Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #12 – யுலிசிஸ் கிராண்ட்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #12 – யுலிசிஸ் கிராண்ட்

யுலிசிஸ் கிராண்ட்

கிராண்ட் எந்த பிராண்ட் விஸ்கி குடிக்கிறார் என்று சொல்லுங்கள். எனது மற்ற ஜெனரல்களுக்கு அதில் ஒரு பீப்பாய் அனுப்ப விரும்புகிறேன்.
– ஆபிரகாம் லிங்கன்

1846ஆம் ஆண்டு அமெரிக்கக் கவிஞரும், தத்துவவாதியுமான ஹென்றி டேவிட் தொரோ வால்டன் குளத்தின் அருகிலிருந்த அவருடைய சிறிய வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது அங்கிருந்த வரி வசூலிப்பவரைத் தற்செயலாகப் பார்க்க வேண்டி வந்தது. தொரோ ஆறு வருடங்களாக வரி கட்டாததால், இப்போது கட்டவேண்டும் என்று அவர் கூறினார்.

அப்போது அமெரிக்கப் படைகள் மெக்ஸிகோவில் போரில் ஈடுபட்டிருந்தன. அந்தப் போரைத் தான் எதிர்ப்பதால், அதை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டிற்கு வரி கட்டமுடியாது என்று மறுத்துவிட்டார். அதற்காகச் சிறை தண்டனையும் அனுபவித்தார். அந்த அனுபவத்தில் இருந்தே தன்னுடைய ‘சட்ட மறுப்பு’ கொள்கையை உருவாக்கினார்.

1846ஆம் வருடம் அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் டெக்சாஸ் மாநிலத்தை மையமாக வைத்து போர் மூண்டது. இன்னமும் 15 வருடங்களில் எதிரிகளாக மோதிக்கொள்ளப் போகும் பல தளபதிகள், அந்தப் போரிலேயே புடம் போடப்பட்டனர். ராபர்ட் இ. லீ, ஜார்ஜ் மீட், ‘ஸ்டோன் வால்’ ஜாக்சன், ஜேம்ஸ் லாங்ஸ்ட்ரீட் போன்றவர்கள் வின்பீல்ட் ஸ்காட், பின்னாளில் அமெரிக்கக் குடியரசு தலைவரான சக்கரியா டெய்லர் முதலியோர் தலைமையில் ஒன்றாகப் போரிட்டனர்.

அங்கே அவர்களிடையே படைகளுக்குச் சரக்குகளைப் பெற்று விநியோகிக்கும் துணை அதிகாரியாக ஓர் இளைஞர் வந்து சேர்ந்தார். போரிடத் துடித்துக் கொண்டிருந்த அவருக்குச் சிறிது நாட்களிலேயே வின்பீல்ட் ஸ்காட்டின் தலைமையில் இரண்டாம் லெப்டினென்ட்டாகப் போரிட வாய்ப்புக் கிடைத்தது. அந்த அதிகாரியின் வீரமும் வேகமும் அவரை வேகமாக ராணுவத் தலைமைக்கு உயர்த்தியது. தன்னுடைய வாழ்வை ராணுவத்தில் கழித்துவிடலாம் என்று அவரும் எண்ணியிருந்தார். ஆனால் விதி வேறாகக் கணக்கிட்டிருந்தது.

0

நம்முடைய கதையின் இன்னொரு நாயகனைப் பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். யுலிசிஸ் எஸ். கிராண்டின் கதையை எந்த ஒரு தன்னம்பிக்கை புத்தகத்திலும் வைக்கலாம். மனதில் உறுதி இருந்தால், வாழ்வின் பின்னடைவுகளில் இருந்து எப்படியேனும் வெளியே வந்துவிட முடியும் என்பதே அவரது வாழ்வின் செய்தி. அவரது வாழ்வின் இறுதி வரை துயரங்கள் தொடர்ந்தன. இறுதிவரை அவற்றை அவர் வென்று கொண்டே இருந்தார். இதனாலேயே அவரது வாழ்வு தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.

பெரும் போர் வீரர்களை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. நெப்போலியன், சீசர் போன்ற வீரர்களின் கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் கிராண்ட், ஒரு குடியரசு நாட்டின் தளபதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். அந்த முறையில் அவருக்கு முன்னரோ, பின்னரோ எவரும் இல்லை என்று கூறலாம்.

நோவா கிராண்ட், யுலிசிஸ் கிராண்டின் தந்தையின் தந்தை. அமெரிக்கப் புரட்சி போரில், பிரித்தானிய அரசிற்கு எதிராக அமெரிக்க ராணுவத்தில் போரிட்டவர். அவரது மகன் ஜெஸ்ஸி, ஓஹையோ மாநிலத்தில் தோல் பதனிடும் தொழில் செய்து வந்தார். அவருக்கும், அவரது மனைவி ரேச்சலிற்கும் மகனாக கிராண்ட்1822ஆம் வருடம் பிறந்தார். அவரது இளமைப் பருவம் பள்ளிகளிலும், குதிரைகளிலும் கழிந்தது. கிராண்டின் குதிரை ஏற்றம் பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பல அவரது இளமை பருவத்தைச் சேர்ந்தவை.

தோல் பதனிடுவதில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்ததால், அவரது தந்தை அவரைக் குதிரை வண்டியில் பொருட்களை ஏற்றிச்செல்வதற்குப் பழக்கினார். கிராண்டின் தந்தை அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாக இயங்கியவர். எனவே, கிராண்ட்டும் இளவயதில் இருந்தே அரசியல் பேசும் வீட்டின் பின்னணியில் வளர்ந்தார். ஆனால் கிராண்ட் அரசியலிலும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வாராவாரம் தேவாலயத்திற்குச் செல்லும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் இளவயதிலேயே தேவாலயத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இறுதி வரை, அவர் பொதுவிடங்களில் மதச்சடங்குகள் எதையும் செய்ததில்லை.

17 வயதானபோது கிராண்டை அவர் தந்தை நியூ யார்க் மாநிலம், வெஸ்ட்பாயிண்டில் இருக்கும் அமெரிக்க ராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். முதல் வருடத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாத கிராண்ட், பின்னர் தன்னுடைய குதிரை காதலிற்கும், ராணுவப் பயிற்சிக்கும் இருந்த நெருக்கத்தால் ராணுவத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டார். நான்கு வருடங்கள் கழித்து அவர் எதிர்பார்த்ததைப்போல, குதிரைப் படையிலில்லாமல் தரைப்படைக்கு அனுப்பப்பட்டார். முதலில் மிசூரி மாநிலத்தில் செயின்ட் லூயிஸ் நகரின் பாசறைக்கு அனுப்பப்பட்டார்.

0

மிசூரி மாநிலம் எல்லை மாநிலங்களில் ஒன்று. அடிமைகளை வைத்துக்கொள்வது அங்கே சட்டப்பூர்வமானது. அங்கிருந்த மிகவும் செல்வாக்கான, செல்வந்தர் குடும்பங்களில் டென்ட் குடும்பமும் ஒன்று. பல அடிமைகளைத் தங்களது பெரும் தோட்டங்களில் வைத்திருந்தனர்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரெடெரிக் டென்ட், கிராண்டின் நண்பர். செயின்ட் லூயிஸ் நகரில் வசித்து வந்த அவரது வீட்டிற்கு கிராண்ட் அடிக்கடி சென்று வந்தார். பிரெட்டின் சகோதரி ஜூலியா டென்டின் மீது காதல் கொண்டார்.

ஜூலியா ஒரு கேனரி பறவையை வளர்த்து வந்தார். அது மரணமடைந்தபோது, கிராண்ட் அதற்குச் சிறிய மஞ்சள் நிற சவப்பெட்டியைச் செய்து, தன்னுடைய நண்பர்கள் எட்டு ராணுவ அதிகாரிகளை அழைத்து, அதை முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தார்.

கிராண்டின் குடும்பத்தினர் அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்தாலும், கிராண்ட் இந்தக் காலத்தில் அது குறித்து எந்த நிலைப்பாடும் இல்லாமலேயே இருந்தார்.

0

1845ஆம் வருடம் அமெரிக்கா, டெக்சாஸ் பிரதேசத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதைத் தன்னுடைய பிரதேசமாகப் பார்த்த மெக்ஸிகோ நாடு போரை அறிவித்துவிட்டது. 1846ஆம் வருடம் போர்முனைக்கு கிராண்ட் அழைக்கப்பட்டார். ஜூலியாவைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கிராண்ட் மெக்சிகோவுடனான போருக்குக் கிளம்பினார்.

‘அமெரிக்கா எப்போதும் போரில் இருக்கும் தேசம்’ என்று சொல்லப்படுவதுண்டு. அமெரிக்காவின் 240 வருட வரலாற்றில் அந்த நாடு போர் செய்யாத வருடங்களைக் கைவிரலில் எண்ணிவிடலாம்.

போர் வீரர்களுக்கான உணவு மற்றும் இதர பொருட்களைச் சரிவரக் கொண்டு வந்து சேர்த்து, வினியோகிக்கும் துணை குவார்ட்டர் மாஸ்டர் வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சிறிது நாட்களிலேயே அவர் முதல் போர்முனையைக் கண்டார். அவரது துணிவையும் குதிரை ஏற்ற திறமையையும் கண்டு, அவர் முதல் நிலை லெப்டினென்ட் ஆகப் பதவி உயர்த்தப்பட்டார். போர் முடிந்தபோது, மெக்ஸிகோ சிட்டி நகரைக் கைப்பற்றியதில் அவரது பங்கை அங்கீகரிக்கும் வகையில், அவர் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றார்.

யுலிசிஸ் கிராண்ட்

மூன்று வருடங்களுக்குப் பின்னர் திரும்பிய கிராண்ட் ஜூலியாவை மணமுடித்தார். ஜூலியாவை ஏற்றுக்கொண்ட கிராண்டின் பெற்றோர், அவரது அடிமைகள் வைத்திருக்கும் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவரது திருமணத்திற்கு கிராண்டின் பெற்றோர் வரவில்லை.

அதற்கடுத்த ஐந்து வருடங்களில் ராணுவ வாழ்வு அவரை அமெரிக்கக் கண்டமெங்கும் அழைத்துச் சென்றது. மிச்சிகன், வடமேற்குப் பிரதேசங்கள், கலிபோர்னியா போன்ற தூர இடங்களுக்குச் சென்ற அவர், தனிமையைப் போக்க குடிக்க ஆரம்பித்திருந்தார். பணி நேரத்தில் குடிப்பதாகப் பல முறை கண்டிக்கப்பட்ட பின்னர், 1853ஆம் வருடம் தானாகவே பதவியில் இருந்து விலகினார்.

0

அதற்கடுத்த ஏழு வருடங்கள் கிராண்டின் வாழ்க்கை நரகமாக இருந்தது. அவர் வியாபாரம் செய்யத் தேர்ந்தெடுத்த நண்பர்கள் அவரை ஏமாற்றினார்கள். கையில் பணமின்றி, நான்கு குழந்தைகளுடன், என்ன செய்வதென்று அறியாமல் அவரது மாமனாரை வந்து சந்தித்தார். அவர் கிராண்டிற்குச் சிறிது நிலமும் அதில் வேலை செய்ய அடிமைகளும் கொடுத்தார். நிலத்தில் இருந்து கிடைத்தது அவர்களது உணவிற்கு மட்டுமே சரியாக இருந்தது. அடிமைகளிடம் வேலை வாங்குவது எப்படி என்று கிராண்டிற்குத் தெரியவில்லை. எனவே சிறிது நாட்களிலேயே விடுவித்துவிட்டார்.

1857 பொருளாதார நெருக்கடி அவரது நிலையை இன்னமும் மோசமாக்கியது. தன்னுடைய இடத்தை வாடகைக்குக் கொடுத்துவிட்டு, மாமனாரின் தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். அங்கிருந்துகொண்டு அவர் பல வித தொழில்களைச் செய்ய முயற்சித்து அனைத்திலும் தோல்வி அடைந்தார். அவரது கடன்கள் அதிகரித்துக்கொண்டே சென்றன.

1860ஆம் வருடம் தன்னுடைய சகோதரர்கள் நடத்தி வந்த தோல் தொழிலில் உதவி செய்ய இலினொய் மாநிலத்திற்குக் குடும்பத்துடன் குடிபுகுந்தார். ஒரு வருடத்திற்குள் கடன்களை முழுவதுமாக அடைந்துவிட்டார்.

1861ஆம் வருடம் உள்நாட்டுப் போர் துவங்கவே, லிங்கனின் அறைகூவலுக்குப் பதிலாக ராணுவத்தில் சேர முடிவு செய்தார். ஆனால் அவரது முந்தைய குடிப்பழக்கத்தை அறிந்திருந்த அதிகாரிகள், ராணுவத்தில் எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. எனவே, மாநிலத்தில் துணை ராணுவப் படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் மேற்கில் இருந்த படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் ஃபிரீமான்ட், அவரது அதிகாரிகளின் பரிந்துரையை மீறி, கிராண்ட்டை கர்னலாகப் பதவி உயர்த்தி, டென்னிசி மாநிலத்தையும், மிஸ்ஸிஸிப்பி நதியையும் திரும்பவும் அமெரிக்க ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நியமிக்கப்பட்டார். ஆனால், தன்னுடைய அனுமதியின்றி எந்தத் தாக்குதலும் நடத்தக்கூடாது என்றும் ஜெனரல் ஃபிரீமான்ட் ஆணையிட்டிருந்தார்.

‘திரும்பவும் நான் அந்தத் தோல் கடையில் கால் வைக்கவேயில்லை’ என்று பின்னொரு நாளில் இது குறித்து மிகுந்த திருப்தியோடு தெரிவித்தார் கிராண்ட்.

(தொடரும்)

ஆதாரம்
1. Grant – Ron Chernow
2. The Personal Memoirs of U. S. Grant – U.S.Grant
3. 1001 Heroes, Legends, Histories & Mysteries Podcast

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *