அடிமை முறை மனிதனின் சுயநலத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டது. அதை எதிர்ப்பது, நீதியின் மீதான அவனது காதலினால் எழுப்பப்பட்டது.
– ஆபிரகாம் லிங்கன்.
அலெக்ஸி டி டாக்வில் (Alexis de Tocqueville) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். பின்னாளில் பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். அவரது இளவயதில் 1831ஆம் வருடம் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். அதன் முடிவில் அமெரிக்காவில் ஜனநாயகம் குறித்துப் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் அமெரிக்காவில் வசிக்கும் மூன்று இனங்களையும் – வெள்ளையர், கறுப்பர், செவ்விந்தியர்கள் – அவர்களுக்கு இடையே நிலவிய உறவுகளைக் குறித்தும் எழுதியிருக்கிறார்.
அந்தப் புத்தகத்தில் அவர் ஐரோப்பிய வெள்ளையர்கள் மற்ற இரண்டு இனங்களையும் எப்படிப் பார்த்தார்கள் என்றும், கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட காலனி எப்படி அடிமை முறையால் சீரழிகிறது என்பதையும் அலசியிருக்கிறார். அடிமை முறையை ஒழிப்பதில் இருக்கும் சிக்கல்களையும் கூறுகிறார்.
‘அமெரிக்காவின் பழைய, உண்மையான நண்பனான எனக்கு அடிமை முறை அந்த நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து, அதன் புகழை அழித்து, அதன் எதிரிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, அதன் வருங்கால ஒற்றுமையைக்கூடப் பாதிக்கும் என்று தோன்றுகிறது. ஒன்றியத்தின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு எங்கே அடிக்கவேண்டும் என்று அதன் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்கும். ஒரு மனிதனாக, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் காட்சி என் மனதை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. கடவுள் பூமியில் இருப்பவர்கள் அனைவரையும் சமமாகப் படைத்தது போல, அந்த நாட்டிலும் சட்டம் அனைவரையும் சமமாக நடத்தும் காலம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.’
டாக்வில் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அது அனைத்து மக்களையும் சரி சமமாகப் பாவிப்பதில் இருக்கிறது என்கிறார். இந்தச் சமத்துவத்தை நோக்கிய பாதையே மனிதகுல வரலாற்றில் ஜனநாயக நாடுகளின் பங்கு என்றும் கூறுகிறார்.
ஐரோப்பிய கலாசாரத்தைத் தொடரும் நாடுகளில், ஜனநாயகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வரும் அமெரிக்காவில் மட்டும் அடிமை முறை தொடர்ந்தது அவருக்கு வருத்தத்தைத் தந்தது என்றும் கூறுகிறார்.
0
ஆபிரகாம் லிங்கன் எல்லா நேரங்களிலும் அடிமை முறையை ஒழிப்பதை ஆதரிக்கவில்லை. அவர் அமெரிக்காவின் அரசியல் நெளிவு சுளிவுகளை அறிந்தவர். எதை வெளிப்படையாகப் பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என்றெல்லாம் நன்றாக அறிந்தவர். எனவே அவரது அரசியல் நிலைப்பாடு மாறிக் கொண்டே இருந்தது.
ஆனால் அவர் அடிமை முறைக்கு எதிரான குடும்பத்தில் பிறந்தவர், அவரது தந்தையும் அடிமை முறைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே லிங்கன் அடிமை முறையை அமெரிக்க வாழ்வு முறையில் இருக்கும் களங்கமாகவே பார்த்தார்.
ஆனால் அதை ஒழிப்பது என்றால் என்ன? ஒழித்த பின்னர், அந்த அடிமைகளின் நிலை என்னாகும்? அவர்களைப் பணம் கொடுத்து வாங்கியவர்களின் இழப்பிற்குப் பதில் என்ன? போன்ற கேள்விகளெல்லாம் எழுந்து கொண்டிருந்தன. அமெரிக்காவின் விவாதங்கள் பெரும்பாலும் இப்படியே திசை திருப்பப்பட்டிருந்தன.
லிங்கனும் வக்கீலாக மாறி, அரசியல் ஈடுபாட்டைத் தீவிரமாக எடுக்க ஆரம்பித்த பின்னர், இது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்தார். அவர் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முந்தைய உரைகளில் இது குறித்த பல்வேறு நிலைப்பாடுகளை அலசியிருக்கிறார். இந்த நிலைப்பாடுகள் என்ன என்பதைச் சிறிது பார்த்துவிடுவோம்.
ஒன்று, விடுதலை செய்யப்படும் அடிமைகளுக்கான நஷ்டஈட்டை அவர்களின் சொந்தக்காரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது. அதாவது, அடிமைகளின் சொந்தக்காரர்களிடம் இருந்து அரசாங்கம் அவர்களை வாங்கி, விடுதலை செய்வது போல. இது சிறிய அளவில் சில இடங்களில் நடக்கவும் செய்தது. ஆனால் அப்போதிருந்த 30 லட்சத்திற்கும் அதிகமான அடிமைகளுக்கு நஷ்டஈடு கொடுப்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை.
அடுத்ததாக, விடுதலை செய்யப்படும் அடிமைகளைத் திரும்பவும் ஆப்ரிக்காவிற்கு அனுப்பிவிடுவது. அதாவது அவர்களது எங்கிருந்து கொண்டு வரப்பட்டார்களோ அங்கேயே அனுப்பி விடுவது. இதற்காக மேற்கு ஆப்பிரிக்காவில் இடம் வாங்கப்பட்டு, லைபீரியா என்ற பெயரில் ஒரு பிரதேசம் ஏற்படுத்தப்பட்டது. இங்கே அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்காவிற்குத் திரும்ப விருப்பப்படும் அடிமைகள், விடுதலை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே அவர்களுக்குச் சிறிது நிலமும் தரப்படும்.
இந்தத் திட்டமும் தோல்வியடைந்தது. அப்போது அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த அடிமைகள் பலரும் மூன்றாவது, நான்காவது தலைமுறையினர். அவர்களுக்கு ஆப்பிரிக்கா பற்றி எதுவும் தெரியாது. அமெரிக்காவே அவர்களது சொந்த மண். இந்தத் திட்டத்தை லிங்கன் ஒரு நேரத்தில் மிகவும் ஆதரித்துப் பேசி வந்தார். ஆனால் கறுப்பர்கள் இது குறித்து ஆர்வம் காட்டவில்லை என்பதால் அவரும் அதைக் கைவிட்டுவிட்டார்.
அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் லிங்கன் மீண்டும், மீண்டும் வலியுறுத்தியது, தான் அடிமை முறைக்கு எதிரானவன் அல்ல என்பதுதான். அதாவது, தான் புதிய பிரதேசங்களிலும் மாநிலங்களிலும் அடிமை முறை பரவுவதை எதிர்த்தாலும், அப்போது அடிமை முறை சட்டபூர்வமானதாக இருந்த தென் மாநிலங்களின் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் தான் கொண்டு வரப்போவதில்லை என்றுதான் கூறி வந்தார். அவரது முதல் பதவியேற்பு பேச்சிலும் அதையே வலியுறுத்தினார்.
ஆனால் குடியரசுக் கட்சியின் நிலைப்பாடு, இவை எல்லாவற்றையும் கலந்ததாக இருந்தது, அதன் பல்வேறு பதவிகளில் அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் இருந்தார்கள். லிங்கனை போல மதில் மேல் பூனையாக இருந்தவர்களும் இருந்தார்கள். ஆனால் ஏதேனும் ஒரு வகையில் அடிமை முறையைச் சிறிது, சிறிதாகவோ, முற்றிலுமாகவோ ஒழித்துக் கட்டுவதே அதன் முக்கியக் கொள்கையாக இருந்தது.
விடுதலைப் பிரகடனத்தை லிங்கன் அமைச்சரவைக்கு வாசித்துக் காட்டுகிறார்.
இதனாலேயே லிங்கனிற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது. தென் மாநிலங்களுக்கு மிகவும் அதிகமாக விட்டுக்கொடுக்கிறார் என்றும், மிகவும் மிதவாதியாக இருக்கிறார் என்பதும் அவர்களது முக்கியக் குற்றச்சாட்டுகளாக இருந்தன.
0
ஆனால் உள்நாட்டுப் போரின் துவக்கம் இவை அனைத்தையும் திருப்பிப் போட்டது. சமரச முயற்சிகள் அனைத்தையும் போர் முறியடித்துவிட்டது. இனி அமெரிக்காவில் முழுவதுமாக அடிமைமுறை ஒழிக்கப்பட வேண்டும் அல்லது அமெரிக்கா முழுவதும் அடிமைமுறை சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும். வேறு எந்த விதத்திலும் சண்டை முடியப்போவதில்லை என்பதை லிங்கனும் உணர்ந்தார்.
அவரது மகன் வில்லியின் மரணத்தின் பின்னரான நாட்களில் லிங்கன் வாழ்வின் அவலங்கள் குறித்தும், அடிமை முறையை ஒழிப்பது குறித்தும் தீவிரமாக யோசித்தார். அப்போதிருந்த சில சட்ட சிக்கல்களைத் தீர்க்க, முன்பே கூறியது போல, இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனாலும் லிங்கனால் அடிமைகளை நேரடியாக விடுவிக்க முடியாது. அவர்கள் குறித்துச் சட்ட சாசனத்தில் எதுவும் இல்லை. அது வரையிலான சட்டங்கள், தீர்ப்புகள் எதுவும் சாதகமாக இல்லை. மேலும், எல்லை மாநிலங்கள் அடிமைகளை விடுதலை செய்வதை மாநில உரிமைகள் என்று சொல்லி எதிர்க்கவும் செய்யலாம். எனவே, இவற்றை எல்லாம் மீறிய ஒரு சரியான வழி தேவைப்பட்டது.
ஜூலை 1862இல் லிங்கன் அந்த வழியைக் கண்டறிந்து விட்டார். இப்போது அவருக்குப் போரில் ஒரு வெற்றித் தேவைப்பட்டது. அதன் பின்னரே அவர் அறிவிக்கப்போகும் பிரகடனத்திற்கு மதிப்பு இருக்கும்.
ஆன்டிடம் சண்டை அவர் எதிர்பார்த்த வெற்றியை மிகுந்த இழப்பிற்கு இடையே கொடுத்தது.
0
அடிமை முறையை ஒழிப்பதையும், போரில் வெற்றி பெறுவதையும் ஒன்றாகவே லிங்கன் பார்த்தார். ஒன்றில்லாமல் மற்றொன்று சாத்தியமில்லை என்பதை உணர்ந்தது மட்டுமன்றி, மக்களுக்கும் அதையே காரணமாகத் தெரிவித்தார்.
ஜூலை 1862இல் அவர் தன்னுடைய விடுதலைப் பிரகடனத்தின் முதல் வரைவை வில்லியம் சீவர்டிடம் காட்டினார். சீவர்ட் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அடிமைகளை விடுதலை செய்வதன் மூலம், தென் மாநிலங்களில் பெரும் குழப்பம் நேரிடும் என்றும், அதையே காரணம் காட்டி, ஐரோப்பிய நாடுகள் போரின் உள்ளே நுழைந்துவிடலாம் என்றும் சீவர்ட் எண்ணினார். ஆனாலும் தான் பின்வாங்க போவதில்லை என்று லிங்கன் தெரிவித்துவிட்டார்.
தான் பிரகடனத்தை எழுதியதன் பின்னணியை லிங்கன் ஒரு கடிதத்தில் தெரிவித்தார்.
‘போர் ஆரம்பித்த பின்னர், ஒன்றரை வருடங்களுக்கு நான் அடிமை முறையைத் தொடவேயில்லை. அதைப் பற்றி யோசிப்பது என்று முடிவெடுத்தவுடன், நான் போரிட்டுக் கொண்டிருந்த மாநிலங்களுக்கும், மக்களுக்கும் நூறு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அவர்கள் நல்ல குடிமகன்களாகத் திரும்பிவிட்டால், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்தேன். ஆனால் அவர்கள் அதைத் தட்டிக்கழித்து விட்டார்கள். எனவே போர்க்காலத் தேவையின் பொருட்டு, இந்தப் பிரகடனத்தை அறிவித்துவிட்டேன். அறிவித்துவிட்டதால், அதிலிருந்து பின் வாங்கமாட்டேன்.’
மாநில உரிமைகள் பற்றிய கேள்விகளைத் தவிர்க்க, அடிமை முறை ஒழிப்பைப் போர்க்காலத் தேவையாகக் கட்டமைத்தார், எனவேதான் செப்டெம்பர் 22, 1862 அன்று அவர் தனது அமைச்சரவையைக் கூட்டி, விடுதலைப் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். 1863ஆம் வருடம், ஜனவரி 1 முதல் அந்தப் பிரகடனம் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
0

விடுதலைப் பிரகடன நினைவுச் சிலை
விடுதலைப் பிரகடன நினைவுச் சிலை, லிங்கன் பூங்கா, வாஷிங்டன் நகரம். விடுதலை அடைந்த அடிமைகள், தங்களது சம்பளத்தை நன்கொடையாகக் கொடுத்து அமைத்தது.
அப்போது 30-35 லட்சம் அடிமைகள் அமெரிக்கா முழுவதும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போரிட்டுக் கொண்டிருக்கும் தென் மாநிலங்களில் இருந்தார்கள். இவர்களையே லிங்கனின் பிரகடனம் விடுதலை செய்தது. ஆனாலும், அப்போது தென் மாநிலங்கள் எல்லாம் போரிட்டுக் கொண்டிருந்ததால், பிரகடனத்தை எந்த விதத்திலும் அந்த மாநிலங்களில் அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.
ஆனால், பிரகடனம் லிங்கனின் நல்லெண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்தது. வடமாநிலங்களில் இருந்த கறுப்பர் இனத்தலைவர்கள் அனைவரும் போரில் ஈடுபடக் கறுப்பர்களை ஊக்கப்படுத்தினார்கள். இதுவரை மாநில உரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் குழப்பத்தில் இருந்த போர், இப்போது தெளிவாக அடிமை முறையின் தேவை பற்றியதாக மாறியது.
போரின் முடிவிற்குள், ஒன்றிய ராணுவத்தில் 2,00,000 கறுப்பர்கள் போர்வீரர்களாகப் பணியாற்றியிருந்தார்கள். இவர்கள் போரின் போக்கிற்கும், முடிவிற்கும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார்கள்.
நாடு முழுவதும் கறுப்பர்கள் டிசம்பர் 31, 1862 அன்று மாலை ஒன்றாகக் கூடி வர போகும் விடுதலையை எதிர்நோக்கி ‘காத்திருக்கும் திருவிழாக்களை’ நடத்தினார்கள். அன்றிரவு 12 மணிக்கு தங்களுக்கும், தங்களது இனத்தவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலையைக் கொண்டாடினார்கள்.
0
ஆனாலும் போரின் முடிவில், போர்க்காலத் தேவையான இந்தப் பிரகடனம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் அனைவரிடமும் இருந்தது. அதை லிங்கனும் உணர்ந்தே இருந்தார். பிரகடனத்தைச் சட்டமாக இயற்றி, அரசியல் சாசனத்தில் சேர்த்தாலே ஒழிய, பிரகடனத்தினால் எந்தப் பயனும் இல்லை என்பது அவரது வக்கீல் மனதிற்குத் தெரிந்தே இருந்தது.
இப்படியே அமெரிக்கச் சட்ட சாசனத்தின் பதிமூன்றாவது திருத்தம் குறித்த வேலைகள் ஆரம்பித்தன. ஆனால் அதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
(தொடரும்)
ஆதாரம்
1. Democracy in America – Alexis de Tocqueville – Available Online – http://xroads.virginia.edu/~Hyper/DETOC/toc_indx.html
2. Preliminary Emancipation Proclamation – https://www.nysl.nysed.gov/ep/transcript.htm
3. Team of Rivals: The Political Genius of Abraham Lincoln – Doris Kearns Goodwin

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், ‘1877 தாது வருடப் பஞ்சம்.’ தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.