Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

இடங்கை வலங்கை விவகாரம்

விநாயகரில் இடம்புரி விநாயகர், வலம்புரி விநாயகர் இருக்கிறார். அரசியலிலும் வலது, இடதுசாரிகள் இருக்கின்றனர். அதென்ன இடங்கை? வலங்கை?

தமிழகத்தில் இருந்த சாதிப்பிரிவுகள்தான் இவை. இடங்கைப் பிரிவில் இருந்த 98 சாதிகள் மற்றும் வலங்கைப் பிரிவில் இருந்த 98 சாதிகளின் பெயர்களையும் பட்டியலிடுகிறது ‘இடங்கை வலங்கைச் சாதி வரலாறு’ எனும் சுவடி.

‘இவ்வகுப்புகள் எப்பொழுது உருவாயின என்று தெரியவில்லை’ என்று சொல்லும் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ‘முதலாம் ராஜராஜன் காலத்தில் சில படைவகையினரை வலங்கை வகுப்பினராக வகைப்படுத்தினர்’ என்றும் தெரிவித்துள்ளார். ‘கை வகுத்தல் என்பது பெரும்பாலும் படை அரசனின் வலக்கைப் புறத்தும் இடக்கைப் புறத்தும் வகுத்து நிறுத்தப்பட்டதிலிருந்து தோன்றியிருக்கலாம்’ என்கிறார் இரா.நாகசாமி.

பத்து, பதினோராம் நூற்றாண்டுகளில் படைப்பிரிவில் தோன்றிய இப்புதிய ஏற்பாடு, பதினைந்தாம் நூற்றாண்டில் சாதிப் பிரினையாகவும் மாற்றம் பெற்றது. அப்போதுதான் 98 சாதிகளின் வகைப்பாடுகள் வழக்கத்திற்கு வந்துள்ளன.

ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த மதராசப் பட்டிணத்தில் 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் இடங்கை, வலங்கை விவகாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. பல இடங்களில் வெட்டு குத்துகளுடன் கலவரமாக மாறியது. பதினெட்டாம் நூற்றாண்டிலும் இது தொடர்ந்தது.

கோயில் நடவடிக்கைகள், திருவிழாக்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மரியாதைகள் இவற்றை முன்வைத்தே இந்த மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

பிரெஞ்சியரின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கும் இடங்கை, வலங்கை விவகாரம் இருந்திருக்கிறது. பல்லக்கில் ஏறிச் செல்வது, வெள்ளைக் குடை, வெள்ளைக் குதிரை இவற்றைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மோதல் இருந்தது.

வலங்கையார் நடந்து போகும்போது இடங்கை தேவடியாக்கள் (இங்கு ஆனந்தரங்கப்பிள்ளை பயன்படுத்திய சொல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. -ஆ.ர்.) எழுந்திருக்கவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலிலும் வைக்கப்பட்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகளை ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பிலிருந்து நாம் பார்க்கலாம்.

1741 ஆகஸ்டு 13 தேதிக்கு துர்மதி ஆண்டு ஆவணி மாதம் 11 தேதி ஆதிவாரம்:

இந்த நாள் புதுச்சேரிப் பட்டணத்திலே நடந்த அதிசயம் கடுதாசியிலே எழுதி சாவடியிலேயும் கோட்டையிலேயும் கெவுனி வாசலிலேயும் ஒட்டினார்கள். அதென்ன சமாசாரமென்றால் கடுதாசி வயணம் இராசாவினுடைய கட்டளைப்படிக்கு புதுச்சேரிப் பட்டணம் மேலான கொம்சேலியவர்கள் உத்தாரம் படியாவது என்று மேலே எழுதி அப்புறம் எங்களிடத்திலே வந்து விண்ணப்பம் பண்ணிக்கொண்ட தென்னவென்றால்,

வலங்கைச் சாதியானவர்கள் செட்டி வர்த்தகம் மற்றுமுற்ற இடங்கைச் சாதியாரை பல்லக்கின் பேரிலே குதிரையின் பேரிலே ஏறிக்கொண்டு புதுச்சேரிக்குள்ளே சென்னப்பட்டணத்து வாசலாலே வருகிறதற்குச் சம்மதியிக்கயில்லை. அது என்னத்தாலே சம்மதிக்கவில்லை யென்றால் தமிழ் ராச்சியத்திலே வழங்குகிற தமிழர் வழக்கத்தின்படிக்கு அதுக்கு மேலான கோன்சேலியரவர்கள் மனஸ்கரிக்கவில்லை.

அரண்மனையாருடைய நினைப்பென்ன வென்றால் எப்போதும் இந்தப் பட்டணம் அவரவர்களுக்குச் சுதந்திரமாய் வருகிறதற்கும் போகிறதற்கும் தடையில்லாமல் சுபாவமாய் நடக்க வேண்டியதென்று சகலரும் ஒழுங்குடனே மார்க்கமாய் அவரவர்கள் அநுபவிக்கிறது.

புதுச் சென்னப்பட்டணத்து வாசல் புதுத்தெருவாகிய ராசவீதி திறந்துவிட்ட தென்ன நினைப்பினாலே என்றால் அந்த ராசவீதியில் வலங்கையரிடங்கையர் சகலரும் பொதுவாக நடக்க வேண்டியதுக்காக கோன்செலியவர்கள் உத்தாரங் கொடுத்தார்கள்.

புதுச்சேரி பட்டணத்துக்குள்ளே சகல வர்த்தக செட்டியின் பல்லக்கின் பேரிலே ஏறி வருகிறதற்குச் சென்னப்பட்டணத்து வாசலாலே வருகிறதற்கும் வழுதாவூர் வாசலா வருகிறதற்கும் வெளிப்படுத்துகிறோம். சகல சாதியும் வலங்கையர் இடங்கையர் தெத்துவாசல் நுழைஞ்ச உடனே அவரவர் தெருவுக்குப் போகிறதற்கு வலது பக்கத்து மதிலோரத்துத் தெரு வீதியாவது இடது பக்கத்து மதிலோரத்துத் தெருவீதியாவது போய் அவரவர்கள் தெருவுக்குப் போகிறது.

இந்த உத்தாரத்தை யாதொரு சின்ன மனுஷராகிலும் பெரிய மனுஷராகிலும் எப்பேர்ப்பட்டவர்களாகிலும் விகாதம் பண்ணினால் கலாபம் பண்ணுகிறவன் எந்த ஆக்கினைப்படுவானோ அந்த ஆக்கினைக்குப் பாத்திர வானாவான். இந்த உத்தாரத்தை எவர்களாகிலும் அறியோமென்று சொல்லாத படிக்குப் பிரசித்தமாகக் கடுதாசியிலே எழுதி எந்த ஸ்தானங்களிலேயும் ஸ்தாபிக்க வேணுமோ அந்த இடங்களிலே ஸ்தாபிச்சு இருக்கிறது.

இந்தப்படிக்கு மேலான கொம்மிசெலியவர்கள் உத்தாரப்படி (1741 ஆண்டு சூலை மாதம் 31ஆந் தேதி) இதிலே கையெழுத்துப் போட்டது. துய்மா, லகு, துலோராம், யெங்காராம், மீரா, பொறுலாம், கோன்சேல் உத்தாரப்படிக்கு போலோ.

1748 ஆண்டு மே மாதம் 10ஆந் தேதி விபவ ஆண்டு வைகாசி மாதம் 1ஆந் தேதி சுக்கிர வாரம்:

… அவன் வருகிறதற்குள்ளே வலங்கையர்க் கூட்டங் கூட்டிக் கொண்டு வந்து துரை முன்னே நின்றார்கள். இவர்களாரென்று கேழ்க்கச்சே முசியே கொற்னேதும் கூட வந்து நின்றார். அப்போது துரையுடனே வலங்கையாரென்று சொன்னேன். ஏன் வந்தார்களென்று கேட்டார். கும்பினீர் வர்த்தகரிலே கூடலூர் குமரப்ப செட்டி பேரன் புத்து உலகப்ப செட்டி என்கிறவன் நேற்று புத்துப்பேட்டை திருநாளுக்குப் போனவன் வெள்ளைக் குதிரை ஏறிப்போனான். மறுபடி வரச்சே சிறது தூரம்தான் ஏறி வந்து, அப்பால் தன் மகனை ஏற்றி வந்தானென்றும், இப்படி வெள்ளைக் குதிரை, வெள்ளைக் குடை, வெள்ளைப் பாவாடை, பின்னையும் வெள்ளை விருதுகளுடனே சேர்ந்தது, வலங்கையுடயதே யல்லாமல் இடங்கையாருக்கு அக்கறையில்லை என்ற ராஜ்ய மெல்லாம் வழக்கம்.

அப்படியிருக்க இவன் செய்யாத காரியம் செய்தானென்றும், அதற்கு நீங்கள் நன்றாய் விசாரிக்க வேணுமென்றும் பின்னை தேவனாம்பட்டணம், சென்னப்பட்டணத்திலே நடந்த சேதிகளும் சொன்னேன். அதன் பேரில் புத்து உலகப்ப செட்டியையும் அழைக்கச் சொன்னார். அப்பால் மற்றதெல்லாம் நாளை விசாரிப்போம், கொண்டு போய் காவலிலே வைக்கச் சொன்னார். அதன் பேரிலே காவலிலே புத்து உலகப்ப செட்டியை காவலில் வைத்தார்கள். அப்பால் வலங்கையார் அனுப்பிவித்துக் கொண்டு போனார்கள்.

1750 ஆண்டு மாயு (மார்ச்) மாதம் 28ஆம் தேதி பிரமோதூத ஆண்டு வைகாசி மாதம் 18ஆந் தேதி வியாழக் கிழமை:

முன் 15ஆம் தேதி சோமவாரம் சாயங்காலம் பாக்குக் கிடங்கியண்டையிலே பந்தலிலே நானிருக்கச்சே சின்ன பரசுராமப்பிள்ளை தரகு அப்பு அழகப்ப முதலி, பெரியண்ண முதலி முருகப்பிள்ளை, காடக்குமாரன் இவர்கள் வந்து, செட்டித் தெருவிலே கலியாணத்துக்கு உள்ளே போனால் தேவடியாள்கள் யெழுந்திருந்து மரியாதை பண்ணுகிறதில்லை. அது முன்பு நடந்து வந்ததுண்டு. இப்போ வர வர தள்ளுப்பட்டுப் போச்சுது. அப்படி வராமல் மரியாதை நடந்தால் உங்கள் நாளில் நடந்ததாய் பெரு கீர்த்தியாயிருக்கும் என்று சொன்னார்கள்.

அப்படி முன்பின் நடந்தால் யிப்போ நடவாமல் போறதுக்குக் காரியமென்ன யிருக்குது. அவர்களை யழைச்சு கேட்டுச் சொல்கிறேனென்று நல்லதம்பிசெட்டி அருணாசல செட்டியை அனுப்பிவிச்சு கேட்டதுக்கு, பெரிய மனுஷர்களாய் நாலத்து ரெண்டு பேர்களுக்கு நடந்தது மாத்திரமே யல்லாமல் மத்தப் பேருக்கு நடந்ததில்லை. ஆனாலும் முத்தலப்ப செட்டி வீட்டுக் கலியாணத்திலே என்ன நடந்ததோ அதுநான் அறியேன். அதை விசாரித்து வந்து நாளைக்குச் சொல்லுகிறேனென்று சொல்லிப் போட்டு போனான்.

அந்தச் சேதியை சின்னபரசுராமப் பிள்ளை வகையறா, வலங்கை வகையறா வந்தவர்களுக்கு நாளைக்குச் சொல்லுகிறோமென்று சொல்லி அருணாசலசெட்டி போனான். நீங்களும் நாளைக்கு வாருங்கோளென்று சொன்னதுக்கு, முன்னேயெல்லாம் அரங்கேத்து படிக்கு வந்து பாக்கு வெற்றிலை வகையறாக்கள் வைத்து அழைப்பர். நாங்கள் போவோம். இப்போ அதைப் போன்று அழைக்கிறது மில்லை. அந்த வழக்கம் விடுபட்டது. அப்பால் அரும்பாத்த பிள்ளை வீட்டுக்கும் பொங்கல் பண்டிகைக்கும் போவார்கள். அதையும் தள்ளிப்போட்டார்கள். யிதல்லாமல் வலங்கையாருடனே போரார்கள். வலங்கை தேவடியாள் இடங்கையாருடனே பிறசித்தமாய்ப் போறாளா அந்தரங்கமாய்ப் போனாளென்று இப்படி ஞாயஞ் சொல்லி இன்றைய தினம் ராத்திரிக்கு முகூர்த்தமாச்சே இன்றைக்கு அட்டிப்பட்டாலெப்படி யென்று சொன்னார்கள்.

அதுக்கு நான் சொன்னது: றாசியாய் நடத்த வேண்டியது பலவந்தத்தின் பேரிலே வலங்கைக்கு நடக்க வேணுமென்றால் யெப்படி நடக்கும். வலங்கையென்று இடங்கையென்று ஏற்பாடு இருப்பானேன். என் புத்திக்கேற்க இது வழக்கமாகப் பேசி வெல்ல வேணுமென்றால் யெப்படி நடக்கும். நான் வந்து முப்பது வருஷமாய் நடக்கக் காணோம். இப்போ நடப்பிச்சுக் கொள்ள வேணுமென்றால் எப்படி நடக்கும். ஆனாலும் அவர்கள் நாளையத் தினம் வந்து சொல்லுகிறோம் என்றாப்போலே ஆச்சுதே நாளைக்கு வாருங்கோளென்று சொல்லிப் போகச் சொன்னதுக்கு, நீங்கள் வலங்கைக்கு இசமான். நீங்கள் நடப்பிக்க வேணுமென்றால் ஒருத்தரும் தடுத்து சொல்லப் போறதில்லை யென்று சொன்னார்கள்.

அவசியம் உங்களுக்குள்ள தெல்லாம் எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் ஒரு ஞாயத்தை எதிரிக்குச் சொல்லி நடத்தினானல்லோ அழகு. அல்லவென்றால் இறாசியின் பேரிலே நடப்பிச்சுக்க வேண்டியது. எல்லாத்துக்கும் அவர்கள் நாளை வந்து சொல்லுகிறோமென்று சொன்னதுக்கு அதை அறிந்தல்லோ அப்பாலே பேச்சு நடத்த வேண்டுமென்று சொல்லி நாளை வாருங்கோளென்று சொல்லிப் போகச் சொன்னேன். அவர்களும் போனார்கள்.

(இதற்கிடையே வலங்கையர் கொடுத்த புகாரின் பேரில் இடங்கை தேவடியாக்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஆ.ர்.)

1750ஆம் ஆண்டு மாயு மாதம் 29ஆந் தேதி பிரமோதூத ஆண்டு வைகாசி மாதம் 16ஆந் தேதி சுக்கிற வாரம்:

இத்தனாற் காலத்தாலே போன போது துரை நேத்து ராத்திரி இடங்கை தேவடியா எழுந்திருக்கவில்லையென்ற வலங்கையார் பிறாது பண்ணி தேவடியாக்களை நேத்து ராத்திரி காவலில் வைத்த சேதியென்ன வென்று கேழ்க்கவில்லை.

அவருடனே சொல்லிக்கொண்டு அவறாய் கொண்டுபோய்க் காவலில் வைக்கச் சொல்லி சொன்ன சேதி அவர் கேழ்விப்படாததினாலே நமக்கென்ன நாமேன் எடுத்துப் பேச வேணுமென்று சொல்லியிருந்தது அல்லாமல் அவரெது நிமித்தியம் இந்தப் பேச்சையெடாமல் நிற்குறாரோ தெரியாதே அவர் மனதறிந்து யல்லோ உத்தரம் நடத்த வேணும். ஆனபடியினாலே இன்றெல்லாம் அவரும் எடுத்ததில்லை நானும் அவரெடாத பேச்சைப் பேசக் காரியமென்னவென்று சும்மாயிருக்கிறேன்.

…இத்தனாற் ரெண்டு மணி வேளைக்கு சாப்பிட்டவுடனே மத்தியானம் இடங்கையாரெல்லாம் கும்பலாய் கூடி வந்தார்கள். வந்து நேத்து ராத்திரி அகாமியாய் நடப்பிச்சதுக்கு நேத்து ராத்திரி சொன்னதுக்கு இன்றைய காலத்தாலே வாறதுக்கு சடங்காயிருந்த படியினாலே வரக்கூடாமல் போச்சுது. இப்போ வந்தோமென்று சொல்லி எங்களூர்களுக்கும் வலங்கையாருக்கும் முன் முசியே மர்த்தின் நாளையிலே வூர்கூடி அத்துப்பிறிச்சுக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொண்டு வருகிறோம் நீங்களிங்கே இருங்கோளென்று சொன்னார்கள். பொன்னய்யரை யோசனைப் பண்ணிக்கொண்டு வரச்சொல்லி சொல்ல நாங்களிது வரைக்கும் நடப்பிச்சு யிப்போ நடப்பியாமல் போனால் எங்கள் பேரிலே நேரம் செமத்தவும் அபறாதமும் போனால் வாங்கலாம். தெண்டிக்கவும் ஞாயம். நூதனமாய் எங்களை அழைத்து ஞாயம் கேளாமல் கொண்டு போய்க் கச்சேரியில் காவல் வைக்கச் சொல்லியிருப்பவும் இந்தச்சாடை நடத்தச் சொல்லுகிறது எந்த ஞாயம் ஒருக்காலும் வழங்காத வழக்கத்தை வழங்கிவிக்க யில்லை யென்று தப்பிதமாய்ச் சொன்னவனைப் பிடிச்சுக் காவல் வைத்து அபறாதமும் வாங்க வேண்டியதென்றும் சொல்லி இனிமேல் வலங்கையார் ஆனை முதலானதுகளேறுகிறதுக்கு எங்களுத்தார மில்லாமல் ஏற வொட்டுகிறதில்லை.

இனிமேல் நாங்களும் அவர்கள் தேவடியாக்கள் எழுந்திருக்கவில்லை யென்று நாங்களும் யெப்படி நடப்பிக்க வேண்டிபடிக்கு நடப்பிக்கிறோம். அவ்வென்றால் வூரைவிட்டுப் போகிறோம். நிறபறாதியாய் யெங்கள் கட்டுக்குள்ளே நாங்களிருக்கச்சே எங்களை அழைத்தும் கேளாமல் தேவடியாக்கள் எழுந்திருக்கவில்லையென்று கலியாணத்து வூர்கோலம் வருகிற வேளையிலே தேவடியாக்களைக் கொண்டு போய்க் காவல் பண்ணுகிற அனியாயம் எங்கேயாகிலும் ஒருத்தர் வந்து சொன்னால் மத்தபேர்களையும் அழைப்பிக்க ஞாயம் கேழ்க்க தப்பிதமாய் நடந்து யிருக்கிறவளுக்கு தெண்டனை பண்றதெல்லாம் ஞாயமிதை விட்டுப்போட்டு இந்தவூர் தோன்றின நாள் முதல்கொண்டு நடவாத நடத்தையை இப்போ நடத்த வேணுமென்றால் அதங்குத் துரையவர்களுஞ் சம்மதியாயிருந்து சோராவரியாய் நடத்திக் கொள்ளுங்கோள்.

நாங்கள் எங்கே எங்களுக்கு மேம்பாடு நடக்குமோ அங்கே போறோமென்றும் வலங்கைக்கும் இடங்கைக்கும் அதுகௌப்பட்டிருக்கிறதென்ன அந்தப்படிக்கு அவரவர் நடக்க வேணுமென்ற கட்டன்னவென்று இப்படி தாங்கள் ஞாயமனேகமாய்ச் சொல்லிக் கொண்டார்கள்.

1750 ஆம் ஆண்டு சூன் மாதம் 2ஆந் தேதி பிரமோதூத ஆண்டு வைகாசி மாதம் 23 ஆந் தேதி செவ்வாய்க் கிழமை:

… இந்தனாள் சாயங்காலம் ஆறு மணிக்கு துரையவர்கள் அழைச்சனுப்பிவிச்சு ஆற்காடு சேதி யேதாகிலும் வந்ததா என்று கேட்டார். …இடங்கை தேவடியாக்கள் வலங்கையாளுக்கு யெழுந்திருக்கவில்லையென்று கொண்டுபோய் தேவடியாக்களைக் காவல் வைத்து யின்று ஆறு நாளாகிறது. அவர்களேன் பிறாது பண்ணயில்லை யென்று கேட்டார்.

அப்படியேதாகிலும் வலங்கையார் வந்து சொன்னால் எங்களையும் அழைத்து ஞாயம் கேட்டு நேரம் சுமத்தியல்லோ காவல் வைக்க வேணும். இந்த ஆர்த் தோணின நாள் முதலாய் அவரவர் மரபுப்படிக்க நடந்து வந்ததுக்கு மரியாதை பண்ணவில்லை யென்றும் நாங்களும் மரியாதை பண்ணாமலிருக்கிறல்லோ நியாயம். அதைத் தொட்டு இப்படி நடப்பிச்சார்கள் யிதிலே மெத்த அபகீர்த்தி யெங்களுக்கு என்று வெகு தாபத்தியமாய் உங்களுடனே சொல்லிக்கொள்ள வேணுமென்று சொல்ல வந்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.

1750 ஆம் ஆண்டு சூலை மாதம் 18ஆம் தேதி பிரமோதூத ஆண்டு ஆடி மாதம் 6ஆந் தேதி சனி வாரம்:

…துரையவர்கள் வெளியே வந்து யென்னத்துக்கு வந்தார்களென்று கேட்டார். நேத்து வரச்சொன்னீர்களே அதினாலே யிவர்கள் வந்தார்கள். வலங்கையார் வரயில்லை யென்று சொன்னேன். அவர்களும் வந்த பிற்பாடு வரச்சொல்லு யென்று சொன்னார். அந்தப்படிக்குச் சொன்னால் கேழ்க்க மாட்டோமென்று நின்று கொண்டிருந்தார்கள். மறுபடியிந்த பக்கமாய்ப் போய் அந்த பக்கமாய் வந்த உடனே யென்னவென்று கேட்டார். அவர்கள் உங்களுடனே சொல்லிக் கொண்டார்கள். நாங்கள் சொல்லிக் கொள்ளவில்லை யென்றும் ரெண்டு பேச்சும் கேழ்க்க வேணுமென்றும் நாங்கள் கும்பினீர் வர்த்தகர்கள் யெங்களுக்கு நீங்கள் மத்தத்து பண்ணி நடப்பிக்க வேணும். யெல்லார்க்கும் யெங்கள் பேச்சு மேல்வட்டமாய் நடக்கப் பண்ணுறது உங்கள் கடனென்று சொன்னார்கள்.

அதுக்கு அவர்கள், யிடங்கை தேவடியாக்களுக்கும் மரியாதை தெரியாதென்று சொன்னார். அதுக்கு அவர்கள் சொன்னது நாங்கள் போனால் வலங்கை தேவடியாக்கள் யெழுந்திருக்கிறார்களா அப்படித்தான் யிடங்கை தேவடியாக்களும் வலங்கையார் வந்தால் யெழுந்திருக்கிறார்களென்று சொன்னார்கள். அதுக்கு துரையவர்கள் முன்பின் யெழுந்திருக்க வாடிக்கை உண்டானால் யெழுந்திருக்கத் தேவையில்லையா யென்று கேட்டார். வாடிக்கையில்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் அத்துப் பிறிஞ்சு சீட்டுக் கலிகூட எழுதப்பட்டிருக்குது.

அப்படியிருக்கச்சே எழுந்திருக்கக் காரியமென்னவென்று கேட்டார்கள். நல்லது அவர்கள் வரட்டும் அவர்கள் விசேஷத்தையும் கேட்டு அல்லோ உத்தாரம் குடுக்க வேணுமென்று சொன்னாப்போலே இவர்களிரண்டு பித்திசாம் எழுதி கையிலே வைத்திருந்ததைக் குடுத்தார்கள்.

அதைப் பார்த்துக் கொண்டு அப்பு குதிரைமேல வந்தானா வென்று கேட்டார். வந்தானென்று சொன்னார்கள். நல்லது அப்படியே அழைத்துவா யென்று சொன்னார். அப்பை யென்ன வென்று கேட்டாலதை அது பொதுத் தெருவு அதினாலேறி வந்தேன். அது இடங்கைத் தெருவானால் நானேன் ஏறி வருகிறேனென்று சொன்னான்.

அந்தத் தெரு ஆருதென்று சட்டைக் காறர்கள் வெள்ளைக்காறர்கள் பறயர்கள் சமஸ்தான பேர்களும் வீடு இருக்கிறது. இவர்களுடைய அம்பட்டர் வீடு மூணு வீடு மாத்திரமிருக்கிறது. பறயர் போக்குவரத்து கலியாணம் சாவு முதலானதுகள் நடத்திற படியினாலே நான் வந்தேனென்று சொன்னது மல்லாமல் யிந்த கலாபம் நடந்த பிற்பாடான படியினாலே நான் விசாரியாமல் வருவேனா வென்று சொன்னான்.

அதுக்கு துரையவர்கள் யென்னைப் பார்த்து நீ விசாரித்து வந்த கபுறு சொல்லுயென்று சொன்னார்.

அதுக்கு அப்பு என்னைப் பார்த்து நானிவர்கள் பணிசவர் வீடுயிருக்கிற தென்று டேலொன்கிற வெள்ளைக்காற னிருக்கிற வீட்டுக்கு அப்புறம்தானே நானிறங்கி வந்தேன் யென்று சொன்னான். அதென்னவென்று துரை கேட்டார். நானப்போ தானே துரையுடனே சொல்லச் சொன்னேன். என்னுடனே சொன்னபடிக்கு அப்பு துரையுடனேயும் சொன்னான். அதுக்கு துரையவர்கள் றங்கப்புள்ளே நீ நன்றாய் விசாரித்து நாளைக்குச் சொல்லென்று சொன்னார். அதுவுமல்லாமல் வலங்கையாரையும் நாளைக்கு வரச்சொல்லு. உபயத்திரவர் ஞாயமும் கேழ்ப்போமென்று யிடங்கையாரைப் போகச் சொன்னார்.

அதுக்கவர்கள் துரையவர்கள் நேத்து தானே உபயத்திரவரையும் வரச்சொன்னால் அவர்கள் வர மாட்டோமென்று யித்தினை தாமசமாயிருக்கிறார்கள். அப்படியிருக்க நாங்களித்தனை யெறிஞ்சிவிட்டு கிடக்குறோமென்று திரும்பியும் துரையவர் களண்டைக்குப் போய் தேவடியாக்களை மாத்திரம் விட்டுவிடச் சொல்லுங்கோள் நாங்களேதாகிலும் ஓடிப்போகிறோமா வியாச்சிய முண்டனாது. நாங்கள் பேசுகிறோமென்று சொன்னார்கள். அதுக்கு துரையவர்கள் சொன்னது வலங்கையாரென் பேரிலே சலுத்தாரிவார்கள். பிறாது பண்ணுவார்கள். ஆன படியினாலே விடப்போகாதென்று சொல்லி நாளை வாருங்கோளென்று சொல்லிப் போகச் சொன்னார். அது மட்டுக்கும் இடங்கையார் அனுப்பிவிச்சுக் கொண்டு போனார்கள்.

அப்பால் அப்பு வந்து இறைச்சயப்பன் யிருக்கிற தெருவிலே ரெண்டு மூணுபேர் யிடங்கையார் இருக்கிறார்கள். யிரண்டு மூணுபேர் வலங்கையாரும் இருக்கிறார்கள். அதுவும் பொதுத் தெருவுதானே யென்று சொல்லி நீங்கள் தாயும் தகப்பனும் நன்றாய் விசாரிக்க வேணுமென்று சொன்னான். பக்ஷபாதமில்லாம சமனாகப் பார்க்கிறதே அல்லாமல் வித்தியாசமாய் பார்க்கத்தக்க தில்லையென்று சொல்லிப் போகச் சொல்லி அப்பால் பாக்குக் கிடங்கிலே வந்தவுடனே யிடங்கையாரும் அப்படியே உபசாரம் சொன்னார்கள். அதுக்கு நான் பதிலுத்தாரஞ் சொன்னது உபயத்திரவரும் யென் மட்டுக்கும் சரியாய்ப் பார்க்கிறதே யல்லாமல் வித்தியாசம் பார்க்கத்தக்க தில்லை யென்று சொல்லிப் போகச்சொன்னேன். அவர்களும் அனுப்பிவிச்சுக் கொண்டு போனார்கள்.

1737ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் தேதி 22 ஈசுவர ஆண்டு, அற்பசி மாதம், தேதி 10 சனிவாரம்:

இத்தனாள் சூரிய உதயமாக ஒருநாழிகை யென்னச்சே நான் முகம் கழுவிக் கொண்டு பாக்கும் போட்டுக் கொண்டிருக்கச்சே, கோட்டையிலே ரெண்டு மூணு பேரும் கருமார்களும் ரெண்டு பேர் தச்சரும் ஆக ஆறேழு பேர் வந்து கும்பிட்டு நின்று, எங்கள் காளிகாதேவி விசய தெசமிக்கு வரதராசப்பெருமாள், காளத்தீஸ்வரன் கோயில் ஈசுவரருடனே கூட பாறு வேட்டை பிறப்பிடுகிறதுக்கு ரெண்டு மூணு வருஷமாய் உங்களுடனே சொல்லிக் கொண்டு வந்ததுக்கு ஊராருடனே சொல்ல வேணுமென்று நீங்கள் சொன்னீர்கள். நாங்கள் அவர்களைக் கேழ்க்கிறதுக்கும் போகங்காமலிருந்து, யிப் போவானால் நேத்தைய தினம் நாங்கள் முசே கலாருடனே சொல்ல ஒப்பித்திசாம் எழுதி தொரைக்குக் குடுத்தோம். அதன் பேரிலே அவர் ஆரை அழைக்கச் சொல்ல வேணும் யென்று கேட்டார்.

அதுக்கு யெங்களுடனே கேளாமல் படிக்கு முசே கலார் யிருந்து கொண்டு யிவர்களை வினாயகம் பிள்ளை கையிலே ஒப்பிச்சு யிந்த வேலை நீ செய்து போடவேணும் யென்று சொன்னார். வினாயகம் பிள்ளையும் அதுக்கு முன்னேயும் அங்கே வந்திருந்தார். அவன் அழைச்சு யெங்களை அவர் கையிலே ஒப்புவிச்சு யிவர்கள் வேலை நீ செய்துகுடுத்து யெனக்கு வந்து கபுறு சொல்லென்று சொன்னார். வரும்படியே யுங்களுடைய மனதின்படிக்கு நடப்பிச்சு உங்களுக்கு வந்து கபுறு சொல்லுகுறேனென்று சொல்லிப்போட்டு பிறப்பட்டு, யெங்களையும் அழைச்சுக் கொண்டு வந்து வரதராசப் பெருமாளுடனே கூட உங்கள் காளிகா தேவியையும் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போங்கோளென்று சொல்லி உத்தாரங் குடுத்து அனுப்பினார்.

அந்தப்படிக்கு யின்றைக்கு நாங்கள் யெழுந்தருளிப் பண்ணிக்கொண்டு போற கபுறு உங்களுடனே சொல்லிப்போட்டு போக வந்தோமென்று சொன்னார்கள்.

அதுக்கு நானிருந்து கொண்டு, ‘மெத்தவும் சந்தோஷமாச்சுது. ஆனால் பட்டணத்துக்குள்ளே நம்முடைய மதத்துக்கு யெத்தனை விருத்தியாய் நடக்குதோ அத்தனையும் யெனக்கு சந்தோஷம் தான். ஆனாலிது வலங்கையாருடைய அனுகூலத்தின் பேரிலே நடக்க வேணுமே யல்லாமல் துரைகளுடைய உத்தாரம் யிதுகளுக்கு பெத்து நல்லவேலை செய்தீர்கள். யிது உங்களுக்கு அட்டியில்லாமல் நடக்கறதுக்கு நான் ஒரு உபாயம் சொல்லுகிறேன். அந்தப்படிக்குச் செய்யுங்கோள்’ என்று சொன்னதுக்கு, ‘நல்லது. அப்படியே செய்குறோமென்று’ சொன்னார்கள்.

அதுக்கு நான் சொன்னது, ‘வலங்கையாரிலே சாதிக்கிரெண்டு பேர் நாட்டாமைக்காரர் இருக்கிறார்களே, அதிலேயும் முக்கியமாய் கவரைகள், இடையர்கள், அகம்படையர்கள், வெள்ளாழர், கைக்குளவர் வகையிராயிப்படி யேழெட்டு சாதியுடைய நாட்டாமைக்காரர்கள் யிருக்கிறார்களே. அவர்களண்டைக்கு நல்ல பேச்சாய், அவர்களுடனே பட்டணத்திலே தர்மராசா, மாரியாத்தாள் சகலமான தெய்வங்களும் வேடிக்கையாய்க்கூடப் பிறப்படுகிறாப்போல எங்கள் தெய்வமும்கூட பிறப்பிடத்தக்கதாக நீங்கள் தயவு பண்ணி உத்தாரம் குடுக்க வேணும். அதினாலே பின்னையும் வேடிக்கையாயிருக்கிறது மல்லாமல், யெங்களுக்கெல்லாம் வெகு சந்தோஷமாயிருக்கும், நாங்களும் உங்களுடைய வேலைக்காரர் அல்லாமல் மத்தப்படிக்கு அல்லவே யென்று யிப்படியாக நல்ல பேச்சை சொல்லி அவர்களுடைய உத்தாரம் வாங்கிக் கொண்டு நடப்பிச்சார்களானால் ஒரு தவறுதலையும் வராமல் சம்பிறம்மாய் நடக்குமென்று சொன்னேன்.

அதுக்கு அவர்கள் சொன்னது, ‘அப்படி நாங்கள் ஒருத்தரண்டைக்குப் போகத்தக்கது மில்லை. ஒருத்தருக்கு நல்லப் பேச்சும் சொல்லத்தக்கது மில்லை. யெங்களுக்குத் தொரைகளுடைய உத்தாரமிருக்குது. வினாயகம் பிள்ளையை நடப்பிச்சுப் போடச்சொல்லி உத்தாரம் குடுத்து யிருக்கிறார். அந்தப்படி நடந்தேறிப் போகுதென்று சொன்னார்கள்.

அதுக்கு நான், ‘உங்களுக்கு மனுசுக்குச் சரி போனபடியே செய்யுங்காள் யென்று சொல்லி, முன்னாலே யிடங்கையாருடனே சேந்த காளத்தீஸ்வரனைக் கூட எழுந்தருளப் பண்ணுகிறதுக்கு முசே லப்பிறவித்தியேர் நாளையிலே இடங்கையர்ப் பிரயத்தனம் பண்ணி, அப்போ திருவேங்கிடப் பிள்ளை அவர்கள், நாசப்ப னாயக்கரவர்கள் கூட முளை அடிச்சுயிருக்க சேயும் வலங்கையர் சம்மதியாமல் போனார்கள். அப்பால் முசே லெனுவார் அவர்கள் தானே நாற்பது நாற்பத்து அஞ்சு நாள் பிடிமானமாய் முன்னடந்த தஸ்த வேசைப் பிடிச்சுக் கொண்டு யெத்தனையாக வலங்கையாருக்குச் சொல்லியும் சம்மதியாமல் அப்பால் துரைகளே மனுவாய் கேட்டுக் கொண்டதின் பேரில் நடப்பிச்சுக் கொள்ளச் சொல்லி உத்தாரம் குடுத்தார்கள். அப்படியெல்லாம் திருக்காளத்தீஸ்வரன் கோயிலுக்கு வெகு பிரயத்தனம் பண்ணினதின் பேரிலே நடந்திருக்கச்சே, யிதுக்கு இப்படி நடப்பிச்சுக் கொள்ளுகிறது வலங்கையார் சம்மதியார்கள். அப்பாலுங்களுடைய மன’ தென்று நான் சொன்னேன். அந்த மட்டுக்கும் அவர்கள் பிறப்பிட்டுப் போனார்கள்.

மறுபடி யென்னண்டைக்கு வந்ததில்லை. அப்பால் அவர்கள் போயி வினாயகம் பிள்ளையுடனே சொல்லிக் கொண்டதாயும், அதுக்கு அவர் யெவன் தகையுறவன், யெவனுக்கு யென்ன குதிராத்து யிருக்குது. உங்களுடைய மனுசும் படிக்கு உங்களுடைய தெய்வத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போங்கோளென்று சொன்னதாய் சேதி, கேழ்க்கப்பட்டது.

அப்பால் நாலு நாழிகை பொறுத்து வினாயகம் பிள்ளை கோட்டை அண்டையிலிருந்து கொண்டு, வலங்கையாரிலே வெள்ளாழரிலே கனகசபை முதலி, பவழக்கார தேவராயச் செட்டி வகையிராக்களை அழைப்பிச்சு, உங்களுடைய வரதராசப் பெருமானுடனே கூட காளிகா தேவியை எடுத்துக் கொண்டு போகத்தக்கதாக தச்சர், கருமார்கள், கன்னார் வகையராக்களுக்கு தொரை உத்தாரம் குடுத்திருக்கிறார். அந்தப்படிக்கு எழுந்தருளப் பண்ணிக்கொள்ளட்டும் என்று சொன்னார். அதுக்கு நாங்கள் ஒருக்காலும் நடவாத சம்மதியை பிப்போ நூதனமாய் நடப்பிக்குறதுக்கு சம்மதிக்குறதில்லை யென்று சொன்னார்கள். அதுக்கு அவர் நீங்கள் சம்மதியாவிட்டால் வரதராச சுவாமி பிறப்பிக்கப்படுகிறது கூட நின்றுபோம் என்று சொன்னார். அப்படி நின்று போனாலும் போறதே யல்லாமல் நாங்கள் சம்மதிக்குறதில்லை யென்று சொல்லிப்போட்டு வந்தேமென்று கனகசபை முதலி, தேவராய செட்டி வகையராக்கள் யென்னுடனே வந்து சொன்னார்கள். அதுக்கு நான் துரைகள் பார்த்துச் சொன்னார். நீங்கள் கேட்கத் தேவையில்லையா, என்று சொன்னதுக்கு, அதுக்கு அவர்கள் ‘பின்னை யெந்தக்க காரியம் சொன்னாலும் கேழ்ப்போமே யல்லாமல், யெங்கள் சாதி வழக்கத்துடனே சேந்த சம்மதிக்கு ஒருக்காலும் இல்லாதது நடக்க வேணுமென்று சொன்னால் சறுவாத்துமனாக நாங்கள் சம்மதிக்கிறதில்லை. இப்பாலவங்க சோராவாரியாய் நடப்பிச்சால் நடப்பிக்கட்டு’ மென்று சொன்னார்கள்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

1 thought on “ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்”

  1. இ.தினேஷ்கண்ணா

    இப்படி கூட வழக்கங்கள் இருக்கிறதா என்பதே எங்களை போன்றோருக்கு கேள்விக்குறி ஐயா

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *