தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியாக இருக்கிறதா? ‘இது சாத்தியமா?’ எனும் கேள்வியும் உங்களுக்குள் எழலாம். உண்மைதான். புதுச்சேரியில் இது சாத்தியப்பட்டு இருக்கிறது. இப்போது அல்ல, 280 ஆண்டுகளுக்கு முன்பு.
புதுச்சேரியில் கவர்னர் பெனுவா துய்மா தலைமையிலான ஆட்சி திடீர் உத்தரவுகளுக்குப் பேர்போன ஆட்சியாக இருந்தது. காலையில் ஓர் உத்தரவு, மாலை இரண்டு உத்தரவுகள் என ஒரேநாளில் மூன்று உத்தரவுகள் பிறப்பிக்கபட்டதும் உண்டு. அப்படிப்பட்ட உத்தரவுகளில் ஒன்றுதான் கள், சாராயம் விற்கத் தடை என்பதும்.
இந்தத் திடீர் மதுவிலக்குக் குறித்துப் பார்ப்பதற்குமுன் வேறு சில ‘திடீர்’ உத்தரவுகளை ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பிலிருந்து பார்த்துவிடலாம்.
ஏழரை மாத்துக்குக் குறைவாக வராகன் வைத்திருக்கத் தடை
ஒருநாள் காலை ஆறரை மணிக்கு மேல் ஏழு மணிக்குள்ளாக குவர்னர் துரை வீட்டுக்குப் போயிருந்தார் ஆனந்தரங்கப்பிள்ளை. அப்போது குவர்னர் பெனுவா துய்மா ‘கையிலே என்ன இருக்குதென்று?’ கேட்டார். அதற்குப் பிள்ளை ‘நீர் முந்தா நாள் கொடுத்த பொன் கட்டி இருக்குதென்று’ சொன்னார்.
சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு குவர்னர் சொன்னது ‘நாங்கள் நேற்றைய தினம் கோன்செல் கூடி கோன்செலில் தீர்த்த காரியம் என்னவென்றால், இனிமேல் ஊருக்குள்ளே எட்டு மாத்துக்குள்ளே குறைஞ்ச வராகன் யாதாமொருத்தன் கொண்டு வருகிறானோ அவன் கையிலே ஆயிரம் வராகன் அபராதமும் வாங்கிக் கொண்டு கொணக்கு முத்திரைபோட்டு பின்னையும் அவமானம் பண்ணுவோம் என்று தீர்த்தோம். அந்தப்படிக்கு இன்று சாயங்காலம் தமுக்கும் போட்டுவிச்சு தீர்த்தபடிக்கு கடுதாசி எழுதி கோட்டையிலே, பிடவை பார்க்கிற சாலையிலே, கோவிலிலே, சாவடியிலே இந்த மூணு ஸ்தானங்களிலே ஸ்தாபிப்போம்’.
அப்போது குறுக்கிட்ட பிள்ளை, ‘இப்ப ஊரிலேயிருக்கிற வராகன் எல்லாம் அந்த வராகனாகயிருக்கிற படியினாலே நீர் இப்ப உத்தரவு கொடுத்தால் வெகு ஜனங்களுக்கு ரொம்ப வருத்தமாயிருக்கும்’ என்றார்.
இந்த உரையாடல் நடந்தது 1738 மே 6ஆம் தேதியாகும். அன்றைய தினம் மேற்கண்டவாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், சரியாக ஓராண்டு கழித்து 1739 மே 11ஆம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு நகரின் முக்கிய இடங்களில் தமுக்குப் போடப்பட்டு கீழ்க்கண்ட கடுதாசி ஒட்டப்பட்டது:
‘…இந்தப் பட்டணத்திலே இருக்கப்பட்ட வர்த்தகர்களும் குடியானவர்களும் வெளியிலேயிருந்து வரப்பட்ட சகலமான பேர்களும் வெள்ளைக்காரரிலேயும் தமிழரிலேயும் எப்பேர்ப்பட்டவர்களும் சகல வியாபாரங்களிலேயும் இந்த 7½ மாத்துக்குக் குறைச்சலாகிய வராகன் வச்சிருக்கிறவர்களெல்லோரும் அந்த வராகன்களை தங்க சாலையிலே கொண்டுபோய் கொடுக்கிறது. தங்க சாலைக்காரர் அந்த வராகனை நசிக்குப் போட்டு அந்த வராகனுக்கு மாத்துக்கு உள்ள விலை கொடுத்து விடுவார்கள்.
இந்தக் கட்டளைப்படிக்கு நடந்து கொள்ளாதவர்கள் 1738 ஆண்டு மே 6 கோன்சேலிலே தீர்க்கப்பட்ட அபராதம் கொடுக்கக் கடவார்கள்.
காசுக்காரும் பொன் வெள்ளி தொழில் பண்ணுகிற வர்த்தகரும் இந்தக் கட்டளை மகா தாக்கீதாய் எண்ணி ஏழரை மாத்துக்குக் குறைச்சலாகிய வராகன் எவர்களாகிலும் கொண்டு வந்தார்களேயானால் அந்த வராகன்களைப் பிடிங்கிக் கொண்டு சாவடி ஞாயம் விசாரிக்கிற சின்னதுரையிடத்திலும் தங்கசாலைக்கு எசமானா யிருக்கிற கோன்சேலர் அவர்களிடத்திலேயும் கொண்டுபோய் விட்டு சொல்ல வேண்டியது. அப்படி சொல்லாதவர்களுக்கும் மாத்துக்கட்டை வராகன் வச்சிருக்கிற வராகனுக்கு முன் தீர்க்கப்பட்டிருக்கிற அபராதம் இவர்களும் கொடுப்பார்கள்.’
பிரான்சு ராசாவின் ஆணையின் பேரில் மேற்கண்ட உத்தரவுப் பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், குவர்னர் துரை முசே தும்மா முசே லெகு, முசே துலாராம் உள்ளிட்ட ஐந்து உயரதிகாரிகள் கையெழுத்துப் போட்டிருந்தனர். இதை சகலமானபேரும் அறியத்தக்கதாக, எல்லாரும் வாசிக்கத்தக்கதாகப் பட்டணத்திலே அங்கங்கே ஸ்தாபிக்கப்பட்டது.
சாலை ஓரங்களில் மலஜலம் கழித்தால் அபராதம்
1739 ஜூன் 11ஆம் தேதி ஆளுநரிடமிருந்து இப்படியான திடீர் உத்தரவு வந்தது. ‘இந்தப் பட்டணத்துக்குள்ளே கடற்கரையோரம் முதலாய் பட்டணத்துக்குள்ளே சம்பா கோவிலுக்கு தெற்காகப் போகிற உப்புக்கழியோரம் பட்டணத்துக்கு வீதிகளுக்குள்ளே கூட ஆராகிலும் மல உபாதைக்குப் போகிறதென்றிருந்தால் ஆறு பணம் அபராதம் வாங்கிறது. அந்த ஆறு பணத்தில் மல உபாதைக்குப் போகிறவனை பிடிச்சுக்கொண்டு வருகிறவனுக்கு இரண்டு பணமும் கொடுக்கிறது. மற்ற நாலு பணம் சாவடியாரால் பங்கெடுத்துக் கொள்ளுகிறது.’ இது தெரியாமல் மல உபாதை இருந்தவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.
‘இதனால் ஊருக்குள்ளே அங்கலாய்த்த சனங்கள் கணக்கில் அகப்படயில்லை. அதிகாரம் பண்ணிப் பார்க்குமிடத்தில் மிகுதியும் கடினமாக யிருக்கிறதாக மனதில் எண்ணினவர்கள் கணக்கு அகப்படவில்லை’ என்று அங்கலாய்க்கிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.
ஒரே நாளில் மூன்று உத்தரவுகள்
1741 ஜனவரி 23ஆம் தேதி காலை 8 மணிக்கு, சாயங்காலம், அப்புறம் சாயங்காலம் 6 மணிக்கு என ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
முதலாவது உத்தரவு இது. ‘கெவுனிக்கு வெளியே பட்டணத்தைச் சுத்தியிருக்கப்பட்ட முத்தாலு பேட்டை, வழுதாவூர் வாசலுக்கு எதிரே இருக்கப்பட்ட பேட்டை, வில்லியனூர் வாசலுக்கு நேராய் வெளியே இருக்கிற பேட்டை இதுகளையெல்லாம் பட்டணத்து அலங்கத்தை சுத்தி எங்கும் வெளியாயிருக்கிற நிமித்தியம் வீடு வாசல்களை யெல்லாம் இடித்து நிரவி தோட்டம் துரவுகள் மரமட்டைகள் அடங்கலும் வெட்டிப்போட வேணும்.’
பின்னர் சாயங்காலம் போடப்பட்ட ஒரு உத்தரவு இது. ‘பட்டணத்தில் இருக்கும் மனிதர்கள் யாருக்காவது கடுதாசி அனுப்ப வேண்டும் என்றாலோ அல்லது வெளியில் இருந்து ஏதும் ஓலைகள் வந்தாலோ கனகராய முதலியாரிடம் காண்பிக்க வேண்டும்’.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மீண்டும் ஓர் உத்தரவு. ‘இராத்திரி பத்துமணிக்கு மேல் ஒருத்தரும் வெளியே புறப்படலாகா தென்றும் யாராகிலும் புறப்பட்டால் அவர்களைக் கொண்டு போய் சாவடியிலே வைத்து தெண்டனையும் அபராதமும் வருமென்றும்’ தமுக்குப் போடப்பட்டது.
6 மாதம் அமலில் இருந்த மதுவிலக்கு
1741 பிப்ரவரியில் புதுவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மராட்டியர்களின் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது ‘சாராயம் கள்ளு முதலாகிய லாகிரி வஸ்துக்களை விற்கக் கூடாது. அப்படி விற்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்று தமுக்குப் போடப்பட்டது.
பிப்ரவரி 27ஆம் தேதி அரசாங்கத்திடமிருந்து பின்வரும் நீண்ட அறிவிப்பு வெளியானது.
‘பிரசித்தமாக சகல சனங்களாகிய வெள்ளைக்காரர் தமிழர் மற்றுமுள்ள கருத்த சனங்களுக்கு அறிவிக்கிறதாவது:
லாகிரி வஸ்துவாகிய பலவித சாராய வகைகள் கோடை காலமாகிய உஷ்ண காலங்களிலே வாய் கட்டாமல் மிகுதியாய் குடிக்கிறவர்களுக்கு மிகுதியும் வியாதி சம்பவிக்கிறபடியால் இந்த அவசரமான வேலையிலே எங்களாலே ஆனமட்டும் விலக்கினோம். நிற்க, உத்தாரமாக கட்டளையிட்டதாவது,
எந்த சாதியிலே எப்பேர்பட்டவர்களாகிலும் மார்ச் மாதத்துடக்கி செப்தம்பர் மாதம் வரைக்கும் பிராந்தி சாராயம், லிக்கர் சாராயம், பத்தாவி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம் மற்றுமுள்ள சுளுக்காகிய சாராயங்கள் விற்றாலும் விற்பித்தாலும் கொஞ்சமானாலும் ரொம்பவானாலும் பின்னை எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும் கொடுத்து ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது. அபராதம் வாங்கின வராகனில் பிச்சைக்காரருக்கு ஒரு பங்கும் கொடுத்துவிடுகிறது.
இந்த உத்தாரத்தை பயமுறுத்தி மிரட்டுகிறதாக எண்ணத் தேவையில்லை. மெய்யாக இந்தக் கட்டளைப்படிக்கு நடத்துவோம். தமிழராவது பறையராவது பின்னை யாரொருத்தருக்காவது விற்றாலும் கொண்டுவந்து கொடுத்தாலும், கூலிக்கு எடுத்துப் போனாலும் இது சாக்ஷி சாதகத்துடனே அகப்பட்டால், அவர்களை சாவடியிலே கட்டி அடிச்சு வலது தோளிலே சுணக்கி முத்திரை போட்டு குண்டுக்கு வெளியே துரத்திவிடுகிறது.
கள்ளு குடித்தாலும் குடிக்கச் செய்வித்தாலும் அபராதம்.
தோட்டங்களிலே வீட்டுக் கொல்லைகளிலே, தென்னமரம் வைத்திருக்கிறவர்கள் எவர்களுக்காகிலும் தோட்டங்களிலேயாவது, வீடுகளிலேயாவது மற்றவிடங்களிலே யாவது கள்ளு ஒரு காசளவில் வித்தாலும் விற்கச் செய்தாலும் யாதொருத்தர் குடிச்சாலும் குடிக்கச் செய்வித்தாலும் அவர்களுக்கு, முன்னே எழுதியிருக்கிற ஆக்கினையும் அபராதமும் நடக்கும். கள்ளு இறக்கிறவர்கள் காடியாக்கி வித்துக்கொள்ளலாம்.
பின்னையும் கொமிசேலிலே கட்டளை இப்படியிட்ட உத்தாரமாவது சகலமானவர்களும் அவரவர் வீட்டிலே வைத்துக்கொண்டிருக்கிற முன்னெழுதப்பட்டிருக்கிற பலவித சாராயங்களை மூன்று நாளைக்குள்ளாக கிரேபுக்கு வந்து முசே திமிரென் கையிலே இவ்வளவு இருக்கிறதென்று வெளியாகச் சொல்லி எழுதுவித்து கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறது. இந்த மூன்று நாளைக்குள்ளாக வந்து சொல்லி வெளிப்படுத்தாமல் வைத்துக்கொண்டிருந்தால் அதை எடுத்து இசுபித்தாலும் பிரயோசனப்படுத்தி பின்னையும் இருநூறு வராகன் அபராதமும் வாங்குகிறது. கிரேபிலே சொல்லி எழுதி வச்சவர்களுக்குக் கொடுக்கத்தக்கது. கொடுத்து மற்றதை கும்பினீர் மக்செனிலே எடுத்துக்கொண்டு அதுக்குள்ள கிரையம் கொடுத்துவிடுகிறது.’
மதுவிலக்கு உத்தரவுக்கு விடுதலை
‘இந்த உத்தரவு பயமுறுத்தி மிரட்டுகிறதாக எண்ணத் தேவையில்லை’ என்று சொன்ன அரசாங்கம், ‘கோடை காலமாகிய உஷ்ண காலங்களிலே வாய் கட்டாமல் மிகுதியாய் குடிக்கிறவர்களுக்கு மிகுதியும் வியாதி சம்பவிக்கிறபடியால்’ இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகச் சமாதானம் சொன்னது.
இதை மீறுபவர்களுக்கு ஆயிரம் வராகன் அபராதம் விதிக்கப்பட்டதும், அதில் ஒருபங்கு பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டதும், சாராய வகைகள் பட்டியலிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்காணும் ‘மதுவிலக்கு’ உத்தரவு செப்டெம்பர் மாதம் வரைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே விலக்கிக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக 1741 ஆகஸ்ட் 5 சனிவார நாளன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு: ‘முன்னாலே மறாட்டியர் கலாபத்தையிட்டு சாராயம் ஊரிலே விற்க வேண்டாமென்று தட்டி அறைசாத்தியிருந்த சம்மதி இந்நாள் விடுதலை பண்ணினோம். இனிமேல் பழையபடிக்கு குத்தகைக்காரர் சம்மதியானபடிக்குச் சாராயம் காய்ச்சி விற்றுக்கொள்ளலாம்.’
இதன் மூலம் ஏறக்குறைய 6 மாதங்கள் புதுச்சேரியில் ‘மதுவிலக்கு’ அமலில் இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் புதுவையில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே துளியும் இடமில்லை என்பதுதான் யதார்த்தம்!
(தொடரும்)
நல்ல நல்ல தகவல்கள் ஐயா மேலும் வளர்க
அறியாத பல விஷயங்கள் அறிய முடிந்தது. நன்றி.
ரொம்ப நுண்ணிய அரிய தகவல்கள். இதை அவர் எழுதி வெச்சது ஒரு சாதனைனா, இவ்வளவு கவனமா அதில் குறிப்பெடுத்து கட்டுரையாக்கினதும் சாதனைதான். சூப்பர்.