Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #11 – முதல் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #11 – முதல் போர்

புல் ரன்னில் நடந்த சண்டை

தினம் கறுப்புத் திங்கள் என்றழைக்கப்படும். நாம் பிரிவினைவாதிகளால் முழுமையாகவும், அவமானகரமாகவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம்.
– ஜார்ஜ் டெம்பிள்டன் ஸ்ட்ராங்

பிரிவினை என்பது மாநிலங்களின் எல்லையில் மட்டும் இருக்கவில்லை. மாநிலங்களும் மனிதர்களால் நிரம்பியவை என்பதை மறக்கக்கூடாது.

உதாரணமாக, லிங்கனின் மனைவியான மேரி டாட் லிங்கன், கென்டக்கி மாநிலத்தில் லெக்சிங்டன் நகரைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரின் மகள். அவரது குடும்பத்தினர் பல கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பிரிவினை உண்மையாக நடந்தவுடன், மேரி லிங்கனின் குடும்பத்தினர் மாநிலங்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவை தெரிவித்தனர். அப்போது உயிருடன் இருந்த அவரது சகோதர, சகோதரிகளில், எட்டு பேர் மாநில கூட்டமைப்பிற்கும், ஐந்து பேர் ஒன்றியத்திற்கும் ஆதரவு தெரிவித்தனர். நாட்டைப் போலவே பல வீடுகளும் பிளவு பட்டிருந்தன, நாட்டின் முதல் பெண்மணி உட்பட யாரும் விதிவிலக்கில்லை.

குடும்பங்கள் பிளவுபட்டதைப் போலவே, அமெரிக்க ராணுவமும் பிளவுபட்டது. மேலதிகாரிகளில் இருந்து கடைசிப் போர் வீரன் வரை, தாங்களது விசுவாசம் ஒன்றியத்திற்கா அல்லது தாங்கள் பிறந்து, வளர்ந்த மாநிலங்களுக்கா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்க ராணுவமும் இரண்டானது.

0

சம்டர் கோட்டை சரணடைந்தவுடன், போர் வருவது உறுதியாகிவிட்டது. அந்தச் செய்தி வடமாநிலங்களில் கோபத்தையும், நாட்டிற்கு எதாவது செய்ய வேண்டும் என்னும் உத்வேகத்தையும் உண்டாக்கியது.

ஆனால் ஆரம்ப நாட்களில் யாருக்கும் போருக்கு எப்படித் தயாராவது என்று தெரியவில்லை. அமெரிக்க முதன்மை ராணுவத் தளபதியான வின்பீல்ட் ஸ்காட்டின் ஆலோசனையை வெகுவாக நம்பியிருந்தாலும், லிங்கன் அவரது ஆலோசனையை மீறவும் தயங்கவில்லை.

வின்பீல்ட் ஸ்காட் நாட்டின் மிகவும் மூத்த ராணுவத் தளபதி. 74 வயதான அவர், உடல் பலத்தை இழந்திருந்தாலும், அவரது சிந்தனைகளும் திட்டங்களும் இன்னமும் பயனுள்ளவையாகவே இருந்தன. அன்றைய அமெரிக்க ராணுவத்தில் 16,000 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களிலும் பெரும்பாலோர் மேற்கெல்லையில் பாதுகாவல் பணியில் இருந்தார்கள். மாநிலங்கள் பிரிய ஆரம்பித்தவுடன், ராணுவத்தில் இருந்து விலகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. எனவே ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.

சம்டர் கோட்டையின் சரணாகதிக்குப் பின்னர், ஏப்ரல் 15, 1861 அன்று லிங்கன் ராணுவச் சேவைக்கு வரும்படி நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்கச் சட்டப்படி, நாடு ஆபத்தில் இருக்கும் காலங்களில், குடியரசுத் தலைவர் 75,000 வீரர்கள் வரை ராணுவத்தில் சேர்க்கலாம். ஆனால் அதுவும் தற்காலிகமாக 3 மாத காலங்களுக்கு மட்டுமே சேர்க்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட அளவு வீரர்களைக் கொடுக்கும்படியாகவும் கேட்கப்பட்டது.

லிங்கனின் அறைகூவலுக்குக் கிடைத்த பதில், நாட்டின் மனநிலையைக் காட்டியது. ஒவ்வொரு மாநிலத்திலும் கேட்கப்பட்டதற்கு மேலாகவே இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வந்தார்கள். கனெக்டிகட், மிசூரி, மாசாச்சூசெட்ஸ் மாநிலங்கள் தங்களிடம் கேட்கப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாகவே வீரர்களை அனுப்பினார்கள்.

ஆனால் எல்லை மாநிலங்கள் எதுவும் வீரர்களை அனுப்பவில்லை. மேலும் லிங்கனின் அறைகூவல், இன்னமும் சில மாநிலங்களைப் பிரிவினையை நோக்கி அனுப்பியது. லிங்கன் மாநில உரிமைகளைப் பறிக்க முயலுவதாகக் கூறி, ஏற்கெனவே பிரிந்து போயிருந்த ஏழு மாநிலங்களுடன், இப்போது விர்ஜினியா, அர்கன்சாஸ், டென்னிசி, வடக்கு கரோலினா முதலிய மாநிலங்களும் பிரிந்து சென்று, மாநிலக் கூட்டமைப்பில் சேருவதாக அறிவித்துவிட்டன. மற்ற எல்லை மாநிலங்களான டெலவர் மற்றும் மேரிலாண்ட் மாநிலங்கள், பிரிந்து செல்லவில்லை என்றாலும், ஒன்றியத்திற்கு வீரர்களை அனுப்பவில்லை. உண்மையில், இந்த மாநிலங்களைச் சேர்ந்த பலர் மாநிலக் கூட்டமைப்புப் படையில் சேர்ந்து போரிட்டனர்.

ஆனால் இப்படியாகச் சேர்ந்த எவரும் ராணுவ வீரர்களோ, அதற்கான பயிற்சி பெற்றவர்களோ இல்லை என்பதை உணர வேண்டும். அதிகபட்சமாக, இவர்களுக்குத் துப்பாக்கியால் சுடத் தெரிந்திருக்கலாம். அதைத் தாண்டி, ஒரு குழுவாகத் தாக்குவதோ, பாதுகாப்பதோ, முன்னேறுவதோ, பின் வாங்குவதோ எப்படி என்பது பற்றி எந்த அறிவோ பயிற்சியோ இல்லாதவர்கள்.

இந்த வீரர்களை வழிநடத்த பிரிகேடியர் ஜெனரல் இர்வின் மக்டவல் நியமிக்கப்பட்டார். ஆனால் இர்வின் அதுவரை ஒரு போரில் கூடப் பங்கு பெற்றதில்லை. அவருக்குக் கள அனுபவம் என்பது சிறிதும் இல்லை. அவரது மாநிலத்தைச் சேர்ந்த சால்மன் சேஸின் சிபாரிசின் பேரில் லிங்கன் இவரை நியமித்தார்.

தென் மாநிலக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வின்பீல்ட் ஸ்காட் ஒரு திட்டத்தைத் தயாரித்தார். முதலில் மிஸ்ஸிஸிப்பி நதியை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டியது. அதைத் தொடர்ந்து, தெற்கிலும், கிழக்கிலும் இருக்கும் தென் மாநில கூட்டமைப்பின் துறைமுகங்களை இயங்க விடாமல் செய்து, அவர்களது வர்த்தகத்தின் கழுத்தை நெறிப்பது.

அதன் பின்னர் அவர்களைத் தோற்கடிப்பது எளிதாகிவிடும் என்பதே திட்டம். இது ‘அனகோண்டா திட்டம்’ என்று அழைக்கப்பட்டு, பெரிதாகக் கேலி பேசப்பட்டது. வாஷிங்டனில் இருந்து கூட்டமைப்பின் தலைநகரான ரிச்மன்ட் 100 மைல் தொலைவில் இருந்தது. அதைக் கைப்பற்றினால் போர் முடிவுக்கு வந்துவிடும் என்பதே பொதுவான சிந்தனையாக இருந்தது. ஸ்காட் கூறிய திட்டத்தின்படி, 3 வருடங்களும் 3,00,000 வீரர்களும் தேவைப்படாது என்று கேலி பேசப்பட்டது.

எனவே ‘ரிச்மன்ட்டை நோக்கி’ என்பதே வடமாநிலங்களின் மந்திரமாக இருந்தது. எனவே புதிதாக மூன்று மாதத்திற்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பெரும் பகுதி, வாஷிங்டன் நகரின் தெற்கு பகுதியில் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியை, 18,000 வீரர்களை விர்ஜினியாவின் மேற்கு பகுதியில் இருந்த ஷெனான்டோவா பள்ளத்தாக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கிருந்த மாநிலக் கூட்டமைப்பின் படையை ரிச்மன்ட்டிற்கும்/ வாஷிங்டனிற்கும் வர விடாமல் தடுப்பதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. இன்னுமொரு 35,000 வீரர்கள் வாஷிங்டனிற்கு வெளியே தினமும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

0

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பயிற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அரசியல்வாதிகளிடம் இருந்தும், பத்திரிகைகளில் இருந்தும் ரிச்மன்ட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற குரலின் ஓசை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் ஒரு பெரிய சண்டை, அத்துடன் வெற்றியை அறிவித்துவிடத் தயாராக இருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வீரர்களின் மூன்று மாத ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. இன்னமும் தள்ளிப்போட முடியாது என்ற நிலை வந்தபோது, மக்டவல் தாக்குதலை முன்நடத்த வந்தார்.

தென்மாநிலக் கூட்டமைப்பின் படையை பி.ஜி.டி. போரெகார்ட் வழி நடத்திக்கொண்டிருந்தார். சம்டர் கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய அதே தளபதிதான். வட மாநிலங்களைப் போலவே சிறிதும் கள அனுபவம் இல்லாத படையை வழிநடத்தினாலும், போரெகார்ட் மிகுந்த கள அனுபவம் கொண்டவர். அத்துடன் அவருடன் இருந்த முதல் நிலை அதிகாரிகள், மிகுந்த தைரியமும், பல போர்களில் அனுபவமும் கொண்டவர்கள். எனவே, தங்களைவிட இன்னொரு மடங்கு பெரிய அமெரிக்க ஒன்றியத்தின் படையை எதிர்நோக்குவதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

கூட்டமைப்பின் படை, வாஷிங்டன் நகரில் இருந்து 30 மைல் தொலைவில் இருந்த மனாசஸ் நகரின் அருகே இருந்தது. ஒன்றியத்தின் படை தங்களை நோக்கி முன்னேறுகிறது என்று தெரிந்தவுடன், போரெகார்ட், தனது படையை அங்கிருந்த புல் ரன் (Bull Run) என்ற ஓடையின் மறுபுறத்தில் நிறுத்திக்கொண்டார். தனக்கு உதவி வேண்டும் என்று ஷெனான்டோவா பள்ளத்தாக்கில் இருந்த தளபதி ஜான்ஸ்டனின் படைக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தார்.

ஜூலை 21. காலை 2.30 மணிக்கு முதல் ஒன்றியப் படைகள், கூட்டமைப்பின் படைகளைச் சந்தித்தன. அடுத்து வரப்போகும் சண்டைகளில் என்ன நிகழப்போகிறது என்பதை எடுத்துக்காட்ட போகும் சண்டையாக இது இருந்தது. பெரும் குழப்பமும், பெருத்த உயிர்ச்சேதமும் கொண்ட சண்டையாக இருந்தது. மெதுவாக ஆரம்பித்த சண்டை, ஒவ்வொரு இடமாகப் பற்றிக்கொண்டிருந்தது. ஒன்றியப் படையின் ஒரு பகுதி ஓடையைக் கடந்து, போரெகார்ட்டை மேற்கில் இருந்து தாக்க ஆரம்பித்தது.

விடிய ஆரம்பித்தவுடன் மனாசஸ் சண்டை ஆரம்பித்துவிட்டது என்ற செய்தி வாஷிங்டன் நகரில் பரவ ஆரம்பித்தது. நகரின் முக்கியப் பிரமுகர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும், தங்கள் படைகள் மாநில கூட்டமைப்பைத் தோற்கடித்து, ரிச்மன்டை நோக்கிச் செல்வதைப் பார்க்க வேண்டி, மதிய உணவு, பழங்கள், அமர்ந்து பார்க்க நாற்காலிகள், வெற்றியைக் கொண்டாட நல்ல உடைகள் என்று ஆனந்தமாகப் பெரிய குதிரை வண்டிகளில் சண்டை நடக்கும் இடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

காலையில் சண்டை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அமெரிக்க ஒன்றியப படைகள் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தன. இரண்டு படைகளும் சீருடைகளில் இல்லை என்பதால், யார் எந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர் என்ற குழப்பங்கள் இருந்தன. பல இடங்களில் தங்களுடைய படையைச் சேர்ந்தவர்களையே சுடுவதும், எதிரிப்படையைத் தங்கள் படை என்று நினைத்து அருகில் வர அனுமதித்துச் சுடப்பட்டு இறப்பதும் சாதாரணமாக இருந்தது.

ஆனால் மதியத்திற்கு மேல், ஷெனான்டோவா பள்ளத்தாக்கில் இருந்த மாநிலக் கூட்டமைப்பின் படைகள் வந்து சேரவே, சண்டையின் போக்கு கூட்டமைப்பிற்குச் சாதகமாக மாறியது. தங்களது மேற்கில் இருந்து வந்த புதிய தாக்குதலால் நிலைகுலைந்த ஒன்றியப் படைகள் பின்வாங்கி ஓட்டம் பிடித்தன.

சுற்றுலாவாக வந்து, உணவை உண்டு கொண்டிருந்தவர்கள், தங்களது வீரர்கள் தவறான திசையில் ஓடிவந்து கொண்டிருப்பதைக் கண்டு, அப்படியே அனைத்தையும் போட்டுவிட்டு, குதிரைகளிலும், வண்டிகளிலும் ஏறி வாஷிங்டன் நகரை சென்றடைய முயன்றனர்.

தந்தி அலுவலகத்தில் வெற்றி செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த லிங்கன், தன்னுடைய படைகள் தோல்வியடைந்து வாஷிங்டன் நகரை நோக்கி வருகின்றன என்ற செய்தியைக் கேட்டு மனம் உடைந்தார். கூட்டமைப்பின் படைகளுக்கும் வாஷிங்டன் நகருக்கும் இடையில் பாதுகாவலுக்கு யாரும் இல்லை. இரவிலேயே கூட்டமைப்பின் படைகள் வாஷிங்டன் நகருக்குள் நுழைந்துவிடலாம் என்ற பயம் அனைவருக்கும் ஏற்பட்டது.

ஆனால் கூட்டமைப்பின் படைகளும் புதியவர்களால் நிரம்பியது என்பதை மறந்து விடக்கூடாது. எதிர்பாராமல் கிடைத்த வெற்றியால், வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள். அவர்களது தளபதிகள் பின்வாங்கி ஓடும் ஒன்றியப் படைகளைத் துரத்திச் செல்ல முயன்றாலும், அவர்களிடம் போதுமான வீரர்கள் இல்லை. கூட்டமைப்பு நல்ல வாய்ப்பை தவறவிட்டது. சண்டையில் வெற்றியுடன் மகிழ்ச்சி அடைந்துவிட்டது.

நடந்த சண்டையில் இரண்டு பக்கங்களும் சேர்ந்து 5000 வீரர்கள் இறந்தார்கள் அல்லது காயமடைந்தார்கள். அதுவரை அமெரிக்காவில் நடந்த போர்களிலேயே அதிகச் சேதம் ஏற்படுத்தியது இந்தப் பனிரெண்டு மணி நேரசண்டைதான். ஆனால் அடுத்து வரப்போகும் சண்டைகள் இதை எளிதாகக் கடந்துவிடும் என்பதை அப்போது எவரும் முழுவதாக உணரவில்லை.

புல் ரன்னில் நடந்த சண்டை, இரண்டு பக்கங்களுக்கும் ஒரு உண்மையை உணர்த்தியது. ஒரே சண்டையில் இந்தப் போர் முடியப் போவதில்லை. இரண்டு பக்கங்களும் நீண்ட போருக்கு தயாராக வேண்டியது அவசியம் என்பதுதான் அது. லிங்கன் உடனடியாக இன்னமும் 5,00,000 வீரர்கள் வேண்டும் என்று காங்கிரஸைச் சட்டமியற்றி, ஆணை பிறப்பிக்கச் சொன்னார். ஜெபர்சன்டேவிஸ், கூட்டமைப்பின் சார்பில் 4,00,000 வீரர்களைக் கேட்டு ஆணை பிறப்பித்தார்.

0

இந்தச் சண்டையில் போரிட்ட வீரர் ஒருவரின் கடிதத்தோடு இந்த அத்தியாயத்தை முடிக்கலாம்.

ரோட் ஐலாண்டைச் சேர்ந்த சல்லிவன் பால்லூ (Sullivan Ballou) ஒரு வக்கீல். லிங்கனின் அறைகூவலைக் கேட்டுப் படையில் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்ட சண்டைக்கு ஒரு வாரம் முன்பு அவரது மனைவிக்கு எழுதிய கடிதம், அவர் போர்க்களத்தில் நிற்பதன் நியாயத்தை மட்டுமல்லாது, போரின் இழப்புகள் போர்க் களத்தில் மட்டுமல்லாது, அதைத் தாண்டி பெண்கள், குழந்தைகள் என்றும் இருக்கிறது என்றும் கூறுகிறார். அவரது கடிதத்தில் எதிர்பார்த்தது போல, அவர் போர்க்களத்தில் மரணமடைந்துவிட்டார்.

அவரது கடிதத்தில் இருந்து சில பகுதிகள்.

தலைமையிடம். காம்ப் கிளார்க்.
வாஷிங்டன். ஜூலை 14, 1861.

என் அன்பான மனைவிக்கு,

இன்னமும் சில நாட்களில், ஏன் நாளையேகூட நாங்கள் போர்க்களத்திற்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

அமெரிக்கக் கலாச்சாரத்தின் வெற்றி நமது அரசாங்கத்தின் வெற்றியோடு கலந்து இருக்கிறது. நமக்கு முன்னே புரட்சியின்போது நமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்திற்கும் துயரத்திற்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்தக் கடனை அடைக்க நான் என்னுடைய அனைத்து மகிழ்ச்சிகளையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்.

ஆனால், என் அன்பான மனைவியே, என்னுடைய மகிழ்ச்சிகளோடு, உன்னுடைய மகிழ்ச்சிகளையும் இந்த வாழ்வில் இழக்க வைக்கிறேன். உன்னுடைய வாழ்வு இனி துயரங்களாலும் கவலைகளாலும் நிரம்பி விடும். அனாதையாக வாழ்ந்து பழகிய நான், என்னுடைய பிள்ளைகளுக்கும் அதையே தரவேண்டி இருக்கிறது. என் வாழ்வின் கொள்கையின் கொடி காற்றில் பெருமிதத்தோடு அசையும் போது, என் அன்பு மனைவியும், குழந்தைகளும் நாட்டின் மீதான என்னுடைய அன்பை எதிர்த்துக் கடுமையாக ஆனால் பலனின்றிப் போராட வேண்டி இருக்கும்.

0
சாரா, உன் மீதான என் அன்பிற்கு இறப்பில்லை… என்னுடைய குறைகளை மன்னித்து, நான் உனக்குக் கொடுத்திருக்கும் துயரங்களையும் மன்னித்துவிடு.

0

நான் திரும்பவில்லை என்றால், என் அன்பு சாரா, நான் உன்னை எவ்வளவு காதலித்தேன் என்பதை மறந்துவிடாதே. போர்க்களத்தில் என்னுடைய கடைசி மூச்சும் உன்னுடைய பெயரை சொல்லும் என்பதையும் மறந்துவிடாதே.

0

நம்முடைய மகன்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்னைப் போலவே தந்தையின் அன்பும் ஆதரவும் இல்லாமல் வளர்வார்கள். வில்லிக்கு என்னை நினைவிருக்கவில்லை. எட்கர், தன்னுடைய குழந்தை பருவத்தின் நினைவுகளாக வைத்திருக்கலாம். சாரா, உன்னுடைய தாய்ப் பாசத்தின்மீது எனக்கு அளவில்லாத நம்பிக்கை இருக்கிறது. ஓ, சாரா! உனக்காக நான் காத்திருப்பேன்! என்னிடம் வா, என் குழந்தைகளையும் அழைத்து வா.

சல்லிவன்.

(தொடரும்)

ஆதாரம்
1. Gods and Generals , Jeff Shaara
2. The Civil War: A Narrative. Vol 1: Fort Sumter to Perryville, Shelby Foote
3. Letter from Captain Sullivan Ballou to his Wife

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *