Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

வேதபுரீஸ்வரர் கோயிலில்

வேதபுரீஸ்வரர் கோயில். புதுச்சேரியின் புகழ்மிக்கக் கோயில். பொது ஆண்டு 12இல் கட்டப்பட்டிருக்கலாம். நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த கிறிஸ்துவக் கோயிலான சம்பாக் கோயிலுக்கு அருகாமையில்தான் வேதபுரீஸ்வரர் கோயில் இருந்தது. இங்கு தினசரி நடக்கும் பூஜைகள், விசேஷ நாட்களில் நடைபெறும் வழிபாடுகள், ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் ஆலய மணியோசை இவையெல்லாம் சம்பாக் கோயில் பாதிரியார்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வந்தன. தங்கள் வழிபாட்டிற்கு இந்தக் கோயில் இடையூறாக இருப்பதாகவே அவர்கள் கருதினர்.

இதனால் இவ்விரு வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையே அவ்வப்போது பூசல்கள், மோதல்கள் எழுந்து வந்தன.

திடீரென ஒருநாள் ஈசுவரன் கோயிலின் பலி பீடம், திருச்சுற்றில் இருக்கும் சிலைகள் மீது யாரோ நரகலை (மலம்) வீசிவிட்டுச் சென்றனர். இதையறிந்த ஊர் மகாநாட்டார், வீடுகளில் அடுப்பு மூட்டவும் வேண்டாம், சமைக்கவும் சாப்பிடவும் வேண்டாம் என்று சொல்லி பெருமாள் கோவில் வாசலில் மகாநாடு கூடினர். இப்படிக் கூடினவர்கள் பின்னர் அடித்து விரட்டப்பட்டனர். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன.

இச்சம்பவம் நடந்து ஒன்பது மாத இடைவெளியில் டிசம்பர் மாத இறுதியில், ஈசுவரன் கோயிலுக்குள் மீண்டும் நரகல் வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ‘இதை நடத்தினது சம்பா கோவிலார் தான்’ என்பது ஊர்ஜிதமானது.

அடுத்தநாள் ஜனவரி பண்டிகை. வழக்கம்போல சம்பாக் கோவிலுக்குச் சென்ற ஆனந்தரங்கருக்கு வழக்கம்போல் கொடுக்கப்படும் மரியாதைச் சற்றுக் குறைவாகவே கொடுக்கப்பட்டது. காரணம், நேற்று நடந்த சம்பவத்தை இவர்தான் துரையிடம் கொண்டு சென்றார் என்று சம்பா கோவில் நிர்வாகம் நினைத்தது தான்.

ஆனால், ‘நானதைப் பிடிவாதமாய்த் துரையுடனே சொன்னதில்லை. மகாநாட்டார் அவர்கள் வந்து சொல்லிக்கொண்ட பேச்சை துரைக்கு எச்சரித்ததின் பேரிலே அவராய் நடப்பித்ததேயல்லாமல் நானொன்றுஞ் சொன்னதில்லை. அப்படி நானிப்படி அப்பிருத்தியாயிருக்க அவர்களாய் நினைத்தால் நாம் செய்யலாவதென்ன?’ என்று அங்கலாய்க்கிறார் ஆனந்தரங்கர்.

அடுத்த சில நாட்களில் கிறிஸ்துவர்கள் சடலத்தை எடுத்துச் செல்லும் டோலி மீது நரகல் கரைத்து ஊற்றப்பட்டதாக வதந்தி கிளம்பியது. விசாரணையில் அதில் உண்மையில்லை எனத்தெரியவந்தது. இதனால் சம்பாக் கோயில் பாதிரியாரை அழைத்த ஆளுநர் ‘உங்களைப் போன்ற பெரிய மனிதர்கள் இப்படிச் செய்யலாமா? பட்டணத்தில் குடிகளைச் சேரவிடாமல் செய்கிறீர்களே’ என்று கடிந்து கொண்டார்.

இச்சம்பவங்கள் குறித்துத் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு விவரிக்கிறார் ஆனந்தரங்கப் பிள்ளை:

1746 மார்ச் 17 பங்குனி 8 வியாழக்கிழமை

வியாழக் கிழமை நாள் நடந்த சேதி. புதன் கிழமை நாள் இராத்திரி பதினோரு மணி நேரத்திலே ஈசுவரன் கோவிலிலே யாரோ இரண்டு பேர் கல்பாசியிலே நரகலைக் கரைத்து வந்து பலிபீடம் சுற்றிலே யிருக்கிற தெய்வங்களிதுங்கள் தலையிலேயும் விட்டு ஈசுரன் சன்னதி சகல வாசலாலே உள்ளேயும் இறைத்து நந்திகேசுரன் பேரிலேயும் அதையும் உடைத்தும் போட்டும் கோவில் இடிந்திருக்கிற வழியோடே புறப்பட்டுப் போனார்கள்.

இற்றைநாள் உதயத்திலே நம்பியானும், கோவில் தொழிலாளிகளும், கோவில் பெரிய வாசல் கதவைத் திறந்து உள்ளே போனவிடத்திலே இந்தப்படி அசூசி பண்ணிக்கிடக்கிறதையெல்லாம் பார்த்து வெளியேவந்து பெரிய கிரகஸ்தர்களாய் இருக்கிற பேர்களுடனே போய்ச்சொல்லி, மகாநாட்டார்களுடேனேயுஞ் சொல்லி, அவர்களையும் கூட்டிக்கொண்டுவந்து கோவிலிலே பண்ணியிருக்கிற அசூசியெல்லாம் காண்பித்தார்கள்.

அதன் பேரிலே நம்பி அவர்களும் நாலுபேர் பிராமணரும் புறப்பட்டுப் பிராமண வீதி முதல் சகல வீதிகளிலேயும் போய் வீட்டுக்கு வீடு ஈசுவரனுக்குப் பூசையில்லை. ஈசுரன் பேரிலேயும் தேவி பேரிலேயும் ஆணையிருக்கிறது. யாரும் அடுப்பு மூட்டிச் சமையல் பண்ணத் தேவையில்லை. சாப்பிடவும் தேவையில்லையென்று ஆணையிட்டார்கள். அதின் பேரிலே ஒன்பது மணிக்கு பெருமாள் கோவில் வாசலிலே மகாநாடு கூட்டினார்கள். அதிலே கூடின பிராமணர் முதற்கொண்டு பறையர் வரைக்கும் சகல சாதியும் கூடினார்கள். பட்டணத்திலே கடையெல்லாம் கட்டினார்கள்.

இந்தச் சேதி துரையவர்கள் கேட்டு, பாளையக்கார நயினாரைக் கூட்டிவரச் சொல்லி ரொம்ப கோபம் பண்ணி, நயினார் வர சலகிரிமோசி பண்டிதரை அனுப்பிவித்து மகாநாடு கூடியிருக்கிற பேரையெல்லாம் அடித்துத் துரத்திவிடச் சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். அந்தப்படிக்கு கிரிமோசி பண்டிதர் மகாநாட்டார் கூடியிருக்கிற விடத்திலே போய் ஒரு செட்டியை கன்னத்திலே அடித்து எல்லாரையும் ஓடிப்போகச் சொல்லி, திரும்பவும் அடிக்கப் போனார்.

இதிலே மகாநாட்டாருக்குள்ளே பத்துப்பேர் குறுக்கே விழுந்து நீர் அடிக்கிற தென்ன. அவரவர் மதத்துக்கு அவரவர் கூடார்களா? எங்கள் கோவிலிலே இப்படியெல்லாம் பண்ணக் காரியமென்ன, இது துரையவர்கள் விசாரிக்க வேணுமென்று நாங்கள் கூடினால் நீர் வந்து அடிக்கிறதென்ன. எல்லாரையும் கொன்று போடுங்களென்று தெம்புமேலே தள்ளிவிட்டார்கள். அதின்பேரிலே கிரிமோசி பண்டிதர் துரையவர்கள் அண்டைக்கு வந்து நடந்த சேதியெல்லாம் சொன்னார்.

அவர் சொன்ன சேதியை துரையவர்கள் கேட்டு, சின்னமுதலியாரையும் பிள்ளையவர்களையும் அழைத்து வரச்சொன்னார்கள். அப்போது சின்னமுதலியார் வந்தார். அவரை துரையவர்கள் அழைத்து நீ போய் மகாநாட்டாரைக் கூட்டி வாவென்று அனுப்பி வைத்தார். அந்தப்படிக்கு சின்னமுதலியார் போனார். அவர் போனபிறகு பிள்ளையவர்களும் வந்தார்கள்.

உடனே துரையவர்கள் பிள்ளையவர்களையும் போய் மகாநாட்டாரைக் கூட்டி வரச்சொல்லி அனுப்பினார்கள். அதின் பேரிலே பிள்ளையவர்களும் போய் முதலியார் அவர்களுமாக மகாநாட்டாருக்குச் சொல்லி மகாநாட்டாரை துரையவர்கள் அண்டைக்குக் கூட்டி வந்தார்கள். இரண்டு மணிக்கு மகாநாட்டாரும் வந்து துரையவர்களைக் கண்டார்கள். அப்போது துரையவர்கள் மகாநாட்டார் பேரிலே ரொம்ப கிரிமோசி பண்டிதரை அடிப்பானே னென்றும் உங்களைச் சுட்டுப்போடச் சொல்லுவோமென்றும் ரொம்பவும் கோபம் பண்ணி அதின் பேரிலே எல்லாவற்றிற்கும் உங்கள் காரியமெல்லாம் பிள்ளையவர்களிடம் சொல்லுங்கள். அவர் நமக்குச் சொல்லி தீர்த்துக் கொடுப்பார். நீங்கள் கூடியிருக்கத் தேவையில்லை யென்றும் சமாதானமாகச் சொல்லி அந்தக் காரியமெல்லாம் பிள்ளையவர்கள் பேசுகிறதென்று பிள்ளையவர்கள் முகாந்திரம்பண்ணி மகாநாட்டாரை அனுப்பிவித்தார்.

மகாநாட்டார் எல்லாம் போனவுடனே மாயே துலுக்கரில் நூறு இருநூறு பேரை மகாநாட்டாரைச் சுடுகிற நிமித்தியம் துரையவர்கள் அண்டைக்கு வந்தார்கள். அதற்கு முன்னே மகாநாட்டார் சம்மதி தீர்ந்து போனபடியினாலே அவர்களையும் அழைத்து நாலு வாலிலேயும் மகாநாட்டார் போகாமல் பத்திரமாயிருக்கச் சொல்லி உத்தாரங் கொடுத்தார்கள். இற்றைநாள் நாலு மணிக்குள்ளே இவ்வளவு நடந்தது. இனிமேல் என்ன நடக்குமோ தெரியாது.

1746 டிசம்பர் 31 மார்கழி 20 சனிவாரம்

இற்றைநாள் ராத்திரி ஏழு மணிக்கு வேதபுரீஸ்வரன் கோவிலிலே, சம்பாக் கோவிலே நரகலைப் போட்டு அப்புறத்திலே யிருந்து எறிந்தார்களாம். அப்போது சங்கரய்யன் பிரதக்ஷனம் பண்ணுகையிலே அது பிள்ளையார் கோவிலண்டையிலே விழுந்ததாம். சங்கரய்யன் தலைமேலே விழத் தப்பித்ததாம். அது விழுந்துடைந்ததாம்.

அந்த துர்க்கந்தம் பொறுக்கக் கூடாமல் போச்சுதென்றும், மகாநாட்டார், தில்லை முதலி, பெத்துசெட்டி, ஆறுமுகத்தா முதலி, ஆண்டநாயகப் பிள்ளையும் பத்துபேர் வந்து சொன்னார்கள். அந்தச் சேதி துரையுடனே சொன்னாப்போலே முசே மேரையும், தெமேரேனையும் தானப்ப முதலியையும் அழைத்து வரச்சொல்லி அவர்கள் வர ஒன்பரை மணி சென்றது. அவர்கள் வந்தவுடனே முசே பரிதியைக் கூடக்கூட்டி யதைப்போய் பார்த்துவரச் சொல்லியனுப்பினார். …

அப்பால் முசே பரிதி, மேர், தெமேரேனு மூன்று பேரும் தானப்ப முதலியும் கோவிலண்டை போனவுடனே மலைக்கொழுந்தன் மகன் பற்லாமென்கிற பையன் பறைப்பசங்கள் கூட வந்தவர்களைப் பறங்கிப் பேச்சுப் பேச்சுக்குள்ளே கோவிலுக்குள்ளே போகச் சொன்னாப்போலேயும், அதை முசே மேர் கேட்டு பற்லாமென்கிற பயலை நீ இங்கே வந்தா யுன்னுடைய வேலையா போ என்று கோபித்துக் கொண்டானதின் பேரிலே போறேனய்யா வென்று புறப்பட்டுப் போய்விட்டாப் போலே பிற்பாடு கோவிலுக்குள்ளே நுழைந்து பார்த்தார்கள்.

உடைந்து விழுந்திருக்கிற கூசாவை மோந்து பார்த்து நரகல் தானேன்று சொன்னார்கள். உடைந்தவிடமும் பார்த்து விழுந்த இடமும் பார்த்து அந்தக் கோவிலிலே யிருந்து விழுந்தது பிசகில்லை. அவர்கள்தான் போட்டது என்று தீர்த்துப் பரிதி துரையுடனே சொல்லவேணுமென்று சொன்னான். முசியே மேர் இருந்து கொண்டு பாதிரிகளைப் போய்க் கேட்கவேணுமென்று சொன்னான். முசே பரிதி எனக்கு உத்தரவு தரவில்லை யென்று சொன்னான். மேர், எனக்கு உத்தரவு தானென்று சொல்லிச் சொன்னவிடத்திலே நல்லதென்று பரிதி முதலான பேர் சம்பா கோவிலண்டைக்குப் போய் மணிக்கயிறு வெளியிலே விட்டிருக்குதே அந்தக் கயிற்றைப் போயிழுத்தவுடனே மணி சத்தமாச்சுது.

அந்த சப்தமானவுடனே சுப்பிரியாருக்கிற பாதிரி, கடுதி யென்கிறவன் வந்து கதவைத் திறந்து வந்த காரியமென்ன வென்று கேட்டான். அதன் பேரிலே நடந்த சேதியைச் சொல்லி அது விழுந்த சாடைப் பார்த்தால் உங்கள் கோவிலிலேயிருந்து விழுந்திருக்குதென்று சொல்லி ஈசுவரன் கோவிலிலே விழுந்த சாடைக்கு நேராய்ப் பாதிரி கோவிலிலே பார்த்தால் சரியாயிருந்தது.

இதல்லாமல் அந்தப் பக்கத்திலே சுவரின் கீழே கல்லெல்லாம் பிடுங்கியிருக்கிற சாடையும் பார்த்து இப்படி நடக்கிறது நல்லதல்லவென்று ரொம்பவும் சொன்னார்கள். யிப்படி நாங்கள் நடத்தவில்லை அவர்கள்தானே இந்தப்படிக்கு நடப்பித்துக் கொண்டு பிராது பண்ணினால் அதன் பேரிலே நீங்கள் விழுந்து சுவரும் கட்டாமல் கிடக்கிறதற்கு உத்தாரங் கொடுப்பார்கள் என்று பண்ணின காரியமென்று சொன்னார்கள். உங்களுடைய சாடை எல்லோருமறிவார்கள் என்று சொல்லிவிட்டு, குவர்னதோர் அண்டைக்கு வந்து நடந்த காரியமும் மெய்தான். சம்பா கோவிலார் தான் நடத்தினது. அதற்குச் சந்தேகமில்லையென்று சொன்னார்கள்.

அதன் பேரிலே துரை சொன்னது இந்தப்படிக்கு எழுதி வையுங்கோளுங்கள் சீர்மைக்கு எழுதியனுப்பவோ மிதற்கு இங்கேயும் அதற்குத்தக்கதாக நடத்துவோமென்றும் பின்னையும் அவர்கள் ஊரிலே நடத்துகிற காரியமும் இரண்டு நாழிகை தேசகாலம் பேசியிருந்து அரவரவர் வீட்டுக்குப் போனார்கள். நானும் தானப்ப முதலியும் வீட்டுக்குப் பதினொரு மணிக்குப் போனோம்.

1747 ஜனவரி 1 மார்கழி 21 ஆதிவாரம்

இற்றைநாள் சனவரி பண்டிகையான படியினாலே முசே போற்னவால் வீட்டுக்குப் போனேன். ‘இங்கே நேற்று ராத்திரி தமிழர் கோவிலிலே பீயைக் கரைத்து ஊற்றினார்களாம். இது பாதிரிகள் நடத்தினாலும் யார் நடத்தினாலும் இதுக்கேற்ற தண்டனை தண்டித்தது போலேயும் அல்லோ இனிமேல் வர்த்தகருக்குச் சலக்கறணை நடப்பிக்க போகீறதென்று’ சொன்னான்.

…அப்பால் சம்பா கோவிலுக்குப் போனோம். அங்கே மரியாதை மற்றதெல்லாம் எப்போதுஞ் சட்டமாய்த்தானெ நடந்தது. ஆனாலப்போதும் என்னை ரொம்பவும் ஸ்தவுத்தியமாய்ப்பண்ணி என் கழுத்தை வந்து கட்டிக்கொண்டு ரொம்பவும் லாலனைப்பண்ணி, உபசாரஞ் சொல்லி அனுப்புவார்கள். அதுமாத்திரம் நடக்கவில்லை. அது உதனாலேயென்றால், நேற்று ராத்திரி வேதபுரி ஈஸ்வரன் கோவிலிலே நரகலைக் கொண்டுவந்து போட்டதைத் துரைக்குச் சொல்லி, கோன்சேல்காரரை அனுப்பி விசாரிக்கப் பண்ணினது நானென்றாப்போலே அவர்களுக்குத் தேற்றி என்பேரிலே சற்றுக் குறைந்திருக்கிறாப்போலே கண்டது. ஆனால், நானதைப் பிடிவாதமாய்த் துரையுடனே சொன்னதில்லை. மகாநாட்டார் அவர்கள் வந்து சொல்லிக்கொண்ட பேச்சை துரைக்கு எச்சரித்ததின் பேரிலே அவராய் நடப்பித்ததேயல்லாமல் நானொன்றுஞ் சொன்னதில்லை. அப்படி நானிப்படி அப்பிருத்தியாயிருக்க அவர்களாய் நினைத்தால் நாம் செய்யலாவதென்ன? இந்தப் பிரபுவினுடைய சாடை ஒருத்தர் சொன்னாப்போலே கேட்கிறவரல்லவென்று சமஸ்தான பேருக்கும் தெரிந்தே யிருக்கிறது. அப்படி அறிந்தும் எண்ணினால் செய்யலாவதென்ன யிருக்கிறது?

1747 ஜனவரி 10 தை 1 செவ்வாய்க் கிழமை

அப்பாலிரண்டு மூன்று நாளைக்கு முன்பாக அரியாங்குப்பத்திலே யிருக்கிற சம்பா கோவிலிலே பிரேதத்தை யெடுக்கிற டோலி ஒன்று இருந்ததாம். காயம்பட்ட சொல்தாதை யதிலே போட்டணுப்பினார்கள். அந்தக் காயக்காரனை இஸ்பித்தாலிலே போட்டு அந்த டோலியைக் கொண்டுபோய் அரும்பாத்தபிள்ளை வீட்டண்டையிலே போட்டுவிட்டு கூலிக்காரர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அந்த டோலிக்கு குருசொன்று போட்டிருக்குமாம். அதன்பேரிலே சம்பா கோவிலிலே யிருக்கிற பிரகாசனென்கிறவன் அந்தத் தெரு வழியே போகச்சே இதைக்கண்டான். அவனுக்கு எப்படி தெரிந்தது என்றால் டோலி சட்டமாயிராதே. பிரேதத்தை யெடுக்கிற டோலி சாடை வேறானபடியினாலே இவன் பார்த்தாப்போலே தெரிந்து அதைச் சின்ன பரசுராமப்பிள்ளை யண்டைக்குப் போய் இதேது டோலி? எங்கள் கோவிலு போலக் காணுதென்று கேட்டான். நானறியேன். அரியாங்குப்பத்திலிருந்து சாயக்காரரை எடுத்து வந்த கூலிக்காரர் இங்கே போட்டுவிட்டுப் போனார்களாங் காட்டியும் இப்பவுங் கூலிக் கொடுக்கிறேனென்று என்றெடுத்துப்போகச் சொன்னானாம். நல்லதென்று சொல்லிவிட்டு அவன் போய் பாதிரி கடுத்துடனே சொன்னானாம்.

அவர் துரைக்கு ஒரு பெத்திஸியோ மெழுதி இந்த அரியாங்குப்பத்திலே யிருக்கிற பிரேத்ததை எடுக்கிற கட்டிலிலே ஒரு குருசு போட்டிருக்கும். அதைக் கொண்டு வந்து அரும்பாத்தை வீட்டண்டையிலே தெருவிலே போட்டு அதன் பேரிலே பீயைக் கரைத்து ஊற்றிக் கல்லிலே போட்டு இப்படிப்பட்ட அலங்கோலம் பண்ணினார்கள் என்றும், பின்னையும் அடுத்த நியாயங்களை எழுதி குவர்னதோருக்குக் கொடுத்தாப் போலேயும் அதைக் குவர்னதோர் பார்த்து கொண்டவுடனே கிறேப்பியர் முசியே தெமெரேனையும் இராசவுடைய புறோக்கிறதோர் முசே மேரையும், முசே மீராவையும் அழைத்துபித்துக் கொண்டு பாதிரி கடுத்தேயையும் அழைப்பித்துக் கொண்டு அப்பால் மனுஷரையனுப்பி அந்தக் கட்டில் பல்லக்கை எடுத்துக் கொண்டு சின்ன பரசுராமப் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்கள்.

சின்ன பரசுராமப் பிள்ளை வந்தவுடனே இந்தக் கட்டில் சேதி என்னவென்று கேட்டார்கள். முன் அந்தப் பக்கத்திலே எழுதியிருக்கிற படிக்கும் பரசுராமப் பிள்ளை வந்து சொன்னான். அதற்குத் துரை யிருந்து கொண்டு அப்போது தானே ஏன் அனுப்பிவிடாமற் போனாய் என்று கேட்டார். எனக்கு ஆயிரம் அலுவல். கட்டில் பல்லக்கு இருந்த சேதியை நானறியேன். பாதிரி மனுஷன் வந்து எங்கள் கட்டில் பல்லக்குப் போலே இருக்குறதென்று கேட்டான். நானறியேன். அரியாங்குப்பத்திலே யிருந்து வியாதிக்காரரை எடுத்து வந்தார்கள். கூலிக்காரர் போட்டுவிட்டுப் போனார்கள். இப்பவுங் கூலிக்காரரைக் கூட்டுகிறேன். எடுத்துபோமென்று சொன்னேன். நல்லதென்று போனவன் மறுபடி வராமற் போனானென்று நடந்த சேதியைச் சொன்னான்.

அப்பால் ராசாவுடைய புரோகிறதோரையும் கிறேப்பியரையும் முசியே மீராவுடனேயுஞ் சொல்லி அந்தக் கட்டில் பல்லக்கிலே கல்லெறியப்பட்டு இருக்கிறதா? நரகலைப் போட்டு பின்னையும் அலங்கோலம் பண்ணியிருக்குதா? சம்பா கோவில் பாதிரி கடுத்தேயையும் கூட வைத்துக்கொண்டு இம்போர்மாரிட்டு தீர்க்கிற பரியந் தீர்த்து அதற்குள்ளே என்ன நடந்ததோ அதுகளெல்லாம் நீங்கள் போய் சவிஸ்தாரமாய் விசாரித்து வாருங்களென்று உத்தாரங் கொடுத்தார்கள்.

அதன்பேரிலே மேலே எழுதப்பட்ட நாலு பேரும் போய் அந்தக் கட்டில் பல்லக்கு அண்டையிலிருந்து, தச்ச மேஸ்திரியையும் அழைப்பித்துக் கல்லெறியப்பட்டு இருக்கிறதா? நரகல் விழுந்திருக்கிறதாவென்று அதுகளெல்லாம் பார்த்துச் சம்பா கோவில் பாதிரி கடுது என்கிறவரை அழைப்பித்து நீங்கள் எழுதிக் கொடுத்த பெத்திஸியோமிலே கல்லெறியப்பட்டு இருக்கிறதென்றும் நரகலைப் போட்டிருக்கிற தென்று மிப்படியெல்லாம் எழுதிப் போட்டார்களே. அப்படியிருக்கிற அடையாளக் குறிப்பு உண்டாயிருந்தால், காண்பியுங்கோளென்று மேலே எழுதியிருக்கப்பட்ட நாலு பேரும் கேட்டவிடத்திலே இதுகளெல்லாம் காஞ்சுப் போச்சுது. ஆனபடியினாலே தெரியவில்லையென்று சொன்னார். அதன் பேரிலே இவர்கள் நாலுபேரும் இருந்துகொண்டு நீங்களிப்படி அப்பத்தஞ் சொல்லுவீர்களா? தமிழருடைய கோவிலிலே நீங்கள் போட்ட நரகல் காஞ்சுப் போன பிறகும் அந்தச் சாடை தெரியாமல் போச்சுதா? கல்லெறியப்பட்டிருந்தால் அப்போதே தெரியாதா? உங்களைப் போலொத்த பெரிய மனுஷரிப்படி பெரிய பொய் சொல்லுவார்களா? நீங்களில்லாத கலாபமெல்லாம் பண்ணிக்கொண்டு பட்டணத்திலே குடிகளைச் சேரவொட்டாமல் இப்படியெல்லாம் பண்ணுகிறீர்களென்று சொல்லிவிட்டு இந்த நாலு பேரும் துரையவர்களுடனே சொன்னார்கள்.

அதன் பேரில் துரையவர்கள் சம்பா கோவிலிலே பெரிய பாதிரியாயிருக்கப்பட்ட பாதிரி கடுதே என்கிறவரை அழைப்பித்து இப்படிப்பட்ட அபத்தமான வார்த்தையை நீங்களிப்படி பெத்திஸியோ மெழுதிப் போட்டீர்களென்று கேட்டவிடத்திலே, முன் சொன்னப்பட்ட சாடைபடிக்கு அதுகளெல்லாம் காஞ்சிப் போச்சுது. அதனாலே தெரியவில்லையென்று சொன்னார். அதன் பேரிலே உம்மைப் போலொத்த பெரிய மனிதர்கள் இப்படி பொய் சொல்லுவார்களா? நீங்கள் பண்ணுகிற காரியத்தினாலே பட்டணத்திலே இருக்கப்பட்ட சனங்களெல்லாம் கலைந்து போகிறதே யல்லாமல் குடிகள் வந்து சேரமாட்டாது. ஆனால், நடந்த சேதியெல்லாம் கடுதாசியெழுதி அதைக் கோன்சேலில் போடச்சொல்லிச் சொன்னார்கள்.

அதன்பேரிலே பாதிரியாருந்து கொண்டு அப்படி கொமிசேலிலே எழுதிப் போடப்போகாது. என்னுடனே வந்து சொன்ன மனுஷர் அப்படியென்று சொன்னார்கள். அவர்கள் பேச்சை மெய்யென்று நான் பெத்திஸியோமெழுதிப் போட்டேன். அதென்னமோ தெரியாதென்கிறதாய்ப் போக்காய் சொன்னார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

2 thoughts on “ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!”

  1. இ.தினேஷ்கண்ணா

    இது போன்ற நிறைய தகவல்களை தொடர்ந்து எழுதுங்கள் ஐயா

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *