அதிருப்தியுடன் இருக்கும் என் நாட்டு மக்களே, உள்நாட்டுப் போர் வேண்டுமா என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் முதலில் தாக்குதலைத் தொடுக்காமல் போர் ஏற்படாது. இந்த அரசாங்கத்தை ஒழிப்பதாக நீங்கள் எந்த வாக்கும் கொடுக்கவில்லை. ஆனால் நான் இதை ‘பாதுகாத்து, காப்பாற்றி, அப்படியே வைத்திருப்பதாக’ உறுதி எடுத்திருக்கிறேன்.
– ஆபிரகாம் லிங்கன், முதல் பதவியேற்பின்போது.
ஆலன் பின்கர்ட்டன் (Allan Pinkerton) என்பவர் அமெரிக்காவில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்தவர். அன்றைய அமெரிக்க அரசாங்கத்தில் தனியாக உளவுப்பிரிவு இல்லை. மாறாக, தேவைகளுக்கு ஏற்ப அரசாங்கமே பின்கர்ட்டனின் நிறுவனத்தை உபயோகித்துக் கொள்ளும். உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், பின்கர்ட்டனும் அவரது நிறுவனத்தின் உளவாளிகளும் பல வேலைகளுக்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.
மாநிலக் கூட்டமைப்பின் போர் வீரரைப் போல உடையணிந்து, பின்கர்ட்டன் பல தென்மாநிலங்களுக்குச் சென்று உளவறிந்து கொண்டிருந்தார். இந்நிலையில், லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க வாஷிங்டன் வரும்போது, பால்டிமோர் நகர ரயில் நிலையத்தில் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்படுவதாக அவருக்குத் தெரிய வந்தது.
0
லிங்கனின் தேர்தல் வெற்றி பற்றிய செய்தி வந்தபொழுது, லிங்கன் இலினொய் மாநிலத்தில் இருக்கும் ஸ்ப்ரிங்பீல்ட் நகரில் இருந்தார். வெற்றி அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், தென் மாநிலங்களில் அவர் பெற்றிருந்த வாக்குகள், வரப்போகும் பிரச்சினைகளை அவருக்குத் தெரிவித்தன. அவர் பதவியேற்கும்வரை எதுவும் கருத்து சொல்ல முடியாது என்றாலும், அவர் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
குறிப்பாக, சமரசம் என்ற பெயரில் தென்மாநிலங்களுக்கு அதிகமாக அதிகாரத்தைக் கொடுக்கும் முயற்சிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். செனட்டர் கிரிட்டெண்டென், சமரச முயற்சியாகக் கொண்டு வந்த ஆறு சட்ட திருத்த மசோதாக்களையும் நான்கு தீர்மானங்களையும் குடியரசுக் கட்சி உறுதியாக நிராகரித்ததில் லிங்கனின் பங்கு பெரியது.
ஆனாலும் சமரச முயற்சிகள் நிற்கவில்லை. தெற்கு கரோலினா பிரிந்து செல்வதாக அறிவித்த பின்னர், அவை இன்னமும் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. மேற்சொன்ன சமரசமே பல்வேறு விதங்களில் அமெரிக்கக் காங்கிரஸின் முன் வைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குடியரசுக் கட்சி அவற்றை நிராகரித்தது. மேலும் மேலும் தென் மாநிலங்கள் பிரியவே, இன்னமும் உத்வேகத்துடன் முயற்சிகள் நடந்தன.
பிப்ரவரி 1861இல், 100க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல்வாதிகள் அமைதி மாநாட்டை நடத்தினார்கள். வாஷிங்டன் நகரத்தில் நடத்தப்பட்ட மாநாட்டை, ஏற்கெனவே பிரிந்துவிட்ட ஏழு மாநிலங்களும் புறக்கணித்தன. அங்குப் பேசப்பட்ட சமரசங்களில், அடிமை முறையை அப்படியே தொடரும்படியான நிபந்தனைகள் இருந்ததால், குடியரசுக் கட்சியும் அதை நிராகரித்தது. மூன்று நாட்கள் கூடிய மாநாடு, எந்த முடிவும் எடுக்க முடியாமலேயே முடிந்து போனது.
இந்த நிலையில், லிங்கன் தன்னுடைய பதவியேற்பு விழாவிற்குச் செல்ல பிப்ரவரி 11, 1861 அன்று ஸ்ப்ரிங்பீல்ட் நகரில், அவருக்கான சிறப்பு ரயிலில் ஏறினார். அவருக்குச் சிறந்த முறையில் பிரிவு உபசார விழா கொடுக்கப்பட்டது. அங்கிருந்து மெதுவாக, வட மாநிலங்கள் வழியாக, 3200 கிலோ மீட்டர்களை ரயிலில் கடந்து, 93 நிலையங்களில் மக்களைச் சந்தித்தபடியே செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
0
தேர்தலில் வெற்றி பெற்ற அன்றிரவே லிங்கன் தன்னுடைய அமைச்சரவையில் யார் யார் இருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தங்களது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு முதலில் வாய்ப்பு தருவதே வழக்கம். ஆனால் லிங்கனின் சிந்தனை வேறாக இருந்தது.
குடியரசுக் கட்சியின் கொள்கை ஒன்றாக இருந்தாலும், அதன் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக இருந்தார்கள். அந்தக் கொள்கையை (அடிமை முறை ஒழிப்பு) எப்படி நிறைவேற்றுவது, எப்போது நிறைவேற்றுவது என்பதில் எல்லாம் நிறையக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அத்தோடு எல்லை மாநிலங்கள், தென் மாநிலங்களை எப்படிச் சமாளிப்பன என்பதிலும் பல்வேறு நிலைப்பாடுகள் இருந்தன.
முதல் குடியரசுத் தலைவர் தேர்தலை வென்றிருப்பதால், இந்தத் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் அழுத்தம் வரும் என்று லிங்கன் எதிர்பார்த்தார். அவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்து, அரசை நடத்துவது எப்படி என்பதே அவரது சிந்தனையாக இருந்தது.
எனவே தன்னுடைய அமைச்சரவையில், தன்னிடம் இருந்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களை நியமிக்க முற்பட்டார். முதலாவதாக, குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்தலில், அவரை எதிர்த்து நின்ற வில்லியம் சீவர்ட்டை, தன்னுடைய முதன்மை அமைச்சராக நியமித்தார். இந்தப் பதவியில் இருப்பவரே அரசின் வெளியுறவுக் கொள்கைகளை வரையறுத்து, அதைச் செயல்படுத்துபவர். அரசின் மிகவும் உயர்ந்த இந்தப் பதவியில் சீவர்டை நியமித்தார்.
சீவர்ட் முதலில் சிறிது தயங்கினாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். பிற்போக்கான மேற்கு மாநிலத்தின் கிராமத்துப் பகுதியில் இருந்து வரும் ஒருவரைத் தன்னுடைய கைப்பாவையாக வைத்துக் கொள்ளலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. லிங்கன் பெயருக்குக் குடியரசுத் தலைவராக இருந்தாலும், தன்னுடைய வழிகாட்டுதலில் அரசை நடத்தலாம் என்றும் நினைத்தார். எனவே, பதவியை ஒப்புக்கொண்டார்.
அடுத்து நிதி அமைச்சராக, சால்மன் சேஸை (Salmon P. Chase) நியமித்தார். சேஸ், சீவர்டின் நேரடி அரசியல் எதிரி. அவர்கள் இருவரும் அடிமை முறையைப் பொறுத்தவரை, எதிர் துருவங்களாகக் கருத்துகள் கொண்டிருந்தனர். சீவர்ட் சற்றுப் பழைமைவாதியாக, அடிமைமுறையை மெதுவாகவே ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். சேஸ், அதற்கு நேர்மாறாக, அடிமைமுறையை எந்தச் சமரசமும் மேற்கொள்ளாது ஒழித்துக்கட்ட வேண்டும் என்பவர். சீவர்ட் இவரை நியமிப்பதை எதிர்த்தாலும், லிங்கன் அதற்குச் செவி சாய்க்கவில்லை.
அடுத்து எல்லை மாநிலங்களுக்குரிய பிரதிநித்துவம் கொடுக்க, மேரிலாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மான்ட்கமரி பிளேயரை (Montgomery Blair) தபால் தந்தித் துறைக்கும், அரசின் தலைமை வழக்குரைஞராக, மிசூரி மாநிலத்தைச் சேர்ந்த எட்வர்ட் பேட்ஸையும் (Edward Bates) நியமித்தார்.
போரை நடத்த சைமன் கேமரூன் (Simon Cameron) என்பவரை நியமித்தார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த இவர், பெரும் ஊழல்வாதி. ஒருவேளை போர் நிகழாது என்ற நம்பிக்கையில் இவர் நியமிக்கப்பட்டாரோ, என்னவோ. ஆனால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முதல் நபராக இருந்தார்.
இறுதியாக, கப்பற் படைகளுக்குக் கிதியோன்வெல்ஸ் (Gideon Welles) மற்றும் உள்துறைக்கு காலேப் ஸ்மித் (Caleb Smith) ஆகியோரை நியமித்தார்.
இப்படியாக, தன்னுடைய அரசியல் எதிரிகளையும், அவர்களது அரசியல் எதிரிகளையும் ஒரே அமைச்சரவையில் நியமித்ததன்மூலம், அவரது அமைச்சரவைக் கூட்டங்கள் எப்போதும் சுவாரசியமாக இருக்கும் என்பதை உறுதி செய்து கொண்டார். உண்மையில், லிங்கனின் இந்த முடிவு அவருக்கு அமைச்சரவையில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலிருந்தும் ஆதரவு பெற்றுத் தந்தது.
0
1856ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தேர்தலின்போது, இரண்டு வேட்பாளர்களையும் கண்டு மனம் நொந்த, அமெரிக்காவின் பெரும் கவிஞரான வால்ட் விட்மன் வருத்தத்துடன் ஒரு கட்டுரை எழுதினார். அதில் நாட்டிற்குச் சரியான குடியரசுத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிட்டார்.
கட்சியின் பிரதிநிதியாக இல்லாமல், மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து, விடுதலைப் பிரகடனத்திலும் அரசியல் சட்ட சாசனத்திலும் சொல்லியுள்ளபடி அரசை நடத்த வேண்டும். உலகை அறிந்தவராக, முன்னின்று காரியங்களை நடத்துபவராக, அறிவுக்கூர்மையுடன் இருக்கவேண்டும் என்று சொல்பவர், அதன் பின்னர் தலைவர் எப்படி இருப்பார் என்பதையும் விவரிக்கிறார்.
விட்மனின் ஆதர்ச குடியரசு தலைவர், மேற்கில் இருந்து வருவார், உயரமாக, தாடியுடன் இருப்பார். மலைகளை நடந்தே தாண்டக்கூடியவர். தொழிலாளர்கள் போன்று ஆடை அணிந்திருப்பார். படகுகளை ஓட்ட கூடியவராகவோ, கருமான் போன்ற தொழில் செய்பவராகவோ இருப்பார் என்றும் தெரிவிக்கிறார்.
விட்மன் இதை எழுதும் போது, லிங்கன் மாநில அளவிலான அரசியல்வாதியாகவே இருந்தார். நியூ யார்க்கில் இருந்த விட்மனுக்கு அவரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. விட்மனின் தீர்க்கதரிசனம் என்றழைக்கப்படும் இந்தக் கட்டுரை, பின்னாளில் விட்மன், லிங்கனை ஆராதனை செய்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கிறது.
0
தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன் லிங்கனிற்கு ஒரு கடிதம் வருகிறது. நியூ யார்க் மாநிலத்தில் இருந்து கிரேஸ் பெடல் (Grace Bedell) என்ற 11 வயது சிறுமி அவருக்கு எழுதுகிறாள். அவரது முகம் சதைப்பற்று இல்லாமல் எலும்புகளுடன் இருப்பதால், அவர் முகத்தில் தாடி வளர்க்கவேண்டும் என்று தெரிவிக்கிறாள். லிங்கன் அவளது அறிவுரைக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதினாலும், தாடியை பற்றி எதுவும் சொல்லவில்லை.
ஆனால், அடுத்த ஒரு மாதத்திலேயே அவரது தாடி வளர்ந்துவிட்டது.
0
ஆபிரகாம் லிங்கனின் ரயில் பயணம் மெதுவாகத் துவங்கியது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அவரைப் பார்ப்பதற்கும், அவர் பேசுவதைக் கேட்பதற்கும் மக்கள் குழுமி இருந்தார்கள். இந்தக் கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் பெரிதாகிக்கொண்டே சென்றது.
ஆனால் லிங்கன் எல்லா நிலையங்களிலும் பேசவில்லை. அவர் பேசிய இடங்களிலும் மிகவும் பொதுவாகவும், மிகவும் கவனத்துடனும் பேசினார். பிரிவினை என்பது உண்மையாகிவிட்ட நிலையில், தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை ரகசியமாகவே வைத்திருந்தார். தென் மாநிலங்களுக்கு அமைதி கரத்தை நீட்டினாலும், அவர் எப்படி அடிமை முறையைச் சமாளிப்பார் என்பதை வெளிப்படையாகப் பேசவில்லை.
ஆனால் வழியில் கூடியிருந்த மக்களின் கூட்டம் அவருக்கு நம்பிக்கை அளித்தது. ஒன்றியத்தைப் பிரியவிடாமல் காப்பது தன்னுடைய கடமை என்று நம்பினார். பிட்ஸ்பர்க் நகரில் அவரைப் பார்க்க 2,50,000 பேர் கூடியிருந்தார்கள்.
பிப்ரவரி 16ம் தேதி அவரது ரயில் நியூ யார்க் மாநிலத்தில் வெஸ்ட்பீல்ட் நகரை வந்தடைகிறது. அங்கே ரயில் நிலையத்தில் பேசிய லிங்கன், மூன்று மாதங்களுக்கு முந்தைய கடிதத்தை நினைகூர்ந்தார். அதை எழுதிய சிறுமி அங்கிருக்கிறாளா என்று கேட்கிறார். அவளும் அங்கிருக்க, சந்திப்பு நடைபெற்றது.
பிப்ரவரி 19ம் தேதி ரயில் நியூ யார்க் நகரத்தை வந்தடைகிறது. அங்கே நிலையத்தில் கூடி இருப்பவர்களில் ஒருவராக வால்ட் விட்மன் நின்று கொண்டிருக்கிறார். அவர் என்ன கண்டார் என்பதை அவரே சொல்கிறார்.
‘முதல் முறை நான் ஆபிரகாம் லிங்கனைப் பார்த்ததை மறக்கமுடியாது… அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டி ஒன்றின் மீதிருந்து (கூட்டத்திற்கு நடுவே, மிக அருகில்) நான் நன்றாகப் பார்க்க முடிந்தது. குறிப்பாக லிங்கனை. அவரது தோற்றம் மற்றும் நடை; அவரது சரியான முகபாவம் மற்றும் அமைதி; அவரது அசாதாரணமான, முரட்டுத்தனமான உயரம்; தலையில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருந்த அவரது தொப்பி; அடர் பழுப்பு நிறம்; எதற்கும் அஞ்சாத தையல்களும், சுருக்கங்களும் நிறைந்த முகம்; புதர் போன்ற அவரது கறுப்புத் தலைமுடி; நீண்ட கழுத்து; கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.’
விட்மன், லிங்கனைப் பல முறை பார்த்தாலும், அவரிடம் ஒருமுறைகூடப் பேசியதில்லை. ஆனாலும் அவரது ஆதர்ச குடியரசுத் தலைவரை நேரில் பார்த்த விட்மன், லிங்கனின் மரணத்திற்குப் பின்னரும், அவர் குறித்து கவிதைகளும் சொற்பொழிவுகளும் நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.
பிப்ரவரி 22ம் தேதி, பென்சில்வேனியா தலைநகரான ஹாரிஸ்பர்க் நகருக்கு வந்து சேர்ந்தார்.
0
பால்டிமோர் நகரில் இரண்டு ரயில் நிலையங்கள் இருந்தன. மேற்கில் இருந்து வந்த ரயில்கள் ஒரு நிலையத்தில் தங்கள் பயணத்தை முடித்தன. அங்கிருந்து வாஷிங்டன் செல்வதற்கு மற்றொரு ரயில் நிலையத்திற்கு, குதிரை வண்டியில் செல்ல வேண்டும்.
பின்கர்ட்டனிற்கு வந்திருந்த தகவலின்படி, லிங்கன் அப்படிக் குதிரை வண்டியில் செல்வதற்கு மாறும்போது, கூட்டத்தில் பலரும் கத்தியுடன் பாய்ந்து அவரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிந்தது. எனவே, பின்கர்ட்டன் லிங்கனை ரகசியமாக அன்றிரவே பால்டிமோர் வழியே அனுப்பிவிட முடிவு செய்திருந்தார்.
மறைந்து கொண்டு, இரவில் திருடனைப்போல வாஷிங்டனிற்குச் செல்ல லிங்கனிற்கு விருப்பமில்லை. ஆனால் பென்சில்வேனியா ஆளுநரும் வற்புறுத்தவே, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். அன்றிரவே, யாருக்கும் தெரியாமல், லிங்கன் பால்டிமோரைக் கடந்து, வாஷிங்டன் சென்றடைந்தார். இரவு சீவர்டின் வீட்டில் தங்கினார்.
லிங்கனை எதிர்பார்த்து மறுநாள் பால்டிமோரில் கூடியவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். அப்போதுதான், முந்தைய தின இரவே லிங்கன் வாஷிங்டன் சென்றுவிட்டது அனைவருக்கும் தெரிய வந்தது.
பத்திரிகைகள் லிங்கனின் ‘கோழைத்தனத்தை’ வெகுவாக விமர்சித்து எழுதின. லிங்கன் அது குறித்து எதுவும் சொல்லவில்லை என்றாலும், உண்மையிலேயே கொலைத் திட்டம் இருந்ததா அல்லது வெறும் கற்பனையா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அன்றைய பத்திரிகைகள் லிங்கனை வெகுவாக விமரிசித்தன என்பது மட்டும் உண்மை.
வேறு எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் லிங்கனின் பதிவியேற்பு விழா முடிந்தது.
அதற்கு அடுத்த மாதத்திலேயே சம்டர் கோட்டையில் முதல் குண்டு வீசப்பட்டது.
லிங்கன் தன்னுடைய பதவியேற்பு உரையில், தான் முதலில் தாக்குதலை ஆரம்பிக்க மாட்டேன் என்றும், ஒன்றியக் கோட்டைகளை எந்தக் காரணம் கொண்டும் சண்டையின்றித் தர மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த இரண்டு உறுதிகளுக்கும் இடையே இருந்த வேறுபாட்டை அனைவரும் கவனிக்கவே செய்தனர்.
எனவே, இப்போது லிங்கன் போருக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போலில்லாமல், போர் வாஷிங்டனுக்கு வந்தது.
(தொடரும்)
ஆதாரம்
1. Team of Rivals: The Political Genius of Abraham Lincoln – Doris Kearns Goodwin
2. Life of Abraham Lincoln – W. Lamon