைத்து விடும் என்று பயந்தார்கள். எனவே, புதிய மாநிலங்கள் விரும்புகின்றனவோ இல்லையோ, அதிகாரத்தைச் சமன் செய்ய, ஒவ்வொரு சுதந்தர மாநிலத்திற்கும் ஓர் அடிமை முறையைஅங்கீகரிக்கும் மாநிலம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஆச்சரியகரமாக, அமெரிக்க நாடாளுமன்றங்களும், குடியரசுத் தலைவரும் இதைச் சமரசமாகப் பார்த்து ஒப்புக் கொள்ளவே செய்தார்கள்.

ஆபிரகாம் லிங்கனுக்கு முன்பிருந்த 16 குடியரசுத் தலைவர்களில், 10 பேர் தென் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். அதிலும் முதல் பத்துத் தலைவர்களில் 7 பேர் தங்களது தோட்டங்களில் அடிமைகளை வைத்திருந்தவர்கள். எனவே முன்பே கூறியது போல அரசியல் அதிகாரம் தெற்கை நோக்கியே சாய்ந்திருந்தது. இது மேற்சொன்னது போன்ற ஒருபக்கச் சமரசங்களுக்கு ஏதுவாக இருந்தது.

மேற்கில் இருந்த பிரதேசங்களை மாநிலங்களாக மாற்றுவது இதனாலேயே மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறிக்கொண்டிருந்தது. 1820இல் மிசோரி பிரதேசத்தைப் புதிய மாநிலமாக ஒன்றியத்தில் சேர்ப்பது குறித்தான விவாதத்தில் இது வெடித்தது.

புதிதாக வாங்கப்பட்ட லூசியானா பிரதேசத்தின் தெற்கு பிரதேசத்தில் மிசோரி பகுதி இருந்தது. அடிமை முறை சட்டபூர்வமாக இருந்த மற்ற தென் மாநிலங்களுக்கு அருகில் இருந்ததால், இந்தப் பகுதியில் பெரும்பாலும் தோட்டங்களைச் சேர்ந்தவர்களோ, அடிமைகளை வைத்திருந்தவர்களோ வந்து குடியேறியிருந்தார்கள். அதே நேரத்தில் வடக்கே மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, மைன் (Maine) பகுதியைத் தனி மாநிலமாக்கும் கோரிக்கையும் எழுந்திருந்தது. இவற்றுக்கான ஒப்புதல் கோரிய சட்ட வரைவு அமெரிக்கக் காங்கிரஸ் சபைக்கு முன் வந்தது.

காங்கிரஸில் ஜெபர்சன் கட்சியைச் சேர்ந்த ஜேம்ஸ் டால்மட்ஜ், புதிய மாநிலங்களில் அடிமைமுறையைக் கட்டுப்படுத்த சட்ட திருத்தத்தை முன்வைத்தார். இது மாநில உரிமைகளில் தலையிடுவது என்று தென் மாநில அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அதே நேரத்தில் புதிய அடிமை மாநிலங்கள் தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை இன்னமும் அதிகரிக்கும் என்று வட மாநிலங்களிலும் எதிர்ப்பு நிலவியது.

இதற்குச் சமரசமாக 36°30′ அட்ச ரேகையை வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கான எல்லையாகக் கொள்வது என்றும், இதற்குத் தெற்கே இருக்கும் மாநிலங்களும், புதிய பிரதேசங்களும் அடிமைமுறையைச் சட்டபூர்வமாக வைத்துக் கொள்ளலாம் என்றும், வடக்கே இருக்கும் மாநிலங்கள் சுதந்தர மாநிலங்களாக இருக்கலாம் என்றும் இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும், அரசியல் சமநிலையை அப்படியே தொடர, மிசோரி மாநிலம் அடிமை மாநிலமாகவும், மைன் சுதந்திர மாநிலமாகவும் ஒன்றியத்தில் இணைய ஒப்புதல் தரப்பட்டது. இந்தச் சமரசம் உள்நாட்டுப் போரைத் தள்ளிப் போட்டது என்று சொல்லலாம்.

ஆனால் இந்த அட்ச ரேகைக்கு மேலேயும் சில மாநிலங்கள் அடிமை முறையைச் சட்டபூர்வமாக வைத்திருந்தன – கென்டக்கி, டென்னிசி, டெலெவர், மேரிலாண்ட் மாநிலங்களில் அடிமை முறை தொடர்ந்தது. இவை எல்லை மாநிலங்கள் என்று கருதப்பட்டன.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரமும் டெலெவர், மேரிலாண்ட் மாநிலங்களுக்கு இடையே, தலைநகருக்கான சிறப்புப் பகுதியில் எழுப்பப்பட்டிருந்தது. இங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பிரச்னையைத் தென் மாநில அரசியல்வாதிகளும் பெரும்பாலான மக்களும் மாநில உரிமைக்கான பிரச்னையாகப் பார்த்தார்கள். தங்களது மாநிலத்தில் அடிமை முறை இருக்க வேண்டுமா, இல்லையா என்பது தங்களது முடிவாக இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதை மாநில உரிமைக்கான பிரச்னையாகக் கட்டமைத்ததன் மூலம், தென் மாநிலங்களில் அடிமைகளை வைத்திராத, சிறு விவசாயிகள், நகர வணிகர்கள் எனச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஆதரவை அவர்களால் பெற முடிந்தது.

சமூகத்தின் ஒரு பிரிவினரை அடிமைகளாக, அவர்களுக்குச் சம உரிமை வழங்காமல் வைத்திருப்பது எந்த விதத்திலும் மாநில உரிமையாக இருக்க முடியாது, அது மனித உரிமைக்கான பிரச்னை என்பதே வட மாநிலங்களின் நிலைப்பாடாக இருந்தது.

சார்லஸ் சம்னர் (Charles Sumner) மாசச்சூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. தீவிரமான அடிமை ஒழிப்பு போராளியான அவர், அந்த மாநிலத்தின் முக்கியமான வழக்கறிஞரும் கூட. அவரது வாழ்வின் முக்கியமான தருணம், அவர் 1837இல் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணம். 1833ஆம் ஆண்டு பிரித்தானியப் பேரரசு தன்னுடைய நாடுகள் அனைத்திலும் இருந்து அடிமை முறையை ஒழித்திருந்தது.

பிரான்ஸ் நாட்டிலும் அதுவே நிலை. பிரான்சின் பெரும் எழுத்தாளரான அலெக்சாண்டர் டூமாஸ் கறுப்பினத்தவர். பிரான்சில் கல்லூரி வகுப்பில் வெள்ளை இனத்தவரும், கறுப்பினத்தவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பதைப் பார்த்த பொழுதே இன, நிற, மத வேறுபாடுகள் என்பது இயற்கையானது அல்ல, மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது என்பது சம்னருக்கு புரிந்தது. அமெரிக்காவிற்குத் திரும்பிய அவர் 1851இல் மாசச்சூசெட்ஸ் மாநில செனட்டராக வாஷிங்டன் நகருக்கு வந்தார்.

1820ற்கு பின்னர் ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு அடிமை மாநிலத்திற்கும் ஒரு சுதந்தர மாநிலம் அனுமதிக்கப்பட்டது. இது 1850 வரை தொடர்ந்தது.

அடிமை மாநிலம் அனுமதிக்கப்பட்ட வருடம் சுதந்தர மாநிலம் அனுமதிக்கப்பட்ட வருடம்
மிசோரி 1836 மிச்சிகன் 1837
புளோரிடா 1845 அயோவா 1846
அர்கன்சாஸ் 1836 மிச்சிகன் 1837
டெக்சாஸ் 1845 விஸ்கான்சின் 1848

1850களில் லூசியானா பிரதேசத்தின், நெப்ராஸ்கா – கான்சாஸ் பகுதிகளை மாநிலங்களாக அனுமதிப்பது குறித்த விவாதம் தொடங்கியது. அப்போதைய குடியரசுத் தலைவரான பிராங்கிளின் பியர்சின் ஆதரவுடன், ஜனநாயக கட்சியின் செனட்டரான ஸ்டீபன் டக்ளஸ் ஒரு புதிய சட்டத்தை 1854இல் இயற்றினார். கான்சாஸ்-நெப்ராஸ்கா சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், முந்தைய மிசோரி சமரசத்தை நீக்கிவிட்டு, புதிய மாநிலங்களில், அவற்றில் இருக்கும் மக்களின் விருப்பப்படியே அடிமை முறை இருக்கவோ, நீக்கப்படவோ வேண்டும் என்று கூறியது.

அதுவரை புகைந்து கொண்டிருந்த அடிமை முறை பற்றிய விவாதம் மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கான்சாஸில் பெரும்பாலோரின் விருப்பமே அந்த மாநிலத்தில் அடிமை முறை இருப்பதை முடிவு செய்யும் என்பதால், அங்கே குடியேறுவதற்கு வடக்கு மாநிலங்களில் இருந்தும், தெற்கு மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் செல்ல ஆரம்பித்தார்கள். எதிர்பார்த்தது போலவே, இது கான்சாஸில் பெரும் வன்முறையைத் தொடங்கி வைத்தது.

‘ரத்தம் சிந்தும் கான்சாஸ்’ (Bleeding Kansas) என்று அழைக்கப்பட்ட இந்த நிலை அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீடித்தது. இரண்டு பக்கங்களிலும் சிறு சிறு குழுக்கள், கான்சாஸில் தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களைக் கொல்வது, அவர்களது சொத்துக்களை எரிப்பது என்று வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர்.

வன்முறைக்கு வித்தான சட்டத்தைத் தென் மாநில அரசியல்வாதிகள் இயற்றியதை எதிர்த்து சார்லஸ் சம்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட்டில் நெருப்பைப் போல எதிர்த்துப் பேசினார். சட்டத்தை இயற்றிய தெற்கு கரோலினா செனட்டரான ஆண்ட்ரு பட்லரை எதிர்த்து அவர் பேசியது, தென் மாநில உறுப்பினர்களுக்குப் பிடிக்கவில்லை. அங்கு வந்த அவை உறுப்பினர் பிரெஸ்டன் ப்ரூக்ஸ், தன்னுடைய தங்கப் பூண் போட்ட கைத்தடியால் சம்னரின் மீது தாக்குதலைத் தொடங்கினார். அவருக்கு இன்னமும் சில உறுப்பினர்கள் உதவி செய்தார்கள். தலையில் அடிபட்ட சம்னர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குத் தூக்கி செல்லப்பட்டார்.

தென் மாநில அரசியல்வாதிகள் தங்கள் அடிமைகளை நடத்துவது போல வட மாநிலத்தவர்களை நடத்துவதாக, வட மாநிலங்களின் நகரங்கள் அனைத்திலும் போராட்டம் நடந்தது. தென் மாநிலங்களுடன் பேசுவதற்கான காலமோ, சமரசத்திற்கான நேரமோ தாண்டிவிட்டது என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

இன்னமும் ஒரே ஒரு மயில் இறகு மட்டுமே அந்த வண்டியின் முதுகில் வைக்க வேண்டியிருந்தது. அந்த மயிலிறகு 1860 குடியரசு தலைவர் தேர்தலாக வந்தது.

(தொடரும்)

_______
ஆதாரம்

1. Undaunted Courage: Meriwether Lewis, Thomas Jefferson, and the Opening of the American West – Stephen Ambrose
2. The Causes of the Civil War – Kenneth Stampp

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *