உலகம் முழுவதும் நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது… ‘நீ உழைத்து, சிரமப்பட்டு உணவைத் தேடு, நான் வந்து உண்கிறேன்’ என்பதுதான் இயல்பாக இருக்கிறது. இவ்வாறு யார் சொன்னாலும், எந்த வடிவில் சொன்னாலும் அது தவறு. தன் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்யும் அரசனாக இருந்தாலும் சரி, ஓர் இனத்தை அடிமைப்படுத்தும் இன்னோர் இனமாக இருந்தாலும் சரி, இரண்டுமே கொடுங்கோன்மைதான்.
– ஆபிரகாம் லிங்கன்
இந்தப் புள்ளியிலிருந்து அமெரிக்க ஒன்றியத்தின் விதியும் ஆபிரகாம் லிங்கனின் விதியும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பிக்கின்றன.
லிங்கன் இந்த நேரத்தில் இருந்த கட்சியின் பெயர் விக். இவர்கள் சர்வாதிகாரத்தை எதிர்த்து, நாடாளுமன்றச் சபைகளே அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். முன்பே விவரித்த கான்சாஸ்-நெப்ராஸ்கா சட்டம் தீவிரமாக விவாதத்தில் இருந்த நேரத்தில், 1852இல் யாரைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிப்பது என்ற பிரச்னையில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தீவிர அடிமை முறை எதிர்ப்பாளர்கள், கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளராக பில்மோரை அறிவிக்க இருந்ததைத் தடுத்தனர். இந்தக் குழப்பத்தில் கட்சி 1852 தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாகக் கட்சியின் தலைவர்கள் பலரும் விலகினார்கள்.
இவர்கள் ஒன்றாக இணைந்து, இன்னமும் பல தீவிர அடிமை முறை எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து குடியரசுச் கட்சியை (ரிபப்ளிகன் கட்சி) தொடங்கினார்கள். 1854இல் லிங்கன் இந்தக் கட்சியில் இணைந்தார்.
இந்தக் காலத்தில் வெளிப்படையான அரசியல் எதுவும் செய்யாமல் இருந்த லிங்கன், 1854ஆம் வருடம் கான்சாஸ்-நெப்ராஸ்கா சட்டத்தை எதிர்த்து தனது முதல் உரையை நிகழ்த்தினார். ‘பியோரியா உரை’ என்று அழைக்கப்படும் இந்த உரை, லிங்கனின் குடியரசுத் தலைவர் பதவியை நோக்கிய பயணத்தின் முதல் உரையாகக் கருதப்படுகிறது.
இந்த இடத்தில், ஆபிரகாம் லிங்கனின் பேச்சுத் திறமையைப் பற்றிச் சிறிது பார்த்துவிடுவோம். லிங்கன் வாழ்ந்த காலத்தில் (இப்போதும் கூட) தேர்ந்த அரசியல்வாதியாக இருக்க வேண்டுமென்றால், கூட்டத்தைக் கட்டிப் போடும் வகையில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். லிங்கன் மிகவும் தேர்ந்த அரசியல்வாதியாகவும் பேச்சாளராகவும் இருந்தார். இப்போது போல ஒலிபெருக்கிகள் அப்போது கிடையாது. எனவே குரல் வெண்கலத்தைப் போல இருந்தால்தான், கூட்டத்தின் கடைசி மனிதர் வரை கேட்கும். எனவே தெளிவான பேச்சும், உரத்த குரலும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் லிங்கனிடம் இருந்தன. அவர் உயரமாக இருந்ததால், கூட்டத்தில் அவரை அனைவராலும் காணமுடிந்தது. நீண்ட நேரம் பேசுவதோ, குறைந்த நேரம் பேசுவதோ எதுவாக இருந்தாலும் அவரால் எளிதாகத் தன்னுடைய கருத்தைக் கடத்த முடிந்தது.
மேலே சொன்ன பியோரியா உரையை அவர் மூன்று மணி நேரம் நிகழ்த்தினார். தான் எதற்காக அடிமை முறையை எதிர்க்கிறேன் என்றும், அது எப்படி நாட்டின் ஒற்றுமையை மட்டுமல்லாது, தனி மனிதனின் ஒழுக்கத்தையும் பாதிக்கிறது என்பதையும் அவர் எடுத்துச் சொன்னார். தேசிய அளவில் அவர் கவனிக்கப்பட இந்த உரை உதவியாக இருந்தது.
‘அனைத்து மனிதர்களும் சரி சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று நம் நம்பிக்கை தெரிவிக்கிறது; இது உண்மை என்றால், கறுப்பர்கள் மனிதர்கள் என்றால், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு எந்தத் தார்மிக நியாயமும் இல்லை’ என்றார் லிங்கன்.
அந்த நேரத்தில் நிகழ்ந்த இரண்டு தொழில்நுட்பப் பாய்ச்சல்களை இங்கே சொல்லியாக வேண்டும். ஒன்று, சுருக்கெழுத்து முறை. வேகமாக ஆற்றக்கூடிய உரையைக்கூட ஒரு சொல்விடாமல் கவனமாகச் சேகரித்துப் பதிவு செய்ய இது உதவியது. இரண்டாவது தந்தி முறை. இது செய்திப் பரிமாற்றத்தில் பெரிய புரட்சியைக் கொண்டு வந்தது. ஒரே நாளில் நாடு முழுவதும் செய்தி பரவுவதைச் சாத்தியப்படுத்தியது. இவை இரண்டையும் லிங்கன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். அவரது உரைகள் நாடு முழுவதும் பதிப்பிக்கப்பட்டன. இது அவர் மீதான கவனத்தைச் சிதறாமல் வைத்திருந்தது. இதை அவர் தக்க நேரத்தில் பயன்படுத்திக்கொண்டார்.
1856ஆம் ஆண்டுத் தேர்தலில் முதல் முறையாகக் குடியரசு கட்சி போட்டியிட்டது. நான்கு மாநிலங்களை மட்டுமே வென்றாலும், மாநிலங்கள், மாவட்டங்கள் (கவுன்ட்டி) அளவில் நிறைய வெற்றிகளைப் பெற்றது. அடிமை முறையைஒழிப்பதைத் தன்னுடைய பிரதான கொள்கையாகக் கொண்டிருந்த குடியரசுக் கட்சியின் வெற்றிகள், தென் மாநிலங்களில் அபாய மணியை அடித்தது.
அடிமைமுறை புதிய பிரதேசங்களில் பரவுவதை குடியரசுக் கட்சி, எதிர்த்தது. அப்போது சட்டபூர்வமானதாக இருந்த மாநிலங்களில் அடிமை முறை தொடர்வதை ஆதரிப்பதாகக் கூறினாலும், அடிமை முறையை வெகுவாகக் கட்டுப்படுத்தவும், நாள் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் முழுவதுமாக ஒழிப்பதும் அதன் கொள்கைகளாக இருந்தன.
வட மாநிலங்களில் அடிமை முறையை வெகுவாக எதிர்த்து வந்த அனைவரும் இந்தக் கட்சியில் இருந்தனர். இதனால் குடியரசுக் கட்சியைத் தென் மாநிலங்கள் – அதுவரை இருந்த அனைத்து இயக்கங்களைவிடவும் அதிகமாக – வெறுத்தன.
1856ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியும் வெற்றிகளும் குடியரசுக் கட்சிக்கு புதிய வேகத்தைக் கொடுத்தன. பரவலாகப் பல இடங்களிலும் கட்சியின் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. வட மாநில விக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் குடியரசுக் கட்சியில் இணைந்தனர். அந்தக் கட்சியே இதனால் கலைக்கப்பட்டது.
1857இல் உச்ச நீதிமன்றம் ட்ரேட்ஸ்காட் வழக்கில், கறுப்பர்களுக்குக் குடியுரிமை இல்லை என்றும் எனவே அவர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது. அடிமைமுறை பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்தத் தீர்ப்பு அதை ஊதிப் பெரிதாக்கியது. குடியரசுக் கட்சியின் வளர்ச்சி, வட மாநிலங்களில் தவிர்க்க முடியாததாக மாறியது.
1858இல் லிங்கன் குடியரசு கட்சியின் செனட் வேட்பாளராக, இலினொய் மாநிலத்திற்கு நிறுத்தப்பட்டார். அவரது முதல் கூட்டத்தில், அவரது மிகவும் பிரபலமான ‘பிரிந்த வீடு’ (A House Divided) என்ற உரையை நிகழ்த்தினார். அதில் அடிமைமுறைக்கு இருக்கும் ஒரே தீர்வை முன்வைத்தார். ஒன்று அமெரிக்க ஒன்றியத்தில் அடிமை முறை தடை செய்யப்பட வேண்டும் அல்லது ஒன்றியம் முழுவதும் அடிமை முறை சட்ட பூர்வமானதாக ஆக்கப்பட வேண்டும். இடைப்பட்ட நிலை சாத்தியமில்லை என்றார் லிங்கன். இது அடிமை முறை குறித்த லிங்கனின் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தது.
தேர்தலில் அவருக்கு எதிராக ஜனநாயக கட்சியின் ஸ்டீபன் டக்ளஸ் நின்றார். மிகச் சிறந்த பேச்சாளரான அவர், கான்சாஸ்- நெப்ராஸ்கா சட்டத்தை இயற்றியவர்களில் முக்கியமானவர். தனக்கு எதிராக டக்ளஸ் நிறுத்தப்படுகிறார் என்று தெரிந்தவுடன், அவருடன் பொது வெளியில் விவாதம் செய்ய அழைத்தார் லிங்கன். டக்ளசும் ஒத்துக்கொண்டார்.
மொத்தம் ஏழு இடங்களில், பொது இடத்தில் இருவரும் விவாதம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இருவரும் 90 நிமிடங்கள் பேசலாம். இந்த விவாதங்கள் தேசிய அளவில் பெரிதாகப் பேசப்பட்டன. லிங்கனுக்கு இவை பெரும் புகழையும் குடியரசுக் கட்சிக்கு நிறைய உறுப்பினர்களையும் கொடுத்தது.

இந்த விவாதங்கள் அனைத்தும் அடிமை முறை குறித்ததாகவே இருந்தன. லிங்கன் அடிமை முறையைப் புதிய மாநிலங்களுக்கும், பிரதேசங்களுக்கும் பரப்புவதை எதிர்ப்பதாகவும், ஆனால் அது இருக்கும் இடங்களில் ஒழிப்பதற்கு விரும்பவில்லை என்றும் கூறினார். அருகில் இருந்த மாநிலங்களில் இருந்தெல்லாம் விவாதங்களைக் கேட்க மக்கள் வந்து குவிந்தனர். ஸ்டீபன் டக்ளஸ் நன்றாகப் பேசினாலும், அவரை லிங்கன் ஓரங்கட்டினார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், தேர்தலில் லிங்கன் தோல்வி அடைந்தார். அந்த வருடத் தேர்தல் பரப்புரையில் அவர், தனக்காகவும் மற்ற வேட்பாளர்களுக்காகவும் 4000 மைல்களுக்கு மேல் பயணம் செய்து வாக்கு சேகரித்தார். நூற்றுக்கணக்கான இடங்களில் பேசினார். தேர்தல் முடிந்தபோது, பல மாநிலங்களிலும் அவரது பெயரில் சங்கங்கள் தோன்றின. அவரது ஆதரவாளர்கள் வட மாநிலங்கள் அனைத்திலும் இருந்தார்கள். அவரது தேசிய லட்சியம் சற்றே நெருங்கி வந்தது போலிருந்தது.
1860 ஜனவரி மாதம் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக லிங்கன் அறிவித்தார். ஆனால் நியூ யார்க் மாநிலத்தைச் சேர்ந்த வில்லியம் சீவர்ட் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியும் தன்னுடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தெற்கு கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் கூடுவதாக அறிவித்தது.
ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஸ்டீபன் டக்ளஸ் தேர்தலில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநாட்டின் போது சார்லஸ்டன் நகரமே குழப்பத்தில் மூழ்கியது. ஸ்டீபன் டக்ளஸ் புதிய மாநிலங்களுக்கு அடிமைமுறையைப் பெரும்பாலோர் நிராகரிக்கலாம் என்று கொண்டு வந்திருந்த கான்சாஸ்-நெப்ராஸ்கா சட்டத்தை, தென் மாநில ஜனநாயகக் கட்சியினர் பலமாக எதிர்த்தனர்.
எனவே தென் மாநிலங்கள் அனைத்தும் மாநாட்டில் இருந்து வெளியேற, எந்த முடிவும் எடுக்காமல் மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. இதுவே ஜனநாயகக் கட்சி உடைய காரணமானது. தென் மாநிலங்கள் சேர்ந்து ‘தென் மாநில ஜனநாயகக் கட்சி’ என்ற ஒன்றை உருவாக்கி, புதிதாக ஒருவரை வேட்பாளராக அறிவித்தனர். எனவே இருமுனைப் போட்டி, மும்முனை ஆனது. இது மட்டுமல்லாது, நான்காவது கட்சியாகப் புதிதாக ‘சட்ட சாசன ஒன்றிய கட்சி’ என்ற ஒன்று பழைய அரசியல்வாதிகள் சிலரால் தொடங்கப்பட்டது. அதன் சார்பாக ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்தக் குழப்பங்களுக்கு இடையே குடியரசுக் கட்சியின் மாநாடு சிகாகோவில் தொடங்கியது. லிங்கனுக்கும் சீவர்டுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவினாலும், லிங்கனின் சாதாரண வாழ்வும், பேச்சுத் திறமையும் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க வைத்தது.
அப்போதைய வழக்கத்தின்படி, வேட்பாளர்கள் நேரடியாகத் தேர்தல் பரப்புரை செய்வதில்லை என்பதால், லிங்கன் இலினொயிலேயே தங்கியிருந்தார். ஆனால் குடியரசுக் கட்சியின் எந்திரம் மிகவும் வேகமாக இயங்கியது. எல்லா இடங்களிலும் லிங்கனின் படம் இருந்தது, பிரசாரமும் அவரது தொண்டர்களால் நடத்தப்பட்டது. லிங்கனின் எளிய பின்புலம் பலமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர் மரம் வெட்டுவது போன்ற படம், அனைவரிடமும் லிங்கனின் எளிமையைக் கொண்டுசென்று சேர்த்தது. அவரது பேச்சுக்கள் துண்டு பிரசுரங்களாகப் பரப்பப்பட்டன. பரப்புரை செய்வதில் இந்தத் தேர்தல் ஒரு மைல்கல்லாக இருந்தது.
ஆனால் 11 தென் மாநிலங்களில், பத்தில் லிங்கனின் பெயர் வாக்கு சீட்டிலேயே சேர்க்கப்படவில்லை. விர்ஜினியாவில் மட்டுமே அவரது பெயர் வாக்குச்சீட்டில் இருந்தது.
6 நவம்பர் 1860 அன்று தேர்தல் நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே, அனைத்து தென் மாநிலங்களிலும் லிங்கன் தோல்வியடைந்தார். ஆனால், எதிர்பார்த்ததற்கும் அதிகமாக அனைத்து வடமாநிலங்களிலும் வெற்றியடைந்தார். நான்கு முனை போட்டியில் 40 சதவிகிதத்தை வென்று, அடுத்தக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போதையவழக்கப்படி, 1861 மார்ச் மாதமே அவர் பதவியேற்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பே, தெற்கு பற்றியெரிய ஆரம்பித்தது.
(தொடரும்)
ஆதாரம்
1. லிங்கன் – டக்லஸ் விவாதங்கள் -https://www.bartleby.com/251/
2. With Malice Toward None : A Biography of Abraham Lincoln, Stephen B. Oates
3. Threads From The National Tapestry: Stories From The American Civil War – Podcast – Available in Amazon Music, Google podcasts, Spotify and more.