Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

விக்ஸ்பர்க் - முதல் கட்ட நடவடிக்கை

எவ்வளவு நிலங்களை இவர்கள் வைத்துள்ளார்கள், அனைத்திற்கும் விக்ஸ்பர்க்தான் சாவி! அந்தச் சாவியை நமது பையில் போட்டுக் கொள்ளும் வரை போரை முடிக்க முடியாது.
– ஆபிரகாம் லிங்கன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும் அமெரிக்க எழுத்தாளர்களுள் முதன்மையானவர் மார்க் ட்வைன். 1835இல் பிறந்த மார்க் ட்வைனின் தந்தை அடிமைகளை வைத்திருந்தவர். தன்னுடைய 25வது வயதில், மிஸ்ஸிஸிப்பி நதியில் செல்லும் படகுகளை நடத்தி செல்பவராக, நியூ ஆர்லியன்ஸ் நகரில் வாழ்ந்து வந்தார். அப்போது அவரது பெயர் சாமுவேல் கிளெமென்ஸ். அவரது இலக்கியப் பயணம் இன்னமும் ஆரம்பமாகவில்லை.

1861இல் அவரது லூசியானா மாநிலம் ஒன்றியத்தில் இருந்து பிரிந்தது. தன்னுடைய விசுவாசம் எங்கே என்பதில் மார்க் ட்வைன் அதிகம் குழம்பவில்லை. தன்னுடைய மாநிலத்தின் சில பகுதிகளை ஒன்றிய படைகள் கைப்பற்றிவிட்டதை அறிந்த அவர், கூட்டமைப்பின் படையில் சேர முடிவு செய்துவிட்டார்.

லூசியானா மாநிலத்தின் ஆளுநர் 50000 வீரர்களை வேண்டி அறைகூவல் விடுத்தார். அதற்கு பதிலாக, மார்க் ட்வைன், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சிறிய படைப்பிரிவை உருவாக்கி, மாநிலத் துணைப்படையில் சேர்ந்து கொண்டார். அவர்களது ராணுவப் பயிற்சி தொடங்கியது.

ஆனால் அவரது ராணுவ அனுபவம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இரண்டே வாரங்களில், பல வேடிக்கையான அனுபவங்களுக்கு பின்னர், அவர்களது இடத்தை நோக்கி ஒன்றிய படைகளுடன் கர்னல் ஒருவர் வருவதாக கேள்விப்பட்டார். உண்மையான போர் அருகில் வருவதைக் கேட்டவுடன், மார்க் ட்வைனின் வீரம் ஓடி ஒளிந்துகொண்டது.

தன்னுடைய படையின் தளபதி மேஜர் ஹாரிஸிடன் சென்று தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். கோபமடைந்த ஹாரிஸ் அவரைத் திரும்பவும் போர்முனைக்கு செல்லுமாறு கூறினார். ஆனால் ஒன்றியத் தளபதி ஒருவர் படைகளுடன் வருவதை தெரிவித்து, தன்னுடைய வீட்டிற்குச் செல்வதை மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறி படையில் இருந்து விலகி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்தக் கதையில் இறுதியில் மார்க் ட்வைன், இப்படியாக எழுதுகிறார்.

‘காலப்போக்கில் என்னைப் போரில் இருந்து பயமுறுத்தி ஓடச் செய்து, தெற்கு மாநிலங்களின் கனவை உடைத்த கர்னல் யார் என்று பின்னர் தெரிந்து கொண்டேன் – ஜெனரல் கிராண்ட். என்னைப் போலவே அவரும் யார் என்று தெரிந்திராத நாட்களில், அவரைச் சில மணி நேரங்களில் நேரே சந்தித்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

’அப்போது யார் வேண்டுமென்றாலும், ‘கிராண்ட்? – யூலிசிஸ் எஸ். கிராண்ட்? இதற்கு முன் அந்தப் பெயரை கேள்விப்பட்டதில்லையே’ என்றுதான் சொல்லியிருப்பார்கள். அப்படியான கேள்வியை கேட்கக்கூடிய காலமும் ஒன்று இருந்தது என்பதை இப்போது நம்பத்தான் முடியாது. ஆனால் அப்படியான காலமும் இருக்கத்தான் செய்தது. நானும் அவரும் சில மைல்கள் இடைவெளியில், சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. நான்தான் அவருக்கு நேரெதிர் திசையில் சென்றுவிட்டேன்.’

அவருடைய இரண்டு வார கூட்டமைப்பு படை சேவைக்காக ட்வைன் பின்னாளில் வெகுவாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அதைக் கொண்டு அவர் எழுதிய வேடிக்கையான சிறுகதைக்காக அவரை நாம் மன்னித்து விடலாம்.

0

1862இன் இறுதியில் மேற்கு ஒன்றியப் படைகளின் தளபதி ஜெனரல் ஹென்றி ஹாலக், அமெரிக்க ஒன்றியப் படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு யுலிஸிஸ் கிராண்ட்டும் மேற்கு ஒன்றியப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

மிஸ்ஸிஸிப்பி நதியின் கரையில் இருந்த விக்ஸ்பர்க் நகரைக் கைப்பற்றுமாறு கிராண்டிற்கு உத்தரவிடப்பட்டது.

0

மிஸ்ஸிஸிப்பி நதி கிட்டத்தட்ட அமெரிக்காவை இரண்டாகப் பிரிக்கிறது, நதியின் உள்பகுதி வரை கப்பல்கள் செல்ல முடியும் என்பதால், பெருமளவிலான வர்த்தகம் நாட்டின் உள்பகுதியில் இருந்து நதியின் வழியே நடந்து கொண்டிருந்தது.

1862ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கக் கப்பற்படை நதியின் கழிமுகத்தில் இருக்கும் பெரும் துறைமுகமான நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கைப்பற்றியிருந்தது. நதியின் வடபகுதியையும், தென் பகுதியையும் ஒன்றியம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் இருந்த விக்ஸ்பர்க் நகரில் இருந்து போர்ட் ஹட்சன் வரையிலான 200 மைல் தொலைவு மாநிலக் கூட்டமைப்புப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்தது.

பெரும்பாலான மாநிலக் கூட்டமைப்பின் மாநிலங்கள் நதியின் கிழக்கில் இருந்தாலும், பெரிய மாநிலங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிஸ்ஸிஸிப்பி, லூசியானா முதலியவை நதிக்கு மேற்கில் இருந்தன. இவை மற்ற மாநிலங்களுக்குத் தேவையான உணவை நதியில் இருந்த 200 மைல் இடைவெளியின் வழியே அனுப்பிக் கொண்டிருந்தன.

டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து கால்நடைகள், இறைச்சி, லூசியானா மாநிலத்தில் இருந்து உப்பு, மீன்கள் போன்றவை கிழக்கில் இருந்த மாநிலங்களுக்கு விக்ஸ்பர்கின் வழியே சென்று கொண்டிருந்தன. இந்த 200 மைல் இடைவெளியைக் கைப்பற்றுவது, கிழக்கில் நிகழும் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான முதல் படியாகும்.

ஆனால் விக்ஸ்பர்க் அவ்வளவு எளிதில் கைப்பற்றக்கூடிய நகரம் அல்ல. நகரின் வடபகுதியில் பெரும்பாலும் சதுப்பு நிலங்களும் சிறு நீர்நிலைகளும் இருந்தன. அங்கே வீரர்கள் அணிவகுத்து வருவதற்கான பாதைகள் இல்லை. நதி குதிரை லாடம் போல வளையும் இடத்தில், 200 அடி உயரமான குன்றின் மீது நகரின் அமைந்திருந்தது. நதியை நோக்கியிருந்த பகுதியில், பல பீரங்கிகள் உயரத்தில் அமைந்திருந்தன.

எனவே நதியில் கப்பல்கள் மூலமாக செல்வதும், நகரைத் தாக்குவதும் சாத்தியமில்லை. நகரின் கிழக்கே மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் தலைநகரான ஜாக்சன் 40 மைல் தொலைவில் இருந்தது. அத்தோடு விக்ஸ்பர்க் நகரின் வடபகுதியில் இருந்த சதுப்பு நிலங்களின் இடையே யாசூ என்னும் கிளை நதியும் சென்று கொண்டிருந்தது. எனவே கிராண்டின் படை இருந்த வடபகுதியில் இருந்து விக்ஸ்பர்க் நகரை நெருங்குவதே சிரமம்.

ஏற்கெனவே ஒருமுறை நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கைப்பற்றியவுடன், அதன் கப்பற்படை தளபதி கப்பல்கள் மூலமாக விக்ஸ்பர்க் நகரைத் தாக்கி கைப்பற்ற முயன்றார். ஆனாலும் விக்ஸ்பர்க் நகரின் பீரங்கிகளின் தாக்குதலை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கி விட்டார்.

0

விக்ஸ்பர்க் நகரின் மீதான தாக்குதலை ராணுவ ஆய்வாளர்கள் இப்போது இரண்டு பகுதிகளாகப் பிரித்து படிக்கிறார்கள். முதல் பகுதியில் விக்ஸ்பர்க் நகரை நோக்கிய முன்னேற்றமும் இரண்டாவது பகுதியில் கிராண்ட் விக்ஸ்பர்கில் நடத்திய தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் பகுதி 1862 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கிறது. கிராண்ட் தன்னுடைய படைகளை இரண்டாகப் பிரித்து, ஒன்றை ஷெர்மன் தலைமையில் 32000 வீரர்கள் நதியை அணைத்து விக்ஸ்பர்கை நோக்கிச் செல்ல, கிராண்ட் இன்னொரு 40000 வீரர்களுடன் சதுப்பு நிலத்தின் வழியே விக்ஸ்பர்கை நோக்கி வர வேண்டியது. இரண்டு படைகளும் ஒன்றாக நகரை இரண்டு திசைகளில் இருந்து தாக்குவது என்பதுதான் திட்டம்.

அவர்களுக்குத் துணையாக, நதியின் வழியே அட்மிரல் போர்ட்டர் தன்னுடைய கப்பல்களுடன் டென்னிசியில் இருந்து வந்திருந்தார். அப்படியே டிசம்பர் மாதம் படைகள் நகர ஆரம்பித்தன. இப்போது மாநிலக் கூட்டமைப்பின் படைகளின் நிலையைப் பார்த்துவிடுவோம்.

விக்ஸ்பர்க் நகரின் பாதுகாப்பிற்கு ஜெனரல் பெம்பெர்ட்டன் பொறுப்பாக இருந்தார். மாநிலக் கூட்டமைப்பின் மேற்குப் படைகள் முழுமைக்கும் தலைமை தளபதியாக நவம்பர் மாதத்தில் ஜோசப் ஜான்ஸ்டன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடமும் அதே அளவு வீரர்கள் இருந்தாலும், அவர்கள் இரண்டு இடங்களில் பிரிந்து இருந்தார்கள். இவர்களுடன் குதிரைப்படைகளின் தளபதியாக நாதன் பாரஸ்ட் (Nathan Forrest) இருந்தார்.

உள்நாட்டுப் போரில் போரிட்ட பலரும் எந்த விதமான போர் பயிற்சியும் இல்லாமல் வந்தவர்கள். நாதன் பாரஸ்டும் அப்படியே. ஆனால் குதிரைப் படைகளை வழிநடத்துவதில் மிகவும் திறமை வாய்ந்த அவர், ஒன்றியப் படைகளுக்குப் பெரும் தொந்தரவைக் கொடுத்து வந்தவர்.

0

இதற்கிடையே, வாஷிங்டனில் வழக்கம்போல அரசியல் நடந்து கொண்டிருந்தது. ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியான ஜெனரல் மக்கிளேர்நண்ட் தன்னை மேற்குப் படைகளின் தளபதியாக நியமிக்க கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் லிங்கன் அவரை கிராண்டின் கீழான தளபதியாக நியமித்துவிட்டார்.

தன்னுடைய படைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட மக்கிளேர்நண்ட், ஷெர்மனுடன் அணிவகுத்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் முதலில் விக்ஸ்பர்க் நகரின் வடபகுதியில் இருந்த சிக்கசா சதுப்பு நிலத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே விக்ஸ்பர்கின் முதல் சண்டை நிகழ்ந்தது.

கிராண்டின் படைகளின் நகர்வைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெனரல் பெம்பெர்ட்டன், இன்னமும் அவரது திட்டத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். எனவே, தனக்கு அருகே வந்திருந்த ஷெர்மனின் படையின் மீது தாக்குதலைத் துவக்க ஆர்வத்தோடிருந்தார்.

சிக்கசா சதுப்பு நிலத்தில் டிசம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் ஒன்றியப் படை, மலைகளும், சதுப்பு நிலங்களும் நிறைந்த பகுதியில் எந்த விதமாகத் தாக்குதலை முன்னெடுப்பது என்ற குழப்பத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தது. ஆனால் நிலத்தை நன்கறிந்திருந்த மாநிலக் கூட்டமைப்பின் படைகள் தங்கள் மீது நிகழ்ந்த தாக்குதலை தடுத்து நிறுத்தின.

இன்னொரு புறம், நிலத்தின் வழியே வந்து கொண்டிருந்த கிராண்டின் படைகளும் நல்ல நிலைமையில் இல்லை. படைகள் முன்னேறும் பொழுது, அவற்றுக்கான உணவும் மற்ற பொருட்களும் தொடர்ச்சியாக கிடைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது இன்றியமையாதது. அல்லது எதிரியின் நிலத்திற்குள் ஆழமாக ஊடுருவும் பொழுது, படைகள் பட்டினிக் கிடக்க நேரிடலாம். எனவே, படைகள் முன்னேற, முன்னேற ஆங்கங்கே பொருட்களைச் சேகரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டியதும் அவசியம்.

கிராண்டின் படைகள் முன்னே செல்லச் செல்ல, கூட்டமைப்பின் குதிரைப் படை, அவர்களுக்கு பின்னே சென்று பொருட்களை ஏற்றி வரும் வண்டிகளையும், பெருமளவு பொருட்களைச் சேகரித்து வைத்திருந்த ஹாலி ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தையும் தாக்கி அழித்து விட்டார்கள். எனவே கிராண்டின் படைகளின் முன்னேற்றம் அப்படியே நின்றுவிட்டது.

0

கிராண்டின் படைகள் சதுப்பு நிலங்களுக்குள்ளும் நீர்நிலைகளுக்கு இடையிலும் இருந்தனர். கிராண்டின் முதல் வேலை அவர்களை அங்கிருந்து மீட்டு, மிஸ்ஸிஸிப்பி நதியின் கரைகளில் இருந்த குன்றுகள் ஒன்றில் எப்படியாவது பாதுகாப்பாக கொண்டு செல்வது. அடுத்து, விக்ஸ்பர்கை நிலத்தின் வழியே எப்படியாவது தாக்க முயல்வது. இது முன்னதை விட மிகவும் கடினமானது.

ஜனவரி 1863இல் மழை பொழிய ஆரம்பிக்கவே, கிராண்டின் படைகள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றாலும், முன்னேறுவது தடைபட்டது. நதியிலும் நீர் வரத்து அதிகரித்து விட்டது. சதுப்பு நிலங்கள் முன்பை விட அதிகமாக சதுப்பு நிலங்களாக இருந்தன. அங்கே உற்பத்தியான கொசுக்கள் மலேரியா காய்ச்சலைப் பரப்பியது.

ஆனால் கிராண்ட் விடாப்பிடியாக எதையும் முடிப்பது என்பதில் உறுதியானவர். பின்வாங்குவது என்பதே அவரது அகராதியில் கிடையாது. தோல்விகளைத் தாற்காலிக பின்னடைவுகளாக மட்டுமே பார்ப்பவர். ஒரு வழி அடைபட்டால், இன்னொரு வழி, அடுத்து இன்னொன்று என்று அவர் முயற்சிகளை நிறுத்துவதே இல்லை. அதுவே இப்போதும் நடந்தது.

1863 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கிராண்ட் இவ்வாறாக ஐந்து வழிகளை முயற்சி செய்தார். அவரது நோக்கம், விக்ஸ்பர்க் நகரை நிலத்தின் வழியாக நெருங்குவது. அதற்காக அவர் நகரின் வடக்கில் இருந்த சதுப்பு நிலங்களின் வழியே செல்வதற்கான பாதைகளை உருவாக்க முயன்று கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், நதியின் வழியே தாக்குதல் நடத்த முடியாமல் செய்த விக்ஸ்பர்கின் பீரங்கிகளை தாண்டி செல்வது எப்படி என்றும் பார்த்துக் கொண்டிருந்தார். நதியின் வடக்கில் இருந்த போர் கப்பல்களை நகரின் தெற்கு பக்கமாகக் கொண்டு சென்று விட்டால், நகரை தெற்கில் இருந்து தாக்கி விடலாம் என்றும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

இதற்காக, ஒரு பக்கமாக நகரின் சதுப்பு நிலங்களின் ஊடே மூன்று வெவ்வேறு பாதைகள் உருவாக்க முயற்சி செய்யப்பட்டு கைவிடப்பட்டது. இன்னொரு புறமாக, ஷெர்மன், நகரின் அருகே குதிரை லாடம் போல வளைந்திருந்த இடத்தின் வழியே நகரின் தெற்கு பக்கத்திற்கு கால்வாய் ஒன்றை வெட்ட ஆரம்பித்திருந்தார். கிராண்ட் வடபகுதியில் இருந்து கால்வாய் வெட்ட ஆரம்பித்தார்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் பெரும் உழைப்பை எடுத்துக் கொண்டாலும், பல்வேறு காரணங்களால் தொடர முடியாமல் இடையிலேயே நின்றுவிட்டன.

இந்த ஐந்து மாதங்களில் கிராண்ட் எதையும் செய்யாமல் நேரம் கடத்துவதாகப் பத்திரிகைகள் வெகுவாக விமர்சித்தன. கிராண்ட்டை அங்கிருந்து அகற்றிவிட்டு, வேறு ஒரு தளபதியை நியமிக்க வேண்டும் என்றும் சத்தமாக கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், லிங்கன் உறுதியாக இன்னொரு முறை மறுத்துவிட்டார்.

(தொடரும்)

ஆதாரம்
1. The Private History of a Campaign That Failed – Mark Twain.

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *