கடவுளின் ஆசியால் இந்தத் தேசத்தில் சுதந்திரம் புதிதாகப் பிறக்கும் – மக்களுக்காக, மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட மக்களின் அரசாங்கம் பூமியில் இருந்து மறைந்துவிடாது.
– ஆபிரகாம் லிங்கன்
கெட்டிஸ்பர்க் சண்டை நடந்த சில நாட்களில் போர்க்களத்தில் இருந்த வீரர்களின் உடல்களைப் புதைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. களத்தில் சிமெட்ரி ரிட்ஜ் (Cemetery Ridge) என்ற இடத்தில் இருந்த உடல்களை அப்புறப்படுத்தும்போது, அங்கே இருந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த உடல்களில் ஒரு வீராங்கனையும் அடக்கம்.
அமெரிக்க உள்நாட்டுப் போரில் 500இல் இருந்து 750 பெண்கள் வரை, ஆண்களிடையில் போரிட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் பலரைப் பற்றியும் குறிப்புகள் இருக்கிறது.
பெரும்பாலும் போருக்குச் செல்லும் ஆண்களைத் தொடர்ந்து பெண்களும், குடும்பங்களும் செல்லும் வழக்கம் பழங்காலத்தில் இருந்ததுண்டு. இந்தப் போர் நடந்த காலங்களிலும், பெண்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்வது வழக்கமாக இல்லை. எனவே அவர்களில் சிலர் தங்கள் கணவர்களையோ, சகோதரர்களையோ தொடர்ந்து படைகளுடன் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இன்னமும் சிலர், சாகசங்களை வேண்டி, ஆண் வேடமணிந்து படைகளில் சேர்ந்தனர். உடைகளை மாற்றுவதோ, குளிப்பதோ வழக்கமாக இல்லாத நாட்கள் அவை. எனவே, இவர்களைக் கண்டறிவது என்பது எளிதானது இல்லை. பெரும்பாலான பெண்கள் போர்களில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதே கண்டறியப்பட்டார்கள். விக்ஸ்பர்க் போரின்போதும் இது போன்றே காயமடைந்த பெண் வீராங்கனையும் கண்டறியப்பட்டாள்.
போர் தலைமையும், இப்படியாகச் சேரும் பெண்களைத் தண்டிக்கவில்லை. அவர்கள் எந்தத் தண்டனையும் இன்றி, படையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். ‘ராணுவ விதிகளுக்கு மாறாக’ குழந்தை பெற்றுக்கொண்ட வீரரை விடுவிக்கும் உத்தரவு ஒன்றை ஒன்றியப் படை அதிகாரி ஒருவர் கொடுத்திருக்கிறார்.
இன்னமும் பல பெண்கள் உளவாளிகளாகவும் இரண்டு பக்கங்களிலும் இருந்தார்கள். உள்நாட்டுப் போர் அதுவரை பெண்களுக்கு என்று இருந்த கடமைகளைப் புரட்டிப் போட்டது. போரின்போதே முதல் முறையாக அமெரிக்க அரசாங்க வேலைகளில் பெண்கள் நியமிக்கப்பட ஆரம்பித்தார்கள். பெருமளவிலான பெண்கள் செவிலியர்களாகப் பணிபுரிந்ததையும் முன்னரே பார்த்தோம்.
இவை தவிர, உலகின் பழமையான தொழிலும் போர்க்காலத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. படைகள் முகாமிட்டிருந்த வாஷிங்டன், விர்ஜினியா பகுதிகளில் 500-750 பாலியல் விடுதிகள் இருந்ததாகத் தெரிகிறது. 7500க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
டென்னிசி மாநிலத்தின் நாஷ்வில் நகரில் மட்டுமே 1500 பெண்கள் பாலியல் தொழிலில் இருந்ததால், அங்கிருந்த ஒன்றியப் படை தளபதி, அவர்களைச் சட்டப்படி அங்கீகரித்து, விடுதிகள் நடத்துவதற்குக் கடைபிடிக்க வேண்டிய விதிகளை உத்தரவாகப் பிறப்பித்தார். வீரர்களைப் பாலியல் நோயில் இருந்து காப்பாற்றவே இந்த உத்தரவு என்று கூறப்பட்டது. இதுவே உலகில் பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக அறிவித்துப் பிறப்பிக்கப்பட்ட முதல் உத்தரவாகும்.
0
மே 1863இல் மாநிலக் கூட்டமைப்பின் தலைநகரான ரிச்மன்டில் உயர்நிலை ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. மாநிலக் கூட்டமைப்பின் குடியரசுத் தலைவரான ஜெபர்சன் டேவிஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ராபர்ட் லீ உள்பட அரசின் அனைத்துத் தலைமைகளில் இருந்தவர்களும் கலந்து கொண்டார்கள். சான்செல்லர்ஸ்வில் சண்டையின் வெற்றிக்குப் பின்னரான நகர்வுகள் என்ன, மேற்கில் விக்ஸ்பர்கில் மோசமாகச் சென்று கொண்டிருக்கும் போர் குறித்து என்ன செய்வது என்பது போன்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன.
அப்போது மாநிலக் கூட்டமைப்பின் நிலை என்ன என்பதையும் பார்த்துவிடுவோம். போரில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும். ஒன்றியம் போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இன்னமும் தெற்கின் துறைமுகங்கள் எல்லாம் அடைபட்டிருந்ததால், வர்த்தகம் வெகுவாகக் குறைந்துவிட்டது. உணவுப் பொருட்கள் விலை ஏறிக் கொண்டிருந்தன. போரின் அகதிகள் நகரங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். போர் படைகளுக்கு உணவு தருவது முன்னிலைப்படுத்தப்பட்டதால், உணவைப் பதுக்குவதும், அதிக விலைக்கு விற்பதும் நடந்து கொண்டிருந்தது. உப்பு எங்கும் கிடைக்கவில்லை.
ஏப்ரல் 1863ல், ரொட்டியின் விலை ஒரு பவுண்டிற்கு (450 கிராம்) ஒரு டாலர் என்ற விலையை எட்டியபோது, நகரின் பெண்களும், ஏனைய எளியவர்களுக்குச் சாலைகளில் போராட ஆரம்பித்தார்கள். போராட்டம் தென் மாநிலங்களின் மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நிலைமை ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தாலும், போரை எப்படியாவது முடிவிற்குக் கொண்டு வர வேண்டியிருந்தது.
இத்தகைய அவசர நிலையிலேயே ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் லீ தன்னுடைய திட்டத்தை விவரித்தார். இன்னொரு முறை தன்னுடைய படைகளைக் கொண்டு வடமாநிலங்களை ஆக்கிரமிக்கச் செல்வது. இந்த முறை பென்சில்வேனியா மாநிலத்திற்குப் போரை எடுத்துச் செல்வது. இதற்கு இரண்டு விளைவுகள் இருக்கும் என்று லீ எதிர்பார்த்தார். ஒன்று, தங்களது மண்ணில் போர் நடக்க ஆரம்பித்தவுடன், வடமாநிலங்களில் போருக்கு இருக்கும் ஆதரவு குறைந்துவிடும். எனவே ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்குத் தள்ளப்படும். இன்னமும் முக்கியமாக, கூட்டமைப்பின் படைகள், ஒன்றிய மண்ணில் பெரும் வெற்றியை பெற்றுவிட்டால், ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது அங்கீகாரங்களை வழங்குவதற்கு எந்தத் தடையும் இருக்காது. தனது திட்டம் தோல்வியடையாது என்றும் கூறினார்.
கிட்டத்தட்ட ஒருமனதாக இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அடுத்தப் பெரும் போருக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.
0
0
இந்த முறை படைகளுக்குத் தேவையான உணவை வடமாநிலங்களில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம் என்றும் ராபர்ட் லீ முடிவு செய்திருந்தார். அவற்றுக்குப் பணம் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்திருந்தாலும், அப்போது மாநிலக் கூட்டமைப்பு தனக்கான பணத்தை அச்சடித்துக் கொண்டிருந்ததால், அந்தப் பணத்திற்கு வடக்கில் எந்த மதிப்பும் இல்லை.
ஜூன் 3, 1863 அன்று லீ, 75000 வீரர்களுடன் பென்சில்வேனியா நோக்கி செல்ல ஆரம்பித்தார். அவருடன் 9500 குதிரைப்படை வீரர்களுடன் மேஜர் ஜெனரல் ‘ஜெப்’ ஸ்டீவர்ட்டும் சென்று கொண்டிருந்தார்.
துப்பாக்கிகளும் பீரங்கிகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், குதிரைப்படைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவை முக்கியமான ஓரிடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. எதிரிப் படைகளின் நடமாட்டத்தைக் கவனித்து, அதைத் தெரிவிப்பது மற்றும், எதிரிப் படைகளின் பின்னே மெதுவாக வரும் உணவு மற்றும் இதர பொருட்களின் வண்டிகளைத் தாக்குவது ஆகியவை மட்டுமே அவற்றின் பொறுப்பில் இருந்தன.
எதிரியின் பிரதேசத்திற்குள் செல்லும் அந்த நேரத்தில், ஜெப் ஸ்டீவர்ட்டின் முக்கியமான பொறுப்பு, எதிரிப் படைகளின் நிலைகளைத் தன்னுடைய தளபதியிடம் தெரிவிப்பது மட்டுமே.
0
ஒன்றியப் படைகளின் நிலையும் நல்ல முறையில் இல்லை. படை வீரர்கள் இடையே ஹூக்கர் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், இன்னுமொரு தோல்வி, படையைத் துவள செய்திருந்தது. அத்தோடு, வடமாநிலங்களில் எழுந்து கொண்டிருந்த போர் எதிர்ப்பு குரல்களும் அவர்களுக்கு உற்சாகத்தைத் தருவதாக இல்லை.
இதே நேரத்தில், லிங்கனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஹூக்கர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவிக்கவே, அதற்காகக் காத்திருந்த லிங்கன் உடனடியாக அவரை விடுவித்துவிட்டார்.
ஜூன் 28ம் தேதி புதிய தளபதியாக ஜார்ஜ் மீட் (George Meade) நியமிக்கப்பட்டார். முந்தைய சண்டைகளில் தனிப்பட்ட முறையில் மிகவும் வீரமுடையவர் என்று பெயர் வாங்கியிருந்த அவரின் தலைமைப் பண்பை நிர்ணயிக்கும் போர் இன்னமும் 3 நாட்களில் ஆரம்பமாக இருந்தது.
ஜார்ஜ் மீட் மிகவும் கோபக்காரர் என்று பெயரெடுத்தவர். ஆனால் மிகவும் திறமைசாலியும் கூட. அவசர காலத்தில் விரைவாக முடிவெடுப்பவர். போர் ஆரம்பித்து நான்கு தளபதிகளை மாற்றிவிட்ட லிங்கன், இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்று காத்திருந்தார்.
லீயின் படைகள் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியவுடன், லிங்கன் ஒன்றியப் படைகளும் அவர்களைத் தொடர்ந்து அல்லது இணையாகச் செல்ல வேண்டும் என்று ஆணை இட்டிருந்தார். அப்படியே ஜார்ஜ் மீட்டின் படைகள் லீயின் படைகளுக்குக் கிழக்குப் பக்கமாகத் தொடர்ந்து கொண்டிருந்தன.
0
லீயின் வடக்கு நடவடிக்கையின் முதல் சண்டை ஜூன் 9ஆம் தேதி நடந்தது. இரண்டு குதிரைப்படைகள் மோதிக் கொண்டன. லீயின் குதிரைப் படைத் தளபதியான ஜெப் ஸ்டீவர்ட்டின் 9500 குதிரைவீரர்கள் கொண்ட படையை, ஒன்றியத்தின் ஜெனரல் ஆல்ப்ரெட் பிளசண்டனின் வீரர்கள் ப்ராண்டிவின் என்ற இடத்தில் தாக்கினார்கள். தாக்குதலை எதிர்பார்க்காத ஸ்டீவர்ட்டின் வீரர்கள் ஆச்சரியமடைந்தாலும், தாக்குதலைச் சமாளித்துவிட்டனர்.
ஆனால், வெற்றி கிட்டவில்லை. இங்கே தென் மாநிலத்தவரின் மனநிலையைச் சற்றுப் பார்க்கவேண்டும். தங்களைப் பெரும் வீரர்களாகவும், கிராமியப் பண்பான நேர்மை உடையவர்களாகவும் அவர்கள் கருதினார்கள். வடமாநிலத்தவர்கள் பெரும் நகரங்களில் வாழ்ந்து, தங்களது ‘வலிமையை’ (‘ஆண்மையை’ என்றும் வாசிக்கலாம்.) இழந்துவிட்டார்கள் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. ஒரு தென் மாநில வீரன், பத்து வட மாநில வீரர்களுக்குச் சமம் என்பது போன்ற கருதுகோள்கள், அவர்கள் தொடர்ந்து பெற்று வந்த வெற்றிகளால் ஏற்பட்டிருந்தன.
அதிலும், வடமாநில குதிரை வீரர்கள் தங்களைத் தோற்கடிக்கவில்லை என்றாலும், தாங்களும் வெல்லவில்லை என்பதை ஸ்டீவர்ட் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானமாகப் பார்த்தார். எனவே தன்னுடைய புகழையும் தன் வீரர்களுடைய புகழையும் எப்படி மீட்டெடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
ஒன்றியப் படைகளின் பின்புறத்தில் மெதுவாக வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஏற்றும் வண்டிகளைத் தாக்கி, உணவு பொருட்களையும், மற்றவற்றையும் எடுப்பது என்று முடிவு செய்தார். தன்னுடைய வீரர்களுடன், ஒரு லட்சம் வீரர்கள் கொண்ட ஒன்றியப் படை தன்னைத் தாண்டி செல்லும் வரை காத்திருந்து, அதன் பின்பக்கத்தில் சிறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தார். அப்படியே கிழக்காகச் சென்று, ஒன்றியப் படைகளைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இப்போது ஜெப் ஸ்டீவர்ட்டின் குதிரை வீரர்களுக்கும், லீயின் படைகளுக்கும் இடையே ஒன்றியப் படை இருந்தது.
முன்னரே கூறியது போல, குதிரைப்படைகள், எதிரிப் படையின் நிலைகளை அறிந்து ஒற்று கூறும் முக்கியமான வேலையைச் செய்யவேண்டும். ஸ்டீவர்ட், தன் வீரர்களுடன் கிழக்கே சென்றதும் புதிய பிரதேசத்தில் லீயை எந்த ஒற்றும் இல்லாமல், எதிரி படைகள் எங்கே இருக்கின்றன என்று தெரியாமல் இருக்கச் செய்ததும் தாக்கத்தை ஏற்படுத்தின. பின்னர் நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு ஸ்டீவர்ட் முதல் விதையைப் போட்டுவிட்டார்.
0
பெனிசில்வேனியாவின் எல்லையில் இருக்கும் ஒரு சிறு நகரம், கெட்டிஸ்பர்க். ஜூலை 1ஆம் தேதி ஒன்றிய குதிரைப்படைகள் கெட்டிஸ்பர்க் நகரை அடைந்தன. குதிரைப்படைத் தளபதியான ஜெனரல் பூபோர்ட் (Buford) அந்த வழியாக வரப்போகும் மாநிலக் கூட்டமைப்பின் படைகளுக்காகக் காத்திருந்தார்.
கெட்டிஸ்பர்க் நகரின் தென் புறம் குன்றுகளாலும், உயரமான இடங்களாலும் நிரம்பி இருந்தது. ஜெனரல் பூபோர்ட் நிலத்தின் பரப்பைப் பார்த்தவுடன், தெற்குப் பகுதியை ஒன்றியப் படைகளிடம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். கூட்டமைப்பின் படைகள் அந்தக் குன்றுகளைக் கைப்பற்றினால், அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவது மிகவும் கடினமாகிவிடும். எனவே தன்னுடைய குதிரை வீரர்களை அவற்றில் பரவலாக நிறுத்திவிட்டார். அன்று காலை 7.30 மணிக்கு, கூட்டமைப்பின் முதல் வீரர்கள் கெட்டிஸ்பர்க் நகரின் போர்க்களத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
(தொடரும்)
ஆதாரம்
1. The Killer Angels – Michael Shaara.
2. Gettysburg – Stephen Sears.
3. The Civil War – John Keegan
நன்றாக உள்ளது.நான் தொடர்ந்து படிக்கிறேன்.