“லிங்கன் புரட்சியால் வந்த தலைவர் அல்ல. கல்லுடைப்பவராக இருந்து இலினொய் மாநில செனட்டராக ஆன சாதாரணர்… நல்லெண்ணம் கொண்ட சராசரி மனிதர். அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்ததன் காரணமாக மேலே வந்தவர்… பழைய உலகில் பெரும் நாயகர்கள் மட்டுமே சாதித்ததை நல்லெண்ணம் கொண்ட சாதாரண மக்களும் சாதிக்க முடியும் என்று காட்டுகிறார்!… அமெரிக்க ஒன்றியத்தின், ஏன் மனித குலத்தின் வரலாற்றிலேயே லிங்கனின் இடம் வாஷிங்டனிற்கு அருகாமையிலேயே இருக்கும்!”
– காரல் மார்க்ஸ்.
அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், காரல் மார்க்ஸும் பிரெட்ரிக் ஏங்கெல்சும் இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தார்கள். மார்க்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ‘நியூயார்க் ட்ரிப்யூன்’ பத்திரிகைக்கும், வியன்னாவில் இருந்த வந்து கொண்டிருந்த ‘டை பிரஸ்’ என்ற பத்திரிகைக்கும் பத்திகள் எழுதிக் கொண்டிருந்தார். அமெரிக்க அரசியல் நிலையையும், லிங்கனின் தேர்தல் வெற்றி, அடிமை முறை பற்றியும் பல பத்திகள் எழுதியிருக்கிறார்.
மார்க்ஸ் அமெரிக்க உள்நாட்டுப் போரை சரியான முறையில் அணுகினார். தென் மாநிலங்களே வடமாநிலங்களைப் போரில் வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டதாக எழுதியிருக்கிறார். தென் மாநிலங்களின் விவசாய முறை எப்படி அடிமைகளை முன்னிறுத்தி இருக்கிறது என்பதைக் குறித்து அவர் விரிவாக எழுதி, போருக்கு முதல் காரணம் இதுவேயன்றி, தென் மாநிலங்கள் கூறுவது போல மாநில உரிமைகள் அல்ல என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
தெற்கின் நிலையை ரோமானியப் பேரரசுடன் ஒப்பிட்டு, எப்படிச் சிறுபான்மையாக இருக்கும் தோட்ட/அடிமை முதலாளிகள், பெரும்பான்மை ஏழை வெள்ளையர்களைத் திசை திருப்பிப் போரில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் லிங்கனை ஒரு தொழிலாளியாகப் பார்த்தார். ஒரு சாதாரண மனிதர், தன்னுடைய நல்ல எண்ணங்களை மட்டுமே முன்னிறுத்தி போரை நடத்துவதைப் புகழ்ந்து எழுதினார்.
அது போலவே போரின் முடிவையும் அவர் சரியாகவே கணித்தார். 1862இல் எழுதிய பத்தியில் ‘போரில் பகடைகள் எப்படி விழுந்தாலும், கறுப்பர்களின் அடிமைத்தனம் உள்நாட்டுப் போரைத் தாண்டி நிலைக்காது’ என்று எழுதினார்.
அது போலவே, ஒன்றியம் வெற்றி பெற, கிழக்கில் விர்ஜினியாவை வெல்வது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிடாது என்றும், மேற்கிலும் மிஸ்ஸிஸிப்பி நதியையும், ஜார்ஜியா மாநிலத்தையும் கைப்பற்றுவதன் மூலமே அடிமைமுறையின் முதுகெலும்பை ஒடிக்க முடியும் என்றும் 1862ல் எழுதினார்.
அவரது கூற்று போரின் போக்கில் சரியென நிரூபணமானது.
0
அமெரிக்க உள்நாட்டுப் போரை மார்க்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன.
1860ல் ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளே வல்லரசுகளாக இருந்தன. ஜெர்மனி இன்னமும் சிதறிக் கிடந்தது. இந்த மூன்று நாடுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் அமெரிக்கக் கண்டத்தில் ஆர்வம் இருந்தது. மூன்று நாடுகளுக்கும் பெரிதாகவோ, சிறியதாகவோ அமெரிக்காவில் காலனிகள் இருந்தன. எனவே போர் அவர்களையும் பாதிக்க வாய்ப்பிருந்தது. எனவே இவை மிகவும் கவனமாகப் போரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.
ஆனால் இந்த அக்கறை அடிமைமுறையை ஒழிப்பது என்ற தார்மிக அறத்தின் மீதாக அல்லாமல், அவர்களது வர்த்தகத்தின் மீது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியதாகவே இருந்தது.
இங்கிலாந்தின் பெரும் நெசவு தொழிற்சாலைகள், அமெரிக்கத் தென் மாநிலங்களின் மலிவான பருத்தியை நம்பியே இருந்தன. எனவே போர் அவர்களது வர்த்தகத்தை நேரடியாகப் பாதித்தது. அமெரிக்க ஒன்றியம் தென் மாநிலங்களின் துறைமுகங்களைத் தடை செய்யவே, பருத்தியின் விலை உயர்ந்தது. எனவே இங்கிலாந்தின் வர்த்தகர்கள் மலிவான பருத்திக்கு வேறு இடங்களைத் தேட வேண்டி வந்தது. அப்படியே இந்தியாவில் பருத்தி பெருமளவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இங்கிலாந்து வர்த்தகர்களின் தேசம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வோம். எனவே அதன் கொள்கைகள் அறம் சார்ந்து அல்லாமல், பணம் சார்ந்தே இருந்ததில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தென் மாநிலக் கூட்டமைப்பும் ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருந்தது. இந்த அங்கீகாரம் கூட்டமைப்பின் நிலையை மேம்படுத்தும் என்பதையும் வட மாநிலங்களுடனான போரில் அவர்கள் நிலையை இன்னமும் வலுப்படுத்தும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே ஐரோப்பிய நாடுகளின் சபைகளில் ஒன்றியமும் கூட்டமைப்பும் தங்களது பக்கத்துக்கு வலு சேர்ப்பதற்கான போட்டியில் இறங்கின.
லிங்கனைப் பொறுத்தவரை எந்த ஐரோப்பிய சக்தியும் தென் மாநிலக் கூட்டமைப்பை அங்கீகரித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதிலும், அந்த நூற்றாண்டின் பெரும் வல்லரசான இங்கிலாந்து அங்கீகரிக்கக் கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது. எனவே அவர் பதவி ஏற்றவுடன், அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான ஜான் ஆடம்ஸின் பேரனான சார்லஸ் ஆடம்ஸைத் தூதராக அனுப்பினார்.
இங்கிலாந்தோ இரண்டு பக்கங்களையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போதைய நவீன துப்பாக்கியான என்பீல்ட் ரைபிள்களை (இந்தியாவில் 1857 முதல் சுதந்திர போரைத் தொடங்கி வைத்த அதே துப்பாக்கி!) இரண்டு பக்கங்களுக்கும் தாராளமாக வழங்கி கொண்டிருந்தது. ஆயுத விற்பனையில் இங்கிலாந்து எந்தப் பாகுபாடும் காட்டவில்லை. பெரியண்ணன் வழியில் செல்லும் பிரான்சும் ஸ்பெயினும் அப்படியே இரண்டு பக்கங்களுக்கும் ஆயுதங்களை வழங்கி கொண்டிருந்தன.
1861ம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தை சமரசம் செய்யும் முயற்சியில் லிங்கனிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
0
அமெரிக்க ஒன்றியம் தென் மாநிலத் துறைமுகங்களை எல்லாம் தனது கப்பல் படையைக் கொண்டு மறித்திருந்ததால், அங்கிருந்து கடல் வழியே செல்வதோ, பொருட்களை ஏற்றுமதி செய்வதோ முடியாத விஷயமாக இருந்தது. இருந்தாலும், மாநிலக் கூட்டமைப்பு சிறிய கப்பல்கள் மூலமாக இரவில் தப்பித்து, அருகில் இருந்த மேற்கிந்திய தீவுகளுக்கோ கூபா முதலான இடங்களுக்கோ சென்று, அங்கிருந்து வேறு கப்பல்களில் ஏறிச் செல்வது நடந்தது. இது எல்லா நேரங்களிலும் வெற்றி தருவதில்லை என்றாலும், இப்படியான சாகசம் செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை.
தென் மாநிலங்களின் பருத்தி ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் அவர்களைப் பணிய வைத்து விடலாம் என்று ஒன்றிய அரசியல்வாதிகள் எண்ணினார்கள். ஓரளவிற்கு இதில் வெற்றியடைந்தாலும், தடைகளை மீறி நடக்கும் போக்குவரத்தையும் வணிகத்தையும் இன்னமும் குறைக்கவேண்டி தங்களது கப்பற்படையைப் பெரிதாக விரிவுபடுத்தினார்கள். அட்லாண்டிக் சமுத்திரத்தில் அமெரிக்காவின் கப்பற்படையும் ரோந்தை அதிகப்படுத்தியது. அதுவரை கடல்களை ஆட்சி செய்து வந்த இங்கிலாந்திற்கு இது உறுத்தலாக இருந்தது.
இங்கிலாந்திற்குத் தங்களது பிரதிநிதிகளாக இருவரை தென் மாநிலக் கூட்டமைப்பு நியமித்திருந்தது. இவர்கள் தடையை மீறி எப்படியாவது இங்கிலாந்து சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். அமெரிக்க ஒன்றிய அரசாங்கமும் இவர்களை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தது.
நவம்பர் 1861இல் திட்டமிட்டது போலவே இந்த இரண்டு பிரதிநிதிகளும் – ஜேம்ஸ் மேசன் மற்றும் ஜான் சிலிடல் – ஒரு சிறிய, வேகமான படகின் வழியே, அமெரிக்க ஒன்றியக் கப்பல்களை ஏமாற்றி கூபா வந்தடைந்தார்கள். அங்கே ஹவானா நகரில் இருந்து, எச்.எம்.எஸ்.ட்ரென்ட் (HMS Trent) என்னும் இங்கிலாந்து நாட்டின் தபால் கப்பலில் ஏறி பயணத்தைத் துவக்கினார்கள்.
ஆனால் அவர்களை கூபாவில் கண்காணித்துக் கொண்டிருந்த அமெரிக்கர்கள், அவர்களது கப்பல் சர்வதேச எல்லைகளுக்கு வரும் வரை காத்திருந்தார்கள். அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். சான் ஜெஸிந்தோ (USS San Jacinto) அதன்படியே ட்ரென்ட்டை அட்லாண்டிக் சமுத்திரத்தில் மறித்தது. இரண்டு குண்டுகளையும் அருகே வீசி, தங்களது வீரர்களைக் கொண்டு அந்தக் கப்பலில் ஏறி, இரண்டு பிரதிநிதிகளையும் கைது செய்து, பாஸ்டன் நகரச் சிறையில் அடைத்தார்கள்.
இங்கிலாந்தை இந்தச் செய்தி எட்டியபோது, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தங்களது இறையாண்மையை அமெரிக்கா காயப்படுத்திவிட்டதாக இங்கிலாந்து முழுவதும் போராட்டங்கள் நிகழ ஆரம்பித்தன. பருத்தி ஏற்றுமதி தடையால் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த கனல், இந்தச் செய்தியால் பெரும் நெருப்பாக பற்றி எரிந்தது. இந்த முறை இங்கிலாந்து பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்தது.
அமெரிக்க மக்களைப் போலவே, முதலில் லிங்கனும் இந்தச் செய்தியை கேட்டு மகிழத்தான் செய்தார். ஆனால் அதன் பாதிப்புகளை உணர ஆரம்பித்தவுடன், லிங்கன் தனது நாட்டின் நிலையை உணர்ந்தார். இங்கிலாந்து இதைக் காரணமாகக் காட்டி போரைத் துவக்கினால், இரண்டு முனைகளில் தன்னால் போரை நடத்த முடியாது என்பதையும் உணர்ந்தார். பிரித்தானிய காலனியான கனடாவின் வழியாக இங்கிலாந்து போரை எளிதாக இன்னொரு எல்லையில் துவக்கிவிட முடியும்.
உண்மையில், அப்போதைய இங்கிலாந்தின் பிரதமரான பால்மர்ஸ்டோன் பிரபு அதைத்தான் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். இங்கிலாந்து அரசாங்கம், இந்தப் பிரச்சனைக்கு வில்லியம் சீவர்ட்தான் காரணமாக இருக்கவேண்டும் என்று எண்ணியது. எனவே கைது செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் கெடு விதித்தது. அத்தோடு ரகசியமாக அமெரிக்கா மீதான போருக்கு தயாராகவும் ஆரம்பித்தது. கனடா ராணுவத்தில் புதிதாக ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இங்கிலாந்தின் கப்பற்படை அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஒன்று சேரவும் செய்தது.
இந்தச் செய்திகள் எல்லாம், ஏற்கெனவே தோல்வி செய்திகளால் துவண்டிருந்த லிங்கனிற்கு இன்னமும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 1861ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று நடைபெற்ற கூட்டத்தில், சீவர்ட் இங்கிலாந்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார். டிசம்பர் 27ம் தேதி, அப்படியே இங்கிலாந்தின் பிரதிநிதியிடம் தெரிவிக்கப்பட்டது. இரண்டு பிரதிநிதிகளும் விடுதலை செய்யப்பட்டு, 1862 ஜனவரி 14ம் தேதி திரும்பவும் இங்கிலாந்திற்குப் பயணமானார்கள்.
அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கு இடையேயான உறவு, உள்நாட்டுப் போர் முடியும் வரை மேம்படவேயில்லை. இங்கிலாந்து போருக்கான ஆயத்தநிலையில் இருந்து பின்வாங்கவும் இல்லை. மேலும் அவர்களது வர்த்தகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பும், நெசவுத் தொழிலில் ஏற்பட்ட தொய்வும், அவர்களைத் தென் மாநில கூட்டமைப்பை சற்று இரக்கத்துடன் பார்க்க வைத்தது. இதனால் அமெரிக்க ஒன்றியத்துடன் இணக்கமான உறவு ஏற்படவில்லை.
0
மற்ற இரண்டு ஐரோப்பிய சக்திகளான பிரான்சும் ஸ்பெயினும் கூடப் போரைச் சந்தேகத்துடன் அணுகின. தங்களது காலனிகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளைக் குறித்தும் அவர்களுக்குக் கவலை இருந்தது. அப்போது பிரேசில் அரசில் அடிமைமுறை சட்டபூர்வமானதாக இருந்தது. எனவே அவர்கள் தென் மாநிலக் கூட்டமைப்பிற்குத் தங்கள் ஆதரவை மறைமுகமாகவே தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
அமெரிக்க ஒன்றியத்திற்குத் தங்களது ஆதரவைத் தெளிவாகத் தெரிவித்த ஒரே ஐரோப்பிய நாடு, ரஷ்யா மட்டுமே. ஜார் அரசரான அலெக்சாண்டர் தன்னுடைய ஆதரவை வெளிப்படையாகவே ஒன்றியத்திற்குத் தெரிவித்தார்.
இறுதியாக, அப்போது பம்பாய் நகரைச் சேர்ந்த சில வணிகர்கள் நன்கொடைகள் சேகரித்து, அதைப் போர் மருத்துவமனை கட்டிக் கொள்ளுமாறு லிங்கனுக்கு அனுப்பியதாகப் பேராசிரியர் ராஜ்மோகன் காந்தி தெரிவிக்கிறார்.
0
அமெரிக்க உள்நாட்டுப் போர் உலகளவில் அலைகளை ஏற்படுத்தியது. போரின் முடிவு வரை, சில நாடுகளைத் தவிர, எவரும் ஒன்றியத்தின் வெற்றியின் மீது நம்பிக்கையுடன் இல்லை. சண்டைகளில் மாறி, மாறி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தங்களை ஒருபக்கச் சாய்வாகக் காட்டிக் கொள்ள எந்த நாடும் முன் வரவில்லை.
மார்க்சின் தெளிவான பத்திகளுடன் ஆரம்பித்த நாம் இப்போது பிரிட்டிஷ் இலக்கியத்தின் பிதாமகரான சார்லஸ் டிக்கன்ஸின் நேர்மறை சிந்தனையுடன் முடிவு செய்வோம்.
1842ல் டிக்கென்ஸ் அமெரிக்காவைச் சுற்றி வந்தார். நேரடியாக அடிமை முறையின் அவலங்களைக் கண்டிருந்தாலும், வட மாநிலங்களில் அவரது புத்தகங்களுக்குச் சரியாக விற்பனையில் பங்கு தரவில்லை என்பதால் அங்கிருக்கும் வணிகர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணத்தில் இருந்தார். எனவே, போரின் ஆரம்பத்தில் இருந்தே அவரது ஆதரவு – ‘ஆலிவர் ட்விஸ்டில்’ சிறார் வேலையைக் கடுமையாக விமர்சித்த ஆசிரியரின் ஆதரவு – தென் மாநிலங்களின் பக்கமே இருந்தது. இரண்டு பக்கங்களும் சமரசம் செய்து கொண்டு, அடிமைகளை அப்படியே கைவிட்டு விடுவார்கள் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது நடந்ததா?
(தொடரும்)
படம்: ட்ரெண்ட்டை சான் ஜெஸிந்தோ மடக்குகிறது.