‘மாநிலக் கூட்டமைப்பின் படை தொடர்ந்து தாக்கி வந்த ஒரு பரந்த வெளியைப் பார்த்தேன். அதன் எல்லாத் திசைகளிலும் இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. அந்த வெளியில் கால்கள் தரையில் படாமல், உடல்களின்மீதே நடந்து செல்ல முடியும்…’
– ஜெனரல் யு.எஸ். கிராண்ட்
வெற்றி பெற்றவர்களாலேயே வரலாறு எழுதப்படுகிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பொறுத்த வரை, வரலாறு பெரும்பாலும் தென் மாநிலத்தவர்களாலேயே எழுதப்பட்டது. தென் மாநிலங்கள் தங்களது உரிமைக்காகப் போராடித் தோற்றதாகவும். வடமாநிலங்கள் தங்களது பெரும் மக்கள் தொகையினால் வெற்றி பெற்றன என்றும் வலுவாக ஒரு கருத்தாக்கம் தோன்றியது.
இது தென் மாநிலங்களில் ஒரு சாகசமாகவே, ‘இழந்த கனவு’ (Lost Cause) என்று பெயரிடப்பட்டு ஒரு சிறுபான்மையினரால் கட்டமைக்கப்படுகிறது. இந்தக் கதையாடலின் ஒரு பகுதிதான் கிராண்ட்டின் வெற்றிகள் அனைத்தும் குருட்டு அதிர்ஷ்டம் என்றும், அவரை விடவும் ராபர்ட் லீ பெரும் தளபதி என்பதும். இது குறித்த விவாதம் முடிவில்லாதது என்றாலும், கடந்த 50 வருடங்களில் பல ஆய்வுப் புத்தகங்கள் எழுதப்பட்டு, கிராண்ட்டின் புகழ் சற்று மீட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இதை இந்த இடத்தில் சொல்வதற்குக் காரணம், கிராண்ட் பெற்ற முதல் பெரும் வெற்றியை பற்றிய அத்தியாயம் இது. இந்தச் சண்டை குறித்துப் பல கருத்துகள் இருக்கின்றன. கிராண்டின் போர் தந்திரத்தின் உச்சமான சண்டை இன்னமும் சில காலம் கழித்து நடக்கப்போகிறது. ஆனால் அவற்றுக்கு எல்லாம் முன்னோடியாக இந்தச் சண்டை திகழ்ந்தது.
0
கோரின்த் நகரம் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் இருந்தது. மிகவும் சிறிய நகரம் என்றாலும் அன்று கிழக்கில் இருந்து மேற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும் ரயில் பாதைகள் இங்குதான் கடந்தன. எனவே, பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், தகவல் தொடர்பிற்கும் மிகவும் முக்கியமான இடமாக இருந்தது.
மேற்கில் இருந்த மாநிலக் கூட்டமைப்புப் படைகளின் தலைவர், ஜெனரல் ஆல்பர்ட் சிட்னி ஜான்ஸ்டன். அப்போதைய மாநிலக் கூட்டமைப்புப் படைகளில் இருந்த ஜெனரல்களில் மிகவும் திறமையானவர் என்று கருதப்பட்டார். டென்னிசி மாநிலம் தங்களது கைகளில் இருந்து நழுவியவுடன், ஆல்பர்ட் ஜான்ஸ்டன் தன்னுடைய படைகளை இங்கே கொண்டு வந்து ஒன்றாகக் குவித்தார்.
மிஸ்ஸிஸிப்பி நதியைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது முதல் கடமையாக இருந்தாலும், கோரின்த் நகரமும் போரின் முக்கியமான இடம். இதைக் கைப்பற்றுவது மிஸ்ஸிஸிப்பி நதியைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை எளிதாக்கும் என்று மேற்கு ஒன்றியப் படைகளின் தலைமை தளபதியான ஹென்றி ஹாலக் எண்ணினார்.
எனவே தன்னுடைய படைகளை கோரின்த் நகரை நோக்கி நகற்ற ஆரம்பித்தார்.
0
இங்கே நாம் ஒன்றியத்தின் சார்பில் போரிட்ட, இன்னொரு மிகச் சுவாரசியமான தளபதியைப் பற்றிச் சிறிது பார்த்து விடுவோம். அவர், வில்லியம் டி. ஷெர்மன்.
ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த வில்லியம் ஷெர்மன், 1840இல் வெஸ்ட் பாயிண்ட் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் தன்னுடைய ராணுவப் பயிற்சியை முடித்தார். அடுத்த 13 வருடங்கள் ராணுவத்தில் இருந்தாலும், அவர் எந்தப் போர் முனைக்கும் அனுப்பப்படவில்லை. நிர்வாக வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டார். எனவே, சலிப்பில் 1853இல் ராணுவத்தில் இருந்து விலகிவிட்டார்.
அதன் பின்னர் கலிபோர்னியாவில் பல வியாபார முயற்சிகளை மேற்கொண்டார். எதிலும் அவரால் நீடிக்க முடியவில்லை. தன்னால் போர்முனையில் பலரை வழி நடத்த முடிந்தாலும், சான் பிரான்சிஸ்கோவின் வியாபாரச் சூழலைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று பின்னர் சுயசரிதையில் எழுதினார்.
லூசியானாவில் இருந்த ராணுவப் பயிற்சிப் பள்ளியில் அவர் தலைமை மேற்பார்வையாளராகச் சேர்ந்தார். இது அவரது திறமைக்கு ஏற்ற வேலையாக இருந்தது. மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார்.
1861இல் பிரிவினை அறிவிக்கப்பட்டபோது, அவர் அதை வெகுவாக எதிர்த்தார். போர் ஆரம்பித்தால், அது நீண்ட காலம் நீடிக்கும், மிகவும் கொடூரமானதாகவும் இருக்கும் என்று எச்சரித்தார். லூசியானா மாநிலம் அவரை ஒன்றியத்திற்கு எதிராக ஆயுத கணக்கெடுப்பு செய்யச் சொன்னபோது, தன்னால் ஒன்றியத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்று வேலையை விட்டுவிட்டார்.
ஆனாலும் ராணுவத்தில் சேர்வதற்குச் சிறிது தயக்கத்துடன் இருந்தார். பிறகு மே 1861இல் சேர்ந்தார். கென்டக்கியில் அவர் முதல் முறையாக ராணுவத் தளபதியாக, ஹாலக்கினால் நியமிக்கப்பட்டார். ஆனால் படைகளை வழிநடத்துவது அவருக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் வாஷிங்டனிற்குச் சென்று கொண்டிருந்தது. மனதளவில் மிகவும் சோர்ந்திருந்த அவருக்கு நீண்ட விடுப்பு கொடுக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தற்கொலை செய்து கொள்ளக்கூடத் தான் யோசித்ததாக எழுதியிருக்கிறார்.
பிப்ரவரி 1862இல் மீண்டும் ஹாலக்கின் கீழ் ராணுவத்தில் சேர்ந்த அவருக்கு முதலில் நிர்வாகம் சம்பந்தமான வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. சிறிது காலத்தில் அவர் ஒரு படைக்குத் தளபதியாக, கிராண்டின் கீழே நியமிக்கப்பட்டார்.

0
மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் எல்லைக்கு அருகில் இருந்த பிட்ஸ்பர்க் லாண்டிங் என்ற இடத்திற்குப் படைகளுடன் செல்லுமாறு கிராண்டிற்கு ஹாலக் உத்தரவிட்டார். இந்த இடம், கோரின்த் நகரில் இருந்து 30 மைல்கள் தொலைவில் இருந்தது.
கிராண்டின் படைகளில் மொத்தம் 44,000 வீரர்கள் இருந்தார்கள். இன்னமும் டான் பூயல்லின் படைகளில் இருந்த 18,000 வீரர்களும் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். கோரின்த்தில் மாநிலக் கூட்டமைப்பின் படைகளிலும் 55,000 வீரர்கள் இருந்தார்கள். எனவே இரண்டு பக்கங்களும் கிட்டத்தட்ட சமபலத்துடன் இருந்தன.
ஆனால் கிராண்டின் படைகளில் பெரும்பாலானோர் ஏற்கெனவே முந்தைய இரண்டு சண்டைகளிலும் கலந்து கொண்டிருந்ததால், சிறிது அதிகமான அனுபவம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
டான் பூயலின் படைகள், கிராண்டின் படைகளுடன் சேர்ந்துவிட்டால் தனது வெற்றி வாய்ப்புப் பாதிக்கப்படும் என்று நினைத்த மாநிலக் கூட்டமைப்பின் தலைமைத் தளபதி ஆல்பர்ட் ஜான்ஸ்டன், தான் முந்திக்கொள்ள நினைத்தார். எனவே தன்னுடைய படையில் இருந்து 40,000 வீரர்களை அழைத்துக் கொண்டு, கிராண்ட்டின் படைகளின் மீது எதிர்பாராமல் தாக்குதல் நடத்த முடிவு செய்தார்.
அவரது வீரர்கள் மெதுவாகவே தங்களது ஆச்சரியத் தாக்குதலை நடத்தக் கிளம்பினார்கள். முப்பது மைல்களைக் கடக்க மூன்று நாட்கள் ஆயின.
0
வில்லியம் ஷெர்மன், தன்னுடைய வீரர்களுடன் பிட்ஸ்பர்க் லாண்டிங்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருந்த ஷைலோ தேவாலயத்திற்கு அருகில் முகாமிட்டிருந்தார். ‘ஷைலோ’ (Shiloh) என்ற ஹீப்ரு வார்த்தைக்கு அமைதியான நிலம் என்று அர்த்தம். அந்த அமைதியான நிலம்தான் இப்போது ரத்தத்தால் நனையப் போகிறது.
ஏப்ரல் 6ம் தேதி காலை 6 மணிக்கு, மாநிலக் கூட்டமைப்பின் படைகள் ஷைலோவின் அருகே வந்து சேர்ந்தன. தாக்குதல் ஒன்றியப் படைகளுக்கு முழு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. காலை உணவை எடுத்துக் கொண்டிருந்த வீரர்கள், அவசர அவசரமாகத் தங்களது ஆயுதங்களை எடுக்க முகாமிற்கு ஓடினார்கள்.
மிகவும் வேகமாக இருந்த மாநிலக் கூட்டமைப்பின் தாக்குதல், ஒன்றிய ராணுவத்தைப் பின்னோக்கித் தள்ளியது. ஒன்றிய ராணுவ முகாம்கள் டென்னிசி நதிக்கரையில் அமைந்திருந்தது. தாக்குதலில் பின்னோக்கித் தள்ளப்பட்ட வீரர்களுக்கு நதியை நோக்கிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தச் சண்டையிலேயே ஷெர்மன் ஒன்றிய ராணுவத்தின் முக்கியத் தளபதியாகக் கவனிக்கப்பட்டார். ஷெர்மனின் வீரர்கள் சண்டையின் நடுவில் இருந்தனர். ஷெர்மன் சண்டையின் எல்லாப் பக்கங்களிலும் இருந்தார். இரண்டு காயங்கள் அடைந்தார். அவரது மூன்று குதிரைகள் சுட்டுக்கொல்லப்பட்டன.
சண்டை ஆரம்பித்தபோது, கிராண்ட் குதிரையில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவ உதவி பெற்றுக்கொண்டிருந்தார். ஷைலோவில் இருந்து 10 மைல் தொலைவில் இருந்தார். காலையில் குண்டுகளின் சத்தம் கேட்டவுடன், டென்னிசி நதியில் கப்பலில் கிளம்பினார். போர்க்களத்தை 8.30 மணிக்கு வந்தடைந்தார்.
கூட்டமைப்புப் படைகளின் வேகம் 11 மணிக்குக் குறைய ஆரம்பித்தது. களத்தின் நடுவில் ஒன்றியப் படைகள், சாலை ஒன்றைக் கைப்பற்றி, அதைக் காத்துக்கொண்டிருந்தன. மிகவும் பயங்கரமான சண்டை நடந்த இந்த இடம் ‘தேன் கூடு’ என்றழைக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு இந்த இடத்தில் ஆரம்பித்த சண்டை, ஏழு மணி நேரம் தொடர்ந்தது. இங்கிருந்த எதிர்ப்பை முறியடிக்க, கூட்டமைப்பினர் 50 பீரங்கிகளைச் சுற்றிலும் நிறுத்தி தொடர்ந்து குண்டு மழை பொழிய வேண்டியிருந்தது. ஆனால் இந்த 7 மணி நேரம், பின்னால் படைகளை ஒன்றாக அடுத்த நிலையில் ஒன்றுபடுத்த கிராண்டிற்குத் தேவையான நேரத்தைக் கொடுத்தது.
ஆனால் தேன் கூட்டில் நடந்த சண்டையில் கூட்டமைப்பிற்குப் பெரும் இழப்பும் நேரிட்டது. கூட்டமைப்பின் மேற்குப் படைகளின் தலைமைத் தளபதியான ஆல்பர்ட் ஜான்ஸ்டன், குதிரையில் சண்டையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பட்ட குண்டு, முக்கியமான ரத்தக் குழாயை வெட்டிவிட, அவர் அன்று மதியமே இறந்துவிட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த பி.ஜி.டி. போரெகார்ட், போரை வழிநடத்த ஆரம்பித்தார்.
தேன் கூடு விழுந்தவுடன், போர் முனை இன்னமும் சிறிது தூரம் பின்னே சென்றது. ஆனால் அதற்குள் கிராண்ட் ஒரு புதிய போர் முனையை 3 மைல் நீளத்திற்கு நிர்மாணித்திருந்தார். அத்தோடு அப்போது டென்னிசி நதியில் வந்திருந்த இரண்டு ஒன்றிய பீரங்கிக் கப்பல்களும் அவருக்குப் பலம் சேர்த்தன.
போரெகார்ட் தாக்குதலைத் தொடர நினைத்தாலும், ஒன்றிய ராணுவம் தங்களது இடத்தில் நன்றாக நிலைபெற்றிருப்பதைப் பார்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு அன்றைய தாக்குதல்களை நிறுத்திக்கொண்டார். ஆனால் பீரங்கி கப்பல்களும், கூட்டமைப்பின் பீரங்கிகளும் அவ்வப்போது குண்டுகளை வீசிக்கொண்டிருந்தன.
இரவில் மழை கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தது. அத்தோடு, டான் பூயலின் வீரர்களும் வந்திறங்கிக்கொண்டிருந்தார்கள். கிராண்டின் படை பெரிதாகிக்கொண்டிருந்தது.

அன்றைய தாக்குதலின் இரண்டு பக்கங்களுக்கும் இழப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இரவில் மழையும் பெய்யவே, களத்தில் விழுந்து கிடக்கும் உடல்களை அகற்றவும் முடியவில்லை. கிராண்ட்டும் அவரது வீரர்களும் முகாமில் இருந்து பின்வாங்கி விட்டதால், மழையில் நனைந்தவாறே இரவைக் கழித்தனர். கிராண்ட் ஒரு மரத்தின் கீழ் இருந்ததாக அவரது சுயசரிதையில் தெரிவிக்கிறார்.
அங்கே நடந்ததாக ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. கிராண்ட் போரை எப்படி அணுகினார் என்பதற்கு இது ஓர் உதாரணம். மிகுந்த இழப்புகளும், இரவில் முகாமில் இல்லாமல் இருந்ததும், ஷெர்மனைப் பின்வாங்குவது பற்றி யோசிக்கச் செய்தது. அது குறித்துக் கேட்க கிராண்ட் நின்றிருந்த மரத்திற்கு வருகிறார். கடைசி நேரத்தில், அதைக் கேட்கும் தைரியம் அவருக்கு இல்லை. எனவே ‘கிராண்ட், இன்றைய தினம் சைத்தானின் தினமாக இருந்தது, இல்லையா?’ என்கிறார்.
நிமிர்ந்து பார்த்த கிராண்ட், வாயில் புகைந்து கொண்டிருந்த சுருட்டை எடுக்காமல், ‘ஆமாம், நாளை திருப்பி அடித்துவிடலாம்..’ என்றார். பின்வாங்குவது என்பதை ஒரு தெரிவாகவே அவர் கருதவில்லை.
கூட்டமைப்பின் முகாம்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தன. அவர்கள் ஒன்றிய முகாம்களில் இருந்தார்கள். அன்றைய தினம் அவர்களது வெற்றியாக இருந்தது. போரெகார்ட், கூட்டமைப்பின் குடியரசுத் தலைவரான ஜெபர்சன் டேவிஸிற்கு, அன்றைய பெரும் வெற்றி குறித்துத் தந்தி அனுப்பியிருந்தார்.
மறுநாள் காலை கிராண்ட் தாக்குதலைத் துவக்கினார். மிகவும் வேகமாகத் துவங்கிய தாக்குதலில் கூட்டமைப்பின் படைகள் நிலைகுலைந்தன. காலை 11 மணிக்குள் போரெகார்ட், படைகளை மீண்டும் திரட்டிவிட்டாலும், தாக்குதலின் வேகம் குறையாததால், பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.
மதியத்தில் திரும்பவும் தாக்குதலைத் துவங்கினாலும், அவரது மனது சண்டையில் இல்லை. 5000 வீரர்களை மட்டும் அங்கே தொடர்ந்து சண்டையிடச் சொல்லிவிட்டு, தனது படைகளை அன்று மாலையில் இருந்து கோரின்த் நகரை நோக்கி பின்வாங்கச் செய்தார். வீரர்கள் களைப்பாக இருந்ததாக நினைத்ததால், கிராண்ட் அவர்களைப் பின்தொடரச் செய்யவில்லை.
தோல்வியில் ஆரம்பித்த சண்டை, கிராண்டிற்கு வெற்றியுடன் முடிந்தது. ஆனால் இரண்டு பக்கங்களிலும் சேர்ந்து 27000 வீரர்கள் இறக்கவோ காயமடையவோ, காணாமல் போகவோ செய்திருந்தார்கள். இந்த எண்ணிக்கை இரண்டு பக்கங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இனி வரும் சண்டைகளில் இதை விடப் பெரிய இழப்புகள் ஏற்படும் என்றாலும், சண்டையிட்ட வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை இழந்தது லிங்கனில் இருந்து அனைவரையும் பாதித்தது. இது போன்று இன்னமும் எத்தனை வீரர்களைப் பலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே லிங்கன் மனதில் இருந்தது.
ஆனாலும் இந்த வெற்றியில் ஒருவர் மட்டும் வருத்தத்துடன் இருந்தார். தன்னுடைய ஆணையை மீறி கிராண்ட்செயல்பட்டதாக நினைத்த ஜெனரல் ஹாலக், கிராண்ட் திரும்பவும் குடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், எனவே அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தலைமை தளபதி ஜார்ஜ் மக்கிலேலனிற்குக் கடிதம் எழுதினார். அதை ஏற்றுக் கொண்ட மக்கிலேலன், உத்தரவை லிங்கனிற்கு அனுப்பினார்.
ஆச்சர்யத்துடன் அந்த உத்தரவைப் பார்த்த லிங்கன், அதிகமாக யோசிக்கவில்லை. ‘என்னால் இவரை விடுவிக்க முடியாது. இவர் சண்டையிடுகிறார்.’ என்று குறிப்பெழுதி, உத்தரவை நிராகரித்துவிட்டார்.
(தொடரும்)
ஆதாரம்
1. Shiloh: A Novel – Shelby Foote
2. The American Civil War: A Military History – John Keegan
3. Key battles of Civil War – Podcast – Available on all popular platforms
4. Grant – Television series made by History Channel