Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #8 – உடைந்தது ஒன்றியம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #8 – உடைந்தது ஒன்றியம்

உடைந்தது ஒன்றியம்

தனிக்குடியரசாக இருப்பதற்குத் தெற்கு கரோலினா மிகவும் சிறியதாக இருக்கிறது; பைத்தியக்கார விடுதியாக இருப்பதற்கு மிகவும் பெரியதாக இருக்கிறது.
– ஜேம்ஸ் எல். பெடிகிரு

தேர்தல் பரப்புரைகள் எல்லாம் நடந்து கொண்டிருந்த போது, கான்சாஸ் பற்றியெறிந்துகொண்டிருந்தது. அடிமை முறையை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் செய்த வன்முறையில் கொலைகளும், கொள்ளைகளும், பாலியல் பலாத்காரங்களும் நித்தமும் நடந்து கொண்டிருந்தன. அங்கே அடிமை முறையை எதிர்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஜான் பிரௌன்.

ஜான் பிரௌனுக்கு ஓர் அருமையான திட்டம் தோன்றியது. விர்ஜினியாவில் ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி என்ற இடத்தில் இருந்த ராணுவ ஆயுதக் கிடங்கைத் தாக்கி, அங்கிருக்கும் ஆயுதங்களை எடுத்து தென் மாநிலங்களில் இருக்கும் அடிமைகளுக்குக் கொடுத்து புரட்சியை உண்டாக்குவது. 1859ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரியைத் தன் ஆட்களுடன் தாக்கினார். ஆனால் திட்டம் தோல்வியடைந்தது. ஜான் பிரௌன் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

0

மேரி செஸ்ட்நட், தெற்கு கரோலினாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் மகள். தெற்கு கரோலினாவின் ஆளுநராகவும் செனட்டராகவும் இருந்தவர். மேரியின் கணவர், ஜேம்ஸ் செஸ்ட்நட், தெற்கு கரோலினாவில் பல பெரும் தோட்டங்களுக்கு உரிமையாளர். அவரும் அரசியலில் ஈடுபட்டு, அமெரிக்க செனட்டராகவும் பல பொறுப்புகளிலும் இருந்தவர். அவர்கள் தோட்டங்களில் 1000 அடிமைகளுக்கு மேல் இருந்தார்கள்.

மேரி செஸ்ட்நட் தினக்குறிப்புகள் எழுதும் பழக்கம் உடையவர். லிங்கனின் வெற்றிக்குப் பின்னர் அவர் எழுதிய குறிப்புக்கள் தென் மாநிலங்களின் நிலையையும் அரசியலையும் தெளிவாகக் கூறுகிறது. அவரது குறிப்புகளில் முதலாவது குறிப்பு கீழே.

சார்லஸ்டன், தெற்கு கரோலினா, நவம்பர் 8, 1860 : நேற்று ரயிலில் வந்து கொண்டிருந்த போது, பெர்னாண்டினாவை நெருங்கும்போது, ஒரு பெண் ‘எல்லாம் முடிவாகிவிட்டது’ என்று கூவினாள். டானி என் தோளைத் தட்டி, ‘லிங்கன் வெற்றி பெற்றுவிட்டார்’ என்றாள். ‘உனக்கெப்படித் தெரியும்?’. ‘அங்கே இருப்பவரிடம் தந்தி இருக்கிறது.’

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களைவிடச் சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட ஒருவர், எழுந்து, நம்பிக்கையிழந்த குரலில், ‘பகடை உருட்டப்பட்டுவிட்டது. வருத்தப்பட எதுவுமில்லை. இது வாழ்வா, சாவா போராட்டம்’.

‘நினைத்தாவது பார்த்தோமா!’ என்பதுதான் அனைவரும் சொல்லிக்கொண்டிருந்தது. அப்போது யாரோ, ‘அதிகாரம் இப்போது கறுப்புக் குடியரசு கட்சியிடம், ஜான் பிரௌன் நினைத்தது நடக்கப் போகிறது!’ சந்தேகமேயில்லை.

எனக்குப் பிடித்த மாதிரியாக நான் ஒரு நாட்குறிப்புப் புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் முக்கியத் தேதிகள், ஒரு வரிக் கவிதை அல்லது பழமொழிகள், என் கடிதங்கள், தாள்களில் இருக்கும் செய்திகள் போன்றவற்றைக் குறித்து வைப்பேன். இன்றிலிருந்து நான் பார்ப்பதை என் கதையாகச் சொல்லப் போகிறேன். கடந்த இரண்டு வருடங்களில் நடந்த மகிழ்ச்சியான பல நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவை எல்லாம் முடிந்து, இப்போதைய நிகழ்வுகள் வாழ்வை நிரப்பிவிட்டன. நாட்குறிப்பில் பெண்கள் எழுதுவது போல, ‘வழக்கம் போல நிலநடுக்கம்!’ – தினசரி அதிர்ச்சிகள்.

பெர்னாண்டினாவில் சில இளைஞர்கள் ஓடிப்போய், நமது விசிறி பனை கொடியை ஏற்றிக்கொண்டே, கொஞ்சம் அவசரத்துடன், ‘தெற்கு கரோலினா பிரிந்துவிட்டது!’ என்று கத்தினார்கள். புளோரிடா மாநிலத்தவரும் நம்மை ஆதரிக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் டானிதான்  ‘அவர்கள் அனைவரும் தெற்கு கரோலினா இளைஞர்கள்’ என்று கூறினாள்.

0

ஜனநாயகக் கட்சியை உடைத்து, குடியரசுத் தலைவர் போட்டியை மும்முனைப் போட்டியாக மாற்றுவதன்மூலம், லிங்கனின் வெற்றி எளிதாகும் என்பது தென் மாநிலங்களுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால், எதற்காகக் கட்சியை உடைக்கவேண்டும்? அப்படியென்றால் தென் மாநிலங்கள் பிரிந்து செல்வதற்குத் தயாராக இருந்தனவா? இது போன்ற கேள்விகள் எழுவதுண்டு. இதில் எதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில், இது எந்த இடம் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கிடையே வேறுபாடு உண்டு, தென் மாநிலங்கள் பிரிந்து செல்வதற்குத் தயாராகிவிட்டன என்பது மட்டும் தெரிகிறது.

1860ஆம் வருடம் லிங்கனின் வெற்றி மேரி செஸ்ட்நட் சொன்னது போன்ற எதிர்வினையையே கொண்டு வந்தது. தென் மாநிலங்களில் ஒருவிதமான நிம்மதியை இது கொண்டு வந்தது என்று சொல்லலாம். இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவிற்கு இந்த மாநிலங்கள் வந்துவிட்டன. இதற்கான முதல் அடி, தெற்கு கரோலினாவால் எடுத்து வைக்கப்பட்டது.

அதற்கு முன்பு அமெரிக்கச் சட்ட சாசனம் மாநிலங்கள் பிரிந்து செல்வதைப் பற்றி என்ன சொல்கிறது? ஜேம்ஸ் மாடிசன், அமெரிக்கச் சட்ட சாசனத்தை ஜெபர்சனுடன் இணைந்து எழுதியவர்களில் ஒருவர். குடியரசுத் தலைவராக இருந்த சமயம் இது போன்ற பேச்சு கிளம்பியபோது, அமெரிக்காவின் அரசியல் சட்ட சாசனம் மாநிலங்கள் பிரிவதை ஒப்புக்கொள்வதில்லை என்று தெளிவுபடுத்தினார். அப்படியென்றால், புரட்சி என்பது என்ன என்ற கேள்விக்கு, ‘தாங்கமுடியாத கொடுங்கோன்மை’ இருக்கும் இடத்தில், புரட்சியும், பிரிவினையும் சரியே என்றும், அப்படித் தெளிவாக இல்லாத இடத்தில், பிரிவினையை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சொன்னார்.

1832இல் ஒன்றிய அரசு விதித்த வரிகள் தன்னுடைய மாநிலத்தைப் பாதிப்பதாக முறையிட்ட தெற்கு கரோலினா, வரிகளை ரத்து செய்ததோடு, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது என்றும் சட்டமியற்றியது. இது அரசியல் சாசனத்திற்கு நேரெதிரானது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆண்ட்ரூ ஜாக்சன், ஒடுக்குமுறைக்கு மாற்றாகப் பிரிவினையை நியாயப்படுத்தலாம் என்றாலும், அதைச் சட்ட சாசன உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

தெற்கு கரோலினா, தன்னுடைய மாநில உரிமைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதில் முதலில் இருந்தே உறுதியாக இருந்தது. அடிமை முறையையும் அப்படியே பார்த்தது. அடிமை முறை சட்டபூர்வமானதா என்று முடிவு செய்யவேண்டியது மாநிலங்கள் என்றும், ஒன்றிய அரசிற்கு அதில் தலையிட உரிமையில்லை என்றும் கூறியது. எனவே அடிமை முறையை ஒழிப்பதாக உருவான குடியரசு கட்சியை அந்த மாநிலம் சந்தேகக் கண்ணுடன் பார்த்தது.

அதன் வேட்பாளரான லிங்கனின் வெற்றி, அந்த மாநிலத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது. பிரிவினை தவிர்க்கமுடியததாகப் பார்க்கப்பட்டது. எப்படிப் பிரிவது என்ற பேச்சுக்கள் ஆரம்பித்தன.

தெற்கு கரோலினா முழுவதும் பிரிவினைக்கு ஆதரவான பிரசாரங்களும் கூட்டங்களும் நடக்க ஆரம்பித்தன. துண்டுப் பிரசுரங்கள் ஆயிரக்கணக்கில் கொடுக்கப்பட்டது. தெற்கு கரோலினாவின் இரண்டு செனட்டர்களும் தங்களது பதவியைத் துறந்தார்கள். இன்னமும் சிலர் ஒன்றியத்துடன் சேர்ந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறினாலும், அவர்களது குரல் மூழ்கிப் போனது.

ஒன்றிய நீதிமன்றங்களுக்குத் தெற்கு கரோலினாவில் எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 20 டிசம்பர் 1860 அன்று தெற்கு கரோலினாவின் பிரிவினை குறித்த கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தில் இருந்து பிரிந்துவிடுவது என்ற முடிவு எட்டப்பட்டு அது அறிவிக்கவும் பட்டது.

இன்று வரை வெள்ளைக் கூட்டமைப்பின் கொடி இதுதான். இன்றுவரை வெள்ளை இனவெறியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

முன்பே சொன்னபடி, லிங்கன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர் 4 மார்ச் 1861 அன்றே பதவி ஏற்க இருந்தார். அதுவரை, அப்போதைய குடியரசுத் தலைவரான ஜேம்ஸ் புக்கானன் என்பவர் தொடர்ந்தார். இவர் தெற்கின் மீது அனுதாபம் கொண்டவர் மட்டுமல்லாது, பிரிவினை குறித்தோ அல்லது வேறு எந்தப் பிரச்னை குறித்தோ இந்த நேரத்தில் எந்த நடவடிக்கை எடுக்கவும் முயலவில்லை.

லிங்கனோ, வட மாநிலங்களோ தெற்கு கரோலினாவின் இந்த நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் லிங்கனின் தேர்வு சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும், அது நேரடியாகப் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்று நினைக்கவில்லை. பதவியேற்பதற்கு முன்பே லிங்கன், தனக்கு முன்னே இருக்கும் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நேரத்தில் அவரால் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவும் முடியாது என்பதால், அவர் தன்னுடைய கட்சி தலைவர்கள் மூலமாகக் கருத்தை தெரிவித்துக்கொண்டிருந்தார்.

ஆனால், பேசுவதற்கான காலம் முடிந்துவிட்டது. தென் மாநிலங்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டன. தெற்கு கரோலினாவின் முடிவு வெறும் ஆரம்பமே. அதைத் தொடர்ந்து, ஜனவரி, 1861இல் அடுத்தடுத்து மிஸ்ஸிஸிப்பி, புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா, லூசியானா முதலிய மாநிலங்கள் தாங்களும் பிரிந்து செல்வதாக அறிவித்தன. 1 பிப்ரவரி 1861 அன்று டெக்சாஸ் மாநிலமும் பிரிவதாக அறிவித்தது.

பிரிந்த மாநிலங்கள் அனைத்தும் தங்களது பிரதிநிதிகளை அலபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரி நகருக்கு அனுப்பி, அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பேச ஆரம்பித்தார்கள். அங்கே அவர்கள் பிரிந்த மாநிலங்கள் இணைந்து ‘அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு’ (Confederate States of America) என்று பெயரிட்டு, தனி நாடாக அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இவர்கள் இடைக்கால அரசாக ஒன்றையும், அதற்கு ஒரு குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து சபைகளையும் நிர்மாணிப்பது என்றும் முடிவு செய்தனர். பிப்ரவரி 18, 1861 அன்று ஜெபர்சன் டேவிஸ், கூட்டமைப்பின் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருடன் ஒரு அமைச்சரவையும் பதவியேற்றது.

ஜெபர்சன் டேவிஸ்
ஜெபர்சன் டேவிஸ்

அதற்கு அடுத்த மாதத்தில் விர்ஜினியா, அர்கன்சாஸ், டென்னஸி மற்றும் வடக்கு கரோலினா மாநிலங்களும் பிரிந்தன. கூட்டமைப்பின் தலைநகராக விர்ஜினியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஜெபர்சன் டேவிஸ் பதவி ஏற்றவுடன் 1,00,000 போர் வீரர்களுடன் தங்களுக்கு என ஒரு ராணுவத்தை உருவாக்க அறிவிப்பு செய்தார். ஆனாலும் தென் மாநிலங்களில், போரின்றித் தங்களது பிரிவினையை வடக்கு மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வடக்கு மாநிலங்களிலும் இதே நம்பிக்கையுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் லிங்கன் வேறு கருத்துக் கொண்டிருந்தார்.

கூட்டமைப்பின் துணை குடியரசுத் தலைவரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் அப்போது கூறியது, கூட்டமைப்பின் கொள்கையைத் தெளிவாகக் கூறியது.
‘நம்முடைய அரசாங்கம் இதற்கு நேர்மாறான கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் அடித்தளம் ஒரு பெரிய உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதாவது கறுப்பர்கள் வெள்ளையர்களுக்குச் சரிசமம் கிடையாது என்பதுதான் அது. உயர்ந்த இனத்திடம்அடிமையாகஇருப்பதே அவர்களது இயற்கையான, சாதாரண உண்மைநிலை. உலக வரலாற்றில், நமது புதிய அரசாங்கம் மட்டுமே இந்தத் தத்துவ, தார்மிக, நேரடியான உண்மையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.’

தெற்கு கரோலினா 1860, டிசம்பர் 20ஆம் தேதி பிரிவினையை அறிவித்தவுடன், தங்களுடைய மாநிலங்களில் இருந்த ஒன்றிய சொத்துகள், பொருள்கள் அனைத்தையும் தங்களுடையவை என்று அறிவித்தது. கடற்கரைகளில் ராணுவ வீரர்கள் நிரம்பி இருக்கும் பெரிய கோட்டைகளும் இதில் அடங்கும். சார்லஸ்டன் நகரின் கடற்கரையைக் காத்து நின்று கொண்டிருந்த சம்டர் கோட்டையும் அதில் ஒன்று. முதல் நெருப்பு அங்கேதான் பற்ற வைக்கப்பட்டது.

(தொடரும்)

ஆதாரம்
1. A Diary From Dixie – Mary Chestnut
2. Battle Cry of Freedom: The Civil War Era, James McPherson.

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *