Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

ஆபிரகாம் லிங்கன்

மற்றவர்களுக்குச் சுதந்தரத்தை மறுப்பவர்கள், சுதந்தரத்திற்குத் தகுதியில்லாதவர்கள். அப்படியே சுதந்தரமாக இருந்தாலும், கடவுளின் முன், வெகு நாள்களுக்கு அவர்களால் அதைத் தக்க வைக்க முடியாது.

– ஆபிரகாம் லிங்கன்

சின்சினாடஸ் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானிய அரசியல்வாதி. இரண்டு முறை ரோமப் பேரரசுக்குச் சர்வாதிகாரியாக மக்களால் நியமிக்கப்பட்டாலும், தன்னுடைய கடமையை நிறைவேற்றிவிட்டு, தன் நிலத்திற்குத் திரும்பி விவசாயியாக வாழ்ந்தவர். இன்றும் மேற்கத்திய கலாசாரத்தில், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எட்ட முடியாத இலக்கின் எடுத்துக்காட்டாக இவர் இன்றும் கூறப்படுகிறார்.

அமெரிக்கப் புரட்சியின் போது, 1783இல் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க ராணுவத்தில் இருந்த அதிகாரிகள் இணைந்து, சின்சினாடஸ் சங்கம் ஒன்றை அமைத்தார்கள். பொது வாழ்வில் அரசியல்வாதிகள் அதிகாரத்தைத் தங்களிடம் குவித்து, ஜனநாயகத்தைச் சிதைக்காமல் பார்த்துக் கொள்வதே இதன் நோக்கம். அமெரிக்க அரசியல்வாதிகளில் இதற்கு முதல் உதாரணமாக ஜார்ஜ் வாஷிங்டன் கூறப்படுகிறார்.

அமெரிக்கப் புரட்சியின்போது படைகளுக்குத் தலைமை ஏற்று நடத்திய அவர், இரண்டு முறை குடியரசுத் தலைவராக இருந்தார். எந்த விதிகளும் இல்லாத அப்போது, அவர் தன்னை வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் அமர்த்திக்கொண்டிருக்க முடியும். ஆனால், இரண்டாவது முறை முடிந்தவுடன், அதிகாரத்தைக் கைவிட்டுவிட்டு, தன்னுடைய நிலத்தைக் கவனித்துக் கொண்டு விவசாயியாக மாறிவிட்டார்.

அவருக்கு அடுத்ததாகப் பொது வாழ்வில் எந்தக் களங்கமும் இல்லாமல் வாழ்ந்ததாக அமெரிக்க வரலாறு நமக்குக் காட்டுவது, ஆபிரகாம் லிங்கனைத்தான். அமெரிக்க மக்களால் ‘Honest Abe’ என்று அழைக்கப்பட்ட அவர் நேர்மைக்கும், அதிகாரத்திற்கும் ஆசைப்படாமல் தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியைத் திருத்தமாகச் செய்ததற்கும் இன்றும் நினைவுகூறப்படுகிறார். அமெரிக்கக் குடியரசின் தலைவர்களுக்கு (மக்களுக்கும்) ஆதர்சமாக இருக்கும் முதல் இருவரில் லிங்கன் எப்போதும் இருக்கிறார்.

1809ஆம் ஆண்டு லிங்கன், கென்டக்கி மாநிலத்தில் ஒரு சிறிய, ஒற்றை அறை மர வீட்டில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு விவசாயி. எழுதப் படிக்கத் தெரியாதவர். கென்டக்கி மாநிலத்தில் அவரது நிலங்களின் உரிமை குறித்தான பிரச்னையில், நிலங்களை இழந்துவிட்டார். லிங்கனுக்கு ஏழு வயதாகும்போது, அவர்கள் குடும்பம் அங்கிருந்து அருகில் இருக்கும் இந்தியானா மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தது.

அங்கு சென்ற இரண்டு வருடங்களில் லிங்கனின் தாயார், நான்சி நோய்வசப்பட்டு மரணமடைந்தார். தாமஸ் லிங்கன் அடுத்த வருடமே சாரா என்ற பெண்ணை, அவரது மூன்று குழந்தைகளோடு திருமணம் செய்து கொண்டார். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை இரட்டிப்பானது. லிங்கன் குடும்பத்தின் வறுமையும் இரட்டிப்பானது.

ஆபிரகாம் லிங்கன், இந்தக் காலத்தில் அவரது தந்தைக்கு உதவியாக நிலத்தில் உதவி செய்வது, மரக்கட்டைகளைப் பிளக்க உதவுவது என்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்த பகுதிகள் என்பதால், பள்ளிகள் அருகில் இருந்த நகரங்களில் மட்டுமே இருந்தன.

கென்டக்கியில் அவர்கள் இருந்த பொழுது, சில நாட்கள் பள்ளிக்குச் சென்றிருந்தாலும், இந்தியானாவில் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அவ்வப்போது சில ஆசிரியர்களை விவசாயிகள் அழைத்து வந்தாலும், நிலையான கல்வி என்பது இல்லை. லிங்கனின் உறவுக்கார அண்ணன் ஒருவர் சில நாள்கள் அவருக்கு எழுத சொல்லிக்கொடுத்தார். மற்றபடி, அவரது 21ஆம் வயது வரை அங்கே கிடைத்த புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றை மட்டுமே வாசிக்க முடிந்தது. ஆனால் லிங்கன் வாசிப்பதில் பெரும் ஆர்வத்தைக் காட்டியதாகத் தெரிகிறது.

1816இல் அவர்கள் இந்தியானாவுக்கு வந்தபோது, லிங்கனின் தந்தை அங்கே 160 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். இது அடர்ந்த காட்டுப் பிரதேசம். இங்கே லிங்கன் தன்னுடைய கோடரியை உபயோகிக்கக் கற்றுக்கொண்டார். நிலத்தைத் தயார் செய்து, மரங்களை வெட்டி, வீடு கட்டி அவர்கள் வாழ்வைத் தொடங்கினார்கள். அது மட்டுமில்லாமல் கரடி வேட்டைக்குச் செல்வது, நிலத்தில் வேலை செய்வது என்று லிங்கனின் வாழ்க்கைப் பாடங்கள் பல விதங்களில் இருந்தன. எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான பாடத்தை வாழ்க்கை அவருக்காக வைத்திருந்தது.

1828இல் லிங்கனின் மூத்த சகோதரி இறந்து போனார். தாயின் மறைவிற்குப் பின்னர், சகோதரியுடன் மிகவும் பாசத்துடன், நெருக்கமாக இருந்த லிங்கன் உடைந்து போனார். அவர்களது நிலத்திற்கு அருகில் கடை வைத்திருந்தவரின் மகனான ஆலன் கெண்ட்ரி (Allen Gentry), அப்போது பொருட்களை நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. லிங்கனும் அவருடன் சேர்ந்து கொண்டார். இருவரும் படகு ஒன்றைச் செய்து, ஒகையோ நதியின் வழியே மிஸ்ஸிஸிப்பி நதியை அடைந்து, நியூ ஆர்லியன்ஸ் நகரை நோக்கிச் சென்றனர். கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டர்கள், விற்க வேண்டிய பொருட்களுடன் படகில், இருவரும் மாறி மாறி துடுப்புப் போட்டுக்கொண்டே சென்றார்கள்.

தன்னுடைய நாட்டின் முழு அழகையும் பரப்பையும் அப்போதுதான் லிங்கன் அறிந்து கொண்டார். இந்தியானா அடிமை முறையைத் தடை செய்திருந்த மாநிலம். ஆனால் இப்போது லிங்கன் செல்லும் பகுதிகளில் அடிமை முறை சட்டபூர்வமானதாக இருந்தது. செல்லும் வழியில், நதியில் அவர்களிடம் இருந்து திருட முயன்ற ஆப்பிரிக்கக் கறுப்பர்களிடம் இருந்து பொருட்களைக் காக்க வேண்டியிருந்தது.

நியூ ஆர்லியன்ஸ் நகரம் அடிமைகள் சந்தைகள் இருக்கும் பெரும் வணிக நகரம். அங்கே லிங்கன் முதல் முறையாக அடிமைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தார். அது குறித்து அவர் அப்போதோ பின்னரோ எழுதவோ, பேசவோ இல்லை. ஆனால், அவரது சிந்தனைகளைச் சரியான முறையில் செதுக்க அந்தப் பயணம் அவருக்கு உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மூன்று மாதப் பயணத்திற்குப் பின்னர் அவர்கள் இந்தியானாவிற்குத் திரும்பினார்கள்.

அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில், அவர்களது குடும்பம் இலினொய் மாநிலத்திற்குக் குடிபுகுந்தது. இதற்கான காரணம் தெளிவாக இல்லை. ஆனால் அங்கிருந்த கடையில் பகுதி நேர வேலை செய்த லிங்கன், திரும்பவும் ஒரு முறை நியூ ஆர்லியன்ஸ் சென்றார். திரும்பியவுடன், அவர் நியூ சேலம் என்ற இடத்தில் இருந்த கடையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். அந்தக் கடை மூடப்படவே, உடனடியாக வேலை வேண்டி இருந்ததால், அப்போது ஆரம்பித்த செவ்விந்தியர்களுடனான போரில் கலந்துகொள்ளப் போர் வீரராகச் சேர்ந்தார் லிங்கன். ஆனால் அவர் போருக்குச் செல்லவே இல்லை. அடுத்த வருடமே நண்பர் ஒருவருடன் சேர்ந்து கடை ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு அடுத்த வருடமே கடை கடனில் மூழ்கியது.

எனவே, கடையில் ஏற்பட்ட கடனை அடைக்க வருமானம் வேண்டும் என்று எண்ணி 1834இல் இலினொய் மாநில சட்ட சபைக்கு வேட்பாளராகப் போட்டியிட்டார். ஏற்கனவே சிறிய நகரான நியூ சேலமில், கடை வைத்திருந்ததாலும், நகரச் சங்கங்களில் இருந்ததாலும், லிங்கன் எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னமும் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, எட்டு வருடங்கள் சட்ட சபை உறுப்பினராக இருந்தார். இதே நேரத்தில், அரசியலில் சட்டம் பற்றிய அறிவு தேவை என்று படிக்க ஆரம்பித்து, 1836இல் வக்கீலாகப் பதிந்துகொண்டார்.

அப்போது நீதி மன்றங்கள், பல ஊர்களுக்குச் சென்று அங்கிருக்கும் வழக்குகளைத் தீர்ப்பது வழக்கம். எனவே, லிங்கனும், பல நீதிபதிகள், வக்கீல்கள் முதலியோருடன் பல ஊர்களுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களுக்காக வாதாட ஆரம்பித்தார். இது லிங்கனின் பெயரை மாநிலம் முழுவதும் தெரியப்படுத்தியது. இதே நேரத்தில் அடிமை முறை ஒழிப்பு சங்கங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மாநில தலைநகரான ஸ்ப்ரிங் ஃபீல்ட்டில் தன்னுடைய வக்கீல் தொழிலையும் வெற்றிகரமாக நடத்தினார்.

1839இல் கென்டக்கியில் இருந்து அங்கே வந்திருந்த பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த மேரி டாட் என்பவர்மீது காதல் கொண்டார். அடுத்த மூன்று வருடங்கள் தயங்கிக் கொண்டிருந்த பிறகு, இறுதியாக 1842இல் மேரியை மணம் முடித்தார்.

தேசிய அரசியலில் நுழைவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்த லிங்கன், 1846ம் வருடம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபைக்குப் போட்டியிட்டார்.

லிங்கன் வெளிப்படையான கடவுள் நம்பிக்கை கொண்டவர் அல்ல. அவர் வேதாகமத்தைப் படித்திருந்தாலும், பொதுவாகத் தேவாலயங்களுக்குச் செல்வதில்லை. 1846ஆம் வருடத் தேர்தலில் இது முக்கியமான பிரச்னையாகப் பேசப்பட்டது. லிங்கனும் தனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், தான் தேவாலயத்தையோ கிறிஸ்தவச் சபையையோ சேர்ந்தவனில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தார். இருந்தாலும் தேர்தலில் வெற்றி அடைந்தார்.

முதல் முறையாக வாஷிங்டனுக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் பிரதிநிதியாகப் பயணம் செய்தார். அப்போது அமெரிக்கா, மெக்ஸிகோ நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. லிங்கன் போரை எதிர்ப்பவர் என்பதால், போரை எதிர்த்து மிகவும் வேகமாக இயங்கினார். பல இடங்களில் அவர் பேசியது, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களையே அவருக்கு எதிராகத் திருப்பச்செய்தது. போரில் செய்யப்படும் அரசியல் அவருக்கு வெறுப்பையே தந்தது.

அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே லிங்கனின் இரண்டு வருடங்கள் 1849இல் முடிந்தது. ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும், லிங்கன் போரை எதிர்த்தது, கட்சி தலைவர்களுக்கு விருப்பமானதாக இல்லை. எனவே அவரை மேற்கே ஓரிகன் பிரதேசத்திற்கு ஆளுநராக நியமிக்க முடிவு செய்தனர். லிங்கனிற்கு இதில் விருப்பமில்லை என்பதால், அவர் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலைத் தொடர, மீண்டும் இலினொய் திரும்பினார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *