செப்டெம்பர் 22, 1862.
போர்முனை மருத்துவமனை. ஷார்ப்ஸ்பர்க் அருகே.
என் அன்பு மனைவிக்கு,
நேற்றைக்கு முந்தைய தினம் நான் 64 வெவ்வேறு மனிதர்களின் காயங்களுக்கு மருத்துவம் செய்தேன். சிலருக்கு இரண்டு அல்லது மூன்று காயங்கள் கூட இருந்தன. நேற்றும் காலையில் இருந்து இரவு வரை வேலை செய்திருக்கிறேன் – இன்று எனக்குச் சிறிது கூடச் சக்தியில்லை – ஆனாலும் வேலை எனக்காகக் காத்திருக்கிறது.
போர் நடந்த நாளைவிட, அதற்குப் பிறகான நாட்கள் கொடுமையானவை – காயங்களின் வலியை விடப் பெரிய வலிகள் இருக்கின்றன. நேரடியாகப் பார்க்கும் வரை, போர் எவ்வளவு பயங்கரமானது என்பதை உன்னால் உணரமுடியாது. மரணமடைந்தவர்களைப் பார்ப்பது சிரமமாக இருந்தாலும், அவர்கள் எந்த வலியையும் உணர்வதில்லை. ஆனால் இன்னமும் உயிரும், உணர்வும் கொண்டிருக்கும் ஊனமான வீரர்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கடவுள் இது போன்ற நரகவேதனைகளை நிறுத்துவார் என்று வேண்டுகிறேன். ஆனால் இவை நமது பாவங்களுக்குக் கடவுள் அளிக்கும் தண்டனையாகக் கூட இருக்கலாம். இப்படிப்பட்ட தண்டனைகளுக்கு நாம் எப்படியான பாவங்கள் செய்திருக்க வேண்டும்…
காரி (Carrie), நேற்றைக்கு முந்தைய இரவு நான் நமது வீட்டைப் பற்றிக் கனவு கண்டேன். அங்கே இருப்பது போலவே இருந்தது. அதன் பின்னர் நான் உன்னை வேறு ஓர் இடத்தில் பார்த்தேன், எங்கே என்று தெரியவில்லை. ஆனால் நீ என்னை முத்தமிட்டாய். என்னைக் காதலிப்பதாகவும் தெரிவித்தாய். போர் வீரர்களின் பொதுவான கனவைப் போலிருக்கிறதா?…
உன்னால் முடிந்த நேரத்தில் எழுது… கூட்டமைப்பின் இரண்டு அதிகாரிகளுடன் நட்பாகியிருக்கிறேன். இருவருக்கும் கால்களில் காயம்…
விரைவாகப் பதில் எழுது. உனக்கும், கிளின்ட், கேட் அனைவருக்கும் முத்தங்களும் அன்பும்.
எப்போதும் உன்னுடைய, டபிள்யு. சி.
வில்லியம் சைல்ட், மேஜர், அறுவை சிகிச்சை நிபுணர்.
நியூ ஹாம்ப்ஷயர் 5வது ரெஜிமென்ட்.
0
அமெரிக்காவின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குநர்களில் கென் பர்ன்சிற்குத் தனி இடம் உண்டு. 1990இல் அவர் அமெரிக்க உள்நாட்டுப்போர் குறித்து இயக்கிய ‘தி சிவில் வார்’ இன்றும் ஆவணப்படத் தயாரிப்பில் ஒரு மைல்கல் எனலாம்.
உள்நாட்டுப் போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், அவற்றின் பின்னணியில் வீரர்கள் தங்கள் மனைவிக்கு, தாய், தந்தைக்கு, சகோதர, சகோதரிகளுக்கு, நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களை வாசிக்கச் செய்திருப்பார். உணர்வுகளின் வசமின்றி அவற்றைக் கேட்பது இயலாத காரியம்.
போர் என்பதை எண்ணிக்கைகளினாலும் எழுதலாம். பெரும் கொள்கை முடிவுகள், சித்தாந்தங்கள் முதலியவற்றைக் கொண்டும் விளக்கலாம். ஆனால் போர் என்பது ரத்தமும் சதையும் உறவுகளும் கொண்ட மனிதர்களின் தியாகத்தின் மூலமாகவே நடத்தப்படுகிறது. இந்தக் கடிதங்களை வாசிக்கச் செய்ததன் மூலமாக அதையே உணர்த்த விரும்பினேன் என்று கூறியிருக்கிறார்.
0
மாத்யூ ப்ராடி ஒரு புகைப்பட நிபுணர். அப்போதுதான் ஐரோப்பாவில் அறிமுகமாகியிருந்த டாகுர்ரோ (Daguerro) என்னும் புகைப்பட வடிவம் எளிதாகப் புகைப்படமெடுக்க உதவியதால் மிகவும் பிரபலமாக இருந்தது. அதை ஐரோப்பாவில் இருந்து வந்த சாமுவேல் மோர்சிடம் (தந்தியைக் கண்டுபிடித்தவர்) இருந்து கற்றுக்கொண்டு நியூ யார்க் நகரில் ஒரு ஸ்டூடியோ ஆரம்பித்தார்.
உள்நாட்டுப்போர் ஆரம்பித்த நாட்களில், தன்னுடைய சொந்த செலவில், போரின் கொடூரத்தைப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். உலகின் முதல் போர்முனை புகைப்பட நிபுணராக இவர் இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆன்டிடம் (Antietam) போர் நடந்த நாட்களில் அவரது ஸ்டுடியோவில் வேலை செய்த அலெக்சாண்டர் கார்ட்னர் அங்கே இருந்தார். அங்கு வீழ்ந்த வீரர்களையும் உடல்களையும் ஊனமானவர்களையும் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படங்களை நியூ யார்க் நகரில் பொதுமக்களின் பார்வையில் வைத்தார். அப்போதுதான், அமெரிக்க மக்கள் – ஏன் உலகின் சாதாரண மக்களும் – முதல் முறையாகப் போர்க்களத்தின் கொடூரங்களை முதல் முறையாகப் பார்த்தார்கள். ‘ஆன்டிடமில் இறந்தவர்கள்’ என்றழைக்கப்பட்ட அந்தப் புகைப்படக் காட்சி, மிகவும் முக்கியமான புகைப்படத் தொகுப்பாகப் பார்க்கப்படுகிறது.
0
ஆகஸ்ட் 30ம் தேதி ராபர்ட் லீயின் படைகள், புல் ரன்னில் மீண்டும் ஒரு முறை அமெரிக்க ஒன்றிய ராணுவத்தைத் தோற்கடித்ததைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால் இந்த முறை ராபர்ட் லீ திரும்பிப் போக வரவில்லை. வடமாநிலங்களுக்குள் போரை எடுத்துச் செல்லவேண்டும் என்பதே அவரது நோக்கம்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. இரண்டு வருடங்களாக நடந்து வரும் போரில், வடக்கு விர்ஜினியாவின் பகுதிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. குறிப்பாக உணவுப் பொருட்கள் கிடைப்பது மிகவும் குறைந்துவிட்டது. இரண்டாவதாக, மாநிலக் கூட்டமைப்பின் படைகள் வடமாநிலங்களுக்குள் நுழைந்து அங்கே ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டால், ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என்ற அரசியல் காரணம். எனவே, ராபர்ட் லீயை மேரிலாண்ட் மாநிலத்திற்குள் சொல்லும்படியாக உத்தரவிடப்பட்டது.
இல்லையென்றாலும், ராபர்ட் லீ பின்வாங்கிச் செல்பவர் அல்ல. மேலும் மேரிலாண்ட் மாநிலம் எல்லை மாநிலம் என்பதால், தங்களுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
லிங்கனுக்கு இதற்கு நேர்மாறான தளபதி வாய்த்திருந்தார். இப்போது ‘போடோமக் படை’ 100000 வீரர்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பலரும் இரண்டு மூன்று சண்டைகளில் கலந்து கொண்ட அனுபவம் பெற்றவர்கள். ஆனால் அவர்களது தளபதி ஜார்ஜ் மக்லெல்லன் தயக்கத்தையே குணமாகக் கொண்டவர். முன் போலவே, லீயின் 40000 வீரர்கள் கொண்ட படையை, பல லட்சம் வீரர்களைக் கொண்டது என்ற கற்பனையில் இருந்தார். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவருக்கு ராபர்ட் லீயின் வீரர்கள் தெரிந்தார்கள். எனவே தன்னுடைய முகாமை விட்டு வெளியே கிளம்பத் தயங்கிக் கொண்டே இருந்தார்.
லிங்கன் தன்னுடைய கெஞ்சல்களை எல்லாம் விடுத்து, நேரடியாக முகாமிற்குச் சென்று ஜார்ஜ் மக்லெல்லனைச் சந்தித்து வேகமாகப் போரை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தைத் தெரிவித்தார். ஆனாலும் தயக்கம் மக்லெல்லனை விட்டு விலகவில்லை.
செப்டெம்பர் 13, 1862 அன்று ரோந்துப் பணியில் இருந்த ஒன்றிய படையின் வீரர்கள் சிலர், ஒரு துண்டுத் தாளைக் கண்டெடுத்தார்கள். அது ‘ராபர்ட் லீ’ என்ற கையெழுத்துடன் இருக்கவே, அது ஜார்ஜ் மக்லெல்லனைச் சென்றடைந்தது. ‘ஸ்பெஷல் ஆர்டர் 191’ என்ற அந்த உத்தரவு, ராபர்ட் லீயின் மொத்த போர்த் திட்டத்தையும் விளக்கியது.
அதைக் கொண்டு உடனடியாகத் தாக்கினால், லீயின் முழுப் படையையும் அழித்திருக்கமுடியும். ஆனால் ஜார்ஜ் மக்லெல்லனின் வழக்கமான தயக்கம் அவரை விடவில்லை. அது உண்மையான திட்டமா, இல்லையா என்ற சந்தேகத்தில் ஒரு நாளை கழித்த பின்னரே, தன்னுடைய படையை நகர்த்த ஆரம்பித்தார்.
லீயின் படைகள் ஆன்டிடம் ஓடைக்கு அருகில் இருந்த ஷார்ப்ஸ்பர்க் நகருக்கு வந்து சேர்ந்த போது, அவரிடம் 18000 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். அப்போது (செப்டம்பர் 16) ஜார்ஜ் மக்லெல்லன் தன்னுடைய பெரும்பாலான வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்துவிட்டார். ஆனாலும் லீயிடம் 1,00,000 வீரர்களுக்கு மேல் இருப்பதாகக் கற்பனையில் இருந்தார். எனவே தேவைக்கும் அதிகமான எச்சரிக்கையுடன் இருந்தார். அன்றைய தினத்தையும் தயக்கத்தில் இருக்கவே, அதற்குள் லீயின் படைகள் அங்கே இன்னமும் வந்து சேர்ந்தன.
செப்டெம்பர் 17ம் தேதி காலையில் சண்டை ஆரம்பித்தது. தன்னுடைய பொதுவான போர் திட்டத்தை, தனது தளபதிகளிடம் விளக்காமல், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே உத்தரவுகளைப் பிறப்பித்தார். எனவே, போரின் போது அவரது தளபதிகளுக்கே அருகில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. லீயின் படையை விட இரண்டு மடங்கு வீரர்கள் இருந்தாலும், லீயால் தன்னுடைய படையைக் கொண்டு அனைத்து தாக்குதல்களையும் சமாளிக்க முடிந்தது.
காலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சண்டை முதலில் இருந்தே மிகவும் பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அருகே இருந்த சோளக்காட்டில் ஆரம்பித்த சண்டையில், துப்பாக்கி ரவைகளால் மொத்த சோளக்காடும் வெட்டி வீழ்த்தப்பட்டது. அங்கிருந்து கூட்டமைப்பின் படையினர் முன்னேற முயன்று கொண்டிருந்த சாலையின் அருகே சண்டை தீவிரமானது. அங்கே இரண்டு பக்கங்களும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், கடுமையாக அருகருகே சுட்டுக்கொண்டு அந்த இடமே ரத்தத்தால் நனைந்திருந்தது.
நண்பகலுக்கு மேல் சண்டை மெதுவாக அமெரிக்க ஒன்றியத்தின் பக்கமாகத் திரும்ப ஆரம்பித்தது. ஆனாலும் லீயின் வீரர்கள் ஓர் அங்குல இடத்தையும் ரத்தம் சிந்தாமல் கொடுக்கவில்லை. போர்க்களம் முழுவதும் வீரர்களின் ஓலம் பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
ஜார்ஜ் மக்லெல்லனின் தளபதிகள் தங்களது இழப்புகள் அதிகமாக இருந்ததால், இன்னமும் வீரர்களைப் போர்முனைக்கு அனுப்பக் கேட்டுக்கொண்டார்கள். ஜார்ஜ் மக்லெல்லன் ‘என்னால் உதவமுடியாது. என்னிடம் வீரர்கள் இல்லை’ என்று கூறிவிட்டார். உண்மையில் அவர் லீயின் பதில் தாக்குதலை எதிர்பார்த்துக் கிட்டத்தட்ட 50000 வீரர்களைப் பின்னால் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்தார். இதுவே பெரும் வெற்றிக்கும், சாதாரண வெற்றிக்கும் இடையிலான வித்தியாசமாக இருந்தது.
மாலை 5.30 மணிக்கு எல்லாம் சண்டை முடிந்துவிட்டது. ஒன்றியப் படைகள் வெற்றி பெற்றுவிட்டன. லீயின் படைகளைப் பின்னோக்கி தள்ளிவிட்டன. அன்றைய இழப்புகள் இரண்டு பக்கங்களுக்கும் அதிகமாக இருந்தது. இரண்டு பக்கங்களுக்கும் சேர்த்துக் கிட்டத்தட்ட 23000 வீரர்கள் இறந்தோ, காயம்பட்டோ, காணாமல் போகவோ செய்திருந்தார்கள். அதில் 7700 வீரர்கள் இறந்து போயிருந்தார்கள். அதற்கு முந்தைய எப்போதையும் விட அதிகமான அமெரிக்க வீரர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டிருந்தார்கள். போரின் பயங்கரத்தில் ஷைலோவை பின்னுக்குத் தள்ளியது. ஆனால் இன்னமும் போர் முடிவுக்கு வரவில்லை.
தன்னுடைய படையில் அதிகமான வீரர்களை இழந்திருந்தாலும், ராபர்ட் லீ தன்னுடைய முகாமை நகர்த்தவில்லை. இதை லீ எதிர்த்தாக்குதல் நடத்தத் தயாராவதாக எண்ணிய ஜார்ஜ் மக்லெல்லன் வழக்கம் போல, தயக்கத்தில் காத்திருந்தார்.
ஆச்சரியகரமாக, மறுநாள் காலை வரை அங்கேயே காத்திருந்துவிட்டு, பின்னரே லீ அங்கிருந்து பின்வாங்கினார்.
பெரும் வெற்றியை அறிவித்த ஜார்ஜ் மக்லெல்லன், அது முழுவதும் தன்னாலேயே சாத்தியமானது என்றும், ஒன்றிய அரசு தனக்குச் சரியாக உதவவில்லை என்றும் எழுதினார்.
லிங்கனின் பொறுமை முடிவுக்கு வந்திருந்தது. லீயின் படைகளைத் துரத்திச் சென்று பிடிக்குமாறு ஆணையிட்டும் ஜார்ஜ் மக்லெல்லன் அதைச் செய்யவில்லை. நல்ல வாய்ப்பை இழந்துவிட்டதை லிங்கன் மன்னிக்க விரும்பவில்லை.
விடுதலைப் பிரகடனத்திற்கான அவரது அடுத்த நகர்வை ஆன்டிடமில் கிடைத்த வெற்றிச் சாத்தியப்படுத்தியது.
(தொடரும்)
ஆதாரம்:
1. Landscape Turned Red: The Battle of Antietam – Stephen Sears
2. Brady’s photos of Antietam – http://www.loc.gov/pictures/item/2005688698/