Skip to content
Home » அமெரிக்க உள்நாட்டுப் போர் #23 – விக்ஸ்பர்க் முற்றுகை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #23 – விக்ஸ்பர்க் முற்றுகை

விக்ஸ்பர்க் முற்றுகை

1863 ஏப்ரல் மாதம் கிராண்ட் இன்னொரு திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார். இந்தமுறை அவர் அதுவரை இருந்த போர் விதிகளை மீறுவது என்று முடிவு செய்திருந்தார்.

தன்னுடைய படைகளுடன் மிஸ்ஸிஸிப்பி நதியைக் கடந்து மேற்கே சிறிது தூரம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி தெற்கே விக்ஸ்பர்க் நகரின் தெற்கே 35 மைல் தொலைவில் இருந்த கிராண்ட் கல்ப் என்ற இடத்தில் நதியைத் திரும்பவும் கடந்து, மேலே திரும்பி விக்ஸ்பர்கை தெற்கில் இருந்து தாக்க திட்டம் வகுத்தார் கிராண்ட்.

அத்தோடு, இந்த முறை கைகளில் எடுத்து செல்லக் கூடிய பொருட்களைத் தவிர வேறெதையும் எடுத்துச் செல்வதில்லை என்றும், உணவு மற்றும் ஏனைய தேவைகளை அங்கங்கே ‘பெற்றுக் கொள்வது’ என்றும் சொல்லி விட்டார்.

அதே நேரம், ஏப்ரல் 16ஆம் தேதி அமாவாசை இரவில், அட்மிரல் போர்ட்டர் தன்னுடைய ஏழு பீரங்கி கப்பல்களை சத்தமில்லாமல் விக்ஸ்பர்கைக் கடந்து கொண்டு வந்து விட்டார். விக்ஸ்பர்க் கோட்டையில் பீரங்கிகளை இயக்குபவர்கள், அவரது ஏழாவது கப்பல் கடக்கும்போதே, ஒன்றிய நதி கப்பற்படை தங்களை ஏமாற்றி தெற்காகச் சென்றுவிட்டதை உணர்ந்தார்கள்.

கிராண்ட்டின் படைகள், அவரது மூன்று தளபதிகள், ஷெர்மன், மக்கிளேர்நண்ட், புதிதாகப் பதவியுயர்வு பெற்றிருந்த மக்பர்ஸன் ஆகியோர் தலைமையில் அவரது திட்டத்தின்படி மேற்காகச் சென்று, தெற்கே மிஸ்ஸிஸிப்பி நதியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. விக்ஸ்பர்க்கில் இருந்த ஜெனரல் பெம்பெர்ட்டனின் கவனத்தைத் திசை திருப்ப, நகரின் வடதிசையில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 29ஆம் தேதி, கிராண்ட்டின் திட்டப்படி, அவரது படைகள் கிராண்ட் கல்ப்பிற்கு வந்து சேர்ந்தன. அவரது கப்பற்படையும் அதற்குள் வந்து சேர்ந்திருந்தது. விக்ஸ்பர்க்கில் இருந்து 35 மைல் தொலைவில் தெற்கில் எதிரி வந்துவிட்ட செய்தி, பெம்பெர்ட்டனிற்கு சென்றது. கப்பல் படை தாக்குதலைத் துவக்கியது. ஆனால் மறுபுறத்தில் இருந்து மாநிலக் கூட்டமைப்பும் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தது. சண்டை மிகவும் தீவிரமாகவே, கிராண்ட் திரும்பவும் தன்னுடைய திட்டத்தை மாற்றினார். படைகளை இன்னமும் தெற்காக நகற்றி, ப்ருய்ன்ஸ்பர்க் என்ற இடத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி நதியைக் கடந்துவிட்டார். வேகமாக வடக்காக அணிவகுத்து, போர்ட் கிப்சன் என்ற இடத்தில் இருந்த சிறு படையைத் தோற்கடித்துவிட்டு, கிராண்ட் கல்ப் நோக்கித் திரும்பினார்.

அதற்குள் கிராண்ட் கல்ப் நகரில் நடந்த சண்டையும் முடிவுக்கு வந்தது. மே 3ஆம் தேதி நகரில் இருந்து கூட்டமைப்புப் படைகள் வெளியேறி, விக்ஸ்பர்க் நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. கிராண்ட் கல்ப்பில் தன்னுடைய படைகளை ஒன்று சேர்த்த கிராண்ட், அடுத்து விக்ஸ்பர்க்கை நோக்கி செல்வார் என்று பெம்பெர்ட்டன் தயாரானார்.

ஆனால், கிராண்ட் தன்னுடைய திட்டத்தை மாற்றினார். தன்னுடைய படைகளை வடகிழக்காக நகற்றி, மிஸ்ஸிஸிப்பி தலைநகரான ஜாக்சன் நகரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

மாநிலக் கூட்டமைப்பு படைகளின் தலைமைத் தளபதியான ஜான்ஸ்டன், விக்ஸ்பர்க் நகரம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, தன்னுடைய படைகளுடன் உதவிக்கு வந்து கொண்டிருந்தார். மேலும் விக்ஸ்பர்க் நகருக்குத் தேவையான பொருட்களும் ஜாக்சன் வழியாகவே ரயில்களில் வந்து கொண்டிருந்தது. எனவே, தான் விக்ஸ்பர்க்கைத் தாக்கும்போது, தனக்குப் பின்னால் படைகள் வந்துவிடக்கூடாது என்பதாலும், தன் எதிரிகளின் படைகள் ஒன்றாகச் சேர்ந்துவிடக்கூடாது என்பதாலும் முதல் தாக்குதல் அங்கே திட்டமிடப்பட்டது.

ஷெர்மனும் மக்பர்சனும் தங்களது 23,000 வீரர்களுடன் ஜாக்சன் நகரை மே 13ஆம் தேதி வந்தடைந்தார்கள். எதிர்பார்த்தது போலவே, ஜாக்சன் நகரின் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் ஒன்றாக ரயில் வழியே குவிந்து கொண்டிருந்தன. அன்றிரவு வந்த ரயிலில், 6000 வீரர்களுடன் தலைமைத் தளபதி ஜான்ஸ்டன் வந்து சேர்ந்தார்.

ஆனால் நிலையை உடனடியாக ஆராய்ந்த ஜான்ஸ்டன், ‘காரியம் கைமீறி விட்டது’ என்று தந்தி கொடுத்துவிட்டு, உடனடியாகத் தன் படைகளுடன் திரும்பிவிட்டார். எனவே மறுநாள் (மே 14) ஷெர்மனின் படைகள் ஜாக்சன் நகரின் உள்ளே நுழைந்தபோது, அவர்களுக்குப் போரில் கிடைக்கும் வெற்றிக்குப் பதிலாக இரவில் பெய்த மழையினால் கிடந்த சகதிதான் கிடைத்தது (ஷெர்மனின் வார்த்தைகள்!).

விக்ஸ்பர்க் நகரைக் கைவிட்டுவிட்டு தன்னுடைய படைகளுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு, ஜான்ஸ்டன், பெம்பெர்ட்டனிற்கு செய்தி அனுப்பியிருந்தார். இதை அறிந்த கிராண்ட், பெம்பெர்ட்டனைத் தப்பிவிடக்கூடாது என்று தன்னுடைய படைகளை, விக்ஸ்பர்க்கில் இருந்து வெளியே செல்லும் மூன்று பாதைகளிலும் பிரித்து அனுப்பினார்.

பெம்பெர்ட்டன், தன்னுடைய 30000 வீரர்களுடன் வந்து கொண்டிருந்த பாதையில், கிராண்ட்டின் படைகள் அவரை மே 16ஆம் தேதி, சாம்பியன் ஹில் என்ற இடத்தில் மறித்தன.

போர் முனையை கிராண்ட் காலை 10 மணிக்கு வந்தடைந்தார். 11.30 மணிக்குத் தாக்குதல் துவங்கியது. முதலில் இருந்தே ஒன்றியப் படைகள் தாக்குதலை வேகமாக நடத்தின. கிராண்ட்டின் மூன்று படைகளும் அங்கே ஒன்றாகத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன. தன்னுடைய படைகளால் சமாளிக்க முடியாது என்று முடிவு செய்த பெம்பெர்ட்டன் படைகளைப் பின்வாங்கச் செய்தார். அன்றைய இரவில், ஒன்றியப் படைகள் பின்னே துரத்த, பெம்பெர்ட்டன், விக்ஸ்பர்க் நகரின் உள்ளே தனது 30000 வீரர்களுடன் தஞ்சமடைந்தார்.

கிராண்ட் நீண்ட முற்றுகையை விரும்பவில்லை. எப்படியாவது பெம்பெர்ட்டனை வெளியில் கொண்டு வந்து தோற்கடித்துவிட வேண்டும் என்றே எண்ணினார். எனவே அவரது படைகள் விக்ஸ்பர்க் நகரின் வெளியே ஒன்றாகச் சேர்ந்தவுடன், மே 19ஆம் தேதி தாக்குதலைத் துவக்கினார். தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்தாலும், விக்ஸ்பர்க்கின் பாதுகாப்பு சுவர்களையும், கோட்டைகளையும் அவர்களால் உடைத்துச் செல்ல முடியவில்லை. மே 25ஆம் தேதி, கிராண்ட் தன்னுடைய முற்றுகையைத் துவக்கினார்.

விக்ஸ்பர்க் நகரின் சுற்று பாதுகாப்பு சுவர்களும், கோட்டைகளும், அகழிகளும் கிட்டத்தட்ட ஏழு மைல் தொலைவிற்கு இருந்தது. இவை அனைத்தையும் முற்றுகையிட 12 மைல் தொலைவிற்குப் படைகள் நிறுத்தப்படவேண்டும். எனவே தனக்குக் கூடுதலாகத் துருப்புகள் வேண்டும் என்று கிராண்ட், தலைமை தளபதி ஹாலக்கிற்குக் கடிதம் எழுதினார். அவரும் இன்னமும் 5000 வீரர்களை அனுப்பி வைத்தார்.

பெம்பெர்ட்டனின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. 30000 வீரர்கள் இருந்தாலும், அவர்களில் கிட்டத்தட்ட 15000 வீரர்கள் மட்டுமே போர் முனைக்குச் செல்லும் நிலையில் இருந்தார்கள். நகரில் போருக்குத் தேவையான குண்டுகளும் துப்பாக்கிகளும் நிறைய இருந்தாலும், அவர்களிடம் உணவு சிறிதளவே இருந்தது. இதற்கிடையே அவரது தலைமைத் தளபதி ஜான்ஸ்டன், பெம்பெர்ட்டனை அங்கிருந்து வெளியேறி தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு ரகசிய செய்தி அனுப்பியிருந்தார்.

கூடுதலாக வீரர்கள் வந்திருந்தாலும், ஒன்றியப் படைகளின் முற்றுகை முழுமையாக இல்லை. குறிப்பாக நகருக்கு தெற்கே செல்லும் பாதைகளின் வழியே வெளியேறும் சாத்தியம் இருந்தது. ஆனாலும் பெம்பெர்ட்டன் அதை விரும்பவில்லை. நகரிலேயே இருந்துவிட முடிவு செய்திருந்தார்.

ஆனால் நகரில் இருந்த பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். உணவு கிடைக்கவில்லை என்பதைவிட, தினமும் நதியில் இருந்து கப்பல்கள் வீசிய ஷெல்கள் நகரில் வாழ்முடியாமல் செய்தது. எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மக்கள் குன்றுகளில் இருந்த குகைகளுக்குள் சென்று வாழ ஆரம்பித்தார்கள். நகரில் இருந்த மாடு, குதிரை, நாய் போன்ற மிருகங்கள் உணவாக மாற ஆரம்பித்தன.

ஆறு வாரங்கள் தொடர்ந்த முற்றுகை, தன்னுடைய முடிவை நெருங்கிவிட்டது. ஜூலை 3ஆம் தேதி, பெம்பெர்ட்டன் தான் சரணடைய முடிவு செய்திருப்பதை கிராண்ட்டிடம் தெரிவித்தார். முதலில் நிபந்தனையற்ற சரணாகதியை எதிர்பார்த்த கிராண்ட், 30000க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு உணவு கொடுத்து, சிறை படுத்துவதில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து, வீரர்கள், தாங்கள் போரிடுவதில்லை என்று உறுதிமொழி கொடுப்பதன் பேரில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். ஆயுதங்கள் அனைத்தையும் சரண் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க சுதந்திர தினமான, 1863 ஜூலை 4ஆம் தேதி, விக்ஸ்பர்க் நகரில் மீண்டும் அமெரிக்கக் கொடி பறந்தது. லிங்கனின் வார்த்தைகளில், ‘மிஸ்ஸிஸிப்பி தந்தை மீண்டும் தொந்தரவின்றி கடலை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.’

ஆறு மாதங்கள் நடந்த போர், கிராண்ட்டின் விடாமுயற்சியை உலகிற்கு காட்டியது. தன்னுடைய இலக்கை அடையாமல் அவர் பின்வாங்கவில்லை. இடையில் ஏற்பட்ட எல்லா தடைகளையும் தாண்டி, தான் வேண்டியதை அடைந்தார். இன்றும் கிராண்ட்டின் விக்ஸ்பர்க் நடவடிக்கைகள் ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. அங்கு மட்டுமின்றி, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி வழி நடத்த வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.

இப்படித் தலைமை பொறுப்பில் இருப்பவர்களைத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு இன்னொருவர் வாஷிங்டனில் இருந்தார். வெற்றி செய்தி கேட்டவுடன், உடனடியாக கிராண்ட்டை மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்திய லிங்கன், மிகவும் வித்தியாசமான ஒரு கடிதத்தையும் ஜூலை 13, 1863 அன்று எழுதினார்.

‘அன்புள்ள ஜெனரலுக்கு,

நாமிருவரும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்தாக எனக்கு நினைவில்லை. நீங்கள் இந்த நாட்டிற்காகச் செய்திருக்கும் மதிப்பில்லாத சேவைக்காக நான் நன்றியுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இன்னமும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் முதலில் விக்ஸ்பர்க்கை நெருங்கியவுடன், நான் நினைத்தது போலவே, நகரைச் சுற்றி சென்று, கப்பல்களையும் தெற்கே கொண்டு வந்தீர்கள்; அது போலவே, உங்களுடைய கால்வாய் வெட்டும் வேலைகள் எல்லாம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், என்னை விட உங்களுக்குச் சரியாக தெரிந்திருக்கும் என்பதால் நான் எதுவும் சொல்லவில்லை.

நீங்கள் நகருக்கு தெற்கே சென்ற பின்னர், இன்னமும் தெற்காகச் சென்று அங்கிருந்த ஜெனரல் பாங்ஸ்சின் படைகளுடன் நீங்கள் இணையவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் வடகிழக்காகத் திரும்பியதைத் தவறான செயல் என்று நினைத்தேன். எனவே இப்போது உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒத்துக்கொள்கிறேன் – நீங்கள் செய்ததுதான் சரி, நான் எண்ணியது தவறு.

தங்கள் உண்மையுள்ள,
ஆ. லிங்கன்

தன்னுடைய தவறை நேரடியாக, எழுத்தில் ஒத்துக் கொள்ளும் எத்தனை தலைவர்களை உங்களுக்குத் தெரியும்?

(தொடரும்)

ஆதாரம்
1. Personal Memoirs of U. S. Grant – U.S. Grant
2. The Vicksburg Campaign – Christopher R. Gabel
3. A Chain of Thunder – Jeff Shaara
4. The Beleaguered City: The Vicksburg Campaign – Shelby Foote

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *