Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

மேற்கில் ஒரு வெளிச்சம்

நிபந்தனையின்றி, உடனடியாகச் சரணடைவதைத் தவிர வேறு நிபந்தனைகள் இல்லை. உடனடியாக உங்களது கோட்டை மீது தாக்குதல் நடத்தவிருக்கிறேன்.
– யூலிசிஸ் எஸ். கிராண்ட்

அமெரிக்கா ஒரு பெரும் நிலப்பரப்பு என்பதை நாம் இங்கே நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவைப் போல மூன்று மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டது. நமது வரலாறு நடக்கும் காலத்தில் இருந்த நிலப்பரப்பே இந்தியாவைப் போல இரண்டு மடங்கு அதிகமானது. எனவே, இங்கே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதோ, செய்தி அனுப்புவதோ எல்லாமே பெரும் சவால். அத்தோடு, இந்த நிலப்பரப்பும் பல பெரும் நதிகளும், பெரும் மலைகளும் கொண்டது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைச் சொல்வதற்குக் காரணம், உள்நாட்டுப் போர் இரண்டு பெரும் நிலப்பரப்பில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கிழக்கில் நடந்த போர் அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தாலும், வெகு தூரத்தில் மேற்கெல்லையில் நிகழ்ந்த போர்களிலேயே பல திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

1862ஆம்ஆண்டின் ஆரம்பத்தில், கிழக்கே லிங்கன் தன்னுடைய தளபதிகளை ஏதாவது செய்யவேண்டி கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் கொண்டிருந்த நேரத்தில், மேற்கில் நிகழ்வுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

0

அதற்கு முன், மேற்கில் இருந்த மாநிலங்களின் நிலையைச் சிறிது பார்த்துவிடுவோம். நாம் இப்போது மேற்கில் இருந்த மூன்று முக்கிய எல்லை மாநிலங்களின் நிலையைப் பார்ப்போம்.

முதலாவதாக டென்னிசி மாநிலம். 1861ம் வருடத்தில் டென்னிசி மாநிலம் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து விடுவதாக அறிவித்துவிட்டது. ஆனாலும் டென்னிசி மாநிலத்தில் மேற்கு பகுதியில் ஒன்றியத்துடன் இணைந்து இருப்பதற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. எனவே டென்னிசியின் உள்ளேயே இரண்டு குழுக்களாக மக்கள் பிரிந்து இருந்தார்கள்.

அடுத்தது கென்டக்கி மாநிலம். இங்கு நிலை இன்னமும் சிறிது குழப்பமானது. மாநிலத்தின் வடக்குப் பகுதிகள், வட மாநிலங்களுக்கு அருகில் இருந்ததால் அங்கே இருந்த வேலைகள், தொழில்கள், விவசாயம் என அனைத்தும் வட மாநிலங்களுடன் பிணைந்து இருந்தது. அங்கிருந்த மக்களின் ஆதரவும் வட மாநிலங்களுக்கே இருந்தது.

மாநிலத்தின் தென் பகுதிகளில் இது போலவே, தென் மாநிலங்களுக்கு ஆதரவு இருந்தது. எனவே பிரிவினை பிரச்சினை ஆரம்பித்த காலத்திலேயே, அப்போதைய கென்டக்கியின் ஆளுநர், எந்தப் பக்கத்தையும் தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என நடுநிலைமையை எடுத்துக் கொண்டார். லிங்கன் புத்திசாலித்தனமாக, கென்டக்கியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காத்துக்கொண்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்தது போலவே, 1861 செப்டெம்பர் மாதம் தென் மாநில கூட்டமைப்பின் படைகள், டென்னிசி மாநிலத்தில் இருந்து கென்டக்கி மாநிலத்தில் நுழைந்தன. கென்டக்கியின் ஆளுநர் வாஷிங்டனிடம் உதவி கேட்கவே, ஒன்றியப் படைகளும் கென்டக்கியின் உள்ளே நுழைந்தன. கென்டக்கியின் பிரிவினை ஆதரவாளர்கள், தங்களுக்குள் ஓர் அரசை அமைத்துக்கொண்டனர்.

மூன்றாவதாக, மிசூரி மாநிலம். 1850களில் இருந்தே சிறிய அளவில் உள்நாட்டு போர் இங்கு நடந்து கொண்டிருந்தது. பிரிவினை பிரச்சினையின் ஆரம்பத்தில் அவர்களும் நடுநிலையைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் நிறைவேற்றினார்கள். ஆனால், இங்கும் மாநிலம் முழுவதும் ஆதரவு இல்லை என்றாலும், பிரிவினைவாதிகள் தனியாக அரசை நியமித்துக் கொண்டு, டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து நடத்தினார்கள்.

இந்த நிலையில், மேற்கில் இருக்கும் ஒன்றிய ராணுவத்திற்குத் தலைமைத் தளபதியாக ஹென்றி ஹாலக் நியமிக்கப்பட்டார். மிகவும் திறமைசாலியான அவரிடம் இருந்த ஒரு குறை, அவர் இதுவரை எந்தப் போரிலும் கலந்து கொண்டிருந்ததில்லை என்பதே.

அவரது தலைமையில் இரண்டு படைகள் கென்டக்கியிலும், அதற்குக் கிழக்கிலும் இருந்தன. அவற்றை வழிநடத்த யுலிசிஸ் கிராண்ட்டும், டான் கார்லோஸ் பியூலும் நியமிக்கப்பட்டார்கள். மிஸ்ஸிஸிப்பி நதியை முழுவதுமாக ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தென் மாநிலங்களின் கூட்டமைப்பை இரண்டாக உடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு.

0

மிஸ்ஸிஸிப்பி நதியின் இரண்டு கிளை நதிகள், கம்பர்லாண்ட் மற்றும் டென்னிசி ஆகும். இவை இரண்டும் கென்டக்கி, டென்னிசி மாநில எல்லையில் அருகருகே வரும். அங்கே இரண்டு கோட்டைகள், கம்பர்லாண்ட் நதிக்கரையில் ஹென்றி மற்றும் டென்னிசி நதிக்கரையில் மாநிலக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன.

மிஸ்ஸிஸிப்பி நதிக்குச் செல்லும் வழியையும், டென்னிசி மாநிலப் பாதுகாப்பையும் அவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. எனவே, அவற்றைக் கைப்பற்றுவதே கிராண்ட்டின் முதல் இலக்காக இருந்தது.

ஒன்றியப் படைகள் மிஸ்ஸிஸிப்பி நதியில் பீரங்கிகள் பொருத்தப்பட்ட கப்பல்களை வைத்திருந்தனர். இவை நதியில் இருந்து தாக்குதல் நடத்த உதவியாக இருக்கும். எனவே, முதலில் ஹென்றிகோட்டையைத் தாக்குவது என்றும், அது தரைப்படையும், கப்பற்படையும் இணைந்து நடத்தும் தாக்குதலாக இருக்கும்.

பிப்ரவரி 6, 1872 அன்று கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கின. 75 நிமிடங்கள் நடந்த தாக்குதலில் கோட்டையின் எதிர்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. கப்பல்கள் கோட்டைக்கு மிக அருகில் வந்துவிடவே, கோட்டையில் இருந்த மாநிலக் கூட்டமைப்பின் வீரர்கள், கப்பற்படையிடம் சரணடைந்தார்கள். இதுவே அமெரிக்க ஒன்றிய ராணுவத்தின் முதல் பெரிய வெற்றியாக இருந்தது.

ஜெனரல் ஹாலக் வெற்றி செய்தியை வாஷிங்டனிற்குஅனுப்பினார். முன்னேறும் படைகள் இனி பின்வாங்காது என்றும் கூறினார்.

தாமதிக்காமல் அடுத்து டொநெல்சன் கோட்டையைத் தாக்க வேண்டும் என்று நினைத்த கிராண்ட், உடனடியாகத் தான் டொநெல்சன் கோட்டையை நோக்கி அணிவகுக்கப் போவதாக ஹாலக்கிற்குச் செய்தி அனுப்பினார்.

ஆனால் ஹாலக்கிற்கு கிராண்டின் குடிப்பழக்கம் பற்றித் தெரிந்திருந்ததால், கிராண்டின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. டொநெல்சன் கோட்டையை உடனடியாகத் தாக்குவதும் சரியாகத் தெரியவில்லை. எனவே அவர் டான் பியூலை டொநெல்சன் நோக்கி செல்லும்படி ஆணையிட்டார்.

இவை எவற்றையும் அறியாத கிராண்ட் விரைவாக டொநெல்சன் கோட்டையை நோக்கி தன்னுடைய படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கோட்டைக்குச் செல்லும் பாதை மிகவும் சகதியாகவும், நடப்பதற்குக் கடினமாகவும் இருந்ததால், அவர் நினைத்ததை விட அதிக தினங்கள் எடுத்துக் கொண்டது.

பிப்ரவரி 14ம் தேதி கோட்டையை நெருங்கிய அவர், அன்று மாலையே கோட்டையை முற்றுகையிட்டார். அன்றிரவே கோட்டையில் இருந்து வெளியே வர ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது கைவிடப்பட்டது.

மறுநாள் (பிப்ரவரி 15) மிஸ்ஸிஸிப்பி நதியின் பீரங்கிக் கப்பல்களும் வந்து சேர்ந்துவிடவே, கோட்டையின் உள்ளே இருந்த வீரர்கள் தங்கள் நிலையை உணர்ந்தார்கள். எனவே கோட்டையை விட்டு வெளியேற எப்படியாவது முயல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அன்று காலை 9.30 மணிக்கு மாநிலக் கூட்டமைப்பு படைகளின் தாக்குதல் துவங்கியது. மூன்று மணி நேரம் நடந்த தாக்குதலில் மாநில கூட்டமைப்பின் படைகள் 2 மைல்கள் முன்னேறின. அவர்கள் எதிர்பார்த்தது போலவே தப்பிச் செல்வதற்கான பாதையும் தெரிந்தது.

ஆனால் கிராண்ட் தாக்குதலின்போது களத்தில் இருக்கவில்லை. நதியின் அருகில் வரப்போகும் கப்பற்படையை எதிர்நோக்கிக் காத்திருந்தார். கப்பற்படை வந்தவுடன்கோட்டையைத் தாக்க சொல்லிவிட்டு, அவர் அங்கிருந்து களத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே நிலையை அறிந்தவுடன், உடனடியாகப் பதில் தாக்குதலை துவக்க உத்தரவிட்டார்.

பதில் தாக்குதல் ஆரம்பித்தவுடன், ஆச்சரியகரமாக, மாநிலக் கூட்டமைப்பின் படைகள் பின்வாங்கிக் கோட்டைக்குள் திரும்பவும் சென்றன. மிகக்குறைந்த அளவிலான வீரர்கள் மட்டுமே தப்பிச் செல்ல முடிந்தது. அன்று மாலைக்குள் மீண்டும் கோட்டை முழுவதுமாக முற்றுகையிடப்பட்டது.

கிராண்டின் தளபதி சி.எப்.ஸ்மித் டொநெல்சன் கோட்டை தாக்குதலை வழிநடத்துகிறார்
கிராண்டின் தளபதி சி.எப்.ஸ்மித் டொநெல்சன் கோட்டை தாக்குதலை வழிநடத்துகிறார்

அன்றைய தாக்குதலில் மட்டும் 3000 வீரர்கள் மரணமடைந்தும், காயமடைந்தும் போனார்கள். மாநிலக் கூட்டமைப்பு படைகளின் ஜெனரல் புக்கனர் இந்த இழப்புகளைக் கண்டு அதிர்ந்து போனார். மறுநாளும் சண்டையிட்டால் தனது படையில் இன்னமும் 75 சதவிகிதம் வீரர்களை இழக்க வேண்டும் என்று நினைத்த அவர், அன்று இரவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் மறுநாள் சரணடைவது என்று முடிவு செய்தார்.

மறுநாள் தான் சரணடைவதற்கு கிராண்ட் என்ன நிபந்தனைகள் விதிக்கிறார் என்று கேட்டு செய்தி அனுப்பினார்.

“போர்க்களத்தின் தலைமையிடம், பிப்ரவரி 16, 1862.

ஐயா, போர்நிறுத்தம் பற்றியும், அதற்குத் தேவையான நிபந்தனைகள் குறித்தும் தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது.

நிபந்தனையின்றி, உடனடியாகச் சரணடைவதைத் தவிர வேறு நிபந்தனைகள் இல்லை. உடனடியாக உங்களது கோட்டை மீது தாக்குதல் நடத்தவிருக்கிறேன்.

மிகுந்த மரியாதையுடன்,

யுலிசிஸ் எஸ். கிராண்ட்
பிரிகேடியர் ஜெனரல்.

இந்தப் பதிலை எழுதியபோது, அது தனக்குத் தேசிய அளவில் புகழைத் தரப்போகிறது என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பதிலை ஜெனரல் புக்கனர் ரசிக்கவில்லை என்றாலும், அவருக்கு வேறு வழியில்லை. தன்னுடைய 12000 வீரர்கள், 48 பீரங்கிகளுடன் சரணடைந்தார்.

மேற்கில் இருந்த மாநிலக் கூட்டமைப்பின் படைகளில் மூன்றில் ஒரு பங்கு இப்போது கிராண்ட்டிடம் கைதியாக இருந்தார்கள். இரண்டு கோட்டைகளையும் கைப்பற்றியவுடன், டென்னிசி மாநிலத்தில் இருந்த மொத்த மாநில கூட்டமைப்பின் படைகளும் கிராண்டின் அடுத்த நகர்வுக்காகக் காத்திருந்தன.

மாநிலக் கூட்டமைப்பின் மேற்குப் படைகளின் தலைமை தளபதியான ஆல்பர்ட் ஜான்ஸ்டன், தன்னுடைய படைகளை டென்னிசி மாநிலத் தலைநகரான நாஷ்வில்லில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டார். மார்ச் 3ம் தேதி, அமெரிக்க ஒன்றியப் படைகள், டான் பியூலின் தலைமையில் டென்னிசியைத் திரும்பவும் கைப்பற்றின.

மாநிலக் கூட்டமைப்பின் படைகள் அனைத்தும் இப்போது மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் கோரின்த் நகருக்கு சென்றன.

கிராண்ட் இப்போது தேசிய அளவில் பெயர் பெற்றார். அவரது பெயரை U.S. கிராண்ட் என்பதைப் பத்திரிகைகள் Unconditional Surrender கிராண்ட் என்று புகழ்ந்து எழுதின. அவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிந்து, வடமாநிலங்கள் முழுவதிலும் இருந்து அவருக்குச் சுருட்டுகள் அனுப்பப்பட்டன.

ஆனால் கிராண்ட் ஏற்கெனவே தனது அடுத்த நகர்வை  யோசித்துக்கொண்டிருந்தார்.

(தொடரும்)

ஆதாரம்
1. The Civil War, a Narrative: Fort Sumter to Perryville – Shelby Foote
2. Battles and leaders of the Civil War

 

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *